6.3.10

பத்திரிக்கை சுதந்திரம்

பல நாட்களாகியும் இந்தப் பிரச்சனை முடிந்த பாடில்லை.

சன் (தொ. கா.) மற்றும் நமது முதல்வர் - இன்னும் ஒரு விவாதத்தை தொடங்கி வைத்திருக்கின்றார்கள்.

பத்திரிக்கை சுதந்திரம் காக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை.

தமிழக முதல்வர் - இது போன்ற (நித்தியானந்தம் படுக்கைக்) காட்சிகள் முதலில் அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும் - அதன் பிறகே இதை ஒளிபரப்ப வேண்டும் என்று சொல்கிறார் -
(அவர் கைது செய்யப்பட்ட போது இதைச் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்). - அப்படிச் செய்தால் என்ன ஆகும்?


அப்படிச்செய்தால் இப்போது தொலைகாட்சி வியாபாரம் செய்வதை அரசே ஏற்று நடத்தும். செய்தி வெளிவராது - ஆனால் அதற்காக சம்பந்தப் பட்டவர்கள் கொடுக்கும் விலை மிக அதிகமாக இருக்கும்.
எத்தனை மிரட்டல்களை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும் - எவ்வளவு பணம் கை மாற வேண்டும் - அவர்களின் காவலனாக அல்லது இறுதி வரை அவர்கள் எல்லாருக்குமே கைப்பாவையாக - ஆட்டுவிக்கிற விதத்தில் எல்லாம் ஆடுகிற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பார்கள். அதற்கு இப்படி செய்தி வெளிவந்தால் பரவாயில்லை.
உண்மை வெளிவர வேண்டும் என்பதுதான் நமது முதல் அக்கறை. முதல்வர் சொல்வதுபோல செய்தால் பத்திரிக்கைகள் எல்லாம் மீண்டும் அரசின் காலடியில் கிடக்க வேண்டியதுதான்.

நாளைக்கு அரசைப்பற்றிய ஒரு சி.டி வந்தால் - அதையும் அரசிற்கு சமர்ப்பிக்க வேண்டுமா?

ஏற்கனவே தென் இந்தியாவின் (குறிப்பாக )தமிழகத்தின் பல்வேறு பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள், நாளிதழ்கள், வானொலிகள் என்று எல்லாத் தளங்களிலும் தனது அக்டோபஸ் கரங்களை விரித்து நிற்கும் ஒரு குடும்பத்தினரின் பார்வைகள் மட்டுமே உண்மையாக வெளி வருவதைத்தான் நாம் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும். இப்போது திரைப்படங்கள் வெளியிடவும் தொடங்கியாற்று.

ஒருவேளை தமிழன் இப்படி வளர்ந்திருக்கிறானே என்று வேண்டுமானல் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். வளரும் தொழில் அதிபர்கள் இது போன்ற செயல்களை எல்லாம் செய்துதான் ஆக வேண்டும் என்றும் நல விரும்பிகள் நினைக்கலாம். நமக்கென்ன -


யாரும் பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிரானவர்கள் அல்ல. அப்படி என்றால் நாம் கூட இப்படி எல்லாம் எழுதிக்கொண்டு இருக்க முடியாது. பத்திரிக்கையும் தொலைக்காட்சியும் ஒரு நாட்டின் முதுகெலும்பு என்று நாம் நம்புகிறோம்.
அடக்குமுறைக்கும், அதிகாரத்திற்கும் எதிராக - பணத்தையோ, பலத்தையோ பயன் படுத்தி உண்மையை மறைக்க நினைக்கும் அனவைருக்கும் எதிராக- உண்மையை வெளிக்கொணரும் கருவி - ஆயுதம் - வாள் --- எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்.

சன் தொ.கா. என்பது நமது எதிரியல்ல.
நாம் யாரை எதிரியாக நினைக்க வேண்டும்?
பத்திரிக்கை சுதந்திரம் காக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இதனை எழுதுகிறோம்.

இந்த வீடியோ வேறு யாரிடமாவது முதலில் போயிருந்தால் அவர்களும் இதைதான் செய்திருப்பார்கள் என்பதும் உண்மைதான். அதைத்தான் தவறு என்று சொல்கிறோம்.

ஒரு பொது நபருக்கு என்ற அறம் இருக்கிறது . அதிலிருந்து அவர் தவறும் போது அதை சுட்டிக் காட்டுகிறோம் என்பதில் உள்ள அக்கறை - அதே சமயத்தில்
பத்திரிக்கைகளுக்கும் அறம் இருக்கிறது என்பதை உணர வேண்டும் என்பதும் உண்மைதானே. ஒரு பத்திரிக்க வெளிவருகிறது என்றால் அதுவும் ஒரு பொது நபர் போலத்தானே. அப்படியெனில், அது வழி மாறும் போது அதன் தவறை யார் சுட்டிக்காட்டுவது. அது அறம் தவுறும் போது யார் வெளிக்கொணர்வது?

பத்திரிக்கை என்பது அறத்திற்கு அப்பாற்பட்டது என்று சொன்னால் - அது வெறும் வியாபாரம் என்று மட்டும் சொல்லுங்கள். வெறும் வியாபாரம் செய்கிறவர்களுக்கு மக்கள் மேல் என்ன அக்கறை. மக்கள் மேல் உள்ள அக்கறையினால் தான் இப்படிச் செய்கிறோம் என்றால் நமக்கென்று ஒரு அறம் இருக்கிறது. என்பதை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

ஒரு சில பத்திரிக்கைகள் தவறு செய்வதால் அனைவரும் தவறுகிறார்கள் என்று சொல்லி விட முடியாது. இதைப் பார்த்து எல்லோரும் இப்படிச் செய்துவிடலாம் என்று வழி மாறக் கூடாதே என்ற உணர்வே இது.


எப்படி அரசாங்கம் தனது அதிகாரத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற நிலை மாற வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ (பத்திரிக்கைகளின் உண்மையான பலத்தால் அரசின் தவற்றை சுட்ட வேண்டும், அது முடியும் )அதைப் போலவே பலம் வாய்ந்த பத்திரிக்கை நினைத்தால் எதையும் செய்துவிட முடியும் என்கிற நிலையும் மாற வேண்டும்.

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்