cricket லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
cricket லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19.5.13

ஐ. பி. எல் ஸ்பெஷல்


  • இருபது ஓவர் மாட்சில் ஒரு பாலைக் கூட அடிக்காமல் விட முடியாது. அப்படி ஏதாவது ஒரு பாலை மட்டையாளர் அடிக்காமல் விட்டால் --- அப்போது சப்பாத்தி ஷாட் ஸ்பெஷலிஸ்ட் ரவி சாஸ்த்ரி சொல்லும் காமெண்டரி உங்கள் காதில் தேனாக வந்து விழும்.  அதுவும் சாஸ்த்ரி வீட்டில் கிரிக்கெட் ரசிகர்கள் கல்லெறிந்த செய்தி தெரிந்தவர்களுக்கு மட்டும். எப்படித்தான் பழசெல்லாம் மறந்துட்டுப் பேசுறாங்களோ?
  • ஸ்ரீஷாந்த் பஜ்ஜு விடம் அடி வாங்கிய வீரன். பல சமயங்களில் அழுது அழுதே கொஞ்சம் அனுதாபம் சம்பாரித்துக் கொண்ட இந்தப் பையன் கொஞ்சம் அழுகுணி ஆட்டம் ஆடி சம்பாரிக்கலாம் என்று பார்த்திருக்கிறார். இந்தக் குற்றத்துக்கான தண்டனைதான் ஹர்பஜன் அவனை அறைந்தது. இதற்கு மேல் அவருக்கு எதுவும் தண்டனை கிடைக்காது. மிஞ்சிப் போனால் விளையாடத் தடை சொல்வார்கள். அதனாலென்ன இருக்கவே இருக்கிறது காங்கிரஸ் --- அதில் சேர்ந்து ஒரு எம். பி. ஆகிவிட மாட்டாரா என்ன?
  • விஜய்  மால்யா எம். பி. தனது கிங் பிஷேர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு அதன் பணியாளர்களுக்கு இன்னும் சம்பளப் பாக்கி செலுத்தவில்லை. ... ஏறக்குறைய 6,500 கோடி கடன்களை வசூல் செய்யும் வழி தெரியாமல் இருக்கின்றன வங்கிகள். மல்யாவுக்கு சொத்து மதிப்பி ஏறக்குறைய 40, 000 கோடிகளுக்கு மேல் என்று சொல்கிறார்கள். இதெல்லாம் தெரிந்தும், அரசும் ஒன்னும் செய்ய முடியவில்லை, வங்கிகளும் ஒன்றும் செய்ய முடியவில்லை, ஊழியர்களும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் அவரும் அவரது புதல்வரும் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள் - ஐ. பி. எல்லில். 
  • வங்கிகள் என்றவுடன் நினைவுக்கு வருவது எஸ் பேங்க் மாக்சிமம். அவர்கள் ஒரு மேட்சுக்கு ஒரு லட்சம் என்று ஏறக்குறைய 77 போட்டிகள்.... எப்படி ஒரு வங்கிக்கு இவ்வளவு பணம் இந்த ஒரு மாத விளம்பரத்தில் மட்டும் செலவு செய்ய முடியும். பெப்சி ... வோடபோன் ... ஸ்டார் ப்ளஸ் ... விளம்பரத்திற்கு மட்டும் இவ்வளவு பணம் என்றால், அவர்களின் இலாபம் எவ்வளவு.... வி ஆர் ஸ்லேவ்ஸ் ஆப் தி அட்வேர்டைஸ்மென்ட்ஸ்... 
  • நடு கிரவுண்டில் சண்டையிட்டுக் கொண்ட கம்பீரும் கோலியும் அடுத்த கட்டத்திற்கு தேர்வாகவில்லை என்பது சரியாகவே தோன்றியது. ஒருவேளை கொல்கொத்தா வெற்றி பெற்றால் பெங்களூரு அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்று நினைத்தாரோ கம்பீர். சன்ரைசர்ஸ் வெற்றி பெற்று கோலிக்கு கிலி உண்டாக்கி விட்டார்கள். வருடத்திற்கு என்பது கோடிகள்  என்று ஐந்து வருடத்திற்கு ஹைதராபாத்தை குத்தகைக்கு எடுத்திருக்கிறது சண் டி. வி. இறுதி மாட்சில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கும் மும்பைக்கும் இடையே இருக்கலாம்... 
  • லலித் மோடி லலித் மோடி என்று  ஒருவர் பிக்சிங் செய்து இந்த ஐ. பி. எல்லை மிகவும் பிரபலப் படுத்தியவர்.... அதனால் ஆயிரக்கணக்கான கோடிகள் லவுட்டியவர்... இன்னமும் அவருக்கே என்ன ஆச்சுன்னு தெரியலை... ஆனா ஏன் ஸ்ரீ சாந்த் கேசுல டெல்லி போலிஸ் இவ்வளவு அக்கறை காட்டுதுன்னு தெரியலை... வேற ஏதாவது ரேப் கேசு வந்து அதை மறைக்க இதைச் செய்யுறாங்களோ அல்லது இறுதிப் போட்டியில் நடக்க இருக்கும் பிக்சிங்கை மறைக்க முன்பே நடவடிக்கை என்ற பெயரில் ரசிகர்களை இன்னமும் உண்மையிலேயே உண்மையான மாட்ச்   நடக்கும் என்று நம்ப வைப்பதற்கா? 

7.9.11

கிரிக்கெட்டும் வெங்கட்டும் - மங்காத்தா?

திரைப் படங்களுக்கென்று விமர்சனமெல்லாம் இதுவரை எழுதியதில்லை. இதுவும் விமர்சனமா என்று தெரியவில்லை. வலைப்பூவில் எங்கெங்கு நோக்கினும் மங்கத்தா என்பதனால் நம்ம பங்குக்கும் இரண்டு வார்த்தை எழுதினாத்தானே நாலு மனுஷ மக்க மதிப்பாக. அதுனாலதான் மங்கத்தா. இந்தப் படம் பல பேருக்குப் பிடிச்சதாச் சொல்றாக. சில பேரு உருபடியில்லாததுன்ராக.

வெங்கட்டு - அவருக்கும் கிரிக்கெட்டுக்கும் பயங்கர ராசிங்க. சென்னை 28 ல கிரிக்கெட்டை வச்சு உள்ள வந்தாரு. செம போடு போட்டுச்சு. அப்புறம் சரோஜா - அதுல கிரிகெட்டை விட்டுப்புட்டு அதைப் பாக்கப் போற மாதிரி ஒரு ரூட்டைப் போட்டு அதுவும் ஓடுச்சு. [கோவா - வுல கிரிக்கேட்டுக்காகவா ஊர வுட்டு ஓடி வாராங்க - அப்படி வச்சிருந்தா அந்தப் படமும் ஓடியிருக்குமோ என்னவோ.] இப்ப கிரிக்கெட்டு சூதாட்டத்துல வச்சு ஒரு கதை.

வெங்கட்டோட கதைப் பின்னல்கள் ஒருமாதிரி கிரிக்கெட்டு மேல பைத்தியம் மாதிரி இருந்து அத்லேர்ந்த்து கொஞ்சம் கொஞ்சமா விலகிக்கிட்டே வர்ற மாதிரி இருக்கு. இதேமாதிரி இந்திய இளைஞர்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா கிரிக்கேட்டுலேர்ந்து வெளியே வந்தா நல்லாத்தான் இருக்கும். பி.சி.சி.ஐ. என்கிற தனியார் அமைப்பு இந்த அரசியல் கிழங்களிடம் மாட்டிக் கொண்டு நம்ம எல்லாரையும் அதுலேர்ந்த்து வெளியே வர விடாம அதுங்க சம்பாரிச்சுக்குட்டு இருக்குங்க. அதுல ஒழுங்க கொண்டுவந்தா சரத் பவார் எதிர்ப்பு - எதுக்காக எதுக்குராருன்னு ஒன்னும் கிடையாது. அவர்க்குப் பிரச்சனை.

இதுனாலதான் நான் திரைப்படத்தைப் பத்தியெல்லாம் எழுதுறதில்லை. எங்கேர்ந்தாவது எங்கேயாவது போயிருவேன்? அதுனால வெங்கட்டு இந்தப் படத்தோட டைரக்டரு ஒரு மேசெசு சொல்லிருக்காப்ள - கிரிக்கெட்ட விட்டு விலகிப் போங்கன்னு. அவரும் கண்டிப்பா இதக்கப்புறம் கிரிக்கெட்டு என்கிற கதைக் களனை விட்டுட்டுப் போனா நல்லா இருக்கும்னு தோணுது.

பி.சி.சி.ஐ. என்கிற தனியார் அமைப்பு - இந்திய அரசோடு அல்லது அந்த விளையாட்டு அமைச்சகத்தோடு எந்தவிதத் தொடர்பும் இல்லாத ஒரு அமைப்பு, இந்திய அரசின் சார்பாக விளையாடுவதாப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பு, விளையாடும் வீரர்கள் நாட்டின் பிரதிநிதிகளாகப் பார்க்கப் படுவதற்காக தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி எல்லா "பூஷன்' விருதுகளுக்கும் சிபாரிசு செய்து அந்தப் பொய்யை நியாயப் படுத்தும் ஒரு அமைப்பு, நாட்டையும் நாட்டின் வளங்களையும் பல்வேறு வழிகளில் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அமைப்பின் விளையாட்டிலிருந்து நாம் எல்லாரும் விலகிவர வேண்டும்.

வெங்கட்டு திரைப்படக் கிரிக்கெட்டுக் கதையிலிருந்து வெளிவர வேண்டும்.

இங்கிலாந்துல இந்தியா வாங்குற அடி மரண அடியா இருக்கு. இதுக்கப்புரமாவது இந்தியாவில் கிரிக்கெட்டு மோகமும், அதற்கான அரசியலும் ஒழிந்தால் தேவலை. அதுனாலதான் ஊழல் ஒழிப்பு என்பது - ஜன லோக்பால் என்பது தனியாருக்கும் தேவையிருக்குன்னு வலியுறுத்த வேண்டியிருக்கு.

திருப்பி கதைக்கு வருவோம். மத்தபடி - திரையில பணத்துக்காகவே எல்லாரும் அலையுற காட்சியெல்லாம் நல்லாத்தான் இருக்கு. இன்னைக்கு அதுதான் நம்ம வாழ்க்கைய தீர்மானிக்குது. அப்புறம் என்ன பண்றது?  நாட்டைக் காக்குற அர்ஜுனா இருந்தா ஏன்னா, சிட்டிசனா இருந்தா என்ன? எல்லாரும் அப்படித்தான். இப்படி ஒரு நெகடிவ் கேரக்டருல நடிச்சதுக்காக இரண்டு போரையும் பாராட்டலாம். அதோட சேர்த்து இவங்க நடிச்சதுக்கா வாங்குன பணமெல்லாம் வொயிட்டா இருக்காது - அதுக்கான வரியெல்லாம் ஒழுங்காப் போகாது. அப்படியெல்லாம் போயிருந்தா அதுக்கும் பாராட்டலாம்.

அதுனால மங்கத்தா - சூதாட்டம் - லாஜிக் இல்லா உள்ளே வெளியே - ஆனால் நம்மூரில் நடக்கிற உண்மையான சூதாட்டம்.

5.4.11

இந்தியாவிடம் உண்மையிலேயே உலகக் கோப்பை இருக்கிறதா?

இந்தியாவிடம் உண்மையிலேயே உலகக் கோப்பை இருக்கிறதா என்கிற கேள்வியை சில பத்திரிக்கைகள் முன்வைக்கின்றன?
உண்மையான கோப்பையின்  மதிப்பு ஏறக்குறைய எண்பதாயிரம் பவுண்டுகளாம் [அதாவது 130, 000 டாலர்கள் - அதாவது ஏறக்குறைய 57 லட்சங்கள்]. இதிலெல்லாமா விளையாடுவீங்க.

உண்மையான கோப்பை கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் இருப்பதாகவும், வெற்றி பெற்ற போது கொடுக்கப் பட்ட கோப்பை "மாதிரிக் கோப்பை" என்று ஒரு சாரரும் -  இல்லை, கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் இருப்பதுதான் மாதிரிக் கோப்பை என ஐ.சி.சி. யும் சொல்கிறது.

உள்ளேயே இருப்பது உண்மையான கோப்பை என்றால் மாதிரிக் கோப்பை இந்தியாவுக்கு கொண்டு வரப் பட வேண்டிய அவசியம் என்ன?

இல்லை இது இலங்கையில் வைக்கப்பட்டது அங்கிருந்து இங்கே கொண்டு வரப்பட்டது என்றும் சொல்கிறார்கள். ஒவ்வொரு முறை விளையாடும் போது இந்தக் கோப்பையைக் காண்பித்து, "this is what they are playing for" என்று வர்ணனையாளர்கள் சொல்லுவதைக் கேட்டோமே அதெல்லாம் அண்டப் புழுகா?

ஒரு கோப்பையைக் கொடுக்கிற போது எதற்கப்பா மாதிரிக் கோப்பை.
தமிழக சட்டப் பேரவைக் கட்டிடம் திறப்பு விழாவில், கோபுரம்தான் தோட்டா தரணியை வைத்து சில கோடிகளுக்கு செட் போட்டார்கள் - உலகக் கோப்பையிலுமா? தோனி - நீ தூக்கிக் காட்டுவது போலிக் கோப்பையா?

கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் ஒரு கேள்வி
கோப்பையை உள்ளே அனுமதிக்க "இறுதிப் போட்டியை காண சில டிக்கெட்டுகள் கேட்டதாகவும் - அதைக் கொடுக்க முடியாமல் கோப்பையை அங்கேயே வைத்துக் கொள்ளுங்கள் - அங்கிருந்து துபாய் எடுத்துச் சென்று விடுகிறோம் என்றார்களாம். என்னய்யா இது. ஒரு நாட்டின் வருமானத்தைப் பார்க்காமல், வெறும் டிக்கெட்டுக்காக விலைபேசும் அதிகாரிகள் இருக்கிற வரை, எப்படி நாடு முன்னேறும்? 

சரி ஐ. சி. சிக்கு ஒரு கேள்வி - 
முதலிலேயே உண்மையான கோப்பை நாட்டுக்குள் வந்து விட்டது என்றால் - எப்போது வந்தது - அதற்கான வரியைக் கட்டிதான் உள்ளே கொண்டு வந்தீர்களா? அப்படியானால் எந்த வழியாக - எவ்வளுவு கட்டினீர்கள் என்று சொல்ல முடியுமா? நிச்சயமாய் இதுதான் உண்மையான கோப்பை என்று நாங்கள் உரசிப் பார்த்தும் சொல்ல முடியாது. இருபத்தி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பெற்ற போதும் போலிக் கோப்பையா நம் கைக்குக் கிடைக்க வேண்டும்?

எதுவாய் இருந்தால் நமக்கென்ன? வாருங்கள் ஐ. பி. எல். லிற்கு நேரமாகி விட்டது. அந்த பிசினசிலும் பங்கெடுப்போம்? 

ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுபவர் இருந்து கொண்டேதான் இருப்பர்.

தொடர்புடைய செய்திகளுக்கு இங்கே சுட்டவும்.



2.4.11

கிரிக்கெட்டும் GLADIATOR -ம்

கிரிக்கெட் -
  • இந்திய பொருளாதாரத்தை நிமிர்த்திக் கொண்டிருக்கும் இன்னுமொரு தொழில். [முதல்  தொழில் - சினிமா]  உலகப் போட்டியின் மூலம் ஏறக்குறைய 1476 கோடி ரூபாய்கள் ICC -க்குக் கிடைக்கும் எனவும், இதை நடத்துவதற்கு வெறும் 571 கோடி செலவு எனவும், இதில் 45 கோடிக்கு வரிவிலக்கு இந்திய அரசிடமிருந்து பெற்றிருக்கிறது என்பது செய்திகளில் வெளிவந்திருக்கிறது. 
  • மொஹாலி - போர் 
  • இந்தியப் பாகிஸ்தான்  கிரிக்கெட் மிகப் பெரிய அளவிற்கு அல்லது கிரிக்கெட்டை வேறு ஒரு நிலைக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு முக்கியத் துவத்தைப் பெற்றிருக்கிறது.
  • இந்த விளையாட்டைப் பார்ப்பதற்கு, முகேஷ் அம்பானி மட்டும் 5 கோடி செலவு செய்து மூன்று corporate Box பதிவு செய்திருக்கிறார்.
  • அன்று 10 seconds விளம்பரம் செய்ய 20 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டது. பத்து நிமிட விளம்பரத்திற்கு இவ்வளவு என்றால் மொத்தம் எவ்வளவு வருமானம் என்று நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.  அன்றைக்கு ஒட்டு மொத்த இந்தியாவும் தொலைக்காட்சி முன்பு இருக்கும் என்பதால் இது அவ்வளவு முக்கியத் துவம் பெற்று எவ்வளவும் செலவு செய்யத் தயாரயிருக்கிரார்கள். லட்சக் கணக்கில் செலவு செய்து விளம்பரம் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.
  •  அரசியல் தளத்தில் - இரு நாட்டு பிரதமர்கள், சோனியா காந்தி, ராகுல் காந்தி என்று முக்கிய காங்கிரஸ் காரர்கள் எல்லாம் அங்கே அணிவகுத்து இருக்கிறார்கள். திரைப் படத் துறையில், அமீர் கான், ப்ரீத்தி, ஷில்பா ஷெட்டி, நம்ம ஊரு தனுஷ் என்று பலரும் இந்தப் போட்டிக்கென பதிவு  செய்து நேரடியாக கண்டிருக்கிறார்கள். 
  • அப்படி என்ன இந்தப் போட்டிக்கு அப்படி முக்கியத் துவம்?
  • முதலாவது இது ஒரு போர். 
    • இரு நாடுகளுக்கு இடையிலான போர். முன்பெல்லாம் அல்லது இப்போதும் வேறு பகுதிகளில் நடப்பது போலல்லாமல், இரு நாட்டு பிரதமர்கள் முன்னிலையில், அவர்களது பிரதிநிதிகள் கிரிக்கெட் விளையாண்டு, வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்து கொள்வார்கள். 
    • இந்தப் போட்டியின் வழியாய் இந்தியா வெற்றி பெற்று பாகிஸ்தானை அடக்கி விட்டது. இனிமேல் பாகிஸ்தானின் பிரதமே, இந்தியப் பிரதமர் சொல்வதையெல்லாம் கேட்பார்.
  • இரண்டாவது - இதனால் இது நாட்டின் தேசப்பற்றை வெளிப் படுத்தும் இடமாகி விட்டது. பாகிஸ்தான் வெற்றி பெற வாய்பிருக்கிறது என்று யாராவது சொன்னால் உடனே அவன் செத்தான். ஒருவேளை அவன் இஸ்லாமியனாக இருந்து விட்டால் அவ்வளவுதான். 
    • நடிகர் ஆர்யா ஏதோ சொல்லப் பொய் வம்பில் மாட்டிக் கொண்டார். உடனே இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்து இப்படி வக்காளத்து வாகுவது நல்லதல்ல என்று பெரிய தேசத் துரோக அளவுக்குப் போய் விட்டது. நல்ல வேளை அவர் ஒரு இஸ்லாமியராக இல்லை. தப்பித்தார். இப்படி அவர் சொன்னது நடந்திருந்தால், அவ்வளவுதான், நான் கடவுள் - கிழித்திருப்பார்கள். பிரதமர் வரை செய்தி போய், கிரிக்கெட் சூதாட்ட முக்கியப் புள்ளியாக, விளையாட்டின் முடிவை முன்கூட்டியே முடிவு செய்யும் ஆற்றல் படைத்த புள்ளியாக அவர் மீது வழக்கிட்டு உள்ளே வைத்திருப்பார்கள். இப்போது ஆர்யா தப்பித்தார். 
    • அதாவது இன்றைய இஸ்லாமியர்கள் தங்கள் தேசப்பற்றை வெளிக்காட்ட ஒரே இடம் - கிரிக்கெட்தான். கிரிக்கெட்டில் பற்றில்லாதவர்கள் தேசத்தில் பற்றில்லாதவர்கள். 
  • மூன்றாவது, நாம் நாகரிகமானவர்களாகி விட்டோம். 
    • discovery Chanel - லில், சிங்கம் ஓடிச் சென்று மானைப் பிடித்து இழுத்து அறுக்கும் போது எனக்கு குலையே நடுங்கி விடும் என்று இன்றைய உலகில் பல பேர் சொல்லுவார்கள். சில பேர் அதில் லயித்து இருப்பதும் உண்டு. அடிப்படையில் நம் எல்லாரிடமும், இந்த லயித்துப் போகும் மன நிலை இருக்கும். மனிதன் மனிதனை வெட்டிக் கொன்ற காலம் இப்போது நினைத்தாலும், நாம் அநாகரிக மனிதர்கள் என்று சொல்லுவோம். அதிலிருந்து நாம் வளர்ந்து வந்திருக்கிறோம். கொஞ்சம் நாகரிகம் அடைந்திருக்கிறோம். 
    • இருந்தாலும், நமக்குள் இருக்கும் வக்கிரம், பழி வாங்கும் எண்ணம், இது நாட்டின் தன்மானம் என்ற உணர்ச்சியின் வெளிப்பாடு, இதெல்லாம் வேற்று உருவம் பெற்றிருக்கிறதே தவிர, இன்னும் ஒன்றும் மாறவில்லை என்றே தோன்றுகிறது. அமெரிக்க வீரர்கள் video games - ல் சுட்டுக் கொள்வது போல சுட்டுக் கொன்ற காட்சி - விக்கி லீக்சில் பெரிய செய்தியானது. இங்கே ஒரு boundary அல்லது sixer அடித்தல், அது எதிரி வீரனின், தலையைக் கொய்து அதை bat - ஆல் அடிப்பதாக நினைத்துக் கொள்வதையும், உடனே பாகிஸ்தான் மண்ணைக் கவ்வியது என்பதையும், நாம் என்ன வென்று சொல்வது. 
    • போர் நடத்த முடியாத வருத்தத்தில் நாம் இதையே colosseum போலவும், அதில் இருக்கும் வீரர்களை Gladiators போலவும் நாம் கற்பனை செய்து கொள்கிறோம். இரு நாட்டின் தலைவர்களுக்கு முன்பு, தன் தேசத்தின் கவுரவமும், பெருமையும் தான் வீரர்களின் கண் முன்னே நிற்குமே தவிர, எந்த வித மன அழுத்தமுமின்றி விளையாட முடியுமா என்ன?   
    • நமது பழி வாங்கும் எண்ணம்,  violence இவைகளையெல்லாம் வெளிப் படுத்த மாற்று வழியாக இதைப் பார்க்கத் தொடங்கி விட்டோம். சிறுவர்களுக்கு video Games, நமக்கு கிரிக்கெட். நாம் நாகரீகம் அடைந்து விட்டோம்.
    • நான் கிரிக்கெட் பார்க்க வில்லை என்று சொன்னால், நான் தேசத் துரோகியாகிவிடுவேன். விளையாட்டு முடிந்த பிறகு, highlights பார்த்தேன். முதலில் சேவாகும், தெண்டுல்கரும், களமிறங்கியபோது, அவர்களின் முன்சென்று அவர்களோடு நடந்து சென்ற கேமிராவின் பதிவும், ஸ்டேடியத்திலிருந்து வந்த இரைச்சலும், உடனே எனக்கு Gladiatorai த்தான் நினைவூட்டியது. [நான் விளையாட்டிற்கோ, கிரிக்கேட்டிற்கோ எதிரியில்லை, இதையெல்லாம் எழுதக் காரணம் முதல் ஐந்து பாராக்கள்.]
  • போரின் அடுத்த நிலை -
    • பணம் கொடுத்து அல்லது வீரர்களை விலைக்கு வாங்கி போட்டியின் முடிவை முன்பே நிர்ணயம் செய்வது என்பதெல்லாம் குற்றம்தான். பணம் கொடுப்பது மட்டும்தான் குற்றமா. இப்படி நாட்டுத் தலைவர்கள் மன அழுத்தம் கொடுப்பதுதான்.
    • பாகிஸ்தானில் அரை நாள் அனைத்திற்கும் விடுமுறை. ரவி சாஸ்திரி, முதலில் சொல்லுகிறார், "No body would mind even if somebody does not turn to office today - it is such an important match." அறிவிக்கப்படாத விடுமுறை. 
    • அனைத்து அரசியல் தலைவர்கள், பிசினஸ் நண்பர்கள், சினிமா ஸ்டார்கள், இப்படி எல்லாரும் போட்டி போட்டுக் கொண்டு பார்க்கிறார்களே அவர்களிடம் பணமில்லாத ரசிகனின் உண்மையான ரசனை இருக்குமா.?
  • ஐந்தாவதாக - இது இன்னுமொரு முக்கியத் தொழில்
    • கிரிக்கெட், இன்றைய நவீன உலகின் பணம் கொழிக்கும் விளையாட்டு. அதற்காகவே அவர்கள் சில போர்களை உருவாக்குகிறார்கள். ASHES Series - ஆஸ்திரேலியா இங்கிலாந்துப் போர். இந்தியா பாகிஸ்தான் போர். விளம்பரங்கள் வழியாக பணம் கொழிக்க, வீர்கள் வழியாக தங்களின் பொருட்களுக்கான விளம்பரம் செய்ய, இது தொழில். சாதாரண ரசிகன் எப்போதும் சாதாரண ரசிகன்தான். 
    • சிம்பு தேவனின் இம்சை அரசனில் கிரிக்கெட் பாருங்கள்.
    • "There are only two religions in India: Cricket and Cinema" ஒரு ரசிகை போர்டு ஒன்று பிடித்துக் கொண்டிருந்தார். என்னைப் பொறுத்தவரை, "There is only one language - that is business."

  • இதனால் சொல்லப்படும் ஜோக் - CRICKET FOR PEACE
  • இதனால் பாதிக்கப் படுபவர்கள் வாக்காளர்கள் 
    • வலுவிழந்த காங்கிரஸ் கட்சிக்கு வலுவூட்ட சோனியா காந்தியும், ராகுல் காந்தியும், மொஹாலி செல்வதைத் தவிர்த்து தமிழகம் வந்திருந்தால் கொஞ்சம் கோஷ்டி சண்டையாவது குறைத்திருக்கலாம். 
  • இதனால் சொல்லப்படும் செய்தி 
    • இறுதிப் போட்டியை விட அரை இறுதிப் போட்டி மிகப் பெரிய போர் என்பதனால் இந்த வாய்ப்பை நழுவ விடாமல் - தொலைகாட்சிகள், மொஹாலி கிரிக்கெட் வாரியம், ... இப்படி பெரிய business நபர்களெல்லாம் இப்படிக் கோடிக்கணக்கில் ஒரு போட்டியில் வருமானம் பெறும்போது, ஐந்து வருடத்திற்கு ஒரு முறை வரும் தேர்தலுக்கு - தனது வாக்கை வைத்து business செய்வதை, வாக்காளர்கள் பணம் பெறுவதை மட்டும் இந்தத் தேர்தல் கமிஷன் தடுக்கிறதே - இது நியாயமா?
  • இன்றைய இறுதிப் போட்டியில், மன்னிக்கவும் இறுதிப் போரில் [தமிழர்களை அழித்தொழிக்கும் இலங்கையா அல்லது ..................... இந்தியாவா -]  யார் வெற்றி பெறுவார்?
    • இதை ஆர்யாவிடம் தான் கேட்க வேண்டும். ஆனால், பதில் சொல்லாமல் இருப்பதுதான் ஆர்யாவிற்கு நல்லது.

26.4.10

IPL கிரிக்கெட்

IPL கிரிக்கெட் -
இருமாத கேளிக்கை முடிந்து ஒருவழியாய் சென்னை திட்டமிட்டபடியே வென்று விட்டது.
இன்றிலிருந்து இந்திய மக்கள் மாலை வேளைகளில் என்ன செய்வது என்று தெரியாமல் திக்கித் தினறுவார்கள். என்ன செய்யலாம்? மீண்டும் திரைப் படத்திலும் - தொலைக்காட்சித் தொடர்களில் மூழ்கித் திளைக்கலாம் - நம்மைத் தொலைக்கலாம்.
I had a dream என்று மிகப் பெரிய பேச்சு போல தனது உரையை ஆரம்பித்த மோடியினால் பாவம் மார்டின் லூதர் கிங்குக்குத்தான் அவமானம்.
எல்லாரையும் கிரிக்கெட்டுக்கு அடிமைப் படுத்த மோடிக்கு ஒரு Dream. என்ன அருமையான Dream பாருங்க. எல்லாரும் கிரிக்கெட் பாப்பாங்க இவரு பணம் பாப்பாரு.
லலித் மோடி - பகவத் கீதையிலிருந்து - பொய் ஒரு போதும் நிலைக்காது - உண்மை ஒரு போதும் அழிக்கப் படாது என்று - தன்மேல் சுமத்தப் பட்ட குற்றச் சாட்டுகள் பொய் என்று அதை வேற சொல்லியிருக்கிறார். அது மட்டுமல்ல தான் - கிரிக்கெட்டை பிரபலப் படுத்தும் ஒரு சேவகன் என்றும் சொல்லியிருக்கிறார். சேவகனுக்கு எதுக்கு இவ்வளவு பணம்?

விளையாட்டிற்கும் அந்த நாட்டின் பண்பாட்டிற்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. அது ஒரு நாட்டின் வரலாற்றையும் அந்த நாட்டு மக்களைப் பற்றிக் கூட சொல்லும்.
அமெரிக்கர்களின் ஒரு குணம் WWF - மற்றொன்று BASKET BALL. கிரிக்கெட்டிற்கு மாற்றாக BASEBALL.
எல்லா நாட்டியும் அதன் வளங்களையும் சுரண்டிய பிறகு, வேறு என்ன செய்வது என்று தெரியாமலும், நாள் முழுவதும் வெயிலில் இருக்கவும் சுகமாக பொழுது போகவும் அவர்களுக்கு கிரிக்கெட்.
ஐரோப்பியர்களுக்கு கால் பந்து.
இந்தியர்களுக்கு கிரிக்கெட் எப்படி?
ஒருவேளை கிட்டிபுல்லினால் ஏற்பட்ட பாசமா?

கிரிக்கெட் இந்தியாவின் மிகப் பெரிய அவமானம்

இதைப் பார்த்தவுடன் பலர் கொந்தளிக்கக் கூடும். ஆனால் என்ன செய்வது? இதுதான் உண்மைஎன்றால் இதைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.
விளையாட்டிற்கும் மனிதனுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. வேட்டையாடல் உணவிற்காய் தொடங்கி பிறகு வேட்டையாடல் விளையாட்டாய் மாறியது.
மனிதனை மனிதன் அடித்துக் கொள்ளும் விளையாட்டும் அரங்கேறியது. நாகரீகத்தில் வளர்ந்த பிறகு - மனிதனை மனிதன் அடித்துக் கொள்ளும் வழக்கம் குறைந்து விலங்குகளை வேட்டையாடியதின் எச்சமாக விலங்குகளை அடக்கும் விளையாட்டுகள். அதனுடைய வளர்ச்சி பற்றி நாம் இங்கே பேச வேண்டாம்.

கிரிக்கெட்டிலும் இத்தகைய கொடூரங்கள் இருந்தன. Body line .
நமக்கும் கிரிக்கெட்டிற்கும் என்ன தொடர்பு? ஆங்கிலேயர்கள் நமது நாட்டின் தொடர் அடிமைத்தனத்திற்கு ஆங்கிலேயத்தை விட்டுச் சென்றது போல கிரிக்கெட்டையும் விட்டுச் சென்றிருக்கிறார்கள். நவீன அடிமைத்தனம்.

விளையாட்டு என்பது எல்லாருக்கும் தேவையானதுதான். பொழுதுபோக்கு. சிலர்க்கு அது வாழ்க்கை. [விளையாட்டு வீரர்களுக்கு.]
வாழ்வின் தினசரி அலுவல்கள் நம்மை திணறடிக்கும் போதும், அடுத்த வேலைக்கு தயாராகும் முன் நமது மூளைக்கு நல்ல ஓய்வு கொடுக்கவும் - இன்னும் பல காரணங்களுக்கும் விளையாட்டு என்பது அவசியம்தான். ஆனால் அதில் அரசியலும் பணமும், கவர்ச்சியும், முன்கூடியே முடிவைத் தீர்மானிக்கும் சக்தியும் சேரும் பொது அது விளையாட்டு என்பதைத் தாண்டி அது வெறும் பிசினஸ் என்கிற நிலைக்கு மாறுகிறது. அதற்குப் பிறகு - போலி மருந்து விற்பவர்களுக்கும் அவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லாமல் போகிறது.

கோடிக்கணக்கான பணத்தை வைத்து வீரர்களை ஏலம் எடுத்ததும் - அணிகளை விலைக்கு வாங்குவதில் ஏற்பட்ட மோதல்களும் - gentlemen's விளையாட்டு இது இல்லை என்பதை நினைவு படுத்துகிறது.

ICL லைத் தொடர்ந்து ipl ஆரம்பிக்கப் பட்டதற்கான காரணம் - ஈகோ- பணம் - அதிகாரம் - இன்னும் பல.
Z t .v தான் முதலில் இந்தியாவில் ட்வென்டி ட்வென்டி கிரிக்கெட்டை பிரபலப் படுத்தியவர்கள். இளம் வீரர்களைக் கண்டுபிடிக்க இது உதவும் என்று மேலாகச் சொன்னாலும் அதன் அடித்தளம் பணம்தான். கபில் தேவ்வை பிசிசிஐ - லிருந்து விரட்டினார்கள். பிசிசிஐ - ல் பதவி வகிப்பவர் விளையாட்டை பிசினஸ் ஆக்கக் கூடாது என்று சொன்னார்கள். ஆனால், இன்று பிசிசிஐ - ல் பதவி வகிக்கும் பலர் ஒரு அணியையே சொந்தமாக வைத்திருக்கிறார்கள். இது பிசினஸ் இல்லையா.

அமைச்சர் பெருமக்கள் - பலருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.
IPL முதல் edition - னுக்காக தேர்வையே முன்கூட்டி வைக்கலாமா என்றெல்லாம் திட்டமிட்டது தமிழகமாகத்தான் இருக்கும். திரைப்படங்களையும் வெளியிடுவதில் தாமதம்தான். தேர்வுக்கும் திரைப்பத்திற்கும் என்ன சம்பந்தம் - மோடிக்குத் தான் வெளிச்சம்.





20.4.10

மோடி விளையாட்டு

கிரிக்கெட்டின் IPL version வந்த போது கிரிக்கெட்டிற்கு மறு வாழ்வு வந்தது போல பலர் நினைத்தார்கள்.
அதில் உள்ள பல பிரச்சனைகள் பற்றி பிறகு அலசுவோம்.

இப்போது சசி தரூர் மற்றும் லலித் மோடி இருவருக்கும் சண்டை வெடித்து தரூர் தன் ஊருக்குத் திரும்ப வேண்டிய நிலை வரை வந்தாயிற்று.

இப்போது பிரதமர் IPL - லின் நிதி நிலையை கழுகுக் கண் கண்டு பார்ப்போம் என்று சவால் விட்டிருக்கிறார்.

அய்யா சாமி!

லலித் மோடி ஏற்கனவே பல முறை இந்த ஆண்டு கடந்த ஆண்டை விடை 200 கோடி 300 கோடி வரை லாபம் அதிகமாக இருக்கும் [எனக்குக் கணக்குத் தெரியாது] என்று எல்லாப் பத்திரிக்கைக்கும் பேட்டி கொடுத்த போதெல்லாம் உங்கள் கண் எங்க போச்சு.

சசி தரூர் - கூட பிரச்சனைன்ன உடனே அங்கே எப்படி income tax raid போனாங்க.
அதுக்கு முன்னாடி வரைக்கும் கோடி கோடியா சம்பாதிகிறவன்கிட்ட பிரச்சனை இருக்கும்னு தெரியாதா?

அமைச்சர் ஒருத்தர் பதவி விலகுற வரைக்கும் போனதுக்கப்புறம்தான் அங்க வில்லங்கம் இருக்குன்னு தெரியுதா.
அதுக்கப்புறமும் ஏன் இப்படி அறிக்கை.
இது லலித் மோடியை அலெர்ட் பண்றதுக்காக சொல்லறீங்களா? அதனால் எல்லா டாகுமென்ட்ஸ்- ஐயும் லலித் மோடி ஒழுங்கா வச்சுக்க ---

என்ன நடக்குதுங்க?
கவுண்டமணி சொல்லறமாதிரி - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா! தான் சொல்லணும்.

இல்ல நரேந்திர மோடியைத் தான் ஒன்னும் பண்ண முடியலை - லலித் மோடியையாவது ஏதாவது பண்ணலாம்னா?

அதாவது - ஒரு அமைச்சரைத் தொட்டாத்தான் நாட்டில நடக்குற ஊழல் வெளில வரணும்னா - எல்லாரும் அமைச்சரோடதான் போட்டி போடணும்.
சாதாரண ஆள் போட முடியாது. அப்பா லலித் மோடி மாதிரி பெரிய கோடி
[எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம்] தான் சண்டை போட முடியும்.

அதாவது ஊழலை ஊழலால்தான் எதிர்க்க முடியும்.
பணத்தை பணத்தால்தான் எதிர்க்க முடியும்.
முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும்.

ஷங்கர் சிவாஜில சொன்னது சாரியாப் போயிரும் போல இருக்கேப்பா?

18.3.10

தினம் தினம் - பணம் - கருப்பு -வெள்ளை

ஒவ்வொரு நாளும் புதிது புதியதாய் நிகழ்வுகள்: ஒன்றும் எழுத வேண்டாம் என்றுதான் நினைத்தேன்.
எழுதி என்ன ஆகப் போகிறது? ஒன்றும் ஆகாமல் போனாலும், மௌனமாய் இருக்கிறபோது எதோ நாமும் இந்த நிலைக்கு காரணமாய் இருக்கிறோம் என்பது மட்டுமல்ல, இன்னும் நன்றாக இந்த ஊழல் பெருக வழி செய்கிறோமே என்கிற கோபத்தில் எழுதுகிறேன்.
நீங்கள் படித்து என்ன ஆகப்போகிறது?
இதைப்பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தால் இந்த ஊழல் பெருக நீங்களும்தான் காரணிகள்: நானும்தான்.

சரி எதைப்பற்றி எழுவது? - பணம்.

பணம் - பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது.
பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே இருக்கின்றது.
இருந்தாலும் வாங்கும் சக்தி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்று மகிழ்ச்சி அடையலாம் என்று ஒரு சாரார் சொல்கிறார்கள்.

காய்கறியை விட கோழிக்கறி மலிவாக இருக்கிறது.
தாகம் எடுத்தால் பால் வாங்கிக் குடிக்கலாம், பாலின் விலை தண்ணீரை விட குறைவாக இருக்கிறது.
ஒருவேளை பூவின் [மலர்கள்] விலையும் அதிகரித்து பணம் மலிவாகக் கிடைக்கிறதோ என்பதுதான் எனக்குள்ள சந்தேகமே?

மாயாவதிக்கு பண மாலை கிடைத்ததே அதைத்தான் சொல்கிறேன். முதலில் ஒரு கோடி-க்கு 1000 ரூபாய் நோட்டில் மாலை என்றார்கள், பிறகு, 2 கோடி, இப்போது 20 கோடி என்பது வரை வந்து நிற்கிறது.

பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது இருக்கட்டும் - அதற்காக அதை ஏதோ தோட்டத்தில் காய்த்து தொங்குவது போலவும், அதைப் பறித்து அலங்கரிப்பது போலவும் செய்வது ரொம்பக் கொடுமைப்பா.
"என்ன இங்க பணம் காய்ச்சுத் தொங்குதுன்னு" நினைச்சியா என்று பெற்றோர்கள் கேட்பார்கள். ஒருவேளை அவர்களுக்கு அதைக் காய்க்கவைக்கிற வித்தை தெரியவில்லையோ என்னோவோ.

பணத்தை வைத்து மாலை இயற்றுவது இந்த நாட்டின் அவமானமா - பெருமையா என்பது தெரியவில்லை. ஒருவேளை மாயாவதி அம்மையார், இந்திய ஒருமைப்பாட்டின் மீது நம்பிக்கை இல்லாமல் அதனைக் கேலி செய்வதற்காக இது போல செய்திருக்கலாமோ என்னவோ. ஒரு நாட்டைக் கேவலப்படுத்த அந்த நாட்டில் குண்டெல்லாம் போடவேண்டியதில்லை. தேசியக் கோடியை கிழித்தாலே போதுமானது. அரசியல் வாதிலே அதையெல்லாம் செய்யக் கூடாது என்று சுற்றிக் கழுத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறார்.

"என்மீது கொண்ட அன்பால் அவர்கள் செய்தார்கள்" என்று மாயாவதி அம்மையார் சொல்கிறார்.
நாம எவ்வளவோ பேரைப் பார்த்துட்டோம் - நமக்குத் தெரியாதா. தமிழ் நாட்டில் இது போல அன்பால் செய்தார்களியும் பார்த்துட்டோம் - வெளிநாடுகளில் இருந்து காசோலை மூலமாக அன்பு செய்வதையும் பார்த்திருக்கிறோம்.

கருப்பை - வெள்ளையாக்கும் முயற்சி. வேறென்ன?

இல்லையென்றால், தன்னைத்தானே பெருமைப்படுத்திக்கொள்ளும் முயற்சி. தனக்கே மாநிலம் முழுவதும் சிலை வைத்துக் கொள்வது - பெரிய மண்டபம் கட்டிக்கொள்வது - தோட்டம் அமைத்துக் கொள்வது - இப்போது பணமாலை. தன்னைத் தானே நேசிக்கும், தன்னை மட்டுமே நேசிக்கும் ஒரு இழிநிலையின் வெளிப்பாடு.

இதை ஒரு எழுச்சியாகவும் பார்க்கலாம். மற்றவர்களுக்கு இணையான ஒரு தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் ஒரு முயற்சி என்பதற்காக இது போன்ற செயலலை செய்ய வேண்டியிருக்கிறது என்று சொல்லிக்கொள்ளலாம் - ஆனால் மாயாவதி விஷயத்தில் அதை நினைத்துப் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை.

ரூபாய் நோட்டில் எழுத வேண்டாம் என்றார்கள் - பூவெல்லாம் செய்யக்கூடாது என்றும் சட்டம் இயற்ற வேண்டும் போலிருக்கிறதே.

கோடி எரித்தால் கடும் சட்டம் - கோடி மிதித்தால் தண்டனை. தேசிய கீதம் அவமானப் படுத்தினால் சிறை. தேசிய பணம் --- என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இந்தப் பணத்தை வைத்தே இது தவறில்லை என்று சொல்ல வைக்கலாம் - யாரை வேண்டுமானாலும் விலைக்கு வாங்கலாம்...

அது சரி - நமக்கெல்லாம் இந்தப் பணம் மலர்களை விட மலிவாகக் கிடைப்பதில்லையே அது ஏன்?

இப்போது புதியதாய், ஒரு அரசியல் கட்சி - யோகா குரு பாபா ராம்தேவ் "ஸ்வபிமான் அபியான்" - ன்னு ஒரு கட்சி தொடங்கியிருக்காராம்.
அட சாமிங்களா எங்கே இருந்துதான் பணம் வருதோ.

அரசியல்வாதிகளுக்கு அச்சடித்த பணம் கசங்காமல் கிடைக்கிறது. இப்போது யோகா குருக்களுக்கு வேறு நிறையக் கிடைக்கிறது. பார்லிமெண்டில் சாக்குப்பையில் பணம் கத்தை கத்தையாய் வருகிறது.
கிரிக்கெட்டில் பணம் புரளுகின்றது.
I. P. L. கிரிக்கெட். இதனால் அரசுக்கு 200 கோடி வருமானமாம். - வருமான வரித்துறை மகிழ்ச்சி அடைந்திருக்கிறது. ஷாருக்கானுடன் அமர்ந்து கிரிக்கெட் பார்க்க 32,000 ரூபாயாம். என்னப்பா இது? எத்தனை கோடிகள்தான் புரளும்? உலகம் முழுக்க recession என்று சொல்கிறார்கள் - இந்தியா மட்டும் விதி விலக்கா.


அணு உலையினால் ஆபத்து ஏற்பட்டால் வெறும் 300 கோடி கொடுத்தால் போதும் என்று கூப்பாடு போட்டு, சட்டம் இயற்றப் போகிறார்களாம். அதுக்கு மேற்பட்டு வேணும்னா நீதி மன்றத்தில் வழக்கு போட்டு வாங்கிக் கொள்ளலாம் என்று விதண்ட வாதம் வேறு. நம்ம நாட்டில தான் நிலுவையில் இருக்கிற வழக்குகள் முடியவே 300 ஆண்டுகள் ஆகுமே?
[http://unmayapoyya.blogspot.com/2010/03/blog-post_07.html]

இதற்குத்தான் நமது பிரதமருக்கு "World statesman award" ஆ?

அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை - அதனருகில் ஓலைக் குடிசை -
மூத்த தலைவர்கள் வாழ்க.

12.3.10

ஐ.பி.எல். வந்தாச்சு - மத்ததெல்லாம் மறந்தாச்சு

நம்ம நாட்டுல எல்லாமே வரும் - போகும்.

எந்த ஒரு பிரச்சனையையும் நாம் முழுமையாக எதிர் கொள்வதாக எனக்குப் படவில்லை.

எல்லாம் சீசனல்தான்.
விலைவாசிப் பிரச்சனையைப் பற்றி எல்லாப் பத்திரிகைகளும் எழுதித் தீர்க்கும். (நாமளும்தான் - நாங்க எழுதுவோம் - நீங்க படிப்பீங்க) ஆனால் பிரச்சனை முடியாது. அதற்குள் அடுத்த பிரச்னை.

அணு ஒப்பந்தம் பற்றி எழுதுவோம். அடுத்தவாரம் அந்தப் பிரச்சனையை ஆறப்போட்டுவிடுவோம்.

யோகிகள் பற்றி எழுதுவோம். அதன் தொடர்ச்சி என்ன என்பதை நாம் சிந்திக்கக் கூட மாட்டோம்.

மகளிர் மசோதாவிற்குப் பின் உள்ள அரசியல் பற்றி எழுதுவோம். அப்புறம் அடுத்த மசோதாவிற்குத் தாவிவிடுவோம்.

நாம சீசனல் (seasonal) மட்டுமில்லை. sensational - லும்தான். -

சினிமா, விளையாட்டு என்று வந்தால் மற்றது எல்லாமே மறந்து போகும்.

இப்ப ஐ.பி.எல். வந்தாச்சு. வழக்கம் போல மற்றதெல்லாம் மறந்து யார் யார் சிக்ஸர் அடிச்சா - என்று கொஞ்ச நாள் நாமும் ஆடுவோம்.

பொழுது போகனுமா இல்லையா?