31.7.13

இதுவே இறுதியாக இருக்கட்டும்!

ஒவ்வொரு முறையும் அணு உலை அதற்கு எதிராக எழுதுகிற போது இதுவே கடைசியாக இருக்கட்டும் என்றுதான் தோன்றுகிறது... ஆனால் அதனால் இன்றைய மற்றும் நாளைய தமிழ் சமூகம் சந்திக்க இருக்கின்ற ஆபத்துகள் நம்மை அச்சுறுத்துவதால் அதைப் பற்றி மீண்டும் மீண்டும் எழுத வேண்டியது அவசியமாகவே இருக்கிறது.
முடிவின் ஆரம்பம் என்கிற ஆய்வுப்பட குறுந்தகட்டில் பல கருத்துகள் மீண்டும் வலியுறுத்தப் பட்டிருக்கின்றன...

ஒப்பந்த மீறல்கள் பற்றிச் சொல்லப் படுகின்றன... வெல்டிங் இல்லாத ரியாக்டோர்ஸ் என்கிற ஒப்பந்த மீறல், இதுவரை அவசர காலச் செயல்பாடு முறைகள் குறித்த ஆவணம் தயாரிக்காத நிலை, பத்து நாளைகளுக்குத் தேவையான தண்ணீர் இருப்பு வேண்டிய இடத்தில் ஒன்றரை நாட்களுக்குத் தேவையான நீர் மட்டுமே கைவசம் இருக்கின்றன என்பது போன்ற பல்வேறு குறைபாடுகளை வைத்துக் கொண்டு தனது அழிப்புப் பணியை தொடங்க நீதி மன்ற அனுமதியோடு தொடங்கி இருக்கும் இந்த வேளையில் இது குறித்து தமிழர்கள்  எச்சரிக்கை உணர்வோடு இருப்பது மிக அவசியம்.

வி. டி . பத்மநாபன்


26.7.13

நம் ஒரே நம்பிக்கை

மக்களாட்சி அரசமைப்பின் மிகப் பெரிய தூண் நீதித் துறை. இந்த நாட்டின் மக்கள் நல வாழ்விற்கும், தங்கள் உரிமைகள், பாதுகாப்பிற்கும் மக்கள் இறுதியாக நம்பியிருக்கும் ஒரே நிறுவனம் இந்த நீதித் துறைதான். இன்னும் அதன் மீதான நம்பிக்கையை, கணம் பொருந்திய நீதிபதிகள் மீது கொண்டிருக்கிற நம்பிக்கையை நான் இழக்க விரும்பவில்லை.

கணம் பொருந்திய நீதிபதிகள் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்குத் தடை கிடையாது என்று சொல்லியிருக்கிறார்கள்.இது ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். சொல்வதற்கு என்ன இருக்கிறது?

நீதித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வும் அவர்களது எல்லைகளும் வரையறுக்கப் பட வேண்டியது அவசியம்... இது நிச்சயம் நீதித் துறைக்கும் மக்களாட்சிக்கும் நல்ல விஷயம் இல்லை... ஆனாலும் சில செயல்பாடுகள் இது அவசியமோ என்று சொல்ல வைக்கின்றன...

நீதிபதிகள் ஒன்று சட்டம் என்ன சொல்கிறதோ அதை மட்டும் கேட்கிறவர்களாக இருக்க வேண்டும். சட்டத்தை சரியாக அர்த்தமுள்ள விதத்தில் விளக்க வேண்டியது மட்டும் அதன் கடமையாக இருக்க வேண்டும். 

அதைத் தாண்டி என்றால் மக்களின் பாதுகாப்பு, நல்வாழ்க்கை, நாகரிக வாழ்க்கை இவற்றில் எல்லாம் பங்காற்றுவதற்கு நீதித்துறைக்கு அவசியம் இருக்கிறது என்று கருதினால், அதை பாரபட்சம் இன்றி செயல் படுத்துவது அவசியம். 

மக்களின் நலன் என்பது முன்வைக்கப் பட்டால், முதலில் மக்களின் பாதுகாப்பும், கவுரவுமும் முதலிடம் பெற வேண்டும். ஆனால் நடப்பது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நமது நல வாழ்க்கைக்கு அவசியமானதாகத் தெரியவில்லை.

காவேரி நீர் விவகாரம் எத்தனை ஆண்டுகள் விவகாரம் அதில் இன்னும் உறுதியான இறுதியான முடிவைத் தர நீதி மன்றத்தால் முடியவில்லை... கொடுத்த தீர்ப்பை பிறர் பின்பற்றாத நிலையிலும் அரசுகள் கூடி ஒரு சுமூகமான முடிவு எடுக்க வேண்டுமாம்.... 
முல்லைப் பெரியாறு அணையில் சரியான முடிவுகள் இல்லை... ஆனால் கூடங்குளம் விடயத்தில் மட்டும் விரைவான முடிவு...

எல்லா வழக்குகளுக்கும் வாய்தா .... ஆனால் இதற்கு மட்டும் இறுதியான முடிவு... 
உண்மையில் நீதித் துறை மக்களின் பாதுகாப்பின் மேல் அக்கறை கொண்டிருந்தால், பாதுகாப்பு நடவடிக்கைகள் முடியும் வரை அணு உலைகள் திறக்க தடை விதித்திருக்க வேண்டும். ஆனால் மீண்டும் மீண்டும் அவகாசம்... இன்னும் எத்தனை நாட்களுக்கு...

கணம் பொருந்திய நீதிபதிகள் தங்களது தீர்ப்போடு முடித்திருந்தால் பரவாயில்லை... ஆனால் நாட்டின் பொருளாதராத்திற்கும், நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும், இந்தியா நாட்டு மக்களின் அத்தியாவசியத் தேவைக்கும் இது மிக அவசியமானது என்று தங்களது கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள். நாட்டின் தேசிய ஒருமைப் பாடு...

காவிரி நீர்க்கும் முல்லைப் பெரியாறு அணைக்கும் இல்லாத, அதற்கு வராத ஒருமைப்பாடு இதற்கு மட்டும் வேகமாய் வந்திருக்கிறது. மற்ற வழக்குகளுக்கு மட்டும் பேசி சுமூகமான முடிவு எடுக்க அரசுகள் முன்வர வேண்டும்... மக்கள் போராட்டங்களில் மக்களோடு அரசுகள் பேச்சு வார்த்தை தேவையில்லையா?

இந்திய நாட்டின் மக்களின் வளர்ச்சிக்காக, தமிழ் நாட்டின் தென்கோடியில் கூடங்குளத்திலும், வடக்கில் கல்பாக்கத்திலும், இன்றைய மற்றும் நாளைய தலை முறையின் வாழ்கையை அடமானம் வைத்து இந்தியாவிற்கு ஒளியேற்றுவோம்... ஆனால் இந்த மக்களின் வாழ்வாதார விவசாயத்திற்கும், மீன் பிடித் தொழிலுக்கும் எந்த வித உத்தரவாதமும் இன்றி... இன்னும் சில ஆண்டுகளில், இந்திய நாட்டின் இந்தப் பகுதி மக்களின்நாடு பாலைவனமான பின்பு இந்தியாவின் எல்லா மாநிலங்களும் ஒளியில் பிரகாசிக்கட்டும்...

வெறும் சட்ட விளக்கம் கொடுப்பவர்களாக இல்லாமல் அதைத்தாண்டி நாட்டின் வளர்ச்சி என்று நீதிபதிகள் சிந்திப்பது நல்லதுதான்... ஆனால் இதில் வெறும் மேல்நாட்டு பொருளாதார வளர்ச்சியைப் போல இந்திய நாடும் அணுவின் வளர்ச்சியில் வளர்வதுதான் வளர்ச்சி என்று சிந்திப்பதையும், நாட்டு மக்களின் பாதுகாப்பும் மிக முக்கியம் என்று சிந்திப்பதையும், நமக்கான வளர்ச்சி முறையை நாமே நிர்ணயிக்க வேண்டும் என்று சிந்திப்பதும் மிக நல்லது.  

அப்படியே இல்லை என்றால்கூட வெளி நாட்டில் அனு மின் நிலையங்கள், அவற்றின் பாதுகாப்பு அரண்கள், அணு உலையைச் சுற்றி எத்தனை ஆயிரம் மக்கள் இருக்கிறார்கள் அது ஏன் கூடங்குளத்தில் அதிகமாக இருக்கிறது .... ஏன் வளர்ச்சி பெற்ற ஜெர்மனி போன்ற நாடுகள் அனு உலைகளை மூட முடிவு எடுத்திருக்கின்றன? .. மாதத்தில் ஆறு மாதங்கள் வெயிலே இல்லாத நாடுகள் கூட என் சூரியஒளி வழியாக மின்சக்தி தயாரிக்கின்றன? ... வருடம் முழுவதும் சூரிய ஒளியில் குளிக்கிற நாம் ஏன் இன்னும் அதை அதிகப் படுத்தாமல் இருக்கிறோம்?.... அப்படி செயல்படுபவர்களும் ஏன் எப்போதும் போல ஊழலியே திளைத்து இருக்கிறார்கள்... எல்லாவ்ற்றளிலும் ஊழல் என்றால்.... கூடங்குள அணு மின் நிலையத்திலும் தரக்குறைவான சாதனங்கள் இருக்கின்றனவா....  எதனால் அரசு மக்களின் நம்பிக்கையைப் பெற முடியவில்லை? அவர்களின் நியாயமான கோரிக்கைகள் என்ன? இப்படி அடுக்கடுக்கான கேள்விகளையும் நீதித் துறை ஒவ்வொரு மிகப் பெரிய தீர்ப்புக்கு முன்பும் எழுப்ப வேண்டியது அவசியம்... 
இல்லையெனில் கூடங்குளத்தில் இன்னும் இன்னும் அதிக அதிக உலைகள் தொடங்கப்படும் ஒட்டு மொத்த தமிழகத்திற்குமான அபாயம் இன்னும் அதிகமாகும்.

இன்னும் நீதித் துறையிடம் நம்பிக்கை இருக்கிறது... ஏனெனில் மக்களாட்சியின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது... 
24.7.13

இவர்களுக்கா நாம் அடிமைகளாய் இருந்தோம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகக் கெட்டு விட்டதாக தமிழக முன்னாள் முதல்வர் இன்று மிகப் பெரிய குற்றச் சாட்டை எழுப்பியிருக்கிறார்.... நமக்கு இன்னும் அதிகமாக நினைவுகள் மழுங்கி விட வில்லை என்பதை கணம் பொருந்திய முன்னாள் முதல்வருக்குத் தெரிவிக்க வேண்டிய கடமை நம் எல்லாருக்கும் இருக்கிறது. அதனால் இன்று எல்லாம் சரி ஆகி விட்டது என்று அர்த்தம் இல்லை.   
இன்றைய முதல்வர் எதனால் அந்நிய முதலீட்டை எதிக்கிறார் என்றும் அதன் பின்னால் உள்ள அரசியலும் எனக்குத் தெரியாது. ஆனால் அந்நிய முதலீட்டை அவர் எதிர்ப்பதை நான் முற்றிலுமாக ஆதரிக்கிறேன். எல்லாவற்றிலும் அந்நிய முதலீட்டை அதிகரித்த காங்கிரஸ் சுதேசிகள் கொஞ்சமாவது தங்கள் 'சுதேசித் தன்மையை' உணர்ந்தார்கள் என்றால் அவர்களுக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது. கலைஞர் உண்மையிலேயே மாற்றத்தை எதிர் பார்த்தால் மக்கள் நலனுக்கான போராட்டங்களை முன்னெடுப்பதே அவருக்கும் அவரது தளபதிகளுக்கும் நல்லது.


  • முல்லைப் பெரியாறு அணை வழக்கில் - தமிழக அரசு எப்படி உரிமை கோர முடியும் என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதி மன்ற நீதிபதிகள் தமிழக அரசின் பதிலில் திருப்தி அடைய வில்லையாம். 1970 ஆம் ஆண்டு இரு மாநில ஆளுநர்களும் புதிப்பித்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் என்பது திருப்தியாக இல்லையாம். பேசாமல் அந்தந்த மாநிலங்களின் எல்லைக்குள் இருப்பவை எல்லாம் அந்தந்த மாநிலங்கள் அனுபவிக்க வேண்டும் என்று ஒரு தீர்ப்பையாவது கொடுத்து விட்டுப் போகலாம்.... 
  • கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் - உச்ச நீதிமன்றத்தின் இன்னும் அரசாங்கம் நிறைவேற்ற வில்லை என்றும் அதனால் மின் நிலையத்தை இயங்க அனுமதிக்கக் கூடாது என்ற வழக்கை  தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருக்கிறார்கள் உயர் நீதி மன்ற நீதிபதிகள்.  
  • சரியான காரணங்களோடு போனால் ஒத்தி வைக்கிறார்கள்.... வரலாற்று ஆவணங்களோடு போனால் திருப்தி அடைய மாட்டேன் என்கிறார்கள்.... என்ன செய்யலாம்? 
நாங்கள் சொன்னால்தான் சூரியன் கூட எழும் என்று சொன்ன இங்கிலாந்து ஆதிக்க வாதிகளின் அரண்மணையில் அடுத்து ஆள்வதற்கான புதிய இளவரசர் பிறந்திருக்கிராராம்... உலக மீடியாக்கள் லைவ் கவரேஜ் கொடுக்கின்றன... இங்கிலாந்து மக்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கே ஒரு வாரிசு வந்தது போல ஆர்ப்பரிக்கிறார்கள்.... மக்களாட்சி மக்களாட்சி என்று சொன்னாலும் இன்னும் அரச பரம்பரையின் மீதான மோகம் கொஞ்சம் கூடக் குறைவதாய் இல்லை.. தமிழக ரசிகர் மன்றங்களுக்கும் இவர்களுக்கும் ஒன்றும் பெரிதாய் வித்தியாசம் இல்லை.. ரசிகர்களாவது நடிக்கிற கலைகர்களின் பின்னால் ஓடுகிறார்கள்... வெறும் பொம்மைகளின் மீது ஓடுகிறார்கள் இங்கிலாந்து மக்கள்... இன்னும் மக்களாட்சி மீது முழுமையான நம்பிக்கை இல்லாத இங்கிலாந்து மக்கள்...

கேவலம் இவர்களுக்கா நாம் அடிமைகளாய் இருந்தோம். அந்நிய முதலீட்டின் வழியாய் இவர்களைப் போன்றவர்களுக்குத் தான் அடிமைகளாய் இருப்போம்... கெஞ்சி தண்ணீர்ப் பிச்சை கேட்டு மலையாளர்களுக்கும், கன்னடர்களுக்கும் அடிமைகளாய் இருப்போம். நம் மக்களின் உயிர் கொடுத்து நம் அண்டை மாநிலத்தவருக்கு ஒளிகொடுப்போம் என்றென்றும் அடிமைகளாய்...
இந்தியா ஒளிர்க...


16.7.13

நான்கு தலைவர்கள்


நான்கு அமெரிக்க ஜனாதிபதிகள் ஒன்றாக சேர்ந்து நிற்பது போன்ற விஷயங்கள் இந்தியாவில் நடப்பது மிக அரிது. இந்தியாவில் இது போன்ற நான்கு பிரதம மந்திரிகள் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக இப்படி இருப்பது நிச்சயமாக நடக்கும் என்று தோன்றவில்லை. அப்படியே நடந்தாலும் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு ...


அமெரிக்காவில் எந்த கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எப்போதும் தங்களது நாட்டு மக்களின் நலன், நாட்டு மக்களின் சுதந்திரம், உலக நாடுகளிடம் தங்களது அதிகாரத்தைக் காட்டுவது... தங்களை மட்டுமே உயர்ந்தவர்களாகக் காட்டுவது எல்லாவற்றிலும் ஒன்றாகத் தான் இருப்பார்கள்...

வி பிலீவ் இன் சேன்ஜ்  -- என்று சொன்ன ஒபாமா மிகப் பெரிய முன்மாதிரியாகத் தெரிந்தார்... ஆனால் வெளி நாடுகளின் மீது போர்ட் தொடுத்த புஷ்ஷுக்கும் .. வெளி நாடுகளின் இரகசியங்களை ஆராய்ந்த ஒபாமாவுக்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை.

எட்வர்ட் ஸ்நோடவுன் NSA செய்த வண்டவாளங்களை வெளியில் கொண்டு வந்தாலும், அதைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப் படாமல் அவரை நீதி மன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறார்கள்... எந்த நாடும் அமெரிக்காவிற்கு எதிராகக் குரல் கொடுக்க மறுக்கிறது...


எல்லா நாட்டுத் தலைவர்களும் செகுரிடி நிறுவன ங்களும் இதைத் தானே செய்கின்றன... அப்புறம் எப்படி எதிர்த்துக் குரல் கொடுப்பார்கள்?

இது ஒபாமா செய்தது மட்டுமல்ல அவருக்கு முன்பு இருந்த அத்தனை தலைவர்களும் இதைத்தான் செய்தார்கள்...நம்ம தலைவர்கள் அடுத்தவன் செய்த தவறை மட்டும் சுட்டிக் காட்டுவான்... இவர்கள் அந்த விஷயத்தில் யாரும் எதையும் வெளியிடுவதில்லை.. கூட்டுக் களவாணிகள்... அவர்களும் எல்லா நாட்டுத் தலைவர்களும் தான்...

ஆனால் வாய் கிழியப் பேசுவார்கள்.... நாங்கள் தனி மனித சுதந்திரத்தை மதிக்கிறோம் என்று... 
நமக்கெல்லாம் அமெரிக்காதான் முன்மாதிரி... 

11.7.13

கொலைகார்கள் நாங்கள்

  • உத்திரகான்ட்டில் ஒரே நாளில் ஆயிரம் உயிர்கள் ஒன்றாய் விழுந்தபோது கூட நான் கலங்கிப் போகவில்லை.  ஆனால் ஆயிரம் ஆண்டுகளாய் உன் போன்றோர் ஒவ்வொருவராய் இறக்கும் போதுதான் நான் வெறுத்துப் போகிறேன். 
  • உன் இறப்பு கொலையோ தற்கொலையோ எனக்குத் தெரியாது ஆனால் கொலைகாரர்கள் யாரென்று தெரியும் ... வேறு யார் நாங்கள்தான்... 
இளவரசனின் தற்கொலைச் செய்தியை - சில தமிழ் பத்திரிக்கைகள்... தர்மபுரி கலவரத்திற்குக் காரணமான இளவரசன் தற்கொலை என்று செய்தி வெளியிட்டு இருந்தன... கலவரத்திற்குக் காரணமான பல அய்னாக் கைகள்  சுதந்திரமாய் இருந்தது மட்டுமல்ல அதை நியாப்படுத்தவும் செய்து களிப்பில் மிதந்து கொண்டு இருக்கும், இறந்து போன இளவரசனை காரணம் காட்டும் சாதி வெறியர்கள் நாங்கள் கொலைகாரர்கள்தானே... 


தனி மனித உரிமை பேசும் நாங்கள், திருமணத்திற்கு மட்டும் சாதிக்குள் உரிமை பேசி அதை எங்கள் உரிமையாகவும் பேசி உன்னைக் கலகக்காரனாக்கின நாங்கள் கொலைகாரர்கள் தானே!

தீண்டாமை பாவச்செயல் உரக்க சொல்வோம் நாங்கள் ஆனால் அது எழுத்தில் மட்டும் இருக்க வேண்டும் என்பதில் இறுதிவரை உறுதியாய் இருக்கும் நாங்கள் ...

இன்னும் பேசுவோம் மனித உரிமை.... இன்னும் பேசுவோம் தீண்டாமை பாவச் செயல் ... இன்னும் பேசுவோம் காதல் வாழ்க... 

ஆனால் இளவரசன்களை மட்டும் வாழ விடுவதாய் இல்லை...
வாழ்க காதல் ...  வாழ்க மனித உரிமை ... வாழ்க சுதந்திரம்...

2.7.13

இயற்கை, முன்அறிவிப்பு, அனுதாபங்கள்

நான் எழுத வந்து ரொம்ப நாளாச்சு. மூச்சு விட நேரமில்லை முடிவெட்ட நேரமில்லை. எல்லாம் இன்றோடு முடிந்து இன்னும் மூன்று நாட்கள் கொஞ்சம் வேலைப்பளு இல்லாமல் இருக்கலாம். நிறைய நடந்து விட்டது. இப்போதைக்கு ஒன்று மட்டும்.

இயற்கையின் சீரழிவிற்கு எல்லைகள் கிடையாது என்பதை உத்தர்கண்ட் மாநிலத்தில் வெள்ளம் மீண்டும் நினைவு படுத்தி இருக்கிறது.  இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஆனால் வெறும் அனுதாபங்களோடு மட்டும் இதனை நிறுத்திக் கொள்ள வேண்டுமா என்கிற கேள்விகளை கேட்டாக வேண்டும். பல ஆயிரக்கணக்கான மக்களை காவு வாங்கியிருக்கும் இந்தக் காட்டாற்று வெள்ளம் வரும் என்று முன்பே தெரியுமா தெரியாதா? அடிக்கத் ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து ராக்கெட் பறக்கிறது. வானிலை முன்னறிவிப்பை நமக்குத் தெரியப்படுத்தும் தொழில் நுட்பம் நமக்கு இல்லை... அப்படியே இருந்தாலும் வரும் முன் என்ன செய்ய வேண்டும் என்கிற தயார் மன நிலை, மக்களைக் காப்பாற்ற துரித நடவடிக்கை....ரொம்பக் குறைவு.

[உடனே, காப்பாற்றச் சென்று இறந்த இராணுவ வீரர்களை நினைவு படுத்தி என்னைக் குற்றவாளியாக்க முயற்சிக்காதீர்கள்... அவர்கள் இறந்த ஹெலிகாப்டர்களை ஊழலில் தரம் குறைந்தவைகளாக வாங்கியதால் வந்தது.... வெறும் தொழில் நுட்பக் கோளாறால் மட்டுமல்ல.... அதை ஒழுங்காகச் செய்திருந்தால் இந்த இராணுவ வீரர்கள் இறந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை].

மழை வருமா இல்லையா, எந்த அளவுக்கு வரும் என்பது வரை இன்று துல்லியமாக கூகுல் முதல் யாகூ வரை தெளிவாகச் சொல்கின்றன... ஆனால் அதைக் கண்டு அதற்கான முன் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அரசுதான்... மழை பெரு வெள்ளமாக  மாறுவது, மரங்களை வெட்டி காடுகளை அழிப்பது போன்ற நமது பணம் பார்க்கும் எண்ணம்தான் என்பதும் உண்மைதானே... 

எனவே வெளி நாட்டு கட்டளைகளை  ஏற்று பொருளாதார சீர் திருத்தம் என்ற பேரில், வெளி நாட்டு நிறுவனங்களுக்கும், தொழில் நுட்பம் என்ற பேரில் நாட்டை அழிவுப் பாதிக்கும் கொண்டு செல்லும் இந்த மன நிலையில் கொஞ்சம் மாற்றம் வந்தாலே போதும் பல ஆயிரக் கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்ற முடியும். 

 சரி ஒரு மாதத்திற்கு முன்பே அறிக்கை தரக் கூடிய வானிலையின் மாற்றத்தைக் கண்டு பிடிக்க முடியாமலேயே இந்திய மக்கள் இப்படி ஆயிரக் கணக்கான மக்கள் இறந்து போயிருக்கிறார்களே ... சொல்லாமலே வரும் விபத்துகளை... [அணு உலை] அது கொண்டு வரும் விபரீதங்களைப் பற்றி நாம் யோசிப்பது கூட இல்லை என்பது வேதனைதான்... அதனால் முன்பே 
நாம் தமிழக மக்களுக்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வோம்.

அனுதாபங்களை இறந்தவர்களுக்கு மட்டும்தான் சொல்ல வேண்டும் என்பதில்லை - இறக்க இருக்கிறவர்களுக்கும் சொல்லலாம். நான் செய்தது தவறென்றால்....

குஜராத் மாநில காங்கிரஸ், உடல்நலக் குறைவோடு இருக்கிற நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறது. 
நெல்சன் மண்டேலாவுக்கும் காந்தியின் அஹிம்சாவுக்கும் நிறையத் தொடரபு இருக்கிறது என்பதை உலகம் அறியும். அந்த நெருக்கத்தில்தானோ என்னவோ வேறு யாரும் அனுதாபம் தெரிவுக்கும் முன்பே குஜராத் மாநில காங்கிரஸ் ரொம்ப வேகமாகவே அவர் இறப்பதற்கு முன்பே அனுதாபத்தைத் தெரிவித்திருக்கிறது. அதனால் அனுதாபம் தெரிவிப்பதில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.