மனித உரிமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனித உரிமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20.9.16

தேசப் பற்று - சில கேள்விகள்

இந்தியா என் நாடு என்பதிலும் 
அதில் நான் உறுப்பினன் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லாமல்தான் இருந்தேன் - இருக்கிறேன் - 

ஆனால் எப்போதும் மீண்டும் மீண்டும் தேசப்பற்றை உறுதி செய்யும் குரல்கள் எழும்பிக் கொண்டே இருக்கின்றன.

ராம்குமார் சிறையில் கொல்லப் பட்டதற்கு வரும் எதிர்ப்புகளைக் கண்டு தேசியப் பற்றாளர்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.

"குற்றவாளி ராம்குமார் சிறையில் இறந்ததற்கு கொதித்துப் போயிருக்கிறீர்களே எத்தனை பேருக்கு எல்லையில் ராணுவ வீரர்கள் இறந்தது நமக்குத் தெரியும்? - நீங்கள் எல்லாம் மனிதர்களா? இந்தியர்களா?
ஜெய் ஹிந்த்" - என்று ஒரு செய்தி வாட்ஸ் ஆப் - பில் வந்தது.
= = = = 

இறந்த இராணுவ வீரர்களுக்கு வீர வணக்கங்களும் 
அவர்களை இழந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

= = = = 

ஐயா தேசப் பற்றாளரே 
இப்ப எதுக்கு இவ்வளவு கோபம்?

ஆற்றை அதன் போக்கில் விடாமல் தடுத்த கர்நாடக நண்பர்களை பார்த்து சொல்லுங்கள் - ஜெய்ஹிந்த்...

இந்தியாவில் அங்கம் வகிக்கும் தமிழகத்திற்கு சொட்டு நீர் கூட கொடுக்க முடியாது என்று சொல்லி தமிழகப் பதிவெண் கொண்ட பேருந்துகளை, சரக்கு லாரிகளை, கார்களை எரித்த அவர்களிடம் சொல்லுங்கள் ஜெய் ஹிந்த்...

தமிழ் பேசுகிறான் என்பதற்காக அவர்களை, துகில் உரித்து, அறைந்து, காவிரி கன்னடர்களுக்கே என்று கன்னடத்தில் சொல்ல வைத்த அந்த காட்டுமிராண்டிகளைப் பார்த்து சொல்லுங்கள் ஜெய் ஹிந்த் ....

அங்கே அடிவாங்கியவர்கள் இந்தியர்கள் இல்லையா?
இழந்த சொத்துக்கள் இந்தியாவைச் சார்ந்தது இல்லையா? 

அப்போதெல்லாம் ஆவேசப் படாத நீங்கள் திடீரென பாய்ந்து வருவது ஏன்?

எல்லைபாதுகாப்பு எப்போதும் ஆபத்து நிறைந்ததுதான். அவர்களுக்கு சல்யூட் செய்ய வேண்டியது அவசியம் தான்... அதற்காக,

இந்தத் தருணத்தில் நடக்கும் காட்டு மிராண்டித்தனங்களை பற்றி நாம் பேசக் கூடாதா?

இந்தத் தருணத்தில் நடக்கும் உரிமை மீறல்கள் பற்றி பேசிக் கூடாதா?

இந்தியாவின் பாதுகாப்புக்கு எவ்வளவு முக்கியத் துவம் இருக்கிறதோ அந்த அளவுக்கு நீதிமன்றங்களும் முக்கியம். நீதிமன்றங்களை அவமதிக்கும் போதும் இந்த ஆவேசம் வேண்டும்.

சட்டத் துறையைப் போல காவலும் அவசியம்தான். காவல் தூதர்கள் மனித உரிமைகளையும் மீற முடியாது. குற்றம் உறுதி செய்யப் படும் வரை அவன் குற்றவாளி அல்ல. நாளை உங்களைக் கூட கைது செய்யலாம். சிறையில் வைக்கலாம். அதனால் நீங்கள் குற்றவாளி ஆகிவிட மாட்டீர்கள். உங்களுக்கும் மர்மமான சாவு வரலாம். அப்போதும் நாங்கள் மர்ம இறப்புகளுக்கு விளக்கம் கேட்டுக் குரல் எழுப்புவோம்.

ஏனெனில் மனித உரிமை என்பது எல்லாருக்கும் பொதுவானது.





1.2.14

இந்தியக் குடியரசும் அரசியம் அமைப்பும் - 1

65 ஆவது குடியரசு  தினத்தை இந்தியா சிறப்பாக கொண்டாடி முடித்து தேர்தலை எதிர்பார்த்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், குடியரசு பற்றியும் இந்தியாவின் அரசியல் பற்றியும் அலசுவது நல்லது  என படுகிறது.

பல சமயங்களில் ஜனநாயகத்திற்கும் குடியரசிற்கும் உள்ள வித்தியாசம் குழப்பம் விளைவிப்பதாகவே இருக்கிறது. இந்தியா ஜனநாயக நாடு மற்றும் குடியரசு நாடு. ஜன நாயகம் என்பது மக்கள் அல்லது ஜனங்கள்தான் நாட்டின் நாயகர்கள். தங்களைத் தாங்களே ஆள்வது என்பதுதான் ஜனநாயகத்தின் கரு.
ஆனால் எல்லா ஜனநாயகமும் உண்மையிலேயே எல்லா மக்களின் நலத்தையும் பூர்த்தி செய்யும் என்கிற எந்த உத்திரவாதமும் இல்லை. பிளேட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் கால கிரேக்க மக்களின் கலாச்சாரத்தில் கூட மக்களாட்சி தான் இருந்தது. ஆனால் எல்லா மக்களும் சமமாணவர்கள் என்கிற எண்ணம் அவர்களுக்கு இல்லை. அடிமைகள் ஒரு நாட்டின் ஆள்பவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமைகள் பெற்றவர்களாக இல்லை. ஆனால் இந்தியக் குடியரசு அப்படி இல்லை. நாட்டின் குடி மக்கள் எல்லாரும் சமமானவர்கள் என்கிற கருத்தாக்கத்தின் அடிப்படையில் இயங்குகிறது.

குடியரசு என்பது குடி மக்களின் அரசு என்கிற விதத்தில் ஜனநாயகத்தோடு தொடர்புடையதுதான். ஆனால், அதையும் தாண்டி குடி மக்கள் அனைவரும் எப்போதும், எக்காலத்திலும், யாராலும், எதனாலும், மறுக்கப் படாத இயற்கை உரிமைகளைக் கொண்டுள்ளார்கள் என்கிற தளத்தில் இருந்து, சட்டத்தையும், அரசியல் அமைப்பையும் அடிப்படையாகக் கொண்டு இயங்குவது குடியரசு.

ஹிட்லர் என்கிற மாபெரும் இன வெறித் தலைவன் ஜனநாயக முறைப்படித் தேர்ந்தெடுக்கப் பட்டவர்தான். ஆனால் அந்த ஆட்சியில் தனி மனித உரிமைகள் என்பது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு மட்டுமே சொந்தமானதாக அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு அந்த உரிமைகள் இல்லை என்பதாக கருதப் பட்டது. இந்தப் படிப்பினைக்குப் பிறகு, மனித உரிமைகள்   இனவெறிக் கொள்கைகளும் உலகில் எல்லா மக்களாலும் வெறுக்கப் பட்டது என்பதையும் நாம் அறிவோம்.

இந்திய சுதந்திரம் என்பது ஹிட்லருக்குப் பிறகு வந்தது. எனவே, இந்தியா வெறும் ஜனநாயக நாடாக மட்டுமில்லாமல் குடியரசாகவும் வேண்டும் என்கிற சிந்தனை நம் தலைவர்களுக்கு வரவே, அரசியல் அமைப்புச் சட்டம் எழுதப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியா அமைப்புச் சட்டத்தினால் ஆளப்படுகிற அரசு என்பதை நாம் அடிக்கடி நினைவு கூறக் கடமைப் பட்டிருக்கிறோம்.

வெறும் ஜனநாயக நாடு என்பது மெஜாரிட்டேரியன் அரசாகவும், பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை மட்டுமே நிறைவேற்றும் அரசாக மட்டுமே இருக்க முடியும். இதை ஒரு கற்பனை உதாரணத்தினால் புரிந்து கொள்ள முடியும். இந்தியாவில், ஓர் இந்து பாசிச அமைப்பு இது இந்துப் பெரும்பான்மை நாடு எனவே இங்கே இந்துக்கள் மட்டுமே இருக்க முடியும், பிறர் வெளியேற வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வர முடியும். அதனால், ஹிட்லர் போன்று சில முடிவுகளை எடுக்க முடியும். இன்றைய அரசியல் சூழ்நிலையில் மாற்றங்களை விரும்புகிற  ஒவ்வொருவரும், வேறு வழியின்றி இந்த முடிவுக்கு தள்ளப் படுவதற்கான  காரணங்கள் இருக்கின்றன. ஆனால் இத்தகைய காரணங்கள் இன்னும் பல சிக்கல்களுக்கு வழி வகுக்கும்.
இந்துத்துவ பெரும்பான்மை என்பது மட்டுமே ஆட்சி அமைக்க ஒரு கருவியாகப் பயன்படுத்தப் படும் போது, இன்னும் சிறிது காலத்திற்குப் பிறகு, இந்தி பேசும் மக்கள் பெரும்பான்மையாக இருப்பதனால், இந்தியாவின் எல்லா இந்துக்களும், இந்தி பேச வேண்டும் என்றோ அல்லது இந்தி பேசாத இந்துக்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று பெரும்பான்மை இந்துக்கள் முடிவுக்கு வரமுடியும்.  அதன் பிறகு, இந்துக்களுக்குள் சைவ வைணவ பிரிவு பெரும்பான்மை என்று வரிசையாக - பெரும்பான்மை என்பது எந்த விதமான வேறுபாடுகளையும் சகித்துக் கொள்ள முடியாத கொடூரமான பாசிசத்தில் முடியும் சாத்தியக் கூறுகளே இருக்கின்றன. இனவெறி என்பது எவ்வளவு கொடூரமான விடயம் என்பதைப் புரிந்து கொள்ள இது போதும்.

ஆனால், இது போன்ற பெரும்பான்மை எண்ணங்கள் உருவாக்கப்படுவது இமோஷன்ஸ் வழியாகத்தான். இன்று எல்லாரையும் மிகச் சுலபாமாக ட்ரிகர் பண்ணுவது மதம்தான். அதன் பிறகு மொழி. இது போன்ற அம்சங்கள் தவறு என்றெல்லாம் நான் வாதட வில்லை. இதில் எது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் எனக்கான கருத்து இருக்கிறது. ஆனால் இப்போதைக்கு, இந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு... மீண்டும் நமது விஷயத்துக்கு வருவோம்.

இதுபோன்ற இமோஷனல் சமாச்சாரங்களால் ஒரு தவறான அல்லது இனவெறி, பாசிசக் கொள்கையில் நாம் புதைந்து போகாமல் இருக்க, நம்மை நெறிப் படுத்த உதவுவன அரசியல் அமைப்பும் சட்டங்களும். அதனால்தான் நீதி மன்றங்கள் தனி மனித உரிமையை நிலை நாட்டும் ஒரு தன்னாட்சி [அரசியல் கட்சிகளின் கைப்பாவைகளாக இல்லாமல் (!)] நிறுவனங்களாக இருக்கின்றன.

ஆம் ஆத்மியின் சட்ட அமைச்சரின் இனவெறிக் கெதிராக எல்லாரும் வெகுண்டெழுவது நாம் இன்னமும் குடியரசு நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிற நம்பிக்கையைக் கொடுக்கிறது. அதே சமயம், இன்று இனவெறிக் கொள்கைக்கு எதிராக வெகுண்டெழும் பத்திரிக்கைகள் தமிழக மீனவர்களுக்கெதிரான சிங்கள இனவெறித் தாக்குதலுக்கு மவுனத்தை பதிலாகத் தருவது பத்திரிகைத் தூண் எப்படி தனது பங்கை ஆற்றுகிறது என்று கேட்க வைக்கிறது. 

பங்களாதேஷில் மற்றும் பாகிஸ்தானில் இந்துக்கள் பாதிக்கப் படுவதிற்கு எதிராக இந்தியாவில் பா.ஜ.க. அமைப்பு போராட்டங்கள் நடத்தியது ஒரு நாட்டில் பன்முகத்தன்மை என்பது எப்போதும் பாதுக்காகப்பட வேண்டும் என்கிற உண்மையை உணர்த்துகிறது. அது இந்தியாவிற்கும் பொருந்தும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவின் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் அரசியல்  அமைப்பையும்,சட்டங்களையும் ஒழுங்கு படுத்தும் அமைப்பாக அரசு இருக்க வேண்டும்.

தொடரும்.....


26.7.13

நம் ஒரே நம்பிக்கை

மக்களாட்சி அரசமைப்பின் மிகப் பெரிய தூண் நீதித் துறை. இந்த நாட்டின் மக்கள் நல வாழ்விற்கும், தங்கள் உரிமைகள், பாதுகாப்பிற்கும் மக்கள் இறுதியாக நம்பியிருக்கும் ஒரே நிறுவனம் இந்த நீதித் துறைதான். இன்னும் அதன் மீதான நம்பிக்கையை, கணம் பொருந்திய நீதிபதிகள் மீது கொண்டிருக்கிற நம்பிக்கையை நான் இழக்க விரும்பவில்லை.

கணம் பொருந்திய நீதிபதிகள் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்குத் தடை கிடையாது என்று சொல்லியிருக்கிறார்கள்.இது ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். சொல்வதற்கு என்ன இருக்கிறது?

நீதித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வும் அவர்களது எல்லைகளும் வரையறுக்கப் பட வேண்டியது அவசியம்... இது நிச்சயம் நீதித் துறைக்கும் மக்களாட்சிக்கும் நல்ல விஷயம் இல்லை... ஆனாலும் சில செயல்பாடுகள் இது அவசியமோ என்று சொல்ல வைக்கின்றன...

நீதிபதிகள் ஒன்று சட்டம் என்ன சொல்கிறதோ அதை மட்டும் கேட்கிறவர்களாக இருக்க வேண்டும். சட்டத்தை சரியாக அர்த்தமுள்ள விதத்தில் விளக்க வேண்டியது மட்டும் அதன் கடமையாக இருக்க வேண்டும். 

அதைத் தாண்டி என்றால் மக்களின் பாதுகாப்பு, நல்வாழ்க்கை, நாகரிக வாழ்க்கை இவற்றில் எல்லாம் பங்காற்றுவதற்கு நீதித்துறைக்கு அவசியம் இருக்கிறது என்று கருதினால், அதை பாரபட்சம் இன்றி செயல் படுத்துவது அவசியம். 

மக்களின் நலன் என்பது முன்வைக்கப் பட்டால், முதலில் மக்களின் பாதுகாப்பும், கவுரவுமும் முதலிடம் பெற வேண்டும். ஆனால் நடப்பது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நமது நல வாழ்க்கைக்கு அவசியமானதாகத் தெரியவில்லை.

காவேரி நீர் விவகாரம் எத்தனை ஆண்டுகள் விவகாரம் அதில் இன்னும் உறுதியான இறுதியான முடிவைத் தர நீதி மன்றத்தால் முடியவில்லை... கொடுத்த தீர்ப்பை பிறர் பின்பற்றாத நிலையிலும் அரசுகள் கூடி ஒரு சுமூகமான முடிவு எடுக்க வேண்டுமாம்.... 
முல்லைப் பெரியாறு அணையில் சரியான முடிவுகள் இல்லை... ஆனால் கூடங்குளம் விடயத்தில் மட்டும் விரைவான முடிவு...

எல்லா வழக்குகளுக்கும் வாய்தா .... ஆனால் இதற்கு மட்டும் இறுதியான முடிவு... 
உண்மையில் நீதித் துறை மக்களின் பாதுகாப்பின் மேல் அக்கறை கொண்டிருந்தால், பாதுகாப்பு நடவடிக்கைகள் முடியும் வரை அணு உலைகள் திறக்க தடை விதித்திருக்க வேண்டும். ஆனால் மீண்டும் மீண்டும் அவகாசம்... இன்னும் எத்தனை நாட்களுக்கு...

கணம் பொருந்திய நீதிபதிகள் தங்களது தீர்ப்போடு முடித்திருந்தால் பரவாயில்லை... ஆனால் நாட்டின் பொருளாதராத்திற்கும், நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும், இந்தியா நாட்டு மக்களின் அத்தியாவசியத் தேவைக்கும் இது மிக அவசியமானது என்று தங்களது கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள். நாட்டின் தேசிய ஒருமைப் பாடு...

காவிரி நீர்க்கும் முல்லைப் பெரியாறு அணைக்கும் இல்லாத, அதற்கு வராத ஒருமைப்பாடு இதற்கு மட்டும் வேகமாய் வந்திருக்கிறது. மற்ற வழக்குகளுக்கு மட்டும் பேசி சுமூகமான முடிவு எடுக்க அரசுகள் முன்வர வேண்டும்... மக்கள் போராட்டங்களில் மக்களோடு அரசுகள் பேச்சு வார்த்தை தேவையில்லையா?

இந்திய நாட்டின் மக்களின் வளர்ச்சிக்காக, தமிழ் நாட்டின் தென்கோடியில் கூடங்குளத்திலும், வடக்கில் கல்பாக்கத்திலும், இன்றைய மற்றும் நாளைய தலை முறையின் வாழ்கையை அடமானம் வைத்து இந்தியாவிற்கு ஒளியேற்றுவோம்... ஆனால் இந்த மக்களின் வாழ்வாதார விவசாயத்திற்கும், மீன் பிடித் தொழிலுக்கும் எந்த வித உத்தரவாதமும் இன்றி... இன்னும் சில ஆண்டுகளில், இந்திய நாட்டின் இந்தப் பகுதி மக்களின்நாடு பாலைவனமான பின்பு இந்தியாவின் எல்லா மாநிலங்களும் ஒளியில் பிரகாசிக்கட்டும்...

வெறும் சட்ட விளக்கம் கொடுப்பவர்களாக இல்லாமல் அதைத்தாண்டி நாட்டின் வளர்ச்சி என்று நீதிபதிகள் சிந்திப்பது நல்லதுதான்... ஆனால் இதில் வெறும் மேல்நாட்டு பொருளாதார வளர்ச்சியைப் போல இந்திய நாடும் அணுவின் வளர்ச்சியில் வளர்வதுதான் வளர்ச்சி என்று சிந்திப்பதையும், நாட்டு மக்களின் பாதுகாப்பும் மிக முக்கியம் என்று சிந்திப்பதையும், நமக்கான வளர்ச்சி முறையை நாமே நிர்ணயிக்க வேண்டும் என்று சிந்திப்பதும் மிக நல்லது.  

அப்படியே இல்லை என்றால்கூட வெளி நாட்டில் அனு மின் நிலையங்கள், அவற்றின் பாதுகாப்பு அரண்கள், அணு உலையைச் சுற்றி எத்தனை ஆயிரம் மக்கள் இருக்கிறார்கள் அது ஏன் கூடங்குளத்தில் அதிகமாக இருக்கிறது .... ஏன் வளர்ச்சி பெற்ற ஜெர்மனி போன்ற நாடுகள் அனு உலைகளை மூட முடிவு எடுத்திருக்கின்றன? .. மாதத்தில் ஆறு மாதங்கள் வெயிலே இல்லாத நாடுகள் கூட என் சூரியஒளி வழியாக மின்சக்தி தயாரிக்கின்றன? ... வருடம் முழுவதும் சூரிய ஒளியில் குளிக்கிற நாம் ஏன் இன்னும் அதை அதிகப் படுத்தாமல் இருக்கிறோம்?.... அப்படி செயல்படுபவர்களும் ஏன் எப்போதும் போல ஊழலியே திளைத்து இருக்கிறார்கள்... எல்லாவ்ற்றளிலும் ஊழல் என்றால்.... கூடங்குள அணு மின் நிலையத்திலும் தரக்குறைவான சாதனங்கள் இருக்கின்றனவா....  எதனால் அரசு மக்களின் நம்பிக்கையைப் பெற முடியவில்லை? அவர்களின் நியாயமான கோரிக்கைகள் என்ன? இப்படி அடுக்கடுக்கான கேள்விகளையும் நீதித் துறை ஒவ்வொரு மிகப் பெரிய தீர்ப்புக்கு முன்பும் எழுப்ப வேண்டியது அவசியம்... 
இல்லையெனில் கூடங்குளத்தில் இன்னும் இன்னும் அதிக அதிக உலைகள் தொடங்கப்படும் ஒட்டு மொத்த தமிழகத்திற்குமான அபாயம் இன்னும் அதிகமாகும்.

இன்னும் நீதித் துறையிடம் நம்பிக்கை இருக்கிறது... ஏனெனில் மக்களாட்சியின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது... 




16.7.13

நான்கு தலைவர்கள்


நான்கு அமெரிக்க ஜனாதிபதிகள் ஒன்றாக சேர்ந்து நிற்பது போன்ற விஷயங்கள் இந்தியாவில் நடப்பது மிக அரிது. இந்தியாவில் இது போன்ற நான்கு பிரதம மந்திரிகள் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக இப்படி இருப்பது நிச்சயமாக நடக்கும் என்று தோன்றவில்லை. அப்படியே நடந்தாலும் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு ...


அமெரிக்காவில் எந்த கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எப்போதும் தங்களது நாட்டு மக்களின் நலன், நாட்டு மக்களின் சுதந்திரம், உலக நாடுகளிடம் தங்களது அதிகாரத்தைக் காட்டுவது... தங்களை மட்டுமே உயர்ந்தவர்களாகக் காட்டுவது எல்லாவற்றிலும் ஒன்றாகத் தான் இருப்பார்கள்...

வி பிலீவ் இன் சேன்ஜ்  -- என்று சொன்ன ஒபாமா மிகப் பெரிய முன்மாதிரியாகத் தெரிந்தார்... ஆனால் வெளி நாடுகளின் மீது போர்ட் தொடுத்த புஷ்ஷுக்கும் .. வெளி நாடுகளின் இரகசியங்களை ஆராய்ந்த ஒபாமாவுக்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை.

எட்வர்ட் ஸ்நோடவுன் NSA செய்த வண்டவாளங்களை வெளியில் கொண்டு வந்தாலும், அதைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப் படாமல் அவரை நீதி மன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறார்கள்... எந்த நாடும் அமெரிக்காவிற்கு எதிராகக் குரல் கொடுக்க மறுக்கிறது...


எல்லா நாட்டுத் தலைவர்களும் செகுரிடி நிறுவன ங்களும் இதைத் தானே செய்கின்றன... அப்புறம் எப்படி எதிர்த்துக் குரல் கொடுப்பார்கள்?

இது ஒபாமா செய்தது மட்டுமல்ல அவருக்கு முன்பு இருந்த அத்தனை தலைவர்களும் இதைத்தான் செய்தார்கள்...நம்ம தலைவர்கள் அடுத்தவன் செய்த தவறை மட்டும் சுட்டிக் காட்டுவான்... இவர்கள் அந்த விஷயத்தில் யாரும் எதையும் வெளியிடுவதில்லை.. கூட்டுக் களவாணிகள்... அவர்களும் எல்லா நாட்டுத் தலைவர்களும் தான்...

ஆனால் வாய் கிழியப் பேசுவார்கள்.... நாங்கள் தனி மனித சுதந்திரத்தை மதிக்கிறோம் என்று... 
நமக்கெல்லாம் அமெரிக்காதான் முன்மாதிரி... 

15.11.11

அடுத்த "சாமி" - நம்ம ஊரிலிருந்து

தமிழர்களை இழிவு படுத்துவதற்கு வேறு யாரும் வெளியிலிருந்து வர வேண்டாம். அரசுப் பதவியில் இருக்கும் தமிழர்களே போதும்.
"இந்த ஆண்டின் தொடக்கத்தில், புதுச்சேரியில் ஒரு அமைச்சர் மக்களிடம் வாக்குச் சேகரிக்கும் போது - "இங்கே உங்களுக்கு குழந்தைகளைத் தவிர அனைத்தையும் கொடுத்திருக்கிறோம்" [நேற்று குழந்தைகள் தினம்] என்று சொல்லி வாங்கிக் கட்டிக்கொண்டார். 

நான் ரொம்ப நாகரிகமாகச் சொல்லியிருக்கிறேன் - தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் - "நாங்க ஒன்னே ஒன்னுதான் குடுக்கலை - குழந்தை பெத்துக் குடுக்கலை அவ்வளவுதான் மத்ததெல்லாம் குடுத்தாச்சு."




புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட இதே மாண்புமிகு வி. நாராயணசாமிதான்  - நேற்று திருவாய் மலர்ந்து  - கூடங்குளத்தில் "தொடர்ந்து இந்தப் போராட்டக் காரர்கள் போராடுகிறார்கள் என்றால் அவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பதைக் கண்டுபிடிக்க உள்ளோம்." என்று சொல்லியிருக்கிறார். மக்கள் குடுத்தால் கணக்கு காமிக்க வேண்டாமா -- என்பது போன்ற நிறைய விஷயங்கள் சொல்லி மக்களின் அறிவுக் கண்களைத் திறந்திருக்கிறார்.

மேலோட்டமாய்ப் பார்த்தால் ஒன்றும் தவறில்லைதான். ஒரு போராட்டத்தை உடைக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதைச் செய்யத்தானே அரசு செய்யும்.அதைச் செய்யாமல் இருந்ததால்தானே ஆச்சரியம்.

மஞ்சள் காமாலை வந்தவனுக்கு பார்க்கிறதெல்லாம் மஞ்சளாத்தான் தெரியுமாம். அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு, இவர்கள் கூப்பிடிகிற போதெல்லாம்  பணம் கொடுத்துதான் மக்களை அழைத்து வருகிறார்களா? இன்று வரை அயராது உழைத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ்கார நண்பர்களே ஒவ்வொரு முறை காங்கிரஸ் தலைவர்கள் அழைக்கும் போதெல்லாம் இப்படித்தான் போனீர்களா? அல்லது சுதந்திரப் போராட்டத் தியாகிகளே எல்லாம் ஒவ்வொரு போராட்டத்திற்கும் மக்கள் கொடுத்த பணத்திற்கு ஆங்கில அரசிடம் கணக்கு கான்பித்திர்களா...  நமது அரசு ஒன்றும் ஆங்கில அரசு இல்லைதான்... கணக்கு கேட்டா காட்டிட்டுப் போறாங்க... எப்போத் தாக்கல் செய்ய வேண்டுமோ அப்போது செய்வார்கள் என்றே நம்புகிறேன்  - யாரிடமிருந்து பணம் வந்தாலும் அவர்களுக்குக் கணக்குக் கொடுக்கவாவது அவர்கள் கணக்கு வைத்திருக்க மாட்டார்களா என்ன?

அல்லது எப்படிப் பணத்தை தண்ணியை செலவழித்தாலும் இப்படி தொடர் போராட்டத்துக்கு அழைத்தால் காங்கிரஸ் தொண்டர்கள் கூட வருவதில்லையே - அப்படின்னு கோவத்துல சொல்றாரா மாண்புமிகு அமைச்சர்?

மாண்புமிகு அமைச்சர் என்ன நினைக்கிறார் என்று நான் நினைக்கிறேன் என்றால் - மக்களுக்கு யாரும் அறிவில்லை. தன் சந்ததிக்காகவும், தன் வாழ்க்கை பாதுகாப்பிற்காகவும் போராடுவதற்கு மக்கள் வரமாட்டார்கள்.  மக்களுக்கு பொது நலம் என்பதே இல்லை - அதன் அடிப்படையில் ஒரு போராட்டத்திற்காக பணம் கொடுக்கிற நிலையில் மக்கள் இல்லை - அதற்காகத்தானே பெட்ரோல் முதற்கொண்டு மற்றும் எல்லா அத்தியாவசியப் பொருட்கள் விலை வரை ஏற்றி வைத்திருக்கிறோம். இதையெல்லாம் தாண்டி எப்படி மக்கள் போராட்டத்திற்கு வருவதோ அல்லது பணம் கொடுக்கவோ முடியும் என்று சொல்லுகிறார். இதை அவரால் புரிந்துகொள்ள முடியாது. 

அவருக்கு என்ன ஆச்சரியம் என்றால் அப்படி யோசிக்க விடாமல்தானே எல்லாரும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம் -  அப்படி இருக்கும்போது எப்படி இவர்களுக்கு போராட துணிச்சல் வந்தது? யார் பணம் குடுக்குறா? பணம் குடுத்தே ஆட்களை கூப்பிட்ட உங்களுக்கு அப்படித்தானே நினைக்கத் தோணும். இல்லைன்னா, உங்க பின்னாடி வர்ற தொண்டர்கள் யோசிக்க முடியாமத்தான் உங்க பின்னாடி வர்றாங்களா மகாராசா! 

ஒரு மக்கள் போராட்டத்தை எப்படி அணுக வேண்டும் என்கிற மிகச்சிறிய விஷயம் கூட  தேறாத நாம்தான் மாக்களுக்காக அரசு அரசுக்காக மக்கள் அல்ல என்று சொல்லுகிறோம். மிரட்டல் மற்றும் உருட்டல் வழியாக ஒரு போராட்டத்தை கலைக்க வேண்டும் என்று ஒரு அரசு நினைத்தால் - அது ஆங்கிலேய அரசு என்று சொல்வதில் தவறென்ன? 

வெளி நாட்டில் நாலு பேரு நாடு ரோட்டுல நின்னு ஒரு கொடி பிடிக்கிற செய்தியை ஒரு வெளிநாட்டு நிறுவனம் செய்தி எனத் தந்தால் காசு குடுத்து அந்தச் செய்தியை வாங்கி நம்ம ஊரு தொலைக் காட்சி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு வெளியிடும். இங்கே நூற்றுக் கணக்கான மக்கள் வாழ்வாதரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் போது அதை ஒரு ஓரத்திலும், சாமி சொல்வதை முதல் பக்கத்தில் போட்டு மக்களைக் கொச்சைப் படுத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. அரசு இயந்திரங்கள் அப்படித்தான் இருக்கும். ஆனால் மீடியா அப்படி இருக்க முடியுமா? அவர்களை புரிந்து கொள்ளா விட்டாலும் பரவாயில்லை இழிவு படுத்தாமலாவது இருக்கலாம் அல்லவா. 

கொசுறு

"19. Protection of certain rights regarding freedom of speech, etc.-
  1. All citizens shall have the right-
    1. to freedom of speech and expression;
    2. to assemble peaceably and without arms;
    3. to form associations or unions;
    4. to move freely throughout the territory of India; ...."
                                                        FUNDAMENTAL RIGHTS  - INDIAN CONSTITUTION

8.9.11

பயங்கரவாதம் - ஓர் அதிர்ச்சியோடு

ஒவ்வொரு முறை குண்டு வெடிப்பு பற்றிப் படிக்கிற போதும் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது? தொலைதூரத்தில் இருக்கிற ஒருவனுக்கே இந்த அதிர்ச்சி என்றால், அருகில் இருப்பவனுக்கு, இதில் உயிர் இழந்த உறவினர், நண்பர்கள் இவர்களுக்கு இன்னும் எவ்வளவு, அதிர்ச்சி, சோகம், கோபம், இவைகளெல்லாம் இன்னும் உச்சத்தில் இருக்கும்.

இதோடு சம்பந்தப் படாத ஒரு நபராக இதைப் பற்றி எழுதுவது மிகவும் சுலபமானதுதான். ஆனால் அடிபட்டவனின் வலியும் வேதனையும் சொல்லி மாளாது.

நான் என்னையே கேட்டுக்கொள்வது இதுதான்? ஏன் இவர்கள் இத்தகைய அரக்கத்தனமான, கீழ்த்தரமான, கேவலமான, மனிதாபிமானமற்ற செயல்களைச் செய்யத் துணிகிறார்கள்?

ஒவ்வொருவனும் அவனது செயல்களை நியாயப் படுத்தவே செய்வான். தங்களது எதிர்ப்பைக் காட்ட, தங்களுக்கு இழைக்கப் பட்ட அநீதிகளுக்கான எதிர்ப்புக் குரலாக, ஒட்டு மொத்தக் கவனத்தையும் தங்கள் பக்கம் திருப்ப, பழி வாங்க, கொள்கைகளுக்கான குரலைப் பதிவு செய்ய என்று ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாத மனிதர்களை குண்டுகள் வைத்துக் கொல்லுவது ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப் பட முடியாது.

எந்தவிதத்திலும் யாராக இருந்தாலும் அரசாக இருந்தாலும், தனி அமைப்புகளாக இருந்தாலும் எல்லாம் பயங்கரவாதம்தான்.

எங்கும் யாரும் நிரபராதிகளோ, அல்லது குற்றவாளிகளோ கூட அரசால் கொலை செய்யப் படக் கூடாது என்கிற மனித நேயக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறவர்கள் கூட இத்தகைய குண்டு வெடிப்புகளினால் அமைதிக்குள்ளாக்கப் படுவார்கள்.

தெரியாத நபர் ஒருவரோடு, பேஸ் புக்கில் இது விடயமாகக் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டிருந்த போது அவர் சொன்னார் - "உனக்கு என்ன தெரியும் - மும்பையில் குண்டு வெடிப்பு நடந்த இடத்துக்கு அருகில் நான் இருந்தேன் - அதன் வலி தெரியுமா என்றார்" - ஸாரி என்கிற வார்த்தையோடு அந்தப் பரிமாற்றம் முடிந்து போனது - என்ன சொல்ல முடியும்?
இப்படி ஒவ்வொருவரும் அனுபவிக்கிற வலிக்கு அதேவழியில் திருப்பிக் கொடுத்தல் இன்னும் கீழ்த்தரமான நிகழ்வுகளைத் தானே கொண்டு சேர்க்கும்.

அரசுகள் நியாயமான போராட்டங்களுக்கு செவி சாய்த்தாலே பல விடயங்கள் சரியாகும். போராட்டங்களுக்கு அடக்கு முறை தீர்வாகும் என்று அரசு நினைத்தால் ... அல்லது அடக்கு முறைகளுக்கு குண்டிவெடிப்புதான் தீர்வு என்று நினைத்தால்... இன்னும் ...

அப்பாவிகளைக் கொன்று யாரும் எந்த நியாயத்தையும் நிலை நாட்ட முடியாது - எந்த அமைப்பாக இருந்தாலும் சரி. அடக்குமுறை கொண்டு அமைதியை நிலை நாட்ட முடியாது - எந்த அரசாக இருந்தாலும் சரி.

சுய லாபக் கணக்குகள், மந்தைகளாக மனிதர்களை நினைக்கும் அரசுகள், கருத்துக்களைத் தங்களுக்குள்ளே தெளிவாகப் பகிர்ந்து கொள்ளத் திராணி இல்லாத அரசியல் வாதிகள், எதிர்த் தரப்பு நியாயங்களை செவி கொடுத்தும் கேட்காத - கேட்க விரும்பாத "பண்டமென்டலிஸ்ட்டுகள்" நேர்மையான போராட்டங்கள் வழி நியாயம் கேட்க விரும்பாத கோழைகள் இவர்கள் இருக்கும் வரை எல்லாருக்கும் ஆபத்துதான்.

குண்டு வெடிப்பு கோழைகளின் ஆயுதம். அதற்கு - போராட்டத் தற்கொலைகள் ஆயிரம் மடங்கு மேலானதாவே தோன்றுகிறது.

நாளுக்கு நாள் குண்டு வெடிப்பு நடைபெறும் நிலையில் இதன் கோர முகத்தையும் கோழைத் தனத்தையும் வேரறுக்கும் வேலையையும் அதே சமயம், மனித நேயத்தை கைவிடாமல் இருக்க வேண்டிய அவசியமும் நமக்கு இருக்கிறது.

இதை அரசோ, குண்டு வெடிப்பாலிகளோ படிக்கப் போவதில்லை. நமக்குள் இந்த மனிதாபிமானம் பற்றிப் பேசியாவது அதை இன்னும் வாழ்விக்கச் செய்ய வேண்டியிருக்கிறது.

29.8.11

தூக்குத் தூக்கி - மரண தண்டனைக்கு எதிராக

செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி குறிக்கப் பட்டிருக்கிற மூன்று பேருக்கான மரண தண்டனை குறித்த விடயம் இது.

உலகம் முழுதும் மரண தண்டனை ஒழிப்பிற்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் மூவரின் மரணதண்டனையை நிறைவேற்றுவது நாம் நாகரிக உலகத்தில் நமது நிலையைக் கேள்விக்கு உள்ளாக்கும்.

தண்டனை என்பது சமூகத்தைப் பயமுறுத்துவதற்காகவோ அல்லது எதிர் காலச் சந்ததியினர் எப்படி வாழ வேண்டும் என்கிற படிப்பினைக்காக மட்டும் என்றால், நாம் இன்னும் கற்காலத்தில் தான் இருக்கிறோம்.

தண்டனை பல படி நிலைகளைக் கொண்டது. ஒரு ரூபாய் திருடுனவனுக்கும், ஒரு கோடி திருடுனவனுக்கும் வித்தியாசம் இருக்கு – அடிப்படையில் திருட்டு என்பது ஒன்றுதான் என்றாலும். கொலை செய்தவனையும் கொலைக்கு உதவி செய்தவனையும், எதற்கு என்று தெரியாமலேயே உதவி செய்தவர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறதா இல்லையா. பல இஸ்லாமிய நண்பர்கள் இப்படித் தான் பிரச்சனைக்கு உள்ளாகிறார்கள் – சில உதவிகள் வேண்டும் என்று செய்யப் போய் / எதுக்குன்னு தெரியாம செய்யப் போய் கடைசியில மிகப் பெரியத் திட்டம் தீட்டி செயல் பட்டதா ...

கொலைக் குற்றம் புரிந்தவனுக்கு அதிக பட்ச தண்டனை மரணம் என்றால் – திரு. ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்கள் ஏற்கனவே இறந்து போய் விட்டார்கள். இறந்தவர்களைத் தூக்கில் இட முடியாது என்பதற்காக மற்றவர்களைத் தூக்கில் இடுவது – ஒரு கோடிக்கும் தூக்கு ஒரு ரூபாய்க்கும் தூக்கு என்கிற விதத்தில் வந்து விட்டால் நமக்கு நீதி மன்றங்களே தேவையில்லையே – வெறும் காவல் துறை மட்டும் போதும். இந்தத் தவற்றுக்கு இந்தத் தண்டனை என்கிற அளவில் சட்டம் இருந்தால் மட்டும் போதுமே. எதற்கு நீதி மன்றங்கள் எதற்கு ஒரே மாதிரி வழக்குகளுக்கு வேறு வேறு மாதிரியான தண்டனை. வெறும் காவல் துறை மட்டும் தண்டனையை நிறைவேற்றலாமே.

சரி - தண்டனையில் வித்தியாசம் இருக்கிறது என்றால் – இவ்வழக்கில் மரண தண்டனை விதிக்கிப்பட்டிருக்கிற மூவருக்கும், கொலையில் ஈடுபட்ட மற்றவர்களுக்கும் தண்டனையில் வித்தியாசம் வேண்டாமா? பல்லாயிரக் கணக்கான மக்களைக் கொன்ற ஒருவனுக்கும் மரண தண்டனை – ஒருவரைக் கொன்றதற்காக பலருக்கு மரண தண்டனை என்பது சரியா?

அல்லது இந்த வழக்கு என்பது தடாச் சட்டத்தில் வராது என்கிற போது [இதைத்தான் கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் எல்லாத் தலைவர்களும் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்], எப்படி அதில் பெற்ற வாக்கு மூலம் மட்டும் செல்லு படியாகும்? – எப்படி அந்த சட்டத்தைப் பயன் படுத்தி பெற்றுக் கொண்ட வாக்கு மூலத்தைக் கொண்ட தீர்ப்பு செல்லுபடியாகும்?

அல்லது அப்படியே அவர்கள் குற்றவாளிகள் என்றாலும் – ஏற்கனவே ஏறக்குறைய இருபது ஆண்டுகள் சிறைச்சாலைக்குள் முடங்கிக் கிடந்த ஒருவருக்கு இப்போது மரணம் என்கிற தண்டனை வேறு தேவையா?

நண்பர்களே – உணர்ச்சிப் பிழம்புகள் கொதிக்க இதற்குப் பின் உள்ள அநியாயங்கள் குறித்தெல்லாம் யோசித்து இந்த மரண தண்டனையை எதிர்க்க வேண்டியதில்லை. மனித நேயம் உள்ள யாரும் எதிர்க்கலாம். இருபது ஆண்டுகள் சிறைக்குள் ஏற்கனவே ஆயுள தண்டனை முடிந்து இரண்டாவது ஆயுள் தண்டனையில் பாதியை முடித்தவர்களுக்கு மீண்டும் மரண தண்டனை இரண்டாவது தண்டனை தானே என்கிற பார்வையில் யோசித்தால் போதும். மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுக்கலாம்.

பின் குறிப்பு

மனிதன் நாகரிகம் அடைந்து விட்டான் என்பதற்கான மிகப் பெரிய அடையாளம் போர், மனித இழப்பு, வன்முறை இவைகளெல்லாம் வெறுக்கத் தக்கவை என்ற நிலையை அடைந்ததுதான். அந்த நிலையை மானிட சமூகம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்தான் அடைந்தது – அதற்குப் பிறகுதான் மனித உரிமையும், மனிதன் ஒருபோதும் ஒரு பொருளாக நடத்தப் படக்கூடாது என்பது மட்டுமல்ல மனிதன் ஒவ்வொருவனும் மதிப்பு மிக்கவன் என்கிற சித்தாந்தம் வெகுவாக ஊன்ற ஆரம்பித்தது.

பல போர்களுக்குப் பிறகு –உயிரிழப்பிற்குப் பிறகு ஞானோதயம் வந்து – எல்லாரையும் மதிக்க உறுதியோடு இருக்கிறார்கள். இது நடைமுறையில் எந்த அளவுக்குக் கடைப் பிடிக்கப் படுகிறது என்பதும், எந்த அளவுக்கு அரசியல் ஆதாயத்தோடு மனித உரிமைகள் மதிக்கப் படுகின்றன, மனித உரிமை மீறல்களுக்காக குரல் கொடுக்கப் படுகின்றன என்பதும் விவாதத்துக் குள்ளாக்கப் படவேண்டியதுதான் – ஆனாலும் அதையும் தாண்டி இன்றைக்கு பல நாடுகள் சாதித்திருக்கிற மனித உரிமை பற்றிய கருதுகோள்களும் மனித மாண்பு மதிக்கப் பட மேற்கொண்டிருக்கிற முயற்சிகளையும் பார்க்கிற போது அவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உண்டு. அதில் ஒன்றுதான் மரண தண்டனை ஒழிப்பு என்பது.

நாம் நாகரீகவாதிகளா?

இன்னுமொரு பின் குறிப்பு
அம்மாவை நம்பி எல்லாரும் பல ஐடியாக்கள் கொடுத்தார்கள் - அம்மா ஒரே வரியில் எனக்கு அதிகாரம் இல்லை அது பொய்ப்பிரச் சாரம் என்கிறார் - அம்மாவிடம் எதிர் பார்த்ததுதான்.