20.3.13

தமிழின எழுச்சியும் மக்களாட்சியும்

இந்த மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி கொண்டுவரப் படும் தீர்மானம் - அதில் இந்தித் திருநாட்டின் அணுகுமுறை - இதையெல்லாம் தாண்டி தமிழகத்தில் உருவான இந்த பேரெழுச்சி தான் எனக்கு மிக முக்கியமானதாகப் படுகிறது.

இந்தித் துணைக் கண்டத்தின் மிகப் பெரிய சக்தியாக விளங்கும் இந்தி நாட்டின் வல்லமை குறித்து இங்கு யாரும் மிகப் பெரிய சர்ச்சை எல்லாம் உருவாக்க வில்லை. ஒரு ஜன நாயக நாட்டில் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளை உடைய இனங்கள் ஒன்றாக வாழும் போது நிச்சயமாக சிறு இனங்கள் மதிக்கப் படாமல் இருப்பது நடக்கத் தான் செய்யும். சில சமயங்களில் இந்த மாதிரி அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பது தெரியாமல் நடக்கிற விஷயம். சில சமயங்களில் ஓர் இனம் தான் அங்கீகரிக்கப் பட வில்லை என்பதை ஆள்பவர்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் மிகக் கொடிய விஷயம். சிற்றினக் குழுக்கள் தங்களது அங்கீகாரம் பற்றியெல்லாம் எண்ணக் கூடாது என்று நினைப்பதுதான் மிகவும் மோசமானது. நம் நாட்டில் அதுதான் நடக்கிறது என்று தோன்றுகிறது.
இஸ்லாமியர்கள் தனகளது அங்கீகாரம் பற்றி பேசக் கூடாது. தமிழர்கள் தங்களது அங்கீகாரம் பற்றி நினைக்கக் கூடாது என்றெல்லாம் நினைப்பது எல்லாம் மெஜாரிட்டெரியனிசத் தின் வெளிப்பாடுதான். 

இந்தி(ய) நாட்டில் எல்லா குடிமக்களும் மதிக்கப்படுகிறார்கள் என்ற நினைப்பை திரு மன்மோகன் சிங் கொண்டிருக்கலாம். ஆனால் உண்மை நிலவரம் அது இல்லை என்று தமிழக மக்கள் நினைக்கிறார்கள் அல்லது இஸ்லாமிய மக்கள் நினைக்கிறார்கள் என்றால் ஒரு அரசு என்ன செய்ய வேண்டும்? ஏன் தனது குடிமக்களில் சிலர் அவ்வாறு நினைக்கிறார்கள் - எங்கே தவறு நடந்திருக்கிறது என்று யோசிக்க வேண்டும். அப்படி நினைக்கிற போதுதான் அந்த நாட்டின் குடிமக்கள் தான் இந்த நாட்டின் உறுப்பினர் என்கிற உண்மை நிலையை அடைவார்கள்.

அதை ஒரு போதும் செய்யாமல் - என்ன நடக்கிறது என்பதை நாங்கள் பிரதம மந்திரிக்குத் தெரியப் படுத்துவோம் - இதை அவருக்குச் சொல்வோம் என்று மந்திரிகள் சொல்வதைக் கேட்கும் போது பிரதம மந்திரி பேப்பர் படிப்பதில்லை,  செய்திகள் பார்ப்பதில்லை என்றுதான் தோன்றுகிறது. இது மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. எதோ மன்னராட்சி நடப்பதைப் போல அரசனுக்குத் தெரியப் படுத்தும் தலையாட்டி மந்திரிகள் சொல்லுவதைப் பார்க்கும் போது சிரிப்புத்தான் வருகிறது.

சில பேர் கேட்கலாம் - இப்படி ஒவ்வொரு போராட்டத்திற்கும் பதில் சொல்லுவதும் அதற்குண்டான அங்கீகாரத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தால் பிரதம மந்திரிக்கு வேறு வேலையே இல்லையா.
தன் நாட்டு குடிமக்களின் நலனை விட வேறு என்ன அடிப்படைவேலை இருக்கிறது?

அதுமட்டுமல்ல - எப்போது நாம் மக்களாட்சி என்பதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டோமோ அப்போதே நாம் இது போன்ற போராட்டங்களுக்குச் செவிமடுக்க வேண்டியது மிக அவசியமாகிறது. இல்லையெனில் இலங்கை அரசு தமிழர்கள் மேல் தொடுத்த இனப் படுகொலைக்கும், இந்திய அரசு தமிழரின் குரலுக்குச் செவி மடுக்காததற்கும் எந்த விதமான வேறு பாடும் இல்லை.

[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]][]


ஏன் நான் ஒவ்வொரு முறையும் போராட்டங்களுக்கு ஆதரவாகவே எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று நான் என்னையே கேட்டுக் கொள்வது உண்டு.

இந்த நாட்டில் எதுவுமே சரியில்லை என்று எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு பெசிமிஸ்ட்டா நான்?
அல்லது பாலாவை ஒரு சாடிஸ்ட் என்று சிலர் கூவுவதைப் போன்று, பலர் போராடுவதில் சுகம் காணும் ஒரு சாடிஸ்டா நான்?
அல்லது போராடி போராடி அடி வாங்கி வீங்குவதில் சுகம் காணும் மசோக்கிஸ்டா?
பெசிமிஸ்டும் இல்லை சாடிஸ்டும் இல்லை - ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.

ஜனநாயக நாட்டில் தங்களது அங்கீகரத்தையும் உரிமைகளையும் போராடித்தான் பெற வேண்டும் என்று மக்களாட்சித் தத்துவத்தின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்துக் கொண்டிருக்கிற சாதாரண இந்திக் குடிமகன்.

எதெல்லாம் எம் இனத்திற்கான அவமானமாக இருக்கிறதோ - எப்போதெல்லாம் நாம் அழிக்கப்படும் சூழலில் இருக்கிறோமோ - ஆபத்தான சூழலில் இருக்கிறோமோ அப்போதெல்லாம் இந்த ஜன நாயகத்தின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்துப் போராடும் மக்கள் இந்த நாட்டின் மீது கொண்டிருக்கிற நம்பிக்கை நீர்த்துப் போய் விடக் கூடாது என்று நினைக்கும் குடி மக்களின் இனத்தில் நானும் ஒருவன்.

இந்தி நாடு என் தாய் நாடு இல்லை என்றாலும் அது என் நாடு என்று நினைக்கும் சில கோடிகளில் நானும் ஒரு கடைக் கோடி.

நம்மைக் காப்பாற்ற இன்னொரு காந்தியோ இன்னொரு காமராஜரோ வருவார் என்று காத்துக் கிடப்பதைக் காட்டிலும், ஒன் மேன் ஆர்மியில் நம்பிக்கை இழந்த ஆனால் மக்களின் மகத்தான சக்தி மீது நம்பிக்கை கொண்டவன்.

ஐந்து வருடத்திற்கு மட்டும் அரசியல் என்று மக்கள் நினைப்பதைத் தாண்டி, அரசியல் தளத்தில் மக்கள் தொடர்ந்து பங்கெடுக்கிற குடிமக்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பலர் போல் ஒருவன்.

[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]இந்த தமிழின எழுச்சி மிக அவசியமானதும் மிகவும் தேவையானதும் கூட.
நான் இந்த எழுச்சி அவசியம் என்பதனால் தமிழகம் பிரிந்து விட வேண்டும் என்று எந்த விதத்திலும் நினைக்க வில்லை. இந்தி(யா) என்கிற எமது நாடு பிரிந்து போய் விடக் கூடாது என்பதிலும் நான் உறுதியாய் இருக்கிறேன்.

இது மற்ற மாநிலங்களில் எல்லாம் சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கும், அவர்களது சொத்துக்களை சுரண்டிக் கொழுக்கும் நம் பிற இனச் சகோதர்கள் கொக்கரிக்கும் நாட்டு ஒற்றுமை அல்ல. ஒரு நாடு என்பது எல்லா இனங்களையும் மதித்து நடக்க இந்த நாடு உலகத்திற்கு இன்னும் ஒரு மாதிரிகையாய் இருக்க வேண்டும் என்கிற நல்ல எண்ணமே.

இந்த எண்ணம் இந்தியக் கலாச்சாரத்தில் ஊறிக் கிடக்கிற எல்லா இனத்தவருக்கும் வர வேண்டியது அவசியம் -    கொழுப்பதற்கு மாத்திரம் அல்ல.  இதைக் குடிமக்கள் மட்டுமல்ல ஆள்பவர்களும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதனால் இது இன்னும் இந்தியா என்பதைத் தாண்டி யு.எஸ்.ஐ. -யுனைட்டட்  ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா என்கிற இது அழைக்கப் பட வேண்டும் என்றே ஆசைப் படுகிறேன். 

ஒரு நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பில்லா வண்ணம் அதே சமயத்தில் இன்னும் அதிகமாக இனங்கள் மதிக்கப் படுவதற்கும், தங்களது சுதந்திர உணர்வுகளோடு வாழ்வதற்கும் யு.எஸ்.ஐ. வழிவகுக்கும் என்றே நம்புகிறேன். எனவே ஒன்றிணைக்கப்பட்ட இந்தியா என்பதை வலியுறுத்துவதே நல்லது என்று கருதுகிறேன். அதற்கான முதல் படியாகவே இன எழுச்சி என்பதைக் கருத வேண்டியிருக்கிறது.

ஏனெனில் எந்த விதத்திலும் தனி இனம் ஒன்று ஆட்சி அமைப்பது என்பது மெஜாரிட்டேரியன் ஆட்சியாகத்தான் அமையும். அதைத் தவிர்க்க வில்லை என்றால் அது பாசிசத்திற்கே வழி வகுக்கும். ஹிட்லர் ஆட்சி செய்ததைப் போல அல்லது ஸ்டாலின் போல. பாசிசம் என்பது எந்த ஆட்சி தத்துவத்திலும் சாத்தியம் என்பதே நமக்கு வரலாறு சொல்லும் பாடம்.

தனி இனங்களின் அங்கிகாரம் மதிக்கப் படவில்லைஎன்றால் இந்தியா பாசிசப் பாதையில் மிக வேகமாய் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்றே அர்த்தம். அது கூடிய விரைவில் இன்னுமொரு ஹிட்லர், இன்னுமொரு ராஜ பக்சேவை நான் இந்தியாவில் சந்திக்க வைக்கும். அப்போது நாம் கருத்துக்கள் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. - வலைகள் கூட முடக்கப் படலாம். வாய்கள் ஒட்டப் படலாம், கால்கள் ஒடிக்கப் படலாம், கரங்கள் முறிக்கப் படலாம் - அப்போது வெறுமனே ஜெய் ஹிந்த் மட்டுமே சொல்ல வாய் திறக்கும் ஜன நாயக குடி மக்களாக இருப்பார்கள் இந்தியக் குடிமக்கள். இதைத்தானா நாம் நமது சந்ததியினருக்கு விட்டுச் செல்ல விரும்புகிறோம்?

[[[[[[[[[[]]]]]]]]]][[[[[[[[[[]]]]]]]]][[[[[[[[[[]]]]]]]]]][[[[[[[[[[]]]]]]]]]][[[[[[[[[[]]]]]]]]]


16.3.13

மாணவர் எழுச்சி

ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர்கள் இயக்கம் மிக நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி உண்ணா விரதமும் அதைத் தொடர்ந்து போராட்டத்திலும் ஈடுபடுவதைப் பார்க்கின்ற போது, எந்த அளவுக்கு நம்மைச் சுற்றியிருக்கிற பொது நலவாதிகள் 'பொது நலனை விட்டு அன்னியப் பட்டுப் போயிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
அரசியல் வாதிகள், பொது நல வாதிகள் மாணவர்கள் தங்களது எல்லைகளை மீறுகிறார்கள் என்று உளறுவதை நிறுத்தி விட்டு இனியாவது உண்மையை உணர்ந்து கொள்வது நல்லது.

=============================================
இந்திய அரசிற்கு எந்த வித போராட்டமும் அரசின் கல்லைக் கரைக்காது. 
ஆனால் இந்தியாவைத் தாண்டி இண்டர்நேஷனல் அரங்கில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். அதைத் தான் இந்தப் போராட்டம் மனதில் வைத்துச் செயல் பட வேண்டும்.

================================================

தமிழக முதல்வர் புலி குட்டிகளுக்குப் பெயர் சூட்டிய நிகழ்வுக்குப் போக முடியவில்லை என்கிற வருத்தம் எனக்கு உண்டு.  ஒரு இயக்கத்தையே அழித்து விட்டு குட்டிகளுக்குப் பெயர் சூட்டல் 

================================================

இந்திரா காந்தி என்றால் எமர்ஜென்சி ஞாபகம் வருவது போல மன்மோகன் -சோனியா என்றால் தமிழின அழிப்பு - ஊரடங்கு உத்தரவு தான் நினைவுக்கு வரும் போல... தமிழக அரசும் சேர்ந்து கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை விடுவதும், ஊரடங்கு உத்தரவிடுவதும் ... இ.கா. தேவலை என்றே தோன்றுகிறது.

================================================

இந்திய அரசு ஒரு மக்கள் நலனில் அக்கறை கொள்ளாத அரசு. அதற்கு தமிழ் மீனவர்கள் வரிசையாகக் கொள்ளப் பட்ட போது அதை சிறிதும் கண்டு கொள்ளாமல் இருந்தது. இப்போது இரண்டு மீனவர்கள் கொள்ளப் பட்ட வழக்கில் இத்தாலிய வீரர்கள் திருப்பி அனுப்பப் படாததை கண்டித்து இத்தாலிய தூதர் நாட்டை விட்டுச் செல்லத் தடை - பிரதமர் இத்தாலிய அரசை கண்டிக்கிறார். அது நாட்டின் கௌரவத்தை பாதிக்கும் செயலாம்.

இதே இந்திய மண்ணைச் சார்ந்த மீனவர்களை சிங்கள அரசு சுட்டுக் கொள்கிற இதில் எதயாவது இந்த அரசி செய்திருக்குமா? இத்துனூண்டு இலங்கை அரசை செல்லமாய்க் கேக்கக் கூட நமக்கு நாதியில்லை. இத்தாலிக்கு சவால் வேறு. ஒருவேளை நேரடியாகக் காசை வேறு எங்கும் இறக்கி விட்டார்கள் என்ற கவலையா என்று தெரியவில்லை.
===============================================

இந்த மாணவர் எழுச்சி தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம். நிறையத் தடைகள் வரும். பிரிக்க சதி நடக்கும். அடக்க ஆள் வருவார்கள். குற்றம் சாட்டுவார்கள் . குறை கூறுவார்கள்.

ஆனால் இந்த மாணவர்கள் கொண்டிருக்கிற ஈரம், உரம், இன உணர்வு, போராட்ட குணம், நீதிக்கான தாகம் இவைகளைப் பார்க்கின்ற போது -- இது எதுவும் இல்லாத நாம் அவர்களின் ........ .......... ......... ....

அவர்களுக்கு உதவி செய்ய வேண்டாம் உபத்திரவம் பண்ணாமல் இருந்தாலே போதும்.