இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1.12.16

இன்குலாப்


கவிஞரே 
உம்மை நினைக்கக் கூட நேரமில்லை.



என்ன செய்வது?
வங்கிக்கும், இயந்திரங்களுக்கும் இடையே  
அலையும் எங்களுக்கு 
உம்மை நினைக்க நேரமில்லை.
மக்கள் பாவலர் 
உமக்குத் தெரியும்.

ஆர்ப்பாட்டமில்லாத கவிஞன் நீர்.
அமைதியாகவே  சென்று விட்டீர்.

மனுஷங்க  மனுஷங்களாய் 
மதிக்கப்படாத வரை 
நீவிர் வாழ்வீர்.

அஞ்சலி 


26.8.16

கிழிஞ்ச பேப்பர் - பழைய சிதறல்கள் - 1

மரம் 

மரத்தை அழித்து விடாதே
வரும் காலமதை அழ விடாதே.
-

 மரமது செம்மையானால்
வாழ்வது செம்மையாகும் - மாந்தரே செழுமையாவர்.

---

மழை

வானம் கீழே வந்தால்தான்
வரப்பே உயரும்

வரப்பு உயர்ந்தால்தான்
வாழ்வு உயரும்

-

மண் 

செம்மண்ணை
நம்மால் செய்ய முடியுமெனில்
செடி கொடிகள்
விரைவாய் வளருமே

மண்ணைக் கூட
மாற்ற முடியாதே மனிதா
மரபணுவை
மாற்றலாமா ???

---

12.12.13

நானும் என் (கை) எழுத்தும்


நானும் என் (கை) எழுத்தும் 
- அ. பிரபாகரன் 
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
 வழக்கம் போல் இந்த முறையும் சங்கல்பம் செய்து கொண்டேன். இனிமேல் வாரம் ஒருமுறை எதையாவது எழுதுவது என்று. சரி. இந்த முறை நானும் என் எழுத்தும் என்று எழுதிப் பார்க்கலாமே என்று நினைத்தேன். இந்தத் தலைப்பில் எழுதுவதற்கு நான் என்ன சுஜாதாவா அல்லது நாஞ்சில் நாடனா என்று நீங்கள் நினைக்கக் கூடும். 
அவர்கள் மட்டும்தான் எழுத வேண்டுமா? தன்னை எழுத்தாளனாக நினைக்கும் ஒவ்வொருவனுக்கும் எழுத உரிமையிருக்கிறது.
எழுதுகிற ஒவ்வொருவனுமே தன்னை எழுத்தானாக நினைத்துக்கொண்டுதான் எழுதுகிறான். மற்றவர்களையும் அப்படி நினைக்க வைப்பதில்தான் அவன் வெற்றி இருக்கிறது. 

வாழ்நாள் முழுவதும் முயற்சித்தாலும் என்னால் பிறரை அப்படி நினைக்க வைக்க முடியுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் நானும் என் முயற்சியைக் கைவிடுவதாக இல்லை. சரி! அது போகட்டும். 

நானும் என் எழுத்தும் என்ற தலைப்பின் தொடக்கம் 1975 ம் வருடம் ஜூன் மாதம் மறவமங்கலத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடங்குகிறது. எல்லாக் கேள்விக்கும் டாண் டாண் என்று பதில் சொல்லி வகுப்பில் முதல் மாணவனாக வரும் எனக்கு கையெழுத்து கேவலமாக இருக்கிறது என்பதை சரஸ்வதி டீச்சர் கண்டுபிடித்துச் சொன்னார். பிறகு வந்த வகுப்புகளில் ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியர்களால் என் கையெழுத்து பிரதானமாக விவாதிக்கப்படும். மூன்றாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வில் நான் முதன் முறையாகப் பென்சில் வைத்துப் பேப்பரில் தேர்வு எழுதியபோது, ராஜசேகர வாத்தியார் என் வினாத்தாளை மட்டும் எல்லா மாணவர்களுக்கும் முன்பாகத் தூக்கிக் காட்டி, "இங்க பாருங்கடா, கொமட்டிக்கிட்டு வருது", என்று கேவலப் படுத்தியது நினைவுக்கு வருகிறது. 

என் தந்தைக்கு மாற்றம் கிடைத்து நான் வேறொரு கிறிஸ்தவப் பள்ளியில் சேர்ந்தபோது, ஐந்தாம் வகுப்பில் எனக்கு ஆசிரியையாயிருந்த மிக்கேலம்மா என்னும் கன்னியாஸ்திரி 'சுத்தமாக எழுது' என்று புறங்கை மொழியிலேயே அடிப்பார். ஆனால் எத்தகு தண்டனைகளையும் என் கையெழுத்து ஏற்றுக்கொண்டதில்லை.

என் கையெழுத்து என் பழக்க வழக்கங்களைப் போலவே எப்போதும் திருந்த மாட்டேன் என்றது. என் மாணவப் பருவத்திலிருந்து என் கையெழுத்து என் ஆளுமைக்கு விடப்பட்ட சவாலாகவும், என் குறைபாடுகளின் பிரதிநிதியாகவுமே தென்படுகிறது.
மானுடத்தின் மறுபுறம் குறைபாடுகள்தானே. அறிவியலல்லாத மானுடம் சார்ந்த படிப்பு படிக்கிற ஒருவனுக்கு தேர்வுகளில் கையெழுத்து எவ்வளவு முக்கியம் என்பதை நன்றாகப் படித்தும் தொலைதூரக் கல்வித்தேர்வுகளில் தோல்வியடைந்த ஒருவனால்தான் புரிந்துகொள்ள முடியும்.

பள்ளிப் படிப்பு முடிந்த காலத்தில் காந்தியின் சுயசரிதையை வாசிக்க நேர்ந்து, காந்தியின் எழுத்தும் அசிங்கமாகத்தான் இருக்கும் என்று படித்தபோது, 'பரவாயில்லை, நாம் காந்தியைப் பின்பற்றுவதற்கு இது ஒன்றாவது கிடைத்ததே' என்று பெருமைப் பட்டுக்கொண்டேன். இப்பொழுதும் இந்தக் கையெழுத்தொடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

கணினி வந்து என்னைப்போன்றவர்களை காந்தியின் சீடர்களாக வாழ்வதிலிருந்து காப்பாற்றியிருக்கிறது. ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. அவசரத்திற்கு யாரிடமும் எழுதிக் கொடுத்து தட்டச்சு செய்யுமாறு கோரமுடியாது. நானும் என் எழுத்தும் என்று ஆரம்பித்து கடைசியில் கையெழுத்தைப் பற்றியதாக இந்தக் கட்டுரை நீள்கிறது. 

உண்மையில் நான் சொல்ல வந்தது என் எழுத்தைப் பற்றி. படைப்பு அனுபவம் (?!!!) பற்றி. அது என்னவோ தெரியவில்லை கதைகளும் கற்பனைகளும் எப்போதும் என்னை ஈர்த்து வந்திருக்கின்றன. வாராந்திரப் பத்திரிகைகளுக்கு அடிமையாகிப் போன ஒரு சராசரி நடுத்தரக் குடும்பத்தில் பிறந்ததும், சிறிய அரசு நூலகமுள்ள கிராமத்தில் பிறந்ததும், கதைகளுக்கும் கற்பனைகளுக்கு அடிமையாகிப் போகும் வாய்ப்பைத் தந்தது. என்னைப் புத்தகங்கள் ஈர்த்திருக்கின்றன. சிறுவயதில் நானும் சிலவற்றை எழுதிப் பார்த்திருக்கின்றேன். 

எதையாவது எழுதிப் பார்த்து என்னை வருங்கால தமிழகத்தின் மிகப் பெரிய எழுத்தாளனாக வருவேன் என்று நினைக்கா விட்டாலும், நாமும் எழுதலாம் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தேன். ஒன்பதாம் வகுப்பிலிருந்து முயற்சித்து நீங்களெல்லாம் கேட்டறியாத சில பத்திரிகைகளில் என் சில படைப்புகள் வந்திருக்கின்றன. இவற்றில் சில அரசியல் கட்டுரைகள் கூட அடக்கம். அ. தாஸ், அ. பிரபாகரன் என்று சில பெயர்களில் எழுதியிருக்கிறேன். கணையாழியில் கூட ஓரிரு படைப்புகள் வந்திருக்கின்றன. 

பிறகு வந்த காலங்களில் வாழ்க்கை வெவ்வேறு விதமான சூழல்களை அமைத்துக் கொடுத்ததால் நான் என் எழுத்து வேலைக்கு ஓய்வு கொடுத்து என் நண்பர்களை இம்சிக்காமலும் தமிழ் கூறும் நல்லுலகுக்கு இலக்கியப் பணி செய்வதை விடுத்து 'தேமே' என்று என்பாட்டுக்கு இருந்தேன். 

விதி யாரை விட்டது? இணையம் என்று ஒன்று வந்து என்னைப் போன்றவர்களுக்கு ஒரு வாழ்வு கொடுத்திருக்கிறது. தாமே எழுதி தாமே பதிவிடும் நார்சிசத்தில் நானும் ஒருவனாகி விட்டேன்

 இப்படி நானும் என் பொழப்பும் என்றிருந்த என்னை இணையம் மட்டுமல்லாது சமீபத்தில் நான் பயணித்த ஒரு பேருந்தும் எழுதச் சொல்லி வம்பிழுக்கிறது. மறவமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் தொடங்கிய என் எழுத்து வாழ்வு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரையில் இருந்து சென்னைக்குச் செல்லும் பேருந்தில் ஒரு திருப்பு முனையைச் சந்தித்தது. 

மதுரையில் இருந்து சென்னைக்குச் செல்லும் அந்தப் பேருந்தில் பெரியார் பேருந்து நிலையத்தின் நசநசப்புக்கும் இரைச்சலுக்கும் தப்பி பரபரப்புடன் ஏறி அமர்ந்தேன். அப்படி சத்தத்திற்குத் தப்பி வருகிற என்னைப் போன்றவர்களைச் சோதிப்பதற்கேன்றேதான் தனியார் பேருந்துகளில் வீடியோ படத்தைப் போடுகிறார்கள். என்னதான் இதை எதிர்கொள்ளும் முன் தயாரிப்போடு ஏறினாலும் எரிச்சலும் இயலாமையும் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. 

அன்றும் அப்படித்தான். சிவா கார்த்திகேயன் நடித்த எதிர் நீச்சல் என்ற படத்தை என்னைப் போலக் களைத்து வந்து பஸ்ஸிலேறியவர்களின் தூக்கத்தைக் கெடுக்கவென்றே போட்டார்கள். எரிச்சலோடு படத்தைப் பார்க்க ஆரம்பித்த எனக்கு ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது. அங்கேதான் என் எழுத்திற்கான மறு அழைப்பு காத்திருந்தது. 

அந்தப் படத்தில் கதாநாயகனுக்குத் தன பெயர் குறித்த பிரச்னை. அவனுக்குப் பிடிக்காத அசிங்கமான அந்தப் பெயர் அவன் ஆளுமைக்கு விடப்பட்ட சவாலாக இருப்பதாக அவன் கருதுவதுதான் அந்தப் படத்தின் முதல் பாதியின் கரு. ஏறத்தாழ பதினாறு ஆண்டுகளுக்கு முன் 1997 ம் ஆண்டு கணையாழியில் 'பெயர்' என்ற தலைப்பில் வந்திருந்த என் கதைக் கருவோடு இது அப்படியே ஒத்துப் போனது

கதையை இத்துடன் இணைத்திருக்கிறேன் பார்த்துக்கொள்ளுங்கள். இப்போது நான் சொல்ல வந்தது என்னவென்றால் இதோ இனி நானும் தொடர்ந்து எழுதப் போகிறேன். இது எனக்கு எழுத ஏதோ ஓர் உத்வேகம். தந்திருக்கிறது. "தொடங்கிட்டான்யா... தொடங்கிட்டான்யா" என்றெல்லாம் திட்டப்படாது. எங்களுக்கும் எழுத வருமுல்ல.
அ. பிரபாகரன்




°°°°°

எதிர் நீச்சல் படம் எடுத்த துரை செந்தில்குமார் இந்தக் கதையைப் படிக்க வில்லை என்பதை நான் நம்பத் தயாராக இல்லை.                             -  அப்பு 



29.5.13

தமிழுக்கு சிறுமை – தினமணி தலையங்கம்

பின்வரும் செய்தி இன்றைய தினமணி நாளிதழில் தலையங்கமாக வெளி வந்துள்ளது. எல்லாத் தமிழர்களும் படிக்க வேண்டியது அவசியம். ஆசிரியருக்கு நன்றி.
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
"மலையாளத்துக்கு செம்மொழித் தகுதி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு ஆகியவற்றுடன் மலையாளமும் செம்மொழித் தகுதிப் பட்டியலில் சேர்ந்துள்ளது.
மலையாள அன்பர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் இவ்வேளையில், நம் மனதில் தோன்றும் நெருடலான கேள்வி இதுதான்: செம்மொழித் தகுதி வரையறைக்குள் தமிழ், சமஸ்கிருதம் தவிர ஏனைய இந்திய மொழிகள் வருகின்றனவா?
ஒரு மொழி, செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றால், அது  "தொன்மையானதாக இருக்க வேண்டும்; தனக்கான சொந்தக் கலாசாரம், பண்பாட்டுக் கூறுகள் கொண்டிருக்க வேண்டும்; மற்றொரு மரபின் நீட்சியாக அல்லது ஒரு மரபில் கிளைத்ததாக இருத்தல் கூடாது, மிகச் சிறந்த தொன்மை இலக்கியத் தொகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்'.
இந்த வரையறை அனைத்தும் பொருந்திய தமிழ் மொழியைச் செம்மொழியாக மத்திய அரசு அறிவிக்க நாம் பட்ட பாடெல்லாம், தமிழ்ச் சான்றோர் மட்டுமே அறிவர். இப்போது, விண்ணப்பித்தவர்களுக்கு எல்லாம் செம்மொழித் தகுதிச் சான்று வழங்கி கௌரவிக்கத் தலைப்பட்டிருக்கிறது நடுவண் அரசு.
மலையாள மக்கள் பன்னெடுங்காலமாகத் தமிழ் பேசியவர்கள்தான். சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட நிலப்பரப்பு முழுதும் தமிழ் மொழிதான் வழக்கு மொழியாக நிலவியது. சேரன் செங்குட்டுவனும் சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகளும் பேசியதும் எழுதியதும் தமிழ்தான். சென்னைத் தமிழ், திருநெல்வேலித் தமிழ் போல வட்டாரத் தமிழ் பாணி மாறுபட்டிருக்கலாமே தவிர, மொழி ஒன்றுதான்.
சேர நிலம் - மலைஞாலம்.  மலைஞாலம் என்பதன் திரிபே மலையாளம். மூவேந்தர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி விடுத்து, ஆங்காங்கே குறுநில மன்னர்களும் விஜயநகரப் பேரரசின் எழுச்சியும் ஏற்பட்டபோது தமிழும் சமஸ்கிருதமும் கலந்து புதிய பல வார்த்தைகள் உருவாகித் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகள் தோன்றின என்பதுதான் திராவிட மொழி ஆராய்ச்சியாளர்களின் தேர்ந்த முடிவு. அதில் குறிப்பாக மலையாளம் அதிகமான தமிழ்ச் சொற்களால் உருவான மொழியாக அமைந்தது.
இன்றும்கூட, பல தூயத் தமிழ்ச் சொற்கள் மலையாளத்தில் வழக்கத்தில் உள்ளன. நாம் மறந்துவிட்ட வெள்ளம், இல்லம், ஊன், உறக்கம் போன்ற சொற்கள் மலையாளத்தில்தான் புழக்கத்தில் உள்ளன. 16-ஆம் நூற்றாண்டில்தான் மலையாள மொழி, எழுத்தச்சனால் எழுத்துரு பெறுகிறது. மலையாளத்துக்கென தனியாகத் தொன்மை இலக்கியங்கள் இல்லை. ஏனென்றால் அவர்கள் தமிழ்ச் சமுதாயத்திலிருந்து கிளைத்து உருவானவர்கள். தொன்மை இலக்கியம் என்று மலையாளத்தினர் தேடினால் அது தமிழ்ச் சங்க நூல்களில்தான் வந்து முடியும்.
இருபதாம் நூற்றாண்டு இந்திய இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால், மலையாளம் முன்னணியில் நிற்கும் என்பதை மறுப்பதற்கில்லை. திரைப்படத் துறையை எடுத்துக்கொண்டாலும்கூட, கடந்த நூறு ஆண்டுகளில் வெளிவந்த 100 சிறந்த திரைப்படங்கள் என்று பட்டியலிட்டால், அதில் ஐம்பது திரைப்படங்கள் மலையாள, வங்க மொழித் திரைப்படங்களாகத்தான் இருக்கும். அதற்காக, மலையாளத்தை செம்மொழி என்று சொல்லும்போது நெருடல் ஏற்படவே செய்கிறது.
இந்நிலைக்குக் காரணம், மொழியின் தொன்மைக்கான காலவரையறையை 2,000 ஆண்டுகளாக நிர்ணயிக்காமல், 1,000 ஆக குறைத்ததுதான். செம்மொழித் தகுதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தமிழின் தொன்மையை வெறும் ஆயிரம் ஆண்டுகளாகச் சுருக்கிக்கொள்ள நாம் தலைப்பட்டதால்தான் இப்போது, எல்லா மொழிகளும் செம்மொழி அந்தஸ்து கேட்டு விண்ணப்பிக்கின்றன. முன் யோசனை இல்லாமல் செய்த அந்த முடிவின் விளைவால் இப்போது தமிழின் தொன்மையே கேள்விக்குறியாக்கப்படுகிறது.
"மற்றொரு மரபின் நீட்சியாக அல்லது மற்றொரு மரபில் கிளைத்ததாக இருத்தல் கூடாது, மிகச் சிறந்த தொன்மை இலக்கியத் தொகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்' என்ற வரையறைக்குள் மலையாளம் வரவில்லை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டிய மத்திய அமைச்சரவை, அரசியல் காரணங்களுக்காக இந்த வரையறைகளை எளிதில் மறந்துவிட்டு, மலையாளத்தையும் செம்மொழியாக அறிவித்திருக்கிறது.
ஓட்டப்பந்தயத்தில்கூட முதல் மூன்று பேருக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் பரிசு அளித்து, ஓடி முடித்த மற்றவர்களுக்கு வெறும் சான்றிதழ் கொடுத்து வேறுபடுத்தும் நிலை உள்ளதைப் போல, தமிழ்ச் செம்மொழி இந்தியாவின் செம்மொழிகளிலேயே முதன்மையானது என்ற உயர்வை அளிக்க வேண்டாமா? குறைந்தபட்சம் இந்த நியாயத்தைக்கூட செய்யவில்லை என்றால், தமிழ்மொழியும் ஒரு செம்மொழியாக உலா வருவது என்பது, "தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்' என்பதற்கு ஒப்பானது.
தமிழ் மொழி சாதாரண செம்மொழி அல்ல. அது உயர்தனிச் செம்மொழி. அதற்கேற்ப அதிக நிதி, அதிக இருக்கைகளை ஏற்படுத்துதல் வேண்டும். தமிழுக்குத் தனித்துவம் அளிக்கப்பட வேண்டும்.
மலையாளமும் செம்மொழி, தமிழும் செம்மொழி என்றால், அது மலையாளத்தைப் பெருமைப்படுத்துவதாக இருக்கலாம். ஆனால், நிச்சயமாகத் தமிழைச் சிறுமைப்படுத்தும் முடிவு. இதற்கு செம்மொழி அந்தஸ்து இல்லாமலேயேகூட இருந்துவிடலாம். செம்மொழி அந்தஸ்து இல்லை என்பதால் தமிழின் தொன்மையொன்றும் குறைந்துவிடாது. செம்மொழி அந்தஸ்து பெற்று அதற்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் பல கோடி ரூபாய் ஒதுக்கீடுகளை நாம் பயன்படுத்தாமல் இருக்கிறோம். தகுதி இல்லாவிட்டாலும்கூட செம்மொழித் தகுதி பெற்று தங்களது தாய்மொழியை வளப்படுத்தத் துடிக்கிறார்கள் மற்றவர்கள். இனிமேலாவது நாம் விழித்துக் கொள்வோமா?  செம்மொழி அந்தஸ்து பெற்றுவிட்டதாலேயே ஏனைய மொழிகள் பழம்பெரும் மொழிகளாகிவிடாது.
வெட்டி பந்தாவுக்காகத் தகுதி இல்லாதவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவதுபோல இருக்கிறது மத்திய அரசின் செம்மொழித் தகுதி வழங்கும் போக்கு!"

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
தினமணி நாளிதழிலிருந்து மேற்கண்ட தலையங்கம் தரப்பட்டுள்ளது. தலையங்கம் எழுதிய ஆசிரியர் அல்லது ஆசிரியருக்காக எழுதியவருக்கு நன்றி.

இயன்றவர்கள் இக்கட்டுரையை பரந்த வாசிப்புக்கு உட்படுத்தலாமே!

13.1.12

சமாதியான சங்கமம்

ஏன் இந்தப் புறக்கணிப்பு? 

  • வரலாற்று தொன்மை மிக்க குழுமம் ஒவ்வொன்றும் தங்களுடைய தனிப்பட்ட தன்மையைத் தக்க வைப்பதற்கு எல்லா வழிகளிலும் முயற்சி செய்யும். அது மற்றவர்களை விட நாம் மேலானவர்கள் என்பதற்காக அல்ல. தங்களுடைய தனிப்பட்ட கலாச்சாரக் கூறுகளை பாது காப்பாதற்கும் தங்களது தனித்துவத்தை அடுத்த தலை முறைக்கு விட்டுச் செல்வதற்கும்.

வரலாறு இல்லாத பண்பாட்டுக் குழுமங்கள் கூட தங்களது பண்பாட்டுக் கூறுகளை காட்சிப் படுத்துவதிலும், அதை மியூசியங்களில் வைப்பதிலும் காட்டுகிற அக்கறை அதிகம் என்பதை அவர்கள் சேமித்து வைத்திருக்கிற ஐநூறு ஆண்டு பழமையான கல், மண் இவைகளைப் பார்த்தாலே தெரிந்து விடும். இங்கே என்னடாவென்றால், பழைமையான பண்பாட்டு நகரம் தண்ணிரில் இருக்கிறது.


  • மிச்சம் மீதி உள்ள பண்பாட்டுக் கூறுகளை காப்பதில் ஏதாவது அக்கறை இருக்கிறதா என்பதே மிகப் பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. தமிழகத்தில் நாட்டுப் புறக் கலைகள் அருகி வருகின்றன என்பதும், அதில் இருக்கும் கலைஞர்கள் நலிந்து அந்த ஆடல், பாடல் கலைகள் அழிந்து வருகின்றன என்பதும், இதனால் தங்கள் கலைகளை விட்டு வேறு தொழிலுக்கு சென்று விடும் சூழல் இருப்பதும் நாம் அறிந்ததே.

சங்கமம் - யார், எதற்கு, அதில் என்ன சிக்கல் என்பதையும் தாண்டி, சங்கமம் மீதான என் கருத்து வேறுபாடுகளையும் தாண்டி எனக்கு அதன் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது.

அதனால், சில பல கலைஞர்கள் பொங்கல் நாட்களில் பணம் பெற்றார்கள் என்பதையும் தாண்டி - இந்தப் பண்பாட்டின் சில கூறுகளை உயிர்ப்போடு இருக்க அது உதவியது என்பதில் ஐயம் இல்லை.

ஆட்சி மாற்றம் - வழக்கம் போல பண்பாட்டுக் கூறுகளை காப்பதில் தனது பங்கை காக்க மறந்து விட்டது என்றே கருதுகிறேன். இன்னமும் காழ்ப்புனர்ச்சியிலேயே அரசு நடந்தது கொண்டிருக்கிறது. கடந்த அரசு - இதை தமிழக சுற்றுலாத் துறை இணைந்து நடத்தியதாக நான் நினைக்கிறேன். எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த அரசு தமிழகப் புத்தாண்டை மாற்றியது வேறு விஷயம். அதற்காக 'கலை விழாக்களை' புறக்கணித்தது பற்றி மிகுந்த கோபம் உண்டாகிறது.
இன்றைக்கு சங்கமம் என்பது ஏதோ காணக் கூடாத வார்த்தை போல எங்கும் எதிலும் காணோம். என்ன ஆயிற்று?


  • ஜனவரி மாதம் எப்படி புத்தகக் கண்காட்சி நினைவுக்கு வருமோ அதுபோல 'கலை வாரம்' என்கிற சங்கமும் இருந்தது. ஆட்சி மாற்றத்தினால் புத்தகக் கண்காட்சி நடக்குமோ நடக்காதோ என்கிற சில விவாதங்கள் வந்த பொது இது நிச்சயம் நடக்கும் என்கிற நம்பிக்கை இருந்தது. அதே போலத்தான் சங்கமம் பற்றியும் நினைத்தேன். ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது.

கடந்த ஆண்டு வரைக்கும் போட்டி போட்டு எழுதிய பத்திரிக்கைகள், இலக்கிய வாதிகள், கிண்டல் அடித்தவர்கள், கவிதை வாசித்தவர்கள், பாடியவர்கள், ஆடியவர்கள் .... யாரும் எதுவும் பேச வில்லை என்பது மிகவும் வெட்கித் தலை குனிய வேண்டிய செயல்.

ஒருவேளை சங்கமம் புத்தாண்டைப் போல ஏப்ரலுக்கு மாற்றப் பட்டிருக்கிறதோ அல்லது நாம் முட்டாள்களாக்கப் பட்டிருக்கிறோமா என்பதை யாரிடம் கேட்பது.?

ஆமாம்!!!
 தமிழக அரசுக்கு ஏன் தமிழர்கள் மீது வெறுப்பு?

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°


ஏன் இந்த வெறுப்பு?


  • கடந்த முறை தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் மீன் பிடிக்க உரிமை இல்லை என்று சொன்ன மத்திய அரசு இந்த முறை, மத்திய தணிக்கைக் குழு சரி என்று சொல்லிவிட்ட பிறகு மாநில அரசுக்கு அதைத் தடை செய்ய உரிமை இல்லை என்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் திருவாய் மலர்ந்திருக்கிறது.

படத்தை தடை செய்வதில் எனக்கும் உடன்பாடு இருந்ததில்லை என்பது வேறு விஷயம். ஆனால் இதில் மட்டும் மாநில அரசுக்கு உரிமை இல்லை என்று வியாக்கினம் பேசுகிற மத்திய அரசு, உச்ச நீதி மன்றம் முல்லைப் பெரியாரில் நீர் மட்டத்தை உயற்றுவதற்கு உத்தரவிட்ட பின்பு கேரள அரசு தனியாக ஒரு சட்டம் இயற்றியதே.... அதைப் பற்றி என்றாவது திருவாய் திறந்திருக்கிறதா...

ஆமாம்!!!
மத்திய அரசுக்கு என் தமிழர்கள் மீது இந்த வெறுப்பு?

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°


கொசுறு:

"குட்டக் குட்ட நீ குனிந்தால் உலகத்தில்
குட்டிக் கொண்டேதானிருப்பான் - முரசு
கொட்டி எழடா உன் பகைவன் பிடரியில்
குதிகால் பட ஓடிப் பறப்பான்!"

- காசி அனந்தன்


தொடர்புடைய இணைப்புகள்:

சென்னை சங்கமம்

இந்த வாரப் பூச்செண்டும் திட்டும் 


11.11.11

11/11/11 அன்று 11 மணி 11 நிமிடம் 11 வினாடி ["நேர அரசியல்" ]

பதினோரு மணி பதினோரு நிமிடம் பதினோரு வினாடி - இது இந்த ஆண்டின் இன்றைய சிறப்பான தருணம் என்று எப்படியெல்லாமோ எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சில நடிகர் நடிகைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. யார் யாரென்பது உங்களுக்கே தெரியும்.

  • உண்மையில் அந்தச் சிறப்பை எந்த ஆண்டுகளும் பெற்றிருக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் வருடங்களைக் கணக்கிடுவது என்பது வரலாற்றில் மிகவும் தாமதமான ஒன்று.  இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு பண்பாட்டை சார்ந்த நண்பர்களும் அவர்களுக்கென்று ஒரு காலண்டரை வைத்திருக்கிறார்கள். எனவே கணக்கிடுதல் முறையில் மிகவும் பழமையான முறை கொண்டிருக்கிற காலண்டர் அடிப்படையில் வேண்டுமானால் இதைப் பற்றி யோசிக்கலாம்.
ஆனால் அது இன்னும் பல்வேறு குழப்பங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் காரணமாக ஆகலாம்.

  • சரி இப்போது நாம் பின்பற்றுகிற காலண்டர் முறை என்பதையே உண்மை என்று கணக்கில் கொண்டாலும், இப்படி எல்லாம் ஒன்று ஒன்றாக வந்தது என்றால் ஜனவரி ஒன்று, பதினொன்றாம் ஆண்டு; அந்த ஆண்டே  நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி மற்றும் பதினொன்றாம் தேதி.... : அல்லது நூற்றிப் பதினொன்றாம் ஆண்டு;
இன்னும் மிகச் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் ஆயிரத்து நூற்றிப் பதினொன்றாம் ஆண்டு: நவம்பர் பதினொன்று...

மற்றதெல்லாம் உல்டாதானே -
நாமாக இரண்டாயிரத்திப் பதினொன்றை வெறும் பதினொன்றாகச் சுருக்கி விட்டு -
அப்படிப் பார்த்தால் ஒவ்வொரு ஆண்டும்தான் நவம்பர் வருகிறது - வெறும் பதினொன்று பதினொன்று என்று ஏதாவது சிறப்பு உண்டா?
சரி ஆண்டே வேண்டாமே: ஒவ்வொரு மாதமும் பதினொன்றாம் தேதி வருகிறது.
ஒவ்வொரு நாளும்தான் பதினோரு மணி வருகிறது - இரண்டு முறை...

  • என்ன ஒரே பிரச்சனைன்னா --- இந்தத் தேதி வெள்ளிக்கிழமை வந்தாதான் பிரச்சனை: ஏன்னா அன்னைக்கு ராகு காலம் பத்து முற்பதிலிருந்து பனிரெண்டு வரையாம்ல.

  • ஆஹா - இன்னைக்கு வெள்ளிக் கிழமை - பதினொன்னு பதினொன்னு பதினொன்னு பதினொன்னு நல்ல நேரம்னு நினைச்சேன்!

ஏதாவது பரிகாரம் இருந்தா சொல்லுங்க?

  • இல்லைன்னா சிறப்பான நேரம் இரவு பதினோரு மணி பதினோரு நிமிடம்னு நினைச்சுக்குங்க...

கொசுறு:


"யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா"

                                                                                        இது "சம்பந்தரின் மாலை மாற்று" 
[இதை நீங்கள் கீழிருந்தும் படிக்கலாம் - அதே வார்த்தைகள் அதே பொருள்]

இதன் அர்த்தம் - 
"சீர்காழியில் குடிகொண்டு, பாம்புகளை அணிகலனாகக் கொண்ட, வீணை வாசித்து கொண்டிருக்கும் ஒப்பிடமுடியாத சிவனே - மக்களின் குறை தீர்ப்பவனே " என்று பொருள் என்று கருதுகிறேன்.


எனது மொழிபெயர்ப்பு முழுமையானதாக இல்லை...


மேலும் விபரம் அறிய: 



30.9.11

வசன கவிதை

நாங்களும் எழுதுவோம்ல கவிதைன்னு வம்புக்கா எழுதலை.
சில வசனங்களை மடித்து எழுதினால்
அது கவிதை மாதிரி வருகிறதா
என்று பார்க்க ஒரு முயற்சி.
வசன கவிதையாகவாவது இருக்குமா என்று தெரியாது.
--
"ஹௌ டு ஸ்டாப் ஸ்மோகிங்"
புத்தகத்தை படித்து முடித்து விட்டு
பற்ற வைத்தேன்
ஒரு சிகரெட்டு.
--

எடையைக் குறைக்க
முதல் மாடியில் உள்ள
ஜிம்-முக்குப் போகப் 
பயன்படுத்தினேன் 
லிப்ட்.
--
எங்கேயும் எப்போதும்
பார்த்துவிட்டு
வீட்டுக்கு வேகமாய்ப்
போகும் போது
விபத்து
 --
டி. ஆர். பாலு, சோனியாவையும்
எஸ். பி. பாலு, சோனாவையும்
சந்தித்தார்களாம் -
நலம்
விசாரிக்க மட்டுமே.
--
இனிமேல் கவிதை
எழுதுவதில்லை
என்று முடிவெடுத்திருக்கிறேன்
அடுத்த முறை
எழுதும் வரை.
---     

 

28.2.11

ஜெயமோகனின் சிறுகதைகள்

தற்கால தமிழ் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத இலக்கியவாதி ஜெயமோகன் என்பதில் யாருக்கும் அய்யம் இருக்காது. 
இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து [இணையத்தில்] விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

சிறுகதைகள் வற்றாத ஜீவா நதி போல, கிளர்த்தெழும் ஊற்று போல, ஓடிக்கொண்டே இருக்கிறது.

 ஒரு சிறுகதையைப் படித்து அதை உள்வாங்கி மீண்டும் படிக்கத் தோன்றி அப்பக்கத்திற்கு விஜயம் செய்தால் - புதிய கதை. அந்தக் கதைகளைப் படித்துவிட்டு அதற்குப் பின்னூட்டம் எழுதக் கூட  நமக்கு அவகாசம் தராமலேயே அடுத்த படைப்பு. அவரது வேகத்திற்கு பின்னூட்டம் எழுதக் கூட நமக்கு வேகம் இல்லாத காரணத்தால் எந்தப் படைப்பிற்குப் பின்னூட்டம் போடுவது என்ற தவிப்பே மிஞ்சி நிற்கிறது.


படைப்பில் இது தொடங்கியது - அதற்கு முன்பாகவே ஒரு த்ரில்லர். நான் இன்னும் படிக்கவில்லை. அது எதைப் பற்றியது என்று சொல்வது நல்லதல்ல. ஆனால் அதைப் படித்த பின்பு நீங்கள் நிச்சயமாய் மீண்டும் படிப்பீர்கள் எம்பது மட்டும் நிச்சயம்.


அதைத் தொடர்ந்து - மத்துறு தயிர் - இரண்டு பாகங்கள்.


அதன் பிறகு வணங்கான், .... இப்போது ஓலைச்சிலுவை.....

அவருக்கு வாழ்த்துக்கள் - பாராட்டுக்கள்.


29.1.11

கருத்து மோதல்

கருத்து யுத்தம் என்பது எல்லாக் காலங்களிலயும் நடக்கும்.

ஒவ்வொருவரின் தத்துவம், வாழ்வின் நெறிகள் இவைகளைக் கொண்டு தங்களுக்குள் ஒரு போராட்டம் எப்போதுமே நிகழும். ஆனால் எல்லாமே அவைகளை அடிப்படையாகக் கொண்டே இருக்கும் என்று சொல்வதற்கில்லை -

இங்கே சில உதாரணங்கள்: உரையாடல்கள்: மோதல்கள்: என் பல..

ஏறக்குறைய எல்லாவற்றிலயும் ஜெயமோகன் - பிறருக்கிடையிலேயானதாக இருப்பது ஒரு தற்செயலாய் நிகழ்ந்த்ததே. ஒருவேளை ஜெயமோகனைத் தொடர்ந்து வாசிப்பதும் கூட இருக்கலாம்.

ஒன்று: [கடந்த வருடம்]
ஜெயமோகன் மனுஷ்ய புத்திரனின் கவிதைகளை விமர்சனம் செய்வதற்குப் பிறகு - வினையும் எதிர்வினையும்:

இரண்டு: [இந்த வருடம்]

ம.க. இ.க. வின் தோழர் மருதையனுக்கும், ஜெயமோகனுக்கும் இடையே நடந்த, நடக்கிற கருத்து யுத்தம் பற்றி இங்கே குறிப்பிடக் காரணம் - எழுத்து என்பது எதனால் - எதற்காக என்பதைப் பற்றிய விடயங்களும் இருக்கின்றன என்பதற்காக.







இது எங்கே போகும் என்பதை படிப்பவர்தான் முடிவு செய்ய வேண்டும்.
இதைப் பற்றிய எனது பின்னோட்டம் சற்றே ஒத்திப் போடப் பட்டுள்ளது.