பதிவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10.8.12

அன்னா ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும்



அன்னா பற்றிய தொடர் செய்திகளைப் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இன்னும் செய்திகள் வந்த வண்ணம்தான் இருக்கின்றன. மேலெழுந்த வாரியாக படிக்கிற செய்திகள் நம்மையும் உள்ளே இழுக்கின்றன. ஆனால் நடந்துகொண்டிருக்கும் விவாதத்தின் கட்டமைவு பற்றிய சில கேள்விகளை இக்கட்டுரை முன்வைக்கிறது. 
ஏன் அன்னாவை எதிர்க்கும் அருந்ததிராயைக் குறி வைக்கிறார்கள் ஆனால் சோ - வை விட்டு விடுகிறார்கள்?

  • ஆதரவாளர்கள்    


அன்னா ஆதரவாளர்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம் [இன்னும் நுணுக்கமாகப் போனால் இன்னும் நிறைய என்றுதான் நான் கருதுகிறேன்]. 

முதல் வகையில் குரல் கொடுப்பவர்கள் அன்னாவோடு ஒட்டி நின்று ஊழல் ஒழிய வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தோடு ஒன்று சேர்ந்தவர்கள். அதனால் அன்னா என்ன சொன்னாலும் சரி என்று சொல்லுகிறவர்கள். அதனாலேயே அவர் முற்றிலுமாகக் காந்தியவாதி என்பதை என்பிப்பதற்காகவே முழுவதும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்கள், பின்பற்றுபவர்கள். இதில் சிலர் அறிவு ஜீவிகள். பெரும்பான்மையானவர்கள் சாதாரண மக்கள், மற்றும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்கிற இளைஞர்கள்.
 
ஆதரவாளர்களில் மற்றொரு வகை ஊழலுக்கு எதிர்ப்பு என்பது சரியானதுதான்; அன்னாவைப் பின்பற்றுவது அவசியம்தான் என்பதோடு, அதிலும் உள்ள சிக்கல்கள் களையப்படவேண்டும் என்று நினைப்பவர்கள். அது மட்டுமல்லாமல் ஊழல் என்பது மட்டுமே இந்தியாவின் முதன்மையான பிரச்சனை அல்ல; மாறாக அதுவும் ஒரு பிரச்சனை என்று நினைப்பவர்கள். இதில் பெரும்பான்மையானவர்கள் வலைப்பூக்களில் எழுதுபவர்கள் என்றே நான் கருதுகிறேன். பிரச்சனை என்னவென்றால் தள்ளி நின்று அண்ணாவை ஆதரிக்கும் இந்த வகை ஆதரவாளர்களையும் அன்னா எதிர்ப்பாளர்களாகவே முதல் வகை ஆதரவாளர்கள் கருதுவதுதான். 

  • எதிர்ப்பாளர்கள் 

ஏன் இந்தச் சிக்கல்? இதைப் புரிந்து கொள்ள அன்னா எதிர்ப்பாளர்களையும் இரண்டு விதமாகப் பிரிக்கலாம். கொள்கை பிடிக்காததால் அன்னாவை எதிர்ப்பவர்கள் முதல் வகை. அவர் காங்கிரசின் கைக்கூலியோ என்பதனால் பிடிக்காமல் போனவர்கள் இரண்டாம் வகை. 

முதல் வகையில், அருந்ததிராய், அருணா ராய் போன்றவர்களைக் குறிப்பிடலாம். இரண்டாவது வகை வெறுப்பாளர்கள் வரிசையில் ‘சோ’ போன்றவரைச் சொல்லலாம். குஜராத் முதல்வரைப் பற்றித் தவறாகச் சொன்ன ஒரே காரணத்திற்காக அவரை இவருக்குப் பிடிக்காமல் போய் விட்டது என்றே கருதுகிறேன். 

இதில் முதல் வகை எதிர்ப்பாளர்கள் அவர்களுடைய கருத்துக்களுக்காக கவனிக்கப்பட வேண்டியவர்கள் - மிகவும் கவனிக்கப்பட வேண்டியவர்கள். அதேபோல இரண்டாம் வகை வெறுப்பாளர்கள் இன்னும் அதிகமாகவே கவனிக்கப் பட வேண்டியவர்கள். அண்ணாவோடு ஒட்டி நிற்கும் ஆதரவாளர்கள் தள்ளி நிற்பவர்களையும் எதிர்த்து நிற்பவர்களை மட்டுமே கவனித்து இந்த இரண்டாம் வகை வெறுப்பாளர்களை /எதிர்ப்பாளர்களைப் பற்றி அதிக அக்கறையோ அல்லது அவர்களை பெரிய எதிரியாகப் பார்ப்பதை விடுத்து அருந்ததிராயை மட்டுமே பிரதானப்படுத்துகிறார்கள். இதில் எந்த வித சிக்கலுமின்றி ‘சோ’ வகையறாக்கள் தப்பித்துக் கொள்கிறார்கள் [அல்லது தப்பிக்க ஆதரவாளர் அறிவு ஜீவிகள் உதவுகிறார்களா?]. 

அருந்ததி ராய் கேட்கிற கேள்விகள் நியாயமானவை என்பதை எள்ளளவும் புரிந்து கொள்ள மனமின்றி அன்னாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை நியாயப்படுத்துகிறார்கள். இரண்டாவது சுதந்திரப் போர் என்பது இந்தியாவிற்குள் நடக்கும் முதல் சுதந்திரப் போர்தான் – அது அரசியல் வாதிகளுக்கு எதிராக நடத்தப்பட வேண்டுமா அல்லது சாதிய / இந்துத்துவத்துக்கு எதிராக நடத்தப்பட வேண்டுமா என்பதிலும், அல்லது பழங்குடியினரின் வாழ்க்கையைக் காப்பாற்றுவதற்காக நடத்தப்பட வேண்டுமா என்கிற கேள்விக்கும் பதில் இல்லாமல் இவர்களை அன்னாவின் மீதும் காந்தியத்தின் மீதும் அவதூறு செய்வதாக அவதூறு செய்கிறார்கள் முதல் வகை ஆதரவாளர்கள். இந்தச் சிக்கலில் அன்னா ஆதரவாளர்களில் இரண்டாவது வகையாளர்கள் அருந்ததிராயின் கேள்விகளோடு இன்னும் பல கேள்விகளையும் சிக்கல்களையும் முன்னிறுத்துவதனால், அன்னா ஆதரவாளர்களில் இரண்டாம் வகையும் அன்னாவின் எதிரிகளாகக் கட்டமைக்கப் படுகிறார்கள்.

இதில்தான் அன்னா ஆதரவாள அறிவுஜீவிகள், இரண்டாம்வகை ஆதரவாளர்கள் மீதும், முதல் வகை எதிர்ப்பாளர்கள் மீதும் வெறியோடு இருக்கும் சூழலில் ‘சோ’ போன்றவர்கள் எளிதாகத் தப்பித்துக் கொள்ளுகிறார்கள். 

  • வேண்டுகோள் 


எனவே அன்னாவை கொள்கையளவில் எதிர்க்கும் அருந்ததிராய் போன்றோரை கொடூரமானவராக சித்தரித்து, இந்துத்துவக் கொள்கை வெறியில் எதிர்க்கும் ‘சோ’ வை எந்த விதச் சிக்கலுமின்றி தப்பிக்க உதவும் முதல் வகை ஆதரவாளர்களே கொஞ்சம் விழித்தெழுங்கள் என்பதுதான் எனது வேண்டுகோள். 

இன்னும் ஒரு கோணத்தில் பார்த்தால் இந்த அறிவு ஜீவிகள் ஏற்கனவே விழித்து எழுந்து விட்டார்களோ என்று தோன்றுகிறது. முதல்வகை அன்னா ஆதரவாளர்களும், இந்தியா இந்து என்கிற போர்வையில் மீண்டும் சாதியக் கட்டுமான மேலாதிக்கத்தை விதைக்க இந்த ஊழல் போராட்டத்தை ஆதரித்து சோ எதிர்ப்பின் வழியாய்ச் சாதிக்க நினைப்பதை இவர்கள் ஆதரவின் வழியாய்ச் சாதிக்க நினைக்கிறார்களோ என்றும் கருதுவதற்கான முகாந்திரம் இருக்கிறது. இருந்தாலும், இதில் சாதாரண மக்கள், பெருமளவில் எழுச்சியோடு கலந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போது இந்த முகாந்திரம் களைந்து போகிறது. ஆனால் அறிவு ஜீவிகளின் அந்தக் கட்டமைவில்தான் இந்தச் சந்தேகம் வலுக்கிறது.


4.10.11

மீண்டும் வெடிக்கும் அணு உலை விவாதம்

பத்ரி சேஷாத்ரி மிகவும் துணிச்சலாகவும், விவாத முறைகளையும் முன்வைத்து எழுதும் ஒரு நல்ல கட்டுரையாளர். அவரை நான் அவ்வப்போது வாசிப்பதுண்டு. அணு உலை பற்றி தமிழ் பேப்பரில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார் - இந்தக் கட்டுரையைப் படித்த பின்பு அவர் எழுதிய கட்டுரைகளில் தெளிவின்றி, விவாத முறைகள் குழப்பப் பட்டு உள்ள கட்டுரை அல்லது கேள்வி பதில் என்றால் இதைச் சொல்லலாம் என்றே கருதுகிறேன். அது அவரது பிரச்சனை அல்ல - அவர் பதிவின் பொருள் அப்படி - "அணு." அதுதான் அவரை அலைக்கழித்து விட்டது என்று கருதுகிறேன்.

அவரது கட்டுரை கொடுக்காத சில உண்மையான தகவல்களை அதிலுள்ள பின்னூட்டங்களிலேயே காணலாம். இருந்தாலும் சில தெளிவுகள் தர வேண்டிய அவசியம் உள்ளதால் இந்தப் பதிவு. ஏனெனில் மீண்டும் ஒரு நாள் அடையாள உண்ணா விரதம் அறிவிக்கப் பட்டிருக்கிற நிலையில் இதைப் போன்ற கட்டுரைகள் வரலாம் என்பதால் இந்தப் பதிவு.

இந்திய ஜனநாயகத்தில் மக்கள் போராட்டங்கள் பெற்றிருக்கிற வெற்றி ஜனநாயகம் வளர்ந்து வருவதற்கான வெற்றி என்று பாராட்டிவிட்டு,  பத்ரி [பலர் எழுப்பும் கேள்விகளுக்கு] தனது கேள்வி பதில்களுக்குச் செல்கிறார். 
என்னைப் பொறுத்தவரை - அவர் கேள்வியை முன்வைத்திருப்பதில் உள்ள கருத்துத் தெளிவு பதில்களில் இல்லை என்றே தோன்றுகிறது. 

முதல் கேள்வியின் சாரம் - அணுமின்சாரம் தயாரிக்க நிறைய செலவு ஆகிறது - மின்சாரமும் போதிய அளவு கிடைப்பதில்லை அப்புறம் ஏன் ஆபத்தான இதைக் கட்டிக் கொண்டு மாரடிக்க வேண்டும் என்று கேட்கிறார். 
இந்தக் கேள்விக்கான பதிலை - கேள்வியில் எங்கே தவறு இருக்கிறதென்று பார்ப்போம் என்று சொல்லி தவறையும் சுட்டிக் காட்ட வில்லை - அவர் எழுப்பிய கேள்விக்கான பதிலும் இல்லை. அதாவது இதில் மின்சாரம் தயாரிக்க நிறைய செலவு ஆகவில்லை என்பதோ அல்லது மின்சாரம் போதிய அளவு கிடைக்கும் என்பதோ அவரது பதிலாக இல்லை. அந்தப் பதில் எப்படிக் குழப்பப் பட்டிருக்கிறது என்று நீங்கள் தான் படிக்க வேண்டும். அதாவது இந்தக் கேள்வியின் தவறு என்பது நாம் அணு ஆயுதச் சோதனை செய்தது என்கிறார். வரலாற்றை நீங்கள் மாற்ற முடியுமா? அதாவது 20  ஆண்டுகளுக்கு முன்பே இவைகள் கட்டப் பட்டிருந்தால் இந்தக் கேள்விகள் எழுந்திருக்காது என்கிறார்.

  • இருபது ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்டிருந்தாலும் அல்லது நிறைய மின்தேவைகளைப் பூர்த்தி செய்திருந்தாலும், அப்படி உலக அரங்கில் அவைகளைக் கட்டமைத்த நாடுகளில் இன்றைய பொழுதில் அவைகளை நிறுத்துவதற்கான முயற்சியில் இன்று இருக்கிறப் போது, இந்தியாவில் அப்படி முப்பது ஆண்டுகள் முன்பு அமைத்திருந்தாலும் இன்றைக்கு அந்தக் கேள்வி மீண்டும் எழவே செய்யும்.
இரண்டாவது கேள்வி - கதிர்வீச்சு அபாயம் பற்றி - அது ஆமாம் உண்மைதான் என்கிறார் பத்ரி. ஆனால் புகுஷிமாவில் கூட அத்தகைய கதிர்வீச்சுகள் ஏற்படவில்லை என்று பத்ரி சொல்லுகிறார்.  ஆனால் அது தவறு என்பதை புலவர் தருமி பின்னூட்டத்தில் எடுத்துக் காட்டியிருக்கிறார். 
  • இந்தக் கேள்வியில் தான் பத்ரி தனியாய்த் தெரிகிறார். அதாவது நில நடுக்கம் இல்லாத இடங்களில்தான் அணு உலை அமைக்கிறார்கள் என்கிறார் - அப்படி முற்றும் வராத இடங்கள் என்று ஏதாவது இருக்கிறதா - அப்படி அறிவியலாளர்கள் ஒரு இடத்தைக் காண்பிக்க முடியுமா - நிலத்தின் தன்மையை வைத்து இங்கே ஏற்படுவது கடினம் என்று சொல்லலாம். ஆனால் அப்படிப் பட்ட இடங்களிலெல்லாம் நில நடுக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதை நினைவு படுத்தலாம்.  
  • சரி அப்படியே நில நடுக்கம் ஏற்படாத பகுதிகள் என்றால் - அதற்காக மக்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் வைக்க முடியுமா? பின்னூட்டத்தில் உள்ளது போல அண்ணா நகர் பக்கத்திலோ, அல்லது கடல் அருகில்தான் வைக்க வேண்டும் என்றால் மும்பையிலோ அல்லது கொச்சினிலோ வைக்கலாமே.  
  • இவ்வளவு பணிகள் முடிவடைந்த நிலையில் இதைக் கைவிட முடியுமா என்று அடுத்த கேள்வியைக் கேட்கலாம் - அதற்காக முப்பது வருஷத்துக்கு முன்னாடி உள்ள அருதப் பழசை இப்பக் கட்டி அழனுமா என்ன?
  • அப்படி ஏன் இந்த அபாயத்தை நாம் கட்டி அழணும்னா நமக்குத் தேவை இருக்கு அப்படின்கிறார் பத்ரி. இதுக்கு என்ன பதில் சொல்ல முடியும் - இது எவ்வளவு மின்சாரத் தேவையை நிறைவேற்றும் என்று பதிலைச் சொல்லாத வரை இதைப் பற்றி பேச முடியாது. ஆனால் இதற்குச் செலவழிக்கும் தொகையையும் அதனுடைய பராமரிப்புச் செலவுக்கும், சில ஆண்டுகள் கழித்து மூட வேண்டிய அவசியம் உள்ள இந்த அணு உலைகள், கழிவுகளைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் என்றெல்லாம் பார்த்தால் - இதனால் கிடைக்கும் மின் உற்பத்தி அதிகம் என்று சொல்லுவதிர்கில்லை.
  • எல்லா மின் நிலையங்களும் மிகப் பாதுகாப்பானவை - உடனே கதிரியக்கத்தை செயலிழக்கச் செய்யுமாம் - ஆனால் புகுஷிமாவில் அது நிகழாமல் போனதற்கு காரணம் மனித காரணமாம். இதனால்தானே மீண்டும் மீண்டும் சொல்கிறோம். இது ஒத்து வராதுன்னு. 
  • ஜப்பானிலேயே இப்படி என்றால் நமக்கெல்லாம் இது சரி வராது என்கிற வாதம் தவறு என்றும், இந்தியாவிலே கவனமின்மை என்பது படிக்காதவர்களிடமிருந்தும் சாக்கடை அல்லுபவர்களிடமிருந்தும், மின்சாரம் திருடபவர்களிடமிருந்தும் தான் வருகிறது என்றும் அழுத்திச் சொல்லுகிறார். இதற்கு படிப்பவர்கள்தான் [இந்தப் பதிவைப் படிப்பவர்கள்] பதில் சொல்ல வேண்டும். அணு மின் உலையைப் பொறுத்த வரை எல்லாம் படித்த விஞ்ஞானிகள் தான் வேலை செய்வார்களாம். அதனால் எந்தக் கவனமின்மையும் நிகழாதாம்.
  • அதாவது இதை வேறொரு கோணத்தில் பார்த்தால் இன்னும் நமக்குச் சரியாகப் புரியும். ' இந்தியாவில் கவனக் குறைவினால் ஏற்படும் விபத்துக்கள் படிக்காதவர்களிடமிருந்துதான் வருகிறது. அப்படியானால் படித்தவர்கள், நிச்சயமாய் கவனத்தோடும், ஆழ்ந்த அறிவுப் புலத்தொடும், மிகவும் பொறுப்புணர்வோடும் அல்லது ரெச்பான்சிபிலாகவும் நடந்து கொள்ளுவார்கள். இதைச் சரி என்றால், எங்கெல்லாம் விபத்து நடக்கிறதோ அங்கெல்லாம் படிக்காதவர்கள் இருக்கிறார்கள் - எங்கெல்லாம் பொறுப்புணர்வு குறைவாக இருக்கிறதோ அங்கெல்லாம் படிக்காதவர்கள் இருக்கிறார்கள் என்றுதானே பொருள்.  நான் செய்வது விதண்ட வாதம் என்று எனக்குத் தெரியும். ஆனால் "நம் நாட்டில் நடக்கும் கவனமின்மை காரணமான தவறுகள், கல்வி அறிவு அற்றவர்களிடமிருந்து ஏற்படுகிறது. அது பூச்சிமருந்தைச் சரியாகப் பயன்படுத்தாதலிருந்து மின்சாரத்தைக் கொக்கிபோட்டு இழுப்பதிலிருந்து சரியான பாதுகாப்புக் கவசங்களை அணியாமல் சாக்கடையை அல்லது கழிப்பறைக் கிடங்குகளைச் சுத்தம் செய்வதுவரை செல்கிறது." - இந்த பதிலுக்கு வேறெப்படி பதில் சொல்லுவது என்று எனக்குத் தெரிய வில்லை. அவர் சொல்லுவதே உண்மைஎன்றால் இந்திய அரசின் முதல் கவனம் முழுவதும் இந்திய தேசத்தை கல்வியறிவு உள்ள நாடாக ஆக்குவதற்குத் தானே முன்னுரிமை கொடுக்க வேண்டும். அப்படித் தானே எல்லாரையும் படிப்பறிவு உள்ளவர்களாகவும் பொறுப்புள்ளவர்களாகவும் மாற்ற முடியும்.
  • அது மட்டுமல்ல இந்தியா என்கிற தேசத்தை மிகவும் பாதுகாப்புள்ளதாக, இந்த தேசம் இப்படித் தான் இருக்கும் என்கிற எண்ணத்தை அணு உலைப் பாதுகாப்பிலிருந்து தொடங்குவோம் என்கிறார். எனக்கு அந்த நம்பிக்கையின் மீது சந்தேகம் இல்லை. இந்தியா மிகவும் பாதுகாப்பான மற்றும் பொறுப்புணர்வு உள்ள குடிமக்களை உருவாக்க வேண்டும் என்பதிலோ அல்லது அப்படி வருவோம் என்பதிலே எனக்கும் நம்பிக்கை இருக்கிறது. அதற்காக இந்தப் பாதுகாப்பிலிருந்து மாற்றத்திற்குப் போவோம் என்பதுதான் என்னால் ஏற்றுக் கொள்ளவே முடிய வில்லை.  அது எப்படி அணு உலையிலேர்ந்து சாதாரண குடிமகன்களின் பொறுப்புணர்வுக்குப் போக முடியும் என்பதே கேள்வி. 
அடுத்து பத்ரியின் கேள்வி - மக்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் ஏன் இதை அமைக்க வேண்டும் என்பதற்கு நாட்டில் எங்கே மக்கள் இல்லை என்கிற கேள்வியைக் கேட்கிறார். அதோடு மக்களே எதிர்பார்க்காத அளவுக்கு நஷ்ட ஈடு கொடுத்து அவர்களை மாற்று இடங்களில் அமர்த்த வேண்டும் என்கிறார். அதாவது கூடங்குளம் பகுதியில் மக்கள் அடர்த்தியாக வசிப்பது போலத்தான் இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திலும் குடியிருப்பதாகச் சொல்லுகின்றார் - அப்படியெனில் இந்தியா சீனாவை முந்தியிருக்க வேண்டு எண்ணிக்கையில்- சரி அதை விடுங்க...

அடுத்தது அணுஉலைக் கழிவுகள் பற்றியது - ஆமாம் அது அபாயம்தான் - என்கிறார். ஆனால் எதிர் கொள்ளக் கூடிய பிரச்சனை என்று சொல்லுகிறார்.
அதே போல மரபு சாரா முறைகள் வழியாக மின்சாரம் தயாரிப்பதால் இப்போதையத் தேவையை நாம் நிவர்த்தி செய்ய முடியாது என்பதோடு மட்டுமல்ல நாம் இதைப் பற்றி நியமான கேள்விகள் எழுப்பலாம் ஆனால் அதிகமாக பயமுறுத்தும் அளவுக்கு இருக்கக் கூடாது என்பதோடு கட்டுரை முடிகிறது.

  • கேட்கப் படுகிற கேள்விகளுக்கு சரியான விளக்கம் இருந்தால் யாரும் மீண்டும் மீண்டும் கேட்கப் போவதில்லை. ஒவ்வொரு முறையும் கேட்கப் படும் கேள்விகளுக்கு சரியான பதில் இல்லை என்பதனால்தான் மீண்டும் மீண்டும் கேட்கப் படுகின்றன. நியமான கேள்விகளை எழுப்பிய பத்ரியின் கேள்விகளுக்கே அவராலேயே நியாயமான பதில்களைச் சொல்ல முடியவில்லை என்பதிலிருந்தே இதனைப் புரிந்து கொள்ளலாம். 
  • பத்ரியின் கட்டுரையைப் படிப்பவர்கள் எல்லாரும் அவரது கட்டுரையில், கேள்விகளையும் அதைத் தொடர்ந்து வரும் முதல் பத்தியை மட்டும் படித்தீர்களானால், அணு உலை ஆபத்து என்பது எவ்வவளவு அதிகம் என்று தெரியும். எல்லாவற்றையும் ஒத்துக் கொள்ளுகிற அவர் ஏன் இன்றும் அணு உலை தேவை என்பதைத் தெளிவின்றியே - குழப்பியே எடுத்து வைக்கிறார். இது எப்படி இருக்கிறதென்றால் - நான் மன்மோகனைக் குறை சொல்வேன். அது சரியில்லை, இது சரியில்லை ஆனால் யாருக்கு அடுத்த முறை ஓட்டுப் போடுவாய் என்று கேட்டால் மன்மோகனுக்குத் தான் என்று நான் சொல்லுவது எவ்வளவு அபத்தமோ அப்படித் தான் அணு உலை அபாயமும். அணு உலை அபாயம்தான் ஆனால் அதுதான் வேண்டும் என்பது. 
  • அல்லது இப்போது உள்ள சூழலில் மன்மோகன்தான் ஒரே சாய்ஸ் என்பது போல அணு தான் ஒரே சாய்ஸ் என்று வாதிடலாம். அது தவறு - மாற்று பற்றி எதுவும் யோசிக்காமல், அது ஒத்து வராது என்பது தவறல்லவா. மாற்று வழி மின்சாரம் எதையும் முன்னேடுக்காமலேயே -[உ.ம். சூரிய ஒளியிலிருந்து] அதெல்லாம் ஒத்து வராது என்பது எந்த அளவுக்கு சரி என்பது தெரியவில்லை.
  • பத்ரியின் கேள்வி மற்றும் பதில்களின் முதல் பத்தி அடிப்படையில் பத்ரி அணு உலை எதிர்ப்பாளராகவே தெரிகிறார். 
  • ஆனால் ஏன் இதற்கும் மேலான கருத்துக்களை உள்ளடக்கி தமிழ் பேப்பரிலேயே வந்த கட்டுரைகளைஎல்லாம் கவனிக்க மறந்தார் என்பது தெரியவில்லை.

இந்தப் பகுதிகளை வாசிக்க இணைப்பான்களைச் சுட்டவும்.

பத்ரியின் முரனான கருத்துக்களுக்கு புலவர் தருமியின் பின்னூட்டம் - கட்டுரையின் பக்கமே.

சிறில் அலெக்ஸின் இரண்டு கட்டுரைகள்.

பாமரனின் கடிதம் - சோவியத் அதிபருக்கு