29.5.13

தமிழுக்கு சிறுமை – தினமணி தலையங்கம்

பின்வரும் செய்தி இன்றைய தினமணி நாளிதழில் தலையங்கமாக வெளி வந்துள்ளது. எல்லாத் தமிழர்களும் படிக்க வேண்டியது அவசியம். ஆசிரியருக்கு நன்றி.
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
"மலையாளத்துக்கு செம்மொழித் தகுதி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு ஆகியவற்றுடன் மலையாளமும் செம்மொழித் தகுதிப் பட்டியலில் சேர்ந்துள்ளது.
மலையாள அன்பர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் இவ்வேளையில், நம் மனதில் தோன்றும் நெருடலான கேள்வி இதுதான்: செம்மொழித் தகுதி வரையறைக்குள் தமிழ், சமஸ்கிருதம் தவிர ஏனைய இந்திய மொழிகள் வருகின்றனவா?
ஒரு மொழி, செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றால், அது  "தொன்மையானதாக இருக்க வேண்டும்; தனக்கான சொந்தக் கலாசாரம், பண்பாட்டுக் கூறுகள் கொண்டிருக்க வேண்டும்; மற்றொரு மரபின் நீட்சியாக அல்லது ஒரு மரபில் கிளைத்ததாக இருத்தல் கூடாது, மிகச் சிறந்த தொன்மை இலக்கியத் தொகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்'.
இந்த வரையறை அனைத்தும் பொருந்திய தமிழ் மொழியைச் செம்மொழியாக மத்திய அரசு அறிவிக்க நாம் பட்ட பாடெல்லாம், தமிழ்ச் சான்றோர் மட்டுமே அறிவர். இப்போது, விண்ணப்பித்தவர்களுக்கு எல்லாம் செம்மொழித் தகுதிச் சான்று வழங்கி கௌரவிக்கத் தலைப்பட்டிருக்கிறது நடுவண் அரசு.
மலையாள மக்கள் பன்னெடுங்காலமாகத் தமிழ் பேசியவர்கள்தான். சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட நிலப்பரப்பு முழுதும் தமிழ் மொழிதான் வழக்கு மொழியாக நிலவியது. சேரன் செங்குட்டுவனும் சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகளும் பேசியதும் எழுதியதும் தமிழ்தான். சென்னைத் தமிழ், திருநெல்வேலித் தமிழ் போல வட்டாரத் தமிழ் பாணி மாறுபட்டிருக்கலாமே தவிர, மொழி ஒன்றுதான்.
சேர நிலம் - மலைஞாலம்.  மலைஞாலம் என்பதன் திரிபே மலையாளம். மூவேந்தர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி விடுத்து, ஆங்காங்கே குறுநில மன்னர்களும் விஜயநகரப் பேரரசின் எழுச்சியும் ஏற்பட்டபோது தமிழும் சமஸ்கிருதமும் கலந்து புதிய பல வார்த்தைகள் உருவாகித் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகள் தோன்றின என்பதுதான் திராவிட மொழி ஆராய்ச்சியாளர்களின் தேர்ந்த முடிவு. அதில் குறிப்பாக மலையாளம் அதிகமான தமிழ்ச் சொற்களால் உருவான மொழியாக அமைந்தது.
இன்றும்கூட, பல தூயத் தமிழ்ச் சொற்கள் மலையாளத்தில் வழக்கத்தில் உள்ளன. நாம் மறந்துவிட்ட வெள்ளம், இல்லம், ஊன், உறக்கம் போன்ற சொற்கள் மலையாளத்தில்தான் புழக்கத்தில் உள்ளன. 16-ஆம் நூற்றாண்டில்தான் மலையாள மொழி, எழுத்தச்சனால் எழுத்துரு பெறுகிறது. மலையாளத்துக்கென தனியாகத் தொன்மை இலக்கியங்கள் இல்லை. ஏனென்றால் அவர்கள் தமிழ்ச் சமுதாயத்திலிருந்து கிளைத்து உருவானவர்கள். தொன்மை இலக்கியம் என்று மலையாளத்தினர் தேடினால் அது தமிழ்ச் சங்க நூல்களில்தான் வந்து முடியும்.
இருபதாம் நூற்றாண்டு இந்திய இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால், மலையாளம் முன்னணியில் நிற்கும் என்பதை மறுப்பதற்கில்லை. திரைப்படத் துறையை எடுத்துக்கொண்டாலும்கூட, கடந்த நூறு ஆண்டுகளில் வெளிவந்த 100 சிறந்த திரைப்படங்கள் என்று பட்டியலிட்டால், அதில் ஐம்பது திரைப்படங்கள் மலையாள, வங்க மொழித் திரைப்படங்களாகத்தான் இருக்கும். அதற்காக, மலையாளத்தை செம்மொழி என்று சொல்லும்போது நெருடல் ஏற்படவே செய்கிறது.
இந்நிலைக்குக் காரணம், மொழியின் தொன்மைக்கான காலவரையறையை 2,000 ஆண்டுகளாக நிர்ணயிக்காமல், 1,000 ஆக குறைத்ததுதான். செம்மொழித் தகுதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தமிழின் தொன்மையை வெறும் ஆயிரம் ஆண்டுகளாகச் சுருக்கிக்கொள்ள நாம் தலைப்பட்டதால்தான் இப்போது, எல்லா மொழிகளும் செம்மொழி அந்தஸ்து கேட்டு விண்ணப்பிக்கின்றன. முன் யோசனை இல்லாமல் செய்த அந்த முடிவின் விளைவால் இப்போது தமிழின் தொன்மையே கேள்விக்குறியாக்கப்படுகிறது.
"மற்றொரு மரபின் நீட்சியாக அல்லது மற்றொரு மரபில் கிளைத்ததாக இருத்தல் கூடாது, மிகச் சிறந்த தொன்மை இலக்கியத் தொகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்' என்ற வரையறைக்குள் மலையாளம் வரவில்லை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டிய மத்திய அமைச்சரவை, அரசியல் காரணங்களுக்காக இந்த வரையறைகளை எளிதில் மறந்துவிட்டு, மலையாளத்தையும் செம்மொழியாக அறிவித்திருக்கிறது.
ஓட்டப்பந்தயத்தில்கூட முதல் மூன்று பேருக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் பரிசு அளித்து, ஓடி முடித்த மற்றவர்களுக்கு வெறும் சான்றிதழ் கொடுத்து வேறுபடுத்தும் நிலை உள்ளதைப் போல, தமிழ்ச் செம்மொழி இந்தியாவின் செம்மொழிகளிலேயே முதன்மையானது என்ற உயர்வை அளிக்க வேண்டாமா? குறைந்தபட்சம் இந்த நியாயத்தைக்கூட செய்யவில்லை என்றால், தமிழ்மொழியும் ஒரு செம்மொழியாக உலா வருவது என்பது, "தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்' என்பதற்கு ஒப்பானது.
தமிழ் மொழி சாதாரண செம்மொழி அல்ல. அது உயர்தனிச் செம்மொழி. அதற்கேற்ப அதிக நிதி, அதிக இருக்கைகளை ஏற்படுத்துதல் வேண்டும். தமிழுக்குத் தனித்துவம் அளிக்கப்பட வேண்டும்.
மலையாளமும் செம்மொழி, தமிழும் செம்மொழி என்றால், அது மலையாளத்தைப் பெருமைப்படுத்துவதாக இருக்கலாம். ஆனால், நிச்சயமாகத் தமிழைச் சிறுமைப்படுத்தும் முடிவு. இதற்கு செம்மொழி அந்தஸ்து இல்லாமலேயேகூட இருந்துவிடலாம். செம்மொழி அந்தஸ்து இல்லை என்பதால் தமிழின் தொன்மையொன்றும் குறைந்துவிடாது. செம்மொழி அந்தஸ்து பெற்று அதற்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் பல கோடி ரூபாய் ஒதுக்கீடுகளை நாம் பயன்படுத்தாமல் இருக்கிறோம். தகுதி இல்லாவிட்டாலும்கூட செம்மொழித் தகுதி பெற்று தங்களது தாய்மொழியை வளப்படுத்தத் துடிக்கிறார்கள் மற்றவர்கள். இனிமேலாவது நாம் விழித்துக் கொள்வோமா?  செம்மொழி அந்தஸ்து பெற்றுவிட்டதாலேயே ஏனைய மொழிகள் பழம்பெரும் மொழிகளாகிவிடாது.
வெட்டி பந்தாவுக்காகத் தகுதி இல்லாதவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவதுபோல இருக்கிறது மத்திய அரசின் செம்மொழித் தகுதி வழங்கும் போக்கு!"

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
தினமணி நாளிதழிலிருந்து மேற்கண்ட தலையங்கம் தரப்பட்டுள்ளது. தலையங்கம் எழுதிய ஆசிரியர் அல்லது ஆசிரியருக்காக எழுதியவருக்கு நன்றி.

இயன்றவர்கள் இக்கட்டுரையை பரந்த வாசிப்புக்கு உட்படுத்தலாமே!

19.5.13

ஐ. பி. எல் ஸ்பெஷல்


  • இருபது ஓவர் மாட்சில் ஒரு பாலைக் கூட அடிக்காமல் விட முடியாது. அப்படி ஏதாவது ஒரு பாலை மட்டையாளர் அடிக்காமல் விட்டால் --- அப்போது சப்பாத்தி ஷாட் ஸ்பெஷலிஸ்ட் ரவி சாஸ்த்ரி சொல்லும் காமெண்டரி உங்கள் காதில் தேனாக வந்து விழும்.  அதுவும் சாஸ்த்ரி வீட்டில் கிரிக்கெட் ரசிகர்கள் கல்லெறிந்த செய்தி தெரிந்தவர்களுக்கு மட்டும். எப்படித்தான் பழசெல்லாம் மறந்துட்டுப் பேசுறாங்களோ?
  • ஸ்ரீஷாந்த் பஜ்ஜு விடம் அடி வாங்கிய வீரன். பல சமயங்களில் அழுது அழுதே கொஞ்சம் அனுதாபம் சம்பாரித்துக் கொண்ட இந்தப் பையன் கொஞ்சம் அழுகுணி ஆட்டம் ஆடி சம்பாரிக்கலாம் என்று பார்த்திருக்கிறார். இந்தக் குற்றத்துக்கான தண்டனைதான் ஹர்பஜன் அவனை அறைந்தது. இதற்கு மேல் அவருக்கு எதுவும் தண்டனை கிடைக்காது. மிஞ்சிப் போனால் விளையாடத் தடை சொல்வார்கள். அதனாலென்ன இருக்கவே இருக்கிறது காங்கிரஸ் --- அதில் சேர்ந்து ஒரு எம். பி. ஆகிவிட மாட்டாரா என்ன?
  • விஜய்  மால்யா எம். பி. தனது கிங் பிஷேர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு அதன் பணியாளர்களுக்கு இன்னும் சம்பளப் பாக்கி செலுத்தவில்லை. ... ஏறக்குறைய 6,500 கோடி கடன்களை வசூல் செய்யும் வழி தெரியாமல் இருக்கின்றன வங்கிகள். மல்யாவுக்கு சொத்து மதிப்பி ஏறக்குறைய 40, 000 கோடிகளுக்கு மேல் என்று சொல்கிறார்கள். இதெல்லாம் தெரிந்தும், அரசும் ஒன்னும் செய்ய முடியவில்லை, வங்கிகளும் ஒன்றும் செய்ய முடியவில்லை, ஊழியர்களும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் அவரும் அவரது புதல்வரும் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள் - ஐ. பி. எல்லில். 
  • வங்கிகள் என்றவுடன் நினைவுக்கு வருவது எஸ் பேங்க் மாக்சிமம். அவர்கள் ஒரு மேட்சுக்கு ஒரு லட்சம் என்று ஏறக்குறைய 77 போட்டிகள்.... எப்படி ஒரு வங்கிக்கு இவ்வளவு பணம் இந்த ஒரு மாத விளம்பரத்தில் மட்டும் செலவு செய்ய முடியும். பெப்சி ... வோடபோன் ... ஸ்டார் ப்ளஸ் ... விளம்பரத்திற்கு மட்டும் இவ்வளவு பணம் என்றால், அவர்களின் இலாபம் எவ்வளவு.... வி ஆர் ஸ்லேவ்ஸ் ஆப் தி அட்வேர்டைஸ்மென்ட்ஸ்... 
  • நடு கிரவுண்டில் சண்டையிட்டுக் கொண்ட கம்பீரும் கோலியும் அடுத்த கட்டத்திற்கு தேர்வாகவில்லை என்பது சரியாகவே தோன்றியது. ஒருவேளை கொல்கொத்தா வெற்றி பெற்றால் பெங்களூரு அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்று நினைத்தாரோ கம்பீர். சன்ரைசர்ஸ் வெற்றி பெற்று கோலிக்கு கிலி உண்டாக்கி விட்டார்கள். வருடத்திற்கு என்பது கோடிகள்  என்று ஐந்து வருடத்திற்கு ஹைதராபாத்தை குத்தகைக்கு எடுத்திருக்கிறது சண் டி. வி. இறுதி மாட்சில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கும் மும்பைக்கும் இடையே இருக்கலாம்... 
  • லலித் மோடி லலித் மோடி என்று  ஒருவர் பிக்சிங் செய்து இந்த ஐ. பி. எல்லை மிகவும் பிரபலப் படுத்தியவர்.... அதனால் ஆயிரக்கணக்கான கோடிகள் லவுட்டியவர்... இன்னமும் அவருக்கே என்ன ஆச்சுன்னு தெரியலை... ஆனா ஏன் ஸ்ரீ சாந்த் கேசுல டெல்லி போலிஸ் இவ்வளவு அக்கறை காட்டுதுன்னு தெரியலை... வேற ஏதாவது ரேப் கேசு வந்து அதை மறைக்க இதைச் செய்யுறாங்களோ அல்லது இறுதிப் போட்டியில் நடக்க இருக்கும் பிக்சிங்கை மறைக்க முன்பே நடவடிக்கை என்ற பெயரில் ரசிகர்களை இன்னமும் உண்மையிலேயே உண்மையான மாட்ச்   நடக்கும் என்று நம்ப வைப்பதற்கா? 

12.5.13

உண்மையான தேச பக்தர்கள் - கைதிகளே

தேச பக்தி கைதிகள்

  • பாகிஸ்தானிய சிறையில் கடந்த வாரம் சக கைதிகளால் தாக்கப்பட்ட சரப்ஜித்சிங் மரணமடைந்தார். எதனால் பாகிஸ்தானிய கைதிகள் அவரை தாக்கினார்கள்? அரசின் தூண்டுதலாக இருக்கலாம் அல்லது தற்செயலாக  நடந்த ஒரு நிகழ்வாக கூட இருக்கலாம்.
  • இந்த செய்தி வந்த உடனேயே ஜம்மு சிறையில் இருந்த பாகிஸ்தானிய சனாவுல்லா இந்தியக் கைதிகளால் தாக்கப் பட்டிருக்கிறார். இது நிச்சயமாக அரசின் தூண்டுதலின்றி  நிகழ வாய்ப்பே இல்லை. ஆனால் இதை யாராலும் நிரூபிக்க முடியாது. ஆனால் எதனால் இந்தத் தாக்குதல்கள் இங்கே நடந்தது? இந்திய தேசத்தின் மீது மிகுந்த பற்று கொண்ட பல பாரத மகன்கள் தவறாக தீர்ப்பளிக்கப் பட்டு சிறையில் இருக்கிறார்கள் போல தெரிகிறது. பாகிஸ்தான் சிறையில் கொல்லப்பட்ட ஒரு கைதிக்காக ராணுவ வீரர்கள் கூட கொதித்தெழாத நிலையில் இந்த சிறைமகன்கள்  உடனே பழி வாங்கினால் இவர்களைக் காட்டிலும் தேச பக்தி மிகுந்தவர்கள் யாராவது உண்டு என்று சொல்ல முடியுமா? இவர்களுக்குத்தான் நாட்டின்  குடிமகன்களுக்கான விருதைக் கொடுக்க வேண்டுமென நமது குடியரசுத் தலைவரை வேண்டி விருபிக் கேட்டுக் கொள்கிறேன்.
  • பாகிஸ்தான் சிறையில் கொல்லப்பட்ட இந்தியப் பிரஜைக்கு ஆதரவாக பாகிஸ்தானை வம்புக்கு இழுத்த அனைத்து அரசியல்வாதிகளும், இந்தியப் பிரதமரும் பாகிஸ்தானிய கைதி இந்தியச் சிறையில் இறந்ததற்காக "இந்தியா ஒரு காட்டு மிராண்டி அரசு" என்று சொல்ல  முன்வருவார்களா வர முடியுமா? ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு என்று சொல்லுவார்கள். 
வடக்கே ஒருவிதமான பக்தி என்றால் தெற்கே வேறு விதமான பக்தி நடக்கிறது.  வடக்கே சிறைக்குள் கலவரம் என்றால் இங்கே சிறை வைத்ததால் வெளியே கலவரம்.  அப்பா தியாகிகள் உள்ளே இருக்கிறார்கள் கலவரக் காரர்கள் வெளியே இருக்கிறார்கள் என்று அர்த்தமா? தெரியவில்லை.

பா.ம.வை ஒழிக்க சதி என்று அதன் முக்கிய நிறுவனர் சொல்லுகிறார். ஆளுநரிடம் மனு கொடுக்கிறார்.
தமிழக மக்களை ஒழிக்க சதி செய்கிறார் அவர் என்று நாம் யாரிடம் மனு கொடுப்பது?

எனக்கு ஒரு பட்டுதான் நினைவுக்கு வருகிறது...
தாஸ் தாஸ் சின்னப்பா தாஸ் தாஸ் ... பள்ளிக் கூடம் போகமலே பாடங்களை .... அவர் கூட மனசு மாறினதா பாரதிராஜா சொல்றாரு... பள்ளிக்கூடம் போய்  பாடம் படிச்சு மருத்துவராகி.... ரத்தம் எல்லாம் ஒண்ணுன்னு பார்த்தவங்க இன்னும் சாதி சாதின்னு பேசுறாகளே இதென்ன படிச்சு வாங்கின பட்டமா...

இதுக்காக சிறைச்சாலை போற மாதிரி செயல்கள் செய்து, பேசி... அந்தப் பக்தியை நிலை நாட்டுறாக ... அப்படியாவது தினமும் அவர்களைப் பற்றி நாம் எல்லாரும் பேசுறோம்லையா ...

4.5.13

"முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்?" - அரசு மரியாதை செய்யுங்கள்


  • "முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்?" என்று ஒவ்வொருவரும் கிளம்பினால் தனது சரிந்த செல்வாக்கை மீண்டும் உயர்த்திக் கொள்ளலாம் என்றே நினைக்கிறார்கள். அப்படியே கைது செய்யப்பட்டால் காந்தியின் நிலைக்கு உயர்ந்து விடலாம் அல்லது ஹிட்லைரைப் போலவாவது இருந்து விடலாம் என்றெல்லாம் கனவு காணுகிறார்கள் - பாவம் அப்துல்கலாம் ... எதெற்கெடுத்தாலும் இந்தக் கனவு காணுங்கள் படாத பாடு படுகிறது!

  • எண்பது மற்றும் தொன்னூறுகளில் கொஞ்சம் கொஞ்சமாய் எல்லாரது கவனத்தையும் தங்களது பக்கமாய் திருப்பினார்கள்... பசுமை தரும் மரங்களை வெட்டி சாலையில் இட்டு தங்களது செல்வாக்கை விரித்த போது, கொஞ்சம் வாக்கு வங்கிகளைத் தன பக்கம் கொணர்ந்து, அதை தமிழக அரசியலில் ஒரு மிகப் பெரிய சக்தியாக மாற்றிவிட முடியும் என்றும் அதனால் அது திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக இருக்குமோ என்று தோன்றியது. வெறும் சாதியை முன் வைத்து அனைவரது கவனத்தையும் தங்கள் பக்கம் நிச்சயமாய்த் திருப்பினார்கள்.
  • சாதியைத் தாண்டி வந்தது போலக் காண்பித்தது நல்ல மாற்றமாகவே தெரிந்தது. அந்த சமயங்களில் அவர்கள் நடத்திய தமிழர் வாழ்வுரிமை மாநாடு என்பதும், அதைத் தொடர்ந்து வெளிவந்த புத்தகங்களும் உண்மையிலேயே தமிழரின் பெருமையை வெளிக் கொண்டுவந்தன என்பதும், சாதியத்தைக் கடந்து ஒரு மாற்று அரசியலை முன்வைக்கிற ஒரு சக்தியா அது வளர்வதையும் பார்த்து சிறு மகிழ்ச்சி அடைந்ததென்னவோ உண்மைதான்.

  • ஆனால் அது கொள்கைகளின்றி தேர்தலுக்குத் தேர்தல் தாவியதைப் பார்த்து  வெறுப்பு வந்தாலும் சரி கட்சியை வளர்க்கிற வரை இது தேவைப்படும் யுத்தியாகக் கருதிக் கொள்வோம் என்று வெறுப்பை மறைத்து வைத்தேன். அதன் பிறகு அதைக் கண்டு கொள்ளவும் இல்லை வெறுப்பும் இல்லை.

  • யாருமே கண்டு கொள்ளப்படாத சக்தியாக இல்லை என்கிற போது  சாதிக் காரர்களை எல்லாம் ஒருங்கிணைக்கிற மேதாவியாக இருந்து கொள்ளாலாம் என்று ஒவ்வொரு மாவட்டமாய்ச் சென்று சாதியத்தை விதைக்கிற மனப் பான்மை - முப்பது வருடங்களுக்கு முன்பு அவர்கள் செய்த யுத்திகளை மீண்டும் கையில் எடுக்கிற வித்தை என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.
  • ஊர் ஊராய்ச் சென்று மாநாடு நடத்தி எல்லாருக்கும் எதிராய்ப் பேசுவார்கள், பாதகம் விளைவிப்பார்கள், பிரிவினையை ஆழப்படுத்துவார்கள், அப்போதெல்லாம் மனித நேயம், உரிமை பற்றிப் பேசாத ஐ.நா. வரை சென்று வந்த மனித நேய ஆர்வலர்கள் என்று சொல்பவர்கள் எல்லாம் ஒருவரைக் கைது செய்த பின் அராஜகம் அக்கிரமம் என்று சாதி புத்தியை வெளிக் கொண்டு வருகிறார்கள்.

  • சாதி அரசியல் என்பது சாக்கடை அரசியலே... அதைத் தவிர வேறொன்றும் சொல்லவதற்கில்லை. பேருந்தைக் கொளுத்துவது - மரத்தை வெட்டுவது - கல் விட்டு எறிவது - இவைகளாலெல்லாம் எதையும் மீட்டு விட முடியாது. 
************************
சரப்ஜித் சிங் - பாகிஸ்தானிய சிறையில் அடைக்கப்பட்ட இந்தியர். பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவர் எனக் கூறி பாகிஸ்தானிய சிறையில் அடைக்கப்பட்ட ஒருவரை -
                                                   தியாகி என்று சொல்கிறார்கள் - 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறார் - மூன்று நாள் அரசு விடுமுறை விடப்படுகிறது - ஒரு கோடி இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப் படுகிறது .... அரசியல்வாதிகள், அதிகாரிகள் பங்கேற்கிறார்கள் என பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம்.

1991 ஆம் ஆண்டு கைது செய்து சிறையிலடைக்கப்பட்டு 2013 வரை சிறையில் இருந்த ஒரு மனிதன் இறந்ததற்கு இந்திய அரசும், ஊடகங்களும் நடத்தும் தேசிய உணர்வும், முதல் பக்க செய்திகளும், எனக்கு ஒரு பக்கம் மிகுந்த வேதனையைத்தான் தருவிக்கிறது. சரப்ஜித் சிங் சிறையில் கொடூரமாய்த் தாக்கப்பட்டது வருத்தம்தான். இந்தச் சமயத்தில் அவரைப் பற்றி எழுதுவது வேதனையாக இருந்தாலும் வேறு வழியில்லை.   

இந்திய அரசின் உளவாளி  என்று அவரை பாகிஸ்தான் குற்றம் சாட்டியிருக்கிறது. இந்தியா இல்லை என்றும், அவரது குடும்பத்தினர் குடிமயக்கத்தில் பாகிஸ்தானுக்குள்ளே சென்றுவிட்டார் என்றும் சொல்லுகிறார்கள். இந்தியாவின் உளவாளி அவர் இல்லையென்றால் "அவர் இந்தியாவின் வீர மைந்தர்" என்று இந்தியப் பிரதமர் ஏன் சொன்னார் என்று தெரியவில்லை. என்ன செய்து இந்தியாவின் வீரத்தைக் காண்பித்தார் என்றுதான் தெரியவில்லை.


இந்தியாவில் பாகிஸ்தானிய உளவாளிகள் செய்வது தவறென்றால் அங்கேயும் நமது உளவாளிகள் குழப்பம் விளைவிப்பது தவறுதான். சரி சிங் உளவாளி இல்லையென்றால் ஏன் அவர் வீர மைந்தர்? அநியாயமாக தண்டனை கொடுக்கப் பட்டிருக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகள் இந்தியா என்ன செய்து  கொண்டிருந்தது? {இரண்டு நாட்களாக சோனியா விட்டு முன்பு சீக்கியர்கள் நடத்தும் போராட்டம் இறந்த சிங்குக்கு அனவருக் கொடுக்கும் அனுதாபத்தின் முன்பு ஒன்றுமே இல்லாமல் போய் விட்டது - 3000 சிங்குகள் கொல்லப் பட்ட வழக்கில் இருந்து முன்னாள் காங்கிரஸ் எம்.பி சஜ்ஜன் சிங் விடுதலை செய்யப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெரிவித்து சீக்கியர்கள் நடத்துப் போராட்டம்}

தவறாய்க் கைது செய்யப் படுவது தடுக்கப் பட வேண்டும் என்றால், மற்ற நாடுகளில் இந்தியப் பிரஜைகள் இறப்பது இந்தியாவின் வீரம் என்றால், அடிக்கடி சுட்டுக் கொள்ளப்படும் தமிழக மீனவர்கள்தான் இந்தியாவின் வீர மைந்தர்கள்.

ஆனால் இலங்கையினால் கொல்லப்படும் தமிழர்களை யாரும் வீர இந்தியர் என்று சொல்வதில்லையே  ஏன்? {இந்தியர்கள் என்றே சொல்லுவதில்லை அப்புறம் என்ன வீர இந்தியர்}

குண்டுகள் முழங்க அரசு அடக்கம் செய்திருக்கிறார்களா?

ஊடகங்கள் முதல் பக்க செய்திகளையாவது வெளியிட்டு இருக்கின்றனவா?  இவர்கள் அப்பாவிகள் இல்லையா? இலங்கை காட்டுமிராண்டி அரசு இல்லையா? 

அநியாயமாய்ச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை {ஏறக்குறைய முப்பது மீனவர்களை } விடுவிக்க வேண்டி தங்கச்சி மடத்தில் நடத்திய போராட்டம் பற்றி சிங்கின் மரணம் குறித்து முதல் பக்கத்தில் வெளியிட்ட பத்திரிக்கை கடைசிப்பக்கத்தில் கூட இந்தச் செய்தியை வெளியிட வில்லை.  நல்ல ஊடகங்கள்.

எந்த அரசும் இதைக்  கண்டுகொள்வதும் இல்லை. ஒருவேளை இறப்பது சிங் என்றால் தான் கண்டு கொள்வார்களோ? அல்லது சுடுவது பாகிஸ்தான் என்றால்தான் இறப்பவர்கள் வீரர்கள் ஆவார்களோ என்னவோ... நல்ல அரசுகள்.

குடிமயக்கத்தில் போனால் வீரர்கள் --- தொழிலுக்குப் போனால் திமிர் பிடித்தவர்கள்... பாகிஸ்தான் செய்தால் கொடூரம் -- இலங்கை செய்தால் பாதுகாப்புக் காரணங்கள்...

ஆக மொத்தம் ---- சாதி அரசியலுக்கும் மத அரசியலுக்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை... பாதிக்கப்படுவதும் பிரிக்கப் படுவதும் தமிழர்கள்தான்.