தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30.5.14

உள்ளே போ! ... காந்தி உள்ளே போ

எவ்வளவோ முறை மெதுவா... ..அன்பா..  நீங்க செய்யுறது தப்பு - இது சரியில்லைன்னு எத்தனயோ முறை சொல்லிப் பாத்தாச்சு - கதர் யாரும் கேக்கலை.... அதுதான் உள்ளே போ... உள்ளே போன்னு ரொம்ப சத்தமா கத்தி அனுப்பி வச்சுட்டாங்க. ரஜினி தன்  தம்பியைப் பார்த்து சொல்றமாதிரி...



இந்த மக்கள் குடுத்த அடியைப் பாக்கிறப்ப இது சாதாரன அடி மாதிரி தெரியலை..."நாடி நரம்பு, ரத்தம் சதை எல்லாத்துலயும் 'வெறுப்பு' வெறி ஊறிப்போன ஒருத்தராலதான் இந்த மாதிரி அடிக்கமுடியும்" அப்படின்னு அரசியல் விமர்சகர்கள் எல்லாரும் சொல்லிக்கினு இருக்காங்க. ஆனா இப்படி அடிக்க முடியுமான்னு கதர்கள் எல்லாம்  உள்ள உக்காந்து யோசிச்சுக்குகிட்டு இருக்காங்க.... அதோடு சேர்ந்து கதறிக்கிட்டும் இருக்காங்க. சில பேரு ராகுல்தான் காரணமென்றும், சில பேர் சோனியான்னும், சில பேர் மன்மோகன் என்றும், இன்னும் சிலர் ஊழல் என்றும் மாற்றி மாற்றி குற்றம் சாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் நாம் இந்தப் பத்தாண்டு காலத்தில் ஒரு நல்ல ஆட்சியைத் தரவில்லையே என்று வருத்தம் கூட தெரிவிக்காத நிலையில்தான் இருக்கின்றனர். இதுதான் இன்னும் பத்தாண்டுகளுக்கு இவர்கள் ஆட்சிக்கு வரவே தகுதியில்லாதவர்கள் என்பதை காட்டுகிறது.
...

இந்தச் சூழலில்தான், தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய பிரதமர் மோடி அவர்களின் இந்த புர்ஜ் காலீபா வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் காங்கிரஸ் என்று நம்மைப் போன்ற சிலரால் கணிக்க முடிகிறது. யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதைக் காட்டிலும், யார் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதில் எல்லாரும் - மிகச் சரியாகவே  இருந்திருக்கிறார்கள்.   ஆக மூன்று முக்கியக் காரணங்கள் தேடினால் அதில் எல்லாம் காங்கிரஸ்காரர்களே காரணம் என்பது எல்லாரும் அறிந்திருப்பார்கள்.
....
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மகத்தான  வெற்றி பெற காரணம் காங்கிரஸ் என்றாலும் அவருக்குண்டான பங்கை அவ்வளவு குறைத்தும் மதிப்பிட முடியாது. இந்தியத் தேர்தல்களின் தேதி  முன்னரே என்ன செய்ய வேண்டும் என்பதை அவரும், மீடியாக்களும் முன்னெடுத்து விட்டனர்.குஜராத் முன்னோடி மாநிலம் என்று எல்லாரும் போட்டி போட்டு எழுத ஆரம்பித்த போதே இந்த முடிவுகள் முன்கூட்டியே தெரிந்து விட்டது. ஆனால் குஜராத்தைக் காட்டிலும் மேலோங்கிய மாநிலங்கள் இருந்தன என்றாலும், அவைகளை விட  மிகச்சிறந்த மாநிலமாக, ஒரு மாடலாக காண்பிக்கப்பட்டது.  உண்மையிலேயே அதுதான் மாடலா என்றால் அதற்கான பதில் எப்படி இருக்கும் என்பது தெரியாது. இந்தத் தருணத்தில் ஜான் ஸ்வின்டன் பத்திரிகை சுதந்திரம் பற்றி 1880 ; ல் சொன்ன சிறு விஷயத்தை பதிவு செய்வது அவசியம். -

"The business of the journalists is to destroy the truth, to lie outright, to pervert, to vilify, to fawn at the feet of mammon, and to sell his country and his race for his daily bread. You know it and I know it, and what folly is this toasting an independent press?
பணம் வாங்கிக் கொண்டு தேர்தல் கணிப்புகள் வெளியிட்ட அனைத்து பத்திரிகை நண்பர்களும் இதை நோக்குவார்களாக.... அப்படி வெளிவந்த செய்தியை நீர்த்துப் போகச் செய்த நண்பர்களும்  கவனிப்பார்களாக.

இந்தச் சூழலில் ஒட்டு மொத்தமாக ஓட்டு வங்கிகள் தங்களது ஓட்டுக்களை விரயம் செய்துவிட விருப்பம் இல்லாமல் வெற்றி பெரும் கூட்டணிக்கே வாக்குகளை வாரி வழங்கியிருக்கிறார்கள். அவர்களது வாக்குகளைப் பெரும் தகுதியும், திறமையும், தனக்கு இருக்கிறது என்று தனது அசராத பிரச்சாரத்தால்  மோடி மக்களது நம்பிக்கையைப் பெற்றார். இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, மோடி  இந்த வெற்றியை உறுதி செய்து கொண்டார். ஆனால் இந்த அளவுக்கு வெற்றி இருக்கும் என்று பலர் எதிர் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை.

என்னதான் சுற்றுப் பயணம் செய்தாலும், பேசுவதற்கான கருவை வழங்கியது காங்கிரஸ் தானே. டீ விற்பவர் என்கிற வார்த்தை இவ்வளவு பிரபலம் ஆகும் என்று காங்கிரஸ்காரர்கள் எதிர்பார்த்திருக்க வில்லை. ஒரு முறை மோடி சொன்னதைப் போல - ராகுல் காந்தி மிகச் சிறந்த காமெடியன். ஸ்ட்ரெஸ் குறைய ராகுலின் பேச்சைக் கேட்க வேண்டும் என்றார்... இந்தத் தேர்தலில் காமெடியன்கள் தோற்றுப் போயிருக்கிறார்கள். துரைமுருகன் சொன்னார் - முன்பெல்லாம் சிரிப்பதற்கு வடிவேலுவின் ஜோக்கைக் கேட்பேன், இப்போதெல்லாம் விஜயகாந்த் அவர்களின் பிரச்சாரத்தைக் கேட்கிறேன்.

....
மோடி சர்க்கார் எப்படி செயல் படுகிறது என்பதைப் பொருத்துதான் பார்க்க்க வேண்டும். நடக்கிற நிகழ்வுகளை இதுவரை கவனிக்கிற போது முந்தய அரசின் கொள்கைகள் எதையும் இவர்கள் மாற்றுவது போலத் தெரியவில்லை. அதே தாராள மயமாக்கல் கொள்கைகள் - ரயில் துறை உட்பட 49 சதவிகிதம் தனியார்களுக்கு எந்தவித தொல்லைகளும் இல்லாமல் சேர் பெற வசதி (யோசிக்கிறார்கள்) - மதாமாதம் பெட்ரோல் விலை உயர்வு...  இலங்கை அரசோடு உள்ள உறவு என்று மிகப் பெரிய வேறுபாடு இல்லை என்றே தோன்றுகிறது.தேர்தல் செலவுகளுக்கு வாரி வழங்கிய வள்ளல்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும்...

இருந்தாலும் இப்போது பொறுப்பேற்றிருக்கிற அரசு சுற்றியுள்ள அரசுகளோடு நல்ல உறவை மேம்படுத்த செய்த முயற்சி பாராட்டப்பட வேண்டியதுதான். பாகிஸ்தான் கிரிக்கெட் டீம் வந்தால் வெறி கொள்ளும் ஆர். எஸ். எஸ். பாகிஸ்தான் பிரதமர் வந்த போது அமைதி காத்தது ஏனோ? எதுவாக இருந்து விட்டுப் போகட்டும். பொறுப்பேற்றிருக்கும் அரசை விரைவில் குறை கூறுவது சரியல்ல என்றே படுகிறது. வாழ்த்துக்கள்.

தனிப் பெரும்பான்மை - அதிக அதிகாரம் தனியானது அல்ல. அதோடு மிக அதிகமான பொறுப்பும் சேர்ந்தே வரும். தனித்து பார்க்க இயலாது.

ஹானரபில் பிரதம மந்திரி அவர்களே!



        --------------------------------------------------------------------------------------------


24.2.14

தமிழர்கள் எமோஷனல் பக்கிகளா ?

குற்றச்சாட்டு

"தமிழர்கள் இமோஷனல் பக்கிகள்  என்றும், மரணதண்டனை ரத்து செய்யப் பட்டதற்கு தமிழர்கள் ஆராயாமல் ஆர்ப்பரிக்கிறார்கள் - தீவிரவாதிகளை எல்லாம் விடுவிக்கச் சொல்லுகிறார்கள். இது அடுக்குமா? ரோட்டில் தீவிரவாதிகள் எல்லாம் நடமாட ஆரம்பித்து விட்டால் நாடு நல்ல இருக்குமா? காப்பித்தண்ணி குடிச்சுட்டு, இட்லி சாம்பார் சாப்டுட்டு, கைலியை கட்டிக்கிட்டு, பட்டா பட்டி போட்டுக்குட்டு, எந்த அறிவும் இல்லாமல் முக நூலில் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள்" என்கிற ரீதியில்,

தமிழர்களைப் பற்றிய ஒரு தவறான, பிற்போக்குத்தனமான, இமொஷனல் நண்பர்கள், வலைப்பதிவில், நாளிதழில், ஆங்கில-இந்தி தொலைக் காட்சிகளில் கத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஒத்தூதுவதற்கென சில காங்கிரஸ்காரர்கள், அவர்களுக்கு எதிரானவர்கள் என பல தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களும் அடக்கம். இதுல மட்டும் இவங்கெல்லாம் ஒன்னு சேர்ந்துவிடுகிறார்கள். 

காரணம் குழப்பம் ​​
எல்லாரும் பல விஷயங்களைப் போட்டு குழப்பிக் கொண்டு இருக்கிறார்கள். இதைப் பற்றி நாம் ஏறக்குறைய மூன்று வருடங்களுக்கு முன்னதாகவே எழுதியிருக்கிறோம். மரண தண்டனைக்கு எதிரான போராட்டம் என்கிற ரீதியில், இந்தத் தீர்ப்பிற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் உண்டு. அவர்கள் இமொஷனல் பக்கிகள் அல்ல. அதற்குப் பெயர் மனித உரிமைகளை வலியுறுத்துவது. ஒரு மனித உயிரைப் பறிக்கிற உரிமை அரசிற்கோ சட்டத்திற்கோ கிடையாது என்பதுதான். சரி ஒருவன் பலரைக் கொன்றிருந்தால், அவனை அரசு கொல்லக்கூடாதா என்கிற கேள்விக்கு அப்போது அரசும் பயங்கரவாதியாகி விடுகிறது என்று நினைப்பவர்கள் அவர்கள். எனவே தண்டனையே வேண்டாம் என்று சொல்லுபவர்கள் அல்ல அவர்கள்.

இன்னும் சிலர் இந்த மூவர் அல்லது அதில் ஒருவர் மரண தண்டனை கொடுக்கப் படும் அளவிற்கு குற்றம் செய்யவில்லை / அல்லது குற்றமே செய்யவில்லை என்கிற ரீதியில் - நிரபராதிகளுக்கு தண்டனை கொடுப்பதே தவறு - அதிலும் பொய் சாட்சியங்களை வைத்து தண்டனை தருவது தவறு / அந்த விதத்தில் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று சொல்லுபவர்களும் உண்டு. இந்த இரண்டு வகைக் காரர்களும் மரண தண்டனை நிறுத்தி வைக்கப் பட்டது சரி என்று சொல்லும் போது இரண்டையும் ஒன்றாக நினைப்பது, அவர்களின் குற்றமே தவிர நமதல்ல.

ஜெயின் கமிஷன் அறிக்கையும், அதைத்தொடர்ந்து அமைக்கப் பட்ட கமிஷங்களும் இன்னும் முடிவே தெரிவிக்காத நிலையில், ராஜீவ் காந்தியின் கொலையில் பலருக்குத் தொடர்பு உண்டு என்று சொல்லப்பட்டதை சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கும் போது - இது ஒரு சோடிக்கப்பட்ட வழக்கு என்று இத்தனை ஆண்டுகளாகக் கத்திக் கொண்டிருந்தவர்கள் - தாமதமானதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி அளித்த தீர்ப்பை வரவேற்கிறார்கள்.

இதில் இமொஷனால் பக்கிகள் என்று ஒட்டு மொத்தமாக தமிழர்களைக் குற்றம் சாட்டும், இந்திக்காரர்களையும் அவர்களுக்கு வக்காளத்து வாங்கும், தமிழ் நாட்டுக்காரர்களையும் என்னவென்று சொல்லுவது. ஆனால், தொலைக் காட்சி அவர்கள் கையில் இருக்கிறது.  அதற்கு ஒத்தூதுவதற்கென்று எல்லாரும் சேர்ந்து கொள்கிறார்கள். 

கண்டிக்கப் படவேண்டியது 
மீடியாக்கள் எல்லாம் சேர்ந்து சில தவறான கருத்துக்களை முன்னெடுப்பதிலேயே குறியாக இருக்கின்றன. இது மிகத்தவறான அவதூறுகளை தென்னக மக்களை நோக்கி வீசுகிற அவர்களின் அநாகரிக போக்கு கண்டிக்கப்பட வேண்டியது. தினம் தினம் தமிழர்கள் கடலில் செத்துக் கொண்டிருக்கும் போது, அதைக் கண்டுகொள்ளாத மீடியா, ஒரு மோசடி தேவயானிக்காக வரிந்து கட்டிய மீடியா, அணுஉலைகளின் ஆபத்திற்கெதிராக வருடக் கணக்கில் போராடுபவர்களை கண்டு கொள்ளாத மீடியா - இப்போது விவாதங்களையும், நேர்காணல்களையும் சர்வேக்களையும் எடுத்து கொண்டிருக்கிறது. இது வெறும் தி.ஆர்.பி ரேட்டிங்கோடு முடிந்து போகிற ஒரு விஷயமல்ல. அதைத்தாண்டி, தமிழர்களை, தீவிரவாதிகளாக, ஒழுக்கமற்றவர்களாக, சித்தரிக்கும் போக்கு.

யார் பண்பாட்டோடு உடையவர்கள், யார், கலாச்சாரமற்றவர்கள்  என்பதை அறிந்து கொள்ள, ஒரு முறை சென்னையிலிருந்து டில்லிக்கு ரயிலில் சென்று வந்தால் புரியும். ரயில்வேத்துறை லாபம் ஈட்டுவது தென்னகத்தில், ஆனால், விரிவாக்கப் பணிகள், எல்லாம் வடக்கே.
அதேபோல ஆபத்து தரும் அணு உலைகள் தென் தமிழகத்தில் - தினம் செத்து செத்து பிழைக்கும் மீனவர்கள் தமிழகத்தில் - இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், இந்தியாவைத் தூக்கி நிறுத்துவது வடவர்கள் போலவும், அவர்கள் தான் சாத்வீக வாதிகள் போலவும் சித்தரிப்பதும், தென்னகத்து மக்களை எமோஷனல் பாக்கிகள் என்பதும் வேதனை தரும் நிகழ்வு.

அடுத்த குழப்பம் 
இது மரணதண்டனை ரத்து என்கிற விதத்தோடு முடிந்திருந்தால் கூட ஒன்றும் இல்லாமல் இருந்திருக்கும். ஆனால், விடுதலை என்பதுதான் பிரச்சனை என்று சொல்லலாம்.

2008 - டில் கருணாநிதி அவர்களை விடுவிக்க இருக்கிறார் இது பயங்கரவாதம் என்று கடும் கண்டனம் தெரிவித்த அம்மையார் மூன்று நாட்களுக்குள், பதில் வராவிட்டால் விடுதலை செய்வோம் என்று சொல்லியது கேலிக் கூறியதுதான். அவருக்கு இந்த விளைவுகள் எல்லாம் தெரியாமல் இல்லை. சட்ட நுணுக்கங்கள் அறிந்திராமல் இருப்பதற்கும் வாய்ப்புகள் இல்லை. 

முன்னாள் முதல்வர் கருணாநிதி இவருக்குப் பயந்துதான் கருணை மனுக்களில் கூட இந்த மூவர் பெயரையும் சேர்க்காமல் இருந்தார். இன்று இதுவே கருணாநிதிக்கு  எமனாக வந்து நிற்கிறது. மிகச் சிறப்பாக தீர்மானம் நிறைவேற்றும் நமது சட்டசபை இந்தத் தீர்மானத்தின் வழியாக இந்த விவாதங்கள் முன்னெடுக்கப் பட்டிருக்கிறது.

விஷயம் என்னவெனில், இந்த மூன்று விஷயங்களையும் போட்டு குழப்புவதுதான். இதில் மறந்து போனதெல்லாம் - ஏன் இத்தனை வருடங்களாக என் ராஜீவ் கொலை வழக்கை முடிக்காமல் இருந்தார்கள், ஜெயின் கமிசன் அதைத்தொடர்ந்த கமிஷன்கள் எவற்றையும் ஏன்  சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. 

இன்னும் ஒன்றையும் புரிந்து கொள்ள வேண்டும் - நீதி மன்றங்களில் சாட்சியங்கள், வாதம் இவைகள் இரண்டும்தான் முக்கியம். உண்மையைப் பற்றியெல்லாம் யார் கவலைப் பட்டார்கள். நீதி மன்றங்களில் மட்டுமல்ல மீடியாக்களும்தான்...

நீதிமன்ற அவமதிப்பு அமைச்சர் செய்யலாமா?

நம் புதுச்சேரி ? அமைச்சர் வழக்கம் போல இந்தத் தீர்ப்பை நிதி மன்றம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், ஆதாரங்களின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார். யாராவது அவர் மீது வழக்கு தொடுத்தால் நலமாயிருக்கும்.

அமேரிக்கா செய்யுமா?

ஆங்கில சானல்களில் ஆ ஊன்னா அமேரிக்கா -- ஆப்ரிக்கா ன்னு பேசுறாங்க... ஜான் எப் கென்னெடியைக் கொன்றவருக்கு நாப்பது ஆண்டுகளுக்குப் பின்பும் பரோல் கிடையாது... இது தெரியுமா - ன்னு கேக்குறாங்க ---

எல்லாத்துக்கும் அமெரிக்காவைப் பாத்தா நல்ல இருக்கும். அங்கேயும் இதே பிரச்சனைதான். இது யார் பிளான் பண்ணினான்னு தெரியாம இருக்கவே பல கொலைகள் நடந்ததுங்கிறது வேற விஷயம். அங்கே ஊழல் அரசியல்வாதிகள் இங்க உள்ளது போல ஊர்க்கனக்குல இல்லையே.. அதைப் பத்தி பேசுவோமா? அங்க நீதித்துறை செயல்படும் விதம் சரின்னா -- தேவயாணி கேசுல என்னத்துக்கு பதறியடிச்சு இது தப்புன்னு கொட்டு போட்டுகிட்டு பேசுனீங்க.... ஒரு கேசுல அவங்க நல்லவங்க இன்னொரு கேசுல கேட்டவுங்களா...
அமெரிக்காவையும் ஆப்ப்ரிக்காவையும் விட்டுட்டு டெல்லிக்கு வாங்க. பாலியல் வழக்கில் தீர்ப்பு வந்த பிறகுதான் வரிசையா பாலியல் வன்முறைகள் --- தண்டனை மட்டுமே குடுக்குறதை விட்டுட்டு, என்ன செய்தால் குற்றங்கள் குறையும்னு மைக் தூக்கிப் பேசுங்க...

உண்மைக்குப் புறம்பாய் பேசலாமா?

காங்கிரசின் முக்கியத் தலைவரும், ராஜீவ் காந்தியின் மகனுமாகிய ராகுல் காந்தி, நாட்டின் பிரதம மந்திரியைக் கொன்றவர்களுக்கே  --- என்ற கேள்வியின் மூலம், மக்களை எமோஷனல் வழியில் தன்னைக் நோக்கித் திருப்பப் பார்க்கிறார். அப்போது ஆட்சியில் இல்லாத அவர் தேர்தலை முன்னிறுத்தியே பிரச்சாரம் செய்ய வந்தார் என்றும், உண்மையைச் சொல்லப் போனால், அவரது கொலைக்குப் பிறகே காங்கிரஸ் நிறைய இடங்களைப் பிடித்தது என்பதும் வரலாறு. தந்தையை இழந்த ஒருவருக்கு அந்த இழப்பு ஈடு செய்ய முடியாதுதான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஒரு கட்சியின் அடுத்த பிரதமர் என்று பேசப் படுகிறவர், கொஞ்சம் உண்மையாகவும் இருப்பது நல்லது. ஒருவர் பிரதமராக இருக்கும் போது கொள்ளப் பட்டால், அவர் சொன்னது உண்மையாக இருக்கும். இல்லையெனில், 'எமோஷனல்' என்று தான் சொல்லவேண்டும்.

அவர்கள் எமொஷனலாக இருக்கலாம் அவர்கள் அரசியல்வாதிகள்.
அவர்கள் எமோஷனலாக இறக்கலாம், ஏனெனில் அவர்கள் இந்தி மீடியா...
அவர்கள் இருக்கலாம், ஏனெனில் ...
ஆனால் தமிழர்கள் இருக்காதீர்கள்!



1.2.14

இந்தியக் குடியரசும் அரசியம் அமைப்பும் - 1

65 ஆவது குடியரசு  தினத்தை இந்தியா சிறப்பாக கொண்டாடி முடித்து தேர்தலை எதிர்பார்த்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், குடியரசு பற்றியும் இந்தியாவின் அரசியல் பற்றியும் அலசுவது நல்லது  என படுகிறது.

பல சமயங்களில் ஜனநாயகத்திற்கும் குடியரசிற்கும் உள்ள வித்தியாசம் குழப்பம் விளைவிப்பதாகவே இருக்கிறது. இந்தியா ஜனநாயக நாடு மற்றும் குடியரசு நாடு. ஜன நாயகம் என்பது மக்கள் அல்லது ஜனங்கள்தான் நாட்டின் நாயகர்கள். தங்களைத் தாங்களே ஆள்வது என்பதுதான் ஜனநாயகத்தின் கரு.
ஆனால் எல்லா ஜனநாயகமும் உண்மையிலேயே எல்லா மக்களின் நலத்தையும் பூர்த்தி செய்யும் என்கிற எந்த உத்திரவாதமும் இல்லை. பிளேட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் கால கிரேக்க மக்களின் கலாச்சாரத்தில் கூட மக்களாட்சி தான் இருந்தது. ஆனால் எல்லா மக்களும் சமமாணவர்கள் என்கிற எண்ணம் அவர்களுக்கு இல்லை. அடிமைகள் ஒரு நாட்டின் ஆள்பவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமைகள் பெற்றவர்களாக இல்லை. ஆனால் இந்தியக் குடியரசு அப்படி இல்லை. நாட்டின் குடி மக்கள் எல்லாரும் சமமானவர்கள் என்கிற கருத்தாக்கத்தின் அடிப்படையில் இயங்குகிறது.

குடியரசு என்பது குடி மக்களின் அரசு என்கிற விதத்தில் ஜனநாயகத்தோடு தொடர்புடையதுதான். ஆனால், அதையும் தாண்டி குடி மக்கள் அனைவரும் எப்போதும், எக்காலத்திலும், யாராலும், எதனாலும், மறுக்கப் படாத இயற்கை உரிமைகளைக் கொண்டுள்ளார்கள் என்கிற தளத்தில் இருந்து, சட்டத்தையும், அரசியல் அமைப்பையும் அடிப்படையாகக் கொண்டு இயங்குவது குடியரசு.

ஹிட்லர் என்கிற மாபெரும் இன வெறித் தலைவன் ஜனநாயக முறைப்படித் தேர்ந்தெடுக்கப் பட்டவர்தான். ஆனால் அந்த ஆட்சியில் தனி மனித உரிமைகள் என்பது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு மட்டுமே சொந்தமானதாக அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு அந்த உரிமைகள் இல்லை என்பதாக கருதப் பட்டது. இந்தப் படிப்பினைக்குப் பிறகு, மனித உரிமைகள்   இனவெறிக் கொள்கைகளும் உலகில் எல்லா மக்களாலும் வெறுக்கப் பட்டது என்பதையும் நாம் அறிவோம்.

இந்திய சுதந்திரம் என்பது ஹிட்லருக்குப் பிறகு வந்தது. எனவே, இந்தியா வெறும் ஜனநாயக நாடாக மட்டுமில்லாமல் குடியரசாகவும் வேண்டும் என்கிற சிந்தனை நம் தலைவர்களுக்கு வரவே, அரசியல் அமைப்புச் சட்டம் எழுதப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியா அமைப்புச் சட்டத்தினால் ஆளப்படுகிற அரசு என்பதை நாம் அடிக்கடி நினைவு கூறக் கடமைப் பட்டிருக்கிறோம்.

வெறும் ஜனநாயக நாடு என்பது மெஜாரிட்டேரியன் அரசாகவும், பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை மட்டுமே நிறைவேற்றும் அரசாக மட்டுமே இருக்க முடியும். இதை ஒரு கற்பனை உதாரணத்தினால் புரிந்து கொள்ள முடியும். இந்தியாவில், ஓர் இந்து பாசிச அமைப்பு இது இந்துப் பெரும்பான்மை நாடு எனவே இங்கே இந்துக்கள் மட்டுமே இருக்க முடியும், பிறர் வெளியேற வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வர முடியும். அதனால், ஹிட்லர் போன்று சில முடிவுகளை எடுக்க முடியும். இன்றைய அரசியல் சூழ்நிலையில் மாற்றங்களை விரும்புகிற  ஒவ்வொருவரும், வேறு வழியின்றி இந்த முடிவுக்கு தள்ளப் படுவதற்கான  காரணங்கள் இருக்கின்றன. ஆனால் இத்தகைய காரணங்கள் இன்னும் பல சிக்கல்களுக்கு வழி வகுக்கும்.
இந்துத்துவ பெரும்பான்மை என்பது மட்டுமே ஆட்சி அமைக்க ஒரு கருவியாகப் பயன்படுத்தப் படும் போது, இன்னும் சிறிது காலத்திற்குப் பிறகு, இந்தி பேசும் மக்கள் பெரும்பான்மையாக இருப்பதனால், இந்தியாவின் எல்லா இந்துக்களும், இந்தி பேச வேண்டும் என்றோ அல்லது இந்தி பேசாத இந்துக்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று பெரும்பான்மை இந்துக்கள் முடிவுக்கு வரமுடியும்.  அதன் பிறகு, இந்துக்களுக்குள் சைவ வைணவ பிரிவு பெரும்பான்மை என்று வரிசையாக - பெரும்பான்மை என்பது எந்த விதமான வேறுபாடுகளையும் சகித்துக் கொள்ள முடியாத கொடூரமான பாசிசத்தில் முடியும் சாத்தியக் கூறுகளே இருக்கின்றன. இனவெறி என்பது எவ்வளவு கொடூரமான விடயம் என்பதைப் புரிந்து கொள்ள இது போதும்.

ஆனால், இது போன்ற பெரும்பான்மை எண்ணங்கள் உருவாக்கப்படுவது இமோஷன்ஸ் வழியாகத்தான். இன்று எல்லாரையும் மிகச் சுலபாமாக ட்ரிகர் பண்ணுவது மதம்தான். அதன் பிறகு மொழி. இது போன்ற அம்சங்கள் தவறு என்றெல்லாம் நான் வாதட வில்லை. இதில் எது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் எனக்கான கருத்து இருக்கிறது. ஆனால் இப்போதைக்கு, இந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு... மீண்டும் நமது விஷயத்துக்கு வருவோம்.

இதுபோன்ற இமோஷனல் சமாச்சாரங்களால் ஒரு தவறான அல்லது இனவெறி, பாசிசக் கொள்கையில் நாம் புதைந்து போகாமல் இருக்க, நம்மை நெறிப் படுத்த உதவுவன அரசியல் அமைப்பும் சட்டங்களும். அதனால்தான் நீதி மன்றங்கள் தனி மனித உரிமையை நிலை நாட்டும் ஒரு தன்னாட்சி [அரசியல் கட்சிகளின் கைப்பாவைகளாக இல்லாமல் (!)] நிறுவனங்களாக இருக்கின்றன.

ஆம் ஆத்மியின் சட்ட அமைச்சரின் இனவெறிக் கெதிராக எல்லாரும் வெகுண்டெழுவது நாம் இன்னமும் குடியரசு நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிற நம்பிக்கையைக் கொடுக்கிறது. அதே சமயம், இன்று இனவெறிக் கொள்கைக்கு எதிராக வெகுண்டெழும் பத்திரிக்கைகள் தமிழக மீனவர்களுக்கெதிரான சிங்கள இனவெறித் தாக்குதலுக்கு மவுனத்தை பதிலாகத் தருவது பத்திரிகைத் தூண் எப்படி தனது பங்கை ஆற்றுகிறது என்று கேட்க வைக்கிறது. 

பங்களாதேஷில் மற்றும் பாகிஸ்தானில் இந்துக்கள் பாதிக்கப் படுவதிற்கு எதிராக இந்தியாவில் பா.ஜ.க. அமைப்பு போராட்டங்கள் நடத்தியது ஒரு நாட்டில் பன்முகத்தன்மை என்பது எப்போதும் பாதுக்காகப்பட வேண்டும் என்கிற உண்மையை உணர்த்துகிறது. அது இந்தியாவிற்கும் பொருந்தும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவின் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் அரசியல்  அமைப்பையும்,சட்டங்களையும் ஒழுங்கு படுத்தும் அமைப்பாக அரசு இருக்க வேண்டும்.

தொடரும்.....


17.1.14

மோடி ஷண்டை (ஷிண்டே) - நியாயமான பேச்சு 1


  • ஷிண்டே அவர்கள் -  மாநில அரசுகள் சிறுபான்மை இளைஞர்கள் மீது போடப்பட்டிருக்கிற தவறான, பயங்கரவாத வழக்குகள் இடப்பட்டு, சிறையில் அனாவசியமாக வாடிக் கொண்டிருக்கும் நபர்களை மீட்பதற்கான ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று கடிதம் எழுதப் போவதாத் தெரிவிக்கிறார். 
    • காங்கிரஸ்காரர்கள் எல்லாம் என்ன குழப்பத்துல இருக்குறாங்கன்னே தெரியலை. ராகுல் திடீர்னு நாட்டில்  ஊழல் மலிந்து விட்டதுன்னு சொல்றாரு. மன்மோகன் சிங் பொருளாதாரம் வீக் ஆகிவிட்டதுன்னு சொல்றாரு. சிதம்பரம் விலைவாசி உயர்வுதான் நமக்கு கவலை தருதுன்னு பேசுறாரு. வேற நாட்டுக் காரன் இவர்கள் செய்திகளை எல்லாம் படித்தால் ஆட்சில இவர்கள் மிகச் சிறந்த எதிர்கட்சிக் காரர்கள் என்றுதான் நினைத்துக் கொள்வார்கள். 
    • ராஜீவ் காந்தி கொலயில் பொய்க் குற்றச் சாட்டு  மற்றும் தவறான வாக்கு மூலம் உருவாக்கி, இருபத்து மூன்று ஆண்டுகளாக உள்ளே இருக்கும் நிரபராதிகளை விடுவிக்க எந்த தூசியும் தட்டலை. இப்ப எழுதப் போறாராம் எழுத... 
    • பொய் வழக்கு போடுறது / அணு உலைக்கு எதிராப் போராட்டம் பண்ணினா அன்னியச் செலவாணிக் கணக்கை கையில எடுக்குறது, சி.பி.ஐ.யை ஏவிவிடுறது  இதெயெல்லாம் நீங்க நிறுத்துங்க.... நல்லாப் பேசுறீங்க. என்னமோ ஏதோ 
  • மோடி சார் அதுக்கு நல்லாப் பதில் சொல்லிருக்கிறார். நமது நீதி மன்றங்களைப் பற்றிய தவறான ஒரு கண்ணோட்டத்தைக் கொடுக்கும் என்றும், நமது நீதி மன்ற விவகாரங்களில் கால தாமதம் ஆவதை தடுக்க முடியாது என்றும் பேசியிருக்கிறார். 
    • நல்ல விஷயம்தான். குற்றவாளிகளின் மதத்தைப் பார்த்து தண்டனை தரப் படுவதில்லை மோடி சார். ஆனால் அதிகார துஷ் பிரயோகம் செய்து ஒரு குறிப்பிட்ட மதத்தவரை மட்டும் கைது செய்வதும், அவர்களை சிறைக்குள் பல வருடங்களாக அடைக்கப் படுவதையும் பற்றி பேசுவதற்கு உங்க பதில் இப்படி இருக்கக் கூடாது. மதத்தைப் பார்த்து தண்டனை கிடையாது... ஆனால் மதம் பார்த்து கைது செய்கிறீர்களே அது தவறில்லையா.
    • உங்க விஷயத்துல கைது இல்லாம, சிறை செல்லாம, வழக்கு நடந்தது. அதுனால உங்களுக்குப் பிரச்சனை இல்லை. ஆனால் ஒரு மதத்தைச் சார்ந்ததினால் குஜராத் சிறையில் அடைபட்டிருக்கும் அவர்களைப் பற்றி பேசுங்க. நல்லா இருக்கும். 
    • காங்கிரஸ் பேசுறது சரியில்லைதான். அதே மாதிரி நீங்க பேசுறதும்தான்.
  •  பின்னி -ன்னு ஒரு முன்னாள் காங்கிரஸ்காரரு, இந்நாள் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ, பதவி கிடைக்கலை என்பதனால் - கெஜ்ரிவால் ஒரு பொய்யர்ன்னும், அவருக்கு எதிரா போராட்டம் பன்னுவேன்னும்  சவால் விடுகிறார். ஆம் ஆத்மியை உடைக்க பல சாதிகள் நடக்கின்றன. நாம் பார்க்காத அரசியல் படங்களா?
  • சல்மான் குர்ஷித் - அடுத்த அறிவாளி - ஆம் ஆத்மி கட்சி அராஜகவாதிகளின் கூடாரம் அப்படின்னு அடிச்சு விடுறார். அராஜகவாதிகள்தான் அரசியலில் இருக்க முடியும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையில பேசுறமாதிரி தெரியுது. மஞ்சக் காமாளைக் காரனுக்கு பார்க்கிறது எல்லாம் மஞ்சள்தான்... காங்கிரசும் அராஜவாதிகலின் கூடம்தான்...
  • ஜே. பி . அகர்வால் ன்னு இன்னொரு காங்கிரஸ் காரர் - தேர்தல் சமயத்தில் பேசிய பிரச்சனைகளை தீர்க்க ஒன்றும் செய்ய வில்லை எனவே ஆம்-ஆத்மி பதவி விலக வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.  நீங்க தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் எதையும் பத்து வருஷமா இருந்து தீக்க வக்கில்லை. அல்லது பதவி விலக திராணி இல்லை. ஆனால் பேச்சு...
  • எது நியாமான பேச்சுன்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்க!

10.10.13

ராகுல் காந்தி

நீங்க
எப்போ வருவீங்க எப்புடி வருவீங்கன்னே சொல்ல முடியலை -
[ரஜினி ரசிகர்கள் அமைதி காக்கவும்]

திடீர்னு பிளாஸ்டிக் டப்பாவில மண் சுமந்திங்க எங்கள் தலைவரே,
உங்களை அப்படிப் பார்க்கிறப்ப அயர்ன் பண்ணின சட்டை கசங்காம ஆயிரம் பேரை அடிச்சுட்டு அசால்ட்டா நிக்கிற எங்க ஹீரோக்கள் மாதிரி
மண்ணு ஒட்டாம, கூடை வெயிட்டு கூட கூடிரக் கூடாதுன்னு சுமந்த உங்களைப் பாத்தா பெருமையா இருக்கு.

நான் கும்பகர்ணன் மாதிரிங்க... ஆனா அத ஏன் செஞ்சிங்க எதுக்கு செஞ்சீங்கன்னு விடை தெரியாமலே
பல நாள் தூக்கம் இல்லாமக் கிடக்கேன்.

உங்க சூட் கேசையே நீங்க தூக்க மாட்டிங்க -
நீங்க எப்படி???

சரி அத விடுங்க இன்னும் மூணு மாசத்துக்கு
என்னைத் தூங்க விடாம செய்யவே இன்னொரு செய்தியை சொன்னிங்க பாருங்க என்னால ஜீரணிக்கவே முடியலை.  .

கூட இருந்தபோதெல்லாம் ஒன்னும் சொல்லாம 
அமைதியின் அரசர் நம் பிரதமர் 
தொலை தூரம் சென்ற போது நீங்க சொன்னிங்க  பாருங்க -
குற்றவாளிகளைக் காப்பாற்றும் சட்டத்தை குப்பையில போடணும்னு 
ரொம்ப சந்தோசம் - 
நீங்க கூடை தூக்குறப்பவே இவங்களுக்கு தெரிஞ்சிருக்கணும்,
அந்தக் கூடைய அன்னைக்கு தூக்கிப் போட்டதுமாதிரி எல்லாத்தையும் தூக்கிப் போடுவீங்கன்னு...
என்ன செய்யுறது உங்க அளவுக்கு யாருக்கும் இங்க புத்தி இல்லை.

அன்பானவரே -
அப்படியே 
தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து 
ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளுக்கு விலக்கு -
அப்படின்னு சொல்ற சட்டத்தையும் பத்தி ஏதாவது அள்ளி விட்டா 
கொஞ்சம் நல்லா இருக்கும்..

காசு எவன் குடுத்தான்னு மக்களுக்குச் சொல்ல கூடாதுன்னு எல்லாரும் சேர்ந்து முடிவெடுத்து இருக்கீகளாம்ல...
நல்ல விஷயம்தான்...
நம்ம காங்கிரசுஸ்ல 70 சதவீதத்துக்கு மேலான பணத்தைக் கொடுத்தது 
யாரென்று தெரியாதுன்னு தாக்கல் செய்திருக்கீங்கலாமே 
பா.ஜ.க வும் உங்களுக்கு சளைத்தவர்கள் இல்லைன்னு 
அவர்களும் அந்த அளவுக்கு நன்கொடை கொடுத்தவர்கள் 
யாருன்னு சொல்லமாட்டேன்னு சொன்னபிறகு நீங்கல்லாம் 
சேர்ந்து இந்த அவசரச் சட்டம் கொண்டு வர்ரீங்க...

சீக்கிரம் இதைப் பத்தி பேசுனா நல்லா இருக்கும். அதோடு சேர்த்து இந்தியக் குடிமக்கள் ஏன் அரசுக்கு கணக்கு காட்ட வேண்டும்... அதனால் மக்கள் அனைவருக்கும் அரசு கேட்கும் கணக்கிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்னும் சொன்னிங்கன்னா உங்களுக்கு ரொம்பப் புண்ணியமா போகும்.

ஆமா அடுத்து எப்பங்க பேசுவீங்க
அவர் அமேரிக்கா போன பின்னாடியா?

பாவம் அமேரிக்காவே அடுத்த வேளை சம்பளம் கொடுக்க வக்கில்லாம எல்லாத்தையும் மூடிக்கிட்டு கிடக்கான்.
ஆனா வெக்கம் இல்லாம நாம அவன் பின்னடிக் கிடக்கோம்.
என்ன செய்ய நீங்க இப்படி ஏதாவது பேசுவீங்கன்னா இன்னொரு தடவை நம் பிரதமரை அங்கே போய் வரச் சொல்லலாம்.

நீங்க பேசுவீங்க ஆனா நான்தான் இன்னும் ஆறு மாசத்துக்கு தூக்கம் வராம கஷ்டப்படுவேன்.
பரவா இல்லை நாடு நல்லா இருக்கணும்னா தூங்கம இருக்கிறது ஒன்னும் தப்பில்லை.







17.9.13

மதச்சார்பின்மை- அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டும்.

மதச்சார்பின்மை என்ன என்பதை ராணுவ வீரர்களிடம்தான் அனைத்து அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று திரு நரேந்திர மோடி அவர்கள் நேற்று உரையாற்றினார்...

நன்றி தினமணி 

இதற்கு முந்தய பதிவில் இடிக்கத் தூண்டியவரை விட எரிக்கத் தூண்டியவர்தான் அதிக செல்வாக்கோடு இருக்கின்றார் என்று எழுதியதற்கு நண்பர் ஒருவர் பின்வருமாறு பின்னுரை எழுதியிருந்தார்...
கோத்ரா ரயில் எரிப்பில் ஈடுபட்டது முஸ்லிம்கள்.கலவரத்தை ஆரம்பித்தது முஸ்லிம்கள்.அதன் பலனை அவர்கள் அனுபவித்தனர்."
நண்பர் சொன்ன கருத்தைத்தான் மோடியின் வரவை விரும்புகிற அனைவரும் சொல்லுகிறார்கள். ஆரம்பித்தது இஸ்லாமியர்கள்... எனவே அதன் பலன் மீண்டும் அவர்களை மற்றவர்கள் சேர்ந்து கொல்லுவது. அதனால்தான் அவர் வலுவான தலைமை என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள்.

குஜராத் முதல்வர் மீது இருக்கிற குற்றச்சாட்டே, தொடர்ந்த அல்லது தொடர விட்ட கலவரங்களை அடக்க மறந்தவர் அல்லது மறுத்தவர் என்பதுதான்... அரசு அதிகாரத்தில் இருக்கிறவர்கள் கலவரத்தை வளர்ப்பது என்பது இந்திய சட்டத்தின் மீதும் நீதி மன்றத்தின் மீதும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது. இதை நாம் மறந்து விட முடியாது என்பதைத் தான் நான் சொல்ல விரும்புகிறேன். மக்கள்தான் சட்டத்தை மதிக்கவில்லை என்றாலும் முதல்வராவது மதிக்க வேண்டுமல்லவா? [யார் மதிக்கிறா அப்படின்னு பதில் கேள்வி கேட்டா அப்ப திரு மோடி அப்படித்தானான்னு பதில் கேள்வி கேக்க வேண்டியதுதான்].

கலவரம் விளைவிக்கிறவர்கள் குற்றவாளிகள். அவர்கள் தண்டிக்கப் பட வேண்டியவர்கள். அது யாராக இருந்தாலும்.... அதைக் காரணம் காட்டி நம் விருப்பப் படி செயல்பட இது ஒன்றும் தமிழ் திரைப்படம் இல்லையல்லவா​?

காங்கிரஸ் அரசுக்கு மாற்றான ஒரு அரசு வர வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன். அது பா.ஜ.க வாக இருக்கலாம்.  அதற்காக மதத்தை அரசியலில் கலப்பது தவறு. மீண்டும் மீண்டும் மதத்தை மட்டுமே பா.ஜ.க. முன்னிறுத்துவது தவறு என்பதை மீண்டும் சுட்டிக்காட்டுவது நல்லது. காங்கிரசை எல்லாரும்தான் எதிர்க்கின்றனர். ஏதோ காங்கிரஸ் ஆட்சி மைனாரிட்டி மக்களுக்கு மட்டுமே நல்லது செய்வது போலவும், மைனாரிட்டி மக்களுக்கு மட்டுமான ஆட்சி என்பது போலவும், இந்து மக்களை வாழ விடாது போலவும் பேசுவது அல்லது அப்படி ஒரு பிரம்மையை உருவாக்கி அதற்காக இந்தியக் குடிமக்கள் மத்தியில் வெறுப்பை விதைத்துத்தான் பா.ஜ. க. வை வளர்க்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

உண்மை என்னவெனில் காங்கிரஸ் அரசு எந்த ஒரு இந்தியனையும் வாழ விடாது... அதற்கு பிரித்துப் பார்க்கத் தெரியாது. எல்லாரையும் வெறுக்கும். பணக்காரர்களை மட்டுமே மதிக்கும். உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பே. விவசாயிகளின் வெறுப்பு, சொந்த நாட்டு மீனவர்களையே காக்க துப்பில்லாத அரசு, மக்கள் கூடி வாழும் இடங்களில் ஒட்டு மொத்தமான அணு உலைகள், அந்நிய முதலீடு என்ற பெயரில் அனைத்தையும் வெளியாருக்குத் தாரைவார்க்கும் பொருளாதாரக் கொள்கை, ஊழல், பெட்ரோல் விலை உயர்வைக் கட்டுப் படுத்தாத தாரள மாயம், பெரு முதலாளிகளின் கைக் கூலிகளாக இருக்கும் அரசு, என்று அதன் மீது குற்றம் சாட்டுவதற்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன... 

இவைகளுக்கான மாற்றாக புதிய கொள்கைகள், திட்டங்கள் இவைகளை மட்டுமே முன்னிறுத்த வேண்டும். சும்மா அதை விட்டுவிட்டு இந்த அரசு இஸ்லாமியர்களைப் பாதுகாக்கிறது இந்துக்களை எதிர்க்கிறது என்று மக்களை எமோஷனல் பெயரில் வன்முறையையும், வெறுப்பையும் விதைப்பது - பா. ஜ.க விடம் மாற்றுக் கொள்கைகள் ஒன்றும் இல்லை என்பதைத் தான் காட்டும். அது இதை ஒரு போதும் காங்கிரசிடமிருந்து வேறுபட்ட கட்சியாக காண்பிக்காது. 

கொள்கைகள் இல்லாமல் இருப்பது நல்லதல்ல. தெளிவு படுத்த வேண்டியவைகள் கொள்கைகளே தவிர பிளவுகள் அல்ல... 

மதச் சார்பின்மையை நாம் ராணுவ வீரர்களிடம் கற்றுக் கொள்ளலாம். அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற திரு மோடியின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். அவரும் அரசியல்வாதி என்பதனால் இந்தக் கேள்வியை அவரிடம் கேட்கலாம் - 
நீங்க எப்ப சார் கத்துக்கப் போறீங்க?

16.9.13

பாராட்டு, பானம், பாலியல் குற்றங்கள் -

பாராட்டு 
செய்தித் தாளைப் புரட்டினால் மோடி சகட்டு மேனிக்கு எல்லாரையும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார் என்கிற செய்தியை பத்திரிக்கைகள் புகழ்ந்து தள்ளியிருக்கின்றன:  பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் வாஜ்பேய் மற்றும் அத்வானிக்குப் புகழாரம். ராணுவ அதிகாரிகளுக்கு மோடி பாராட்டு. இந்திய விஞ்ஞானிகளுக்கு மோடி பாராட்டு. இதைப் பார்த்த உடனே தங்கள் பங்குக்கு சளைத்தவர்கள் இல்லை என மோடியைப் பலர் புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர். மோடி பன்முகத்தன்மை கொண்டவர் என வெங்கையா நாயுடு புகழாரம். ஒரு முகத்தை பார்க்கவே பல பேருக்கு பயமா இருக்கு இதுல பன்முகமா... மோடிய அறிவித்ததில் ஒரே வருத்தம் திரு அத்வானிக்குத்தான்... ஆனாலும் அவர் எப்படியாவது வழிக்கு வந்து விடுவார். அந்த நம்பிக்கையை திரு ஜஸ்வந்த் சிங் தெரிவித்திருக்கிறார்.
என்ன செய்வது இடிக்கத் தூண்டியவரை விட எரிக்கத் தூண்டியவர் மேலானவர் ஆகிவிட்டார் என்கிற வருத்தமோ என்னவோ?

பானம்

  • லண்டனில் பிறந்த காங்கிரஸ் எம்.பி சசிதரூர் ஐ.பி. எல். ஊழல் பற்றி எதோ வர தனது அமைச்சர் பதவியை தாரை வார்க்க வேண்டியிருந்தது. ஊழல் குற்றம் சாட்டப் பட்ட எந்த அமைச்சர் தண்டிக்கப் பட்டார்... வழக்கம் போல மீண்டும் பதவி. சும்மா இல்லாமல் விவேகானத்தர் சிலை திறக்கப் போன இடத்தில் விவேகானந்தருக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்தது  என்று உளறியதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.  கலகம் விளைவிப்பவர்கள் எல்லாம் பதிவியில் இருக்கும் போது மது அருந்தியவர் மகானாக இருக்கக் கூடாதா என்ன​? 


  • பார்களைத் தமிழகம் முழுதும் தொடங்கி அதைப் பராமரித்து அதனால் வரும் வருமானத்தை வைத்து நமது நாடு நட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போது அம்மாவை மிஞ்ச அரசியலில் யாரும் இல்லை. நேற்றுக் கூட பத்திரிக்கையாளர் சோ அவர்கள் அம்மாவைப் பார்த்தார்களாம். அவர் வெறும் பத்திரிக்கையாளரா என்ன​? அது கிடக்கட்டும். மோடி அவர்கள் மதுரையில் கூட நிற்கப் போவதாகக் கேள்வி. அது என்னமோ தெரியலை எரித்தலுக்கும் திரு மோடி அவர்களுக்கும் நெருங்கிய சொந்தம் போல - கண்ணகி எரித்த மதுரையில் நிற்கப் போகிறாரே அதனால் சொன்னேன். இதற்கும் கோத்ரா எரிப்புக்கும் ஒரு தொடர்பும் இல்லை.  அது என்னமோ தெரியலை தமிழகத்தை கலவர பூமியாக ஆக்குவதில் எல்லாருக்கும் என்ன சந்தோஷமோ தெரியலை...


  • சொல்ல வந்த செய்தியை விட்டு எங்கேயோ போயாச்சே - புதிதாக அம்மா குடி நீர்... அம்மா உணவகம். குறைந்த விலையில் நிறைந்த தரம். பஸ் ஸ்டாண்டுல குறைந்த விலை போல பார்ஸ்டாண்டிலும் இது கிடைக்கும் என்று நம்புகிறேன்.

பாலியல் குற்றங்கள்
பெண் பாலியல் வழக்கில் நான்கு பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்த பிறகு பாலியல் பலாத்காரம் அதிகரித்திருக்கிறது. குற்றவாளிகளுக்காக வாதாடிய வக்கீல் மரணதண்டனை கொடுத்தால் குற்றம் குறைந்து விடும் என்றால் நானே குற்றவாளிகளைத் தூக்கிலிட எழுதிக் கொடுப்பேன் என்று சவால் விட்டாராம். அதுமட்டுமல்ல பலாத்காரம் செய்யப் பட்ட பெண்மீது அவள் இஷ்டத்துக்கு ஊரைச் சுற்றிய பெண். அப்படிப் பட்ட பெண் எனக்கு இருந்திருந்தால் பெட்ரோல் ஊற்றிக் கொழுத்தியிருப்பேன் என்று சொல்லியிருக்கிறார். நல்ல வழக்கறிஞர். இப்படிப் பட்டவர்கள் இருந்தால் நீதிமன்றம் சிறந்து விளங்கும்.
அவர் வாய் வைத்த நேரமோ என்னமோ...
சிதம்பரத்தில், ருவாண்டா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை ருவாண்டா நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பலாத்காரம் செய்ய, அப்பெண் மருத்துவ மனையிலும் இவர் தமிழக சிறையிலும் இருக்கின்றார்.
ஓடும் பஸ்ஸில் நடந்தது போல ஓடும் ரயிலில் ஏசி கோச்சில் இருந்த ஒரு டாக்டரை பலாத்காரம் செய்ய முற்பட்ட ஒரு சி.பி.ஐ வீரரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.
இதாவது பரவாயில்லை.  சோழவரத்தில் ஒரு சிறுமியைக் கடத்திச் சென்று ஒரு கும்பல் வன்முறை செய்திருக்கிறது
இது போன்ற செய்திகளை இன்னும் அதிகமாகவே பார்க்க முடியும்...
என்னதான் தண்டனைகள் அதிகரித்தாலும் குற்றங்களும் அதிகமாகிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் காரணம் வேறு எங்கோ இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்காது. தகவல் உரிமைச் சட்டத்திலிருந்து அரசியல்வாதிகளை விடுவித்த அரசாங்கம் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
தமிழக அரசாங்கம் இந்த நிதி ஆண்டில் பத்து கோடி அதிகமாக ஒதுக்கீடு செய்திருக்கிறது - எதுக்கு விசாரணைக்காக அழைத்து வரப்படும் கைதிகளுக்கு உணவு வாங்கிக் கொடுப்பதற்கான தொகையை 35 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்த்திக் கொடுப்பதற்காக.... அம்மா உணவகத்தில அவங்க சாப்பிட மாட்டாங்களா என்ன? சாதாரண மக்களை விட அவங்க சாப்பாட்டுக்கு அதிக பணம்... பேஷ் பேஷ்...


சசி தரூர் அவர்களுக்கும், அனைத்து மலையாளர்களுக்கும் ஓணம் வாழ்த்துக்கள். அதனால் இன்று சென்னை, கோவை, உதகமண்டலம் மற்றும் எல்லா இடங்களிலும் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை... வாழ்க தமிழ்!


14.9.13

மரணம் - பெட்ரோல் - மோடி - அப்பு மண்டி ஆவணி 29


  • டெல்லி  வன்கொடுமை வழக்கில் நான்கு நபர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. இந்த நேரத்தில் தண்டனை பற்றி ஏதாவது பேசினால் நான் ஆணாதிக்க வாதியாக சித்தரிக்கப் பட வாய்ப்பு உள்ள காரணத்தினால் அதைத் தவிர்த்து விடுவதே நல்லது. இந்த மரண தண்டனை பெண்களைக் கொடுமைப்படுத்த நினைக்கும் ஒவ்வொருவருக்கும் மிகப் பெரிய பாடமாக இருக்கும். 
பழங்குடி மக்கள் மீதான் பாலியல் வன்முறைகள் - 
மற்றும் காடுகளில் தேடல் வேட்டையில் ஈடுபட்ட அரசு காவலர்கள் பெண்களை வன்கொடுமைகள் செய்ததற்கான 
பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்று நினைக்கிறேன்.
மனிதாபிமானம் உள்ள அனைவரும் 
இதையும் கவனிக்க வேண்டியது அவசியம். 
  • கலைஞருக்கு கரண்ட்ல கண்டம் - காங்கிரசுக்கு கண்டதெல்லாம் கண்டம். ஊழல் எதிர்ப்பாளர்கள், தமிழ் உணர்வாளர்கள், அணு உலை எதிர்ப்பாளர்கள் - சிறு வியாபாரிகள் - பெட்ரோல் வண்டி பயன்படுத்தும் அனைவரும் என, காங்கிரசுக்கு எதிரானவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. காங்கிரசின் ஆட்சி நிச்சயமாய்க் கவிழும்... இதற்கென்று ஆருடம் தெரிய வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை.  நேற்று நள்ளிரவில் இருந்து மீண்டும் பெட்ரோல் விலை ஏறியிருக்கிறது. ஏறக்குறைய எண்பது  ரூபாயைத் தொட்டு விட்டது. ஆனால் முப்பது ரூபாய் ஒரு நாள் செலவழித்தால் அவர்கள் ஏழைகள் இல்லை என்ற தங்களது கண்டு பிடிப்பை நிலை நிறுத்தும் வண்ணம் எல்லாரையும் பணக்காரர்களாய் ஆக்குவது ஒன்றே தனது குறிக்கோள் என்று காங்கிரஸ் செயல் பட்டுக் கொண்டிருக்கிறது.
தொன்னூறுகளில் தொடங்கிய தாரள மயமாக்கள் கொள்கைகளின் விளைவைத் தான் நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்....  
தொடங்கி வைத்த பெருமை 
அமைதிப் பேரரசர் மன்மோகன் அவர்களையே சாரும்... 
என்னதான் நடந்தாலும் 
எதுவுமே நடக்காதது போல அவர்கள் இருப்பதுதான் அவர்களின் ப்ளஸ்... 
இவ்வளவு நடந்தும் 
ஒன்றும் நடக்காதது போல இருப்பதுதான் நமது ப்ளஸ்..
  • மோடி பா. ஜ. க... வின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப் பட்டிருக்கிறார். அத்வானி மன வருத்தத்தில் இருக்கிறார். நிச்சயமாய் இதை வைத்து பா.ஜ. க பிளவு படாது. மோடி நிச்சயமாய் ஒரு ஒளிரும் இந்தியாவை முன்னிறுத்தப் போகிறார்... "மாற்றம் ஒன்றே நமது இலக்கு" என்று இந்துயாவை முன்னிருத்துவார். கமல் ரசிகர்கள் நாங்கள் பா. ஜ.க. ஆதரவாளர்கள். எனவே திருச்சி வரும் மோடியை சந்தித்து ஜெயாவுடன் கூட்டணி கூடாது என்று சொல்ல இருக்கிறோம் என்று சொல்கிறார்கள். (விஷவரூபம் படத்தை பலர் எதிர்க்க இதுவும் ஒரு காரணம் போல). ஆனால், மோடியோ தமிழக முதல்வரோ இதற்கெல்லாம் சளைத்தவர்கள் அல்ல... நிச்சயமாய் பா.ஜ.க அ. தி.மு.க  கூட்டணி நிச்சயம். 
மோடி தனது கறைகளை எல்லாம் மறைக்காமலே 
பிரதம வேட்பாளர் அறிவிப்பு வெளி வந்திருக்கிறது... 
இனிமேல் எந்தக் கறையையும் தாங்கும் ஆற்றலையும் 
அவர் நிச்சயம் பெறுவார்.. 
கறை நல்லது என்கிற வசனம் யாருக்கு பொருந்துமோ இல்லையோ 
பிரதம வேட்பாளர் அவர்களுக்கு நிச்சயம் பொருந்தும். 
மோடி வெற்றி பெற்றால் அவரை வெற்றி பெறச் செய்த பெருமை எல்லாம் அ.தி-மு.க. வை அல்ல அது காங்கிரசையே சாரும்.
தாராளமாய் காங்கிரஸ்காரர்கள் 
வெற்றி மீது வெற்றி வந்து உன்னைச் சேரும் அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் என்னைச் சேரும் என்று பெருமைப் பட்டுக் கொள்ளலாம். 
காங்கிரசுக்கு அ.தி.மு.க கூட்டணி கிடைக்காவிட்டாலும் 
நிச்சயமாய் எம்.ஜி.ஆர். பாட்டைப் பாடுகிற புண்ணியமாவது கிடைக்கும். 
கரண்டு கண்டமும் பெட்ரோல் கண்டமும் ஒன்னாய்ச் சேர்ந்திருப்பதால் 
காந்தி வந்தால் கூட காங்கிரசைக் காப்பாற்ற முடியாது.


28.4.13

சொர்க்கமேன்னாலும் நம்மூரு போல வருமா?


  • சிறைவாசம் செல்வதற்கு ஏற்கனவே நான்கு வார அவகாசங்களை வழங்கியிருந்த நீதிமன்றம் இப்போது மேலும் நான்கு வாரங்களை உச்ச நீதிமன்றம் சஞ்சய் தத்துக்கு வழங்கியிருக்கிறது. ரூ. 278 கோடிகள் மதிப்பிலான மீதியிருக்கிற படங்களை முடித்துக் கொடுப்பதற்காக 'மனிதாபிமான' அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கிறதாம்.
    • மனிதாபிமானம் என்பதற்கான புதிய விளக்கம். இதுபோல பல வார்த்தைகளுக்கு புதிய விளக்கம் கொடுக்கத் தயாராய் இருக்கிறோம் என்று அறிவிப்புதான் இது.
  • டெல்லியில் ஐந்து வயதுப் பெண் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு ரூ. 2000 கொடுத்து வழக்கு தொடுக்க வேண்டாம் என்று கேட்டிருக்கிறார்கள்.
    • ?????????????
  • நரேந்திர மோடியை விமர்சித்த பிறகு நித்திஷ் குமார் அரசிற்கு, மத்திய அரசு 12,000 கோடி பின்தங்கிய பகுதிகளுக்கு உதவும் நிதி வழங்க முடிவு செய்திருக்கிறது. நாட்டின் நலன் மட்டுமே கருதி இந்த முடிவை உண்மைக்கும் நீதிக்கும் சொந்தக் காரரான காங்கிரஸ் கட்சி எடுத்திருக்கிறது.
    • ஸ்டாலின் வீட்டில் உண்மையாய் ரெய்டு நடத்திய மாதிரி.........
  • 29 வயதான கிருஷ்ணா என்கிற காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் [கர்நாடகா] தனது சொத்து மதிப்பு ரூ. 910 கோடிகள் என்று   தெரிவித்திருக்கிறார். 
    • ஏழைகளின் நண்பன் காங்கிரஸ் என்று உலகுக்கு உணர்த்துவதற்காகவும், ஏழை இளைஞர்களுக்கு மிகப் பெரிய க்ரியா ஊக்கியாக இருப்பதும் தான் அவரது வாழ்க்கை இலட்சியமாம்.
  • பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப் படுவதற்கு பெண்களின் பார்வையே காரணம் என்று சத்யதேவ் கட்டாரே என்கிற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவர் [மத்தியப் பிரதேசம்] சொல்லியிருக்கிறார்.  
    • எல்லாப் பெண்களின் கண்களையும் குருடாக்க வேண்டும் என்றுதான் சொல்ல நினைத்தாராம்...   என்று விட்டு விட்டாராம்.
  • பாலியல் பலாத்காரம் டெல்லியில் மட்டுமா நடக்கிறது .... எல்லா இடங்கலிலும் தான்... பாலியல் பலாத்காரத்தை கட்டுப் படுத்துவதுதான் உள்துறை அமைச்சகத்தின் வேலையா என்று அறிவுப் பூர்வமாகக் கேட்டிருக்கிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த [உத்திரப் பிரதேசம்] ஒரு அமைச்சர் கூறியிருக்கிறார். 
    • கடற்படைக்கு மீனவர்களைக் காப்பதுதான் வேலையா? உள்துறைக்கு மக்களைக் காப்பதுதான் வேலையா... நிதி அமைச்சகத்துக்கு விலைவாசியைக் கட்டுப்படுத்துவதான் வேலையா ... சீனர்கள் ஊடுருவாமல் தடுப்பதுதான் இராணுவத்தின் வேலையா .... என்றெல்லாம் கேட்க நினைத்தாராம்...
  • தெற்கே தினம் தினம் தமிழக மீனவர்களைக் கொள்ளும் இலங்கையிடம் அமைதி... பத்தொன்பது கிலோ மீட்டர் வரை ஊடுருவிய சீனர்களிடம் பேச்சு வார்த்தை ... பாலியல் தீவிரவாதச் செயல்களுக்கு எதிராக நீதி கேட்ட பெண்ணிடம் மட்டும் 'அறை' --- 
    • என்ன வீரம் சார்... என்ன கொடுமை சார்?


21.4.13

பாஸ்டனின் நிகழ்வுக்குப் பின்

மிகவும் சிறப்பு வாய்ந்த பாஸ்டன் மாரத்தான் நிகழ்வு முடிவு பெரும் தருவாயில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்து மூன்று பேர் இறந்து விட ஏறக்குறைய 170 நபர்கள் படுகாயம் அடைந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த செய்தியையே நான் இரண்டு நாட்கள் கழித்துத் தான் அறிந்து கொண்டேன்.

அமெரிக்காவின் மீதான தாக்குதல்கள் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தவை. காரணங்கள் பல.  பராக் ஒபாமா இதைப் பற்றி என்ன சொல்கிறார் என்பதைப் பற்றி அறிவதற்கான ஆர்வம்தான் எனக்கு அதிகமானது.

ஒபாமாவின் பேச்சைக் கேட்ட பிறகு எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவர் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் இந்நேரம் அல் கொய்தா வை வம்ம்புக்கு இழுத்திருப்பார்கள். இதே இந்தியாவில் நடந்திருந்தால் இந்நேரம் பாகிஸ்தான் காரணம் என்று உடனேயே சவால் விட்டிருப்பார்கள்.

இதற்கான காரணம் - யார் செய்தது என்று தெரியவில்லை - மிக விரைவில் கண்டு பிடிப்பார்கள் என்று ஒபாமா சொன்னார்.
நமது அரசியல் வாதிகளும் அங்கேயே பிரச்சனைகளுக்கு உரமிடும் புஷ் போன்றவர்களும் இதைக் கற்றுக் கொள்வது நல்லது.

எதற்கெடுத்தாலும் கையில் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு பள்ளிக் கல்லூரிகளுக்குச் சென்று பார்க்கிறவர்களைஎல்லாம்  சுட்டுத் தள்ளும் அமெரிக்க கலாச்சாரத்தின் போக்கையும், அதற்குப் பின் அவர்கள் மனநலம் அற்றவர்கள் என்று தப்பித்துக் கொள்ளும் மன நிலையையும் மாற்றுவதற்கு முதலில் அமெரிக்கர்கள் முயல வேண்டும். அதைச் செய்தாலே பாதிப் பிரச்சனை முடிந்து விடும்.

ஏப்ரல் மாத தொடக்கத்தில் நாட்டோ படைகள் நடத்திய தாக்குதலில் பச்சிளம் குழந்தைகள் கொல்லப் பட்ட செய்தி இந்த அளவிற்கு உலகக் கவனத்தைப் பெற வில்லை என்பதும் இதனால்தான்  ஒபாமா அடக்கி வாசித்தாரோ என்றும் அல்லது இந்தச் செய்தியை மறைக்க அமெரிக்க நடத்தும் நாடகமா இந்த குண்டு வெடிப்பு என்று கேட்பது தவறில்லை என்றே தோன்றுகிறது.




பாஸ்டனுக்கும் பெங்களூருக்கும் என்ன தொடர்போ தெரியவில்லை இங்கேயும் குண்டுவெடிப்பு. ஆனால் உடனேயே இது தீவிரவாதம் என்றும், பி. ஜே. பி யின் அலுவலகத்தை டார்கெட் செய்திருக்கிறார்கள் என்று சொல்லுவது மே மாதம் ஐந்தாம் தேதிக்கு ஆதரவைத் தேடும் யுத்தி என்றே தெரிகிறது. இரண்டு கார்களுக்கு நடுவில், தமிழ் நாட்டு ரெஜிஸ்ட்ரேஷன் தகட்டோடு என்பது வேண்டுமென்றே திட்டமிட்டிருப்பது போலவே தெரிகிறது.

இவைகளையெல்லாம் பார்க்கிற பொது நம்மை நாமே அழித்துக் கொள்வதற்கான சுலபமான வழிகளை ஏற்படுத்தித் தருவதே விஞ்ஞானம்தான் என்பதில் நம்பிக்கை அதிகமாகிறது.
நவீனம் என்பது என்ன... மொத்தமாய் சாவதா? பயந்து பயந்தே வாழ்வதா?

தங்களது ஆதாயத்திற்காக தீவிரவாதம் என்ற லேபிலை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோமா?

19.2.13

எல்லாம் மாத்தமாட்டிக்ஸ்


நீங்களும் வெல்லாம் ஒரு கோடி ப்ரோமோ பார்த்ததிலிருந்து எல்லாமே மாத்தமாட்டிக்ஸ் மனசுல ஓடிக்கிட்டே இருக்கு. அதில் சில:

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தேர்தல்
கரண்ட் கட் + தமிழகம் + தேர்தல்      = தி. மு. க. தோல்வி  
பெட்ரோல்  + இந்தியா + தேர்தல்       = காங்கிரஸ் தோல்வி  
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஊழல்
12 ஹெலிகாப்டர்                       = 3600 கோடி
10 சதவீதக் கமிஷன்           = 360 கோடி
1அணு உலை                           = 16,000 கோடி
10 சதவீதக் கமிஷன்                         = 1600?

கமிஷன் இல்லாமல் எதுவும் நகராது...

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
திரைப்படம்
கடல்           = அலைகள் ஓய்வதில்லை இரண்டாம் பாகம் + மின்சாரக்      கனவு இரண்டாம் பாகம்       
விளக்கம்

கார்த்திக் + ராதா             = அலைகள் ஓய்வதில்லை
கார்த்திக் மகன் + ராதா மகள் = கடல்

காதலை சேர்த்து வைத்து பின் சாமியாராகும் அரவிந்த்சாமி
= மின்சாரக் கனவு
சாமியாரான பின் காதலை சேர்த்து வைக்கும் அரவிந்த்சாமி 
= கடல்
ஆக

மனிரத்னம்   = பாரதிராஜா + ராஜீவ் மேனன்

கூட்டிக் கழிச்சுப் பாருங்க கணக்கு சரியா வரும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தொலைக்காட்சி
ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்ப ஆறு ரூபாய்
ஒருநாளைக்கு ஒரு லட்சம் எஸ். எம்.எஸ் அனுப்பினால் 
= ஆறு லட்சம் ரூபாய்.
பதினைந்து நாளைக்கு பதினைந்து லட்சம் எஸ். எம்.எஸ் 
= தொண்ணூறு லட்சம்
ஆக

ப்ரோக்ராம் பெயர் 
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி இல்லை
நீங்களும் அனுப்பலாம் ஒரு கோடி
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++







23.10.11

கட்சிகளும் காட்சிகளும் - தேர்தல் முடிவுகள் குறித்த ஓர் அலசல்


அ.தி.மு.க.
  • உள்ளாட்சி தேர்தல் முடிந்து அம்மாவின் கட்சி அறுதிப் பெரும்பான்பை பெற்று தனித்து நின்றாலும் அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. இது குறுகிய காலத்தில் அவரின் அரசுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதுவதற்கான முகாந்திரம் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் கடந்த அரசை மைனாரிட்டி அரசு என்று மாத்திரமே விளித்து வந்த அம்மா யாரும் மறந்தும் கூட அந்த வார்த்தையைப் பிரயோகிக்க முடியாத படி வெற்றியைப் பறித்திருக்கிறார். இதனால் அவருக்கு கூடுதலான பொறுப்புணர்வு சேர்ந்திருக்கிறது. இதைச் சரியான விதத்தில் பயன்படுத்திக் கொண்டு அவர் சொல்லியிருப்பது போலவே அனைத்து மாநிலங்களிலும் முதன்மையான மாநிலமாக இதை மாற்றிவதிலே கவனம் செலுத்த வேண்டும். 
  • முன்பு ஆட்சிப் பீடத்தில் அமர்ந்த்திருந்த போது அவரின் பேச்சுகளில் இருந்த ஆணவம் இப்போது முற்றிலும் இல்லை என்று சொல்லுவது கடினம் என்றாலும் கொஞ்சம் குறைந்தே காணப் படுவது கவனிக்கப்பட வேண்டியிருகிறது. மரணம் எதிர் நோக்கியிருக்கிற தமிழர்களுக்கான தீர்மானம், மற்றும் அணு உலைக்காக அவர் மக்கள் பக்கம் சார்ந்த்திருக்கிற அணுகுமுறை என்று சிலவற்றைச் சொல்லலாம். ஆனால் அவைகள் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு மக்களைப் பகைத்துக் கொள்ளாமல் இருப்பதற்கான சாணக்கியத் தனம் என்று  சிலர் கூறும் குற்றச் சாட்டுகள் பொய் என்று நிரூபிக்கும் வண்ணம் அவரின் முடிவுகள் இருப்பதில்தான் இந்தக் குற்றச் சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று மெய்ப்பிக்க இயலும். "வெற்றி பெற்றவர்கள் அனைவரும் வீதி வீதியாகச் சென்று நன்றி சொல்ல வேண்டும்" என்ற அவரது அறிக்கை அதற்கான முதல் செயல் என்று எடுத்துக் கொள்ளலாம். 
  • [ஆனால் சமச்சீர் கல்வி மற்றும் சட்டமன்ற இட மாற்றம் தொடர்பான சில விஷயங்கள் அவரின் அணுகுமுறை மாற வில்லை என்று சொன்னாலும் மக்கள் சார்பான மேற்சொன்ன இரண்டு விஷயங்கள் முன்பு அவை அடிபட்டுப் போய்விடுகின்றன]. 
  • இந்த வெற்றி காங்கிரசுக்கு மற்றும் கலைஞரின் கட்சிக்கு எதிரான மக்களின் கோபம் இன்னும் தீர வில்லை என்பதோடு அ. தி. மு.வுக்கான ஆதரவையும் அதிகமாக சேர்த்திருக்கிறது என்பதில் மெஜாரிட்டி ஆட்சி என்பது மக்களும் மேம்பாட்டுக்கான உழைப்பில் இறங்குவதற்கான உத்திரவாதம் என்பதால் மக்களின் வெறுப்புக்குள்ளாகாமல் இருக்க வேண்டியது அவசியம் - அப்படி வெறுப்புக்குள்ளானால் என்ன ஆகும் என்பதை கலைஞரின் கண்ணீரைப் பார்த்திருக்கும் அம்மா மறக்க மாட்டார் என்றே கருதுகிறேன். 
  • அதை மறக்கும் பட்சத்தில் என்ன நடக்கும் என்பதை அவர் நன்கு அறிவார்.

தி.மு.க.
  • கலைஞர் வெறும் வாயிலே அம்பெய்துவார் - அதாவது வாய்ச்சொல்லில் வீரர் என்கிறேன். சில சமயங்களில் பேசிக் கெடுப்பார், பல சமயங்களில் பேசாமல் கெடுவார். இத்தனைக்குப் பிறகும் கடந்த தேர்தலில் தி.மு.க தொண்டர்களால்தான் தி.மு.க. தோற்றது என்று கலைஞர் பேசியதன் விளைவோ என்னவோ ஒரு மாநகராட்சியைக் கூடக் கைப்பற்ற முடியவில்லை. தமிழ் மக்களுக்கு இன்னல்கள் நடந்த போது பேசாமல் இருந்ததன் விளைவு இப்போது மீண்டும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.  தான் ஆட்சியில் இருந்த போதெல்லாம் இத்தகைய போராட்டங்களைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டு இப்போது அ.தி.மு.க அரசு இவைகளைக் கண்டு கொள்வதில்லை என்ற அவர் வைக்கிற குற்றச் சாட்டை பாமர மக்கள் கூட நம்ப வில்லை என்பதையே இந்த முடிவுகள் தெரிவிக்கின்றன. 
  • அது மட்டுமல்லாமல் ஆளும் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது எப்போதும் நடப்பதுதான் என்று அறிக்கை வேறு. அது எந்த அளவுக்கு என்றால் - மு. க. அழகிரி வார்டிலேயே தி. மு.க. நான்காவது இடத்திற்குத் தள்ளப் பட்டிருக்கின்றது என்பதிலிருந்து நாம் புரிந்தது கொள்ளலாம். 
  • மத்தியில் இன்னும் பதவியில் அமர்ந்திருக்கும் அவர் மக்கள் பிரச்சனைக்காக தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டு வெறும் அறிக்கையில் இல்லாமல் - இறங்கி வேலை செய்தால் ஒழிய அவரால் ஒன்றும் பேச முடியாது - ஏனெனில் வெறும் பேச்சைக் கேட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள் என்பதை அவர் அறிவார் - 
  • வரிசையாகத் தோற்றுக் கொண்டிருந்த கால கட்டங்களிலேயே அவர் சொல்லுவார் - பேச்சைக் கேட்க இங்கே வருகிறீர்கள் ஆனால் வாக்கை மட்டும் அவருக்குப் போட்டு விடுகிறீர்கள் என்று - இருந்தாலும் அதுதான் அவரைக் காப்பாற்றிக் கொண்டும் வந்திருக்கிறது. ஆனால் இனியும் அந்த நிலை நீடிக்காது என்றே கருதுகிறேன். 
  • இருந்தும் அவர் பேசுவதை யாரும் தடுத்து விட முடியாது என்கிற விஷயமும் எட்டிப் பார்க்கின்றது.
காங்கிரஸ்
  • அதைப் பற்றி எழுத வேண்டுமா என்ன? பதினைந்து மாநகராட்சி உறுப்பினர்களைக் கொண்டு மாநகராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தைப் பெற்றிருக்கிறது. இதில் அ.தி,மு.க - முன்னூற்றி ஐம்பது உறுப்பினர்களையும், தி.மு.க. நூற்றி ஒன்று உறுப்பினர்களையும் [மொய்] பெற்றிருக்கிறது. அவைகளோடு ஒப்பிடும் போது இந்தப் பதினைந்து பெற்றதற்கு ஒன்று வாங்கிய பா.ம. க. வே மேல். 
  • இத்தனை ஆண்டு கால வரலாறு உள்ள கட்சி தமிழர்களை அழித்தொழிக்க ஆவன செய்துவிட்டு அவர்களிடமே ஆட்சி பீடத்திற்கு அனுமதி கேட்பதை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற மமதை இனியாவது மாற வேண்டும். ராகுல் காந்தி அமெரிக்கப் பெண்ணை மணக்க இருப்பதாக வரும் வதந்திகள் உண்மையாய் இருக்கும் பட்சத்தில் - [தனி நபர் சொந்த விஷயங்களை உள்ளிழுப்பதற்கு மன்னிக்கவும் - வாக்குக்காக கிராமங்களுக்குச் சென்று மதியம் கஞ்சி குடித்துவிட்டு மாலையில் அரண்மனையில் படுத்துறங்கும் நடிப்பே இப்படிப் பேச வைக்கிறது] - இலங்கைக்கு ஆயுதம் வழங்கி தமிழரை கொன்றது உறுதிப் படுத்தப் பட்டிருக்கும் நிலையில் - தமிழ் மீனவர்களை கொன்றொழிக்கப் படுவதை கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலையில் - தமிழக முதல்வரின் கூடங்குளம் பற்றிய கடிதத்தைக் கூட பிரதமரிடம் சேர்க்காத நிலையில் - எந்தத் தைரியத்தில் இங்கே வந்து இன்னும் போட்டி போடுகிறார்கள் [அவர்களுக்குள் நடக்கும் போட்டியல்ல]
  • இனிமேலாவது மிச்சமிருக்கும் காங்கிரஸ் தொண்டர்கள் உண்மையை உணர வேண்டும் என்பதே வேண்டுகோள்.
பா.ஜ.க.
  • ஒரு கட்சியின் மேல் இருக்கும் வெறுப்பும் கோபமும் அதனுடைய எதிர் கட்சியின் வெற்றிக்கு நிச்சயம் வலுச் சேர்க்கும் - அ.தி.மு.க. வின் வலு கூடியது போல. எனவே காங்கிரசின் மேல் இருக்கும் கோபம் எட்டுத் திக்கும் அதிகமாகிக் கொண்டிருக்கும் இந்த ஒன்றே அடுத்த முறை பா. ஜ.கவை ஆட்சி பீடத்தில் அமர்த்தும். [ஆருடம்] - எனவே அத்வானி அவர்கள் யாத்திரையை முடித்துக் கொண்டு வீடு திரும்பலாம். 
  • உள்ளாட்சித் தேர்தலில் இது எதிர்க் கட்சி என்கிற நிலையில் இல்லாமல் இருப்பதால் பா.ஜ.க. எப்போதும் தோற்றுக் கொண்டே இருக்கிறது. ஆனால் இரண்டு நகராட்சித் தலைவர் பதவியைத் தட்டிப் பறித்திருக்கிறது. 
  • ஒன்று கோவை மாவட்டத்தில் மற்றொன்று நாகர் கோவிலில். இரண்டிலும் மதக் கலவரங்களை மையப் படுத்தி அதைக் கூர்மைப் படுத்தி தனது செல்வாக்கை அதிகரித்துக் கொண்டது. 
  • இது இன்னும் தனது செல்வாக்கைப் பயன் படுத்த இந்த வெற்றிக்குப் பிறகு இதே ஆயுதத்தை மீண்டும் எடுக்கலாம் என்பதால் தமிழ் மக்கள் விழிப்போடு இருப்பது நல்லது.
தே.தி.மு.க
  • விஜயகாந்த் கட்சி சில படிப்பினைகளுக்குப் பிறகு - இந்தத் தேர்தலில் ஐந்து மாநகராட்சி உறுப்பினர்களையும் இரண்டு நகராட்சித் தலைவர்களையும் பெற்றிருக்கிறது என்பது அவருக்கென்று இருக்கிற வாக்கு வங்கியையும் அதோடு சேர்த்து மிகப் பெரிய கொள்கை ஒன்றும் இல்லையென்றாலும் சினிமா தருகிற புகழை வைத்துக் கொண்டே வெற்றி பெற முடியும் என்பதற்கே அவர் உதாரணம். 
  • மேற்கொண்டு சொல்வதற்கு ஒன்று மில்லை. விஜய் தாராளமாய் தேர்தலில் குதிக்க அவரது அப்பா அவருக்கு அனுமதி அளிக்கலாம்.
ம.தி.மு.க. 
  • சட்டமன்றத் தேர்தலில் தனித்து விடப்பட்ட கட்சி - தன்மானத்தோடு ஒதுங்கி நின்ற வை. கோ வின் புகழ் சற்றே கூடியிருக்கிறது... மாநகராட்சியில் எட்டு கவுன்சிலர்களை பெற்றிருக்கிறார்கள். ஒரு நகராட்சித் தலைவர் பதவியையும் பெற்றிருக்கிறார்கள். இது தொடர்ச்சியாக மக்கள் பிரச்சனைகளையும் தமிழர்கள் சார்பாக அவர் எடுத்திருக்கும் நிலைப்பாட்டிற்கான வெற்றியாகக் கருதுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

பா.ம.க
  • தனித்துப் போட்டியிட்டதற்காக அவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும். ஒரு மாநகராட்சி உறுப்பினரைப் பெற்று மானத்தைக் காப்பாற்றிக் கொண்டார்கள். இனிமேலும் தனித்துப் போட்டி போடுவார்களா - மன்னிக்கவும் போட்டியிடுவார்களா?
ம.ம.க.
  • நேற்றையக் கட்டுரையில் பிரபாகரனின் வருத்தத்தைப் போக்கும் விதமாக மனித நேய மக்கள் கட்சிக்கு ஒரு வெற்றி - கோவை மாவட்ட என்பத்தி ஆறாவது வார்டில் கிடைத்திருக்கிறது. எந்த மாவட்டம் என்பதைக் கவனிக்க.

எனவே
தனித்து நின்று தங்கள் கட்சிகளின் பலத்தை அறிந்து கொள்ளவே என்று எல்லாராலும் சொல்லப் பட்டாலும் நடந்த முடிவுகள் வெறும் கட்சியைச் சார்ந்ததாகத் தெரியவில்லை. கட்சி சார்பு என்பதையும் தாண்டி - ஒரு கட்சியின் மீதான வெறுப்பு, ஒருவரின் அணுகுமுறை மாற்றம் - மத்திய அரசின் தமிழர்களின் மீதான வெறுப்பு - போன்ற பல்வேறு காரணிகள் இந்தத் தேர்தலில் அடித் தளமாய் இருந்திருக்கின்றன. 

இனிமேலாவது மக்களின் உணர்வுகளை - கொள்கைகளை முன்னிறுத்த வேண்டிய கட்சிகளே தேவை என்பதையே இது உணர்த்துகிறது. 
இதுவே உண்மைஎன்றால் வாழ்க ஜன நாயகம்!

21.10.11

"குற்ற உணர்வும் நம்பிக்கையும்" - உள் தேர்தல் குறித்து

இந்த வலைப்பக்கத்தை திறக்கும் நேரத்தில் முடிவுகள் வெளிவரலாம்.  அதற்குள்ளாவது அந்த தேர்தல் பற்றி அ. பிரபாகரனின் அனுபவமும் ஆய்வும்

  • இன்று [பதினேழு] எங்கள் ஊரில் பஞ்சாயத்து தேர்தல். நான் தற்போது சென்னையில் இருக்கிறேன். இங்கு பத்தொன்பதாம் தேதிதான் தேர்தல். எனக்கு ஒட்டு எங்கள் ஊரில். ஆனால் இந்த முறை நான் ஊரில் இல்லாததால் வாக்களிக்க முடியவில்லை. ஏறத்தாழ நானும் ஐந்தாறு தேர்தல்களைச் சந்தித்திருக்கிறேன். முதன்முறையாக நான் ஓட்டுப் போட முடியாதது பற்றி இப்போதுதான் கவலை வந்திருக்கிறது. மத்திய வயதுக்கு வந்துவிட்ட நான் இள வயதில் வாக்களித்ததில்லை. வாக்களிக்க விரும்பியதுமில்லை. சிறுவனாக இருந்த போதுஎங்கள் ஊர் தெப்பக் குளத்தில் "தேர்தல் பாதை திருடர் பாதை" என்று ஒரு இடது சாரி இயக்கத்தினர் எழுதி வைப்பார்கள். அது எனக்குப் புரிந்ததில்லை. ஆனால் இள வயதில் ஏதோஒரு விதத்தில் நான் ஓட்டுப் போடுவது தவறு என்றே கணித்திருந்தேன். பிறகு வந்த தேர்தல்களில் ஒரு சில நேரங்களில் வாக்களித்தும் சிலவற்றில் வாக்களிக்காமலும் இருந்திருக்கிறேன். சில நேரங்களில் இரண்டு மூன்று இடங்களில் முத்திரை குத்தி செல்லாததாக்கியிருக்கிறேன். இப்போதெல்லாம் வாக்களிப்பது என்று முடிவுக்கு வந்துவிட்டேன். 
காரணம் - நான் நேசிக்கிற கொள்கைகளுக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாததாய் என் வாழ்க்கை போன பிறகு, தேர்தலில் மட்டும் அந்த வீராப்பு எதற்கு என்ற எண்ணமாக இருக்கலாம்.  ஏறத்தாழ வாழ்க்கை முழுவதுமே சசமரசமாகி விட்டது. ஒரு தன்னிலை [subject ] சமரசங்களால்தான் கட்டமைக்கப் படுகிறது என்பதும், அதற்கு நானும் விதிவிலக்கல்ல என்பதும் அயர்ச்சியையும் சலிப்பையும் தருகிற விஷயங்கள். இந்த அபத்தத்திற்கு நானும் பழகிப் போய் விட்டேன். அதிலும் ஒரு சுகத்தைக் கண்டுவிட்டேன் என்பது உண்மையிலேயே வருத்தம் தரும் ஒன்றுதான். இருப்பினும் இந்த குற்ற உணர்வு ஒன்றுதான் என்னை ஒரு மனிதனாகவே கருத வைக்கிறது என்பதுதான் ஆறுதல்.
  • சரி அது போகட்டும். இந்தத் தேர்தலில் ஊருக்குச் சென்று வாக்களிக்க முடியவில்லையே என்று நான் முதன் முதலாக வருத்தப் பட்டேன். அத்வுமல்லாது நம்பிக்கையும் நம்பகத்தன்மையும் அற்றுப் போன சமூகச் சூழலில் ஜனநாயகமும் தேர்தலும்தான் நம்பிக்கைக்கான இறுதிப் பற்றுக்கோள்கள்  என்று நான்  இப்போது நம்புகிறேன். அதுவுமல்லாது பஞ்சாயத்து தேர்தல் ஓரளவுக்கேனும் சிறு குழுக்களை பிரதிநிதித்துவப் படுத்துகிறது. தனிப் பஞ்சாயத்துக்களாக அறிமுகப் படுத்தப்பட்ட சில இடங்களில் விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கு இது ஓர் அங்கீகாரமாகவும் அமைகிறது. சமூக மைய நீரோட்டத்தில் அவர்கள் சுய கவுரவத்தோடு இணைவதற்கு உதவுகிறது. [இருப்பினும் அதே கிராமங்களில் ஒரு சாராரே மீண்டும் மீண்டும் பஞ்சாயத்துக்களை கைப்பற்றுவது இன்னும் நடக்கிறதே, அது ஒருவித நவீன பிரபுத்துவத்தை கட்டமைக்கிறதே என்று நீங்கள் சொல்லக் கூடும். இருந்தபோதிலும் முன்பு போல உட்கார்ந்த இடத்தில் ஜெயிப்பதெல்லாம் கேள்விக்குள்ளாகி வருகிறது.] அதேபோல சிறுசிறு உள்ளூர் தெருப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு பஞ்சாயத்து முறை ஓரளவிற்காவது உதவுகிறது என்பதும் உண்மை. இதுபோன்ற சில பல காரனங்களால் நான் எப்படியும் இந்த முறை வாக்களிக்க வேண்டுமென விரும்பினேன். ஆனால் அது இயலாமல் போய்விட்டது.
கடந்த வாரம் எங்கள் ஊருக்குப் போயிருந்த பொழுது சில சுவராசியமான விஷயங்களைக் கவனித்தேன். சுமார் ஐந்தாறு பேர் வந்து கொண்டே இருந்தார்கள்.. ... எனக்கென்னவோ இந்த முறை எங்கள் நகரத்தில் பிரச்சாரம் அவ்வளவு விறுவிறுப்பாக இல்லை. கடந்த வாரம் வரை பணப் பட்டுவாடா எதுவும் செய்யப் படவில்லை. நாடாளுமன்ற  சட்ட மன்ற தேர்தல்களிலெல்லாம் எங்கள் பகுதியில் உள்ள தொண்டர்கள் பணத்தோடு ரகசியமாய் அலைந்து கொண்டிருந்தார்கள். இந்த முறை அப்படியல்ல. காரணம் விசாரித்தபோது நம்பர் ஒருவர் சொன்னார் - "கட்சிகளெல்லாம் தனியாக நிற்பதால் எல்லாருக்கும் பயம். ஜெயிப்போமா தோற்போமா என்று. காசை எனவே வெளியில் விட மறுக்கிறார்கள். அப்போதுதான் தேர்தல் குறித்த உண்மை எனக்கு புலப்பட்டது. இது நாம் எல்லாரும் கவலைப்பட வேண்டிய ஒன்று.
  • ஒவ்வொரு தேர்தலிலும் நாம் கவலைப் பட ஏதாவது கிடைத்துக் கொண்டே இருக்கிறது. கடந்த இரு தேர்தல்களிலும் என்னை மிகவும் வருத்தப்பட வைத்த விஷயம் விஜயகாந்தின் வளர்ச்சி. பொய்யாக நிறுவப்படும் இப்படிப் பட்ட கனவுலக பிம்பங்களின் அடிப்படையில் மக்கள் ஒவ்வொரு முறையும் அணிதிரளும் போது இந்த சமூகத்தின் வளர்ச்சி பின்னோக்கித் தள்ளப்படுகிறது. அரசியல் விழிப்புணர்வுக்கான எல்லா முகாந்திரங்களையும் இந்த மனிதர்கள் அடைந்து விடுகிறார்கள். எனவே விஜயகாந்த் போன்றவர்களின் ஒவ்வொரு மேலேழும்புதல்களும் என்னை விசனத்துக்குள்ளாக்கிறது.  இந்தத் தேர்தலில் அப்படிப் பட்ட வருத்தம் இந்த சிறு கட்சிகளைப் பார்க்கும் போது தோன்றியது. 
இந்தத் தேர்தலில் எல்லா சிறு கட்சிகளும் பெரும் கட்சிகளால் கழட்டி விடப்பட்டன. இது குறித்து நடுத்தர வர்க்க மனோபாவம் மிகவும் சந்தோஷப் படுகிறது. ஆனால் இது உண்மையிலேயே வருத்தப் பட வேண்டிய ஒன்று. இப்படிக் கட்சிகள் தனியாக நிற்கும் போது ஒருவிதத்தில் அவற்றின் பலம் தனியாகத் தெரியும் என்பது உண்மையாக இருந்தாலும் இது சிருபானமியினரின் பிரதிநிதித்துவத்தை முற்றிலுமாக அழித்து விடும் என்பது நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. சாதாரணமாக சிறிய கட்சிகள் பெரிய கட்சிகளோடு சேரும் போது அவை தங்களது தனித்துவத்தை இழந்து விடுவது போல தோன்றினாலும், தேர்தலுக்குப் பிறகு சிறு கட்சிகளுக்கு தங்கள் கருத்தியல்களை எடுத்துரைக்கவும், தங்கள் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. நான் த.மு.மு.க- வை மனதில் வைத்துச் சொல்லுகிறேன்.  இது போன்ற சிறு கட்சிகளுக்கு தமிழகத்தில் ஒரு கணிசமான வாக்கு வங்கி இருந்தாலும் அவை ஒவ்வொரு பகுதியிலும் தனித்து நிற்கின்ற போது மிகச் சிறிய அளவிலேயே இருக்கும். உதாரணம். ஒரு சிறிய கட்சிக்கு ஒவ்வொரு யூனியனிலும் ஆயிரம் இரண்டாயிரம் வாக்குகள் இருந்தாலும் அதனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. தமிழகம் முழுவதும் நான்கு சதவித வாக்குகள் உள்ள ஒரு கட்சி ஒரு மாநகராட்சியையோ, நகராட்சியையோ  கைப்பற்றாமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

  • எனவே இந்தத் தேர்தலில் பெரும் கட்சிகளால் சிறு கட்சிகளுக்கு மறுக்கப் பட்ட அங்கிகாரம் சிறுபான்மையினருக்கு மறுக்கப் பட்ட அங்கீகாரமாகவும் உணமையான மனித உரிமை பிரச்சனைகளுக்கும் விடுதலைக் கருத்தியல்களுக்கும் மூடு விழா நடத்தும் முயற்சியாகப் பார்க்க வேண்டும். இப்போது நான் கம்யூனிஸ்டுகள், சீமான், வைகோ போன்றவர்களை மனதில் இருத்திப் பேசுகிறேன். இந்த சிறிய கட்சிகள்தான் ஓரளவேனும் கொள்கையோடு இருக்கின்றன. பெரும் கட்சிகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதையே கொள்கையாகக் கொண்டுள்ளன - அல்லது அவற்றிற்கான கொள்கைகளை அதிகாரத்தை வைக்க அவை பல நேரங்களில் சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கின்றன. எனவே, இந்தப் பஞ்சாயத்து தேர்தலைப் பொறுத்தவரையில் சிறு கட்சிகள் அனுதாபத்தோடும் கரிசனையோடும் பார்க்கப் பட வேண்டும்.  

சிறு கட்சிக்குப் போக வேண்டிய ஒரு வாக்கு வீணாகி விட்டதே என்ற குற்ற உணர்வு இப்போதும் எனக்கு ஓர் மூலையில் இருக்கிறது.

கட்டுரையாளர் - அ. பிரபாகரன்


இனி நான் - 
அ. பிரபாகரனுக்கு எனது சில கோணல் கேள்விகள்.
இந்த முறையாவது உங்களுக்கு ஓட்டுப் போடமுடியாதது பற்றி வருத்தம் வந்தது மிக்க மகிழ்ச்சி - அதோடு தேர்தல்தான் ஒரே நம்பிக்கை என்று முடிவுக்கு வந்தது குறித்தும் மகிழ்ச்சியே அடுத்த முறை தேர்தலுக்கு முன்பே இதுபற்றி சிந்தியுங்கள். 
  • ////இரண்டு மூன்று இடங்களில் முத்திரை குத்தி செல்லாததாக்கியிருக்கிறேன்.///  பலமுறை வாக்களிக்க செல்லாமல் இருந்திருக்கிறீர்கள்  சிலமுறை சென்று செல்லாததாக்கி இருக்கிறீர்கள் - பயங்கரமான ஆளா இருப்பிங்க போல இருக்கே.
  • கொள்கையுடைய சிறு கட்சிகள் என்று கம்யூனிஸ்டுகளைச் சொல்லி இருக்கிறீர்களே எந்தக் கம்யூனிஸ்டு என்று சொல்ல வில்லையே?
  • வைகோ கட்சி சிறு கட்சியா??!!
  • எல்லாரையும் சொன்னிங்க பா. ம. க வை விட்டு விட்டிர்களே - அது பெரிய கட்சி என்றா??!!
  • ///"குற்ற உணர்வு இப்போதும் எனக்கு ஓர் மூலையில் இருக்கிறது."///  தயவு செய்து உங்கள் மூளையிலும் வைத்துக் கொள்ளுங்கள் - அடுத்த முறை தவறாமல் வாக்களிக்கலாம்.
அப்பு


29.7.11

ராதிகா, ஜெயலலிதா, மம்தா

கடந்த மே மாதம் தமிழகத்திலும் இந்தியாவின் பல மாநிலங்களிலும் சட்ட மன்றத் தேர்தல் காய்ச்சல் தீவிரமாக இருந்த போது கனடாவில் பாராளுமன்றத் தேர்தல் நடை பெற்றது.  அதில் இந்தியா-இலங்கையைத் தவிர ஒரு பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிற முதல் பெண் – முதல் தமிழர் – அவர் ராதிகா சிற்சபையேசன். அவர் Sacarborough-Rouge River தொகுதியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
 
மே மாதம் வெளிவந்த தேர்தல் முடிவுகளில் இங்கேயும் பெண்கள் முக்கியத் துவம் வாய்ந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள் – செல்வி ஜெயலலிதா மற்றும் மம்தா பாநேர்ஜி வெற்றி பெற்றிருக்கிறார்கள். செல்வி ஜெயலலிதாவின் வெற்றியைக் காட்டிலும் மம்தாவின் வெற்றி மிகவும் ஒரு விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏறக்குறைய முற்பத்து  நான்கு ஆண்டுகள் பதவியில் இருந்த இடது சாரிகளை பதவியிறக்கம் செய்திருக்கிறார்.

இவர்களின் வெற்றி வெளியில் தெரிவதற்கு முன்பே ராதிகாவின் வெற்றி வெளிவந்து விட்டது. இருபத்தி மூன்று ஆண்டுகளாக லிபரல் கட்சியிடமிருந்த இடத்தை NDP பிரதிநிதியாக ராதிகா பெற்றிருக்கிறார். அவரின் கன்னிப் பேச்சு மூன்று மொழிகளை உள்ளடக்கியதாக இருந்தது. கனடாவின் பாராளுமன்றத்தில் தமிழில் உரையாற்றிய பெண்.

மக்களுடைய விருப்பத்தின் பேரில் முப்பது வயதுக்கு முன்பே பாராளுமன்ற உறுப்பினராகி இருக்கும் ராதிகாவைப் பின்பற்றி இன்னும் நிறைய பெண்கள் – அரசியலுக்கு வர வேண்டும். “மாற்றம்’ வேண்டும் என்கிற அதே முழக்கத்தை முன்வைத்தே NDP நிறைய இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது [எதிர்க் கட்சியாக].

  • நமது ஊரிலும், பள்ளிக் கல்லூரிகளில் மாணவர் பருவத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண்கள், அதற்குப் பிறகு எங்கேயோ காணாமல் போய் விடுகிறார்கள். அதைப் பொறுத்த வரை ஆண்களும் அப்படித்தான். 
  • ராதிகாவின் தொகுதியில் நீண்ட காலம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த, 'டெரெக் லி' இடமிருந்து பதவியைக் கைப் பற்றியிருக்கிறார். நீண்ட நாட்களாக தான் இருந்து விட்டதாகவும் மாற்றம் தேவை என்று தான் போட்டியிடாமலும் இருந்தார் டெரக். இங்கே கலைஞரை விட்டால் வேறு யாரும் இல்லை என்கிற நிலை இருக்கிறது. அவரும் அடிக்கடி அரசியலிலிருந்து விலகுவதாக அறிவிக்கிறார் - ஆனால் ஒரு போதும் நடப்பதாய்த் தெரியவில்லை. 
  •   எனவே ஆண்கள் பெண்கள், தங்கள் தொகுதியில் சமுதாய நோக்கில் வலம் வரும் இளைஞர்கள் மக்களால் கவனிக்கப் படுவார்கள் - நிச்சயமாய் -  
  • அரசியல் நாகரிகம் என்பது தமிழகத்தைத் தவிர பல இடங்களில் இருக்கிறது. ராதிகா, தனது முதல் உரையில் சபாநாயகரை வாழ்த்துகிறார். அந்தத் தொகுதிக்கு உழைத்த எதிர்க் கட்சி உறுப்பினரை நினைவு கூர்கிறார். மம்தாவின் பதவி ஏற்பு விழாவிற்கு ஜோதி பாசு நேரில் வருகிறார்.  இங்கே தான் நாகரிகம் என்பதே இல்லை -
  • அரசியல் என்பது சாக்கடைதான். ஆனால் உண்மையான நோக்கமும், தனது வாழ்வின் சிறு வயதிலிருந்தே உடைய சமூக நோக்கை தொடர்ந்து வெளிக் காட்டும் யாரையும், எந்த மக்களாக இருந்தாலும், யாரும் கை விட்டு விட மாட்டார்கள் என்பதே ராதிகாவின் வெற்றி காட்டுகிறது. மாற்றம் விரும்பும் பெண்கள் மாற்றம் கொண்டு வருவதற்குத் தங்களைத் தயார் படுத்துவதும் அவசியம். 

கடந்த வாரம் ஹில்லரி கிளிண்டன் சென்னை வந்தார் அரசு முறைப் பயணமாக வந்தார். ராதிகா அரசு முறைப் பயணம் மேற்கொள்ள இயலாது. தமிழக அரசு அவரை அழைத்து தமிழரை பெருமைப் படுத்த வேண்டும். ஈழத் தமிழர் சாகும் போதுதான் குரல் கொடுக்க வில்லை. நமக்கு புகழ் ஈட்டும் பொது கொண்டாடவாவது வேண்டாமா?

24.7.11

கலைஞர் - சொன்னதும் சொல்லாததும்

கலைஞர் சொன்னதும் சொல்லாததும் எழுதலாம் என்று அவர் பேசியதைப் பார்த்தவுடனேயே தோன்றியது.
  • சொன்னது - "நமக்கு நாமே தேடிக் கொண்ட முடிவு இது. நான் உணர்ந்த காரணத்தால்தான் இதைச் சொல்லுகின்றேன்." [சொல்லாதது] - கனிமொழி மாட்டிக்கொள்ளவில்லைஎன்றால் நான் உணர்ந்திருக்க முடியாது.
  • சொன்னது - "கட்சி புண்பட்டிருக்கிறதென்றால், நான் புண்பட்டிருக்கிறேன்." [சொல்ல வந்ததது] - நான் புன்பட்டிருக்கிறேன் என்றால் கட்சி புண்பட வேண்டும்.
  • சொன்னது - "அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி நாம் பதவிகளுக்காக பவுசுகளுக்காக ஆடம்பரங்களுக்காக அரசியலுக்காக பதவிகளைப் பெற்று அந்த அரசியலை அதற்குப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல;" [சொல்லாதது] - நான் பதவிக்கு வர வேண்டும், நான் அனுபவிக்க  வேண்டும், நான்.... நான் .....
  • சொன்னது - "இப்போது வெற்றி பெற்றிருக்கின்ற அ.தி.மு.கவின் வெற்றியில் கொள்கை நிர்ணயிக் கப்பட்டுள்ளதா என்று கேட்டால் ஒரு முட்டாள்கூட, ஆமாம் அந்தக் கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்று சொல்ல மாட்டான்." [சொல்ல விரும்பாதது] - மறந்தும் கூட தி. மு. க. ஏன் தோற்றது என்று ஒரு முட்டாளிடம் கூட கேட்டுவிடக் கூடாது - 
  • சொன்னது - "நமக்குக் கிடைத்திருக்கின்ற தோல்வி, நம்முடைய கொள்கைக்கு, நம்முடைய இலட்சியத்திற்கு, நம்முடைய எதிர்காலத்திற்கு, நம்முடைய சந்த தியினருக்கு, நம்முடைய வருங்கால தலைமுறைக்கு கிடைத்திருக்கக்கூடிய தோல்வி என்பதை நாம் மறந்துவிடக் கூடாது." [சொல்ல விரும்பியது] - எனக்குக் கிடைத்திருக்கின்ற ..., என்னுடைய குடும்பத்திற்கு ....., எங்கள் ......, என் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு...., என் வருங்காலத் தலைமுறைக்கு கிடைத்திருக்கின்ற தோல்வி என்பதை நாம் மறந்து விடக் கூடாது...
  • வருந்திச் சொன்னது - "ஏடுகளை ஒவ்வொரு நாளும் புரட்டினால், படிக்க முடியாத அளவிற்கு அதை படித்து முடிக்கலாமா, வேண்டாமா என்கின்ற அளவிற்கு அய்யுற்று, அதை கீழே எறிந்துவிட்டு வருகின்ற அளவிற்கு திமுக தோழன், தொண்டன், தன்னுடைய ரத்தத்தைக் கொட்டி வளர்த்தானே இந்த இயக்கத்தை வளர்த்த அந்தத் தொண்டன் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கின்றான், இவ்வளவு பெரிய தோல்வி நமக்கு வந்துவிட்டதே என்று." [சொல்ல விரும்பாதது தொண்டன் சொல்வதை] - இவ்வளவு பெரிய தோல்வி கலைஞரால் நமக்கு வந்துவிட்டதே என்று.
  • ...
  •  இதுக்கு மேல எழுத எனக்கு பொறுமையில்லை. ஆனால் சொல்லாததும் சொல்ல விரும்பாததும் இதுதான் - தான் எப்போது தன் அரசியலிலிருந்து ஓய்வு பெற்று ... [பெறுவாரா ...] ஸ்டாலினுக்கு வழி விடுவார் என்பதை. 
  • அம்மாவை நம்பியே நான் இதை எழுதியிருக்கிறேன் ...!
நன்றி - தினகரன் நாளிதழ் - ஜூலை 24 பக்கம் 5

 

27.5.11

போதுமடா சாமி

வலையுலக நண்பர்களே,

தேர்தல் முடிந்து விட்டது. புதிய ஆட்சி வந்து விட்டது. அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகுங்கள். ஏறக்குறைய ஆறு ஏழு மாதங்களாக 2 G  - இதே நடந்து கொண்டிருக்கிறது. இப்போது கிளைமாக்ஸ்.

கலைஞரின் கண்ணீர் கடிதம் - கனிமொழியின் பரிதவிப்பு - இன்னும் எல்லாப் பத்திரிக்கைகளும், எல்லா வலைகளும் இதையே எழுதிக் கொண்டிருக்கின்றன. எப்போது இது முடியும் என்று தெரியவில்லை? அவர்களின் குற்றங்களுக்கு அவர்கள் அனுபவிக்கிறார்கள். அவர்கள் அனுபவிக்கட்டும். அதை விட்டு விட்டு இன்னும் அதையே நாம் மீண்டும் புரட்டிப் போட்டு ஒன்றும் ஆவப் போவது இல்லை. இதில் என்னவென்றால், ஏறக்குறைய - 'நடுநிலையோடு' எழுதிக்கொண்டிருக்கிற வலைப் பதிவர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த நபர்கள் எல்லாம், இன்னும் அதே ரோதனையைப் பாடிக் கொண்டிருக்கும்போது, அவர்கள் மீது வாசிப்பாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகிறது என்பதை ஏன் நினைக்க மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை.

 இதில் எல்லாருமே பாதிக்கப் பட்டிருக்கிறோம் - இந்திய நாட்டின் குடிமகன்கள் என்கிற விதத்தில். எனவே தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தெல்லாம் இல்லை. உப்பத் தின்னவன் தண்ணி குடிச்சுத்தான் ஆகணும்.

இந்த வழக்கு நீதி மன்றத்தில் இருக்கிறது. இந்த வழக்கு வாய்தா போட்டு வாய்தா போட்டு இழுத்தடிக்காம இருக்கிறதுக்கு என்ன பண்ணணுமோ அதைப் பண்ணலாம். ஆனால் அதை விட்டுட்டு, கலைஞர் கண்ணீர் வடித்தார் - அது நீலிக் கண்ணீர். அடுத்தா நாள், கட்டாந்தரையில் படுத்தார் கனி மொழி - இதே பொழப்பா.
இங்கே யாரு பொது நலத்தோடு வேலை செய்யுறது. எல்லாரும் சுய நலம்தான். சிலருக்கு பண ஆசை - சிலருக்கு புகழ் ஆசை. எல்லாரும் அப்படித்தான்.
எனவே அடுத்த கட்ட முயற்சியில் இறங்குவது உத்தமம் என்று படுகிறது.

இப்படி தொடர்ந்து அதைப் பற்றியே எழுதிக் கொண்டிருப்பது, நமக்குள் ஒரு கிளர்ச்சியை, அக்களிப்பை, மனதுக்கு நிறைய சந்தோஷத்தைத் தருகிறது. மவனே அனுபவிடி... நீ ஆடுனப்ப ஒன்னும் பண்ண முடியலை - இப்ப என் வஞ்சத்தைத் தீர்க்க அதைப் பற்றியே எழுதுகிறேன்னு எழுதிக்கிட்டே இருக்கோம். இது நமக்குதான் நல்லதில்லை. அடுத்து என்ன செய்யலாம்னு யோசிக்காம வஞ்சம் தீர்ப்பது நல்லதில்லைன்னு மனதுக்குப் படுது. அதனால இதைப் பத்தி மறந்துறணும் அப்படின்னு சொல்லலை. அதைப் பற்றிய தொடர்ச்சி தேவை. ஆனால் அது மட்டுமே அப்படின்னு இருக்கிறது யாருக்கும் எதுவும் செய்யாது.

பெட்ரோல் விலை ஏறுது. எதுவும் மாற்றம் அடைந்தது போல தெரியலை. இது எங்க போயி முடியும்னு தெரியலை.
அரசியல் அதிகாரிகள், போலிசை ஏவிவிடும் காலம் இருக்கும் வரை, அரசியல் பலம் உள்ளவன் கையில் பதவி இழந்ததால், பலம் இழந்தவன் மாட்டுவான். அதுதான் அரசியல் உலகில் நியதி.


அப்படி அந்தக் கண்ணீர்க் கதையையே பேசிக் கொண்டிருப்பது இன்றைய ஆட்சி செய்வதை எல்லாம் நியாயப் படுத்தும் விதமாகவே இருக்கும். 

தலைமைச் செயலகத்தை பயன் படுத்தக் கூடாது ஏனெனில் கலைஞர் கட்டினார். சமச் சீர் கல்வி முறை தடை செய்யப் பட்டது. ஏனெனில் அதில் கலைஞர் வரலாறு மற்றும் செம்மொழி மாநாடு பற்றிய குறிப்பு உள்ளது. எனவே அதைத் தடை செய்வது நியாயம். யாரும் எதுவும் கேட்கமுடியாது. நாம் வளர்த்துவிடுவோம், அப்புறம் ....

கலைஞர் டாஸ்மாக்கை வளர்த்துவிட்டார்னு அதைத் தடைசெய்தாவது நல்லா இருக்கும். மக்கள் கொஞ்சம் பணக் கஷ்டம் இல்லாம வளர்ந்து போற விலைவாசில வண்டிக்காவது பெட்ரோல் போடலாம்.

போதும்டா சாமி!

18.5.11

... திருவிளையாடல் ஆரம்பம் - முதலில் தமிழத்தில்

பணநாயகம் தோற்று ஜனநாயகம் வென்றது என்று எல்லாருமே எழுதித் தள்ளிவிட்டோம். அமோக வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து இருக்கும் அம்மா விற்கு வாழ்த்துகள்.

பழைய தவறுகளிலிருந்து நிறைய கற்றுக் கொண்டிருப்பார் என்று எல்லோரும் எதிர் பார்க்கிறார்கள். ஆனால் அப்படி கற்றுக் கொள்ளுதல் நிறைய இருக்குமா எனத் தெரியவில்லை.

கடும் கோபத்தோடு எல்லாரும் சேர்ந்து கலைஞரின் குடும்பத்தைத் திட்டித் தீர்த்து ஆட்சி மாற்றம் கொண்டு வந்தாயிற்று. இது மக்கள்விரும்பிய மாற்றம். நாம் ஒன்றும் பெரிதாய் செய்துவிட வில்லை. எப்போதும், யார் வந்தாலும் இந்த இடித்துரைக்கும் கொள்கையில் நாம் குறியாய் இருக்க வேண்டும். அது ஐயாவாக இருந்தாலும் சரி அம்மாவாக இருந்தாலும் சரி.

ஏற்கனவே மன்னார்குடிக் குடும்பத்தினால் வந்த ஆட்சி மாற்றம். இப்போது திருக்குவளைக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது. ஆக மொத்தம் எப்படிப் பார்த்தாலும், மாற்றம் கருதி வாக்களித்த மக்களின் குடும்பங்கள் வாழ வேண்டும். 

ஏறக்குறைய ஆயிரம் கோடி செலவு செய்து கட்டப்பட்ட புதிய கட்டிடம் இப்போது  கேட்பாரற்றுக் கிடக்கப் போகிறது. இதற்கு யாரும் சரி என்று வக்காளத்தெல்லாம் வாங்கிக் கொண்டு இருக்க முடியாது. முந்தைய அரசு எல்லாக் கட்சியினரையும் ஒருங்கிணைத்துத்தான் இந்த முயற்சியில் இறங்கியிருக்க வேண்டும். அப்படியே இல்லை அது தவறு அல்லது குற்றம் என்றாலும், அதைப் பயன்படுத்தாமல் இருப்பது பெரிய குற்றம். 
ஏதோ, இதை கலைஞர் தனது தொலைக்காட்சியின் இலாபத்திலிருந்து கட்டியிருந்தால், [சும்மா ஒரு கற்பனைக்காக] அம்மா செய்வதை சரி என்றாவது சொல்லலாம். அம்மாவும் இன்னும் சில நாட்களில் இந்தக் கோட்டை சரியில்லை என்று இட மாற்றம் செய்வார். அது இன்னோர் இடத்தில், இன்னும் பிரமாண்டமாய் இன்னும் சில ஆயிரம் கோடிகள் கூடுதலாகவே இருக்கும்.  அதுவும் யார் பணம் - அம்மாவின் வருமானத்திலிருந்தா - இருந்தால் சந்தோசம்.
யாரும் கோபப்பட்டு - அவர்கள் போட்ட பாலங்களில் போக மாட்டீர்களா? என்றெல்லாம் கேட்டுவிடப் போகிறார்கள், அப்புறம் தனது வீட்டிலிருந்து கோட்டைக்கு ஹெலிகாப்டரில் மட்டும்தான் போவார்கள் - அப்படிப் போனாலும் சந்தோசம்தான் - சென்னை வாசிகள் முதல்வர் வருகைக்காக நிறுத்தி வைக்கப்படும் ட்ராபிக் கொடுமையிலிருந்து  தப்பிப்பார்கள்.

அம்மாவின் வருகையே ஆர்ப்பாட்டமாய் இருக்கிறது. சரவேடியோடு, அதிரடியால் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள்.

எனக்கு சின்னப் பிள்ளைகள் சொல்லும் - "உன் கூடக் கா!" ... சண்டைதான் நினைவுக்கு வருகிறது. 

நண்பர்களே:
இப்போதுதான் திருவிளையாடல் ஆரம்பம். 
இனிமேல்.......


14.5.11

தேர்தல் முடிவுகள் - அடுத்த தேர்தல் வரை நாம் மௌனிகள்

நேற்று விடியற்காலையில் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பு கொடுத்த தலைப்பு. எழுதிக்கொண்டிருக்கும் போதே அறுந்து போன தொடர்பு வருவதற்குள் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. சரி அதே தலைப்பு இருந்து விட்டுப் போகட்டுமே - எப்படி இருந்தாலும் அதுதானே உண்மை.

இன்று முழுவதும் காலை தொடங்கி இறுதி முடிவு வெளிவரும் வரை எல்லாத் தொலைக்காட்சிகளும், மைக் பிடித்துக் கொண்டு அல்லது மேசையைச் சுற்றி அமர்ந்துகொண்டு இறுதி முடிவு வரை பேசிக்கொண்டே இருந்து விட்டார்கள். நாம்தான் ஒன்றும் செய்யமுடியாமல் போய்விட்டது. blogger - க்கு நமது நன்றிகள்.

எல்லாருடைய எதிர்பார்ப்பிற்கும் மேலாகவே முடிவுகள் - அம்மாவே எதிர்பார்க்காத அசத்தலான முடிவுகள். ஏன் இப்படி ஒரு வெற்றி என்று அம்மாவுக்கே புரியாது. ஆனால் ஏன் இந்தத் தோல்வி என்று கலைஞருக்கு நன்றாகத் தெரியும்.

சீமான் மிக்க மகிழ்ச்சியோடு இருக்கலாம்.

வை.கோ அமைதி காத்ததன் மூலம், காமேடியனாக்கப் பட்டுவிட்டாரே என்று நான் எழுதினேன். ஆனால் தனது அமைதின் மூலம் இன்னும் அன்புச் சகோதரிக்கு அருகிலேயே இருக்கும் வாய்ப்பைப் பிரகாசப் படுத்திக் கொண்டார்.  சாணக்கியத்தனம் !

ஆட்சியில் பங்கு கேட்கமாட்டோம் என்று முன்கூட்டியே அறிவித்து விட்டதால் நாம் ஒரு காமெடி பார்க்கும் வாய்ப்பை இழந்து விட்டோம். கேட்டாலும் கிடைக்காது என்பதால் - "இந்தப் பழம் புளிக்கும்."

தனது வாயினாலேயே பேமஸ் ஆன வடிவேலு, அதாலேயே குட்டிச் சுவரைப் போய்விட்டார். ஒரு வேலை ரஜினியிடம் மண்டியிட்டால், மனோரமாவுக்கு வாய்ப்பு கிடைத்தது போல கிடைக்கலாம்! ஆனாலும் எழுந்து நடக்க முடியாது.

நாம் பல பேருக்கு நன்றி சொல்லவேண்டும். அதில் முதலாவது ஆற்காட்டார் - மின்சாரக் கடவுள். ராசா - தொலைபேசிக் கடவுள். காங்கிரஸ் - எமதர்மர்கள். இன்னும் நிறைய .....

தேர்தல் கமிஷன் - வெற்றி!

எது எப்படி இருந்தாலும், இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நாம் ஒன்றும் பேச முடியாது. ஒருவரா? ஒரு குடும்பமா? எதிர் பாராத சோகம் நிகழ்ந்தால் ஒழிய 2016 வரை நாம் மௌனிகள்தான்.

வாழ்க ஜனநாயகம்!

7.4.11

தேர்தல் - இரு கட்சியா ஒரு கட்சியா?

எதற்கெடுத்தாலும் அமெரிக்காவைப் பார் என்று சொல்லும் நாம் - இரு கட்சி தத்துவத்திற்கு ஏன் அதைப் பார்க்க மாட்டேன் என்கிறோம்?

நம் நாட்டைப் பொறுத்த வரை, பல கட்சித் திட்டம்தான் அமலில் இருக்கிறது.மாறாகஅமெரிக்காவைப் பொறுத்த வரை, பல கட்சித் திட்டம் என்பது, நாட்டின் ஸ்திரத் தன்மைக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உகந்தது அல்ல. எனவே இரு கட்சித் திட்டம்தான் நாட்டிற்கும் அனைவருக்கும் நல்லது என்று நினைக்கிறார்கள். வாக்களிப்பது என்பது டெமாக்ராட் அணிக்கு அல்லது ரிபப்ளிக்கன் அணிக்கு. அதற்குப் பிறகு வேறு கட்சிகள் இல்லை [அப்படியே இருந்தாலும் இவைகள் எதையாவது சார்ந்துதான் இருக்க வேண்டும்].
அதாவது, கட்சிகள் வலது, இடது என்கிற நிலையில்கவனிக்கப் படும்.

தமிழகத்தைப் பொறுத்த வரை, எத்தனைக் கட்சித் திட்டம் இருக்கிறது?

இந்தியாவின் உள் இருப்பதால், இதிலும் பல கட்சித்திட்டம் தான். ஆனால், தமிழகம் ஒரே கட்சித்திட்டத்தை மட்டும் கொண்டிருக்கிறது. இந்திய விடுதலைக்குப் பிறகு காங்கிரஸ் என்கிற ஒரே கட்சி, அண்ணாவிற்குப் பிறகு திராவிடக் கட்சி.
பெரியார் தேர்தலில் போட்டியிட விரும்பாததால் அது முன்னேற்றக் கழகமாகியது.  அப்போது மட்டும்தான் காங்கிரசுக்கு மாற்றாக, கொள்கையளவில் ஒரு கட்சி உதயமானது. அதற்குப் பிறகு காங்கிரஸ் தேய்ந்து, திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் ஓங்கியது.
ஏன் தமிழகம் வளராது இருக்கிறது அல்லது இன்னும் உண்மையான வளர்ச்சி அடையாமல் இருக்கிறது என்றால் அது இந்த ஒரு கட்சி ஆட்சி முறையினால்தான் என்றால் அது முற்றிலும் தவறல்ல.
அண்ணாவின் கொள்கை தமிழ் நாடு என்று மாற்றுவதோடு முடிந்து விட்டது. அதற்குப் பின் எல்லாமே வெறும் கொள்கைகளாக மட்டும்தான் அதுவ தேவைப் படும்போது எடுத்து விடும் கோஷங்கள். அவ்வளவே.
திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து, அ.தி. மு.க, பின்பு, ம.தி.மு.க. பிறகு கழகத்தோடு எந்தவிதத் தொடர்புமே இல்லாமல் தே.மு.தி.க. [சரியா?]. அதாவது எந்த வித கொள்கை வேறுபாடுகளுமின்றி, தனிமனித விரோதமும், பகையும் மட்டுமே முன்னிறுத்தப் பட்டு ஒரே கட்சியின் பல கிளைகள்.

இதுதான் நம்மைப் பொறுத்த வரை பல கட்சிகள். இந்தத் தேர்தலில் இருக்கும் இரு பெரியக் கூட்டணிக் கட்சிகளின் கதாநாயகிகளின் [தேர்தல் அறிக்கைங்க] உள்ளடக்கத்தைப் பார்த்தாலே நமக்கு இது புலப்படும்.


  • இதனால் அறிவது என்னவென்றால், தமிழகம் இப்படிக் கேட்டுச் சீரழியக் காரணம் இந்த ஒரு கட்சி ஆட்சி முறையே. அமெரிக்காவில் பலர் இரு கட்சி முறைக்கு எதிராகக் குரல் எழுப்புகிறார்கள். நாம் இங்கே ஒரு கட்சி ஆட்சி முறைக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டியிருக்கிறது. 
  • எது சிறந்தது? பல கட்சியா அல்லது இரு கட்சி ஆட்சி முறையா. திண்ணமாய்த் தெரிந்ததெல்லாம் இதுதான் - மோசமானது ஒரு கட்சி ஆட்சி.