27.5.11

போதுமடா சாமி

வலையுலக நண்பர்களே,

தேர்தல் முடிந்து விட்டது. புதிய ஆட்சி வந்து விட்டது. அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகுங்கள். ஏறக்குறைய ஆறு ஏழு மாதங்களாக 2 G  - இதே நடந்து கொண்டிருக்கிறது. இப்போது கிளைமாக்ஸ்.

கலைஞரின் கண்ணீர் கடிதம் - கனிமொழியின் பரிதவிப்பு - இன்னும் எல்லாப் பத்திரிக்கைகளும், எல்லா வலைகளும் இதையே எழுதிக் கொண்டிருக்கின்றன. எப்போது இது முடியும் என்று தெரியவில்லை? அவர்களின் குற்றங்களுக்கு அவர்கள் அனுபவிக்கிறார்கள். அவர்கள் அனுபவிக்கட்டும். அதை விட்டு விட்டு இன்னும் அதையே நாம் மீண்டும் புரட்டிப் போட்டு ஒன்றும் ஆவப் போவது இல்லை. இதில் என்னவென்றால், ஏறக்குறைய - 'நடுநிலையோடு' எழுதிக்கொண்டிருக்கிற வலைப் பதிவர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த நபர்கள் எல்லாம், இன்னும் அதே ரோதனையைப் பாடிக் கொண்டிருக்கும்போது, அவர்கள் மீது வாசிப்பாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகிறது என்பதை ஏன் நினைக்க மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை.

 இதில் எல்லாருமே பாதிக்கப் பட்டிருக்கிறோம் - இந்திய நாட்டின் குடிமகன்கள் என்கிற விதத்தில். எனவே தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தெல்லாம் இல்லை. உப்பத் தின்னவன் தண்ணி குடிச்சுத்தான் ஆகணும்.

இந்த வழக்கு நீதி மன்றத்தில் இருக்கிறது. இந்த வழக்கு வாய்தா போட்டு வாய்தா போட்டு இழுத்தடிக்காம இருக்கிறதுக்கு என்ன பண்ணணுமோ அதைப் பண்ணலாம். ஆனால் அதை விட்டுட்டு, கலைஞர் கண்ணீர் வடித்தார் - அது நீலிக் கண்ணீர். அடுத்தா நாள், கட்டாந்தரையில் படுத்தார் கனி மொழி - இதே பொழப்பா.
இங்கே யாரு பொது நலத்தோடு வேலை செய்யுறது. எல்லாரும் சுய நலம்தான். சிலருக்கு பண ஆசை - சிலருக்கு புகழ் ஆசை. எல்லாரும் அப்படித்தான்.
எனவே அடுத்த கட்ட முயற்சியில் இறங்குவது உத்தமம் என்று படுகிறது.

இப்படி தொடர்ந்து அதைப் பற்றியே எழுதிக் கொண்டிருப்பது, நமக்குள் ஒரு கிளர்ச்சியை, அக்களிப்பை, மனதுக்கு நிறைய சந்தோஷத்தைத் தருகிறது. மவனே அனுபவிடி... நீ ஆடுனப்ப ஒன்னும் பண்ண முடியலை - இப்ப என் வஞ்சத்தைத் தீர்க்க அதைப் பற்றியே எழுதுகிறேன்னு எழுதிக்கிட்டே இருக்கோம். இது நமக்குதான் நல்லதில்லை. அடுத்து என்ன செய்யலாம்னு யோசிக்காம வஞ்சம் தீர்ப்பது நல்லதில்லைன்னு மனதுக்குப் படுது. அதனால இதைப் பத்தி மறந்துறணும் அப்படின்னு சொல்லலை. அதைப் பற்றிய தொடர்ச்சி தேவை. ஆனால் அது மட்டுமே அப்படின்னு இருக்கிறது யாருக்கும் எதுவும் செய்யாது.

பெட்ரோல் விலை ஏறுது. எதுவும் மாற்றம் அடைந்தது போல தெரியலை. இது எங்க போயி முடியும்னு தெரியலை.
அரசியல் அதிகாரிகள், போலிசை ஏவிவிடும் காலம் இருக்கும் வரை, அரசியல் பலம் உள்ளவன் கையில் பதவி இழந்ததால், பலம் இழந்தவன் மாட்டுவான். அதுதான் அரசியல் உலகில் நியதி.


அப்படி அந்தக் கண்ணீர்க் கதையையே பேசிக் கொண்டிருப்பது இன்றைய ஆட்சி செய்வதை எல்லாம் நியாயப் படுத்தும் விதமாகவே இருக்கும். 

தலைமைச் செயலகத்தை பயன் படுத்தக் கூடாது ஏனெனில் கலைஞர் கட்டினார். சமச் சீர் கல்வி முறை தடை செய்யப் பட்டது. ஏனெனில் அதில் கலைஞர் வரலாறு மற்றும் செம்மொழி மாநாடு பற்றிய குறிப்பு உள்ளது. எனவே அதைத் தடை செய்வது நியாயம். யாரும் எதுவும் கேட்கமுடியாது. நாம் வளர்த்துவிடுவோம், அப்புறம் ....

கலைஞர் டாஸ்மாக்கை வளர்த்துவிட்டார்னு அதைத் தடைசெய்தாவது நல்லா இருக்கும். மக்கள் கொஞ்சம் பணக் கஷ்டம் இல்லாம வளர்ந்து போற விலைவாசில வண்டிக்காவது பெட்ரோல் போடலாம்.

போதும்டா சாமி!

24.5.11

'நால் வழி' மயானம் - இது விதியா?

  • தமிழக அரசின் சுற்றுலாத் துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சாலை விபத்தில் காலமானது மிகவும் துரதிர்ஷ்ட வசமானது. கடந்த அரசில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த கே.என். நேருவைத் தோற்கடித்த மரியம் பிச்சை சாலை விபத்தில் இறந்தது விதியின் செயலா என்று தெரியவில்லை.
  • ஒரு மனிதர் இறந்திருக்கும் போது அஞ்சலி செலுத்துவதைத் தாண்டி வேறு ஒன்றும் பேசாமல் இருப்பதே நாகரிகமாக இருக்கும். ஆனால் இதே போல தினமும் பல பேர் சாலை விபத்துகளில் இறந்து கொண்டிருக்கும் போது நாம் மௌனமாய் இருப்பது மனிதாபிமான செயலாக இருக்காது என்பதால் இதைப் பற்றி இந்த நேரத்தில் பேச வேண்டியிருக்கிறது.
  • கடந்த வருடம் மே மாத இறுதியில் என் நண்பர் ஒருவர் சாலை விபத்தில் இறந்தார். அதற்கு முன்பு பெங்களூரிலிருந்து சென்னைக்கு வேகமாக வந்தால் மூன்று மணி நேரத்திலும், கொஞ்சம் மெதுவாக வந்தால் மூன்றரை மணி நேரத்திலும் வரும் மற்றொரு நண்பர் இறந்தார். ஒருமுறை ப்ரார்த்தனாவில் 'இம்சை அரசன்' பார்க்க அடையாறு சிக்னலில் இருந்து கிளம்பி போனபோது அவரது வேகத்தில் நமக்கு மட்டுமல்ல வெளியிலிருப்பவர்களுக்கும் இம்சைதான். ஆனால் ஒரு த்ரில்லிங் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அவர்கள் இறந்த போது செய்வதறியாது நிற்கும் மனைவி, குழந்தைகள் இவர்களைப் பார்க்கிற போதுதான் மனம் செய்வதறியாது இருக்கிறது. த்ரில்லிங் எல்லாம் சுக்கு நூறாய்ப் போய் விடுகிறது. 
  • கடந்த வருடம், அந்த வேதனையில்தான் 'சாலை மரணம் நவீனக் கொடை' என்று எழுத வேண்டி வந்தது. மீண்டும் இந்த ஆண்டு அதைப் பற்றியே பேச வேண்டியிருக்கிறது.  இன்று தினமணி தலையங்கத்தில் - நால்வழிச் சாலைகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் எல்லாம் வேலை வாய்ப்பை உருவாக்குவதற்குப் பதில் நிறைய வேலையின்மையைத் தான் உருவாகியிருக்கிறது என்று எழுதியிருக்கிறார்கள். நாள் வழிச் சாலைகளினால் பயனே இல்லையா என்றெல்லாம் இல்லை. நமக்குப் பயன்படுத்தத் தெரியவில்லை என்றுதான் பொருள். 
  • வழுக்குசாலைகள். முன்பு முதல் நாள் இரவு பேருந்து எடுத்தால் அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு மேல்தான் சென்னைக்கு வந்து சேருவோம். அது படிப் படியாய் நேரம் குறைந்து இப்போது எவ்வளவு நேரத்தில் போகும் என்ற நேரத்தையே பேருந்துகளில் விளம்பரமாய் எழுதி வைத்து விடுகிறார்கள். ஆனால் நால்வழிச் சாலைகளில் பயங்கரத் தடைகள். ஒவ்வொரு ஊருக்கு நடுவிலும் குறுக்குச் சாலைகள். ஒரு பக்கமே செல்ல வேண்டிய சாலைகளில், சொந்த ஊரின் நண்பர்கள் பெற்றோலை சேமிக்க அதிலேயே எதிர்ப் புறம் வர, மாடுகள் குறுக்கே வர, டிராக்டர்கள் திடீரென முளைக்க, டாங்கர்கள் படீரென வளைக்க - இவைகளையெல்லாம் தாண்டி நான்கு நான்கரை மணி நேரத்தில் சென்னைக்குச் செல்லும் ஓட்டுனர்களின் வீரம் தான் தினம் தினம் நாள் வழிச் சாலையை மயானமாக்கிக் கொண்டிருக்கிறது. 
  • எத்தனை எத்தனை விபத்துகள்? ஓட்டுனர் உரிமம் இருக்கான்னு செக் பண்றாங்களே - அவனுக்கு ஓட்டுனர் உரிமம் ஒழுங்காக வழங்கப் படுகிறதான்னு செக் பண்றாங்களா? 
  • கம்பியூட்டரை எதுக்குப் பயன்படுத்துரான்களோ இல்லையோ போலி உரிமம் வழங்க நிறையப் பயன் படுத்துகிறார்கள். இருநூற்றி ஐம்பது ரூபாய்க்கு உரிமம் வழங்கும் DTP சென்டர்கள் சென்னையில் நிறைய இருக்கின்றன.
  • மஞ்சள் கோடு, இடைவெளியிட்ட வெள்ளைக் கோடுகள், இடைவெளியில்லா வெள்ளைக் கோடுகள் இதற்கெல்லாம் என்ன அர்த்தம்னு எத்தனை ஓட்டுனர்களுக்குத் தெரியும் என்பதே பெரிய கேள்விக் குறிதான். 
  • indicator இல்லாத வண்டிகள்தான் அதிகம் - அப்படியே இருந்தாலும் அதைப் பயன்படுத்துவது இல்லை. எப்படிப் பயன்படுத்தனும்னு தெரியாது. வலது பக்க இண்டிகேட்டரை வலது பக்கம் திரும்பவும் பயன்படுத்துகிறார்கள், பின்னால் வரும் வண்டியை முன்னே போக அனுமதிக்கவும் பயன்படுத்துகிறார்கள். இவன் எதுக்குப் போடுறான்னு பின்னாடி வர்ற வண்டிக்கு எப்படிப் புரியும்? அவன் என்ன கடவுளா? நம்மை போகச் சொல்றான்னு பின்னாடி வர்றவன் முன்னாடிப் போக, முன்னாடிப் போறவனும் வலது பக்கம் திரும்ப அப்புறம் என்ன 'சங்குதான்.'
  • லேன்கள் உள்ள சாலைகளில் மெதுவாகப் போகிறவன் இடது பக்கம்தான் போக வேண்டும் - அப்போதுதான் overtake பண்றவன் அடுத்த லேனில் போக வசதியாக இருக்கும் - ஏனெனில் ஓட்டுனர் இருக்கை வலது புறம் தான் உள்ளது. ஆனால் இங்கே மெதுவாப் போறவன் வலது பக்கம் போறான் - எப்படி ஓவர்டேக் பண்ண முடியும் - அதுக்குத் தான் வண்டிக்கு கிளீனர் வேற... அப்பா சாமி...
  • நால்வழிச் சாலை என்பதால் வழுக்கிக் கொண்டு செல்லளாம்னு லேட்டகக் கிளம்புவது - அப்புறம் ஓட்டுனரைக் குறை சொல்லவும் கூடாது.  நேரத்தோடு கிளம்பி முன்பே போய் சேருவோம் என்கிற எண்ணம் இல்லாமல், லேட்டாகக்க் கிளம்பி மொத்தமாய்ப் போய்ச் சேருவதுதான் வழக்கமாய் இருக்கிறது. 
  • ஓட்டுனர்களின் உணர்வு கட்டுப் பாடு என்பதும் இல்லாமல் போய் விட்டது. யார் மேலயாவது கோபம்னா அதை வண்டி ஓட்டும்போதுதான் காண்பிக்கிறோம். சைக்கிள் gap பில் ஆட்டோ ஓட்டுற ஆட்கள் தான் அதிகம். 
  • இப்படி இருக்கிற போது வெறும் சாலைப் பாதுகாப்பு வாரம் ஒன்றும் செய்துவிட முடியாது. விதியாய்க் குறை சொல்லக் கூடாது - இது மதியின்மைதான். இதைப் பற்றி யாரும் எதுவும் செய்துவிடப் போவது இல்லை.
  • ஒட்டுனராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் விபத்தை ஒழிக்க முடியாது. 

தொடர்புடைய பழைய கட்டுரைகள்:

சாலை மரணம் - நவீன கொடை

இணையாக் கோடுகள் பிரிக்கும் உயிர்கள்

 


    18.5.11

    ... திருவிளையாடல் ஆரம்பம் - முதலில் தமிழத்தில்

    பணநாயகம் தோற்று ஜனநாயகம் வென்றது என்று எல்லாருமே எழுதித் தள்ளிவிட்டோம். அமோக வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து இருக்கும் அம்மா விற்கு வாழ்த்துகள்.

    பழைய தவறுகளிலிருந்து நிறைய கற்றுக் கொண்டிருப்பார் என்று எல்லோரும் எதிர் பார்க்கிறார்கள். ஆனால் அப்படி கற்றுக் கொள்ளுதல் நிறைய இருக்குமா எனத் தெரியவில்லை.

    கடும் கோபத்தோடு எல்லாரும் சேர்ந்து கலைஞரின் குடும்பத்தைத் திட்டித் தீர்த்து ஆட்சி மாற்றம் கொண்டு வந்தாயிற்று. இது மக்கள்விரும்பிய மாற்றம். நாம் ஒன்றும் பெரிதாய் செய்துவிட வில்லை. எப்போதும், யார் வந்தாலும் இந்த இடித்துரைக்கும் கொள்கையில் நாம் குறியாய் இருக்க வேண்டும். அது ஐயாவாக இருந்தாலும் சரி அம்மாவாக இருந்தாலும் சரி.

    ஏற்கனவே மன்னார்குடிக் குடும்பத்தினால் வந்த ஆட்சி மாற்றம். இப்போது திருக்குவளைக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது. ஆக மொத்தம் எப்படிப் பார்த்தாலும், மாற்றம் கருதி வாக்களித்த மக்களின் குடும்பங்கள் வாழ வேண்டும். 

    ஏறக்குறைய ஆயிரம் கோடி செலவு செய்து கட்டப்பட்ட புதிய கட்டிடம் இப்போது  கேட்பாரற்றுக் கிடக்கப் போகிறது. இதற்கு யாரும் சரி என்று வக்காளத்தெல்லாம் வாங்கிக் கொண்டு இருக்க முடியாது. முந்தைய அரசு எல்லாக் கட்சியினரையும் ஒருங்கிணைத்துத்தான் இந்த முயற்சியில் இறங்கியிருக்க வேண்டும். அப்படியே இல்லை அது தவறு அல்லது குற்றம் என்றாலும், அதைப் பயன்படுத்தாமல் இருப்பது பெரிய குற்றம். 
    ஏதோ, இதை கலைஞர் தனது தொலைக்காட்சியின் இலாபத்திலிருந்து கட்டியிருந்தால், [சும்மா ஒரு கற்பனைக்காக] அம்மா செய்வதை சரி என்றாவது சொல்லலாம். அம்மாவும் இன்னும் சில நாட்களில் இந்தக் கோட்டை சரியில்லை என்று இட மாற்றம் செய்வார். அது இன்னோர் இடத்தில், இன்னும் பிரமாண்டமாய் இன்னும் சில ஆயிரம் கோடிகள் கூடுதலாகவே இருக்கும்.  அதுவும் யார் பணம் - அம்மாவின் வருமானத்திலிருந்தா - இருந்தால் சந்தோசம்.
    யாரும் கோபப்பட்டு - அவர்கள் போட்ட பாலங்களில் போக மாட்டீர்களா? என்றெல்லாம் கேட்டுவிடப் போகிறார்கள், அப்புறம் தனது வீட்டிலிருந்து கோட்டைக்கு ஹெலிகாப்டரில் மட்டும்தான் போவார்கள் - அப்படிப் போனாலும் சந்தோசம்தான் - சென்னை வாசிகள் முதல்வர் வருகைக்காக நிறுத்தி வைக்கப்படும் ட்ராபிக் கொடுமையிலிருந்து  தப்பிப்பார்கள்.

    அம்மாவின் வருகையே ஆர்ப்பாட்டமாய் இருக்கிறது. சரவேடியோடு, அதிரடியால் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள்.

    எனக்கு சின்னப் பிள்ளைகள் சொல்லும் - "உன் கூடக் கா!" ... சண்டைதான் நினைவுக்கு வருகிறது. 

    நண்பர்களே:
    இப்போதுதான் திருவிளையாடல் ஆரம்பம். 
    இனிமேல்.......


    14.5.11

    தேர்தல் முடிவுகள் - அடுத்த தேர்தல் வரை நாம் மௌனிகள்

    நேற்று விடியற்காலையில் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பு கொடுத்த தலைப்பு. எழுதிக்கொண்டிருக்கும் போதே அறுந்து போன தொடர்பு வருவதற்குள் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. சரி அதே தலைப்பு இருந்து விட்டுப் போகட்டுமே - எப்படி இருந்தாலும் அதுதானே உண்மை.

    இன்று முழுவதும் காலை தொடங்கி இறுதி முடிவு வெளிவரும் வரை எல்லாத் தொலைக்காட்சிகளும், மைக் பிடித்துக் கொண்டு அல்லது மேசையைச் சுற்றி அமர்ந்துகொண்டு இறுதி முடிவு வரை பேசிக்கொண்டே இருந்து விட்டார்கள். நாம்தான் ஒன்றும் செய்யமுடியாமல் போய்விட்டது. blogger - க்கு நமது நன்றிகள்.

    எல்லாருடைய எதிர்பார்ப்பிற்கும் மேலாகவே முடிவுகள் - அம்மாவே எதிர்பார்க்காத அசத்தலான முடிவுகள். ஏன் இப்படி ஒரு வெற்றி என்று அம்மாவுக்கே புரியாது. ஆனால் ஏன் இந்தத் தோல்வி என்று கலைஞருக்கு நன்றாகத் தெரியும்.

    சீமான் மிக்க மகிழ்ச்சியோடு இருக்கலாம்.

    வை.கோ அமைதி காத்ததன் மூலம், காமேடியனாக்கப் பட்டுவிட்டாரே என்று நான் எழுதினேன். ஆனால் தனது அமைதின் மூலம் இன்னும் அன்புச் சகோதரிக்கு அருகிலேயே இருக்கும் வாய்ப்பைப் பிரகாசப் படுத்திக் கொண்டார்.  சாணக்கியத்தனம் !

    ஆட்சியில் பங்கு கேட்கமாட்டோம் என்று முன்கூட்டியே அறிவித்து விட்டதால் நாம் ஒரு காமெடி பார்க்கும் வாய்ப்பை இழந்து விட்டோம். கேட்டாலும் கிடைக்காது என்பதால் - "இந்தப் பழம் புளிக்கும்."

    தனது வாயினாலேயே பேமஸ் ஆன வடிவேலு, அதாலேயே குட்டிச் சுவரைப் போய்விட்டார். ஒரு வேலை ரஜினியிடம் மண்டியிட்டால், மனோரமாவுக்கு வாய்ப்பு கிடைத்தது போல கிடைக்கலாம்! ஆனாலும் எழுந்து நடக்க முடியாது.

    நாம் பல பேருக்கு நன்றி சொல்லவேண்டும். அதில் முதலாவது ஆற்காட்டார் - மின்சாரக் கடவுள். ராசா - தொலைபேசிக் கடவுள். காங்கிரஸ் - எமதர்மர்கள். இன்னும் நிறைய .....

    தேர்தல் கமிஷன் - வெற்றி!

    எது எப்படி இருந்தாலும், இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நாம் ஒன்றும் பேச முடியாது. ஒருவரா? ஒரு குடும்பமா? எதிர் பாராத சோகம் நிகழ்ந்தால் ஒழிய 2016 வரை நாம் மௌனிகள்தான்.

    வாழ்க ஜனநாயகம்!

    11.5.11

    பட்டி மன்றமும் - நீதி மன்றமும்

    • சில நாட்களுக்கு முன்பு, கலைஞர் தொலைக் காட்சியில் ஒரு பட்டி மன்றம். உழைப்பாளர்களுக்கு களைப்பைப் போக்க பெரிதும் உதவுவது நாட்டுப் புறப் பாடல்களா அல்லது திரைப் படப் பாடல்களா? லியோனி எப்போது இந்தத் திரைப்படப் பாடல்களை விட்டு வெளியே வரப் போகிறார் என்று தெரியவில்லை. எப்போது பார்த்தாலும் திரைப் படம் தொடர்பான பட்டி மன்றம்தான். ஆனால் தமிழ் கூறும் நல்லுலகும் அப்படித்தானே இருக்கிறது. எல்லாமே நமக்குத் திரைப் படம் சம்பந்தப் பட்டவைகள்தானே. நாம் எப்போதுதான் அதைவிட்டு மீண்டு வரப் போகிறோம் என்றுதான் தெரியவில்லை. 
      • சரி அது இருந்து விட்டுப் போகட்டும். அன்றைய தீர்ப்பை முடிவு செய்ய உதவியது, கலைஞரின் பொன்னர் சங்கர் - அதாவது திரைப் படப் பாடல்கள். 
      • எந்தப் பட்டி மன்றங்களும், பேச்சாளர்களின் விவாதத்தை முன்வைத்து யார் மிகச் சிறப்பாக வாதடியிருக்கிரார்களோ அதை முன்னிறுத்தி ஒரு போதும் தீர்ப்பு வருவதில்லை. நீதிபதி - பட்டிமன்ற நடுவர் - என்ன நினைக்கிறாரோ அதுதான் எப்போதும் தீர்ப்பாக வருகிறது. பேச்சாளர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் ஒரு போதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுவதில்லை என்பதுதான் கவனிக்கப் படவேண்டியது. 
      • மேலும், அன்றைய தினம் கலைஞர் அவர்கள் பட்டிமன்றத்தில் கலந்து கொண்டதாலும், அவரும் திரைப்படத்தோடு தொடர்பு கொண்டவர் என்பதாலும், அண்மையில் அவரது பொன்னர் சங்கர் வெளிவந்தது என்பதாலும், இந்தத் தீர்ப்பு கலைஞருக்கு பிடிக்கும் என்பதாலும் அந்தத் தீர்ப்பு என்றே கருத வேண்டியிருக்கிறது. 
    • நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்பும் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்குப் பிடிக்கும் விதத்திலேயே வழங்கப் படுகிறதோ என்று ஒரு சந்தேகம் - நீதி மன்றத்தை அவமதிக்கும் எண்ணமெல்லாம் நமக்கு இல்லை. நடக்கிற நிகழ்வுகளைப் பார்த்தால் அப்படித் தோன்றுகிறது என்பதால் இந்த அய்யம். பதினான்காம் தேதிதான் ஒரு தீர்ப்பு வரும் என்று சொல்லியிருக்கிறார்கள்  - இதைப் படித்தவுடன் எனக்கு அந்தப் பட்டிமன்றம்தான் நினைவுக்கு வந்தது. - ஏன் பதினான்காம் தேதி? 
      • தேர்தல் முடிவுகள் இந்தத் தீர்ப்பை நிர்ணயம் செய்யலாம்.  
      • பட்டிமன்றங்கள் போலத்தான் நீதி மன்றங்களும் இருக்கின்றன
    கலைஞருக்கும் இது தெரியும் - அவரின் சக்திக்கு உட்பட்ட இடங்களில் அவரின் விருப்படியே தீர்ப்பு வருகிறது. அதுபோலவே இன்னும் அதிக சக்தி வாய்ந்தவர்கள் இருக்கும் இடங்களில் அப்படித்தான் இருக்கும் என்பதை அவர் அறிவார்.

    5.5.11

    பின் லேடன் அழிப்பு (!) - இனிமேல் உலகம் அமைதியாய் இருக்குமா?

    • ஒபாமா தேர்தலுக்குத் தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்த போது, அவர் தன்னை இஸ்லாமியர்களிடமிருந்து வேறு படுத்திக் கொள்ளாமல் இருந்த தருணங்களில், ஒபாமாவை - ஒசாமா போல மீடியா சித்தரித்தது. "Justice is done" என்று ஒசாமைவைப் போட்டுத் தள்ளுவதை நேரில் பார்த்த பிறகு - எனது கட்டளைப் படி எல்லாம் நடந்தது என்று என்று சொன்னதன் வழியாய் தான் தீவிரவாதத்தின் எதிரி என்று நிலை நாட்டியிருக்கிறார்.
      • ஆனால் புஷ் சதாம் உசேனைப் பிடித்ததைச் சொன்ன போது அவரிடம் இருந்த கர்வமான சிரிப்பு ஒசாமைவைக் கொன்றதாகச் சொன்ன ஒபாமாவிடம் இல்லை. "JUSTICE" -
      • இவ்வளவு நாட்கள் இல்லாமல் திடீரென்று ground zero வுக்குச் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார் ஒபமா. 
      • இழந்த பாப்புலரிடியைப் பெற மனிதர்களின் emotion ஐத் தொடுவதையே எல்லா அரசியல் வாதிகளும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
    •  ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள் தங்களது பாதுகாப்பில் வைத்திருந்த பின் லேடனைப் பற்றிய தகவல்கள் எப்படி அமெரிக்காவிற்குத் தெரிந்தது என்றுதான் பாகிஸ்தானுக்கு ஒரே கவலை. இது பாகிஸ்தானுக்குத் தெரியாது என்று அந்த அரசு சொல்லுவதெல்லாம் நம்பும் படியாக இல்லை. இன்னைக்கு பந்த் இல்லை ஆனால் மவுன்ட் ரோடு காலியா இருந்தது அப்படின்னு சொல்றதை நம்புறவங்க வேண்ணா இதை நம்பலாம். இத்தனைக்குப் பிறகும், அமெரிக்கா பாகிஸ்தானுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டுதான் இருக்கும்.  இது இந்தியாவுக்குச் செக். 

    • அமெரிக்கா அடுத்த நாட்டின் எல்லைக்குள் அவர்களின் அனுமதி இன்றி எப்படி நுழைய முடியும் என்பதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை. உலகத்தின் அபாயகரமான தீவிரவாதியாக இருந்தால் கூட - தீவிரவாதிகளின் வன்முறையை விட இந்த அரசு அத்துமீறல் வன்முறைகள் ஆபத்தானவை. எங்கே தவறு நடந்தாலும், குற்றவாளி இருந்தாலும், தாங்களே தண்டிக்கப் பிறந்தவர்கள் என்கிற கர்வத்தை இது வளர்த்தெடுக்கும். இஸ்ரேலுக்கு இது அதிகமாக உண்டு. அமெரிக்காவும் அதற்குச் சளைத்தவர்கள் இல்லை. இத்தனைக்குப் பிறகும் பாகிஸ்தான் அமெரிக்காவுடன் கொஞ்சிக் குலாவும்.  இது இந்தியாவுக்குச் செக். 

    • உலகின் மிக அபாயகரமான  தீவிரவாதி இறந்துவிட்டான். இனிமேல் உலகம் அமைதியாய் இருக்கும் என்று சில பத்திரிகைகள் எழுதியிருக்கின்றன. பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

    • உலக வல்லரசு தான்தான் என்று மீண்டும் அமேரிக்கா நிலை நிறுத்தும் முயற்சியே இது. அமெரிக்க பிரஜைகள் குற்றவாளிகளாக இருந்தாலும், வேறு எந்த நாட்டிற்கும் அனுப்ப மறுக்கும் இந்த மனித உரிமையை மதிக்கும் இந்த மனிதர்கள், தங்களுக்கு வேண்டாதவர்கள் என்றால் எங்கேயும் சென்று அடிப்பார்கள். தாங்களே வளர்த்து விட்ட சதாம், மற்றும் பின் லேடன் தங்களுக்கு எதிராகத் திரும்பிய போதுதான் அவர்கள் தீவிரவாதிகளாகவும், அபாயகரமான மனிதர்களாகவும் தெரிகிறார்கள். இந்த சித்து வேலைகளை  எல்லாம் அமெரிக்கா நிறுத்தினாலே தீவிரவாதிகள் உலகில் குறைந்து விடுவார்கள். 

    • சதாமிடமிருந்து அமேரிக்கா ஒன்றைக் கற்றுக் கொண்டது.  இம்முறை அந்தத் தவற்றை செய்து விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்கள். எதற்கு ஒருத்தனை உயிரோடு பிடிக்க வேண்டும், அப்புறம் கோர்ட்டு கேசுன்னு அலையணும். போவோம் சுடுவோம். முடிஞ்சது. தமிழ் சினிமாவில் இராணுவ வீரர்களாக நடிக்கும் நடிகர்கள் யாரேனும் idea கொடுத்திருப்பார்களோ ?

    • கடைசியா ... எனக்கென்னமோ இறந்து போன வீரப்பனை சுட்டு தமிழக அதிகாரிகள் பேர் தேடிக்கொண்டது போல, கிட்னி செயலிழந்து இறந்து போன பின் லேடனை அமெரிக்கர்கள் சுட்டு பேர் வாங்குகிறார்களோ என்றுதான் சந்தேகம்.

      2.5.11

      இணையம் இல்லா உலகம் இணையற்ற உலகம்


      எல்லா நாடுகளும் நகரங்களும், ஒன்றோடு ஒன்று பிண்ணி இணையத்தால் பிணைக்கப்பட்டு இருப்பது உண்மையென்றாலும் கூட, எல்லா நாடுகளிலும், ஏதாவது கிராமம் இணையத்திற்கு அப்பாற்பட்டுதான் இருக்கிறது.

      அப்படி ஒரு கிராமத்தில் வருடத்திற்கு ஒருமுறை, நான்கைந்து நாட்கள் குடியிருக்க முடிவு செய்தால் மிக நன்றாக இருக்கும். அப்படி இணைக்கப்படாத கிராமத்தின் அழகும், மாசு படாத எழிலும், எந்த நாடாக இருந்ததாலும், மனத்தைக் கிறங்க வைக்கும்.

      அப்படியே இல்லாவிட்டாலும், இணையத்தால் இணைக்கப்படாமல் இருக்க நீங்கள் முடிவு செய்தால், நீங்கள் பார்க்கும் எந்த நகரமும் திடீரென்று வேறு விதமாகத் தோன்றும்.
      எல்லாவற்றிற்கும் மேலாக, எப்போதும், கணினியை இயக்கிக் கொண்டிருக்கும் கைகளும், மிக முக்கியமானதென்று நினைத்துக் கொண்டு எழுதும் இ-மெயில்களும், மொக்கைக் கட்டுரைகளும்...

      இதெல்லாம் இல்லாமல், கைகளும் மனதும் சிறகடித்துப் பறக்கும் அனுபவத்தை எல்லாரும் அனுபவிக்க வேண்டும்.
      உங்கள் blog- கிற்கு ஒரு நாள் விடுமுறை விடுங்கள் அப்படியே முடியுமெனில், இ-மெயிலிற்கு சில நாட்கள் விடுமுறை விடுங்கள். இன்னும் முடியுமென்றால், ஒட்டு மொத்தமாக கணினிக்கு ஒரு வாரம் ஓய்வு கொடுங்கள்.

      கணினிக்கும் கணினிக்கும் உள்ள இணைப்பைத் தாண்டி, இயற்கையின் இணைப்பில் இணைந்தால் அதனால் வரும் சுகம் தனிதான். மனதோடு பேசும், இயற்கையின் குரல் நம்மை வெகுவாய் ஈர்க்கும்.

      உலகம் பெரிதாய் ஒன்றும் மாறிவிடாது. நாம் எதையும் இழக்கப் போவதும் இல்லை. இணையத்தின் இணைப்பிலிருந்து விடுபட்ட இந்த மூன்று வாரங்கள் எனக்கு இனிதாய் இருந்தன. இந்த அனுபவம் எல்லாரும் பெற வேண்டும்.