20.9.16

தேசப் பற்று - சில கேள்விகள்

இந்தியா என் நாடு என்பதிலும் 
அதில் நான் உறுப்பினன் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லாமல்தான் இருந்தேன் - இருக்கிறேன் - 

ஆனால் எப்போதும் மீண்டும் மீண்டும் தேசப்பற்றை உறுதி செய்யும் குரல்கள் எழும்பிக் கொண்டே இருக்கின்றன.

ராம்குமார் சிறையில் கொல்லப் பட்டதற்கு வரும் எதிர்ப்புகளைக் கண்டு தேசியப் பற்றாளர்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.

"குற்றவாளி ராம்குமார் சிறையில் இறந்ததற்கு கொதித்துப் போயிருக்கிறீர்களே எத்தனை பேருக்கு எல்லையில் ராணுவ வீரர்கள் இறந்தது நமக்குத் தெரியும்? - நீங்கள் எல்லாம் மனிதர்களா? இந்தியர்களா?
ஜெய் ஹிந்த்" - என்று ஒரு செய்தி வாட்ஸ் ஆப் - பில் வந்தது.
= = = = 

இறந்த இராணுவ வீரர்களுக்கு வீர வணக்கங்களும் 
அவர்களை இழந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

= = = = 

ஐயா தேசப் பற்றாளரே 
இப்ப எதுக்கு இவ்வளவு கோபம்?

ஆற்றை அதன் போக்கில் விடாமல் தடுத்த கர்நாடக நண்பர்களை பார்த்து சொல்லுங்கள் - ஜெய்ஹிந்த்...

இந்தியாவில் அங்கம் வகிக்கும் தமிழகத்திற்கு சொட்டு நீர் கூட கொடுக்க முடியாது என்று சொல்லி தமிழகப் பதிவெண் கொண்ட பேருந்துகளை, சரக்கு லாரிகளை, கார்களை எரித்த அவர்களிடம் சொல்லுங்கள் ஜெய் ஹிந்த்...

தமிழ் பேசுகிறான் என்பதற்காக அவர்களை, துகில் உரித்து, அறைந்து, காவிரி கன்னடர்களுக்கே என்று கன்னடத்தில் சொல்ல வைத்த அந்த காட்டுமிராண்டிகளைப் பார்த்து சொல்லுங்கள் ஜெய் ஹிந்த் ....

அங்கே அடிவாங்கியவர்கள் இந்தியர்கள் இல்லையா?
இழந்த சொத்துக்கள் இந்தியாவைச் சார்ந்தது இல்லையா? 

அப்போதெல்லாம் ஆவேசப் படாத நீங்கள் திடீரென பாய்ந்து வருவது ஏன்?

எல்லைபாதுகாப்பு எப்போதும் ஆபத்து நிறைந்ததுதான். அவர்களுக்கு சல்யூட் செய்ய வேண்டியது அவசியம் தான்... அதற்காக,

இந்தத் தருணத்தில் நடக்கும் காட்டு மிராண்டித்தனங்களை பற்றி நாம் பேசக் கூடாதா?

இந்தத் தருணத்தில் நடக்கும் உரிமை மீறல்கள் பற்றி பேசிக் கூடாதா?

இந்தியாவின் பாதுகாப்புக்கு எவ்வளவு முக்கியத் துவம் இருக்கிறதோ அந்த அளவுக்கு நீதிமன்றங்களும் முக்கியம். நீதிமன்றங்களை அவமதிக்கும் போதும் இந்த ஆவேசம் வேண்டும்.

சட்டத் துறையைப் போல காவலும் அவசியம்தான். காவல் தூதர்கள் மனித உரிமைகளையும் மீற முடியாது. குற்றம் உறுதி செய்யப் படும் வரை அவன் குற்றவாளி அல்ல. நாளை உங்களைக் கூட கைது செய்யலாம். சிறையில் வைக்கலாம். அதனால் நீங்கள் குற்றவாளி ஆகிவிட மாட்டீர்கள். உங்களுக்கும் மர்மமான சாவு வரலாம். அப்போதும் நாங்கள் மர்ம இறப்புகளுக்கு விளக்கம் கேட்டுக் குரல் எழுப்புவோம்.

ஏனெனில் மனித உரிமை என்பது எல்லாருக்கும் பொதுவானது.

13.9.16

காவு வாங்கும் காவிரி

ஆற்றுக்கு அணை 
வயலில் மனை
 தீராத வினை

அவன் ஆற்றில் அணை போடுகிறான் 
நாம் வயலில் மனை போடுகிறோம்.


அவனுக்கு உணவு தேவை - எனவே ஆற்றில் நீர் பதுக்குகிறான்.
 நமக்கு மனை தேவை எனவே ஆற்றில் மணல் எடுக்கிறோம்.

அவன் அணை கட்டி நீரைத் தேக்குகிறான்.
நாம் நீர் தேங்க இடமில்லாமல் மனை  காட்டுகிறோம்.

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் 
ஆற்றுக்கு அணை 
என்பது அதோடு முடிந்து விடுவதல்ல 

அதைத் தொடர்ந்து 
காற்றுக்கு வேலி யும் வரும்.

நாம் குளம் அழித்து 
மணல் எடுத்து,
மனை கட்டி 
வாழ வரும் போது 
மரமும் இருக்காது 
மழையும் இருக்காது

காற்றுக்காயும் 
கையேந்தும்  
காலம் வரும்.

ஆற்றுக்கு அணை 
வயலில் மனை
 தீராத வினை


26.8.16

கிழிஞ்ச பேப்பர் - பழைய சிதறல்கள் - 1

மரம் 

மரத்தை அழித்து விடாதே
வரும் காலமதை அழ விடாதே.
-

 மரமது செம்மையானால்
வாழ்வது செம்மையாகும் - மாந்தரே செழுமையாவர்.

---

மழை

வானம் கீழே வந்தால்தான்
வரப்பே உயரும்

வரப்பு உயர்ந்தால்தான்
வாழ்வு உயரும்

-

மண் 

செம்மண்ணை
நம்மால் செய்ய முடியுமெனில்
செடி கொடிகள்
விரைவாய் வளருமே

மண்ணைக் கூட
மாற்ற முடியாதே மனிதா
மரபணுவை
மாற்றலாமா ???

---

15.8.16

அகண்ட பாரதம்

இந்தியாவின் எழுபதாவது சுதந்திர  தின நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. நேற்றே பத்திரிக்கைகள் எங்கே எங்கே யார் யார் கொடி  ஏற்றுவார்கள் என்ற செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்டன. இன்றைய செய்தித்தாள்கள் எங்கே எங்கே யார் யார் கொடி ஏற்றுகிறார்கள் என்ற செய்தியை வெளியிட்டிருக்கின்றன. நாளைய செய்தித் தாள்கள் எங்கே எங்கே யார் யார் கொடி ஏற்றினார்கள் என்ற செய்தியை வெளியிடும். அந்த அளவிற்கு நாட்டின் சுதந்திரத்தைப் பற்றிய செய்திகள் மட்டுமே வெளியிடுவதிலிருந்தே சுதந்திர இந்தியாவை எவ்வளவு மதிக்கிறோம் என்பது நமக்குப் புரியும். வாழ்க பாரதம்.

# # #

மிகப் பெரிய ஜனநாயக நாடு என்பதில் இந்தியர்கள் அனைவரும் பெருமை கொள்வோம். பல மொழிகள், சமயங்கள், கட்சிகள், கொள்கைகள். இவைகளைத் தாண்டி ஒன்றாய் இருக்கத் துடிக்கும் மக்களைப் பெரும்பான்மை மக்களில் நானும் ஒரு அங்கமாய் இருக்கின்றேன் என்பதில் எனக்குப் பெருமையே. ஏனெனில் வேறுபடுகளில்தான் நாம் ஒற்றுமையைப் பேண முடியும் என்பதில் எனக்கு அலாதி நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கை இன்னும் அதிகமாய் வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு.

# # #

ஆனால் சில நாட்களாக இந்த நம்பிக்கையை சிதைக்கும் செயல்கள் இந்தியாவில் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. அரசு செய்ய வேண்டிய செயல்களை சில நிறுவனங்கள் செய்கின்றன. காவல் துறை செய்ய வேண்டிய வேலையை சில குழுக்கள் செய்கின்றன. அவைகளும் கட்டுக்கடங்காமல் இருக்கின்றன. வன்முறைகள் அவிழ்த்து விடப் படுகின்றன. தலித் மக்கள் தாக்கப் படுகின்றனர். பன்மைத் தன்மையை அழிக்க பல்வேறு முயற்சிகள் நடை பெறுகின்றன.
அகில இந்தியா வானொலியில் தமிழ் மொழிச் செய்திகள் நிறுத்தப் பட்டிருக்கின்றன. கல்வி வரைவில் சமஸ்கிருதம் திணிக்கப் படுகிறது. என் மொழியை நான் மதிப்பது என்பது இந்திய தேசத்தின் ஒற்றுமையைக் குலைப்பதாய் பார்க்கப் படுகிறது.
இது இந்திய ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

ஏனெனில் வேறுபடுகளில்தான் நாம் ஒற்றுமையைப் பேண முடியும் என்பதில் எனக்கு அலாதி நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கை இன்னும் அதிகமாய் வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு.

# # #

இன்னும் ஒரு தியாகி பென்சன் கிடைக்காமல் அலைந்து கொண்டிருப்பதாய் இன்றைய செய்தித்தாள் ஒன்று தெரிவிக்கிறது. தியாகள் மதிக்கப் படாத ஊரில், தியாகத்திற்கு என்ன மரியாதை இருக்கும்.

# # #

தென்கோடியில் இருக்கும் அணு உலையை நாட்டுக்கு அர்ப்பணித்து இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை. மின்சாரம் தடை பட்டு பதிவேற்றம் செய்யக் காத்துக் கொண்டிருக்கிறேன். சுதந்திர நாட்டின் ஓர் அங்கம்தான் இவைகள் எல்லாம். குறைகள் இருப்பதனால் ஒரு நாட்டைக் குறை சொல்ல முடியாது. நாமும் முயன்றால் குறைகளைக் குறைக்க முடியும். முயல்வேன்.

# # #

சுதந்திர தேசம் – அது பன்முக தேசம் – அனைவரையும் மதிக்கும் தேசம் - வேறுபடுகளில்தான் நாம் ஒற்றுமையைப் பேண முடியும். இந்தியா அதைப் பேணும்.
வாழ்க இந்தியா! 

19.1.16

இந்தியா முழுவதும் இயற்கை வேளாண்மை (தமிழகம் தவிர)

இந்தியா இயற்கை வேளாண்மையை முன்னிறுத்த வேண்டும் என்று விரும்புகிறது. 
அதற்கெல்லாம் முன்னோடியாக சிக்கிம் இருக்கிறது நாட்டின் பிரதமர் சொல்லுவதாக இன்றைய செய்தித் தாள்கள் சொல்லுகின்றன.

தமிழகம் என்பது விவசாய பூமி. 
இங்கே வட தமிழகம் முதல் தென் தமிழகம் வரை நிலத்தை பல்வேறு காரணங்களுக்காக கையகப்படுத்தலாம். 
அனல் மின் நிலையங்கள் ... 
அணு மின் நிலையங்கள் – 
ஸ்டெர்லைட் நிறுவனம் ... 
மீத்தேனை உருவ ஒரு பகுதி – 
சோத்துக்கே வழியில்லைஎன்றாலும் நியூட்ரினோ ஆராய்ச்சிக்கேன சில பகுதி - நிலக்கரி தோண்ட ஒரு பகுதி – 
தமிழகத்திற்குத் தண்ணீர் வரும் முன்னே தடுக்க அனைத்துப் புறங்களிலும் அணைகள் – 
நீர்நிலைகள் அருகிலேயே நீரை உறிஞ்சி எடுக்கும் கார் கம்பெனிகள் - உழவுக்கு உதவும் காளைகள் இல்லாமல் செய்யும் யுத்தி ... 
நாட்டுக் காளைகள் இல்லையென்றால் நாட்டுப் பசுக்கள் இல்லை – 
நாட்டுப் பசுக்கள் இல்லையென்றால் 
சாணம் இல்லை – இயற்கை உரம் இல்லை – 
தமிழ் நாட்டில் வேளாண்மையும் இல்லை – இயற்கை வேளாண்மையும் இல்லை – 
இனி சிக்கிம் மட்டும் தான் இயற்கை வேளாண்மையில் இருக்கும்!

இந்தியா முழுவதும் இயற்கை வேளாண்மை வளர வாழ்த்துகிறேன்