30.9.11

வசன கவிதை

நாங்களும் எழுதுவோம்ல கவிதைன்னு வம்புக்கா எழுதலை.
சில வசனங்களை மடித்து எழுதினால்
அது கவிதை மாதிரி வருகிறதா
என்று பார்க்க ஒரு முயற்சி.
வசன கவிதையாகவாவது இருக்குமா என்று தெரியாது.
--
"ஹௌ டு ஸ்டாப் ஸ்மோகிங்"
புத்தகத்தை படித்து முடித்து விட்டு
பற்ற வைத்தேன்
ஒரு சிகரெட்டு.
--

எடையைக் குறைக்க
முதல் மாடியில் உள்ள
ஜிம்-முக்குப் போகப் 
பயன்படுத்தினேன் 
லிப்ட்.
--
எங்கேயும் எப்போதும்
பார்த்துவிட்டு
வீட்டுக்கு வேகமாய்ப்
போகும் போது
விபத்து
 --
டி. ஆர். பாலு, சோனியாவையும்
எஸ். பி. பாலு, சோனாவையும்
சந்தித்தார்களாம் -
நலம்
விசாரிக்க மட்டுமே.
--
இனிமேல் கவிதை
எழுதுவதில்லை
என்று முடிவெடுத்திருக்கிறேன்
அடுத்த முறை
எழுதும் வரை.
---     

 

28.9.11

விபத்தும் வறுமையும் - எல்லாரும் மன்னர்கள்


விபத்து

இரு நாட்களுக்கு முன்புதான் சாலை விபத்துக்கள் குறைந்திருக்கின்றனவா என்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று எழுதினோம். ஆனால் அதற்கெல்லாம் ஆய்வு தேவையே இல்லை என்கிற விதமாக நேற்று திருவள்ளூரில் மூன்று மாணவர்கள் லாரி மோதி உடல் நடுங்கி இறந்திருக்கிறார்கள். நேரடியாக கவிதை வீதி சுந்தர் - களத்தில் இருந்து ஒரு ரிப்போர்ட்டும் கொடுத்து இருந்தார்.

பூந்தமல்லி சாலையில், செம்பரம்பாக்கம் பகுதியில் இருந்து சென்னைக்குள் வரும் தண்ணீர் லாரிகள், மணல் லாரிகள், கல்லூரி பேருந்துகள், நிறுவன பேருந்துகள் என்று ஒன்றன் பின் ஒன்றாக போட்டி போட்டுக் கொண்டு போகிற காட்சியைப் பார்த்தாலே மனம் பதைக்கும். இன்று மூன்று உயிர்களைக் குடித்தது. ஏற்கனவே பல உயிர்களை மணல் லாரிகள் காவு வாங்கியிருக்கின்றன. ஷேர் ஆட்டோக்கள் பலரின் உயிர்களை எடுத்தது முதற்கொண்டு எல்லாருக்கும் தெரியும். ஒவ்வொரு முறையும் ஏதாவது செய்வார்கள் என்று பார்த்தால் ஒன்றும் நடப்பது போலத் தெரியவில்லை.

ஓட்டுனர்கள் முதலாளிகள் கையில் சிக்கித் தவித்து ஒரு நாளைக்கு எத்தனை லோடு அடித்தால் சம்பளம் கிடைக்கும் என்கிற ரீதியில் தன உயிரை பணயம் வைத்து சாகசம் செய்ய வேண்டிய அவலத்திற்கு அவர்கள் தள்ளப் படுகிறார்கள் - இல்லையெனில் வேலை கிடைக்காது என்பதனால். ஒவ்வொருவரும் தங்கள் தினசரி வாழ்க்கைக் காகப் போராட வேண்டிய சூழலில் தள்ளப் படுகிறார்கள். எல்லாருக்கும் குறைந்த பட்சம் வேலை வாய்ப்பை உருவாக்கித் தராமல் - விலை வாசியைக் கட்டுப் படுத்துவது எப்படி என்று புரியாமல் - சாலை விதிகளை மதித்து நடந்தால் அவனுக்கு கிடைக்க வேண்டிய சம்பளம் கிடைக்காது என்பதானால் மீறி நடப் பவர்களை ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிற அரசுகள் - [மதிய மாநில அரசுகள்] .அவர்களைத் தானே சொல்ல வேண்டும்.

தமிழக மக்கள் அனைவருக்குமான அரசு என்பதோ அல்லது இந்தியர்கள் எல்லாருக்குமான அரசு என்பதெல்லாம் சும்மா. இந்தியாவைப் பொறுத்த வரை நான்கு நகரங்கள் முக்கியமானவை. தமிழகத்தைப் பொறுத்த வரை அவர்களுக்கு ஒரே நகரம் மட்டும்தான் முக்கியம். எல்லா வளர்ச்சிப் பணிகள் இந்த நகரங்களை சுற்றி மட்டுமே இருக்கும். தமிழக விவசாயிகள், விளை நிலங்களில் என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பவர்கள் அனைவரும் நகரங்களை நோக்கி மட்டுமே வரவேண்டும். ஆனால் அவர்களாக வேலை தேடிக் கொள்ள வேண்டும். இவர்கள் கொண்டுவரும் தொழிலகங்கள் அல்லது வேலை வாய்ப்பைப் பேருக்கும் எதுவாக இருந்தாலும் சென்னையில் மட்டுமே குடி கொள்ளும்.

வளர்ச்சிப் பணிகள், வேலை வாய்ப்பிற்கான உத்திர வாதம் இவைகளெல்லாம் அவர்களது நகரங்கள், கிராமங்களுக்கு அருகிலேயே கிடைக்கும் எனில், எதற்காக எல்லாரும் சென்னை நோக்கு வரவேண்டும்? வறுமை அவர்களை விரட்டுகிறது. உயிரைக் கொடுத்தாவது அன்றைய சம்பளத்தைப் பெற வேண்டும் என்கிற நோக்கம் - தனது உயிரோ அல்லது அடுத்தவன் உயிரோ. போகிற விலை வாசி உயர்வில் முதலாளி சொல்லுகிற படி நடந்தால்தால் வேலை. அவர் 10 லோடு அடிக்கனும்னா அடித்துத் தானே ஆக வேண்டும்- ஓட்டுனர் உரிமம் இல்லாமலே வண்டி ஒட்டித்தான் ஆக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். வயிற்றைக் கழுவத்தானே இத்தனை கூத்தும்.  
---
ஆனால் இதைவிடப் பெரியக் கூத்து.

இந்தியாவில் விலை வாசி உயர்வே இல்லை என்பது போலவும், இந்தியாவில் யாரும் வறுமைக் கோட்டுக்குக் கீழே இல்லை என்பது போலவும் மத்தியத் திட்டக் குழு அறிக்கை ஒன்று சமர்ப்பித்து இருப்பதுதான்.
மத்தியத் திட்டக் குழு அறிக்கையில், கிராமங்களில் வசிப்பவர்கள் மாதம் 965 ரூபாய் செலவு செய்தால் அவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே இல்லைஎன்று சொல்லியிருக்கிறது. அது மட்டுமல்ல நகரங்களில் வசிப்பவர்கள் வீட்டு வாடகைக்காகவோ அல்லது பேருந்திற்காகவோ மாதம் 49 ரூபாய்க்கு மேல் செலவு செய்தால் அவர்களும் வறுமைக் கோட்டுக்குக் கீழே இல்லையாம். அதனால் இந்தியாவின் மக்கள் எல்லாரும் மிகவும் நல்ல நிலையில் இருப்பதாக ஒரு மாயை உலக மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.
http://www.vikatan.com/news.php?nid=4078

சாதாரணக் கூலி விவசாயி கூட பணக் காரன்தான் அரசுகளின் பார்வையில். எதார்த்தம் தெரியாத இந்த அரசுகளா மனித வாழ்வை மேம்படுத்தப் போகின்றன - வேலை வாய்ப்பைப் பெருக்கப் போகின்றன - விபத்துக்களைத் தவிர்க்க ஆவன செய்யப் போகின்றன?

இதனால்தான் அன்றே கவி சொன்னான் போல 
"நாம் எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்று-"


மத்தியத் திட்டக் குழு நம் எல்லாரையும் மன்னராக்கி விட்டது.

26.9.11

எங்கேயும் எப்போதும்

இந்தத் திரைப்படம் நேற்று பார்த்தவுடன் எனது இரண்டு பதிவுகளை மீண்டும் பதிய வேண்டும் என்று தோன்றியது.

முதலாவது - நால் வழி மயானம் - இது விதியா [மே இந்த ஆண்டு]

 • கடந்த வருடம் மே மாத இறுதியில் என் நண்பர் ஒருவர் சாலை விபத்தில் இறந்தார். அதற்கு முன்பு பெங்களூரிலிருந்து சென்னைக்கு வேகமாக வந்தால் மூன்று மணி நேரத்திலும், கொஞ்சம் மெதுவாக வந்தால் மூன்றரை மணி நேரத்திலும் வரும் மற்றொரு நண்பர் இறந்தார். ஒருமுறை ப்ரார்த்தனாவில் 'இம்சை அரசன்' பார்க்க அடையாறு சிக்னலில் இருந்து கிளம்பி போனபோது அவரது வேகத்தில் நமக்கு மட்டுமல்ல வெளியிலிருப்பவர்களுக்கும் இம்சைதான். ஆனால் ஒரு த்ரில்லிங் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அவர்கள் இறந்த போது செய்வதறியாது நிற்கும் மனைவி, குழந்தைகள் இவர்களைப் பார்க்கிற போதுதான் மனம் செய்வதறியாது இருக்கிறது. த்ரில்லிங் எல்லாம் சுக்கு நூறாய்ப் போய் விடுகிறது.
 • நால்வழிச் சாலைகளினால் பயனே இல்லையா என்றெல்லாம் இல்லை. நமக்குப் பயன்படுத்தத் தெரியவில்லை என்றுதான் பொருள்.
 • வழுக்குசாலைகள். முன்பு முதல் நாள் இரவு பேருந்து எடுத்தால் அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு மேல்தான் சென்னைக்கு வந்து சேருவோம். அது படிப் படியாய் நேரம் குறைந்து இப்போது எவ்வளவு நேரத்தில் போகும் என்ற நேரத்தையே பேருந்துகளில் விளம்பரமாய் எழுதி வைத்து விடுகிறார்கள். ஆனால் நால்வழிச் சாலைகளில் பயங்கரத் தடைகள். ஒவ்வொரு ஊருக்கு நடுவிலும் குறுக்குச் சாலைகள். ஒரு பக்கமே செல்ல வேண்டிய சாலைகளில், சொந்த ஊரின் நண்பர்கள் பெற்றோலை சேமிக்க அதிலேயே எதிர்ப் புறம் வர, மாடுகள் குறுக்கே வர, டிராக்டர்கள் திடீரென முளைக்க, டாங்கர்கள் படீரென வளைக்க - இவைகளையெல்லாம் தாண்டி நான்கு நான்கரை மணி நேரத்தில் சென்னைக்குச் செல்லும் ஓட்டுனர்களின் வீரம் தான் தினம் தினம் நாள் வழிச் சாலையை மயானமாக்கிக் கொண்டிருக்கிறது.
 • கம்பியூட்டரை எதுக்குப் பயன்படுத்துரான்களோ இல்லையோ போலி உரிமம் வழங்க நிறையப் பயன் படுத்துகிறார்கள். இருநூற்றி ஐம்பது ரூபாய்க்கு உரிமம் வழங்கும் DTP சென்டர்கள் சென்னையில் நிறைய இருக்கின்றன.
 • மஞ்சள் கோடு, இடைவெளியிட்ட வெள்ளைக் கோடுகள், இடைவெளியில்லா வெள்ளைக் கோடுகள் இதற்கெல்லாம் என்ன அர்த்தம்னு எத்தனை ஓட்டுனர்களுக்குத் தெரியும் என்பதே பெரிய கேள்விக் குறிதான். indicator இல்லாத வண்டிகள்தான் அதிகம் - அப்படியே இருந்தாலும் அதைப் பயன்படுத்துவது இல்லை. எப்படிப் பயன்படுத்தனும்னு தெரியாது. வலது பக்க இண்டிகேட்டரை வலது பக்கம் திரும்பவும் பயன்படுத்துகிறார்கள், பின்னால் வரும் வண்டியை முன்னே போக அனுமதிக்கவும் பயன்படுத்துகிறார்கள். இவன் எதுக்குப் போடுறான்னு பின்னாடி வர்ற வண்டிக்கு எப்படிப் புரியும்? அவன் என்ன கடவுளா? நம்மை போகச் சொல்றான்னு பின்னாடி வர்றவன் முன்னாடிப் போக, முன்னாடிப் போறவனும் வலது பக்கம் திரும்ப அப்புறம் என்ன 'சங்குதான்.'
 • லேன்கள் உள்ள சாலைகளில் மெதுவாகப் போகிறவன் இடது பக்கம்தான் போக வேண்டும் - அப்போதுதான் overtake பண்றவன் அடுத்த லேனில் போக வசதியாக இருக்கும் - ஏனெனில் ஓட்டுனர் இருக்கை வலது புறம் தான் உள்ளது. ஆனால் இங்கே மெதுவாப் போறவன் வலது பக்கம் போறான் - எப்படி ஓவர்டேக் பண்ண முடியும் - அதுக்குத் தான் வண்டிக்கு கிளீனர் வேற... அப்பா சாமி...
 • நால்வழிச் சாலை என்பதால் வழுக்கிக் கொண்டு செல்லாம்னு லேட்டகக் கிளம்புவது - அப்புறம் ஓட்டுனரைக் குறை சொல்லவும் கூடாது. நேரத்தோடு கிளம்பி முன்பே போய் சேருவோம் என்கிற எண்ணம் இல்லாமல், லேட்டாகக்க் கிளம்பி மொத்தமாய்ப் போய்ச் சேருவதுதான் வழக்கமாய் இருக்கிறது.
 • ஓட்டுனர்களின் உணர்வு கட்டுப் பாடு என்பதும் இல்லாமல் போய் விட்டது. யார் மேலயாவது கோபம்னா அதை வண்டி ஓட்டும்போதுதான் காண்பிக்கிறோம். சைக்கிள் gap பில் ஆட்டோ ஓட்டுற ஆட்கள் தான் அதிகம்.
 • ஒட்டுனராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் விபத்தை ஒழிக்க முடியாது.

இரண்டாவது பதிவு
சாலை மரணம் - நவீனக் கொடை [கடந்த ஆண்டு - ஜூன்]
 • முன்பெல்லாம் யாராவது இறந்தால் எப்போது இறந்தார் என்று கேட்பார்கள். அவர் காலையில் இறந்தார் அல்லது மாலையில் இறந்தார் என்று பதில் கிடைக்கும். இப்போது யாரவது இறந்தால் - எங்கே இறந்தார் என்கிற கேள்வியும் அதற்கு பதிலாக - சாலையில் இறந்தார், அல்லது ஓடு பாதையில் இறந்தார் அல்லது ரயில் பாதையில் இறந்தார் என்கிற பதிலே கிடைக்கிறது.
 • முன்பு இறந்தவர் - இயற்கை எய்தினார் என்று சொல்வோம். ஆனால் இப்போது நடப்பதையெல்லாம் பார்த்தால் இயற்கை எய்தினார் என்று சொல்வதற்கு மனம் ஒப்பவில்லை, ஏனெனில், பலரது வாழ்க்கை முடிதல் என்பது செயற்கையாகவே முடிகிறது அல்லது முடிக்கப்படுகிறது.
 • மானிட உயிர் விலை மதிப்பற்றது. ஆனால் ஏன்தான் நமது ஊர்களில் இப்படி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன என்பது தெரியவில்லை.
 • சாலை ஒழுங்குகள் இன்னும் சரிவர கடைபிடிக்கப் படுவதில்லை என்பதைக் காட்டிலும், அதை நடைமுறைப் படுத்துவதற்கு அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்கிற குற்றச் சாட்டை முதன்மைப் படுத்தலாம். உள்ள விதிகளை எல்லாரும் கடைப் பிடிப்பதற்கும் அல்லது அனைவரும் அறிந்து கொள்வதற்கும் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. எதெற்கெல்லாமோ இந்த அரசுகள் விளம்பரம் மேற்கொள்கின்றார்கள். அதைத் திறக்கிறார்கள், இதற்கு மாலையிடுகிறார்கள், அவருக்குப் பிறந்த நாள், இவருக்கு நினைவு நாள் - சாலை விதிகளை மதித்தது நடப்பது பற்றி விளம்பரம் குடுத்தால் குறைந்தா போவார்கள். சரி கஜானாவில் காசு இல்லையென்றால், உள்ள அனைத்து ஊடகங்களும் இதை வெளியிட வேண்டும் என்று ஒரு சட்டம் போட்டால் செய்ய முடியாதா என்ன?
 • சரி - ஒழுங்காக ஓட்டுனர்களுக்கான உரிமம் வழங்கப் படுகிறதா? அதுவும் இல்லை. ....

இரண்டையும் முழுமையாய் படிக்க கீழே சொடுக்கவும்.

நால்வழி மயானம்

சாலை மரணம் நவீனக் கொடை

இனி சில வார்த்தைகள்

நேரெதிரே மோதிக்கொள்ளும் பேருந்துகளின் பயணிகளின் ஊடகப் பயணிக்கும் ஒரு கதை. இதை வெறும் திரைப் படமாக மட்டும் அழகியல் நோக்கில் பார்த்தாலும், வாழ்வின் நிகழ்வுகளை மிகவும் கச்சிதமாய்ச் சொல்லியிருக்கும் படம் என்று பார்த்தாலும் அதைப் பற்றி பேசுவதற்கு இந்தப் படத்தில் நிறைய இருக்கின்றது. இந்தத் திரைப் படத்திற்குப் பிறகு எல்லா ஓட்டுனர்களின் மனதிலும் குறைந்தது மீண்டும் வீட்டுக்குப் போகும் வரையாவது மிகவும் கவனமாகப் போகிற அளவுக்கானத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மட்டும் நிச்சயம்.

"திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" - அது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு "ஓட்டுனராய்ப் பார்த்து திருந்தா விட்டால் விபத்தை ஒழிக்க முடியாது" என்பதை மட்டும் சொல்லலாம்.

இந்தப் படம் வெளி வந்த பிறகு விபத்துக்கள் குறைந்திருக்கிறதா என்று யாராவது ஆய்வு செய்யலாம். குறையவில்லையெனில் - வெறும் ஓட்டுனர்களின் கவனமின்மையைச் சொல்லித் தப்பித்துக் கொள்ள முடியுமா என்று தெரிவில்லை. ஏனெனில் திருடர்கள் திருடவதற்கான அல்லது அதில் நுழைவதற்கான பல சமூகக் காரணிகள் உண்டு. அது போலவே ஓட்டுனர்களும் யாரும் தான் வேண்டுமென்றே விபத்தை உருவாக்குவதும் இல்லை. அந்தக் காரணிகளும் அலசப் பட வேண்டியிருக்கிறது.

ஆனால் ஓட்டுனர்கள் இன்னும் சிறிதே முயன்றால் - பல விபத்துக்களை தினம் தினம் தவிர்ப்பது போல இன்னும் நிறையத் தவிர்க்கலாம்.

நாம் அதன் அங்கமாய் இல்லாத வரை இது எங்கேயோ எப்போதும் நடப்பதுதான். நாம் அதில் உள்ளபோதே நமக்குத் தெரியும் - இது இங்கேயும் இப்போதும் நடந்தது விட்டதே என்று - அதை உணர்வதற்கான அளவிற்கான நினைவிருந்தால்.  


எப்போதாவது நடந்தால்தான் விபத்து - எங்கேயும் எப்போதும் நடந்தால் அது என்ன?

22.9.11

அரசியல் உண்ணா விரதங்களும் - மக்கள் போராட்ட உண்ணா விரதமும்

அன்னா ஹசாரே

 • தெரிந்தோ தெரியாமலோ வேண்டுமென்றோ - ஒட்டு மொத்த பத்திரிகை உலகமும் அன்னா ஹசாரேவின் உண்ணா விரதப் போராட்டத்திற்கு அதரவு அளித்து தினம் முழுப் பக்க செய்தியை வெளியிட, தொலைக்காட்சிகள் நேரடி காட்சிகளை ஒளிபரப்ப அதற்குப் பிறகு உண்ணா விரதப் போராட்டம் என்பது தனிநபரை முன்னிறுத்தும் ஒரு நல்ல விளம்பரம் என அரசியல் வாதிகளுக்கு மனதில் பட்டு விட அவர்கள் ஒவ்வொருவரும் உண்ணா விரதம் மேற்கொள்ளுவதை வழக்கமாகிக் கொண்டுவிட்டார்கள்.
சங்கர் சிங் வகேலாவும், நரேந்திர மோடியும்,
 • சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி நரேந்திர மோடி உண்ணா விரதம். இதில் நரேந்திர மோடி மத நல்லிணக்கத்திற்கு எதிரான அவரது செயல்பாடுகளைப் பற்றியும், மதக் கலவரங்களை கண்டு கொள்ளாமல் இருந்தது பற்றியும், அவரது வேண்டுகோளின்றியே அனைத்துப் பத்திரிக்கைகளும் வெளியிட்டதாக ஞாபகம். இப்போது அதை மாற்றும் விதமாக அனைத்துப் பத்திரிக்கைகளிலும் அவரது உண்ணா விரதம் பற்றிய விளம்பரம் இருந்தது. காரணமின்றி இருக்கும் உண்ணா விரதத்ததிற்கு இந்தியா முழுவதுமான விளம்பரம் கிடைக்காது என்று அறிந்து அவராக விளம்பரம் கொடுத்துக் கொண்டு இந்தியா முழுவதுமான சரிந்து போன தனது இமேஜை சரிக் கட்டிக் கொள்கிறார் - அதாவது உண்ணா விரதம் என்கிற பேரில். இந்தியப் பிரதமராக தான் விஷ்வ ரூபம் எடுப்பதற்கான வாய்ப்பாக இவர் பயன்படுத்திக் கொண்டார். அவரைப் பொறுத்த வரை உண்ணா விரதம் என்பது தனது இமேஜை சரி செய்து கொள்ளுகிற ஓர் ஆயுதம்.
 • அதே பாணியைப் பின்பற்றி இப்போது பீகார் முதல்வர் ஐந்து மாதம் யாத்ரா தொடங்க இருக்கிறாராம். தனது திட்டங்களை பற்றி மக்களிடம் கருத்துக் கேட்க. இதென்ன கொடுமைடா? 
 • நம்ம முதல்வர்கள் எல்லாம் எதோ அரசர்கள் போலவும், நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாதது போலவும், யாத்ரா வைத்துத் தான் மக்களிடம் கேட்க வேண்டும் என்பதுபோலவும் - அப்படிக் கேட்கவேண்டும் என்றால் மாதம் மும்மாரி பொழிகிறதா என்று தங்கள் அமைச்சர்களை வைத்துக் கேட்க வேண்டியதுதானே - அப்படியே இல்லையென்றாலும், இரவில் மாறு வேடத்தில் போய் அறிந்து கொள்ள வேண்டியதுதானே.
 • இப்படி முதல்வர்களே உண்ணா விரதம் இருப்பது - எதற்காகவும் இல்லாமல் வெறும் விளம்பரத்திற்காக இருப்பது - தனி நபர் மையப் படுத்தலை மட்டுமே முன்னிறுத்துவது - இந்திய பிரதமாராக முன்மொழியப் பட அனைத்து மாநிலங்களுக்கும் தெரியச் செய்வதற்காக உண்ணா விரதம் இருப்பது - 
 • இதெல்லாம் தனி நபர் முன்னிருத்தலின்றி மக்களின் தேவைகளை நிறைவேற்றவும், அல்லது மக்களுக்கெதிரான கொடுமைகளை அழிக்கக் கோரி இருக்கும் போராட்டங்களை கேவலப் படுத்துகிற செயலாகவே தோன்றுகிறது. 127 பேரின் உண்ணா விரதத்திற்கு கொடுக்கப் பட்ட முக்கியத்துவத்தை விட ஒருவரின் [பொது] நோக்கமற்ற ஒரு உண்ணா விரதத்தை முன்னிறுத்துவது அநாகரிகமானது. இவர்கள் இந்திய அளவில் தலைவர்களானால்  பாவம் மக்கள்.
சில கற்பனை உண்ணா விரதங்கள் 
 • பேசாமல் ஊழலை ஒழிக்க திரு. மன்மோகன் சிங் மூன்று நாட்கள் உண்ணா விரதம் இருக்கலாம். அதையும் நாம் எல்லாரும் தூக்கிப் பிடிப்போம். யாருக்கு எதிராக என்றெல்லாம் கேட்கக் கூடாது. மோடி யாரிடம் சமூக நல்லிணக்கம் வேண்டுமென்று உண்ணா விரதம் இருந்தார். நாம் ஏதாவது கேட்டோமா? பிரதமரும் இருந்து விட்டுப் போகட்டுமே ! 
 • அல்லது தமிழக காவல் துறை ஆணையர் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட மூன்று நாட்கள் உண்ணா விரதம் இருக்கட்டும். 
 • அல்லது காங்கிரஸ் அமைச்சர்கள் எல்லாரும் சேர்ந்து பெட்ரோல் விலை உயர்வை குறைக்க உண்ணா விரதம் இருக்கட்டும். இருந்தாலும் இருப்பார்கள் அவர்கள். ராகுல் காந்தி விவசாய வேஷம் போடுரவரா ஆச்சே. நாமலே ஐடியா குடுக்குரோமே இது நமக்குத் தேவையா?
பதவியில் இருப்பவர்கள் உண்ணா விரதம் இருந்தால் தங்கள் பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என்கிற சட்டம் இயற்றினால் நல்ல இருக்கும். 
 • ஏன்னா - இப்படி முதல் அமைச்சர்களும், அதிகாரத்தில் இருப்பவர்களுமே உண்ணா விரதம் இருந்தால் - (ஒன்று) அவர்களுக்கு அவர்கள் மேல் நம்பிக்கை இல்லை; அல்லது, (இரண்டு) தங்களது அதிகாரத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்கள் நம்புகிறார்கள் - அல்லது (மூன்று) தங்கள் அதிகாரத்தை வைத்து எதை வேண்டுமானாலும் செய்யலாம். அப்புறம் ஒரு உண்ணா விரதம் இருந்து நாம் நல்லவர்கள் என்று காட்டிக் கொள்ளலாம் என்று நம்புகிறார்கள். 
 • அவர்களுக்கு அவர்கள் மேலேயோ அல்லது அதிகாரத்தை வைத்தோ ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்கள் நம்புகிறவர்கள் அல்ல. அப்படியெனில் எப்போதோ அவர்கள் தங்கள் பதவிகளைத் தூக்கி எறிந்திருப்பார்கள். எனக்கென்னவோ அவர்கள் மூன்றாவதைத் தான் நம்புகிறார்கள் என்று தோன்றுகிறது.
கூடன்குளம் அணு உலைக் கெதிரான போராட்டம் மக்கள் போராட்டம். பல்வேறு அச்சுறுத்தல்களுக்குப் பிறகும்; பல ஆண்டுகள் தொடர் அறிவுருத்தளுக்குப் பிறகு, அதன் தீமைகளை எல்லாம் எடுத்துச் சொல்லி பல அரசுகள் செவி மடுக்காத நிலையில் இன்று ஒன்று பட்ட போராட்டமாக உருவெடுத்து முதல்வரைப் பார்த்து எடுத்துச் சொல்லுகிற நிலைக்கு அது வந்திருக்கிறது. அதில் பல்வேறு நபர்கள் அங்கே நேரடியாக வந்து [மேதா பட்கர் ] தங்களது ஆதரவை தெரிவித்து இருக்கிறார்கள். 

இதுதான் ஒரு போராட்டத்திற்கான வரையறை. ஏறக்குறைய நூற்றி ஐம்பது பேர் உண்ணா விரதப் போராட்டத்தில் பங்கேற்கவும், ஆயிரக் கணக்கான மக்கள் பந்தலில் காலை முதல் இரவு வரை உண்ணாதிருந்து தங்கள் எதிர்ப்பையும் இத்தனை நாட்கள் காட்டி அதில் ஏறக்குறைய வெற்றியும் பெற்றிருப்பது தனி நபரின் ஆதாயத்திற்காகவோ அல்லது புகழ் வேண்டியோ அல்ல. 

இத்தகையப் போராட்டங்கள் தான் தேவையே தவிர - தனி நபர் அல்லது ஆட்சியில் இருக்கும் நபர்கள் நடத்தும் நாடகங்களை முதலிலேயே வேரறுக்க வேண்டிய அவசியம் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு.

நமக்குத் தேவை நடிகர்கள் அல்ல - மக்கள் விழித்தால்தான் அரசியல்வாதிகள் நடிப்பதை நிறுத்துவார்கள். 
முன்பு நடிகர்கள் அரசியலுக்கு வந்தார்கள். இன்றைய சூழலில் அரசியல் வாதிகள் நன்றாகவே நடிக்கிறார்கள்.  
--
கூடங்குளம் போராட்டம் ஏறக்குறைய எதிர் பார்த்த ஒரு வெற்றி நிலையில் இருக்கிறது. இதில் வலைப் பதிவர்களின் பங்கை நாம் பாராட்டியே ஆக வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒருவர் பற்றி எழுதினோம். இந்தப் போராட்டம் தொடங்கியது முதல் "இன்குலாப் ஜிந்தாபாத்" மட்டுமே சொல்லிக் கொண்டிருந்த சூர்ய ஜீவா நினைக்கப் பட வேண்டியவர். எல்லா பதிவுகளையும் தொகுத்துக் கொடுத்த ராஜேஷ் : வைரை சதீஷ்:   நண்டு நொரண்டு:    மனோ போன்ற எல்லாரையும் - எல்லாப் பதிவர்களின் பெயரையும் குறிக்க முடியாமைக்கு வருந்துகிறேன் - மற்றும் கூடங்குளம் பற்றி எழுதிய எல்லாப் பதிவர்களுக்கும் வணக்கங்களும் பாராட்டுதல்களும். 
 • இது எதற்கெனில் தமிழக பத்திரிகைகளுக்கு முன்னரேயும், அப்போராட்டம் தொடங்கிய நாட்கள் முதற்கொண்டு பதிவர்கள் காட்டிய அக்கறைக்காக. விளம்பரம் அல்லது சென்சேஷனல் என்றால் தான் பத்திரிக்கைகள் ஆர்வம் காட்டும். ஆனால் பதிவர்கள் நிலைப்பாடு எடுக்கிறவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்திருப்பதற்காக. 
--
எதிரும் புதிரும்.
மோடிக்கான ஆதரவை இட்லிவடையும் - அவரின் நாடகத்தை அரங்கேற்றும் சிந்திக்கவும் 

20.9.11

ஜே - க்களுக்கு ஜே [ஜெயலலிதா மற்றும் ஜெயமோகன்]


ஜெவுக்கு ஜே
தமிழக முதல்வர் கூடங்குளப் போராட்டத்துக்கு ஆதரவாகப் பேசியிருப்பது மிகவும் பாராட்டத் தக்கது. மத்திய அரசின் மெத்தனப் போக்கை அவர் கண்டித்திருப்பது மிகவும் சரியானது. அவர்களை மிக விரைவாக செயல்பட வைப்பது மாநில அரசின் கையில் இருக்கிறது. இதில் எனக்கு மிகவும் பிடித்தது - "மக்களுக்கு அழிவை ஏற்படுத்தக் கூடிய ஒன்றை எனது அரசு செய்யாது" !. ?
--
ஜெயமோகனுக்கு ஜே
நேற்று திரு. ஜெயமோகன் அவர்கள் போராட்ட களத்தில் இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். இன்றும் செல்வதாகப் படித்தேன். அவரது கட்டுரை - மிகச் செறிவானது. கடனைக் கழிக்க ரஷ்ய அரசு தள்ளிவிட்ட இந்த அணு உலை பற்றிய குறிப்பு. .கூடங்குளம்  படிக்க இங்கே சுட்டவும்.

அடுத்த கட்டுரை சில விளக்கங்களைக் கொண்டது. எப்படி நாம் மின்சாரப் பற்றாக்குறைக்கு அணு உலை மட்டுமே தீர்வு என்கிற மாயைக்குள் வந்திருக்கிறோம் என்பது பற்றியது.  அணுமின்சாரமின்றி வேறு வழியில்லையா?

இலக்கிய ஆர்வலர்கள் மக்கள் பிரச்சனையில் ஆர்வம் காட்டுவதும் நேரடியாகப் பங்கேற்பதும் மிகச் சிறப்பானது. ஜெயமோகன் எப்போதும் போல மக்கள் பிரச்சனையில் ஆர்வம் கொண்டிருப்பதை கட்டாயம் பாராட்டியே ஆக வேண்டும். பாராட்டுக்கள்.
--

பாலாவுக்கு ஜே
கூடல் பாலா உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டதாகப் படித்தேன். தினமும் அப்போராட்டம் பற்றிய செய்திகளையும் போராட்டத்தில் இருந்தபடியே தந்து கொண்டிருக்கிறார். அவரது மன உறுதி இன்னும் அதிகப் படியாக இருக்க வாழ்த்துகிறோம். போராட்டத்தில் கலந்து கொள்கிற மற்ற வலைப் பூ நண்பர்கள் இருந்தால் வாழ்த்துக்கள்.
--

கடனைக் கழிக்க
கழிவுகளை நம்மிடம் தள்ளிய ரஷ்யா சிறந்த ராஜ தந்திரியா?
கழிவாவது வந்தால் போதும் என்று
இதை ஏற்றுக்கொண்ட இந்தியா ராஜா தந்திரியா?

18.9.11

சாமியும் மோடியும் - சிறுதுளி 180911


சிண்டு முடிச்சு
2 ஜி ஸ்காம் வழக்கில் ப. சிதம்பரத்தை சேர்க்க வேண்டும் என சுப்ரமணிய சாமி வழக்குத் தொடுத்திருக்கிறாராம். அது சரி - சிதம்பரமும் வக்கீல்தானே சுப்ரமணிய சாமியை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விசாரிக்க வேண்டும் என்று ஜெயின் கமிஷன் சொன்னதே - அதைக் காட்டி சாமியை ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட வழக்கில் விசாரிக்க வேண்டும் என்று சிதம்பரம் ஒரு வழக்குத் தொடுத்தால் என்ன?

மோடி - சாமியைப் போல மோடியும் ஸ்டான்ட் அடிக்கிறார்:
பதினேழாம்தேதி தினமணியில் இரண்டாவது பக்கத்தில் சத்பாவனா மிஷன் பற்றி நரேந்திர மோடி கொடுத்த அருமையான விளம்பரம் [விளம்பரம் என்றால் குறைந்த பாதகம் ADVT என்றாவது இருக்கும் - இதில் அது கூட இல்லை] முழுப் பக்கத்தில் வந்தது - மூன்று நாள் உண்ணா விரதமாம். எதற்கு? ஏன்? என்பதெல்லாம் தெளிவில்லை. நாட்டு ஒற்றுமையாம் -அதுசரி ஏறக்குறைய நூற்றிஐம்பது மக்கள் கூடங்குளத்தில் உண்ணா விரதம் இருந்து மக்கள் போராட்டம் ஒன்று நடை பெற்றுக் கொண்டிருக்கிறதே அது மூன்றாம் பக்கத்தில் கூட இல்லையே அது ஏன்? மாறாக ஒன்பதாம் பக்கத்தில் [முதல்வரின் ராசி எண்] அது குறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என்று தமிழக முதல்வர் கூறியதாக ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது. அதாவது ஒரு முதல்வர் மோடி வித்தை காண்பிக்க விளம்பரம் கொடுக்க வேண்டும் அல்லது ஒரு போராட்டம் பற்றி முதல்வர் செய்தி வெளியிட வேண்டும். அப்படித்தான் ஒரு பத்திரிகை செயல்பட வேண்டுமென்றால் பேசாமல் விளம்பர நாளிதழ் நடத்தலாமே! அல்லது கூடன்குளப் போராட்ட நண்பர்களிடம் விளம்பரத்திற்காகவாது கேட்டிருக்கலாமே! தினகரன் விளம்பரம் பத்தாம் பக்கம் - செய்தி ஐந்தாம் பக்கம்.

ஜெ- வின் ஸ்டான்ட் 
நரேந்திர மோடிக்கு வாழ்த்துத் தெரிவிக்க தன் அமைச்சர்களை அறிவிக்கும் செல்வி, கூடன்குளத்துக்கும் அமைச்சர்களை அனுப்பி வாழ்த்து தெரிவிக்கலாமே - அதென்ன ஒன்றுமில்லாத உண்ணா விரதத்திற்கு வாழ்த்து - மக்கள் போராட்டத்துக்கு அறிக்கை?

ஸ்டான்டுகளுக்கு நடுவில் உண்மையான போராட்ட உண்ணா விரதம்:

கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டியது - பாமரனின் புத்தர் சிரித்தார் - பகுதியின் இரண்டாம் பகுதி - இதைவிட மிகவுல் சுருக்கமாகவும் தெளிவாகவும் கூடங்குளம் அணு உலை பற்றிச் சொல்லி விட முடியாதென்றே நினைக்கிறேன்.
பாமரன் பக்கத்திற்கு இங்கே சுட்டவும்.

15.9.11

கூடங்குளம் அணுஉலையும் பேரழிவும் - தமிழக அளவில்


கூடங்குளம் அணுஉலையை மூடிவிட வேண்டுமென்றும் அதனால் வரும் பேராபத்தும் பேரிழப்பும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது என்பதையும் நாம் பலமுறை எடுத்துச் சொல்லியாயிற்று. இதைப் பற்றி பல போராட்டங்களும் நடைபெற்று இன்றைய நாளில் இந்தப் போராட்டம் வலுப் பெற்று இருக்கிறது. அணுஉலைகளினால் வரும் பேராபத்தை இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானில் நடந்த சுனாமிக்குப் பிறகு உலகம் கண்டிருக்கிறது. அது மீண்டும் அதைப் பற்றிய விவாதத்தை அரங்கிற்குள் கொண்டு வந்திருக்கிறது. இது நாம் விழித்துக் கொள்ளும் நேரம்.

நன்மைகள் !
அணு உலை அமைப்பதினால் சில நன்மைகள் இருக்கின்றன என்றாலும் அது கொண்டு வரும் பேரழிவைக் காண்கிற போது அது கொண்டு வரும் நன்மையே தேவையில்லை என்று சொல்ல வேண்டியிருக்கிறது. ஒரு அணு உலையிலிருந்து அளவிட முடியாத ஆற்றல் வெளிவருவதனால் தொடர்ந்து மின்சாரம் உற்பத்தி செய்யவும், அதனால் நவீன உலகில் எல்லாரும் மின்சக்தியைப் பெற்று மிகவும் சுகமான வாழ்க்கை வாழ முடியும். அது மட்டுமல்ல மிகவும் குறைவான கார்பன்டை ஆச்சைடை வெளியிடுவதால், உலகம் வெப்பமடைவது தாமதப் படுத்தப் படும் போன்ற சில நன்மைகளைச் சுட்டிக் காட்டுகின்றனர்.

பேராபத்துகள்!
ஆனால் எல்லாவற்றைக் காட்டிலும் அணு உலை அமைப்பதனால் வரும் பேராபத்துகள் வருவது தவிர்க்க இயலாது. உடனே சிலர் சொல்லுவது - எதில் ஆபத்து இல்லை - பேருந்தில் விபத்து நடக்கிறது, விமானத்தில் விபத்து நடக்கிறது அதற்காக அதில் செல்லாமல் இருக்கிறோமா? நண்பர்களே, இது போன்ற விபத்துகள் அதில் பயணம் செய்பவர்களோடு போய்விடும் அனால் அணு உலை விபத்து என்பது அதையும் தாண்டி - தாண்டி.. உதாரணத்திற்கு, ரஷ்யா, செர்னோபிலில் 1986 ஆம் ஆண்டு நடை பெற்ற அணு உலை விபத்தின் கோரம் இன்றும் இருக்கிறது - அதனால் கதிர்வீச்சுகள் நிறைந்த நீர், காற்று இன்றும் பல உரைகளைப் பலி வாங்கிக் கொண்டிருக்கிறது.

பாதுகாப்பானதா!
சிலர் சொல்லுகிறார்கள் விஞ்ஞானிகள் சொல்லிவிட்டார்கள் -அல்லது பிரதமர் சொல்லிவிட்டார், அமைச்சர்கள் சொல்லிவிட்டார்கள் - அணு உலை பாதுகாப்பானது என்று - அதுதான் கோட்டை எழுத்துகளில் மிக முக்கியமான செய்தியாக வருகிறது. பிரதமர் அது மட்டுமா சொன்னார், ஊழல் ஒன்றும் நடக்க வில்லை என்றும்தான் சொன்னார். அமைச்சர்கள் நாங்கள் எல்லாம் நாட்டுக்காக எங்களையே அர்ப்பணித்துக் கொண்டவர்கள் என்றும்தான் சொல்லுகிறார்கள். அதெல்லாம் உண்மையாகி விடுமா?
அணு உலை கட்டமைப்பு என்பது மிகவும் சிரத்தையோடு, பாதுகாப்பு வளையங்களை அமைப்பதில் சரியான முறையைப் பின்பற்றி அமைக்க வேண்டும். அப்படிப் பின்பற்றி அமைக்கப்பட்ட அணு உலைகள் கூட விபத்து ஏற்படும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது என்பதுதான் வரலாறு சொல்லும் பாடம். அது செர்நோபிலாக இருக்கட்டும் அல்லது புகுஷிமா, தாய்ச்சி ஆக இருக்கட்டும். எந்த அணு உலையும் நூறு சதவீதம் பாதுகாப்பானது என்று யாரும் சான்றிதழ் கொடுக்க இயலாது. ஜப்பான் காரனாலேயே அந்த அளவுக்கு பாதுகாப்பான ஒன்றை அமைக்க முடியவில்லை. அதென்ன ஜப்பான் காரனாலேயே - அதனால்தானே நாம் அவர்களது பொருட்களையே போட்டி போட்டு வாங்குகிறோம்.
எனவே அதில் இம்மியளவு குறைந்தாலும் - அணு உலை விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும். கல்மாடி கட்டிய ஒரு பாலம் விளையாட்டு தொடங்குவதற்கு முன்னரே இடிந்து விழுந்தது நமக்குத் தெரியும். அது மட்டுமல்ல மிகப் பெரிய திட்டங்களை செய்யும் யாராக இருந்தாலும் சில பெர்சென்ட்டுகள் கமிஷன் தொடங்கி அப்புறம், பயன்படுத்தும் கம்பியில் சில மில்லி மீட்டர் குறைத்துப் போட்டால் சில கோடிகள் நமக்கு மீளும் என்று திட்டமிடுபவர்களும், இரண்டுக்கு ஒன்று என்று கலவை இருக்க வேண்டுமென்றால் அதை மூனுக்கு ஒண்ணாப் போட்டால், இன்னும் சில கோடிகள் மிஞ்சும் என்றும் கணக்குப் போடும் நமது ஆட்களை நம்பி நாம் இந்த அணு உலைகள் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பினால் நம்மை விட மிகச் சிறந்த அறிவாளிகள் யாரும் இருக்க முடியாது.
அதுமட்டுமல்லாமல் கவனக்குறைவால் ஏற்படும் ஆபத்துகளே நாம் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கான விளைவை ஏற்படுத்தும். இரண்டு நாட்களுக்கு முன்பு அரக்கோணம் அருகே நடந்த ரயில் விபத்து ஒன்றே - உலகிலேயே மிக நீளமான ரயில் போக்குவரத்தைக் கொண்ட நாடு என்ற ஒன்று ரயில் விபத்துக்களை இன்னும் குறைக்க முடியவில்லை. ஒரு தடத்தில் ரயில் இருக்கும் போது தானாக சிவப்பு விளக்கு எரியச் செய்வதற்கான உத்தி கூட இன்னும் நம்மிடம் இல்லை. - நாம் எப்படி?

கழிவுகளாலும் ஆபத்தா!
அதுமட்டுமல்ல - பேராபத்து அணுஉலை அமைப்பதில் மட்டுமல்ல - அணு சக்தி உருவாக்கத்தில் வெளிவரும் கழிவுகளைப் பாதுகாப்பது என்பதுதான் மிகப் பெரிய விடயாமாக இருக்கிறது. அணு உலை வெடிப்பதோ அல்லது அது வெளிவிடும் கதிர் வீச்சுகளால் ஆபத்து என்பதைப் போல இந்தக் கழிவுகளாலும் ஆபத்து என்பது உண்மை. இந்தக் கழிவுகளை ஏறக்குறைய 10,000 ஆண்டுகள் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டுமாம். இது நம்ம ஊரில் நடக்கிற விஷயமா. கழிவுகளை எங்கே கொட்டிப் பாதுகாக்கப் போகிறார்கள்?

தமிழின அழிப்பு!
அதுமட்டுமல்லாமல் இந்த அணு மின்நிலயம் என்பது கூடங்குளத்திற்கான திட்டமும் அல்ல - ஏற்கனவே சில மாநிலங்களிலிருந்து விரட்டியடிக்கப் பட்ட பின்பு குடி புகுந்த திட்டம். இங்கே உள்ளவர்கள் உயிர் மட்டும் என்ன கிள்ளுக் கீரையா என்ன? ஏற்கனவே கல்பாக்கத்தில் கடந்த சுனாமி போது வெளிவராத செய்திகள் இன்னும் உண்டு. ஆக மொத்தம் வட தமிழகம் இப்போது தென் தமிழகம் என்று ஒட்டு மொத்தத் தமிழகத்தையும் அதனால் தமிழினத்தையும் அழிப்பதற்கான சதி என்றுதான் இதையும் அணுக வேண்டியிருக்கிறது. அணுகுண்டுகள் மூலமாக ஜப்பானில் ஏறக்குறைய இரண்டு லட்சத்திற்கு மேல் மக்கள் மானு போனார்கள். அதைவிட அதிக இழப்பை அணு உலைகள் கொண்டு வரக்கூடும் என்பதை மனதில் வைத்துக் கொண்டால், இதன் பேராபத்தும் பேரழிவும் நம் மண்டைக்கு எட்டும். அதை விடுத்து அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று நம்பிக் கெட்டு அழிய முடியாது.

அப்புறம் எப்படித்தான் நாம் வளர்வது?
இதைப் பற்றிய அழிவைச் சொல்லுவதனால் நம் வளர்ச்சி அடைவதைத் தடுக்கிறோம் என்றோ அல்லது மின்சக்தி உற்பத்திக்குத் தடையை இருக்கிறோம் என்றோ அர்த்தம் அல்ல. வருடம் முழுவதும் சூரியன் ஆட்சி செய்கிற இந்த மண்ணில் அதிலிருந்து மின் உற்பத்தி தயாரிப்பது என்பதை மிகவும் சிரத்தையோடு செய்து விட்டாலே போதும் என்பதே நமது வாதம். இயங்குகின்ற அணு உலைகளை இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் மூடி விடுவோம் என்று ஜெர்மனி முடிவு செய்திருக்கிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் தேதி இத்தாலியில் நடை பெற்ற ஒரு பொது வாக்கெடுப்பில் அணு உலைகள் அமைக்கக் கூடாது என்று தொண்ணூறு சதவிகித மக்கள் வாக்களித்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து இருக்கிறார்கள். சூரிய ஒளி மிகவும் குறைவான நாட்களே குறைந்த சில மணி நேரங்களே தனது வீச்சைக் காட்டக் கூடிய நாடுகளே மாற்றி வழிக்கான முயற்சியில் இறங்கியிருக்கும்போது நாம் அதற்கான முயற்சியில் இறங்குவதே சரி.

தேவையற்ற இழப்பை அழிவைச் சந்திக்கும் முன்பு நாம் விழித்துக் கொள்ளுவதே இப்போதையத் தேவை. இப்போது நடை பெறும் போராட்டத்தில் எல்லாரும் இணைவதும், அதனால் மாற்று முயற்சிகளுக்காக அனைவரும் குரலெழுப்புவதும் அவசியமாகிறது. நாமும் நமது சந்ததியினரும் அணுக கதிர் வீச்சுகளால் பாதிக்கப் படாத காற்றைச் சுவாசிக்கவும், நீரைப் பருகவும் உரிமையுண்டு. அந்த உரிமையைத் தடுப்பதற்கு யாருக்கும் எந்தச் சக்தியும் இல்லை. மக்களுக்காக மக்களால் என்பது உண்மையானால் - மக்கள் பிரதி நிதிகள் கட்டாயம் செவி சாய்த்துத்தான் ஆக வேண்டும்.

குறிப்புகள்
இதுவரை நடைபெற்ற அணுஉலை விபத்துகள் பற்றிய பட்டியலுக்கு - மேலும் இங்கேயும் சுட்டவும்.

1986 ஆம் ஆண்டு செர்னோபிலில் நடைபெற்ற விபத்து குறித்த விபரங்களுக்கு

ஜப்பான் அணு உலைகள் பற்றிய பாடம்

கழிவுகளை பாதுகாப்பது பற்றிய வரைமுறைகள் - pdf. 


தொடர் புடைய எனது பழைய பதிவுகள்

விபத்துகள் - அணு உலை - தீவிரவாதம்


அணு உலகம் - ஆழ்ந்த அனுதாபம்


இந்திய அணு உலைஅரசியல்

13.9.11

இரட்டைக் கோபுரம் - நினைவலைகள்


இரட்டைக் கோபுரம் தகர்க்கப் பட்ட பத்தாம் ஆண்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சில தினங்களுக்கு முன் நடை பெற்றது. ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு இழப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்வு மிகப்பெரிய மோசமான இழப்பாகப் பேசப்பட்டது. இதில் தவறேதும் இல்லை. எந்த ஒரு நாட்டின் குடிமகனும் இவ்வளவு பெரிய இழப்பை அப்படித்தான் பார்க்க வேண்டும். சர்வதேச அரங்கமும் இதனை மிகுந்த வேதனையோடும் அக்கறையோடும் கண்டித்தது. அதனால் பிறகு ஏற்பட்ட போரும் அதனால் இறந்தவர்களும் பற்றிய விபரங்கள் எல்லாருக்கும் தெரியும்.

அமெரிக்காவின் இந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நிச்சயமாக அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாததுதான். அவர்களுக்கு அனுதாபங்கள்.

ஆனால் அதற்குப் பிறகு அவர்கள் அதிகக் கவனம் செலுத்தியிருக்க வேண்டியது அரசியல் ரீதியான தீர்வு. அந்தத் தீர்வு போர் என்கிற முழக்கத்தோடு எழுந்ததும் அதை மக்கள் எல்லாரும் முழுமையாக ஆதரித்ததும்தான். தங்களுடைய பாதுகாப்பு என்கிற ஒரு முழக்கம் அமெரிக்க மக்களை எல்லாம் ஒன்றினைத்தது. உணர்ச்சி வேகத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுகிற ஒரு அரசியல்வாதியாக புஷ் மிக நன்றாகவே செயல் பட்டுக் கொண்டார். தனது செல்வாக்கு சரிந்திருந்த நேரத்தில் இந்த வாய்ப்பை அவர் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார்.

தனது செல்வாக்கை மீட்பதற்காக அவரது திட்டத்தின் கீழேயே இந்த வகைத் தாக்குதல் நடத்தப் பட்டாக சிலர் கேள்விக்கு உள்ளாக்கினார்கள்.

ஆனால் போர் என்பது மட்டுமே மிகச் சிறந்த தாரக மந்திரமாக இருந்தது. அதில் மிகச் சிறப்பாகத் தன் செல்வாக்கைக் காப்பாற்றிக் கொண்டார் புஷ். நமது அரசியல் வாதிகளுக்கு மேலாக செயல் பட்ட புஷ் அமெரிக்கப் பாதுகாப்பு என்கிற ஒற்றை மந்திரத்தில் எல்லாவற்றையும் நியாயப் படுத்தவும் செய்தார். ஒரு பிரச்சனை வருகிற போது அதிலிருந்து மீள்வதற்கு பாதுகாப்பு பிரச்னையை கையில் எடுப்பதே நமது அரசியல் வாதிகளுக்கு கை வந்த கலையாகிவிட்டது. இந்தியாவில் ஒவ்வொரு முறை அரசியல் குழப்பங்கள் வருகிற போதும் ஒரு வெடி வெடிக்கிறது!

டவர் பற்றிய ஆயிரமாயிரம் கேள்விகள் இன்னும் விடையளிக்கப் படாமலேயே இருக்கின்றன? அதெப்படி ஒருகட்டிடத்தை தரை மட்டமாக்க வெடிவைத்து தகர்பதைப் போல அந்த டவர் இடிந்து விழும் என்கிற கேள்விகளுக்கு இன்று வரை பதில் இல்லை. எப்படி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இன்றுவரை சில கேள்விகளுக்கு பதில் இல்லையோ அதே போல அதிலும். ஆனால் சிலர் டார்கெட் செய்யப்பட்டு கொலை செய்யப் பட்டார்கள் அல்லது தண்டிக்கப் பட்டார்கள். கவுண்டமணி சொல்வது போல அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!

இந்த விடயத்திற்காக அமெரிக்க தொடுத்தபோரை நியாப் படுத்திய மேற்குலக நாடுகள் [சில ஐரோப்பிய நாடுகளைத் தவிர] ஏன் அவ்வாறு செய்தன என்பதற்கு ஆயில் என்கிற ஒரே வார்த்தையிலேயே பதில் சொல்லிவிட முடியும். அது மட்டுமல்ல - இன்றைக்கு அமெரிக்க சந்திக்கும் இந்த பொருளாதார நெருக்கடிக்கு புஷ் மட்டுமே முக்கியமான காரணம் என்று கூட [வேறு சில காரணங்களும் இருந்தாலும்] சொல்ல முடியும்.

இன்றைக்கி லிபிய போராட்டங்களை ஆதரிக்கும் இதே உலக அரங்குகள் அல்லது தென் ஆப்பிரிக்காவில் இனவெறிக்கெதிரான போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த நாடுகள் ஏன் இலங்கையில் நடந்த விடுதலைப் போராட்டத்திற்கு மட்டும் ஆதரவு தர அவ்வளவு யோசித்தார்கள்?

அங்கே ஆயில் இருந்து அவர்களோடு புலிகள் சில ஒப்பந்தங்களைப் போட்டிருந்தால் - இந்தப் போராட்டம் எப்போதோ முடிவுக்குவந்திருக்கும் -

ஆயில்தான் ஒரு போராட்டத்திற்கான ஆதரவைத் தீர்மானிக்கும் என்றால் - இந்த அரசியலில், ஆசியாவில் நடக்கும், உண்மையான போராட்டங்களுக்கான அங்கீகாரம் கிடைக்க வெகு நாட்களாகும்.

அதுசரி ஆயிலுக்காக தன் மக்களையே காவு கொடுக்கத் துணிந்த அரசியல் வாதிகளிடம் இதை எதிர்பார்ப்பது நியாயமில்லைதான். இத்தனை ஆண்டுகள் செப்டம்பர் பதினொன்றே காலண்டரில் இல்லாதது மாதிரி இந்தப் பத்தாண்டுகளாகத் தான் அது இருப்பது போல பிரகடனப் படுத்தும் ஆற்றல் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே உண்டு.

எது எப்படியோ தனது குறைகளையெல்லாம் அமெரிக்க விசுவாசி என்கிற ஒரே போரவைக்குள் மறைத்து வைத்துக் கொண்டதைப் போலவே இங்கும் பலர் தான் இந்திய விசுவாசி என்கிற போர்வைக்குள் தங்களது தவறையும் அநீதிகளையும் மறைத்து வைக்கிறார்கள். காலம்தான் அவர்களைத் தோலுரிக்க வேண்டும். அதுவரை இன்னும் எத்தனை செப்டம்பர் பதினோரு வந்தாலும், புஷ்ஷே முன்னின்று அஞ்சலி செலுத்துவார்!!!

என்ன செய்வது - போராட்டங்கள் மழுங்கடிக்கப் படுகின்றன! பழிவாங்கல் ஜரூராக நடக்கின்றன.

8.9.11

பயங்கரவாதம் - ஓர் அதிர்ச்சியோடு

ஒவ்வொரு முறை குண்டு வெடிப்பு பற்றிப் படிக்கிற போதும் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது? தொலைதூரத்தில் இருக்கிற ஒருவனுக்கே இந்த அதிர்ச்சி என்றால், அருகில் இருப்பவனுக்கு, இதில் உயிர் இழந்த உறவினர், நண்பர்கள் இவர்களுக்கு இன்னும் எவ்வளவு, அதிர்ச்சி, சோகம், கோபம், இவைகளெல்லாம் இன்னும் உச்சத்தில் இருக்கும்.

இதோடு சம்பந்தப் படாத ஒரு நபராக இதைப் பற்றி எழுதுவது மிகவும் சுலபமானதுதான். ஆனால் அடிபட்டவனின் வலியும் வேதனையும் சொல்லி மாளாது.

நான் என்னையே கேட்டுக்கொள்வது இதுதான்? ஏன் இவர்கள் இத்தகைய அரக்கத்தனமான, கீழ்த்தரமான, கேவலமான, மனிதாபிமானமற்ற செயல்களைச் செய்யத் துணிகிறார்கள்?

ஒவ்வொருவனும் அவனது செயல்களை நியாயப் படுத்தவே செய்வான். தங்களது எதிர்ப்பைக் காட்ட, தங்களுக்கு இழைக்கப் பட்ட அநீதிகளுக்கான எதிர்ப்புக் குரலாக, ஒட்டு மொத்தக் கவனத்தையும் தங்கள் பக்கம் திருப்ப, பழி வாங்க, கொள்கைகளுக்கான குரலைப் பதிவு செய்ய என்று ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாத மனிதர்களை குண்டுகள் வைத்துக் கொல்லுவது ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப் பட முடியாது.

எந்தவிதத்திலும் யாராக இருந்தாலும் அரசாக இருந்தாலும், தனி அமைப்புகளாக இருந்தாலும் எல்லாம் பயங்கரவாதம்தான்.

எங்கும் யாரும் நிரபராதிகளோ, அல்லது குற்றவாளிகளோ கூட அரசால் கொலை செய்யப் படக் கூடாது என்கிற மனித நேயக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறவர்கள் கூட இத்தகைய குண்டு வெடிப்புகளினால் அமைதிக்குள்ளாக்கப் படுவார்கள்.

தெரியாத நபர் ஒருவரோடு, பேஸ் புக்கில் இது விடயமாகக் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டிருந்த போது அவர் சொன்னார் - "உனக்கு என்ன தெரியும் - மும்பையில் குண்டு வெடிப்பு நடந்த இடத்துக்கு அருகில் நான் இருந்தேன் - அதன் வலி தெரியுமா என்றார்" - ஸாரி என்கிற வார்த்தையோடு அந்தப் பரிமாற்றம் முடிந்து போனது - என்ன சொல்ல முடியும்?
இப்படி ஒவ்வொருவரும் அனுபவிக்கிற வலிக்கு அதேவழியில் திருப்பிக் கொடுத்தல் இன்னும் கீழ்த்தரமான நிகழ்வுகளைத் தானே கொண்டு சேர்க்கும்.

அரசுகள் நியாயமான போராட்டங்களுக்கு செவி சாய்த்தாலே பல விடயங்கள் சரியாகும். போராட்டங்களுக்கு அடக்கு முறை தீர்வாகும் என்று அரசு நினைத்தால் ... அல்லது அடக்கு முறைகளுக்கு குண்டிவெடிப்புதான் தீர்வு என்று நினைத்தால்... இன்னும் ...

அப்பாவிகளைக் கொன்று யாரும் எந்த நியாயத்தையும் நிலை நாட்ட முடியாது - எந்த அமைப்பாக இருந்தாலும் சரி. அடக்குமுறை கொண்டு அமைதியை நிலை நாட்ட முடியாது - எந்த அரசாக இருந்தாலும் சரி.

சுய லாபக் கணக்குகள், மந்தைகளாக மனிதர்களை நினைக்கும் அரசுகள், கருத்துக்களைத் தங்களுக்குள்ளே தெளிவாகப் பகிர்ந்து கொள்ளத் திராணி இல்லாத அரசியல் வாதிகள், எதிர்த் தரப்பு நியாயங்களை செவி கொடுத்தும் கேட்காத - கேட்க விரும்பாத "பண்டமென்டலிஸ்ட்டுகள்" நேர்மையான போராட்டங்கள் வழி நியாயம் கேட்க விரும்பாத கோழைகள் இவர்கள் இருக்கும் வரை எல்லாருக்கும் ஆபத்துதான்.

குண்டு வெடிப்பு கோழைகளின் ஆயுதம். அதற்கு - போராட்டத் தற்கொலைகள் ஆயிரம் மடங்கு மேலானதாவே தோன்றுகிறது.

நாளுக்கு நாள் குண்டு வெடிப்பு நடைபெறும் நிலையில் இதன் கோர முகத்தையும் கோழைத் தனத்தையும் வேரறுக்கும் வேலையையும் அதே சமயம், மனித நேயத்தை கைவிடாமல் இருக்க வேண்டிய அவசியமும் நமக்கு இருக்கிறது.

இதை அரசோ, குண்டு வெடிப்பாலிகளோ படிக்கப் போவதில்லை. நமக்குள் இந்த மனிதாபிமானம் பற்றிப் பேசியாவது அதை இன்னும் வாழ்விக்கச் செய்ய வேண்டியிருக்கிறது.

7.9.11

கிரிக்கெட்டும் வெங்கட்டும் - மங்காத்தா?

திரைப் படங்களுக்கென்று விமர்சனமெல்லாம் இதுவரை எழுதியதில்லை. இதுவும் விமர்சனமா என்று தெரியவில்லை. வலைப்பூவில் எங்கெங்கு நோக்கினும் மங்கத்தா என்பதனால் நம்ம பங்குக்கும் இரண்டு வார்த்தை எழுதினாத்தானே நாலு மனுஷ மக்க மதிப்பாக. அதுனாலதான் மங்கத்தா. இந்தப் படம் பல பேருக்குப் பிடிச்சதாச் சொல்றாக. சில பேரு உருபடியில்லாததுன்ராக.

வெங்கட்டு - அவருக்கும் கிரிக்கெட்டுக்கும் பயங்கர ராசிங்க. சென்னை 28 ல கிரிக்கெட்டை வச்சு உள்ள வந்தாரு. செம போடு போட்டுச்சு. அப்புறம் சரோஜா - அதுல கிரிகெட்டை விட்டுப்புட்டு அதைப் பாக்கப் போற மாதிரி ஒரு ரூட்டைப் போட்டு அதுவும் ஓடுச்சு. [கோவா - வுல கிரிக்கேட்டுக்காகவா ஊர வுட்டு ஓடி வாராங்க - அப்படி வச்சிருந்தா அந்தப் படமும் ஓடியிருக்குமோ என்னவோ.] இப்ப கிரிக்கெட்டு சூதாட்டத்துல வச்சு ஒரு கதை.

வெங்கட்டோட கதைப் பின்னல்கள் ஒருமாதிரி கிரிக்கெட்டு மேல பைத்தியம் மாதிரி இருந்து அத்லேர்ந்த்து கொஞ்சம் கொஞ்சமா விலகிக்கிட்டே வர்ற மாதிரி இருக்கு. இதேமாதிரி இந்திய இளைஞர்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா கிரிக்கேட்டுலேர்ந்து வெளியே வந்தா நல்லாத்தான் இருக்கும். பி.சி.சி.ஐ. என்கிற தனியார் அமைப்பு இந்த அரசியல் கிழங்களிடம் மாட்டிக் கொண்டு நம்ம எல்லாரையும் அதுலேர்ந்த்து வெளியே வர விடாம அதுங்க சம்பாரிச்சுக்குட்டு இருக்குங்க. அதுல ஒழுங்க கொண்டுவந்தா சரத் பவார் எதிர்ப்பு - எதுக்காக எதுக்குராருன்னு ஒன்னும் கிடையாது. அவர்க்குப் பிரச்சனை.

இதுனாலதான் நான் திரைப்படத்தைப் பத்தியெல்லாம் எழுதுறதில்லை. எங்கேர்ந்தாவது எங்கேயாவது போயிருவேன்? அதுனால வெங்கட்டு இந்தப் படத்தோட டைரக்டரு ஒரு மேசெசு சொல்லிருக்காப்ள - கிரிக்கெட்ட விட்டு விலகிப் போங்கன்னு. அவரும் கண்டிப்பா இதக்கப்புறம் கிரிக்கெட்டு என்கிற கதைக் களனை விட்டுட்டுப் போனா நல்லா இருக்கும்னு தோணுது.

பி.சி.சி.ஐ. என்கிற தனியார் அமைப்பு - இந்திய அரசோடு அல்லது அந்த விளையாட்டு அமைச்சகத்தோடு எந்தவிதத் தொடர்பும் இல்லாத ஒரு அமைப்பு, இந்திய அரசின் சார்பாக விளையாடுவதாப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பு, விளையாடும் வீரர்கள் நாட்டின் பிரதிநிதிகளாகப் பார்க்கப் படுவதற்காக தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி எல்லா "பூஷன்' விருதுகளுக்கும் சிபாரிசு செய்து அந்தப் பொய்யை நியாயப் படுத்தும் ஒரு அமைப்பு, நாட்டையும் நாட்டின் வளங்களையும் பல்வேறு வழிகளில் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அமைப்பின் விளையாட்டிலிருந்து நாம் எல்லாரும் விலகிவர வேண்டும்.

வெங்கட்டு திரைப்படக் கிரிக்கெட்டுக் கதையிலிருந்து வெளிவர வேண்டும்.

இங்கிலாந்துல இந்தியா வாங்குற அடி மரண அடியா இருக்கு. இதுக்கப்புரமாவது இந்தியாவில் கிரிக்கெட்டு மோகமும், அதற்கான அரசியலும் ஒழிந்தால் தேவலை. அதுனாலதான் ஊழல் ஒழிப்பு என்பது - ஜன லோக்பால் என்பது தனியாருக்கும் தேவையிருக்குன்னு வலியுறுத்த வேண்டியிருக்கு.

திருப்பி கதைக்கு வருவோம். மத்தபடி - திரையில பணத்துக்காகவே எல்லாரும் அலையுற காட்சியெல்லாம் நல்லாத்தான் இருக்கு. இன்னைக்கு அதுதான் நம்ம வாழ்க்கைய தீர்மானிக்குது. அப்புறம் என்ன பண்றது?  நாட்டைக் காக்குற அர்ஜுனா இருந்தா ஏன்னா, சிட்டிசனா இருந்தா என்ன? எல்லாரும் அப்படித்தான். இப்படி ஒரு நெகடிவ் கேரக்டருல நடிச்சதுக்காக இரண்டு போரையும் பாராட்டலாம். அதோட சேர்த்து இவங்க நடிச்சதுக்கா வாங்குன பணமெல்லாம் வொயிட்டா இருக்காது - அதுக்கான வரியெல்லாம் ஒழுங்காப் போகாது. அப்படியெல்லாம் போயிருந்தா அதுக்கும் பாராட்டலாம்.

அதுனால மங்கத்தா - சூதாட்டம் - லாஜிக் இல்லா உள்ளே வெளியே - ஆனால் நம்மூரில் நடக்கிற உண்மையான சூதாட்டம்.

6.9.11

செல் வாங்கினால் மரண தண்டனை

மணி சங்கர அய்யர்  - ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை வேண்டாம்; ஆனால் இறக்கும் வரை சிறையில் வைத்திருக்க வேண்டும் - என்று மொழிந்திருக்கிறார்.

சுப்ரமணிசாமிக்கு இவர் எவ்வளவோ தேவலைதான். ஒரு விதத்தில் மரண தண்டனையே வேண்டாம் என்று கருதுவோர் இப்படி நினைப்பதில் தப்பில்லை. அப்படித்தான் மரண தண்டனை வேண்டாம் என்பவர்கள் சொல்லுகிறார்கள். அதில் தப்பில்லை. சில பயங்கரவாதக் குற்றங்களுக்கான தண்டனை இப்படி இருப்பதில் தப்பில்லைதான். 

ஆனால் மீண்டும் மீண்டும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை வழக்கப்பட்டுள்ள இம்மூவருக்கும் என்பதைத் தான் தலைவர்கள் சரியாகப் புரிந்து கொள்ள வில்லை - அல்லது புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். 

 இரண்டு விதங்களில் நாம் இந்த மூன்று விவகாரங்களையும் பார்க்கலாம். ஒன்று அவர்கள் மூவரும் பயங்கர வாதிகள். எனவே அவர்கள் குற்றவாளிகள். அவர்களுக்கான மரணதண்டனையை இறக்கும் வரையில் சிறையில் வைத்து தண்டனையை வழங்கலாம். பெரும்பாலனோர் அப்படித்தான் பார்க்கிறார்கள். இங்கேதான் இந்தப் போராட்டம் சரியாகப் புரிந்து கொள்ளப்பட வில்லை.

முக்கியமான விடயம் - அவர்கள் இரட்டை ஆயுள் தண்டனையோ அல்லது இறக்கும்வரை சிறையில் இருக்கும் தண்டனையோ அல்லது மரண தண்டனை வழங்கப்படும் அளவிற்கான தண்டனையை செய்திருக்கிறார்களா என்பதுதான்.

தனது மக்களையே கொன்று குவித்த சதாம் ஹுசைன் வழக்கு கூட மிகவும் வெளிப்படையாக நடந்தது - கேட்கப்பட்ட கேள்விகள் - அவரின் சாட்சியங்கள் என்று வெளியில் வந்தது. அனால் இவ்வழக்கு அப்படி நடத்தப் பட வில்லை.

 கேள்விக்குட்படுத்த வேண்டிய தலைவர்கள் பலர் வெளியில் இருக்கும் போது இந்தத் தண்டனை தவறு என்கிற விதத்தில்தான்.

விடுதலைப் புலிகள் இப்படிக் கருணைப் பிச்சை கேட்கலாமா என்று சாமி கேட்குறாரு. அவர்கள் விடுதலைப் புலிகள் இல்லை என்பதுதானே வாதமே! அது கூட அந்த ... அரசியல்வாதிக்குப் புரியவில்லை.

ஆனால் இந்த வழக்கில், நடந்த உள் கூத்துகளைப் பற்றி கேட்டுக் கேட்டு நமக்குப் போரடித்துப் போய் விட்டது.

ஒரு செல் [பாட்டரி] வாங்கிக் கொடுத்ததற்காக யாராவது மரண தண்டனை கொடுப்பார்களா?

எதற்கென்றே தெரியாமல் வாங்கிக் கொடுத்தாலும் தண்டனையா? அவர் தெரிந்தே வாங்கிக் கொடுத்தார் என்று வைத்துக் கொள்ளுங்கள் - அதற்காக தூக்குத்தண்டனையோ - இரட்டை ஆயுள் தண்டனையோ வழங்குவது எந்த விதத்தில் நியாயம்? அப்படியே அதற்கென்று மரன தண்டனை வழங்கினால் எல்லாருக்கும் தெரிந்த விதத்தில் வழக்கு நடத்தி இதே தீர்ப்பை வழங்கலாமே.

 • இது இப்படியே போனால் நாளை நீங்கள் யாருக்காவது டீயோ அல்லது பன்னோ வாங்கிக் கொடுத்தால், ஒருவேளை சிறைப் பிடிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை வழங்கப் படலாம். 
 • அல்லது வெளியிடங்களுக்குச் செல்லும்போது அவசர உதவி என்று ஒரு தமிழ் ஆள் என்று நின்றாலும், ஒருவரும் உதவி செய்ய மாட்டார்கள் - ஏனென்றால் நல்ல தமிழ் பேசினால் அவன் விடுதலைப்புலி அல்லது தீவிரவாதி. அதனால்தான் சாமி அப்படித் தமிழ் பேசுகிறார். அப்படி எல்லாரையும் நினைக்க வைக்க விரும்புகிறார்கள்.
 • இப்படியே போனால் தவிச்ச வாய்க்குத் தண்ணி கொடுக்கக் கூட நம்ம ஊர்ல ஆள் இருக்காது.
 •  தமிழகத்துல ஓரளவுக்கு தெரியாத ஆள் என்றாலும் முன்பெல்லாம் உதவி செய்தார்கள் - இனி அவசர உதவிக்குக் கூட நமக்கு பாஸ்போர்ட் - ஐடெண்டி கார்டு தேவைப்படும் - அப்படியே இருந்தாலும் உதவுவதற்கு ஆளிருக்காது.
4.9.11

சுப்பிரமணி சாமி - யின் பேட்டி


சுப்பிரமணி சாமி - யின்  பேட்டி ஒன்று புதியதலைமுறை டிவி யில் ஒளிபரப்ப பட்டதை பார்க்க நேர்ந்த்தது. ஜெயின் கமிஷன் அறிக்கையில் அவர்களை விசாரிக்க வேண்டும் என்று இருக்கிறதே இன்னும் இந்த வழக்கு முடியவில்லை எனவே இந்த மூன்று பேருக்கும் தண்டனை வழங்கக் கூடாது என்று சொல்லும் போது -
அதெல்லாம் முடிஞ்சிடுத்து - அவா யாரும் என் மேல வழக்குப் போடலை - நீங்கல்லாம் இந்தியாவின் எதிரிங்க - துரோகிகள் - அப்படின்னு பச்ச பச்சையாப் பேசுறாரு -
இருபத்தி ஒரு வருஷம் சிறையில இருந்தா அதுக்கு என்ன பண்ண முடியும் - அப்படிங்கிறாரு. இப்படிப் பட்ட தியாகிக்கு கறுப்புப் பூனைப் படை வேற? இந்தியாவைப் பிரிக்கிறது யாருங்க?

சுப்பிர மணியன் வெர்சஸ் சுபவீ பாருங்க  இவரு இன்னமும் தமிழ் நாட்டுக்கு எந்த விதத் தயக்கமும் இல்லாமல் வந்துட்டுப் போறது மட்டுமில்லாமல் - தனக்கு பதவி கொடுத்த மக்கள் மேல சேற்றையும் வீசுறாரு.

இத எங்க பொய் சொல்றது?

2.9.11

சிறு துளி - 02092011


விஜய் தொலைக்காட்சியில் வரும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் - உலக அளவில்
  • உலகம் எவ்வளவு சின்னதுன்னு தெரியனும்னா அதில் திவ்யா 'இம்முறை உலக அளவில்' னு சொல்லுறப்ப அவங்க கையப் பாருங்க. உலகம் அவ்வளவு சின்னதான்னு தோணும். 
  • அதிலேயே - கோபிநாத் 'உலக அளவில்' னு சொல்லும்போது அந்தக் குரல் அழுத்தமும், கையைக் காட்டும் விதத்தையும் பார்த்தா உலக அவ்வளவு பெருசான்னு தோணும். 
மரண தண்டனைக் குறைப்பு
  • முடியவே முடியாதுன்னு சொன்ன அம்மா, நீதிமன்றம் எட்டு வாரம் தடை விதித்த அந்த நேரத்துல தீர்மானம் நிறைவேற்றப் போய் - பாருக் அப்துல்லா நாங்களும் ஒரு தீர்மானம் நிறைவேற்ற முடியுமான்னு அப்சல் குருவுக்காக ன்னு ஒரு கேள்வியை கேட்குறாரு?
  • இந்தியா ரொம்பப் பெருசுன்னு நினைச்சேன். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எப்படி ஒன்றாய் இருக்கிறோம் பாருங்கள். - தேசிய நீரோட்டம். ஏற்கனவே தமிழக சபையின் தீர்மானம் இலங்கையினால் கேள்விக்குட்படுத்தப் பட்டது. உலகம் ரொம்பச் சின்னதுதானா? 
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்
  • சிறைப்பிடிக்கப்பட்ட தமிழர்கள் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இருப்பதால் அவர்கள் விடுதலைக்கு வழில்லாமல் செய்திருக்கிறார் இலங்கை அதிபர். 
  • இந்தத் தடுப்புச் சட்டம் - இந்தியா தொடங்கி இலங்கை வரை நீடிக்கிறது. உலகம் இதைவிடப் பெரிதல்லவா? 
கேரளா மார்க்சியம்
  • அமெரிக்க அரசிடமிருந்து உதவி பெற மார்க்சியத் தலைவர்கள் எல்லாரும் ஆர்வம் காட்டியதை விக்கி லீக்ஸ் சொல்லியிருக்காம். இதுல என்ன தப்பு இருக்குன்னு அவர்கள் கேட்டார்களாம். ஆனால் அதுக்காக எங்கள் கொள்கையில் சமரசம் எதுவும் செய்து கொள்ள மாட்டோம் -னு சொல்லியிருக்காங்க. 
  • முதலாளித்துவப் பணம் வேணும் ஆனால் கொள்கையில் உறுதியாய் இருப்போம்னா... அமெரிக்கவரைக்கும் போகுது. 
ஊழல் எதிர்ப்பு

  • அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாகவும், வன்முறையில் இங்கே இறங்கி ஊழலை எதிர்ப்போம் என்று சொன்னவரும், கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று குரல் கொடுத்தவருமான குரு பாபா ராம்தேவ் மீது கருப்பு பண வழக்கு தொடரப் பட்டிருக்கிறதே.
  • ஸ்காட்லாண்டுக்குப் பக்கத்தில் ஒரு குட்டித்தீவே அவருக்கு சொந்தமா இருக்காம்?பாருங்க திவ்யா சொல்றமாதிரி உலகம் ரொம்பச் சின்னதாத்தான் இருக்கு.

  • அன்னா ஹசாரே போராட்டத்துக்கு இவ்வளவு விரைவாக பதில் கிடைத்திருக்கிறதே.