19.2.13

எல்லாம் மாத்தமாட்டிக்ஸ்


நீங்களும் வெல்லாம் ஒரு கோடி ப்ரோமோ பார்த்ததிலிருந்து எல்லாமே மாத்தமாட்டிக்ஸ் மனசுல ஓடிக்கிட்டே இருக்கு. அதில் சில:

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தேர்தல்
கரண்ட் கட் + தமிழகம் + தேர்தல்      = தி. மு. க. தோல்வி  
பெட்ரோல்  + இந்தியா + தேர்தல்       = காங்கிரஸ் தோல்வி  
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஊழல்
12 ஹெலிகாப்டர்                       = 3600 கோடி
10 சதவீதக் கமிஷன்           = 360 கோடி
1அணு உலை                           = 16,000 கோடி
10 சதவீதக் கமிஷன்                         = 1600?

கமிஷன் இல்லாமல் எதுவும் நகராது...

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
திரைப்படம்
கடல்           = அலைகள் ஓய்வதில்லை இரண்டாம் பாகம் + மின்சாரக்      கனவு இரண்டாம் பாகம்       
விளக்கம்

கார்த்திக் + ராதா             = அலைகள் ஓய்வதில்லை
கார்த்திக் மகன் + ராதா மகள் = கடல்

காதலை சேர்த்து வைத்து பின் சாமியாராகும் அரவிந்த்சாமி
= மின்சாரக் கனவு
சாமியாரான பின் காதலை சேர்த்து வைக்கும் அரவிந்த்சாமி 
= கடல்
ஆக

மனிரத்னம்   = பாரதிராஜா + ராஜீவ் மேனன்

கூட்டிக் கழிச்சுப் பாருங்க கணக்கு சரியா வரும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தொலைக்காட்சி
ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்ப ஆறு ரூபாய்
ஒருநாளைக்கு ஒரு லட்சம் எஸ். எம்.எஸ் அனுப்பினால் 
= ஆறு லட்சம் ரூபாய்.
பதினைந்து நாளைக்கு பதினைந்து லட்சம் எஸ். எம்.எஸ் 
= தொண்ணூறு லட்சம்
ஆக

ப்ரோக்ராம் பெயர் 
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி இல்லை
நீங்களும் அனுப்பலாம் ஒரு கோடி
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++







13.2.13

தடைகளுக்குப் பின்னால் ....



தமிழ்த் திரை உலகத்தில் உதித்திருக்கிற இந்த தடை விவகாரங்கள் தமிழக மக்களை பல்வேறு விதத்தில் கூறு போட்டிருக்கிறது. தன்னுடைய நிலைப்பாட்டைச் சார்ந்து தனது அடையாளத்தை நிலை நிறுத்தும் முயற்சியில் தான் அறிந்தோ அறியாமலோ பலர் இருந்திருக்கிறார்கள். ஆனால் இவைகளுக்குப் பின்னால் வேண்டுமென்றே இனத்தைக் கூறு போடும் சக்திகள் இருப்பதை இந்தப் பலர் அறியாமல் இருப்பது வேதனைதான்.
உண்மையிலேயே அது தனக்குப் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், தனது சமூகம் ஒரு குரல் எழுப்பியது என்பதற்காக அதனோடு சேர்ந்த இஸ்லாமிய சமூகம் ஒரு புறம் – கமலின் விஸ்வரூபத்தை தடை செய்வதா – எனில் அமீரின் ஆதி பகவானைத் தடை செய் என்று இந்து முன்னணி வீரர்கள் ஒரு புறம் – எல்லாரும் பாதிக்கப்பட்டால் கிறித்தவ சமூகம் என்னாவது என்று சப்பைக் கட்டுக் கட்டும் சில கிறித்தவர்கள் ஒரு புறம் – இந்த தடைகளின் தேவைகள் என்ன? எதற்காக இந்தப் போராட்டங்கள்? இவைகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது?
  • -    ஒவ்வொரு மனிதனின் அடையாளமும் மிக முக்கியம். ‘அடையாளப் படுத்துதல்’ என்பது எப்போதும் உள்ளதுதான். ஆனால் அவைகளின் தாக்கம் என்பது மிக அதிகமாக உள்ளது இரு நூற்றாண்டுகளாகத் தான். இப்போது தனது அடையாளம் என்பது தனது இனத்தைத் தாண்டி உலக அளவில் அல்லது இந்திய அளவில் தங்களது அடையாளத்தை நிலை நிறுத்தும் முயற்சி தான் இது.
  • -    தனக்கான எதிரி யார் என்பதை இஸ்லாமியர்கள் கட்டமைக்கிற முயற்சியில் இந்துக்களை எதிரிகளாகக் கருதி தங்களது தமிழ் இனத்தின் அடையாளத்தை மறந்து உலக இஸ்லாமியர்களோடு ஒன்று படுத்துகிற முயற்சி என்பது ஒரு புறம். 
  •   தங்களது எதிரிகளாக இஸ்லாமியர்களை உருவாக்கி அதன் வழியாக இந்திய இந்துக்களாக, இந்து, இந்தியா என்ற அடையாளத்திற்குள் வரையறுத்து தங்களது சொந்த இன அடையாளத்திற்கு எதிரான ஒரு நிலைப் பாட்டையும் எடுக்கிறார்கள். இவர்களுடைய அந்தக் கட்டமைப்பில்தான் இஸ்லாமியர்கள் அந்த நிலைப்பாட்டிற்குத் தள்ளப் படுகிறார்கள் என்பதும் உண்மைதான். 
  •   இதில் கிறித்தவத்தையும், கிறித்தவர்களையும் சில சமயங்களில் தங்களது எதிரிகளாக, வெளியிலிருந்து வந்த ஐரோப்பியர்களோடு அடையாளப் படுத்தப் படுவதில் தங்களது தமிழின அடையாளத்தை மறக்கவும் சமயத்தின் அடையாளத்தை முன்னிறுத்தவும் நிர்ப்பந்தப் படுத்தப்படுகிறார்கள். அதனாலேயே தேவையற்ற நேரங்களில் கூட, சிலர் கிறித்தவ அடையாளத்தை முன்னே வைக்கிறார்கள் – கடல் திரைப்படத் தடை வழியாக.
  •  அடிப்படையில் ஒரு மனிதன் தனது சமூகக் குழு உறுப்பினராகவே இந்த மண்ணில் கால் வைக்கிறான். மனித அடையாளத்தின் அடிப்படை என்றால் அது அவர் சார்ந்த இனம்தான். இதுதான் ஒரு மனிதனின் அடிப்படை அடையாளம். அதே வேளை சமயம் – மதம் என்பது ஒரு மனித வாழ்வின் தொடர்ச்சி அல்லது இலக்கு என்கிற வகையில் அதுவும் மிக முக்கியமான அடையாளத்தைத் தருகிறது. தனது அடிப்படை அடையாளம் தகர்க்கப் படுகிற போது, தன்னை வாழ்வின் இறுதி இலக்கை நோக்கிப் பயணிக்க வைக்கும் சமய அடையாளத்தை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகிறது. அதாவது தமிழ் இன அடையாளம் என்பது அழிக்கப் பட்டு, அவனை சாதிய வழியில் பிரித்த போது தன்னை இந்து சமயத்தின் புறந்தள்ளப் பட்ட ஒரு இனமாகவே அடையாளப் படுத்த தள்ளப்பட்டார்கள். எனவே தலித் அடையாளம் என்பது தேவையும், அவசியமும் ஆகிறது. ஆனால் இதில் தமிழ் இன அடையாளம் நமது அடிப்படை என்பதும் முன் வைக்கப் படுகிற போது – இந்திய இந்துக்கள் மீண்டும் அனைவரையும் சமய அடிப்படையில் ஒன்று சேர்க்கவும் தங்களது அடிப்படை அடையாளத்தை மறக்கவும் கையிலெடுத்ததுதான் இந்துத்துவம். அதற்காக கட்டமைக்கப் பட்ட எதிரிகள்தான் இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும்.
  •   ஒரு பயங்கரமான எதிரி கட்டமைக்கப் படுகிற போது, அந்த எதிரியை எதிர் கொள்ள வேண்டிய அவசியத்தைப் பற்றி மட்டும் யோசிப்பவர்கள், அடிப்படை அடையாளத்தை மறந்து ‘மத’ அடிப்படைவாதத்தை முன்னெடுக்க கட்டமைக்கப் பட்ட எதிரிகள் எதைச் செய்தாலும் அதனை தவறாகப் புரிந்து கொள்ளவும், இன்னும் பயங்கரமான எதிரிகளாகக் கட்டமைக்கும் பணியும் தொடர்ந்து நடக்கிறது.
  • -    இதைத்தான் இந்த திரைப்படத் தடை விவகாரங்களில் பார்க்கலாம். விஸ்வரூபம் தடைக்குப் பின்னால் இருக்கிற அரசியலை அலச தனிக்கட்டுரை அவசியம். ஆனால் இது நடந்த பிறகு ஒரு தொலைக் காட்சியின் விவாத மேடையில் ஆதி பகவானைத் தடை செய்ய கோரும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சில காரணங்கள்: அவர்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா? நாங்கள் புண்பட மாட்டோமா? அது மட்டுமல்ல – வள்ளுவர் மைலாப்பூரில் இருந்தார் என்பதற்கான ஆதாரமே இல்லை – என்று அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.   இறுதிக் காரணம்தான் மிக முக்கியமானது. ராமர் இருந்ததற்கான ஆதாரம் உள்ளது ஆனால் வள்ளுவர் என்பவர் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்பது மைலாப்பூரில் மட்டுமல்ல – தமிழகத்திலே இல்லை என்பதற்கான முதல் படிதான்.
  •   இதுதான் இங்கே காரணம். மீண்டும் மீண்டும் ஆதிக்க சக்தியின் கைகளையும் கால்களையும் விரித்து அடிமையாக்கும் நவீன அடிமைத்தனம். அதுதான் மதங்களின் அடையாளத்தை முன்னிறுத்தும் தந்திரம்.

- வலை விரிப்பவர்களின் தந்திரம் தெரியாமல் வலையில் மாட்டும் பறவைகள் போல தமிழ் இனம் மத வலையில் மாட்டுவது பரிதாபத்துக்குரியது. இதுதான் காவிரி நீர் மறுப்பில் கர்நாடகாவுக்கு எதிராக மௌனம் சாதிக்கவும், முல்லைப் பெரியார் விவகாரத்தில் விலகி இருக்கவும், அணுமின் உலைகளுக்கு எதிரான போராட்டத்தில் பேசாமல் இருப்பதற்கும் வழி வகுக்கிறது.

-    இத்தகைய நிலையில் நம்மை வைத்து நமது அடிப்படை அடையாளத்தை மறக்கடிக்கச் செய்வதே நவீன இந்துத்துவத்தின் சாமர்த்தியம். இதை எதிர்ப்பதற்கான வழி தமிழின அடையாளத்தை மீட்டுருவாக்கம் செய்வதே.


8.2.13

ட்ரூ மேன் ஷோ - வும் – சமரும்


ஏறக்குறைய பதினைந்து வருடங்களுக்கு முன்பு பாண்டிச்சேரிக்கு ஏதோ ஒரு வேலையாய் போனபோது ‘மாஸ்க்’ என்ற ஜிம் கேர்ரி யின் படம் ஒன்று நண்பர்களோடு சேர்ந்து பார்த்தேன். அதன் பிறகு ஜிம் கேர்ரியின் படம் என்றால் வாய்ப்பு கிடைக்கும் போது பார்ப்பதுண்டு. அப்படி ஒரு படம்தான் ட்ரூ மேன் ஷோஇதுவும் பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டன.
  • உலகம் என்பது ஒரு நாடக மேடை. அதில் நாமெல்லாம் நடிகர்கள் என்று எப்போதும் எல்லாரும் சொல்லக் கேட்டிருப்போம். நமக்கு அது சரியோ என்று தோன்றிய தருணங்களும் இருந்திருக்கும். யாரோ ஆட்டிவைக்கும் பொம்மையாக நாம் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என்கிற கேள்வி இல்லாமல் இல்லை. மிகப் பெரிய தத்துவக் கேள்விகளை உள்ளடக்கியும், இறைவன் கருணை மிக்கவன் என்கிற கருத்தை கேலி செய்யும் விதத்திலும், இந்தக் கதைப் பின்னல்கள் கேள்வி எழுப்பும் – பார்ப்பவர்கள் மனதில்.

“இந்த நிகழ்ச்சியில் அனைத்தும் உண்மை – எதுவும் பொய்யில்லை” என்கிற ஒரு தொனியில் தொடங்கும் ஒரு லைவ் ஷோ. தனியாக, முழுவதுமாக உருவாக்கப்பட்ட ஒரு தீவு. முடிவடையாத ஒரு கடல் என்கிற ஒரு பிரம்மை. உருவாக்கப் பட்ட அந்த உலகத்திற்கு ஒளி கொடுக்கும் சூரியனின் ஒரு சிறு துளி - ஒரு விளக்கு கூரையிலிருந்து கீழே விழுவதில் தொடங்குகிறது அந்தக் கதை. அந்த தவறை மறைக்க மேலே சென்ற ஒரு விமானத்தின் விளக்கு கழன்று விழுவதாக சொல்லப் படும் செய்தி அதை உண்மையென்று அவனை நம்பச் செய்கிறது. அந்தக் கடலில் இறங்குவது ஆபத்து – ஏனெனில் அதில்தான் அவரது தந்தை இறந்து போனதாக ஒரு நிகழ்வு என்று சின்னச் சின்ன விஷயங்கள். அப்படி உருவாக்கப் பட்ட ஒரு தீவில் பிறந்ததிலிருந்தே அங்கே வளர்க்கப் படுகின்ற மனிதன் தான் ஜிம் கேர்ரி. அவனது ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு நிமிடமும் லைவ் ஆக ஒளிபரப்பப் படுகின்றது. ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக தான் ‘உருவாக்காப்பட்ட ஒரு மாய உலகத்தில்’ இருக்கிறோம் என்பதை அறியாமலே இருக்கிறான் அவன். அவன் வழியெங்கும் பார்க்கிற ஆட்கள், இயக்குனர் அவர்களுக்கு கொடுக்கும் வேடம், சொல்லும் வசனங்கள் என்று எல்லாமே நாடகத்தின் ஒரு அங்கம். ஒரே ஆட்கள் பல வேடங்கள் போடுகிறார்கள். இறந்து போன அவனது அப்பாவை திடீரென அவன் பார்ப்பதும், அது அவர் இல்லை என்று நம்ப வைக்கும் முயற்சியும், என்று பல நிலைகளில், கேர்ரி யோசிக்க ஆரம்பிக்கிறான்.
  • கொஞ்சம் கொஞ்சமாக உண்மையைக் கண்டறியவும், பயந்து இருந்த கடல் எல்லையற்றதாகத் தெரியவில்லை. படகேறி செயற்கையாய் கட்டமைக்கப் பட்ட கடலைத் தாண்டும் முயற்சியில் இருக்கும் போது இயக்குனர் அவரிடம் உரையாடுகிறார் – வெளி உலகம் மிக மோசமானது. இங்கே உனக்கு எல்லாம் கிடைக்கும் போகாதே என்கிற தொனியில் பேசுவதை எல்லாம் காதில் வாங்காமல் “வெளியே” பயணிக்கிறான்.

சிந்திக்கத் தொடங்கும் போதுதான் மனிதன் வாழத் தொடங்குகிறான் என்பது கூட படத்தின் கருவாக இருக்கலாம். உலகம் முழுவதும் இந்த நிகழ்ச்சி நடக்க வேண்டும் என்பதற்காக ஒரு மனிதனை சிறையில் அடைப்பதைப் போன்று அவனது சுதந்திரத்திற்கு தடை போடுவது சரியல்ல என்று தனி மனித சுதந்திரத்தை வலியுறுத்துவது கூட கருத்தாக இருக்கலாம். வாழ்க்கையே ஒரு நாடக மேடை எனவே அதில் அதிகக் கேள்வி கேட்காமல் வாழ்வது சரி என்பதோ, மாய உலகில் கட்டமைக்கப்பட்ட விதிகளைத் தகர்த்தெறிந்து மனம் சொல்வதைக் கேட்பது என்பது கூட செய்தியாக இருக்கலாம். காதல் என்பது வேறொருவன் நிர்ணயிக்கிற ஒரு ஆளை வைத்தோ, அழகை வைத்தோ வருவது அல்ல அது உள்ளிருந்து வருவது என்பது கூட செய்தியாக இருக்கலாம். ஆனால் பார்க்கிறவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு செய்தியைத் தரும் என்பது மட்டும் நிச்சயம்.
  • இந்தப் படத்தை தமிழில் எடுத்தால் தமிழ் ரசிகர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்கிற கேள்வி எனக்குள் இருந்தது.

இந்த அளவுக்கு ஒரு நாடகத் தன்மையுடைய கதை நமக்கு ஒத்து வராது – நமக்குத் தேவை வேகம் – வேகமான திருப்பங்கள் – த்ரில் – சண்டைக் காட்சிகள் – பாடல்கள் – என்று எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து உருவாக்கப் பட்டிருக்கும் படம் சமர்.
தமிழ் ரசிகர்கள் இதை நிச்சயம் ரசிக்க வாய்ப்பு உண்டு. விறுவிறுப்பாக செல்லும் படம் என்று நினைக்கிறேன். ட்ரூமேன் ஷோ பார்க்காதவர்களுக்கு இந்த படம் நிறைய பிடிக்கலாம் – பார்த்தவர்களுக்கு மிகப் பெரிய ஈர்ப்பை உண்டாக்காது என்றே நம்பலாம் – சில சீன்களுக்குப் பிறகு கதையை ஓரளவிற்கு ஊகிக்க முடிந்து விட்டது.  அது தவிர சில சீன்களை வேறு ஏதோ படத்தில் அப்படியே பார்த்தது போலவும் இருக்கிறது. ஆனால் நினவுக்குத்தான் வர மறுக்கிறது. எனக்கு ஒருவேளை அம்நீஷியாவோ என்னவோ.
ஆனால் இறுதியில் ட்ரூ மேன் ஷோ எழுப்பும் எந்தக் கேள்வியையும் சமர் படம் பார்த்தவர்கள் மத்தியில் எழுப்பாது என்பது மட்டும் நிச்சயம் – அந்தக் கேள்விகள் நமக்குத் தேவையில்லை என்பதும் கூட காரணமாக இருக்கலாம். எந்த விதமான மற்ற திரைக்கதைக்கான நன்றியோ, தாக்கம் என்பது பற்றிய திரைப்படக் கதைகளோ டைட்டில் கார்டில் வரவில்லை. ஒரு வேளை நான் கவனிக்க வில்லையோ என்னவோ. அல்லது இயக்குனருக்கும் அம்னிஷியாவோ என்னவோ?

5.2.13

யார் யாரைக் காப்பாற்றுவது?



இப்போதுதான் ஒரு வழியாய் ஒரு தடை விவகாரம் முடிந்தது. அதற்குள் இன்னொரு விவகாரம் / அதாவது கமலுக்குப் பிறகு கடல். இஸ்லாமிய நண்பர்களின் கடமை முடிந்த பிறகு, இப்போது கிறித்தவ நண்பர்களின் கடமை தொடங்கியிருக்கிறது.
  • கடல் படத்தில் எத்தனையோ இடங்களில் அவர்களின் மனது புன்பட்டதாகவும் அதனால் அத்தனை இடங்களில் – கட் – செய்ய வேண்டுமாம். உங்கள் மனதுதான் புண்படுமா எங்கள் மனது புண்படாதா என்று கேட்பது போல இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து இருக்கிறார்கள். அவர்கள் ஒரு பத்துப் பேர்... உண்மையில் காயப்பட்டவர்கள் போலத் தெரியவில்லை. எதோ போராட்டம் செய்தால் நாலு பேரு நம்மைப் பத்தி தெரிந்து கொள்வார்கள் என்று போராரடினார்களோ என்னவோ? எனக்கு அவர்கள் போராட்டம் செய்ததைப் பற்றிக் கவலைப்பட வில்லை. அதையும் ஒரு செய்தியாக வெளியிட்டு வருகிற ஊடகங்களை நினைத்து வருத்தப் படுவதா அல்லது சிறு செய்திகளைக் கூட எல்லாருக்கும் தெரிவிப்பதை நினைத்து பெருமைப் படுவதா என்று தெரியவில்லை.

நம்மை கைல மாட்டிக்கிட்டு சாமி படுற கஷ்டம் இருக்கே. அதோடு சேர்த்து இப்போது ஆதி பகவானுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இருக்கிறது விஷ்வ ஹிந்து பரிஷத். முன்பே இவர்களுக்குப் போட்டுக் காண்பித்து விட்டுதான் திரையிட வேண்டுமாம். காசு குடுக்காம படம் பாக்கிறதற்கு இப்படி ஒரு வழிய நம்மாளுங்க கண்டு பிடிச்சத நினைச்சா பெருமையா இருக்கு. நாம எதுவுமே கண்டு பிடிக்கலைன்னு இந்த உலகம் சொல்லப்டாது கேட்டிளா.
  • சரி நம்ம விஷயத்துக்கு வருவோம். நானும் கடவுள் பக்தி உள்ளவன்தான். இருந்தாலும் இந்தக் கேள்வியைக் கேக்காமல் இருக்க முடியலை. யாரு யாரைக் காப்பாத்துறது. கடவுள்தான் நம்மைக் காப்பாத்தானும். இங்கே நடக்கிற கூத்தையெல்லாம் பார்த்தா எதோ நாமதான் கடவுளைக் காப்பத்துகிற வேலையில இறங்கியிருக்கிற மாதிரி தெரியுது. கடவுள் கடவுளைக் காப்பாத்திக்குவார். நம்ம நம்மளைக் காப்பத்துவோம். அது போதும். அதிகப் பிரசங்கித் தனமா மனுஷன் நான்தான் கடவுளைக் காப்பாத்துவேன்னு நின்னா அவன்தான் சாத்தான்.

எனவே எல்லா மத நண்பர்களே வீனாவுல சாமிய வம்புக்கு இழுக்காதிங்க. அப்புறம் சாமிக் குத்தமாயிரும். என்னை விட நீ பெரியவனான்னு சாமி நம்மைக் கண்ணைக் குத்திரும். புதுசு புதுசா ஏதாவது லெட்டர் பேட்ல அடிச்சு போலீசுக்குப் போறதுக்கு பதிலா எங்காவது வேலைக்குப் போனா வீட்ல இருக்கவுங்க சந்தோஷப் படுவாங்க. சாமியும் சந்தோஷப் படும். 

"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
இப்படியே போனா எந்தப் படத்துக்கும் விளம்பரம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
                         """""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
சேட்டைக்காரன் - சேட்டையை தடை செய்ய வேண்டும் என்பதை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும்.

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""''

4.2.13

கமல், கடன், கருத்து



  • கமல் தான் கடன் வாங்கி படம் எடுத்ததாகவும் அதனை சொன்ன தேதியில் வெளியிட முடியாது போனதால் தனது இல்லத்தை இழக்கும் நிலை வந்திருப்பதாகவும், தமிழகத்தை விட்டு மதச் சார்பற்ற ஒரு மாநிலம் தேடுவதாக –காஷ்மீரிலிருந்து கேரளா வரை ஏதாவது ஒரு இடம் தேடப் போவதாவும் வெளியிட்ட அறிவிப்பைப் பார்த்து மனமுடைந்த ரசிகர்கள் பணம் அனுப்பவதாகக் கேள்வி – ம்  ம் - ரசிகர்கள்!
  • கமல் அப்படி ஒரு இடம் தேடினால் அவர் சொன்ன இரு மாநிலங்களிலும் அவர் வசிக்க முடியாது. இரண்டுக்கும் உள்ள காரணங்கள் அவருக்கே தெரியும். எனக்குத் தெரிந்து அன்பும் அமைதியுமே உருவான, மதச்சார்பற்ற [!?] திரு. மோடி ஆட்சி செய்யும் இடமாக அது இருக்கலாம்! ஆனால் அங்கே போக அம்மையார் விட மாட்டார். வேறு எங்கே போக முடியும்? தேவையற்ற விரக்தியில் ஏடாகூடமாய் மீண்டும் தன் வாயைக் கொடுத்தே மாட்டிக் கொண்டார்.
  • சினிமா என்பது வெறும் தொழிலா அல்லது அதையும் தாண்டி அந்தக் கலைஞர்களுக்கு வேறு ஏதாவது பொறுப்பு என்று உள்ளதா என்பதைக் கலைஞர்கள் புரிந்து கொள்ளும் தருணம் என்பதாக இதை எடுத்துக் கொள்ள வேண்டும். தொழிலில் இழப்பு, கடன் தொல்லை என்பதெல்லாம் சரியான வாதமா என்பது தெரியவில்லை. இது வெறும் தொழில்தான் என்றால் ஒவ்வொரு தொழிலிலும் எதிரிகள் தடைகள் உண்டு என்கிற விதத்தில் சில அணுகு முறைகளை மேற்கொள்வது அவசியம். இல்லை இது தொழில் இல்லை என்றால் அவர்களின் பொறுப்புகளை உணர்ந்து படம் எடுக்க வேண்டும். இரண்டு விதத்திலும் கமலின் நிலை என்ன என்பது குறித்த சந்தேகமே எழுகிறது. கிங்க்பிஷர் விமானங்கள் நஷ்டத்தில் ஓடுவதாகவும் அதனால் மஞ்சள் பத்திரிக்கை கொடுக்க வேண்டும் என்ற போது எல்லாரது உள்ளத்திலும் எழுந்த கேள்வி இதுதான் – உன்னைய யாரு ஓட்டச் சொன்னா? அதே கேள்வியை இப்போதும் கேக்கலாமல்லவா?
  • நீதிமன்றச் சர்ச்சையில் சிக்குவதில் நமக்கு உடன்பாடு இல்லைதான். பண இழப்பு என்பதைக் காரணம் காட்ட முடியாது – நாட்டின் ஒற்றுமையும் நாட்டு அமைதியும்தான் முக்கியம் என்று நீதிபதிகள் சுட்டிகாட்டி தடையை நீட்டித்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஆயிரக் கணக்கான மக்களின் உயிருக்கும், பின் வரும் சந்ததிக்கும் மிகப் பெரிய பேராபத்து காத்திருக்கும் கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரத்தில் பண இழப்பை மட்டுமே முன்னிருத்தியதாக எனக்கு நினைவு. என்ன நடக்கிறது  இங்கே!
  • சுமுகமாய் பிரச்சனை முடிந்திருப்பதாக சொல்கிறார்கள். இனிமேலாவது உலக நாயகன் உஷாராய் இருப்பார் என்று நம்புவோம். ரசிகர்கள் மகிழ்வார்கள்.
குறிப்பு:
என்னுடைய முந்தய பதிவைப் பார்த்து விட்டு என்னை ஒரு நண்பர் பிடி பிடி என்று பிடித்து விட்டார். ஏதோ நான் கமலின் ரசிகன் என்பது போலவும், அவருக்கு நான் ஏதோ கடன் கொடுத்து அது வராதே என்கிற கவலையில் தடை தவறு என்று நான் எழுதியதாக நினைத்து விட்டார். ஒரு வேளை அந்த தொனியில் அந்தப் பதிவு இருந்ததோ என்னவோ!
ஆனால் அதே சமயம் எந்த வித தொடர்பும் இன்றி ஒரு விடயத்தில் ஒரு கருத்தைப் பதிவு செய்வதும், அதே கருத்தை எல்லாச் சூழ்நிலைகளிலும் ‘சந்தர்ப்ப வாதியாக’ இல்லாமல் பதிவு செய்வதும் அவசியம். நமக்குத் தமிழ் பற்று அதிகம் இருப்பதினால் டேம் 999 ஐத் தடை செய்வது சரி என்றும், இன்னொரு படத்தைத் தடை செய்வது தவறு என்றும் சொல்வது சரி இல்லை என்றே படுகிறது. [ஆனாலும் இன்னொசென்ஸ் ஒப் முஸ்லீம்ஸ் ஐ தடை சொல்வது சரி என்று எழுதியிருந்தேன். அதற்கான காரணம் வெறும் காழ்ப்புணர்ச்சியில் எடுக்கபட்ட படம் என்பதனால்].

அதிசயம் ஆனால் உண்மை. இட்லி வடையில் எப்போதும் இல்லாமல் திடிரென்று ‘சோ’ வின் சந்தர்ப்ப வாதத்தை எடுத்து விட்டிருக்கிறார்கள். அதில் சோவின் சந்தர்ப்ப வாதத்தை பற்றியா தி.மு.க. வின் சந்தர்ப்ப வாதமா என்று புரியவில்லை. அதற்குள் சோவின் பேட்டி - இரண்டு பக்கமும் சால்ரா அடிக்கும் சோ வைப் பார்க்க பாவமாய்த் தான் இருக்கிறது.