22.5.10

காலாவதி - நம் தலை விதி

இந்தியாவும் தமிழகமும் ஒரு போதும் திருந்துவதற்கான வாய்ப்பே இல்லை என்றுதான் தோன்றுகிறது.
இது அவ நம்பிக்கையின் குரல் அல்ல.
நடக்கிற
நிகழ்வுகளிலிருந்து கூட கற்றுக் கொள்ள மனமில்லாத நமது நிலையினைப் பார்த்து வெளிவரும் வேதனையின் குரல்.
நமது உலகம் பணத்தை முன்னிறுத்துகிறது. எல்லாவற்றிற்கும் பணம்.
பணமிருந்தால் மார்க்கமுண்டு.

என்ன செய்வான்? எல்லாரும் பணம் பெற முயல்பவனாகவே இருப்பான்.
சிறு வியாபாரி, பெரும் வியாபாரி, இந்திய முதலாளிகள், எல்லாருக்கும் இதுதான் ஒரே வழி என்று ஆகி விட்டது.
வெளி நாட்டு கம்பெனிகள் இந்தியாவிற்கு வருவது உண்மையாய்
இந்தியாவை முன்னேற்ற இல்லை என்பது நமக்குத் தெரியும்.
அவர்கள் அளவுக்கு அவர்கள் பணம் பெற முயல்கிறார்கள்.

இதில் லாபம் அதிகரிக்க பெரும்பாலனவர்கள் பயன்படுத்தும் உத்தி -
தரமான பொருட்களை வழங்குதல், உலகத்தரத்திற்கு பொருட்களை வழங்குதல்,
ஐ.எஸ். ஐ முத்திரை பெற்றது, நேர்மையான மனிதர்,
நூறாண்டுகள் பழமையான நிறுவனம் -
என்பதைப் பயன் படுத்துவதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

உண்மை என்னவென்றால் மேற்சொன்னதெல்லாமே - வெறும் ஏமாற்றுதல் தான்.
உண்மையான உத்தி ஏமாற்றுதல் ஏமாற்றுதல் ஏமாற்றுதல்தான்.

இது தவறு என்று தெரிந்தாலும், இதைத் தவிர வேறு வழியில்லாமல் பணம் பெற முடியாது
என்கிற நிலைக்கு எல்லாரும் தள்ளப் பட்டிருப்பதால்,
இதை மிகவும் நேர்த்தியாக பயன் படுத்த அனைவரும் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
சிறு வியாபாரி சிறு அளவில் செயல் பட்டால்
பெரும் வியாபாரி பெருமளவிலும்,
உலக நிறுவனங்கள் உலக அளவிலும்
தங்கள் ஏமாற்றுதலை செவ்வனே செய்கிறார்கள்.

விலைவாசி உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம்,
ஆற்றில் தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, போக்குவரத்து வசதியின்மை, பண வீழ்ச்சி -
இன்னும் எனாவேல்லாம் காரணமோ அனைத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.
வேறு வழி - எல்லாரும் இந்த நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள்.

இதில் இலாபம் இல்லாமல் யாரும் எந்தத் தொழிலும் செய்ய முடியாது
என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் எந்த அளவு என்பது ரொம்ப முக்கியம்.
இதற்குள் சென்றால் அதை வேறு கண்ணோட்டத்தில் அணுக வேண்டும்.
அதனால் அதை தற்காலிகமாய் தள்ளி வைப்போம்.

எனவே வேறு வழியில்லாமல் ஏமாற்றுவதன் வழியாய் பணம் பண்ண எல்லாரும் முயல்கிறார்கள்.

தண்ணீர் வாங்கிக் குடிக்கலாம் என்றால் - பாக்கெட் தண்ணீர் - அதில் ஐ.எஸ்.ஐ. முத்திரை இருக்கிறது.
அனால் தண்ணீர் சுத்திகரிக்கப் பட்டது என்பதற்கு எந்த சரி பார்த்தாலும் இல்லை என்பது நமக்குத் தெரிகிறது.
எப்படி அவர்கள் ஐ.எஸ்.ஐ. முத்திரை இடுகிறார்கள்
- அதைத் தடுக்க பி.ஐ.எஸ் என்ன சோதனைகளை மேற்கொண்டிருக்கிறது
என்பது நமக்கு இதுவரை தெரியாது.
எல்லாருக்கும் ஐ.எஸ்.ஐ முத்திரை பயன்படுத்த அனுமதி கொடுக்கிறார்களே ஒழிய
அதற்குப் பிறகு என்றாவது அது தரம் மிக்கது என்று உறுதி செய்திருக்கிறார்களா நமக்குத் தெரியாது.
அப்படியே வந்தாலும் பணம் கொடுத்தால் எல்லாம் சரியாகி விடும்.
சென்னை சென்ட்ரல் இரயில் நிலைய நடை மேடைகளின் ஓரத்திலேயே அமர்ந்து காலி பாட்டில்களில்
தண்ணீர் நிரப்பி பெவிகுய்க்ஸ் வைத்து மூடிகளை ஒட்டி வியாபாரம் ஜோராக நடக்கிறது.
அவன் அளவுக்கு அந்த ஏமாற்றல்.

சரி - கோகோ கால வாங்கலாம் என்றால் அவன் அளவுக்கு அவன்.
இனிமேல் நாமே வீட்டிலிருந்து தண்ணீரும் அல்லது கூடவே ஸ்டவும் எடுத்துச் செல்ல வேண்டும் -
ஆனால் ரயில்வே நிர்வாகம் அதையும் அனுமதிப்பதில்லை.

சரி - சாப்பிடப் போகலாம் என்றால் - அங்கே பழைய பொருட்கள் - பிரிட்ஜ் இல்லை
ஆனால் நேற்று செய்தது அதற்கு முன்பு செய்தது என்று ஒரு வார உணவுகள் -
அதையெல்லாம் சாப்பிட்ட பிறகும் நாமெல்லாம் எந்த சிக்கலும் இல்லாமல் இருக்கிறோம்
என்பதே நமது உடல் இந்த அளவிற்கு இவைகளுக்குப் பழகி விட்டது என்பதைக் காட்டும்.
இறந்த கோழி, செத்த மாடு, காக்காய், எல்லாம் -

சரி நாமே வீட்டில் சமைக்கலாம் என்றால் அதில், அரிசியில் கல், பருப்பில் மண், சர்க்கரையில் சுண்ணாம்பு, எல்லாம் -

உடம்பு சரியில்லை என்று மருத்துவ மனை சென்றால் போலி மருந்து - காலாவதியான மருந்துகள் -

ஒரே பஸ் பல்வேறு கட்டணங்கள் - ஆட்டோ ஓட்டுனர்களின் கறார் பயமுறுத்தும் கட்டணங்கள்,
பெட்ரோல் கலப்படம் , அளவு குறைப்பு -

கடுப்பாகி டாஸ்மாக் போனால் - சாமி அங்கே இல்லாத கலப்படமா!

அப்படி ஏதாவது வந்தால் காவல்துறைக்குப் பணம் - அந்தப் பணத்தை எடுக்க இன்னும் பெரிய ஏமாற்று வேலை.
இதுதான் சமயம் என்று காவல் துறை - எல்லா இடங்களிலும் சோதனை மேற்கொள்ளும் - இன்னும் பணம் சம்பாரிக்க.
வெள்ளையன் போன்றோர் - காலவதிப் பொருட்களை சோதனை செய்வதைத் தடை செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்துவர் -
காவல் துறை பணம் சம்பாரிக்கவே இப்படி செய்தால் அது தவறுதான் - ஆனால் அதற்காக சோதனை செய்யக் கூடாது என்றால் என்ன செய்ய முடியும்?
ஆமா? இதற்குப் பிறகாவது எந்த பெரிய நிறுவனங்களிடமாவது காவல் துறை சோதனை மேற்கொண்டிருக்கிரார்களா? முடியாது.

படிக்கப் பணம் - எனவே படித்த பிறகு அதை எடுக்க நோயாளிகளை ஏமாற்றுதல்.
தேர்தலில் நிற்கப் பணம் - எனவே அதை எடுக்க ஊழல்.

தங்கள் நாட்டில் சம்பளம் கொடுத்து கட்டுபடியாகாது என்று இங்கே வந்தவர்களும், தங்கள் நாட்டில் சோதனை அதிகமாக இருக்கிறது என்று இங்கே வந்தவர்களும் தரமற்ற பொருட்களுக்கு - மேலை நாடுகளுக்கு இணையாக பணம் வசூலிக்கிறார்கள். நமது நாட்டில் பொருட்கள் வாங்கி அதற்கு டாலருக்கு இணையாக நாம் பணம் கொடுக்கிறோம். அவனளவில் அவன் திருடன். வேப்ப இலையே தனக்குச் சொந்தம் என்றவன் எப்படி இருப்பான்?

ஏன் இவைகளெல்லாம் நடக்கின்றன - அரசிற்கு இவைகளல்லாம் தெரியாது.
தெரிந்தால் நடவடிக்கை எடுப்பார்கள். பாவம் முதல்வர் என்ன செய்வார் - திரைப் படத்திற்கு வசனம் எழுதவும்
அண்ணன் தம்பி சண்டைகளை சரி செய்யவே நேரம் சரியாக இருக்கிறது.
வேறு முதவர் வந்தால் - அதுவும் அப்படித்தான் - அவர்களுக்கு இது எப்படித் தெரியும் -

அவர்களுக்கே வலி வந்தால்தான் தெரியும்.

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாதுன்னார் பட்டுக் கோட்டை.
அது ரொம்பக் கஷ்டம்.
ஏன்னா - எல்லாருமே ஒரு விதத்தில் திருடனாகவும் ஏமாற்றுபவனுமாகவே இருக்கிறோம்.







ரிலையன்ஸ் - அவ நம்பிக்கை

ஒரே நாளில் இரு செய்திகள்:

1. ஏறக்குறைய அறுபது கிலோமீட்டர் அளவுள்ள சாலை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இது ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி வரை. இதன்பின் 24 ஆண்டுகளுக்கு சுங்கம் வசூலித்துக் கொள்ளலாம்.
அப்போதைய அரசியல் வாதிகளிடம் கொஞ்சம் பணம் கொடுத்தால் இன்னும் 24 ஆண்டுகள் என்ன - எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் வசூலிக்கலாம்.

2. காலாவதியான உணவுப் பொருட்களை விற்றதற்காக கைது செய்யப்பட்ட துரைப்பாண்டி - ரிலையன்ஸ் பிரெஷ் - லிருந்து பொருட்களை வாங்கியதாகக் கூறுகிறார்.

இந்தியப் பிரதமர் மற்றும் அரசியல் தலைவர்கள் - இன்னும் சில நண்பர்கள் சொல்லுவது போல அம்பானி மற்றும் டாடா போன்றவர்கள் இந்தியாவை முன்னேற்றுவதற்காக தொழில் செய்கிறார்கள் என்பதெல்லாம் வெறும் கோஷம். எந்த முதலாளியும் ஏமாற்றுவதைத் தான் மூலதனமாக வைக்கிறானே ஒழிய வேறு ஒன்றும் இல்லை.


மக்கள்தான் மாற வேண்டும்.

15.5.10

குஷ்புவின் அரசியல் பிரவேச[ஷ]ம்

குஷ்பு தி.மு.க. வில் சேர்ந்திருப்பது யாருக்கு பலம் என்று தெரியவில்லை.
ஜெயலிலதாவின் மாற்றாக வந்திருக்க வேண்டிய குஷ்பு -
ஏன் ஓரங்கட்டப் பட்டார் என்பது தெரிய வில்லை.
கோவிலில் தெய்வமாக அமர்ந்திருந்த இந்த நடிகை -
இப்போது ஒரு திராவிடக் கட்சியில் இனைந்து
தனது பெயரை அரசியல் தளத்தில் பதித்துக் கொண்டார்.

தமிழ் தெரியாமல் இந்த தமிழ் உலகத்திற்குள் வந்து,
லட்சக் கணக்கான இளம் உள்ளங்களை கொள்ளை கொண்டு திரை உலகில் ...

பின் குஷ்பு பாவாடை, தாவணி, .... இன்ன பிற... வழியாக
தயாநிதி மாறனின் துறையான "ஜவுளித் துறையில்" மிகப் பெரிய
வருமானத்தை அள்ளிக் கொடுத்தவர்.

பின்பு குஷ்பு இட்லி... என உணவுத்துறையில் முக்கிய இடம் பதித்தவர்.

பிறகு தொலைக் காட்சி ---
பெண்ணியவாதி என பல நிலைகளில் மிகப் பிரபலமாகப் பேசப் பட்டவர்,
இப்போது தனது அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுவிக்கப் பட்டதும்
- அரசியலில் இணைந்திருப்பது
எதற்காக என்பதுதான் புரியவில்லை.

- மக்கள் நலனிற்காக இல்லை என்பது மட்டும் நிச்சயம்.

இதில் அதிகம் பாதிக்கப் படுவது ராதிகாவாக இருக்கலாம்.
- அப்பா அப்பா என்று அழைத்த அவரின் இடத்தில் இவர் இருப்பார் என்றால்...

ராதிகாவின் சன் டி.வி. ஸ்லாட் நேரத்தில் - குஷ்பு கலைஞர் டி.வி. யில் தோன்றலாம்.
சன் டி.வி. யில் கூடத் தோன்றலாம். யார் கண்டது?

தனது தனிப்பட்ட பாதுகாப்பிற்காகக் கூட தி.மு.க.வில் இணைந்திருக்கலாம்.

எனக்கென்னவோ - இது தேர்தல் நெருங்கி வருவதைக் காட்டுவது போல இருக்கிறது.
ஏதாவது ஒரு இடத்தில் குஷ்பு தேர்தலில் நிற்கலாம்.
வெற்றி பெற்று சட்ட சபை செல்லலாம்.
அப்புறம் வழக்கம் போல ...

குஷ்பு கட்சியில் சேர்வது ஒன்றும் சட்ட விரோதம் இல்லை.
தமிழ் நாட்டில், நடிகைகள் நடிகர்கள் கட்சியில் சேர்வதும்,
கட்சி தொடங்குவதும், நம்மை ஆள்வதும் ...

திரைப் படங்களில் வரும் நடிகர்களின் நடிகைகளின் கொள்கைகள் சினிமாவில் இருப்பது போலவே இருக்கும் என்று நம்புகிற மக்கள் இருக்கிற வரை ... எம். ஜி. ஆர். கலைஞர் தொடங்கி, ஜெயலலிதா, டி. ஆர், விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், சிம்ரன், ராதா ரவி, சிரிப்பு நடிகர்கள், செந்தில், கோவை சரளா .....

அடுத்து விஜய், நயன்தாரா, சிம்பு அப்புறம், வடிவேலு, பிரேம்ஜி, ...

தமிழ் நாட்ட புடிச்ச ..... பாத்தீங்களா?

12.5.10

கசாப்பின் மரணதண்டனை

இந்திய இறையாண்மைக்கு எதிராக நான் எதுவும் பேசப் போவதில்லை.

மரண தண்டனைக்கு எதிராக பல இயக்கங்கள் இருக்கின்றன.

அவர்களின் காரணங்கள் பற்றி அலச வேண்டிய நேரம் இதுவல்ல என்பதனால்
அதற்கு ஒரு முற்றுப்புள்ளி.

இந்த மரண தண்டனை இந்தியாவில் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிக்குமா என்பதை நினைவு கூற வேண்டிய நேரம் இது.

சரியோ தவறோ - ஒரு கொள்கைக்காக மூளை மழுங்கடிக்கப் பட்டவர்கள்
எத்தனை உயிருக்கும் சேதம் விளைவிக்கத் தயங்க மாட்டார்கள்.
அப்படியெனில் - இந்த மரண தண்டனைக்காக யாரும் வருத்தப் படப் போவதோ
அல்லது இதன் பொருட்டு இனிமேல்
நமது நாட்டில் யாரும் மக்களின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்க மாட்டார்கள்
என்பதற்கான உத்திரவாதமோ எதுவும் இல்லை.

டெல்லியில் மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்கள் இருக்கின்றன என்று அமெரிக்காவும் கனடாவும் சொல்கின்றன.

இதை இந்திய பாதுகாவலர்கள் அறிந்து கொள்ள முடியவில்லையே அது ஏன்?
பெரிய வல்லரசுகள் இதைக் கண்டு பிடிக்க முடிகிறது என்றால் அவர்களுக்கு மட்டும் எப்படித் தெரியும்?
ஒன்று அவர்களே இதைத் திட்டமிட வேண்டும்
அல்லது குருதிப்புனல் கமல் தீவிர வாதிகளின் இயக்கத்தில் ஆள் வைத்திருப்பது போல
தீவிரவாத இயக்கத்திலே பல வல்லரசுகளின் ஆட்கள் மறைந்திருக்க வேண்டும்.
[தீவிர வாத இயக்கங்கள் கவனிக்க வேண்டும்]
அப்படியே அந்தத் திட்டமிடல் பற்றி அவைகளுக்குத் தெரிந்திருந்தால் முதலில் இந்திய அரசிற்குத்தான் தெரிவிக்க வேண்டும்.
- அல்லது யார் இதைத் திட்டமிடுகிறார்கள் என்றாவது இந்திய அரசிற்கு மட்டுமாவது சொல்ல வேண்டும்.
அதை விடுத்து பத்திரிகைகளுக்குச் சொல்வது என்பது பொது மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்கும் செயல்.

அவர்கள் நாடுகளிலிருந்து இத்தகைய தாக்குதல்கள் திட்டமிடப் படுகின்றன என்றால் -

யார் மூல காரணமோ அவர்களை குறைந்த பட்சம் கைதாவது செய்ய வேண்டும்.

எதுவும் இல்லாமல் ஆபத்து இருக்கிறது என்று சொல்லி

அவர்களே எல்லாவற்றையும் திட்டமிடுகிறார்களோ?
இந்தியாவின் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை குறைக்கும் உத்தியோ என்னவோ.

தீவிர வாதிகள் இந்தியாவில் ஊடுருவுகிறார்கள் என்ற கோஷத்தை எல்லோரும் பின்பற்றுகிறார்கள்.

அதைத் தடுக்கிற வழியை யார் மேற்கொள்வது?
தீவிர வாதிகளை எல்லாம் உள்ளே அனுப்பிவிட்டு
வயதான ஒரு பெண்மணியைத் திருப்பி அனுப்பிவிடுவது நன்றாகவா இருக்கிறது?

வருகிற சுற்றுலாப் பயணிகள் எத்தனை பேர் மீண்டும் வெளியில் போகிறார்கள்?


கடமையைச் செய்யத் தவறுகிற பாதுகாப்பு அதிகாரிகளும்,

மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் முதலாளிகளும்,
அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பற்றிக் கூடக் கவலைப் படாத அரசியல் வாதிகளும்,
இமய மலை போல் உயரும் விலை வாசியும் இருக்கிற வரை,
பணத்தை மட்டுமே காண்பித்து யாரும் எதுவும் இந்தியாவில் செய்து விட முடியும் என்கிற நிலையில் இருப்பதனால்தான்
சாதாரண மக்கள் கூட பகடைக் காய்களை பயன்படுத்தப் படுகிறார்கள்.

இதில் நாம் நமது கவனத்தைச் செலுத்தவதுதான் நல்லது.

கசாப்பின் மரண தண்டனை -
எந்த விதத்தில் நமது தேசத்திற்கு உதவும் என்பது ???

8.5.10

அரசியல் பூகம்பம்

தொலைத்தொடர்பு விவகாரம் முற்றிப் போய் கிடக்கிறது.

அரசும், அதிகாரமும், பணமும் அதோடு குடும்பமும் சேர்ந்தால் என்ன ஆகும்?
நேர்மையான அரசியல் வாதிகள் யாரும் இல்லை என்பதனால் - இருப்பதில் எது நல்லது என்று பார்த்துப் பார்த்து நமக்கும் இவைகளெல்லாம் பழகிப் போய் விட்டது.

சுண்டல் விற்பவனில் தொடங்கி கிண்டல் செய்கிறவன் வரையில் எல்லாரிடத்திலும் உண்மை என்பது அவர்களுக்குச் சாதகமாக பார்ப்பதிலும் பேசுவதிலும்தான் இருக்கிறது.

இதெல்லாம், நமது அரசியல்வாதிகள் நமக்குச் செய்திருக்கிற நன்மைகள். உண்மை என்றால் என்ன - எப்படி ஒன்றை உண்மையாக்கலாம் - எப்படி உண்மையை பொய்யாக்கலாம் - எப்படி ஒன்றை உருவாக்கலாம் - நடந்ததையே நடக்கவில்லை என்று எப்படி சொல்வது - எங்கே எப்போது எந்த அஸ்திரத்தைப் பயன்படுத்துவது -

கலைஞருக்கே வெளிச்சம்.