நான் + அது

நான்

ஏன் நான் ஒவ்வொரு முறையும் போராட்டங்களுக்கு ஆதரவாகவே எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று நான் என்னையே கேட்டுக் கொள்வது உண்டு.

இந்த நாட்டில் எதுவுமே சரியில்லை என்று எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு பெசிமிஸ்ட்டா நான்?
அல்லது பாலாவை ஒரு சாடிஸ்ட் என்று சிலர் கூவுவதைப் போன்று, பலர் போராடுவதில் சுகம் காணும் ஒரு சாடிஸ்டா நான்?
அல்லது போராடி போராடி அடி வாங்கி வீங்குவதில் சுகம் காணும் மசோக்கிஸ்டா?
பெசிமிஸ்டும் இல்லை சாடிஸ்டும் இல்லை - ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.

ஜனநாயக நாட்டில் தங்களது அங்கீகரத்தையும் உரிமைகளையும் போராடித்தான் பெற வேண்டும் என்று மக்களாட்சித் தத்துவத்தின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்துக் கொண்டிருக்கிற சாதாரண இந்திக் குடிமகன்.

எதெல்லாம் எம் இனத்திற்கான அவமானமாக இருக்கிறதோ - எப்போதெல்லாம் நாம் அழிக்கப்படும் சூழலில் இருக்கிறோமோ - ஆபத்தான சூழலில் இருக்கிறோமோ அப்போதெல்லாம் இந்த ஜன நாயகத்தின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்துப் போராடும் மக்கள் இந்த நாட்டின் மீது கொண்டிருக்கிற நம்பிக்கை நீர்த்துப் போய் விடக் கூடாது என்று நினைக்கும் குடி மக்களின் இனத்தில் நானும் ஒருவன்.

இந்தி நாடு என் தாய் நாடு இல்லை என்றாலும் அது என் நாடு என்று நினைக்கும் சில கோடிகளில் நானும் ஒரு கடைக் கோடி.

நம்மைக் காப்பாற்ற இன்னொரு காந்தியோ இன்னொரு காமராஜரோ வருவார் என்று காத்துக் கிடப்பதைக் காட்டிலும், ஒன் மேன் ஆர்மியில் நம்பிக்கை இழந்த ஆனால் மக்களின் மகத்தான சக்தி மீது நம்பிக்கை கொண்டவன்.
ஐந்து வருடத்திற்கு மட்டும் அரசியல் என்று மக்கள் நினைப்பதைத் தாண்டி, அரசியல் தளத்தில் மக்கள் தொடர்ந்து பங்கெடுக்கிற குடிமக்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பலர் போல் ஒருவன். 

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
உண்மையா பொய்யா?

எது உண்மை - எது பொய்?
யாரும் எதையும் உண்மை என்றோ பொய் என்றோ எளிதில் சொல்லிவிட முடியாது.

உண்மையா அது என்ன? என்றர் ஒருவர்.
நான் சொல்வது தவறு என்றால் எது தவறு என்று காட்டு என்றார் மற்றொருவர்.
நான் எனக்கு சரி என்று பட்டதை சொல்லிவிட்டேன், உனக்கும் அறிவு இருக்கிறது;
நீ ஆராய்ந்து பார்த்து உண்மை என்றால் ஏற்றுக்கொள் இல்லை என்றால் விட்டுவிடு என்றார் மற்றொருவர்.

நடந்தததை அப்படியே சொல்வதுதான் உண்மை - நடந்ததைப் பார்க்க யாரும் இல்லையென்றால் ???
யார் முதலில் சொல்கிறார்களோ அதுதான் உண்மையா?

நடந்ததை மட்டும் சொல்வது அல்ல – சில சமயங்களில் அது ஏன் நடந்தது என்று ஆராய்வதுதான் உண்மையைக் காணச் செய்யும்.
கண்ணால் காண்பதும் பொய் .... தீர விசாரிப்பதே மெய்மைக்கு இட்டுச் செல்லும்.

வரலாற்றில் நடந்ததை யார் எழுதினார்கள்?- அதிகாரம் இருந்தவன் எழுதினான் இல்லாதவன் எழுதவே இல்லை. எழுதியதை மட்டும் வைத்துக்கொண்டு அதுதான் உண்மையென எப்படி ஏற்றுக்கொள்வது? எழுதாமல் இருந்த பல நிகழ்வுகள் உண்மைதானே?

எனில் நமக்கு இருக்கும் ஒரே கருவி – உண்மையைக் கண்டு பிடிக்கும் கருவி – கேள்வி கேட்பது – கேள்விக்கு உட்படுத்துவது. எது உண்மையாக இருக்கும் என்பதை கண்டு பிடிப்பது. அதற்கு இந்தப் பதிவகம் நிச்சயம் துணை இருக்கும்.