28.2.11

ஜெயமோகனின் சிறுகதைகள்

தற்கால தமிழ் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத இலக்கியவாதி ஜெயமோகன் என்பதில் யாருக்கும் அய்யம் இருக்காது. 
இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து [இணையத்தில்] விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

சிறுகதைகள் வற்றாத ஜீவா நதி போல, கிளர்த்தெழும் ஊற்று போல, ஓடிக்கொண்டே இருக்கிறது.

 ஒரு சிறுகதையைப் படித்து அதை உள்வாங்கி மீண்டும் படிக்கத் தோன்றி அப்பக்கத்திற்கு விஜயம் செய்தால் - புதிய கதை. அந்தக் கதைகளைப் படித்துவிட்டு அதற்குப் பின்னூட்டம் எழுதக் கூட  நமக்கு அவகாசம் தராமலேயே அடுத்த படைப்பு. அவரது வேகத்திற்கு பின்னூட்டம் எழுதக் கூட நமக்கு வேகம் இல்லாத காரணத்தால் எந்தப் படைப்பிற்குப் பின்னூட்டம் போடுவது என்ற தவிப்பே மிஞ்சி நிற்கிறது.


படைப்பில் இது தொடங்கியது - அதற்கு முன்பாகவே ஒரு த்ரில்லர். நான் இன்னும் படிக்கவில்லை. அது எதைப் பற்றியது என்று சொல்வது நல்லதல்ல. ஆனால் அதைப் படித்த பின்பு நீங்கள் நிச்சயமாய் மீண்டும் படிப்பீர்கள் எம்பது மட்டும் நிச்சயம்.


அதைத் தொடர்ந்து - மத்துறு தயிர் - இரண்டு பாகங்கள்.


அதன் பிறகு வணங்கான், .... இப்போது ஓலைச்சிலுவை.....

அவருக்கு வாழ்த்துக்கள் - பாராட்டுக்கள்.


21.2.11

தாய் மொழி தினம் - பிப்ரவரி 21

உலகத் தாய் மொழி தினம் இன்று கொண்டாடப் படுகிறது. இதை ஒட்டி வேலூரில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றியவர்களின் கருத்துக்களை அறிய http://thoughtsintamil.blogspot.com/ இங்கே சுட்டவும்


தமிழின் பழமை பற்றியும் தமிழின் வளமை பற்றியும் அறிஞர்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள்.  ஆய்வுகளின் முடிவுகளை நாம் அறிந்து கொள்வது நமது கையில் இருக்கிறது. ஆனால் இன்றிருக்கிற சூழலில், தமிழை வளர்ப்பது ஆட்சியாளர்களின் அதிகாரத்தில்தான் இருக்கிறது. ஆனால் அது ஒரு போதும் நடக்குமா என்று தெரியவில்லை. ஏனெனில் தமிழகத்தை ஆண்டவர்கள் - ஆள்கிறவர்களின் நோக்கம் தமிழகத்தையோ அல்லது தமிழையோ உயர்த்துவதாக தெரியவில்லை. காரணங்கள் பல.

கல்வித் துறையில் - உலகம் எங்கும் இருக்கிற நாடுகளில், குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் எல்லாம் தத்தம் மொழிகளில் தாங்கள் பங்களிப்பைச் செய்து கொண்டிருக்கிற போது, நாம் மட்டும் இன்னும் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட விதத்தில் நமது கற்றுக் கொடுத்தலையும் அறிவுறுத்தலையும் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.. இந்தக் கட்டுரை எழுதுவதற்கு ஒரு முக்கிய நோக்கம் இருக்கிறது. ஒரு மொழி என்பது ஒவ்வொருவளின் இருப்போடும், அவளது பண்பாட்டோடும், குழுமத்தோடும் பின்னிப் பிணைந்த ஒன்று என்பதை நினைவிறுத்துவதற்காகவும் இதை எழுதுகிறேன். 

பொருளாதாரத்துறை என்பது நமது இருப்பை நிர்ணயம் செய்வதனால், பொருள் ஈட்ட, நான் ஆங்கிலமோ அல்லது  இந்தியையோ கற்றுக் கொண்டாக வேண்டும் என்கிற சூழலில், தமிழ் மட்டுமே அறிந்தால் என்னால் என் வாழ் நாளை ஒட்டி விட முடியாது. 
நீரா ராடியாவுடன் பேச வேண்டுமென்றால் தமிழில் பேச முடியுமா என்ன? 

ஆனால் பொருளாதாரத் துறையில் தமிழை முன்னிறுத்துவதற்கு முயற்சி எடுப்பதில்லை. ஆனால் தாய் மொழி என்று வருகின்ற போது ஒரு உணர்வை நமது மத்தியில் எழுப்ப முடியும் என்பதனாலும் ஒன்றும் செய்யாமல் இருக்க முடியாது என்பதனாலும் - இலக்கிய வளர்ச்சி என்று செம்மொழி மாநாடு நடத்துவதிலும், அல்லது தமிழ் திரைப்படங்களுக்கு தமிழிலில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்பதிலும் அரசு தமது தமிழ் பற்றை வெளிக்காட்டுகிறது. 
தமிழ் படித்தால் ஒருவன் வளர முடியாது என்பதைக் கட்டமைத்து விட்டு தமிழை வளர்க்கிறோம் என்று சொல்லுவதன் வழியாய் - தமிழனை அழித்துக் கொண்டே, தமிழை வளர்க்கிறோம் என்று   சொல்லிக்கொண்டிருக்க முடியும். இதன் வழியாய் தமிழை அழித்துவிடவும் முடியும் - பிறகு வெறும் எழுத்துக்களில் மட்டுமே இம்மொழி இருக்கும்.

கணனித் துறையில் கூகுளிலும், விக்கியிலும் தமிழ் வரமுடியும் ஆனால் நமது அரசாங்க ஆணைகளிலும் தமிழ் கலைச் சொற்கள் இல்லை என்று எத்தனை நாளைக்குத் தான் சொல்லிக் கொண்டே பொழுதை ஒட்டிக் கொண்டிருப்பது. 

தமிழ் வளர்ப்பது எதோ தமிழ் அறிஞர்கள் மட்டும் முன்னெடுக்க வேண்டும் என்பதைப் போல ஒரு பிரம்மையை நாம் முன்மொழிந்து கொண்டிருக்கிறோம்.  அல்லது எல்லாச் சொற்களையும் தமிழ் படுத்தக் கூடாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். திரு. இறையன்பு அவர்கள் ஒரு நூலில் இப்படித் தமிழ் படுத்துவது குழப்பத்தை விளைவிக்கும் என்று எழுதியதாக ஞாபகம். அதாவது ரெட் கிராஸ் என்பது ஒரு உலக நிறுவனம் அதனைச் செஞ்சிலுவை என்றெல்லாம் மொழி மாற்று செய்யக் கூடாது என்ற கருத்தை அதில் முன் வைத்திருக்கிறார்.
உலக நிறுவனம்தான் - அனால் இத்தாலியில் அதை ரெட் கிராஸ் என்று எழுதுவதில்லை - Croce Rossa என்றுதான் எழுதிகிறார்கள். பிரெஞ்சில் 
Croix-Rouge என்றுதான் எழுதுகிறார்கள் அவர்களுக்கெல்லாம் அது உலக நிறுவனமாகத் தெரியவில்லையா என்ன? நாம் மட்டும் ஆங்கில அடி வருடிகளா என்ன? ஆனால் அதைச் செஞ்சிலுவை என்று மொழி பெயர்ப்பதனால் மட்டும் தமிழ் வளர்ந்து விடுமா என்ன?


உலக மொழிகளில் வெளியாகும் எந்த ஒரு புத்தகத்தையும் அந்தந்த நாடுகளில் அதன் அதன் மொழிகளில் உடனே மொழி பெயர்த்து வெளியிடுகிறார்கள். Dan  பிரவுன்-ன் the Lost symbol  வாங்கலாம் என்று இத்தாலியக் கடைகளில் தேடினால் நமக்குக் கிடைப்பது  "il simbolo perduto ." பிரான்சில் தேடினால் "Le symbole perdu" என பிரெச்ஞ்சுப் பதிப்புதான் கிடைக்கிறது. ஆனால் அவைகள் எவையும் தமிழில் வெளிவருகிறதா எனத் தெரியவில்லை. எந்தப் புத்தகமெனினும் உடனே அவைகள் அவர்கள் மொழிகளிலே மொழி பெயர்க்கிறார்கள். தமிழ் பதிப்பாளர்கள் இதை மிகவும் லாபம் வரும் துறை எனக் கருதி வெறும் பிசினஸ் போலச் செய்தாலே போதும் - தமிழ் ஓரளவுக்காவது வளரும். புத்தகம் விற்காது என்றெல்லாம் பொய் சொல்ல முடியாது. ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சிக்கு வரும் கூட்டம் நமக்குத் தெரியும்.


எல்லாரும் வாங்குகிறார்களே என்று வாங்கும் மக்கள் கூட கொஞ்சம் சிரத்தயோடு படிக்கவும் தொடங்குவார்கள். காசு கொடுத்து வாங்கி சும்மா வைக்க மனது வருமா என்ன? அப்படியே வைத்தாலும் பின் வரும் தலைமுறையாவது அதைப் படிக்கும். எனவே பொருள் ஈட்டும் பதிப்பகங்கள் இதைப் பற்றி சிந்திப்பது நல்லது.


தமிழின் பழமையைப் பற்றி வேறு யாராவது சொன்னால் - அதுவும் ஆங்கில ஆய்வாளன் சொன்னால் மட்டுமே நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதையாது ஏற்றுக் கொள்கிறோமா?


எது எப்படி இருந்தாலும் அரசு முயலாதவரை தமிழ் மொழி வெறும் ஏட்டில் தான் இருக்கும். பொருள் ஈட்ட வழியில்லாத வரை தமிழின் மீது இன்றைய மனிதர்களுக்கு வெறுப்பு இருந்து கொண்டுதான் இருக்கும். இன்னும் ஒட்டு வாங்க மட்டும் - மண் தோன்றிக் கல் தோன்றாக் காலத்தே .... என்று மைக் போட்டுப் பேசலாம். 


15.2.11

அன்பர்கள் தினம்

பிப்ரவரி பதினான்கு தமிழகத்திலும் இந்தியாவிலும் பல எதிர்ப்புகளை வெளிக் காட்டிக் கொண்டுதான் இருக்கின்றன.
காதலர் தினம் தேவையா இல்லையா என்பது ஒரு புறம் இருந்தாலும், இதற்கான எதிர்ப்பின் வடிவங்கள் கேலிக்குரியதாய் இருக்கின்றது. என்ன மாயமோ தெரியலை சிவசேனா அமைதி காத்திருக்கிறது - இந்த வருடம்!

காதலர் தினக் கொண்ட்டாட்டத்தை எதிர்த்து வாழ்த்து அட்டைகளை எரித்து இருக்கிறார்கள். கலாச்சாரம் சீரழிகிறது என்றால் - தமிழ் புத்தாண்டிற்கும், பொங்கலுக்கும், கிறிஸ்துமசுக்கும், தீபாவளிக்கும் வாழ்த்து அட்டைகளை எரிக்க வேண்டும். அதென்ன பிப்ரவரி பதினான்கு மட்டும்?

வாழ்த்து அட்டைகள் விற்பது ஒரு பிசினஸ். நாளைக்கு திருவண்ணாமலை தீபம் மிக விமரிசையான நாளென்றால் அன்றைக்கும் வாழ்த்து அட்டைகள் விற்பனையாகும்தான். அதற்காகாக அப்போதும் அட்டைகளை எரிக்க வேண்டும்.
பிசினஸ் நடை பெற முதலாளிகள் எப்படி வேண்டுமானாலும் விளம்பரம் செய்வார்கள். விளமபரம் மூலமாக அதி லாபம் சம்பாதிக்க தொலைக்காட்சிகளும் அதிகமாக விளம்பரம் செய்யும். சிறப்பு காட்சிகள் -?

ஒருவேளை இந்த முதலாளித்துவப் போக்கு பிடிக்காமல், அதனால்தான் அவர்கள் எரிக்கிறார்களா? அப்படியே எரித்தாலும் - இவர்களை முதலாளித்துவ பொருளாதாரத்தை எதிர்க்கிற பாட்டாளி வர்க்கத்தின் தோழர்கள் என்று நாம் கருத முடியுமா என்பதுதான் என் கேள்வி? கலாச்சாரப் பற்று என்பது இதையும் உள்ளடக்க வேண்டுமல்லவா?
ஆனால் இவர்கள் கலாச்சாரம் என்பது என்ன என்றுதான் புரியவில்லை!

காதலர் தினத்தன்று டிஸ்கோத்தே அல்லது கடற்கரைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது என்றும் ஆபாசம் அதிகமாகி விட்டது என்றும் சொல்கிராரர்கள். அதை சரி செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. இல்லைஎன்பதற்கில்லை. அதோடு நாம் சரி செய்ய வேண்டிய ஆபாசம் நிறைய இருக்கிறது - குத்தாட்ட திரைப்பாடல்கள் - ஆலயச் சிற்பங்கள் -எனக்கு கலைக் கண்கள் இல்லையோ?

எது ஆபாசம் - எது கலாச்சாரத்தை கட்டிக் காப்பது?
மீண்டும் ஆண்கள் மேல்சட்டை போடாமலும் பெண்கள் மாராப்பு அணியாமலும் இருக்கின்ற கலாச்சாரத்தைத் தான் கட்டிக் காக்க விரும்புகிறார்களா இந்த எதிர்ப்பாளர்கள்?

இராமேஸ்வரத்தில் கழுதைக்கும் கழுதைக்கும் திருமணம் நடத்தி வைத்திருக்கிறார்கள். நாய்க்கும் நாய்க்கும் திருமணம் நடத்தி வைத்திருக்கிறார்கள். அதன் பொருள் என்ன? காதலர்கள் எல்லாம் நாய்களா? அவர்கள் திருமணமானவர்கள் என்றால் அவர்களும் அவர்களது மனைவிகளும் நாய்களா? அட என்னங்கடா சாமி? நாய்களை ஊர்வலமாக வேறு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். தங்கள் துணைவியோடு அவர்கள் வெளியே போவதே இல்லையா - இப்படித்தான் தங்களை நினைத்துக் கொண்டிருக்கிறார்களா? நாய்களோடு நமக்கென்ன பேச்சு? கழுதைகளோடு நமக்கு என்ன உறவு?

அரசியல் தளத்தில் போராட்டம் நடத்துவதற்கும், தங்களின் இருப்பைக் காண்பிப்பதற்கும் இதுதான் சமயமா? விலைவாசி உயர்வு எனக்குப் பெரிதில்லை - குளம் குட்டைகள் ஆக்கிரமிப்பு பெரிதில்லை - ஊழல் பெரிதில்லை - கோவில் கட்டலாம் - பூமி யாத்திரையும் அதோடு சேர்த்து இப்போது நாய்/ கழுதைகள் ஊர்வலம் போகலாம் .

தனி மனித சுதந்திரத்தை முன்னிறுத்தும் இச்சமூகம் நவீனத்துவத்தின் தொடர்ச்சி. இதில் தவறொன்றுமில்லை - ஆனால் அதே சமயத்தில் மனிதன் என்பவன் தனி மனிதன் இல்லை அதையும் தாண்டி ஒரு சமூகத் தொடர்பும், உறவாடலும் இருக்கிறது. இந்த இரண்டிற்கும் இடையிலேயான போராட்டம்தான் இது என்றும் பார்க்க முடியும்.

அதற்காக சமூக உறவை புதுப்பிப்பது என்பது தனி மனித உரிமைக்கு எதிராக இருக்கமுடியாது. அதையும் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தும் போது கலாச்சாரக் காவலர்களின் இயலாமையும், காழ்ப்புணர்ச்சியும், தன்னையே கேவலப் படுத்திகொள்கிற மன நிலையும், மீண்டும்  எதையோ கட்டுக்குள் கொண்டுவர முயல்கிற அதிகாரப் போக்கும்தான் அடியில் ஆழமாய் இருப்பதாகப் படுகிறது.
9.2.11

சளியும் - சனியனும்

சளி புடிச்சா சனியன் புடிச்ச மாதிரின்னு சொல்லுவாங்க.

அது வந்தா ஒன்னும் செய்ய முடியாது.  வேற யாரும் இதை பங்கு போட்டுக் கொள்ளவும் முடியாது. தனியாய்த் தான் சமாளித்தாக வேண்டும்.

தும்மல் தொடர்ந்து வரும். உட்கார முடியாது. உட்கார்ந்தால் மூக்கு ஒழுகும். படுக்கமுடியாது. படுத்தால் மூக்கடைக்கும். ஒரு பொசிஷன்ல மட்டும் லேசா சுவாசிக்க முடியும். அதைக் கண்டு புடிக்கிற வரைக்கும் வேற எதுவும் செய்ய முடியாது.

யோசிக்க கூட முடியாது [என்னமோ நாம பெரிய சாக்ரடீஸ் மாதிரி அப்படின்னெல்லாம் இல்லை]. என்ன சொல்ல வர்றேன்னா வேற எதைப் பத்தியும் யோசிக்கிறது இல்லைன்னுதான்.

அதாவது மாத்திரை போட்டா ஒருவாரம் - போடலைன்னா ஏழு நாள்.  அதுனால சளி எப்பப் போகும்னு யோசிக்கிறதே இல்லை. யோசனை எல்லாம் அந்தப் பொசிஷனைக் கண்டு பிடிக்கிறது. இப்படி ஒருக்களிச்சுப் படுத்தா சரியா - இல்லை அப்படியா? ஒன்னும் சரியில்லையே. வேற என்ன செய்யலாம். விக்ஸோ அல்லது அமிர்தாஞ்சனோ மூக்குல தடவி - ஒருக்களிச்சுப் படுத்தா எப்படி இருக்கும். அட!  விக்ஸ் தடவிப் படுத்தாப் பரவாயில்லை. ஓகே.

ஒகே. இனி சளி வந்தால் விக்ஸ் (அ) அமிர்தாஞ்சன் மற்றும் ஒரு சரியான பொசிஷன். வேற எதைப் பற்றியும் யோசிக்கக் கூடாது. அந்தச் சரியான சற்றைய நேரம் மட்டுமே கண்ணில் தோன்றி மறையும்.
அதைச் சரியாய் கண்டு பிடித்து உறங்கிவிட்டால் காலை வரைக் கவலை இல்லை.

நாட்டைப் புடிச்ச சனியன் விடவே விடாதான்னும் சொல்லுவாங்க.

அதென்ன நாட்டைப் புடிச்ச சனி ? அது என்னன்னு தெரியாட்டியும் என்ன பண்ணும்னு நமக்குத் தெரியும்.
யாரும் எதையும் பங்குபோட்டுக் கொள்ள முடியாது. சனியனைத் தனியாய்த் தான் எதிர்கொள்ளணும். விலைவாசி உயர்வா, மீனவர் படுகொலையா, சாதியின் ருத்திர தாண்டவத்தால் கொலையா, பெண்கள் அடிமைத்தனமா எதுவாய் இருந்தாலும் தனியாய்த் தான் எதிர் கொண்டாக வேண்டிய சூழலாகிவிட்டது.விலை வாசி விண்ணைத் தாண்டிவிட்டது. மீண்டும் கீழே வருவாயா என்று காத்திருக்க வேண்டியுள்ளது.

இவ்வளவு மோசமாக இருக்கிறதே, என்ன செய்ய முடியும். ஏதாவது செய்ய முடியுமா?
போராடினால் போலிஸ் அடிக்கிறது. சும்மா இருந்தால் மனசாட்சி கொல்கிறது. உட்காரவும் முடியலை, படுக்கவும் முடியலை. 
ஏதாவது செய்தாலும் ஐந்து வருடங்கள் கழித்துதான் மாற்றம் நிகழும். இல்லையென்றால் ஆள்பவர்களின் ஆட்சிக்காலம் முடிந்தபின்தான் சரியாகும். மாத்திரி சாப்பிடலாமா வேண்டாமா?

ஆக என்ன செய்யலாம் - அந்தப் பொசிஷன்ல எனக்கு எப்படி ரிலீப் கிடைக்குன்னு பாக்கலாம். சிலசமயம் கிடைக்கும் தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கினால் ரிலீப் வருகிறது. சிலசமயம் என் ஓட்டுக்கான அந்த சில ஆயிரங்களை வாங்கினால் ரிலீப் கிடைக்கிறது.
அதன்பிறகு காலை வரை கவலையில்லாதது மாதிரி பணம் தீரும் வரை ரிலீப்தான். என்ன சலிக்கு ரிலீப் தினமும் நடக்கலாம். சனியன் ரிலீபுக்கு ஐந்து வருடம் ஆகலாம். அவ்வளவே.

நாட்டைப் பிடிச்ச சனியன் நாமளா - அரசியல்வாதிகளா - அமைப்பு முறையா?

ஆனால் சளி காற்றில் பரவுவது போல; ஒரு ஆளிடம் இருந்து வேறோருவனுக்குப் பரவுவது போல -  ஆட்சி மாறினாலும் சனியன் மாறுமா என்பதுதான் தெரியவில்லை.

8.2.11

கறுப்புப் பணம் - மந்திரக்கோல்

கறுப்புப் பணம்  செல்லுமா செல்லாதா? 

ஒரு  நாடு விட்டு இன்னொரு நாடு செல்லும் - ஆனால் தன் நாடு செல்லாது.

[அதுசரி நோட்டு கிழிந்தாலே செல்லாதே - கருப்பாய் இருந்தாலும் செல்லுமா?]

கறுப்புப் பண விவகாரம் சில ஆண்டுகளாய் நிலுவையில் இருந்து இப்போதுதான்  ரு வழியாய் மீண்டு எட்டிப் பார்த்திருக்கிறது.


முதல் பட்டியல் விவரம் வேண்டுவோர் இங்கே படிக்கலாம்.

மொத்த கறுப்புப் பணம் ஏறக்குறைய 65,000,000,000,000.௦௦ [இது சரியா தவறா அல்லது எப்படி எண்ணால் எழுதுவது என்று தெரியவில்லை. கணக்கில நாம கொஞ்சம் வீக்.]

அதாவது அருபத்தியஞ்சு லட்சம் கோடிகள் அளவிற்குக் கறுப்புப் பணம் உள்ளதாகச் சொல்லுகிறார்கள். முதல் பட்டியல் வந்ததும் அதில் உள்ள பணம் 52 கோடிகள் என்கிறார்கள்.
இங்கே மதிய உணவுக்கு பருப்பு வாங்கிய கணக்கிலேயே 700 கோடிகள் அளவிற்கு ஒரிசாவில் பிரமிளா மல்லிக் ஊழல் செய்ததானக் குற்றச் சாட்டில் ராஜினாமா செய்திருக்கிறார்.
ஐ.பி.எல் புகழ் மோடி தொலைக் காட்சி ஒலிபரப்புக் காண உரிமம் வழங்கியதில் பெற்றுகொன்ண்ட கமிஷன் மட்டுமே 465 கோடிகளைத் தாண்டுகிறது.
2 G அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஆயிரக்கணக்கான கோடிகள் என்கிறார்கள்.
இந்த முதல் பட்டியல் வெறும் 52 கோடி என்பது நம்பும் படிக் கூட இல்லை.
என்ன சாதிக்க விரும்புகிறார்கள்?

கறுப்புப் பணம் இந்தியாவுக்குக் கொண்டு வாருங்கள் என்று கூடச் சொல்லவில்லை. பட்டியலையாவது முழுவதுமாய் வெளியிடுங்கள் என்றால் அதைக்கூட வெளியிட முடியாது என்று மீண்டும் மாண்புமிகு முகர்ஜி சொல்லியிருக்கிறார். அதோடு சேர்த்து - "பணவீக்கத்தையோ விலைவாசியைக் கட்டுப் படுத்தும் அலாவுதீன் விளக்கோ அல்லது மந்திரக்கோலோ என்னிடத்தில் இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்.

அமைச்சர் என்பதை வைத்துக் கொண்டு நான் எதுவும் செய்ய முடியாது என்று சொல்வதை எப்படிப் புரிந்து கொள்வது? விலைவாசி உயர்வுக்கு ஒன்றும் செய்ய முடியாது. பெட்ரோல் விலை உலக அளவில் குறைந்தாலும் நாங்கள் இந்திய முதலாளிகள் லாபம் பெரும் வரை குறைக்க முடியாது. தமிழ் மீனவர்கள் கொல்லப்படுவது பற்றி ஒன்றும் சொல்ல இயலாது.

ஒன்றுமே உங்களால் செய்ய இயலாதெனில் மந்திரக்கோல் இருந்தாலும் ஒன்றுமே செய்ய முடியாது என்றுதான் பொருள்.
ஒன்றும் செய்ய இயலாதவர்களுக்கு எதற்கு ஆட்சியில் அமர ஆசை?

ஆனால் - நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஸ்திரமான நாடாய் இருக்கும் என்று கூவுவதற்கு இவரே இன்னும் சில மாதங்களில் தமிழகத்திற்கு வரலாம். யார் கண்டது?5.2.11

தச்சூரில் போராட்டம்

22 ஜனவரி இறந்த வேளாங்கண்ணி என்பவரை முன்னிறுத்தி மீண்டும் தச்சூரில் போராட்டம் தொடங்கியிருக்கிறது.
இதை எப்படி அணுகுவது? அது கிருத்தவ மக்களுக்குள் நடந்த இரு அணிகளுக்கிடையேயான ஒரு பிரச்சனை என்று சொல்லலாம். ஆனால் இதை அங்கிருக்கிற ஒரு சிறு பிரச்சனையாக மட்டுமோ அல்லது கிருத்தவர்களுக்குள்ளேயான   ஒன்றாகக் குறுக்கிவிட முடியாது.

இறந்தவர் தலித் என்பது செய்தி. இறந்த தலித் ஒருவரை ஆலய வளாகத்திற்குள் புதைக்கலாமா இல்லையா என்பதுதான் பிரச்சனை. இது வெறும் கல்லறைப் பிரச்சனையாக மட்டும் பார்த்துவிட முடியாது. திருச்சியில் - நகரமயமாக்கப் பட்டிருக்கிற ஒரு ஊரிலேயே கல்லறைகளுக்கிடையில் உள்ள சுவற்றை அகற்ற முடியாத அவலம் இருக்கிற போது ஒரு கிராமத்தில் இந்தப் பிரச்சனை சர்வ சாதாரணம் என்று சொல்லிவிட முடியாது.

இதில் மிகவும் கொடுமையான செய்தி - தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுக்கும் போது நிச்சயம் பாதிப்பு இருக்கும். உயிரைக் கூட கொடுக்குமளவுக்கு இருக்கும். ஆலய வளாகத்திற்குள் புதைப்பதற்கு குழி தோண்டிய இராஜேந்திரன் என்பவரை ஆதிக்க எண்ணம் கொண்ட உயர்ந்த சாதி என்ற எண்ணம் கொண்ட கும்பல் வெட்டிக் கொன்றுவிட மீண்டும் அங்கே விஸ்வரூப பிரச்சனை. இது ஒரு ஊருக்கான பிரச்சனை மட்டுமல்ல - இது பிரச்சனையும் அல்ல. இது போராட்டம். சில உயிர்களைக் கொடுத்துத் தான் பின் வரும் சந்ததிக்கென சமத்துவ சமுதாயத்தை நிலை நாட்டும் நீதிக்கான போராட்டம் - உரிமைக்கானப் போராட்டம்.
சாதி இல்லை என்பவர்களும் - சமத்துவ சமுதாயத்தில் வாழ்கிறோம் என்பவர்களும் மீண்டும் வெட்கித் தலை குனிய வேண்டிய செயல்.

அகன்ற கண்கொண்டு  எழுதுபவர்கள் எல்லாம் இச்செய்தி பற்றி ஒன்றும் எழுதாமல் இருப்பது எதைக் காட்டுகிறது? இந்தக் கொடுமைஎல்லாம் அவர்கள் கண்களுக்குத் தெரிகிறதா இல்லையா?

மனிதன் ஒன்றாக வாழத் தான் முடியவில்லை - செத்த பிறகும் கூட அருகருகே புதைக்கக் கூட முடியவில்லை என்றால், அதை என்னவென்று சொல்வது. கல்லால் எறிவதே பாவம் என்றவன் இயேசு - இங்கே கல்லும் கொண்டு, ஆளையும் கொள்வது மிகக் கொடுமை.  வழக்கம் போல நீங்கள் செய்வதியே செய்யுங்கள் என்று அமைதி நிலைநாட்டிகள் சொல்வது அதைவிடக் கொடுமை. தீண்டாமை ஒரு பாவச் செயல் என்று புத்தகங்களில் மட்டும் எழுதுவது மிகக் கொடுமை.     

2.2.11

கடவுச்சீட்டும் நானும் - நண்பருக்கு அர்ப்பணம்

கடவுச்சீட்டும் நானும் - ஓர் இனிய அனுபவம்.

எங்கோ படித்தது - "அனுபவம் தலை வழுக்கையானவுடன் கிடைக்கும் சீப்பைப் போன்றது."  உண்மையா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஒவ்வொரு அனுபவமும் அடுத்த போராட்டத்திற்கு நம்மைத் தயார் படுத்துகிறது.

இப்படிச் செய்திருந்தால் அப்படி நடந்திருக்காது -  இதைச் சொல்லியிருந்தால் அது நேர்ந்திருக்காது - என்று எல்லாம் நடந்த பின்னரே நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அப்படிச் சொல்லியிருந்தாலும் நடந்தவைகள் நடந்திருக்கலாம். நடக்காமலும் இருந்திருக்கலாம். யார் அறிவார்?

ஆனால் பழைய காலம் படிப்பினைகளை நமக்கும் பிறருக்கும் தருவிக்கிறது  என்பது மட்டுமல்ல பல சமயங்களில் புதிய பாதையைத் தோற்றுவிக்கிறது. புதிய படைப்புத் திறனுக்கு வழிவகுக்கிறது.

கடவுச்சீட்டும் "க்ஹானும்".
புதிய படைப்புத் திறனுக்கு வழி வகுக்கிறது என்பது மட்டுமல்ல அதே சமயத்தில் தனது தரப்பு வாதத்தை மிக நேர்த்தியாக முன்வைக்கவும் கலைகள் உதவுகின்றன என்பதற்கு "My Name is Khan" [ஏன் க்ஹான் என்பவர்கள் திரைப்படம் பார்க்க வேண்டும்] திரைப்படத்தையே முன்னுதாரணம் காட்டலாம். 2009 ஆகஸ்ட் மாதம் பதினாறாம் தேதி அமெரிக்காவிற்கு சென்ற போது சில மணி நேரங்கள் காக்க வைக்கப்பட்டது நமக்குத் தெரியும்.  க்ஹான்  என்கிற பெயரால் என்ன நடந்தது என்பதுதான் அன்று நடந்தது:

அதுவே பிற்பாடு படத்தின் தொடக்கமாகவும் வருகிறது. அமெரிக்காவின் ஹோம் லான்ட் செக்கியூரிட்டி - ரொம்பப் பிரபலம். அதாவது அவர்களின் அதிகாரம் ரொம்ப பிரபலம். எனவே அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு உதாரணம். நம்ம அப்படி மாட்டியதில்லை.ஆனால், சில சமயங்களில் அவர்களின் பார்வையும், பேச்சும், [குடியேறல் பகுதியில்] மிக மோசமானதாக இருக்கும். சிலர் மிக மரியாதையோடு நடத்துவதும் உண்டு.

இதோடு தொடர்புடைய படம் - "The Terminal ". மிக அற்புதமான படம். இது திரைப்பட விமர்சனம் இல்லை என்பதால் இத்தோடு விட்டு விடுகிறேன்.

அமெரிக்கா என்று இல்லை எல்லா நாடுகளும் இப்படித்தான். இதில் ஒரு விதிவிலக்கு நமது தமிழகம்தான். அவர்கள் உண்மையிலேயே officers தானா அல்லது அவர்களுக்கு பதிலாக வேறு யாரும் வேலை செய்கிறார்களா என்கிற அளவுக்கு இருக்கும்.அவர்களுக்கென்று சீருடை கூட கிடையாது. சரி விஷயத்திற்கு வருவோம்.

கணணியும் கடவுச்சீட்டும்.

மில்லேனியம் இரண்டாயிரம் வருவதற்கு முன்பு, ஒரு மிகப் பெரிய பிரச்சினை ஒன்று எல்லா நாடுகளிலும் பரபரப்பாகப் [உபயம் சன் டி.வி.] பேசப்பட்டது - Y2K.

ஒரு நாட்டிற்கு மட்டும் அது ஒரு பெரிய பிரச்சனையாகவே இல்லை - நமது தாய்த்திரு நாட்டிற்குத்தான். அதற்குப் பிறகும் பெரிய பிரச்சனையாகவே அது இருந்திருக்க வாய்ப்பு இல்லை.
ஏனெனில், நான் 2002 - ல் கடவுச் சீட்டு வாங்கிய போதும் கையில்தான் ["வேறு எதில்" என்று விதண்ட வாதமெல்லாம் பேசக்கூடாது ] எழுதிக் கொடுத்தார்கள்.
அப்புறம் எப்படி நமக்கு Y2K பிரச்சனை வரும். நம் நாட்டிற்கு அது வரவே வராது. அந்தக் கடவுச் சீட்டை வைத்திருக்கும் நமக்குத் தான் வரும். சில சமயம் அதைப் பார்த்து விட்டு சில குடியேறல் பகுதியில் நம்மைப் பார்த்து சிரிக்கிற போது - ....

ஏதோ வேண்டுமென்றே நாம் நாடு ஏழை நாடு என்று தோற்றம் கொடுப்பதற்காக இப்படிச் செய்கிறார்களோ என்னவோ என்று எண்ணம் தோன்றும்.
நானும் என்னுடன் இன்னொரு நண்பரும் முதல் ஐரோப்பியப் பயணம் - ஜெர்மனி வழியாகப் பயணப் பட வேண்டியிருந்தது. அவர் நல்ல மனிதர்  - பெரிய மனிதரும் கூட.  ஜெர்மனியில் [ப்ராங்க்போர்ட்] அவர் கடவுச் சீட்டு விரைவாகப் பயணப் பட - என்னுடைய கடவுச் சீட்டை "லென்ஸ்" கொண்டு பார்க்கிறார் அந்த அதிகரி. ரொம்ப நேரம்.
நண்பர்  'சொல்லிக்கொள்ளாமல்' மிக வேகமாக போய் விட்டார்.
முதல் பயணத்திலே என்னுடைய கடவுச் சீட்டு என்னைக் காத்திருக்க வைத்தது. புதிதாய் இருக்கும்போதே இப்படியெனில் இன்னும் பழதானால். ...  பிரச்சனைகள் தொடர்ந்து வருவதற்கான முன்னோட்டம் இது என்று எனக்கு அன்றைக்குத் தெரியவில்லை.

அமெரிக்க அணை - பாதுகாப்பு -கடவுச் சீட்டு 
அமெரிக்காவில் நியூயார்க், பென்சில்வேனியா மற்றும் நியூ ஜெர்சி மாநிலங்களின் பார்டர் என்று நினைக்கிறேன். ஒரு அணையைப் பார்ப்பதற்காக எனது நண்பரோடு சென்றிருந்தேன். மலை முகடுகளில் வழி தெரியாமல் அருகிலே இருந்த ஒரு வீட்டில் விசாரிக்கச் சென்றோம். நன்றாகத்தான் பேசினார்கள். வெளியில் வந்து வழி காண்பித்தார்கள். வெளியில் வந்து ஏன் பேசினார்கள் என்று இரண்டு நாட்கள் கழித்துதான் தெரிய வந்தது.
என்னைக் காரில் அழைத்துச் சென்ற நண்பர் இந்தியா சென்றுவிட, அவர் இல்லத்தைத் தேடி போலிஸ் வந்தது. எதற்காக அணைக்குச் சென்றீர்கள்? யார் யார் சென்றீர்கள்? கடவுச் சீட்டைக் கொடு என்று ஒரே விசாரணைதான்.
வழி சொல்ல வெளியே வந்த அமெரிக்கர் எங்களை தீவிர வாதிகள் லிஸ்டில் வைத்து உடனடியாக கார் நம்பரை 911 ஐத் தொடர்பு கொண்டு சொல்ல அவர்கள் எங்கள் வீடு வரை வந்து என் கடவுச்சீட்டை மேலும் கீழும் பார்த்துச் சென்றார்கள்.

உடனடியாய் சந்தேகப்படும் நபர்களை பற்றிய செய்தியை எங்கே சேர்க்கவேண்டுமோ அங்கே சேர்க்கிறார்கள் என்பது ஒரு செய்தியை இருந்தாலும், அமெரிக்கா பயத்தில் இருக்கிறது என்பது மற்றொரு செய்தியாகவும் இருக்கிறது. எதிலும் எப்போதும் பயம். அதிலும் வேறு ஒரு நாட்டைச் சார்ந்தவன் என்றால் சொல்லவே வேண்டாம்?

அமெரிக்காவில் விமான நிலைய குடியேறல் பகுதியில், நாம் ஒரு கொலைகாரர்கள் போல பார்க்கப் படுவோம். நமது கருவிழிகள் பதிவு செய்யப் படும். நமது கை ரேகைகள் பதிவு செய்யப்படும். அதன் பிறகும் விசாரணைகள் அவ்வப்போது தொடர்வது ஆச்சரியம் தான். என்ன செய்வது சென்று வருகிறோம்?
இதில் கடவுச் சீட்டினால் நான் தப்பித்தேன் என்பது ஒரு நல்ல செய்திதான்.

போலி பல்கலைக் கழகம் - கால் விலங்கு
இதாவது பரவாயில்லை - அமெரிக்க அலுவலர்கள் இந்திய மாணவர்களை என்ன பாடு படுத்துகிறார்கள் என்பதை இரண்டு நாட்களாக செய்தித் தாள்களில் படிக்கிற போது அவர்களின் அட்டகாசம் புரியும். சான் பிரான்சிஸ்கோவிற்கு அருகிலுள்ள "ட்ரை-வாலி" என்கிற பல்கலைக் கழகத்தை மூடியதற்குப் பிறகு இந்திய மாணவர்கள் பலருக்கு "கால் விலங்கு" [கனமான radio-tag] அவர்களை கண்காணிப்பதற்காக வைத்திருக்கிறார்கள் என்றால் இந்தக் கொடுமையை என்னவென்று சொல்வது.


பல்கலைக் கழகம் போலி என்றால் அது அமெரிக்க அரசின் குற்றம். சென்றவர்கள் அந்தப் பல்கலைக் கழகத்தில் படிக்கச் செல்வதற்கு visa வாங்கிச் சென்றார்கள் என்றால் வழங்கிய அமெரிக்கத்  தூதரகங்களின் குற்றமும், அவர்களது கடவுச் சீட்டில் முத்திரை குத்தி உள்ளே செல்ல அனுமதியளித்த குடியேறல் அதிகாரிகளின் குற்றமும். போலி விசா என்றால் கரு விழி / மற்றும் கை ரேகைகளை எதற்கு தூதரகங்களிலும் மற்றும் குடியேறல் பகுதியிலும் எடுக்கிறார்கள் - தூதரகங்கள் மற்றும் குடியேறல் பகுதியின் தரவுகள் இணையத்தின் வழியாக இணைக்கப்பட்டு உறுதி செய்வதற்குத் தானே!
அப்படி இருக்கின்ற போது எப்படி 'போலி விசா' என்று சொல்ல முடியும் என்று தெரிய வில்லை.
அந்தப் பல்கலைக் கழகம் யாருக்குச் சொந்தம். எப்படி அதற்கு அரசு அனுமதியளித்தது. எப்படி அங்கே உள்ள பல்கலைக் கழக மாணவாகளுக்கு விசா வழங்கலாம் என்று அமெரிக்க அரசின் பல்கலைக் கழகங்களின் பட்டியலில் இது சேர்ந்தது. அவர்களுக்கு என்ன தண்டனை? அவர்கள் அமெரிகர்களா - இந்தியர்களா. இந்தியன் அங்கே ஒரு பல்கலைக் கழகம் நடத்த முடியுமா? 

அப்படியே "போலி விசாவாகவே" இருந்தாலும், இப்படிக் கால் கட்டுப் போடுவது எதற்கு என்று புரியவில்லை. இந்தியா ஒன்றும் செய்ய முடியாது.
"எங்களை எல்லாரும் கேவலமாகப் பேசுவார்கள் - பார்த்து அதை எடுத்து விடுங்கள் என்று கெஞ்சலாம். கெஞ்சினால் மிஞ்சுவார்கள். "அவர்கள் சுதந்திரமாக இருப்பதற்காகத்தான் இதை அணிவித்திருக்கிறோம் அதில் தவறு ஒன்றுமில்லை என்று தெனாவெட்டாக இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் தெரிவித்திருக்கிறார்.
தங்கள் தவறுகளை மறைக்க இந்தியர்களுக்குத் தண்டனை - அதுதான் அமெரிக்கா.


கண் தெரியாத அலுவலரும் என் கடவுச்சீட்டும்
 இத்தாலியஅலுவலகம் ஒன்றில் குடியேறல்சீட்டு பெறுவதற்காக இந்தப் புதிய ஆண்டில் சென்ற போது அங்கிருந்த அலுவலர் உன் கடவுச்சீட்டில் இருப்பதை  என்னால் படிக்க இயலவில்லை- போய் புதிய கடவுச்சீட்டு ஒன்றோடு வா என்கிறார். நானும் எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறேன். என்னால் படிக்க முடிகிறதே!

அது உன் பெயர் அதனால் படிப்பாய் என்கிறார். என்னவோ சரியாய்த் தெரிந்தாலும் என் பெயரை அவர்களால் ஒழுங்காய் உச்சரித்து விடுவது போல...
மீண்டும் மீண்டும் நான் சொல்லச் சொல்ல கடுப்பான அந்த அதிகாரி என்னிடம் இருந்து அதைப் பிடுங்கிக் கொண்டு எனக்குப் பின் உள்ள இருவரிடம் காட்டி இதை உங்களால் படிக்க முடியுமா? என அவர்கள் பயத்தில் இல்லை என்று சொன்னார்கள். படிக்க முடியும் என்று சொன்னால், அவர்களது விண்ணப்பம் ஏதாவது காரணத்தினால் நிராகரிக்கப் படலாம். பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்?
உண்மைக்கு குரல் குடுக்க சொந்த நாட்டிலா இருக்கிறோம். சொந்த நாட்டிலேயே அவனவன் அவனது பிழைப்பைப் பார்த்துக் கொண்டு போகிறான்.
 கடவுச்சீட்டில் இப்ப்போதெல்லாம் அச்சிடப் படுவதால் அந்தப் பிரச்சினை இருக்காது என்று நினைக்கிறேன்.

எனவே நான் இந்தியத் தூதரின் அலுவலகம் செல்ல நேர்ந்தது.

இந்தியக் கடவுச் சீட்டும் - இந்தியத் தூதரகமும்

இந்தத் தமிழ் புத்தாண்டு முடிந்த சில நாட்களில் நான் அங்கே செல்ல நேர்ந்தது. என் கடவுச்சீட்டு இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் முறையாக பயன்படுத்த முடியும் என்கிற போது எதற்காக புதியது ஒன்றை பெற வேண்டும் என்ற கோபம் வேறு.

வெளிநாட்டில் வாழ்கிற மக்கள் போக விரும்பாத அல்லது கூடாத இடம் என்றால் அது இந்தியத்தூதரகங்களோ என்று நினைக்கிற அளவுக்கு அங்கே இருந்தது அந்தத் தூதரகம். வேறு சில நாடுகளிலயும் பார்த்திருக்கிறேன். ஏன் அப்படி என்று புரிந்து கொள்ளவே முடியவில்லை. பிற நாடுகளின் அதிகாரிகள்தான் நம்மை மதிப்பதில்லை என்றால் இங்கே விண்ணப்பம் கொடுக்கும் பியூன் கூட நம்மை மதிப்பதில்லை. பிரச்சனைகளை சொல்வதற்குக் கூட ஆட்களைத் தேட வேண்டியிருக்கிறது.
பல ஆயிரம் மைல்கள் தள்ளி இருந்தாலும், நமது நாட்டில் ஒரு அலுவலகத்திற்கு சென்று வந்த அனுபவம் எனக்கு.
ஒன்பது மணி அலுவலகம் ஒன்பது முப்பதிற்குத் திறப்பது - நாற்றமடிக்கும் அலுவலகம் - "Poor India Photo" என்று பிரபு ஒரு படத்தில் கேட்பது போல போட்டோ வேண்டுமென்றால் இந்தியாவுக்கெல்லாம் அவர்கள் வரவேண்டும் என்ற அவசியமில்லை - அவர்கள் நாட்டிலேயே இருக்கும் நம் தூதரகங்களுக்குச் சென்றாலே போதும். 
அங்கே சென்று எனது கடவுச் சீட்டின் நகல் ஒன்றில் சான்றொப்பம் பெற்று மீண்டும் இத்தாலிய அலுவலகம் வந்தேன்.

கண் தெரிந்த அலுவலரும் - கடுப்பான நண்பரும்
மறுநாள் இத்தாலிய அலுவலகம் நண்பர் அ.பிரபாகரனோடு வந்தேன். இத்தாலியன்  பேசுவதற்காக அழைத்து வந்தேன். இரண்டு மணிநேரத்திற்குப் பிறகு உள்ளே சென்றபோது வேறொரு அதிகாரி இருந்தார். அவரிடம் கடவுச் சீட்டையும் - இந்தியத் தூதரகத்தில் சான்றொப்பம் பெற்ற நகலையும் கொடுத்த போது - அவரும் எங்களை ஒரு மாதிரி பார்த்தார். இது என்ன? நண்பர்தான் விளக்கிச் சொன்னார் -
"இது நன்றாகத் தானே தெரிகிறது என்ன பிரச்சனை" என்று அவரே கேள்வி எழுப்பி அவரே சென்று மேலதிகாரியிடம் புகார் செய்து விட்டு வந்தார்.

அனைத்தும் சுபமாய் முடிந்தாலும் கடுப்பான என் நண்பர்விடுவதாய் இல்லை. ஒரே ஒரு கேள்வி - கண் தெரியாத அந்த அதிகாரியைப்  போல மோசமானவர் யாரும் இல்லைதானே ? என்று எங்களுக்கு உதவி செய்த அந்த அதிகாரியைக் கேட்டுத் துளைக்க அவராய்  "ஆம்" என்று ஒப்புக் கொள்ளும் வரை அவர் விடவே இல்லை.


இப்போது தேய்ந்து கொண்டிருக்கும் என் கடவுச் சீட்டோடு, குடியேறல் சீட்டுப் பெற காத்திருக்கிறேன்.
கடவுச் சீட்டு பெறுவது பெரிதில்லை - 
இவர்களையெல்லாம் கடந்து செல்தல்தான் பெரிது.


பின்குறிப்பு:
மாக்ஸ் வெபர் [Max Weber] தனது பதின்மூன்றாவது வயதில் தன் பெற்றோர்களுக்கு கிருஸ்துமஸ் பரிசாக இரண்டு கட்டுரைகளைக் கொடுத்தார். 
எனக்குத் துணை வந்த நண்பர் இன்று பல பேரின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம்.  "அவர் கேள்வி கேட்டது போல," இன்று அவரை இரண்டு  பேர் கேள்வி கேட்டுத் துளைத்தார்கள்?
எனக்குத் துணையாய் வந்த கேள்விஎழுப்பிய அஞ்சா நெஞ்சன் அ.பிரபாகரன் வெற்றிகரமாய்த் தன் தேர்வினை முடித்ததற்காய் என் பரிசு இக்கட்டுரை.

 இது ஆய்வுக் கட்டுரை அல்ல. மேலும், எனக்கு வயது பதின்மூன்றும் இல்லை. அவருக்கு என் பெற்றோர் வயதும் இல்லை.
இந்த கடவுச் சீட்டின் பயணத்தில் அவரும் பங்கு கொண்டதால்  இன்று அவர் வெற்றிகரமாய் கடந்து சென்றதற்கான நினைவுப் பரிசு.