31.3.11

தேர்தல் - கதாநாயகி தேர்தல் அறிக்கை

கதாநாயகன் - கதாநாயகி என்பதெல்லாம் திரைப்படத்தில் மட்டும் என்றில்லை. நமது தேர்தல் அரங்கத்திலும் மிகப் பெரிய இடத்தை வகிக்கிறது. கடந்த தேர்தலில் கதாநாயகன் - இப்போது இன்னும் நிறைய இலவசங்களோடு - கதாநாயகியாக வளம் வருகிறாள் - தேர்தல் அறிக்கை.

இரண்டு மிகப் பெரிய கட்சிகள்.  ஆனால் ஒரே காட்சி - ஒரே கதாநாயகி.
தி.மு.க மற்றும் அ.தி.மு.க  - இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கைக்கும் பெரிய வித்தியாசங்கள் ஒன்றும் இல்லை. வேண்டுமானால் ஆறு வித்தியாசங்கள் கண்டு பிடிக்கச் சொல்லி போட்டி நடத்தலாம். 

தமிழக அரசியலில் இந்தக் கதா நாயகிக்கான வேறு பாடெல்லாம் ஒன்றுமில்லை. தொப்புள் தெரிய உடை உடுத்தி கவர்ச்சியோடு நடனமாடும் பெண்  மிகச் சிறந்த கதாநாயகியாக ஏற்றுக்கொள்ளப் படுவது போல, இலவசங்களால் நிறைந்திருக்கிற அறிக்கை மிகக் சிறந்ததாக அங்கீகாரம் பெரும் என்று நினைத்து வெறும் இலவச அறிவிப்புகளை மட்டுமே கொண்டிருக்கிறது.

இலவச லேப்டாப் தொடங்கி, மிக்ஸி, கிரைண்டர் தொடங்கி எல்லாம் அறிவிக்கப் பட்டாகிவிட்டது. எல்லா கட்சிகளும் இதையே வழங்குகின்றன. கடந்த முறை எப்படி இப்படிக் குறைந்த  விலையில் அரிசி கொடுக்க முடியும் என்று கேட்ட செல்வி. ஜெயலலிதா, பிரச்சாரத்தின் பொது, கூட்டணிக் கட்சிகளுக்கு கூடச் சொல்லிக் கொள்ளாமல், திடீரென தானும் அரிசி வழங்குவதாகக் குறிப்பிட்டார். இப்போது முன்பே அவரும் லாப்டாப் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டார்.

இலவசங்கள் என்பது பணம் கொடுத்து ஆட்சிக்கு வருவதில் அடங்காது. அது வாக்குறுதி. முன்பே வாங்கி ஓட்டுப் போடுவதுதான் குற்றம் அல்லது முன்பே கொடுத்து ஓட்டுக் கேட்பதுதான்  குற்றம்.

அதனால் எந்த வாக்காளரும் குற்றவாளிகள் இல்லை - எந்த அரசியல் வாதிகளும் சட்டப்படி குற்றவாளிகளும் அல்ல. இனிமேல் வரும் என்கிற நம்பிக்கையில் ஓட்டளிப்பார்கள் - இனிமேல் கொடுக்க வேண்டுமென்று ஓட்டுப் பெறுவார்கள்.

  • கலைஞர் நிறைய வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறார். அதை ஏற்கனவே ஓட்டுப் போட்டதற்கான பொருள் என்றாலும் சரி அல்லது இனிமேல் போடப்போவதற்கான பொருள் என்றாலும் சரி. வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றியிருப்பதால் அவர் பக்கம் நிறைய ஒட்டு விழ வாய்ப்புகள் இருக்கின்றன. செல்வி இனிமேலாவது செய்வார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்குமா என்பது தெரியவில்லை - ஆனால் என்ன - எப்படி இருந்தாலும், ஐந்து வருடங்களுக்கு மக்கள் ஒன்றும் செய்ய இயலாது.

  • ஏன் கொள்கைகளைக் காட்டிலும் [அப்படி ஒன்னு இருக்கா] - இலவசங்களை அரசியல்வாதிகள் முன்னெடுக்கிறார்கள். சொல்வதற்கு அல்லது செய்வதற்கு ஒன்றுமில்லை - மக்கள் ஏழைகளாய் இருக்கிறார்கள் எனவே அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் அவர்களது கொள்கை என்று வைத்துக் கொள்ளலாம் - தன்மானம் தன்மானம் என்று எல்லாரும் பேசுகிறார்களே இலவசங்கள் அந்தத் தன்மானத்தை கொடுக்கிறதா?
தன்மானத் தமிழர்கள் நாம் - நமது குழந்தைகளுக்கு லாப் டாப் கிடைக்கும். பெண்மணிகளுக்கு கிரைண்டர் கிடைக்கும்... தன்மானம் கிடைக்குமா?


இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.


இதற்கான விளக்கம்:
திரு மு.கருணாநிதி உரை



  • பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்.

    இலவசங்களை அள்ளி வீசும் தலைவர்கள் மக்களை என்னவாக ஆக்குகிறார்கள்? கலைஞருக்குத் தெரியாதா என்ன?


  • திருவள்ளுவர் இன்றைக்கு இருந்தால் என்ன செய்வாரோ?

    • "கடைத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போலன்னு ஒரு பழமொழி உண்டு. இலவசங்கள் யாருடைய காசிலிருந்து கொடுக்கப் படுகின்றன. எந்த அரசியல் தலைவரும் அவர்களுடைய வருமாந்த்திளிருந்தோ, லாபத்தில் இருந்தோ, செய்வது இல்லை. எல்லாமே மக்களின் வரிப் பணம்தானே. [இதனால்தான் என்னவோ நேரடி டாக்ஸ் செலுத்துபவர்கள் ஓட்டுப் போடப் போவதில்லையோ?]
    • இதைத்தான் பலர் கடைத் தங்கையை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது தவறு என்றார்கள். அப்படிச் சொன்ன செல்வி அவர்களே இப்போது அவர்கள் ஒன்று உடைத்தால், நாங்கள் நான்கு உடைப்போம், என்கிறார்கள். ஏற்கனவே,  தமிழக பட்ஜெட்டில், ஏற்கனவே கோடிகள் கணக்கில் துண்டு விழுந்திருக்கிறது... இன்னும் நிறைய விழும்.

    எது எப்படியோ?
    இனி தமிழ் நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும், ஒவ்வொரு வீட்டிலும், [ஏற்கனவே தொலைக்காட்சி உள்ளது, எல்லா எலக்ட்ரானிக் பொருட்களும் இருக்கும்... கரண்ட் இருக்குமா?





    27.3.11

    தேர்தல் - இம்சை அரசனும் - இழப்பும்


    கடந்த பதிவில் தேர்தலைப் பற்றிய விமர்சனம் எழுதக் காரணம் - அதற்கும் திரைப்படத்திற்கும் மிகப் பெரிய வித்தியாசங்கள் ஒன்றுமில்லை என்பதனால்தான்.

    இப்போது தேர்தலைக் கலக்கும் காமெடியன் இம்சை அரசன் வடிவேலு. 

    தமிழக அரசியலில் கலக்கிய நடிகர்களும் உண்டு, கலங்கிய நடிகர்களும் உண்டு. 
    • சிவாஜி என்கிற அருமையான நடிகன் செய்த தவறு காங்கிரசின் பக்கமிரங்கியது. ஆனால் நல்ல நடிகன் என்பதனால் மீண்டு வர முடிந்தது. எல்லாராலும் அப்படி முடியாது.
    • ஆச்சி மனோரமா அரசியலில் இறங்கிய போதும் அதுதான் நடந்தது. ஆச்சி மசாலா பற்றி பேசினால் கேட்கலாம்.அரசியல் பேசினால்..........
    • ராமராஜன், etc .
    • சிம்ரன் கடந்த முறை காசு வாங்கிக் கொண்டு தேர்தல் பிரச்சாரம் போனார். சில இடங்களில் சிம்ரனைப் பார்க்கக் கூட்டம் வந்தது-  சில இடங்களில் அதுவும் இல்லை. 
    • காமெடி நடிகர்கள் - கடந்த முறை செந்திலைக் கூடவிட்டு வைக்க வில்லை. அவரும் எவ்வளவு நாளைக்குத் தான் கவுண்டமணி கையாலே அடி வாங்குவது- என்ன ஆச்சு?
    • இந்த முறை வடிவேலு?
      • என்ன ஆச்சு காமெடியன் வடிவேலுக்கு? 
      • நடிகர்களுக்கு என்று எல்லாத் தரப்பிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். வெளியில் வேண்டுமானால் ரசிகர்கள் நடிகர்களுக்காக உயிரும் கொடுப்பதாக ஒரு இமேஜ் உண்டு. அவர்களே அரசியலுக்கு வருகிறபோது அதனை வேறு படுத்திப் பார்க்கின்ற மனநிலை இப்போது மக்களுக்கு வந்து விட்டது. சில நடிகர்கள் வேண்டுமானால் அதைச் சாத்தியப் படுத்திக் கொள்கிற சாமர்த்தியத்தை வைத்திருக்கலாம். எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அது மிகச் சுலபாய் அமைந்தது.  சிவாஜிக்கு அது அமையவில்லை. இத்தனைக்கும் சிவாஜி அவரை விட சிறந்த நடிகர்தான்.
        • ரஜினியை விட ஆச்சி சிறந்த நடிகைதான் என்ன ஆயிற்று?
      • செல்வி ஜெயலலிதாவே மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகுதான் ஒரு கட்சியின் தலைமையையே வந்து அடைய முடிந்தது. இத்தனைக்கும் ஏற்கனவே இருந்த கட்சி, அவரும் அதில் இருந்த காட்சி எலாருக்கும் தெரிந்த போதும்... அப்புறம் என் நம் நடிகர்கள் இன்னும் முயற்சிக்கிறார்கள். 
      • வடிவேலு - சிறு குழந்தை முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பும் நிஜாம் பாக்கு மாதிரி இருந்த வடிவேலு, இந்த தேவையற்ற நுழைவு மூலம், தனது பெயரை, தனது மதிப்பை, தனக்கென்று இருந்த ரசிகர்களை, கட்சி தாண்டி இருந்த ரசிகப் பெருமக்களை நிறைய இழந்து விடுவார். விஜய காந்த் கட்சியிலிருந்து கூட அவருக்கு ரசிகர்கள் உண்டு - இனிமேல் அது இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவே. 
      • மற்றவர்களை கேலி செய்வதை விட்டு தானே கேலிப் பொருளாய் இருந்ததன் மூலம் பிறரைப் புண்படுத்தாமல் எல்லார் மனதிலும் அவரால் இடம் பிடிக்க முடிந்தது. இப்போது அது அப்படியே மாறிப் போனது.
        • ஒரு படத்தில் கதா நாயகனாய் நடித்ததோடு முடித்துக் கொண்டிருக்க வேண்டிய வடிவேலு அடுத்த படத்திற்கு ஆசைப் படலாமா?  இம்சை அரசன் என்கிற இந்தப் படமும் அவரே காமெடியன் என்பதால்தான் ஓடியது. 
        • திடீரென்று வடிவேலுவுக்கு இம்சையின் இரண்டாம் நாயகன் நினைவுக்கு வந்து விட - இந்த அரசியல் பிரவேசம்.
        • மீண்டும் அவருக்கு இந்திரலோகத்தில் அழகப்பனை நினைவுக்கு கொண்டு வர வேண்டியிருக்கிறது. 
        • வடிவேலு இனிமேல் எல்லாப் படங்களுக்கும் வர மாட்டார். விஜயின் கூட்டணி இருக்காது.  
        • ஒரே வழி, கருணாஸ் போல சன் குழுமம் படங்களில் மட்டும் நடித்துக் கொண்டிருக்கலாம்.
        • நடிகர்கள் என்றுமே பயன்படுத்தப் படுவார்கள் என்பதை வடிவேலு மிக விரைவில் அறிந்து கொள்வார். அதிலும் தி.மு.க.வில். வைகோவையே கழற்றி எறிந்தவர்களுக்கு, வடிவேலு ஒன்றுமே இல்லை - சின்ன காமெடிப் பீஸ். ஆனால் இதை வடிவேலு உணரும் போது, அவர் ஆயிரக்கணக்கான ரசிகர்களை இழந்திருப்பார், நூற்றுக்கணக்கான படங்களை இழந்திருப்பார், பல எதிரிகள் உருவாகியிருப்பார்கள் - ஆட்சி மாறும் போது தேவையில்லாத நிகழ்வுகளும் அரங்கேறும். 

      • ஏன் நடிகர்கள் அரசியலில் நுழைகிறார்கள்? சின்னத் திரைக்கும் பெரிய திரைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. சின்னத் திரையில் இருந்து பெரிய திரைக்கு போக ஆசைப்படும் ஆட்கள் தான் அதிகம். பெரிய திரையில் இருந்து அதைவிடப் பெரிய திரைக்கு போக விரும்புவார்கள். பெரிய திரைப்படம் - அரசியல் களம். எனவே அங்கே படையெடுக்கிறார்கள். மும்பை போக முடிந்தவர்கள் அங்கே போக விரும்புவார்கள் - முடியாதவர்கள் இங்கேயே முயற்சிக்கிறார்கள். அப்படித்தான், நடிகர்கள் -ராமராஜன், கார்த்திக், சரத்குமார், செந்தில், ஆச்சி, சிம்ரன், குஷ்பு, என்று பட்டியல் நீளும். இப்போது வடிவேலு அவ்வளவே. இங்கிருந்து கவிழ்ந்தவர்கள் பட்டியல் அவருக்கு தெரிய வேண்டியது அவசியம். அவரால் இந்த திரை அரங்கில் வெற்றி பெற முடியாது என்பதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று அவருடைய பாஷையிலேயே சொல்லப் போனால் - அவர் ஒரு டம்மி பீஸ். அல்லது "அவரை வைச்சுக் காமெடி பண்றதை' புரிஞ்சுக்காத காமெடியன்.

      • ஏன் நடிகர்கள் அரசியலில் நுழைகின்றனர்? தங்களது ஈகோ வைத் தொடுவதில் இருந்து ஆரம்பமாகிறது. யார்? நீயா நானா? இந்த நிகழ்ச்சியின் வெற்றியும் இதில் தான் அடங்கியிருக்கிறது. யார் சரி - யார் பெரியவன். ஒரு கல்யாண மண்டபப் பிரச்சணையில் ஒரு கட்சியே உருவானது. வீட்டில் கல் எரிந்ததில் திரு வடிவேலு நீதி கேட்டுப் புறப்பட்டிருக்கிறார். தனது திரைப்பட வெளியீட்டிற்கு இருந்த பிரச்சனையில் உடனே தமிழக மீனவர்கள் மீது அக்கறை. அதாவது நான் பாட்டுக்கு இருந்தா பேசாம இருப்பேன். என்னையத் தோட்டா தமிழ் நாட்டைக் காப்ப்பாத்தக் கிளம்புவேன்னு கிளம்புரதுதான். வேறென்ன?
      • அரசியலில் நுழைய விரும்பும் நடிகர்கள் அல்லது காமெடி நடிகர்கள் பார்க்க வேண்டியது முதலில்  சார்லி சாப்ளினின் படங்களைத்தான். அவை சொல்லும் அரசியலை வேறு யாரும் அவ்வளவு எளிதாய், சிறப்பாய், அழுத்தாமாய் சொல்லிவிட முடியாது. 

      • நமது நடிகர்களைப் பொறுத்தவரை - மக்களாவது ' கொள்கையாவது' - எல்லாம் காமெடிதான். இதில் அசத்தப் போவது யாரு - அசிங்கப் படுவது யாருன்னு போகப் போகத் தெரியும்.

    23.3.11

    தேர்தல் நாடகம் - ஒரு திரைப்பட விமர்சனம்

    தேர்தல் நாடகம் - திரைப்படம்

    • தேர்தல் என்பதும் அதனை ஒட்டிய கூட்டணி நிகழ்வுகளும் திரைப்படங்களுக்கு மேலாக நடந்திருக்கிறது. 
    1 . கழகமும் காங்கிரசும் 
      • கலைஞர் கடந்த முறை மத்திய அரசில் கேட்ட அமைச்சகம் கிடைக்கவில்லை என்றவுடன் திரும்பி சென்னை வந்தார். இம்முறை கலைஞர் பாணியை காங்கிரசும் பின் பற்றத் தவறவில்லை.
      • இம்முறை டெல்லி சென்றபோது பல மணி நேரம் காத்திருந்தது மட்டுமல்ல, மிகப் பெரிய ஏமாற்றத்தோடு திரும்பி வந்தார்.
      • காங்கிரஸ் அதிக சீட்டு கேட்கும் என்றவுடன் - பா. ம.க. எங்கள் கூட்டணியில் இருக்கிறது என்ற புதிய காட்சி அரங்கேறியது.
        • அந்தக் காட்சியின் உள் காட்சிகள் மிகவும் சுவராசிய மானவை.
        • பா. ம.க. நாங்கள் இல்லை என்றது. 
        • அதன் பிறகு கழகத் தலைவர் "அவர்களே இல்லை என்ற பிறகு நாங்கள் என்ன சொல்லுவது என்றார்...
        • இறுதியில் சுபம்.
      • இந்த எதிர் பாராத திருப்பத்தால், காங்கிரஸ் சீட்டுகளைக் குறைவாகக் கேட்கும் அல்லது குறைத்துக் கொடுத்து விடலாம் என்று அவர் எழுதிய நாடகக் காட்சியை விட காங்கிரஸ் திகில் பட திரைக் கதையைக் கையில் எடுத்தது.
      • 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு. இதனால், ஒன்று கலைஞர் வெளியேறுவார் அல்லது தாங்கள் கேட்ட தொகுதிகள் கிடைக்கும் என்று காங்கிரஸ் கொக்கிப் பொடி போட்டது.
      • இது திரு ராசா அல்லாமல் திரு. கருணாநிதியின் குடும்பத்தவருள் ஒருவரென்றால் இந்தப் படம் எப்போதோ காங்கிரஸ் எதிர் பார்த்த படி முடிந்திருக்கும். எனவே, மீண்டும் ராசாத்தி அம்மாள், கனிமொழி என்று கொஞ்சம் சீண்டிவிட ...
        • இடையில் திரு வீர மணி அவர்கள் 'நட்புக்காக' சிறப்பு வேடம் பூண்டு சில அறிக்கைகள் விட...
        • காங்கிரஸ் எதற்கும் மசிவதாய் இல்லை. 
        • மிக வலுவான ஏதோ ஒரு துருப்புச் சீட்டு அவர்கள் கையில் கிடைத்து விட, கலைஞர் தனது சாணக்கியத் தனத்தை நொந்துகொண்டே  [அல்லது வேறு வழியில்லாமல் - அப்படியும் சாணக்கியத் தனம்தான் ]  எல்லாவற்றிற்கும் ஒத்துக் கொள்ள ஒரு வழியாய் காங்கிரசுக்கு எதிர் பாராத வெற்றி.. காங்கிரஸ் இப்போதே வெற்றி பெற்று விட்டது.
        • இந்த நாடகத்தைத் தொடங்கி வைத்தவர் திரு கலைஞர். இதில் மேடைக்கு வராமலே நடித்தவர்கள் - சி.பி. ஐ. அதிகாரிகள். இதைத் திரைப் படமாக மாற்றி இயக்கியவர் திருமதி சோனியா காந்தி. இணை இயக்கம் நிறையப் பேர். காமெடி ரோல் திரு இளங்கோவன். Tragic முடிவு திரு ராசாவுக்கு [ராசியில்லா ராசா]. 
        • வருத்தம் கலைஞருக்கு. காரணம் - தன்னை மிஞ்சும் அளவுக்கு வசன கர்த்தாக்களையும் இயக்குனரையும் இப்போது அவர் கண்டு கொண்டு விட்டதால். [இனியாவது திரைப் படங்களுக்கு தலைவர் வசனம் எழுதுவதை விடுவாரா?]
        • எது எப்படியெனினும் வெளியில் சுபம். 
      • ஆனாலும் ஒருவேளை தி. மு.க வென்றால் நிச்சயம் இதன் இரண்டாம் பாகம் மிகவும் விறு விருப்பை வெளி வரும். அதுவரை திரு. ராசா, காங்கிரசின் பிடியில் தான் இருப்பார். 
    2 . கழகமும் - கழகமும்
      • ஒரு பக்கம் விறு விறுப்பாய்,  நாடகம் அரங்கேற, மறு பக்கம் அ.தி.மு.க.வும் தன பங்கு நாடகத்தை அரங்கேற்றியது. காங்கிரஸ் தன் பக்கம் வரும் என்று எதிர் பார்த்தது. அது நடக்கிற மாதிரி இல்லை. முதலில் அ.தி.மு.க. ஆதரவை அறிவித்தவர் - நடிகர் கார்த்திக். வழக்கம் போல, தானே நடிகர், தானே இயக்குனர், தானே வசனம் என்று நிரூபித்து, கார்த்திக்குற்கு ஒரு சீட்டு கூட கொடுக்காமல் அந்த சீனை முடித்து விட்டார்.
      •   அதன் பிறகு விறுவிறுப்பு ஒன்றும் இல்லாமல், இது சாதா நாடகம் என்கிற அளவிற்கு, யார் வந்தாலும் சீட்டுக் கொடுத்து அவர்களை அரவணைத்தது இது இவர் படம் தானா அல்லது வேறு யார் படத்திற்கும் மாறி வந்து விட்டோமா என்கிற அளவிற்கு சுவாராசியமே இல்லாமல்தான் போனது. 
      • நாடக அரங்கிற்கு வெளியே, சிறப்புத் தோற்றமாக, இம்முறை திரு. மு.க. அழகிரி, அவர்கள் - "திரு விஜயகாந்த் அவர்கள் தன் மானம் மிக்கவர், ரோஷம் மிக்கவர், என் நண்பர் " அவர் அ.தி.மு.க.வில் எல்லாம் சேர மாட்டார் " என்று சொல்லி உசுப்பேத்திவிட்டாலும் - அது புஸ்-ன்னு போக, தே.தி.மு.க. நிறைய இடங்கள். 
      • விறு விருப்பில்லாமல் சென்றது பிடிக்காமல், கூட்டணித் தலைவர்கள் சென்றவுடனேயே, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கேட்ட பல இடங்களில் அ.தி.மு.க. தனது இடங்களென அறிவிக்க பிடித்தது சூடு.
      • எதிர்பாராத உள்காட்சி 
        • இம்முறை உள்காட்சிக்குக் காரணம் [மேலே திருமதி. சோனியா காந்தி போல]  செல்வி. ஜெயலலிதா.  பல ஆண்டுகளுக்கு முன்பு த.மா.கா. உதயமானபோது எப்படி இருந்ததோ அப்படி மீண்டும் ஒரு புதிய கட்சி இல்லையென்றாலும், புதிய கூட்டணியாவது உருவாகும் என்ற சூழலில், பதட்டம். செல்வி ஜெயலலிதாவின் உருவ பொம்மை எரிப்பு [நரசிம்ம ராவின் உருவ பொம்மை எரிப்பை நினைவில் கொள்க]... 
        • அடுத்த நாளே நிலைமை தலைகீழாய் மாறிப் போனது. 
        • நல்ல வாய்ப்பைத் தவற விட்டவர்கள் - தே.தி.மு.க. கடந்த முறையே, ஏறக்குறைய இருபத்தி ஏழு லட்சம் வாக்குகளுக்கு மேலே வாங்கியவர் இந்த அருமையான சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தியிருந்தால், பல சுவராசியமான காட்சிகள் முதல் படத்தில் அமைந்தது போல நடந்திருக்கும்.
      • ஆனால், செல்வி. ஜெயலலிதா, தானே இயக்குனர், தான் இயக்கும் படியே அனைத்தும் நடக்கும் என்று, எந்த வித புதிய காட்சிகளும் இல்லாமல் பார்த்துக் கொண்டார். இந்த விஷயத்தில், திரு.கலைஞரை விட மிகச் சிறந்த இயக்குனர் என்ற  தகுதி அவருக்கு உண்டு. 
        • சிறந்த நடிகர்கள் - அம்மா அம்மா அம்மா. சிறந்த நடிகை, சிறந்த வில்லி, கருணை மிகுந்த அம்மா, எல்லாமே அவர்தான். சிறந்த காமெடியன்கள், கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்கள். Trajic முடிவு திரு.வை.கோவிற்கு [வேதனையில் வை.கோ]. அடுத்த trajic குணச்சித்திர நடிகர் திரு. சீமான். சீனுக்கு வராத tragic ஹீரோ திரு.விஜய் அவர்கள்.   உள்ளுக்குள்ளே கூட்டணித் தலைவர்கள் முனு முனுத்தாலும், வெளியில் சுபம். எல்லாரும் ஒரே மேடையில் தோன்றுவர்.
      • ஆனாலும் ஒருவேளை, அ.தி.மு.க. வெற்றி பெரும் பட்சத்தில், விறு விருப்பான இரண்டாம் பாகம் நிச்சயமாய் வெளிவரும். தேர்தலுக்கு முன்பே கூட்டணிக் கட்சிகளின் நிலை இப்படி என்றால் .... 
    • 3 . கட்சியும் கழகமும்
      • படமே எடுக்காமல் மிகவும் நல்ல நிலைய அடைந்தவரும் உண்டு, மிகவும் மோசமான நிலையை அடைந்தவரும் உண்டு. 
      • பா.ம.கட்சி, எதிர்பார்த்து எதிர்பார்த்து, தூது விட்டு ஒன்றும் நடக்காமல் போய் எதிர் பாராமல் அடித்தது லக்கி பிரைஸ். இடையில் கொஞ்சம் வசனம் எழுதலாம். கொஞ்சம் இயக்கலாம் என்று பார்த்தது - ஆனால் அடக்கி வாசித்து மரியாதையோடு சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டது. 
      • தானும் நடித்துக் கொண்டிருக்கிறோம், திரைப்படத்தில் இருக்கிறோம் என்று மிகவும் சுறுசுறுப்போடு  சீமானை உள்ளே அழைத்து வந்து ரொம்ப நம்பிக்கையோடு இருந்த ம.தி.மு.கழகம், கல கலத்துப் போகும் அளவிற்கு பேச்சே இல்லாமல் போய் விட்டது. பா.ம.க. வாவது பேச முயற்சித்தது. இவருக்கு அதுவும் முடியவில்லை. படமும் இல்லை, வசனமும் இல்லை. முயற்சியும் இல்லை. ஆக மொத்தத்தில் இப்போதே தோற்ற மூத்த தலைவர். நடிக்காமலே களைத்த தலைவர் - இயக்காமலே இயக்கம் இழந்த தலைவர். இது இப்படி ஆகுமென்று யாருக்குத் தெரியும். அம்மாவிற்கு விசுவாசமாய் இருந்தால் இப்படியும் நடக்கும்.
      • ஆனாலும், திரு. வை. கோ. "தனிக்காட்டு ராஜா" வாக இப்போது இருப்பது, மிகவும் பாராட்டுக்குரியது.  இதுதான் அவருக்கு எதிர்பாராத திரைப் படம். இதில் தனது கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், மற்றவர்களும் "யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை" என்று வாக்களிக்க பிரச்சாரம் செய்வாரானால், இன்னும் சிறப்பாக இருக்கும்.

    • ஒரு விதத்தில் பார்த்தால் இப்போதே காங்கிரசு வெற்றி, ம.தி.மு.க. தோல்வி. எனவே இனிமேல் வெற்றி பெற வேண்டியது அ.தி,.மு.க.வா அல்லது தி.மு.க.வா என்பது மே. பதின்மூன்றுதான் தெரியும்.  

    • அதன் பிறகே இரண்டாம் பாகம் தொடரும் - இம்முறை இன்னும் விறுவிறுப்போடு.

    20.3.11

    தேர்தல் 2011 - ஓர் ஆருடம்!

    தேர்தல் - 2011 ஓர் ஆருடம்!
    •  உலகம் முழுவதும் ஏனோ - 13 ம்  தேதி பற்றி மிகப் பெரிய அச்சம் உண்டு. அதுக்குப் பேரு வேற இருக்கு - Triskaidekaphobia .  ஆனால், தேர்தல் ஆணையத்திற்கு மட்டும் அதைப் பற்றிய அச்சமே இல்லை என்பது பெருமையான விசயம்தான். உண்மையிலேயே நாம்தான் வளர்ச்சியடைந்த நாடு. 2001 மற்றும் 2004 தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்ட நாள் 13 .  இப்போது மீண்டும், ஏப்ரல் 13 - தேர்தல் முடிகள் எண்ணப்படும் நாள் மே 13 . 

    • ஆனாலும், ஒரு பக்கத்தில் ஆருடம் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை என்பதும் நாம் அறிந்ததே. தேர்தலின் கூட்டணிகள் உருவாகும் முன்னரே, யார் வெற்றி பெறுவார் என்று ஜோசியம் பார்த்து முடிவுகளை எல்லாரும் முன்னறிவித்து விட்டார்கள். 

    • நமக்கு சுக்கிரன் பற்றியும், புதன் பற்றியும் தெரியாது. திரு கலைஞர் அவர்களுக்கு மஞ்சள் சால்வை போடச் சொன்னவரோ, செல்வி. ஜெயலலிதா அவர்களை தொகுதிப் பட்டியல் அறிவிக்கச் சொன்ன ஜோசியரோ யாரென்று தெரிந்தால் ஒரு எட்டுப் போய்ப் பார்த்து விட்டு வரலாம். 

    • முன்பே தேர்தல் முடிவுகள் தெரிந்தால் - எதற்கு பண விரயம் செய்து தேர்தல் நடத்த வேண்டும்? எவ்வளவு செலவு? 
    • எல்லாரும் ஒத்துக் கொண்டால், ஆருடம் சொல்பவர்களை வைத்து அடுத்த ஆட்சியை அமைத்து விடலாம். தேர்தல் ஆணையம் இதைக் கணக்கில் கொண்டால், செலவில்லாமல் அடுத்த ஆட்சி அமைக்கலாம்.

    • சிக்கல் என்னவென்றால் அ. தி. மு.க. ஒரு ஜோஷியரையும், தி.மு.க. ஒரு ஜோஷியரையும், பா.ஜ.க. ஒருவரையும், நடிகர் கார்த்திக் ஒருவரையும் அழைத்து வந்து நட்சத்திரங்களின் வரிசைக் கிராமத்தைப் பார்த்து ஒவ்வொருவரும் அவர்களை அழைத்தவரே அடுத்த முதல்வர் என்பர்.  
    • அவர்களுக்குள்ளான சிக்கலைத் தீர்க்கத் தான் தேர்தல் - ஏப்ரல் பதின்மூன்று...

    • பதின்மூன்று ராசியில்லாத எண் என்பது எதைக் குறிக்கிறதென்றால் ... நம்ம தலையெழுத்து. 
    • தேர்தல் கமிஷனுக்குத் தெரியாதா? எந்த நாள் தேர்தல் வைத்தாலும், யார் ஆட்சிக்கு வந்தாலும், நமக்கு என்றுமே ராசி இல்லைதான் என்று. எது எப்படி இருந்தாலும், யார் ஆட்சிக்கு வந்தாலும் எதுவும் நல்லதாய் நடக்கப் போவதில்லை. அப்புறம் எதற்கு நல்ல நாள்? நல்ல தேதி? எப்படி இருந்தாலும், நமது தலை மீது சுக்கிரனும் சனியும் சேர்ந்து வரப் போகிறது. அப்புறமென்ன? 

    • தேர்தல் கமிஷன் இதை உணர்ந்து வைத்திருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு ராசியின் மீது நம்பிக்கை உண்டா இல்லையா என்பதைக் கணிக்க கடினமாக இருக்கிறது. 
    • அப்ப நாம வளர்ச்சியடைந்த நாடா வளராத நாடா? 
    • வெளிக்கட்டுரை   இணைப்பு

    16.3.11

    அணு உலகம் - ஆழ்ந்த அனுதாபம்

    • ஜப்பான் சோதனைக்கு உள்ளாகி இருக்கிறது. ஒவ்வொரு முறையும் "அணு" குறித்த விவாதம் எழ ஜப்பானே காரணாமாக இருக்கிறதே என்பது வருத்தம்தான். முன்பு அமேரிக்கா - இப்போது அவர்களே காரணமோ என்றுதான் தோன்றுகிறது. செத்தவனைப் பத்தி தப்பா பேசுறது நாகரீகம் இல்லைதான். ஆனால் அவர்கள் ஒவ்வொரு முறையும் செத்து இது போல நடக்கூடாது என்று அவர்கள் கூவுவது மாதிரிதான் எனக்குத் தெரிகிறது.  
    • அணு உலகம் -  ஆபத்து என்று சொன்னால் அறிவாளிகள் அடிக்க வருவார்கள்.
    • உலகப் போரில் ஹிரோஷிமா - நாகசாகி என்கிற நகரங்களில் அணு குண்டு வீசப் பட்ட போது, இனிமேல் உலகத்தில் இப்படி ஒரு அநீதச் செயல் ஒரு போதும் நடக்கக் கூடாது என்றுதான் அனைவரும் விரும்பினர்.
    • ஆனாலும் அதன் பிறகு அழிப்பதற்கு அல்ல, ஆக்கத்திற்கு பயன் படுத்துவோம் என்கிற ரீதியில், ஏறக்குறைய 55 அணுஉலைகளை அமைத்து அந்த நகர்களை அழகு படுத்திய ஜப்பானியர்கள் மீது இயற்கை மீண்டும் அத்தகைய நிகழ்வை ஏற்படுத்தியிருக்கிறது.
    • இதுவரை இல்லாத அளவிற்கு, பூகம்பம், சுனாமி, அதைத் தொடர்ந்து, வரிசையாக அணு உலைகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன.  அவைகளிலிருந்து வெளிவரும் கதிர் வீச்சுகள் மிக மோசமானவை என்பது அனைவருக்கும் தெரியும்.  இது இயற்கையின் சதி என்றால் நாம் ஒன்றும் சொல்ல முடியாது. 
    • எல்லாம் எனக்குத் தெரியும்; எல்லாவற்றையும் என்னால் கட்டுப் படுத்த முடியும் என்கிற அறிவு ஜீவிகளுக்கு கிடைத்த பரிசாகத் தான் இதை ஏற்றுக் கொள்ள முடியும்.  என்னை மிஞ்சி எதுவும் நடக்காது என்ற மமதை.  தான்தான் இந்த உலகத்தின் மிகச் சிறந்த உயிரினம் - நான் செய்வதனைத்தும் சரி தான் என்று நியாயப் படுத்தும் குணம். இந்தத் தலைக் கனத்தை எப்படிக் குறைக்க முடியும்?
    • ஒவ்வொரு நாடும் அடுத்த நாட்டை எதிரியாகப் பார்ப்பதும், எல்லைகோட்டு சண்டையை வளர்ப்பதும், தன பலத்தை நிரூபிக்க அணுவைப் பிளப்பதும் - போட்டிக்கு வேறொருவன் அதற்கான முயற்சியில் இறங்குவதும் என்று ஒரு சுழலில் சிக்கித் தவிக்கிறோம். 

    • உலக அரங்கில் பொருளாதார வளர்ச்சி - அது மட்டுமே பிரதானம் - அந்நியச் செலவாணியை அதிகரிக்க வேண்டும். நவீன வளர்ச்சியில் இருந்து பின்செல்ல முடியாது என்பது தெரியும் ஆனால் அதே சமயத்தில் பொறுப்புணர்வு என்பது மங்கிக் கொண்டே இருக்கிறது.  
    • எதையும் செய்ய எனக்கு உரிமை இருக்கிறது என்கிற ரீதியில் உலக அரங்கில் பெயரெடுக்க, பொருளாதார வளர்ச்சி என்கிற போர்வையில் சில பெருச்சாளிகள்  வளர்ந்து கொள்ள மட்டுமே அரசு முயல்கிறது. 

    • அமெரிக்கா உள்ளே வந்து விடக் கூடாது, சீனா அருகில் போய்விடக் கூடாது என்பதற்காய் இலங்கைக்கு தமிழரைக் கொல்ல உதவுகிறது. அவர்கள் வேறு நாட்டுத் தமிழர்கள். தமிழ் மீனவர்களுக்குப் பாதுகாப்பில்லை என்றதற்கு என்ன செய்தது?  தெற்கிருந்து செய்தி போக நேரமாகிறது - ஆனால் இலங்கையிலிருந்து விரைவாய்ப் போகிறது.  நமது அரசும் கொள்கைகளும் வெறும் வெளி வேஷங்கள்  போடும் நாடக தாரிகள். 

    • மூன்றாம் உலகப் போர் தொடங்கினால் அச்சண்டை முடிவுறாது - ஏனெனில் தொடங்கும் போதே உலகம் முடிந்திருக்கும். இது அனைவருக்கும் தெரியும். ஆனால் நவீனப் போர் - பொருளாதாரப் போர். அனைத்து நாட்டையும் ஆட்டிப் படைக்கும் பேய். 
    • வளர்ந்த நாடுகள் என்ற நாடுகளுக்குள்ளும் - ஏழ்மை, வறுமை, விலைவாசி உயர்வு - வேலையில்லாத் திண்டாட்டம். அப்புறம் என்ன வளர்ந்த நாடு, வளராத நாடு? நாமும் அதைப் பார்த்து வளர வேண்டும் என்று ஆசிக்கிறோம்.
    • நில உறவு போயிற்று - மனித உறவு மங்கிற்று - கோடைகளில் நமக்குக் குளிர் வேண்டும் - குளிரில் வெப்பம் வேண்டும் - அணு சக்தி இருந்தால் தான் சாதிக்க முடியும். பன்னாட்டு நிறுவனங்களுக்கு செம்பரம்பாக்கம் தண்ணீர் போகும் - அவர்களுக்கு மின்சக்தி போக மீதி மக்களுக்கு கிடைக்கும். அப்புறம் என்ன நமக்கு வசதி?
    • தொலைக்காட்சிப் பெட்டி வீடு தோறும் போகும் - மின்சாரத்திற்கு என்ன செய்யலாம்? அணு சக்தி வேண்டும். 
    • யாரும் இல்லாத கடைகளில் ஷோ கேசில் எரியும் மின் விளக்குகளை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அணைக்க முன்வந்தாலே இன்னொரு தலை முறைக்கு எரிசக்தி மிஞ்சும். இந்தியாவும் அதனை பின் பற்றுகிறது. அப்புறம் எப்படி மின்சாரம் பற்றும்?
    • சேமிக்கும் பழக்கம் போய் விட்டது -   பணம்- மின்சாரம் - நீர் - எல்லாம்... தேவைக்கு மேலே இல்லையென்றால் கடன் வாங்கலாம்- மின்சாரம் - அணு சக்திதான். சரி நீர் எங்கே வாங்குவது?
    • அமைதி விரும்பிகள் உலகப் போருக்குப் பின் சண்டையிடுவதை குறைக்க வேண்டும் என்றும், சண்டைகளின் அழிவை உணர்த்தியும், பல இடங்களில்  இயற்கையிடமிருந்து பிரிந்து போனதை உணர்ந்து திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். நாம் இன்னும் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறோம். 
    • ஜப்பானியர்கள் இந்தக் குட்டி நகரத்திற்குள் ஐம்பத்து ஐந்து அணு உலைகள் வைத்திருக்கும் போது இந்தியாவில் வெறும் பதினேளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று கேட்டார்கள் - எதற்கு?

    • செர்நோபில் அணு உலை விபத்து மிக மோசமானது என்ற போது அதில் குறிக்கப் பட்ட பாதுகாப்பு வளையங்கள் ஒழுங்காக அமைக்கப் பட வில்லை எனவேதான் விபத்து என்றார்கள். 

    • ஜப்பான் - நில அதிர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரிந்தும், அதையெல்லாம் கருத்தில் கொண்டும் மிகவும் பாதுகாப்பாக வடிவமைக்கப் பட்டது என்றும் சொன்னார்கள். இப்போது என்ன நடக்கிறது என்பதை உலகம் பார்க்கிறது. 
    • இப்படியே போனால், யாருக்காக அணு உலை? மக்களுக்கா?
    • இந்தியாவில் மிகவும் பாதுகாப்பகவே அணு உலைகள் இருக்கின்றன. எந்த நில அதிர்வையும் தாங்கும் என்று, ஏதோ ஒரு விஞ்ஞானி சொல்லியிருக்கிறார். 
    • எதை வைத்து இவர்களை நம்புவது? நால் வழிச் சாலையில் ஊழல் - பாலங்கள் கட்டுதலில் மோசடி - விளையாட்டு நடக்கும் முன்னே கட்டிடங்கள் சரிவு- கல்மாடியின் ஊழல் - ஊழல் வழக்கில் உள்ள ஒருவரே ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமனம். போலி மருந்துகள் - போலி மருத்துவர்கள் - போலி விமானிகள் [இண்டிகோ விமானத்தில் பனி புரிந்த ஒரு விமானி வெற்றி பெறாத தேர்வில் வெற்றி பெற்றதாக மாற்றியது மட்டுமல்ல அதுபோல இன்னும் பலர்] - இதில் அணு மின் நிலையங்களை மட்டும் மிகவும் உண்மையோடும், நேர்மையோடும், எந்தவித கலப்படமும் இன்றி, ஜப்பான் முன்வரைந்த பாதுகாப்பு வளையங்களுக்கும் மேலாக, எல்லாவித நில அதிர்வுகளையும் தாங்கிப் பிடிக்கும் வல்லமையுள்ள அணு மின் நிலையங்களை நம்மவர்கள் அமைத்துள்ளார்கள் - இனிமேலும் அமைப்பார்கள். அணு உலைகள் விபத்து ஏற்படும் பட்சத்தில் இழப்பீட்டுத் தொகை என்பதை வெறும் 500 கோடியிலிருந்து பல போராட்டத்திற்குப் பின்னர் 1500 கோடிகளாக மாற்றிய இந்திய அரசு மக்கள் நலம் பற்றியும், அணு உலை அமைக்கும் அந்நிய நாட்டு கம்பெனிகளின் பணியில் தலையிட்டு அனைத்தும் ஒழுங்காக நடை பெறுகிறதா என்று நோண்டி நொங்கெடுக்கும் என நம்புவோம். 

    • நான் இந்தியாவின் மீது அவ நம்பிக்கை கொண்டிருக்கிறேன் என்று தவறாய்ப் புரிந்து கொள்ளப்பட்டாலும் பரவாயில்லை.  நாம் இன்னும் வளர வேண்டியிருக்கிறது.  நம் பண்பாட்டுக் கண்கொண்டு நம் மக்களைப் பார்க்கிற பார்வை வேண்டும். நியூ யார்க்கில் விளக்கு உள்ளது போல நமக்கு வேண்டும் என்றால் - அதுவா நமது முதல் தேவை. மக்கள் பொருளாதாரத்தில் உலக அரங்கோடு போட்டி போட்டுக் கொண்டு ஐந்து நட்சத்திர உணவகங்களில் உணவு அருந்தவோ, காலையில் சிங்கப்பூரிலும், மாலையில் மலேசியாவிலும் இருந்து விட்டு இரவோடு இரவாக இந்தியா திரும்பும் வசதியோ, அடுக்கு மாளிகைகளோ, இரவு பகல் வித்தியாசம் தெரியாமல் இருக்க வண்ண வண்ண விளக்குகளோ - ஆளுக்கு ஒரு வாகனமோ - ... இல்லாவிட்டாலும் பரவாயில்லை - அடுப்பெரித்து கஞ்சி குடிக்க உயிராவது மிச்சமிருக்க வேண்டாமா? 

    • இப்போதாவது அணுஉலைகளுக்கு அருகில் இருக்கும் மக்கள் பாதுகாப்பு பற்றியோ, அல்லது ஊழல் ஒழிப்பில் உண்மையாகவே இறங்கினாலோ - அறுபத்தி மூன்று சீட்டுக்களைப் பெறுவதற்கும்,  ஆட்சியில் பங்கு கேட்பதற்கும் சி. பி. ஐயைப் பயன் படுத்துவதை விட்டு விட்டு - மாற்று வழி பற்றிய விவாதங்களை முன்வைக்கத் தொடங்கினாலோ,  இயற்கை ஆர்வலர்களின் குரலுக்கு செவி கொடுத்தாலோ - கூடன்குளம் அல்லது நர்மதாப் போராட்டங்களில் உள்ள நியாயங்களை பரிசீலிப்போம் என்கிற அறிக்கையோ விட்டாலோ, இயற்கை அரண்களை அழிக்கும் முயற்சியை கைவிட நாம் முன்வந்தால்தான் நாம் நமது தலைக் கனத்தை  குறைக்க முயற்சிக்கிறோம் என்றாவது படும்.



    12.3.11

    நவீனம் - தொழில் நுட்பம்

    தொழில் நுட்பத்தின் வளர்ச்சி நமது வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முன்பெல்லாம் வெளியூருக்குச் செல்வது என்பதே நினைத்துப் பார்க்க முடியாது - அப்படியே இருந்தாலும் வருடத்திற்கு ஒருமுறை - அதுவும் இருபது அல்லது முப்பது கிலோமீட்டர்கள் மட்டுமே. 
    அப்போதெல்லாம் தஞ்சாவூர் செல்வதே மிக எதிர்பார்ப்புக்குள்ளானதாய்  இருக்கும். புதுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூர் செல்வதற்குள், இரண்டு மணி நேரம் என்பது சர்வ நிச்சயம்.

    இப்போது ஏறக்குறைய எல்லா இடங்களிலும் வழுக்கி செல்லும் சாலைகள், அதன்மேல் வோல்வோ பேருந்துகள், இரயில்கள், விமானங்கள் என்பதெல்லாம் மிகச் சாதரணமாகி விட்டன. எல்லாரும் விமானத்தை பயன்படுத்தா விட்டாலும் அது மிகவும் அத்தியாவசியமான பிரயாணமாகி விட்டது. ஒருமுறை அதில் செல்ல வேண்டும் என்பதற்காக திருச்சியிலிருந்து சென்னை வரைக்குமாவது செல்கிற அளவிற்கு வளர்ந்திருக்கிறோம்.  


    இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊரில் 'மலேயாக் கார' வீடு ஒன்றில் மட்டும் தொலைக் காட்சிப் பெட்டி இருந்தது. பிறகு டாக்டர் ஒருவர் வீட்டில் வந்ததது. அப்போது அவர்களின் அனுமதிக்காகக் காத்துக் கிடந்து தொலைக் காட்சி பார்க்க வேண்டும். சில பேருக்கு அனுமதி கிடைக்கும்: பல சமயம் வருத்தமாய்த் திரும்பி வருவோம். இப்போதெல்லாம் அப்படியா. தொலைக் காட்சி, குளிர் சாதனப்பெட்டி, இவைகளெல்லாம் சாதாரன பொருட்களாகி விட்டன. முன்பு சிறிய டிரான்சிஸ்டர்கள் வந்தது போல இன்று தொலைக்காட்சிப் பெட்டிகள். தொலைக்காட்சி பெட்டி உள்ள வீட்டிற்கு மட்டும் வெள்ளிக்கிழமைகளில் படையெடுக்க வேண்டிய  அசியமில்லை. எவ்வளவு தூரத்திற்கு அவைகள் அத்தியாவசியப் பொருட்களாகி விட்டன என்றால் அவைகள் பற்றி வரும் விளம்பரங்கள் கூட குறைந்த விட்டன.

    அப்போது மிதி வண்டிக்கு லைசென்ஸ் வாங்க வேண்டும் - அதுவோ அல்லது டைனமொவோ இல்லையென்றால் காவல் துறையினர் பிடித்து விடுவார்கள். ஒருமுறை டைனமோ இல்லாமல் வண்டி ஓட்டி காவலர் ஒருவரிடம் மாட்டியது உண்டு. பல சமயங்களில் அவர்களைப் பார்த்தால் இறங்கி வண்டியைத் தள்ளிக் கொண்டுதான் செல்ல வேண்டும். இப்போது அப்படியா - எவ்வளவு வண்டிகள். 

    வேலைகள் சுலபமாகி விட்டன [?], பெண்களின் வேலைபளு வெகுவாய் குறைந்திருக்கிறது.  அடுப்பூதும் பெண்களுக்கு என்றெல்லாம் எல்லா இடங்களிலும் பேசிவிட முடியாது. மிக்சி, கிரைண்டர் - குளிர்சாதனப் பேட்டிகள்.... துணி துவைக்க மெஷின் என்று எல்லா இடங்களிலும் சாதனங்கள். [இன்னமும் பெண்களுக்கு அடுக்களை வேலைகள் தானா?]

    கண்டக்டர்கள் பேனா எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. இதுபோல எவ்வளவு நன்மைகள் நாம் அடைந்திருக்கிறோம் என்பது பற்றி ஒவ்வொருவரும் ஒரு கதை வைத்திருக்கலாம்.

    ஆனால்,  எல்லாவற்றிற்கும் மேலாக, சமூகத்தில் அது மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்கிருக்கிறது. தொழில் நுட்பம் என்பது மட்டுமல்ல. அதோடு முதலாளித்துவமும் இணைந்து சமூகத்தில் மனித 'மான்பிற்கு' ஒரு பங்கை ஆற்றியிருக்கிறது என்பது மறுக்க முடியாது.

    ஆனால் மனிதன் மலம் அல்லும் தொழிலும், சாக்கடை சுத்தம் செய்வதிலும் இன்னும் அந்தப் பயன்பாடு அதிகம் வந்தது போலத் தெரியவில்லை..

    வளர்ச்சி பற்றி நிறைய எழுதலாம் -
    அதைப் பற்றி இல்லாமல் - தொழில் நுட்ப வளர்ச்சியினால் நாம் என்ன இழந்திருக்கிறோம் எனபதைப் பற்றி எழுதுவோம். அதற்கான முன்னோட்டம் இது. அதாவது தொழில் நுட்பத்தால் நாம் ஒன்றுமே பெறவில்லை என்பதை எல்லாம் ஒத்துக் கொள்ள முடியாது  என்பதற்காகத்தான் இப்பதிவு.

    அதற்காக - இப்போது என்ன நடந்திருக்கிறது என்று பார்க்காமல் இருக்க முடியுமா?

    11.3.11

    சிறு துளி - ஜாமீன்

    ஜாமீன்

    ஏறக்குறைய நாற்பதாயிரம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு  செய்த ஹாசனை - வெறும் எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய் ரொக்க ஜாமீனில் விடுதலை செய்திருக்கிறது உயர் நீதி மன்றம். 
    ஒருவேளை ஹாசன் இதையே தி. மு. க. விலிருந்து செய்திருந்தால், தொகுதிப் பங்கீடு முடியும் வரை, அல்லது, கேட்ட இடங்கள் கிடைக்கிற வரை, அல்லது வென்று கூட்டணி ஆட்சி முடிவு கட்டுகிற வரை, அதிலும் கேட்ட பதவி கிடைக்கிற வரை... சிறையில் இருந்திருக்க வேண்டியிருக்கும். ஒருவேளை ராசாவிடம் எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய் கூட இல்லையோ என்னவோ!

    நம்புங்கள் -  
    • சி. பி. ஐ... ஊழலை ஒழிக்க உதவுகிறது. ஆளும் கட்சிக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.  அதனால்தான் அண்ணா அறிவாலயத்தில் விசாரணை தொடர்கிறது....
    • கட்சியிலிருந்து வரி ஏய்ப்போ, ஊழலோ செய்யாதீர்கள் - தனியாய் செய்தால் நிச்சயமாய் தப்பிக்கலாம் - ஹாசன் போல.
    • ஹாசன் வெளியில் வந்து தனக்கெதிரான சாட்சியங்களை எல்லாம் அழித்து விடவோ, யாரையோ விலை கொடுத்து வாங்கி விடவோ மாட்டார் - ஏனெனில் அவர் நேர்மையாளர்.
    • காந்தியைப் போல காங்கிரசும், உண்மையையே கடவுள் என்றும், நேர்மையையே மதிப்பீடு என்றும், தூய்மையே தங்கள் வழிகாட்டி என்றம் இருக்கிறது.

    9.3.11

    அகில உலக மகளிர் தினம்

    அகில உலக மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப் படுகிறது. இந்த ஆண்டும் வழக்கம் போல. 

    பெண்களின் விடுதலையை முன்னெடுக்கும் ஆண்டாக இது இருக்க விழைகிறோம். பெண்களின் விடுதலை என்பது அவர்களிடமிருந்தே வரவேண்டும். யாரும் யாருக்கும் கொடுப்பதால் ஒன்றும் வந்து விடாது. 

    தாயின் குணங்கள் இந்த உலகத்தில் இருந்தால், இந்த உலகத்தில் பாதி பிரச்சனைகள் முடிந்து விடும். தாய்ப் பாசம் என்பதைப் பற்றி பேசவில்லை - அது பல சமயங்களில் அவர்களை ஏமாளிகளாக்கி விடுகிறது.  ஆனால் அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும், பிறரை வளர்த்தெடுக்கும் குணமும்.

    இதனால்தான் பெண்கள் அடிமைப் படுத்தப் பட்டார்கள் என்றொரு வரலாறு உண்டு என்றாலும் - மீண்டும் அவர்களை அடிமைகளாய் இருப்பதற்காய் நான் இதை முன்மொழிய வில்லை. மாறாக, நல்ல எண்ணங்களும், புதிய உலகத்திற்கு புதிதாய்ப் பலரை அறிமுகப் படுத்தி வாழ்விற்கு அடித்தளம் இடும் நற்பண்பிற்காய் சொல்கிறேன்.

    பெண்கள் நம் அனைவரின் கண்கள்...


    2.3.11

    கல்வி -

    கல்வி கடைச்சரக்காகி விட்டது அல்லது வியாபாரப் பொருளாய் மாறிப் போய்விட்டது என்கிற குற்றச் சாட்டு எல்லார் மத்தியிலுமே உண்டு. 
    உண்மையிலேயே கல்வியின் நோக்கம்தான் என்ன?

    கல்லாதவன் கல்லுக்குச் சமமானவன் என்பது உண்மையா? 
    கற்றலும் கற்றுக் கொடுத்தலும் மனிதன் வேலைக்குச் செல்லும் வாய்ப்பினை அதிகப் படுத்தும் நோக்கம் ஒன்றுதான் பிரதானமாக இருக்கிறது.  
    அதாவது, படிப்பதற்குப் பணம் செலவு செய்ய வேண்டும் - பிறகு அந்தப் படிப்பைக் கொண்டு சம்பாரிக்க வேண்டும். கல்விக் கூடங்கள் பணம் பெரும் வணிகக் கூடங்கள். எனவே அவைகள் தங்கள் வணிகக் கூடங்களுக்கு வருபவனுக்கு அத்தகைய வாய்ப்பை அதிகப் படுத்துகின்றன. பொருளாதாரக் கட்டுமானம்தான் நமது கல்வியின் அடித்தளம். மார்க்சியக் கருத்துக்களையெல்லாம்   நான் இங்கே பேசவில்லை. அப்படிப் பார்த்துக் கொள்ளவும் செய்யலாம்.
    அறிவியல் என்ன சொல்லுகிறது? இந்த உலகப் பொருட்களின் தன்மை, அவைகளின் விதிகள், வெறும் வேதியலின் கூட்டுத் தன்மை - என்ன ஆகிறது? அந்த விதிகளை எப்படிப் பயன்படுத்த முடியும் - அதைக் கொண்டு மனித வாழ்வை மேம்படுத்த முடியும் என்கிற அளவில் அவைகளைப் பற்றிய அறிவு நமக்குத் தேவைப் படுகிறது. ஆனால் அப்படி நமது மாணவர்கள் செய்கிறார்களா? அதுகூட இப்போது தேவையற்றது. மிக முக்கியமானது -
    அறிவியல் என்பது அறவியல் அற்றதாக மாறிப் போயிருக்கிறது.  நம் தேவைக்கென, நமது விருப்பத்திற்கென்று, அழிப்பதும், ஒழிப்பதும்தான் நமக்கு மிஞ்சியிருக்கின்றது.
    புவியியல் அதன் தன்மை பெட்ரோலியப் பொருட்களை சுரண்டுவதற்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அதாவது உலகம், அதன் அணுக்கள், மரங்கள், நிலங்கள், மழை எதுவும் உணர்வற்ற, ஜடங்களாக நமக்குச் சொல்லப் படுகிறது. அதாவது - அவைகள் எல்லாம் நமக்காக - நமக்காக மட்டுமே என்ற உணர்வில் அவளிடம் இருந்து நம்மை அன்னியப் படுத்தும் போக்கைத்தான் அது நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.

    கணிதம் என்பது - நாம் பணம் எண்ணுவதற்கும் வரவு செலவு பார்ப்பதற்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறது. வரவு என்ன செலவு என்ன - இன்னும் சொல்லப் போனால் - கடன்களை வைத்து - வரவின்றி எப்படிக் கடனாளிகளாக இருப்பது என்பதைச் சிறப்பாகச் செய்கிறது.

    வரலாறு - என்ன தேதியில் என்ன நடந்ததது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளக் கற்றுக் கொடுத்திருக்கிறது.  அதனால் என்ன வந்தது.? வரலாற்றின் தவறுகள் சுட்டிக்காட்டப் படுவது மட்டும்தான் அதன் நோக்கம் தவிர அது கொடுக்கும் அறவியல் சிந்தனைகள் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை.  
    செய்த தவற்றை மீண்டும் செய்யாமல் இருப்பது பற்றியோ அல்லது வரலாற்று நிகழ்வின் மதிப்பீடுகள் பற்றியோ - அது உண்மையா இல்லையா என்பது பற்றிய திறனாய்வோ எதுவுமின்றி தேதிகளை மனப்பாடம் செய்யக் கற்றுக் கொடுக்கிறது.

    இயற்கை வெறும் கனிமங்களின் கூட்டுச் சேர்வையாகவும், நோக்கமற்றதாகவும் அறியப் படுதலால் அதனோடு நமக்குள்ள தொடர்பு ஒன்றும் அற்றதாகவே உணரப் படுகிறது. ஆனால் நம் உள் மனத்தில் அதற்கான ஆசை இருக்கிறது. "அவதார்" வந்தால் மிகுந்த ஆர்வத்தோடு பார்த்து நம் ஆசையைப் பூர்த்தி செய்து கொள்கிறோம்.  இயற்கை உறவு பற்றி அவதார் உணர்த்திய அளவிற்குக் கூட நமது கல்விக் கூடங்கள் உணர்த்தவில்லை.

    கணிதம் என்பது இயற்கையோடு தொடர்புடையதாக அல்லது அனைத்திற்கும் அடித்தளமாகவே பார்க்கப்பட்டது - ஆனால் இன்று அது தனித்து விடப்பட்டிருக்கிறது. 
    வாழ்வியல் கூறுகளைக் காட்டிலும் வசதியாய் வாழ்வதற்கான ஒரு கருவியாய் நம் கல்வி நிறுவனங்கள் மாறிப் போய் விட்டன. 

    ---
    இந்த நூற்றாண்டு மனிதர்களுக்கு கணணி பற்றித் தெரியும், கணக்குப் பண்ணத் தெரியும் - பல நாடுகளின் தலை நகரம் தெரியும், பல நாடுகளுக்குச் சென்றுவந்து உலகம் மிகப் பெரியது என்று தெரியும் - அல்லது அதைப் பற்றிய விவரங்கள் பாடங்களாய் தெரியும் - 
    தெரியவில்லை என்றால் - அவன் கற்கால மனிதன் / ஆனால் வாழ்வியல் பற்றித் தெரியாது. இன்றைக்கு பலபேர் கணணியோடு தொடர்பு கொண்டு இருக்கிறார்கள். அதனால் ஏதாவது மாற்றம் இருக்கிறதா? கணனியால் நல்லவைகள் இல்லை என்பதில்லை. ஆனால் கணணியின் பயன்பாடு வேகத்தை அதிகரித்திருக்கிறது. அவ்வளவே! 

    ஒரு குட்டிக் கதை - படித்த ஒருவன் படகில் பயணம் செய்யும் போது, படகோட்டிக்கு அது தெரியுமா இது தெரியுமா என்று கேட்டு அவன் வாழ நாளில் பாதியை இழந்துவிட்டான் என்று சொல்லும் போது, படகோட்டி கேட்டானாம் - உனக்கு நீந்தத் தெரியுமா? 'இல்லை' என்றவுடன் அவன் சொன்னானாம் - உன் வாழ்க்கை முழுவதியுமே இப்போது இழக்கப் போகிறாய். படகில் ஓட்டை விழுந்து விட்டது." 

    வடிவேலுவின் ஒரு ஜோக்.  "கிளின்ட்டன் தெரியுமா" "சச்சின் தெரியுமா" - ன்னு.

    அந்த மாதிரிதான். நமக்கு நம்மைச் சுற்றி வெளியில் இருப்பது பற்றிய விவரம் தெரிகிறது - அதில்  இருக்கும் நமது வாழ்வின் நோக்கம் என்னவென்று கற்றுக் கொடுக்கப் படாமலேயே இருக்கிறது. 

    இதற்கு முன்பு படிப்பது என்பது வாசிக்கக் கற்றுக் கொள்வதும் கையெழுத்திடுவதும்தான். இப்போது படிப்பு என்பது கணணி கையாளத் தெரிவது. அவ்வளவே.
    நமக்கு முன்னாள் இருந்தவர்கள் - நமது பார்வையில் படிக்காதவர்கள்தான் - ஆனால் அவர்களுக்கான வாழ்வின் நெறிமுறையில் இயற்கையோடானா தொடர்பு இருந்தது. அது நம்மிடத்தில் இல்லை. நம்மைக் காட்டிலும் அவர்கள் கற்றவர்கள் - நம்மைக் காட்டிலும் மேலானாவர்கள்.