26.8.16

கிழிஞ்ச பேப்பர் - பழைய சிதறல்கள் - 1

மரம் 

மரத்தை அழித்து விடாதே
வரும் காலமதை அழ விடாதே.
-

 மரமது செம்மையானால்
வாழ்வது செம்மையாகும் - மாந்தரே செழுமையாவர்.

---

மழை

வானம் கீழே வந்தால்தான்
வரப்பே உயரும்

வரப்பு உயர்ந்தால்தான்
வாழ்வு உயரும்

-

மண் 

செம்மண்ணை
நம்மால் செய்ய முடியுமெனில்
செடி கொடிகள்
விரைவாய் வளருமே

மண்ணைக் கூட
மாற்ற முடியாதே மனிதா
மரபணுவை
மாற்றலாமா ???

---

15.8.16

அகண்ட பாரதம்

இந்தியாவின் எழுபதாவது சுதந்திர  தின நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. நேற்றே பத்திரிக்கைகள் எங்கே எங்கே யார் யார் கொடி  ஏற்றுவார்கள் என்ற செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்டன. இன்றைய செய்தித்தாள்கள் எங்கே எங்கே யார் யார் கொடி ஏற்றுகிறார்கள் என்ற செய்தியை வெளியிட்டிருக்கின்றன. நாளைய செய்தித் தாள்கள் எங்கே எங்கே யார் யார் கொடி ஏற்றினார்கள் என்ற செய்தியை வெளியிடும். அந்த அளவிற்கு நாட்டின் சுதந்திரத்தைப் பற்றிய செய்திகள் மட்டுமே வெளியிடுவதிலிருந்தே சுதந்திர இந்தியாவை எவ்வளவு மதிக்கிறோம் என்பது நமக்குப் புரியும். வாழ்க பாரதம்.

# # #

மிகப் பெரிய ஜனநாயக நாடு என்பதில் இந்தியர்கள் அனைவரும் பெருமை கொள்வோம். பல மொழிகள், சமயங்கள், கட்சிகள், கொள்கைகள். இவைகளைத் தாண்டி ஒன்றாய் இருக்கத் துடிக்கும் மக்களைப் பெரும்பான்மை மக்களில் நானும் ஒரு அங்கமாய் இருக்கின்றேன் என்பதில் எனக்குப் பெருமையே. ஏனெனில் வேறுபடுகளில்தான் நாம் ஒற்றுமையைப் பேண முடியும் என்பதில் எனக்கு அலாதி நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கை இன்னும் அதிகமாய் வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு.

# # #

ஆனால் சில நாட்களாக இந்த நம்பிக்கையை சிதைக்கும் செயல்கள் இந்தியாவில் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. அரசு செய்ய வேண்டிய செயல்களை சில நிறுவனங்கள் செய்கின்றன. காவல் துறை செய்ய வேண்டிய வேலையை சில குழுக்கள் செய்கின்றன. அவைகளும் கட்டுக்கடங்காமல் இருக்கின்றன. வன்முறைகள் அவிழ்த்து விடப் படுகின்றன. தலித் மக்கள் தாக்கப் படுகின்றனர். பன்மைத் தன்மையை அழிக்க பல்வேறு முயற்சிகள் நடை பெறுகின்றன.
அகில இந்தியா வானொலியில் தமிழ் மொழிச் செய்திகள் நிறுத்தப் பட்டிருக்கின்றன. கல்வி வரைவில் சமஸ்கிருதம் திணிக்கப் படுகிறது. என் மொழியை நான் மதிப்பது என்பது இந்திய தேசத்தின் ஒற்றுமையைக் குலைப்பதாய் பார்க்கப் படுகிறது.
இது இந்திய ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

ஏனெனில் வேறுபடுகளில்தான் நாம் ஒற்றுமையைப் பேண முடியும் என்பதில் எனக்கு அலாதி நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கை இன்னும் அதிகமாய் வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு.

# # #

இன்னும் ஒரு தியாகி பென்சன் கிடைக்காமல் அலைந்து கொண்டிருப்பதாய் இன்றைய செய்தித்தாள் ஒன்று தெரிவிக்கிறது. தியாகள் மதிக்கப் படாத ஊரில், தியாகத்திற்கு என்ன மரியாதை இருக்கும்.

# # #

தென்கோடியில் இருக்கும் அணு உலையை நாட்டுக்கு அர்ப்பணித்து இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை. மின்சாரம் தடை பட்டு பதிவேற்றம் செய்யக் காத்துக் கொண்டிருக்கிறேன். சுதந்திர நாட்டின் ஓர் அங்கம்தான் இவைகள் எல்லாம். குறைகள் இருப்பதனால் ஒரு நாட்டைக் குறை சொல்ல முடியாது. நாமும் முயன்றால் குறைகளைக் குறைக்க முடியும். முயல்வேன்.

# # #

சுதந்திர தேசம் – அது பன்முக தேசம் – அனைவரையும் மதிக்கும் தேசம் - வேறுபடுகளில்தான் நாம் ஒற்றுமையைப் பேண முடியும். இந்தியா அதைப் பேணும்.
வாழ்க இந்தியா!