27.8.13

உம்மன் சண்ட்டிக்கு ஒரு உம்மா

பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் படிக்கும் ஒரு பதிவோ என தவறாக என்ன வேண்டாம். இது அப்படிப்பட்ட பதிவு ஒன்றும் இல்லை.

செல்போன் பயன்படுத்தாத முதல்வர் - திறந்த புத்தகம் என்று சொல்லப் படுகிற கேரளா முதல்வருக்கு எதற்கு ஒரு உம்மா... இப்போதுதான் சோலார் பேணல் விவகாரத்தில் சிக்கிச் சிதறினார் வேறு ஏதாவது பிரச்சனையா என்றெல்லாம் எண்ண வேண்டாம்.

கேரளத்தில் அரசுப் பணி பெற மலையாளம் கட்டாயம் பத்தாம் வகுப்பு அல்லது பனிரெண்டாம் தேர்வில் மலையாளம் மொழிப் பாடமாக தேர்ந்தெடுத்திருக்கப் பட்டிருக்க வேண்டும் என்றும், இல்லையெனில் பத்தாம் வகுப்பு பாடத் திட்ட அளவில் அரசு நடத்தும் மொழித் தேர்வில் பாஸ் செய்தால் மட்டுமே நிரந்தர பணி வழங்கப் படும் என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

அதுக்கு எதுக்கு உம்மா... தமிழகத்தில் அது மாதிரி ஒரு தேர்வு இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை... கோட்டைக்குள் சென்றால் பல மலையாளிகள் தமிழ் தெரியாமலே இருக்கிறார்கள்... இன்னமும் ஞான்  ஞி என்றே பேசுகிறார்கள்... இவர்களுக்கெல்லாம் தமிழ் மொழித் தேர்வு வைத்தால் நன்றாகத் தான் இருக்கும்...

தமிழ் மொழியை தமிழக அரசே கவிழ்க்கும் சூழ் நிலையில் மலையாளத்தைத் தூக்கிப் பிடிக்கும் உம்மா சண்டிக்கு உம்மா குடுத்தால் தப்பில்லை...
இதைப் பார்த்தாவது நம்மவர்கள் சுரணையோடு இருந்தால் நல்லதுதானே... ஆனால் அவர்களே ஆங்கிலிபிசி ல் பேசினால் நாம் என்ன செய்ய முடியும்?

22.8.13

'அப்பு மண்டி' - ஆவணி ஆறு

உணவுப்  பாதுகாப்புத் திட்டம்
  • மிக வெற்றிகரமாக ஏழை மக்கள் அனைவரும் நிச்சயமாக உணவைப் பெறுவதற்கான திட்டத்தை நாங்கள் நிறைவேற்ற மிகப் பெரிய போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது என்று இந்திய அன்னை சோனியா காந்தி சொல்லியிருக்கிறார்கள். இது ராஜீவ் காந்தியின் கனவு என்று சொல்லியிருக்கிறார். அவர் இருந்த போது இந்தியப் பாதுகாப்பு என்று போபார்ஸ் பீரங்கிகளை வாங்குவது அவர் கனவாக இருந்து நிறைவேற்றினார். இப்போது இன்னொரு கனவை இவர்கள் நிறைவேற்றுகிறார்கள் போல.
  •  இப்பதான் மத்தியத் திட்டக் கமிஷன் ஒரு நாளைக்கு முப்பது ரூபா சம்பாரிச்சா ஏழைகள் இல்லைன்னு சொல்லுச்சு... அப்படிப் பாத்தா ரோட்டுல பிச்சை எடுக்குறவங்க கூட ஏழைகள் இல்லைன்னு சொன்னது. இவங்க 67 சதவீதம் மக்கள் பயனடைவார்கள் என்று சொல்றாங்க...  
  • பூச்சி புழுத்து கிடங்குகளில் கிடக்கும் அரிசிகளை ஏழை மக்களுக்கு குடுங்கன்னு நீதி மன்றம் சொன்னதற்கு இதே காந்தியின் பேரன்களெல்லாம்  அரசு விஷயத்தில் நீதி மன்றம் தலையிடக் கூடாது அப்படின்னு சொன்னாங்க. இப்ப திடீர் கரிசனை மக்கள் மேல்....
அணுநீர்க் கசிவு 

  • ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. இப்போதும் பணியாளர்கள் அணு உலையைக் குளிர்விக்க வேலை செய்து கொண்டிருக்கிறார்களாம். இப்போது ஏறக்குறைய 300 டன் கதிர்வீச்சு நீர் கசிவதாகவும் எந்தத் தொட்டியில் இருந்து கசிகிறது என்று கண்டு பிடிக்க வேலை செய்து கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். கூடங்குளத்த நினைச்சா என் எதிர்கால சந்ததியின் வாழ்க்கை முகமூடிகளுக்கு பின்னால்தான் என்று தோன்றுகிறது. அப்படி ஒரு நிலையில், ஒருவேளை இந்த உணவுப் பாதுகாப்புத் திட்டம் உதவி செய்யலாம். 
கச்சத் தீவு 
  • கச்சத்தீவு பற்றி மூச்சே விடக்கூடாது என்று இலங்கை அமைச்சர் சொல்லியிருக்கிறார். கவலைப் படாதீங்க...நீங்க மீனவர்களைச் சுடுங்க... நீங்க புத்தர் சண்டை போடச் சொன்னார்னு சொல்லுங்க... தமிழர்கள் அறிவில்லாதவங்கன்னு சொல்லுங்க... தமிழர்கள் நாட்டைப் பிரிக்க சதின்னு மாண்புமிகு பிரதம மந்திரி மன்மோகன் சிங்குகிட்ட சொல்லுங்க... அவர் உங்களுக்கு நன்றி சொல்லுவார். நீங்க பினான்ஸ் பண்ணி படம் எடுத்தாக் கூட இங்க யாரும் ஒன்னும் சொல்ல மாட்டான். கவலைப் படாதிங்க. 
தடை
  • ஜான் ஆப்ரஹாம் நடித்த படம் தமிழர்களை இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்களாக காண்பிப்பதாகவும் படத்தை தடை செய்ய வேண்டுமென்றும் சொல்கிறார்கள். ஜான் ஆப்ரஹாம் இலங்கையில் இலங்கை அதிகாரிகள் யாரையும் பார்க்க வில்லை என்று சொன்ன மறு நிமிடம் அவர் இலங்கை அதிகாரிகளைப் பார்ப்பதற்காக இருந்த ஆதாரங்கள் முகப்புத்தகத்தில் வெளி வந்திருக்கின்றன. ஆமாம் நான் பார்க்கப் போனேன்... அவன்தான் ஸ்பான்சர் பண்றான்னு ஒப்பனா சொல்லிட்டா நம்ம பிரதமரே பாதுகாப்புக் குடுப்பாரே இதுக்குப் போய்  யாராவது பொய்  சொல்லுவாங்களா ஆப்ரஹாம்.
  • ரா இந்திய உளவுத் துறை என்றெல்லாம் சொல்லுகிறார்கள்... இலங்கை உளவுத்துறை ரொம்ப ஒப்பன் போல இருக்கிறது..
  • தமிழர்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராக இருந்தால்தான் தமிழர்களின் நலன் கிடைக்கும் என்கிற ஒரு செய்தியை படம் பார்ப்பவர்கள் எடுத்துக் கொண்டால் போகிறது ஏனெனில் மலையாளர் ஒருவர்தான் மிக சிரத்தையோடு ராஜீவ் இந்தியாவைக் காப்பாற்ற போராடுகிறாராம்.
இளையராஜா 
  • சினிமாக் காரர்கள் எல்லாருக்கும் தங்களது பர்ஸ் நிறைந்தால் போதும் என்கிற அளவுக்கு மட்டுமே இருக்கிறார்கள். அதுதான் ஆப்ரஹாமை பொய் சொல்ல வைத்திருக்கிறது. பொதுவாக இலங்கைத் தமிழர்களை மனதில் வைத்தே பல திரைப் பட கலைஞர்கள் தங்கள் டாலர்களையும் பவுண்டுகளையும் குறி வைக்கிறார்கள். இளையராஜா என்றும் ராஜாதான். அதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லைதான். அவரும் இதற்கு விதிவிலக்கு இல்லை என்பதைத் தான் தொடர்ச்சியாக வரும் அவரது கான்செர்ட்ட்டுகள் சொல்லுகின்றன. அதாவது பணத்திற்கு மட்டும் அவர்கள் வேண்டும் ஆனால் ஆதரவுக் கருத்து என்கிற அளவில் கூட சில சமயம் எதுவம் சத்தமாய்ப் பேசுவதில்லை... அதனால் இங்கிலாந்தில் விற்பனை மந்தம் என்று சொல்லுகிறார்கள்.
  • இருபத்தி நான்காம் தேதிக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் வேளையில் இன்னும் அரங்கு நிறையாமல் இருப்பதாகச் சொல்லுகிறார்கள். அதனால் உலக நாயகன் முதற்கொண்டு எல்லாரும் வாங்க வாங்கன்னு கூவி விக்கிறாங்க... 
  • இதெல்லாம் தேவையான்னுதான் விசய் ஒரு படத்துக்கு இருபது கோடி வாங்குறாராம். அடப் பாவிங்களா காச என்னதான் பண்ணுவீங்க? நீங்களெல்லாம் உணவுப் பாதுகாப்புத் திட்டம் ஆரம்பிச்சா உலகத்துக்கே சாப்பாடு போடலாம் போல இருக்கே?

13.8.13

குளோபல் காங்கிரசிடம் சமர்ப்பிக்க காந்திக்கு ஒரு வேண்டுகோள்

பாட்டும்   பெட்ரோலும் 
சின்ன வயசு  விஷயங்கள் பலவற்றை இப்போது நினைக்கிற போது எவ்வளவு முட்டாளாய் இருந்திருக்கிறோம் என்று எனக்குத் தோன்றுவதால் நான் என் முட்டாள் தனங்களை எல்லாம் மறந்தே போய் விட்டேன்.
சின்ன வயதில் எம். ஜி. ஆர். மற்றும் சிவாஜி படங்களை பார்த்த போதெல்லாம் எப்படி இவர்கள் இப்படி அழகாகப் பாடுகிறார்கள் என்று தோன்றும்... சிவாஜியின் வாயசைவில் அவரே பாடுவது போலத் தோன்றுவதால் அவர்தான் பாடுகிறார் என்றுதான் நினைத்திருந்தேன். .... அதாவது பின்னணிப் பாடகர்கள் என்கிற விஷயம் எனக்குத் தெரியவில்லை...
ரஜினிப் படங்கள் பார்க்க ஆரம்பித்த பிறகு - வேறெங்க ஊர்த் திருவிழாக்களில்தான் --- எங்க திருவிழான்னாலும் நடந்து போய் செட்டில் ஆகி ... விடிய விடிய படம் பார்த்த காலங்கள் உண்டு --- நான் சொல்வது இதற்கு முன்பு---

ஒருமுறை ஏதோ ஒரு பாட்டில் ஹீரோ வாய் அசைக்காமல் இருந்தாலும் பாட்டு தொடர்கிறது... எனக்கு முடியலை எப்படி வாயைத் திறக்காமல் இப்படி சுத்தமா சத்தமா பாட முடியும்... நானும் வீட்டுக்கு வந்து வாயை மூடிக் கொண்டு பாடிப் பாக்குறேன்.... ம்க்கும் ம்க்கும் தான்... அதை அப்படியே தொடந்திருந்தால் நான் மங்கி வெங்கி மாதிரி ரொம்ப பேமஸ் ஆகி இருப்பேன்.  என் அண்ணன் நான் செய்யுற செட்டைஎல்லாம் பாத்துட்டு அட மக்கு மக்கு பாடுறது அவன் இல்லை வேற ஆளுன்னு சொன்னதுக்கு என்னைய முட்டாள்ன்னு நினைச்சியான்னு திருப்பிக் கேட்டேன்... இப்ப நினைச்சா சிரிப்பா இல்லை...
°°°
இதாவது பரவாயில்லை எங்க ஊர் மெயின் ரோட்ல இருந்தாலும் சுத்து வட்டாரத்துல இருபது கிலோ மீட்டருக்கு பெட்ரோல் பங்கே கிடையாது... ஒரு வாட்டி மே மாச விடுமுறையில் மாமா வீட்டுக்கு திருச்சிக்கு போனேன் - அப்பா கூட்டிட்டுப் போய் விட்டாரு. பெட்ரோல் இருக்கிற இடத்துலதான் பெட்ரோல் பங்க் இருக்கும்னு நினைச்சுகிட்டு இருந்தேன்... மாமா திருச்சில மட்டும் எப்புடி இம்புட்டு பெட்ரோல் கிடைக்குது எங்க ஊர்ல ஏன் பெட்ரோலே இல்லை - ன்னு கேட்டேன்...  மாமா ரெண்டு விஷயம் சொன்னார்... அட முட்டாப் பயலே... பெட்ரோல் தோன்ற எடத்துல வராது ஊத்தி வச்சு எடுக்குறாங்கன்னு சொன்னதுக்கு போங்க மாமா பெட்ரோல் நிலத்துலேர்ந்துதான் வருதுன்னு ஸ்கூல்ல சொல்லிக் கொடுத்தாங்க நீங்க என்ன ஊத்தி எடுக்குறாங்கன்னு சொல்றீங்க போங்க மாமா ...

°°°
கேட்டா உங்களுக்கு சிரிப்பு வருதா இல்லையா? இவன் இவ்ளோ பெரிய முட்டாப் பயலான்னு  என்னையப் பத்தி நினைப்பு வரும்... பரவாயில்லை... நான் சின்னப்பயலா இருந்தப்பதான் அப்படி இருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாய் விஷயங்கள் அறிந்து கொண்டேன். ஆனால் நம்ம நாட்ட ஆள்கிற மிகப் பெரியவர்களைப் பார்த்தா, வளர்ந்த பிறகும் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ளாமல் மேலோட்டமாய்ப் பார்க்கிற அவங்க என்னைய விட பெரிய முட்டாள்களாத் தெரிவதானால் என் சின்ன வயசு முட்டாள் தனங்களை ஜாலியாய் எடுத்துக் கொள்ளும் பக்குவம் வந்திருக்கிறது.
°°°
முப்பது ரூபாயும் மூன்று வேளை  சாப்பாடும் 

முப்பது ரூபாய்க்கு ஒரு நாளைக்கு சாப்பிட முடியும் என்று பேசுற அமைச்சர் அந்த முப்பது ரூபாய்க்கு அரை லிட்டர் பெட்ரோல் போட முடியுமான்னு கேட்டிருப்பாரா ... மூணு வேலை ரோட்டுக் கடையில சாப்பிட்டு இடையில இரண்டு காப்பித் தண்ணி குடிச்சாலே முப்பது ரூபா பத்தாதே அறிவு ஜீவிகளா எப்படி முப்பது ரூபா போதும்?
சரி அது போதும்னா எல்லா அமைச்சர்களுக்கும் 900 ரூபா சம்பளம் குடுத்து மக்களோட மக்களா வைக்கலாமே சாமி... அப்படியே எல்லாரும் கவர்ன்மெண்டு பஸ்லதான் பார்லிமென்ட்டுக்கு வரணும்னு சொன்னாங்கன்னா குடுக்குற 900 ரூபாயையும் பஸ்ஸுக்கே சரியாப் போகும்னு இந்த அறிவு ஜிவிகளுக்குத் தெரியுமா...முப்பது ரூபா குடுத்தா இருக்க இடத்துக்கு சாப்பாடு வந்துர்ற மாதிரி --- வாயை மூடிக்கிட்டா சுதி சுத்தமா பாட்டு வர்ற மாதிரி பேசுறீங்களே மான்பு மிகு அமைச்சர்களே...
முப்பது ரூபாய்க்கு நம்ம தேசியக் கொடிக்குள்ள சுத்தி வைக்கிற பூ வாங்க முடியுமா சாமி.  இதுக்கு வக்காளத்துக்கு  பதிப்பாளர்கள் வேற. உங்க பதிப்பகத்தை எல்லாம் மூடிட்டு ஹோட்டல் நடத்தி முப்பது ரூபாய்க்கு மூணு வேளை  சாப்பாடு போடுங்க நானும் லைப் டைம் பிளான்ல முதல் ஆளா சேர்கிறேன்.

முக நூலில் படிச்சேன் --- ஒரு பணக்காரனின் ஷாம்ப்பூவில் இருக்கும் பழங்கள் கூட ஒரு ஏழையின் தட்டில் இருப்பதில்லை என்று... ஷாம்பே முப்பது ரூபாய்க்கு வாங்க முடியாதே அவன் எப்படி சாப்பாடு வாங்க முடியும்...
முப்பது ரூபாய்க்கு ஒரு ஷாம்பூ வாங்க முடிந்தால் வாங்கி ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூன் வீதம் வீட்டில் இருக்கிற எல்லாரும் சாப்பிட வேண்டியதுதான்.
சரி ஒரு வீட்டில் மூணு இருந்தால் ஒருத்தர் வேலைக்குப் போனால் மூணு பேரும் முப்பது ரூபாய்க்குள்ள  சாப்பிட முடியமா மாமு.

காந்தியின் சுதேசி காங்கிரஸ் 


காந்தித்தாத்தா சுதேசி இயக்கம்னு ஒன்னு ஆரம்பிச்சாரு... கதர் இயக்கம் -- உப்புச் சத்தியாகிரகம்.... வெளி நாட்டுப் பொருட்களை வாங்காதே... புத்தகத்துல படிக்கிறோம்... ருப்பியாவுல மட்டும் காந்தித் தாத்தா சிரிக்கிறார்... இன்னைக்கு இதே காங்கிரஸ்தான் வாங்க வாங்க ன்னு வெளி நாட்டுக் காரனைக் கூப்பிடுது.
ஒரு கட்டுரை ஒன்று படித்தேன். தமிழ்ப் பற்று இந்தியப்பற்றாளர்கள் எல்லாரும் போட்டி போட்டு நாம் அனைவரும் முயற்சி செய்தால், இந்தியப் பொருட்களை வாங்கினால் இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்த முடியும்... அதனால் சோப்பு என்றால் சந்திரிகா, சிந்தால், மைசூர் சாண்டல், ஷாம்பூ என்றால் டாபர், குளிர் நீர் பானம் என்றால் இளநீர் ... இப்படி நாம் ஒரே நாளில் வெளி நாட்டுப் பொருட்களை வாங்குவதை நிறுத்தினால் ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் இருபது ரூபாய் உயரும் ...

அது மட்டுமல்ல அந்தக் கட்டுரையில சாதாரணக் குடிமகனான எனக்கே தெரிஞ்சுர்க்கே ஏன்  இது நிதி அமைச்சருக்குத் தெரியலைன்னு அண்ணனுங்க கேட்குறாங்க... நம்ம அமைச்சரு அடப் போங்கடா முட்டாப் பசங்களான்னு சொல்றாரு...

நம்ம அண்ணன்களுகிட்ட வருவோம்... ரூபாய் மதிப்பு உயரக் கூடாதுன்னுதானே அவங்க இப்படியே பண்றாங்க... சில்லறை வியாபாரம் முதக் கொண்டு, காந்தி அந்நிய பொருட்களை, துணிகளை வாங்காதீர்கள் என்று எதிர்த்த அந்நிய கம்பெனிகளை உள்ளே கூட்டிகிட்டு வர்றாங்க ... ஒரு ஏரியா விடாம எல்லாப் பக்கமும் கடையத் திறந்து கோகோ கோலாவும் கோல்கேட்டும் வித்தா நான் எங்க போய் தேடுறது... ஏதோ பவொண்டோ  மட்டும் கொஞ்சம் தாக்குப் பிடிச்சு ஓடுது...

காங்கிரசுகாரர்கள் எல்லாம் கூட்டுச் சேர்ந்து நான் என் அண்ணனைச் சொன்ன மாதிரி காந்தியின் சுதேசியை முட்டாள்ன்னு சொல்றாங்க... நான் வளர்ந்துட்டேன்... நம்ம அரசியல்வாதிகள் எப்போ வளரப் போறாங்கன்னு  தெரியலை...
***
வெளி நாட்டு மோகம் நம்மைக் கண்ணை கட்டிருச்சு... எத்தனை காந்தி வந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது. இந்தக் காங்கிரசுக்காரர்கள் இப்படி இருக்கிற வரை... இந்தியா ஒளிரனும்னா வெளிநாடு மாதிரி இருக்கணும்னு கதை சொல்லுவாங்க... அவங்களை மாதிரி இருந்தாதான் பிரகாசமா இருப்போம்... பொருளாதாரம் வளரும் அப்படி இப்படி எல்லாம் கதை சொல்லுவாங்க.
இதெல்லாம் வெறும் கனவு... வெளிநாட்டுக்காரனுக்கு மார்க்கெட் இல்லை அதுனால நம்மளைத் தேடுறான்... என் மாமா ரெண்டு விஷயம் சொன்னாருன்னு சொன்னேன். முதலாவது நான் முட்டாப்பயன்னு சொன்னார். இரண்டாவது... தோன்ற எடத்துல பெட்ரோல் வந்தா நாம ரொம்ப பணக்கார நாடா ஆகிடுவோம்...
எனக்கு -பெட்ரோல் தோன்ற எடத்துல வரலை'ன்னு தெரிஞ்சிருச்சு... ஆனா அதே சமயத்துல நம்ம பொருட்களை மட்டுமே நாம பயன்படுத்தினா நாம நல்லா இருப்போம் அப்படின்னு தெரியுது... எனக்கு அறிவு வளர்ந்திருச்சு ...

தோன்ற இடத்துல வர தண்ணியையே அந்நியக் கம்பெனிகளுக்குத் தாரை வார்க்கிற இந்த அரசியல் வாதிகள் தோன்ற இடத்துல பெட்ரோல் வந்தாலும் நம்ம நாட்டை வளமான நாடா ஆக விட்டிடுவாங்களா என்ன​?
நம்மகிட்ட இருக்குற விஷயத்தை வச்சு நாம பணக்காரனா ஆகிறத தடுக்குற இந்த அரசியல்வாதிகள் முட்டாளா அறிவாளிகளா மாமா!
***
அணுப்பிரகாசம் வெடிப்பிரகாசம் 
அணையப் போற விளக்கு பிரகாசமாய் எரியும்ன்னு சொல்லுவாங்க ... நம்ம நாடு என்னைக்கும் பிரகாசமா இருக்கணும், என்றுமே ஒளி கொடுக்கணும்னு நினைக்கிற பல பேர் ரோட்டுல நின்னு குரல் கொடுக்கிறாங்க.... அணு உலை ஆபத்தானது அது அணையும் போது பிரகாசமாய் எரியும் மெழுகு மாதிரி அது நிரந்தரமில்லைன்னு சொல்றாங்க ...

நம்ம காங்கிரஸ்வாதிகள் கேக்குறது இல்லை... அடப்பாவிங்களா சில்லறை வியாபாரிகள் வயுத்துல அடிக்காதிங்கடா ன்னா கேக்குறதில்லை... அறிவு ஜீவிகள், மனித ஆர்வலர்கள், சுற்றுச் சூழல் நிபுணர்கள் இவர்கள் சொல்லுவதை இந்த அரசியல்வாதிகள் கேட்பதில்லை...

யார் எது சொன்னாலும் அவர்கள் எல்லாரும் முட்டாள்கள் என்கிறது சுதேசிக் காங்கிரஸின் பேத்தி...
எந்த ஊர்ல எவன் போராட்டம் பண்ணினான் தண்ணியை கோகோ கோலா இல்லாட்டி பெப்சிக்கு குடுன்னு.... எந்த ஊர்ல வெளி நாட்டுக் கம்பெனிகளை உள்ள விடுங்கன்னு போராட்டம் பண்ணினான்... நீங்களா உள்ள விடுறீங்க... நீங்களா ஒளிரும் இந்தியாங்கிறீங்க ... நகரத்தில் இருப்பவர்கள் எல்லாரும் வறுமைக் கோட்டுக்கு மேலே இருக்கிறார்கள்என்று சொல்றீங்க ... சென்னை என்ன வெறும் மவுண்ட் ரோடா... அப்ப கொட நாட்டுல இருக்குறவங்க எல்லாம் ஏழைகளா என்ன... என்ன கருமாந்திரமோ!
ஆனா நாட்டுக்கு நல்லது, மக்களுக்கு நல்லதுன்னு சொல்ற போராட்ட, வீரம் மிக்க மக்களை, மனித ஆர்வலர்களை, சூழல் நண்பர்களை முட்டாள்கள் என்கிறீர்களே நான் எங்க அண்ணனையும் மாமாவையும் சொன்னது மாதிரி... என்ன செய்ய முடியும்?
வெளிநாடு வெளிநாடுன்னு மோகத்துல இருக்குற இந்தக் காங்கிரஸ் காரர்களை காந்தித் தாத்தாவே நீதான் காப்பாத்தணும்...

ஆனா தாத்தா, நீர் கோமணத்தோட போகாதேயும்,  அப்படியே போனாலும் இன்டிமிசிமியின் கோவனம் கிடைச்சாக் கட்டிகிட்டுப் போம். அப்பத்தான் காங்கிரஸ் ஆபிசுக்குள்ளேயே அனுமதி கிடைக்கும் (இன்டிமிசிமி / ஒரு இத்தாலிய நாயுடு ஹால் மாதிரி) - இப்பப் புரியுதா​?  அதுக்கப்புறம் தான் சுதேசியே பேச முடியும்... ஆமா​!

அப்படியே அவங்க கிட்ட சுதந்திர தின வாழ்த்துக்களையும் சொல்லிருங்க - அதாவது இந்திய ஆதிக்கத்திலிருந்து இந்தியாவை விடுதலை செய்து அமெரிக்க, இங்கிலாந்து, ரஷ்ய முதலாளிகளுக்கு கொண்டு போய் சேர்த்த உண்மையான காங்கிரஸ் இதுதான் என்பதால் வாழ்த்துக்களை நீங்கள் தான் சமர்ப்பிக்க வேண்டும்.

காங்கிரசுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள் -  மக்களிடமிருந்து பிடுங்கி அந்நியர்களுக்கு நாட்டைக் கொடுத்ததற்கு... உண்மையான சுதந்திரப் போராட்ட வீரர்கள் காங்கிரஸ்காரர்கள் தான் என்பதில் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா என்ன?