16.12.16

கோடிட்ட மதி – மதி என்னும் _____________ மதி


கோடிட்ட மதி – மதி என்னும் _____________ மதி 
இந்தக் கார்டூனிஸ்டை எனக்கு ரொம்பப் பிடிக்கும் - இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்பு வரை. அதற்காகவெல்லாம் அமைதியாக இருக்க முடியாது. 

கடந்த மூன்று வருடக் கார்ட்டூன்களை எல்லாம் பார்த்தீர்கள் என்றால், ஒரே பிரதி எடுத்துப் போட்டது போல, பெயர் மாறியிருக்கும் ஆனால் மேட்டர் ஒன்றுதான். 2 ஜி வேறென்ன? மன்மோகன்சிங், ராசா, கருணாநிதி, ஸ்டாலின், காங்கிரஸ், ராகுல், சோனியா, இவர்களைத் தவிர வேறு எதுவும் இல்லை. அவர்கள் ஆளும்போது அவர்களை இடித்துரைத்தாய். சரி. வாழ்த்துக்கள். 

கார்டூனிஸ்ட் என்கிறவன் இடித்துரைக்கும் பணியைச் செய்பவன். ஆள்பவர்களின் அல்லக்கை அல்ல. நன் அறிந்த வரையில் நமது நாட்டை மோடிஜிதான் ஆள்கிறார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஏதோ அவரது ஆட்சியில் இடித்துரைக்க எதுவுமே இல்லாதது போலவும் – ஆடம்பர ஆடைகள், வெளி நாட்டு உலாக்கள், போடோஷாப் செய்யும் திறன், விளம்பரத்திற்கு மட்டும் ஆயிரம் கோடிகளுக்கு மேல் செலவிட்டது, இன்ன பிற இவைகள் எதுவுமே அவர் கண்ணுக்குத் தெரியவில்லை. 

தினமணியின் முதல் பக்கத்தில் பணத்திற்குத் தட்டுப்பாடு என்று செய்தி வருகிறது – அதில் வரும் கார்டூனைப் பாருங்கள். அதில் ப. சிதம்பரத்தைப் பற்றிய கிண்டல். அவர் ஒன்றும் மிகச் சரியான நிதி அமைச்சர் என்பதற்காக எல்லாம்  நாம் அவருக்கு வால் பிடிக்கவில்லை. இப்போது என்ன பிரச்சினை? இப்போது ஏன் அவர் ப. சி. யை கிண்டலடிக்கிறார் என்பதில்தான்  ___ ___ __ மதியின் அரசியல் இருக்கிறது. ஆனால் இது மதியின் ஒருதலைப்பட்சத்தை அப்பட்டமாகக் காட்டுகிறது. இதுவே எந்த அளவுக்கு மதி, மதி _____ _____ இருக்கிறார் என்பது புரியும் [கோடிட்ட இடத்தை நிரப்பவும்]. 

ஆள்பவர்களை இடித்துரைக்கும் பணிக்கு மாறாக, எதிர்க்கட்சியை மட்டும் அவர்களோடு சேர்ந்து தூற்றுவது, ஆளும்கட்சிக்குத் துதி பாடுவது போலத்தான். அப்படி செய்கிற ஒரு கார்டூனிஸ்ட், வடிவேலு படத்தில் வரும் இரண்டு கவிஞர்கள் போல. அவர் _______________________ கார்டூனிஸ்ட் [கோடிட்ட இடத்தை நீங்களே நிரப்பிக்கொள்ளுங்கள்]. அப்படிச் செய்கிற செய்தித்தாளை பா.ஜ.க. மணி என்றே அழைத்துக் கொள்ள வேண்டியதுதானே. அப்புறம் என்ன நிமிர்ந்த நடை ....  ..... ஏன் இரட்டை வேடம்.? 

இந்தக் கார்டூனிஸ்ட்தான் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் என்கிற எந்த மரியாதையும் இன்றி, முன்யோசனையையும் இன்றி அவரைப் பற்றிய ஒரு கார்ட்டூனை வரைந்து கோடிட்டு நம்மையே நிரப்பச் சொன்னவர். எந்த அளவுக்கு ஒருவன் தரம் தாழ்ந்து போவான் என்பதற்கு இதை விட மிகப் பெரிய உதாரணம் எதுவும் தேவையே இல்லை. ஆர். எஸ். எஸ்- சின் ஊதுகுழல், பாஜகவின் ________ என்று ஒப்பனாகவே சொல்லிவிடலாம். 

இந்த மூன்று வருடத்தில் திடீரென அவருக்கு மதி வந்து, ஒரு தடவை காலில் விழும் கலாச்சாரம் பற்றிக் கிண்டலடித்திருக்கிறார். ஆஹா! என்னே வீரம் அவருக்கு.

ஜெயலிலதா இருந்த போது அமைச்சர்கள் யாருமே காலிலேயே விழாதது போலவும், இப்போதுதான் புதியாய் அமைச்சர்கள் ஒருவரின் காலில் விழுவது போலவும் வருத்தப்பட்டு, வேதனைப்பட்டு, துக்கப்பட்டு, துயரப்பட்டு, குற்றம் சாடியிருக்கிறார். 
ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரைக்கும் வராத வீரம் திடீரென முளைத்து வந்திருக்கிறது. 

சரி, இந்தக் கார்டூனுக்கு வருவோம். இத்துணை ஊழல்களை அவர்கள் செய்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் மேல் வழக்குத் தொடுக்க வேண்டியதுதானே? நீதிமன்றம் பார்த்துக் கொள்ளாதா? அல்லது அதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? 
சரி, ஒரு பிரதமர் பேசாமல் இருப்பதற்கு இவ்வளவு வாரி இறைக்க வேண்டுமென்றால், நாடாளுமன்றத்தைத் தவிர எல்லா இடங்களிலும் பேசும் தற்போதைய பிரதமரையும் விமர்சிக்க வேண்டும். இங்கே இல்லாமல் உலகம் சுற்றும் பிரதமரையும் விமர்சிக்க வேண்டும். 
ஒவ்வொரு முறையும் 1,72, 000 கோடி ஊழல் என்று சொல்கிறீர்களே, அதற்குப் பிறகுதான் 3 ஜி, 4 ஜி எல்லாம் ஏலம் போனது. அப்படியெனில் முறையே அவைகளும் 2, 72, 000 கோடியும், 3, 72, 000 கோடிகளும் அல்லவா ஏலம் போயிருக்க வேண்டும். இரண்டு ஜி அளவோடு ஒப்புமைப் படுத்தும் போது மிகக் குறைந்த அளவே போயிருக்கிறது. அப்படியெனில், 6, 44, 000 கோடி ஊழல் இந்த அரசாங்கத்தில் நடந்திருக்கிறது என்று கார்ட்டூன் போடுங்கள் சாரே. 

இப்படி ஒரே பொய்யை மீண்டும் மீண்டும் எத்தனை வருடங்களுக்குத் தான் சொல்லிக் கொண்டிருப்பீர்களோ? முன்னாள் பிரதமர் வாய் திறந்தது அவ்வளவு பெரிய குற்றமா? இத்தனை வருடமாய் காலில் விழும் கலாச்சாரம் பற்றி மௌனம் காத்துவிட்டு திடீரெனப் பேசியிருக்கும் உங்களை நாங்கள் எப்படியெல்லாம் சொல்ல வேண்டும்? 

இப்படி இருக்கிற இந்தக் கார்டூனிஸ்டை ______________________________ கார்டூனிஸ்ட் என்று சொல்வதில் தவறில்லை [கோடிட்ட இடத்தை வாசகர்களே நிரப்பிக் கொள்ளவும்].

2.12.16

அப்பா சமுத்திரமே

அப்பா! நீர் திடீரென, "மோடி செய்துவிட்டாரே என்பதனால் அதை எதிர்க்க வேண்டியதில்லை" என்று சொல்லியிருந்ததைப் படித்தேன். 

உங்கள் மேல் வருத்தம் ,எல்லாம் இல்லை. உங்களைப் போல பெரும்பான்மை  இருப்பதில்தான் வருத்தம்.

மோடி செய்து விட்டாரே என்பதனால் எல்லாம் பலரும் எதிர்க்கவில்லை. அவசர கோலமாய், என்ன, எப்படி இருக்கும் என்பதை எல்லாம் யோசிக்காமல் செய்து விட்டாரே என்றுதான் எதிர்க்கிறோம். 

பணக்காரர்களின் கைப்பாவையாக மாறிப்போய் விட்டாரே என்றுதான் எதிர்க்கிறோம்.

தகுந்த தயாரிப்பு இல்லாமல் எல்லாரையும் இழி நிலைக்கு மாற்றி விட்ட நிலையை எதிர்க்கிறோம். 

இருப்பவர் யாரென்று எல்லாருக்கும் தெரியும். கூட இருப்பவர்களை விட்டு விட்டு, தொடர்பே இல்லாத சாதாரண மக்களின் வயிற்றில் அடித்து, அலைய விடும் இந்த மன நிலையை எதிர்க்கிறோம்.

.வரும் பணத்தை எடுத்து மக்களுக்கு எதுவும் செய்யாமல் மார்க்கெட்டுகளுக்கு வழங்கத் துடிக்கும் அந்தக் கார்ப்பரேட் ஐடியாவை வெறுக்கிறோம். அதனால் எதிர்க்கிறோம்.

வரிக்கு மேல் வரி விதித்து, வருமான வரி, ஜி எஸ் டி வரி, சாலை வரி, சுங்க வரி, விற்பனை வரி, இவைகளெல்லாம் கொடுத்தாலும், இதற்கு மேல் வங்கிகளில் பணம் வந்தாலும், அதை மக்களுக்காய் பயன்படுத்தாமல், எல்லாம் தனியார் வசம் ஒப்படைக்கத் துடிக்கும் அந்த முதலாளித்துவப் போக்கை எதிர்க்கிறோம்.

இவ்வளவுக்கு மத்தியிலும், ஆயிரக்கணக்கான கோடிகளை கடனாகப் பெற்ற, வரி பாக்கி வைத்திருக்கிற முதலாளிகளை எல்லாம் விட்டு விட்டு எங்கள் கழுத்தை நெரிக்கிற இந்தப் போக்கை எதிர்க்கிறோம், கண்டிக்கிறோம்.

இதெல்லாம் எதுவுமே தெரியாதது போல புரியாதது போல - 

மோடி செய்துவிட்டதனால் மட்டுமே இது சரி என்று ஜால்ரா அடித்துக் கொண்டிருப்பவர்களைத் தான் எதிர்க்கிறோம்

நீங்கள் மோடி செய்து விட்டதனாலேயே அதில் குறைகள் இருக்கின்றன என்பதை ஒத்துக் கொள்ளத் தயங்கும் போது, மற்றவன் அதை ஏற்றுக் கொள்ள மறுப்பதற்கான இடம் தர வேண்டும். அதுதான் ஜனநாயகம். 

அப்பா சமுத்திரக்கனி,
உங்கள் பிள்ளையைக் கூட அடித்து விடக் கூடாது என்கிற காரணத்திலும், தன் பிள்ளைகள் மேல் உள்ள அக்கறையிலும் காவல் காக்கிற உங்கள் போல அவர் இருந்துவிட்டால், பிரச்சனை இல்லையே.

எழுபதுக்கும் மேற்பட்டோர் இறந்து போனார்களே. அது உங்கள் பிள்ளைகள் என்றால் .... 

சற்றுக் காத்திருக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறீர்கள்.

காத்திருப்போம்.


குறிப்பு:

என்னிடம் கறுப்புப் பணம் இல்லை.
நான் திமுக காரன் இல்லை.
நான் பாகிஸ்தான்காரன் இல்லை.
இந்தியாவின் எதிரியும் இல்லை 
துரோகியும் இல்லை.







1.12.16

இன்குலாப்


கவிஞரே 
உம்மை நினைக்கக் கூட நேரமில்லை.



என்ன செய்வது?
வங்கிக்கும், இயந்திரங்களுக்கும் இடையே  
அலையும் எங்களுக்கு 
உம்மை நினைக்க நேரமில்லை.
மக்கள் பாவலர் 
உமக்குத் தெரியும்.

ஆர்ப்பாட்டமில்லாத கவிஞன் நீர்.
அமைதியாகவே  சென்று விட்டீர்.

மனுஷங்க  மனுஷங்களாய் 
மதிக்கப்படாத வரை 
நீவிர் வாழ்வீர்.

அஞ்சலி 


18.11.16

ஆப்பரேஷன் லாலிபாப் - சிறுகதை. சுட்டது

இதை வாட்ஸ் ஆப்பில் படித்தேன். ரசித்தேன். எனவே அதை அப்படியே பதிவேற்றம் செய்கிறேன் - அப்பு 

ஏ டி எம் இலக்கிய க்ளாசிக் வரிசை.
( இது முழுக்க கற்பனைக் கதை, யாரையும் , எதையும் குறிப்பிடுவன அல்ல. அப்படி ஏதேனும் இருப்பின் அது முழுக்க தற்செயலே. இந்தக் கதையில் விலங்குகள் எதுவும் துன்புறுத்தப்படவில்லை. சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது உடலுக்குக் கேடு.)
-@-

குப்புசாமி வாத்தியார் ஐபோன் 7 வாங்கி அதை 12ம் வகுப்பு வகுப்பறைக்குக் கொண்டு சென்றார். மேசை மீது வைத்துப் பாடம் நடத்தும்போது அது காணாமல் போய்விட்டது.
வாத்தியார் நேராக ஹெட்மாஸ்டர் ரூமில் உட்கார்ந்துகொண்டார். மைக்கில் அறிவித்தார். திருட்டுப் போன என் போனைக் கண்டுபிடிக்க சில நடவடிக்கைகள் எடுக்கப்போகிறேன்.
“எல் கே ஜி முதல் 11ம் வகுப்புவரை உள்ள மாணவர்கள் அனைவரும் வரிசையாக 12ம் வகுப்பிற்குச் சென்று தாம் வைத்துள்ள அனைத்துப் பொருட்களையும் காண்பித்து விவரம் சொல்லவேண்டும்.” இதுதான் அவரின் கட்டளை.

அனைத்து மாணவர்களும் கால் கடுக்க வரிசையில் நின்றார்கள். எல் கே ஜி குழந்தைகள் அழும்போது அவர்கள் தலையில் குட்டு விழுந்தது. 12ம் வகுப்பு மாணவர்களே அமைதியாக இருக்கும்போது உங்களுக்கென்ன தடிமாடுகளா என்று வசைச் சொல்லர்ச்சனை கிடைத்தது. அவர்களிடமிருந்த சாக்லெடுகள், லாலிபாப்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

எல்லாம் முடிந்தும் போன் கிடைக்கவில்லை. லாலிபாப்பைப் பார்த்து தலையில் கை வைத்துக்கொண்டவர் போன் தொலைந்துபோன 12ம் வகுப்பை குப்புசாமி வாத்தியார் கண்டுகொள்ளவே இல்லை.

தனது போன் திரும்பக் கிடைக்கும் வரை எல் கே ஜி முதல் 11ம் வகுப்பு வரை தினம் ரெய்டு தொடரும் என்று அறிவித்தார்.

ஐபோனை லவுட்டியவர்களுக்கு தெளிவான செய்தியை குப்புசாமி வாத்தியாரின் அசாத்திய செயல்திட்டங்கள் தெரிவித்தன. ஸ்கெட்ச் நமக்கில்லை என்பதும் அந்த ஐபோனை விற்று அதில் குப்புசாமி வாத்தியாருக்கு அவர் பெயர் பொறித்த ஒரு பட்டுச் சட்டை பரிசளிக்கவும். தங்கள் செலவிலேயே அக்கம் பக்கத்து ஊர்களுக்குக் கூட்டிச் சென்று டெண்ட் கொட்டாயில் ஈஸ்ட் மென் கலர் படத்தைக் காட்டி அவருடன் கொட்டாய் வாசலில் செல்பி எடுத்துக்கொள்ளவும் முடிவு செய்தனர் 12-ஆம் வகுப்பு மாணவர்கள்.

இன்னும் கடுமையான நடவடிக்கைகள் மூலம் எல் கே ஜி மாணாக்கர்களிடமிருந்து உண்மையை வரவழைக்கப் போவதாக குப்புசாமி வாத்தியார் உச்ச ஸ்தாயியில் மேசையைத் தட்டி உணர்ச்சிகரமாக கர்ஜித்துக்கொணிருந்ததைப் பார்த்த 12ம் வகுப்பு மாணவர்கள் அவர் மூலம் வேறு எதை உருவலாம் என்று திட்டமிட்டுக்கொண்டிருந்தனர்.

12ப்பு மாணவனைப் பார்த்து உன்னைய ஏன் இன்னும்  குப்புசாமி வாத்தியார் செக் பண்ணல என்று கேட்ட எல் கே ஜி மாணவனுக்கு நம் பள்ளிக்கூடத்தின் நன் மதிப்புக்காக இதைக்கூடப் பொறுத்துக்கொள்ளமாட்டாயா என்று தலைமேல் கொட்டு கிடைத்தது.

ஏண்டா நான் என்ன கேக்கறேன்? நீ என்ன பதில் சொல்ற என்று கேட்டதற்கு, பள்ளிக்கூட வாட்ச்மென் வெயிலில் நின்று பெல் அடிக்கிறார், ஃபேனுக்குக் கீழே உட்கார்ந்து வாய்ப்பாடு படிக்க உனக்குக் கசக்கிறதா என்ற பதிலில் தலை சுற்றி மயங்கி விழுந்தான் எல் கே ஜி மாணவன்.

ஏன் தம்பி வாத்தியார் போனக் கண்டுபிடிப்பதும், திருடியவர்களுக்கு தண்டனை தருவதும் நல்லதுதானே என்று அந்த எல் கே ஜி மாணாக்கனிடம் கேட்கப்பட்டது.

என்னைப் பரிசோதித்ததையோ, என் லாலிபாப்பை வாங்கிக்கொண்டதையோ நான் குற்றம் சொல்லவில்லை. அவர் போன் தொலைந்துபோன 12ப்பை ஏன் பரிசோதிக்கவில்லை என்றுதான் கேட்கிறோம் என்ற பதில் கிடைத்தது.

பள்ளியில் படிக்காத ஆசிரியரின் ஒன்றுவிட்ட சித்தப்பா மகன்கள் நாங்கள் யாரும் பாதிக்கப்படவில்லையே? எங்களை யாரும் வரிசையில் நிற்கச் சொல்லவில்லையே ஏன் பொய்யாக செய்தி பரப்புகிறீர்கள் என்று அந்தப் பள்ளி மாணவர்களைக் கடிந்துகொண்டார்கள்.
அனைத்து மாணவர்களையும் பரிசோதித்தார்களா? இல்லை சில மாணவர்களே மீண்டும் , மீண்டும் வருகிறார்களா என்று சந்தேகம் அடைந்த குப்புசாமி வாத்தியார், பரிசோதித்து முடிந்த மாணாக்கர்களுக்கு நெயில்பாலீஷ் தடவும் ஐடியாவைக் கொண்டுவந்திருக்கிறார். போனை லவுட்டிய ஆளுக்கே அந்த காண்டிராக்டும் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.

புதிய போன் வாங்க எல் கே ஜி முதல், 11ம் வகுப்பு வரை வழுக்கி விழுந்த வாத்தியார் நிதி என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி, அதற்கு அனைவரும் நிதி அளிக்கவேண்டும் என்ற கட்டளையும் பிறப்பிக்கப்பட்டது. அந்த நிதியை வசூலிக்கும் பொறுப்பு 12ப்பு மாணவர்களிடம் அளிக்கப்பட்டது.

குப்புசாமி வாத்தியாரைப் பார்த்துப் பாராட்டிய 12ப்பு மாணவர்கள், எப்படி இவ்வளவு தெளிவான, தைரியமான முடிவினை எடுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு,

If you don't know anything, create a problem and don't solve it..
என்று ஏற்ற இறக்கத்துடன் கண்கள் விரியச் சொன்னதைப் பார்த்த 12ப்பு மாணவர்கள் அடுத்து வாத்தியார் வாங்கப்போகும் ஐபோன் 7எஸ் நமக்குத்தான் என்று நிம்மதியடைந்தனர்.
குப்புசாமி வாத்தியார் போனை கண்டுபிடிப்பாரா? 7S போன் யாருக்குக் கிடைக்கும்?
சுபம்.


17.11.16

பணம் படுத்தும் பாடு - சுடாதது [இரண்டு]

கேவலம்


கறுப்புப் பணம் வைத்திருப்போரின்
கரங்கள்
கரைபடியாத போது

வெள்ளைப் பணத்தை மாற்ற வந்த 
உழைத்துக்
காய்த்துப் போன
கரங்களில்

கறுப்பு மை பூசுவது

காத்திருந்து களைத்துப் போன
அந்த முகங்களில்
சாயம் பூசுவதற்குச் சமம்.


ஹோலி என்று போலியாக

விளக்கம் சொல்லாமல் இருந்தால் சரி!

அப்பு 
https://unmayapoyya.blogspot.in/

14.11.16

பணம் படுத்தும் பாடு – சுடாதது - கவிதை?

மாறுதல்

டாஸ்மாக் முன்புறமே
கூட்டம் பார்த்து விட்டு
வங்கிகளுக்கு முன்பு
கூட்டம் பார்ப்பது
சற்றே ஆறுதல்

கண்ணுக்கு மாறுதல்

---

வீரம்

ஜப்பானிடம்
கேள்வி கேட்கத் திராணியின்று
ஏ டி எம் – ம்மில்
‘பணம் இல்லை’ சார் என்று சொன்ன
அந்தப் பல்லுப் போன கிழவனிடம்
மல்லுக் கட்டி நிற்பதுதான் வீரம்
---

மாற்றம் – மான் கி பாத்

முன்னாள் பிரதமர்
நாட்டில் இருந்தார்
பேசுவது இல்லை.
இந்நாள் பிரதமர்
நாட்டில் இருப்பதில்லை
பேச்சை நிறுத்துவது இல்லை.
ஆருடம்
அடுத்த தேர்தலில்
பா.ச.க மீண்டும்  
ஆட்சி அமைக்கும்
அடுத்த தேர்தலில்
அவர்களிடம் மட்டும்
வாக்காளர்களிடம் கொடுக்க
செல்லும் பணம் இருக்கும்.
---


முரண்

·       உயர் நோட்டுக்களால்தான் கறுப்புப்பணம் புழங்குகிறது.
எனவே உயர் நோட்டுக்கள் தடை.
·       புதிய உயர் நோட்டாக இரண்டாயிரம் ரூப்பியா வெளியிடப்படுகிறது.
·       ஐநூறு ரூப்பியாவும் வெளியிடப்படுகிறது
·       மீண்டும் புதிய ஆயிரம் ரூப்பியா நோட்டுக்கள் வெளியிடப்படும்.
·       [மீண்டும் கறுப்புப் பணம் புழங்கும்]

---

‘நானே’ சிம்

இதுபற்றி யாருக்கும் தெரியாது.
பத்து மாதமாக நானே யோசித்தேன்.
யாருக்கும் சொல்லவில்லை.
கவர்னருக்கே தெரியாது என்றால்
பார்த்துக்கொள்ளுங்களேன்.

---

ஆதார் கார்டு 1

ஜியோ சிம்மிற்கு
ஆதார் எண் கட்டாயம்
என்ற போதே
கொஞ்சம் விழிப்பாய்
இருந்திருக்க வேண்டும்.
இப்போது
எத்தனை கோடி
ஆதார் கார்டுகளில்
மீதி இருக்கும்
எத்தனை கோடிகள்
மாற்றப் படுகின்றனவோ?
[ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் கோடிகள்
முதலீடு / செலவு செய்து ஜியோ அறிமுகம்
எல்லா நோட்டுகளும் ஏற்கனவே அவுட் அதனால்தான் ‘மீதி’]

---

ஆதார் கார்டு 2

இதோடு எல்லாம் இணைக்கப் படும்.
நீங்கள் டெபாசிட் செய்யும் பணம்.
நீங்கள் வாங்கும் தங்கம்.
உங்கள் கார்.
உங்கள் நிலமும் வீடும்.
அதோடு உங்கள் உள்ளாடைகளும்.
எதையும் மறைக்க முடியாது?
-
விக்கி லீக்சுக்கு வேலையே இல்லை!
-
கறுப்புப் பணம் ஒழிந்தது
என் டோனர் தீர்ந்தது.

9.11.16

ஊழல் ஒழிந்தது

 
ஏற்கனவே வாக்களித்தது போல மத்திய அரசு சுவிஸ் வங்கியிலிருந்து அனைத்து கறுப்புப் பணத்தையும் மீட்டு வந்தது நமக்குத் தெரியும். அந்த வங்கியில் கணக்கு வைத்திருந்த அத்துனை நபர்களின் பெயரை எல்லாம் வெளியிட்டு மிகப் பெரிய புரட்சி செய்ததை நாம் அனைவரும் அறிந்ததே. அதற்கே மிகப் பெரிய பாராட்டு விழா வைக்கலாம் என்று அனைத்துப் பத்திரிக்கைகளும் எழுதிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், மத்திய அரசு ஊழலையும், கறுப்புப் பணத்தையும் ஒழிக்க தனது அடுத்த அஸ்திரத்தைக் கையில் எடுத்திருக்கிறது.

இதுபோல ஒரு அறிவிப்பு வந்தவுடன் நேற்று எல்லா பணம் வழங்கும் தானியங்கி எந்திரங்கள் முன்பு எந்திரத்தனமாய் மக்கள். எப்படியாவது பணத்தை நூறு ரூபாய் நோட்டுக்களாக மாற்றி விட முடியாதா என்கிற ஏக்கம் தெரிந்தது.

அறைகளில் ஆயிரம் மற்றும் நூறு ரூபாய் நோட்டுக்களாக அடுக்கி வைத்திருந்தவர்கள் எல்லாரும் பீதியில் வயிறு கலங்கி ஒரே நாளில் பத்து கிலோ குறைந்து பார்பதற்கே பரிதாபமாக இருக்கிறார்கள்.

இந்த அதிரடி முயற்சிக்காக நமது சர்க்காரை பாராட்டியே ஆக வேண்டும். இனிமேல் யாரும் கணக்கில் வராத பணத்தை வைத்திருக்க முடியாது. ஒன்று பணத்தை வங்கியில் செலுத்த வேண்டும் அல்லது கோவிந்தா என்று திருப்பதியில் போட வேண்டும். நல்ல வருமானம் நமது சமஸ்தானத்திற்குத்தான்.

சரி – அதை விடுவோம் – இந்திய நாட்டில் எத்தனை சதவீதம் பேர் கறுப்புப் பணம் வைத்திருப்பான் – இரண்டு மூன்று சதவீதம் இருக்குமா? அட பத்து சதவீதம் வைத்துக் கொள்ளுங்கள். அவங்களை நமது சர்க்காரால் கண்டு பிடிக்க முடியாதா? அது எதுக்கு இந்த அதிரடி நடவடிக்கை. குப்பனும் சுப்பனுமா சுவிஸ் வங்கியில கணக்கு வைத்திருந்தான். அந்த பெயர்களை வெளியிட நமக்குத் துணிச்சல் இல்லை இதுல இது வேற?

இன்னும் ஐநூறு ரூபாய் அல்லது ஆயிரம் ரூபாய் நோட்டுகளையே பாக்காத மக்கள்தான் இன்னும் எங்கள் அருகில் இருக்கிறார்கள். இனிமேல் அதை ஒன்று சாலை ஓரங்களில் உள்ள குப்பைத்தொட்டிகளில் பார்க்கலாம். அதற்கடுத்து மொத்த வருமானமே ஐந்நூறு ஆயிரம் என்று உள்ள நபர்கள்தான் அந்த நோட்டுகளை மாற்றுவதற்கு கஷ்டப் படனும். பாவம். அதுதான் நமது பிரதமர் மன்னிப்பு கேட்டு விட்டாரே. அப்புறம் என்ன?

வெளிநாட்டில் பங்களா வைத்திருப்பவர்கள் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் இல்லையா? அவர்கள் இன்னமும் ஆயிரம் ஐந்நூறு ரூபாய் நோட்டு வைத்திருப்பவர்களா? அல்லது பவுண்ட்ஸ் / யூரோ வைத்திருப்பவர்களா?
வச்சிருக்கவன் எல்லாம் நல்லாத்தான் இருக்கான்.

இனிமே யாரு என்ன பண்ண முடியும்? இந்த நோட்டுக்களை கொஞ்சம் சாதாரண மக்கள் மத்தியில் காண்பிக்க அரசே எக்ஸ்ஷிபிஷனுக்கு ஏற்பாடு செய்யலாம். சாதாரண மக்கள்தான் பாவம். நூறு ரூபாயை வைத்து வாழ்க்கை நடத்தும் மக்கள் பாவம். காய்கறிகளை விற்கும் மக்கள் வியாபாரம் செய்ய முடியாது. தள்ளு வண்டி வியாபாரி வியாபாரம் செய்ய முடியாது. கெட்டுப் போகாத பொருள் வைத்திருப்பவர்கள் பரவாயில்லை. அழுகும் பொருட்களை வைத்திருப்பவர்கள் பாடு திண்டாட்டம்தான்.

இப்ப ஐந்நூறு ரூபா குடுத்தாக் கூட  ஒரு ஐம்பது ரூபா கிடைக்க மாட்டேங்குது. சின்னப் பிள்ளைகளைப் போல நோட்டுக்கு ஆசைப் படாம சில்லரைகளுக்கு ஆசைப்பட பழகிக்க வேண்டியதுதான். ஏன்னா பெருசுதான் பதுக்க வழி வகுக்குமாம்?

சரி என் சந்தேகம்
·         பெரிய நோட்டுதான் பதுக்களுக்கு வழிவகுக்கும்னா அப்புறம் எதுக்கு திரும்பவும் ஐந்நூறு ரூபா நோட்டு – புதுசா இரண்டாயிரம் ரூபாய் நோட்டு? ஈசியா பதுக்கவா? இரண்டாயிரம் ரூபாயையும் ஐந்நூறு ரூபாயையும் நாளை வெளியிடுவதாகச் செய்தி வருகிறதே அவைகளைப் பற்றிய விவரங்களும் செய்தித்தாள்களில் வெளியிடப் பட்டிருக்கின்றவே. ஏற்கனவே அடித்து வைத்ததால் வெளியிடுகிறீர்களா அல்லது வேறு யாருக்கும் உதவ இந்த ஏற்பாடா?

·         இன்று எல்லா நாளிதழ்களிலும் இந்தப் புரட்சி ஏழை மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் உதவி செய்யும் என்று அரசு விளம்பரம் செய்திருக்கிறது. அது எப்படி உதவும் என்று விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.



·         ஒரு மாதத்திற்கு முன்பே ஒரு பொருளியல் நிபுணரிடம் ஆயிரம் கோடிக்கு ஆயரம் ரூபாய் நோட்டு இருக்கிறது அதை மாற்றிக் கொடுத்தால் இருபத்தி ஐந்து சதவீதம் வரை கமிஷன் என்று ஒரு தொழிலதிபர் கேட்டதாகச் செய்தி வந்திருக்கிறது. அவருக்கு மட்டும் தெரிந்ததா அல்லது எல்லா தொழிலதிபர்களுக்கும் தெரிந்ததா?

 

8.11.16

மாசுவுக்கு மாஸ்க்தான் தீர்வா?


நேற்று செய்தித் தாள்கள் டெல்லியில்  மிகக் கடுமையான புகை மண்டலம் மாசுவால் சூழ்ந்துள்ளது என்று பறை சாற்றின.
பள்ளிகளுக்கு விடுமுறையாம். யாரும் வெளியில் வரக்கூடாதாம்.
உடல் நிலை பாதிக்கப் படுமாம்.

ஏன்  மாசு உருவாகிறது என்பதை விவாதித்து அதைக் குறைப்பதற்கான வேலையை விட்டுவிட்டு, மாஸ்க்குகளை விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

நிறைவாய் பட்டாசு வெடிக்கலாம். இஷ்டத்துக்கு இண்டஸ்ட்ரிகளை வைத்துக் கொள்ளலாம்.

நமக்கு வேண்டுமானால் மாஸ்க்குகளை அணிந்து கொள்ளலாம்.

பிரச்சைனையின் ஆணி வேரைப்  பார்க்காமல் நாம் அதிலிருந்து தப்பிப்பது எப்படி என்று மட்டுமே யோசிக்கும்  ஜென்மங்கள் இருக்கும் வரை
இந்த நாட்டின் எதிர்கால சந்ததி மட்டுமல்ல இக்கால சந்ததியும் இங்கே வாழத் தகுதியற்ற நிலையை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

வாருங்கள் அனைவரும் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவோம்.




3.11.16

வலி

வெறி பிடித்து 
செத்த பிணத்தை 
சுட்டுத் தள்ளும் சூரர்கள் போல,
புஸ்வானத்தைக் கூட 
அணுகுண்டை வைப்பது போல 
பார்வையிலேயே பிரளயம் செய்யும் 
அவன் நண்பர்களை 
ஒரு வாரமாய் பார்த்து
அழுது அழுது 
வீங்கிப் போன முகத்தோடு 
அவன் இருந்தான்.

பட்டாசு வாங்கினால் 
சோறு தின்ன முடியாதே என  
அவன் அம்மா 
அரிசியையே வாங்கினாள்.

வேறு வழியே இல்லை 
பிரளயத்தை வேடிக்கையாவது பார்ப்போமே 
என்று வெடிக்கும் இடம் போனான் 
அவன் கன்னத்தில்
வினையாய் வந்தது ஒரு வெடி.

அவசரமாய் அவனை 
ஆஸ்பத்தரி தூக்கிப் போக 
அனாதையாய் 
கிடந்தது 
அரிசி...

1.11.16

கர்நாடக, கேரள மாநில அரசுகளின் வயது அறுபது

கர்நாடக, கேரள மாநில அரசுகளின் வயது அறுபது என்று சொன்னால்  வியப்பாக இருக்கிறது. அதற்குள் இத்தனை ஆண்டுகள் ஓடோடி விட்டனவா?

அப்படியானால்
தமிழக
மாநில
அரசின் வயதென்ன?

கர்நாடக, கேரள அரசுகளின் கொண்டாட்டங்களை பற்றி எழுதும் தமிழ் பத்திரிக்கைகள் மருந்துக்கு கூட இதைப்பற்றி எழுதவில்லை.

தமிழர்கள் இதை நினைவு கூர்ந்தால் பிரிவினை வாதம் பேசுகிறவர்கள்,
இந்திய இறையாண்மைக்கு ஊரு விளைவிப்பவர்கள் என்று இவர்களே எழுதுவார்கள்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம்  இந்தத் தேதியன்று, தமிழ் நாட்டின் தலைநகரில் கொடியேற்றி  கூட்டங்கள் நடைபெற்றன. அவர்களெல்லாம் கண்டு கொள்ளப் படாமலே போய் விட்டனர்.

நம்மைப் பற்றி என்ன சொல்வது?
வாழ்க கர்நாடகம் ... வாழ்க கேரளம்.


29.10.16

தீபாவளி வாழ்த்துகள்

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

தீபாவளி கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
செலவு செய்யுங்கள் - கொஞ்சம் அளவோடு செய்யுங்கள்.
கடன் வாங்கி செலவு செய்வது நமக்கு உகந்தது அல்ல.
வெடிக்காமல் கொண்டாடுங்கள்.
புகை நமக்குத் பகை.


தீபாவளி கொண்டாடாத நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ஒளியின் விழாவாய் கொண்டாடுங்கள்.
இருளை அகற்ற உங்களால் ஆனதைச் செய்யுங்கள்.

தீபாவளியை எதிர்க்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ஏன் தீபாவளி நமது இனத்திற்கு எதிரான விழா என்பதைக் குறித்து
இன்னும் அதிகமாய் வெளிக்கொணர வாழ்த்துக்கள்.
எது இருள்,  அசுரர் என்பதை பற்றிய புரிதல் உண்ணும் அதிகள் தேவை.
கொண்டாடும் நண்பர்களை சிந்திக்கும் நண்பர்களாகவும் மாற்ற வேண்டுமல்லவா?

வாழ்த்துக்கள்..





19.10.16

தொழில் கொலைகள் கட்சிக் கொலைகள் ஆகுமா?

சில நாட்களாக தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் கொலை செய்யப் படுவதாகவும், எனவே அதை ஒரு போராட்டமாக முன்னெடுத்து மற்ற கட்சியைச் சார்ந்த அல்லது மதத்தைச் சார்ந்தவர்களை அடிப்பதும் விரட்டுவதும் நல்லதல்ல.
கட்சியை வளர்க்க ஆயிரம் வழிகள் உண்டு. இது சரியான வழியல்ல.

சமீபத்தில் கொலை செய்யப்பட நபர்களில் பெரும்பாலும் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறவர்கள் அல்லது பிசினஸ் செய்கிறவர்கள். தொழில் முறை காரணமாக கொலை செய்யப் படுகிறவர்களை கட்சிச்கெதிரான கொலைகளாகப் பாவிப்பது நாகரிகமற்ற அரசியல்.

15.10.16

காவிரி பிரச்சினை: அமைச்சர் ஓ.பி.எஸ். உடன் மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு

காவிரி பிரச்சினை: அமைச்சர் ஓ.பி.எஸ். உடன் மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு: நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) காலை திடீரென சந்தித்துப் பேசினார்.

14.10.16

ராமர் பிள்ளைக்கு மூன்று ஆண்டு சிறை


சுமார் ரூ.2.27 கோடிக்கு மூலிகை பெட்ரோல் விற்பனை செய்து பொதுமக்களை ஏமாற்றியதாக ராமர் பிள்ளைக்கு 3 வருட சிறை தண்டனை அளித்து உத்தரவிட்டுள்ளது எழும்பூர் நீதிமன்றம். ராமர்பிள்ளை உட்பட 5 பேருக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. 1999-2000-ம் வருடம் பெட்ரோலில் மூலிகை பொருட்களை கலப்படம் செய்ததாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர்களுக்கு 30,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
SOURCE

5.10.16

வெற்றிலைப் பாட்டியும் நானும்

எங்க ஊர்ல ஒரு பெரிய பங்களா. ஆனா அந்தப் பங்களாவுக்கு சம்பந்தமே இல்லாத மாதிரி ஒரு பாட்டி அங்க இருக்கும். அதுல தங்கி இருக்குற ஆள் பயங்கரமான ஆளு. பாக்குறதுக்கு பயமாவெல்லாம் இருக்காது. அட்டகத்தி மாதிரிதான். ஆனா அவரைப் பத்தி அப்படி ஒரு பில்ட் அப். பல பேரை ஏமாத்திதான் அந்த இடத்தை வாங்கினதாவும். பாட்டிய நம்பி கடன் கொடுத்தவனை எல்லாம் ‘போட்டுட்டு’ அந்த இடத்தையே வாங்கினதாவும் பேச்சு இருக்கும். பாட்டியும் பேசியே கடன் வாங்கிரும். அது பேசுனா அப்புடிப் பேசும். நம்புற மாதிரி வேற பேசுமா. உங்ககிட்ட நீங்க ரெண்டு நிமிஷம் பேச விட்டா நீங்களே கடன் குடுப்பீங்க.

அந்தப் பங்களாவுக்கு காம்பவுண்டு எல்லாம் கிடையாது. இப்ப அந்தப் பாட்டிக்கு வயசு ஆயிடுச்சு. அது நடக்கிறதே அபூர்வம். அது யாருகிட்டயும் பேசுறது எல்லாம் இல்லை. ஜிகிர் தண்டா பாட்டி மாதிரி. அது பாட்டுக்கு வெளில வந்து எப்போதும் உக்காந்து வெற்றிலை இடிச்சுக்கிட்டே இருக்கும். அப்புறம் வெற்றிலையை குதப்பித் துப்பிக்கொண்டே இருக்கும். அதுக்கு அதைத் தவிர வேற வேலையே இல்லை. அந்த இடமே இரத்தக்காடாய் கிடக்கும். அதுவும் அது பையனும்  பண்ணுன பாவத்தின் அடையாளமா அது தெரியும்.

ஆனாலும் அந்தப் பாட்டியை எனக்கு ரொம்பப் பிடிக்கும். யாரும் அவ்வளவு சீக்கிரம் அந்தப் பாட்டிக்குப் பக்கத்தில போட முடியாது. பாட்டி மேல உள்ள பயம் எல்லாம் இல்லை அவங்க பையனுக்கு பயந்துகிட்டு எவனும் அது பக்கத்துலேயே போறதில்லை. நான் மட்டும் ஸ்கூலுக்குப் போறப்ப தைரியமா கொஞ்சம் ஓரத்தில நின்னு அந்தப் பாட்டியைப் பார்த்து சிரிப்பேன். உள்ளேருந்து ஏதாவது சத்தம் வந்தா ஒரே ஓட்டம். அப்புறம் பக்கத்துல போவேன். அவங்க பயன் வந்தா ஓடுவேன்.

பாட்டிதான், ‘பயப்ப்படுமா நில்லுடா’ என்னைய மீறி அவன் ஒன்னும் பன்ன மாட்டான்னு சொல்லும். பாட்டிக்கு அவ்வளவு செல்வாக்கு இருக்கும் அப்படின்னு நான் நினைச்சேன். ஏதோ பெத்த கடமைக்கும், அங்கங்க கடன் வாங்கி அவருக்கு பணம் சேர்த்துக் கொடுத்த கடமைக்காக அந்தப் பாட்டிக்கு கஞ்சி ஊத்துறார்னு லேட்டாதான் தெரிஞ்சிச்சு. அதனால என்ன? பாட்டியே சொல்லிருச்சுன்னு நானும் தைரியமா நின்னேன். நிப்பேன். அவரும் முறைச்சாரு. ஒடுறான்னாரு. இரட்டைக்கரைக் காரரு பையன்தானே. நீயெல்லாம் இங்க வரக் கூடாது ஓடுறான்னாரு. அப்புறம் பழகிருச்சு. அப்புறம் ஒன்னும் சொல்றது இல்ல.

ஸ்கூல் இல்லையின்னா அப்புறம் அங்கதான் இருந்தேன். நாளாக நாளாக நமக்கு ஊருக்குள்ளே ஒரே மரியாதை. எவனும் போகத் துணியாத இடத்துக்கு நான் போயிட்டேன். அதுனால அங்க ஏதாவது தப்புக் காரியம் பண்ண ஐயாவைப் பாக்கனும்னா நம்மகிட்டதான் வந்து கேப்பாங்க.

நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு. திடீர்னு ஒரு நாள் காலையில போறேன் நைட்டோட நைட்டா காம்பவுண்டு போட்டாங்க. அங்கங்க ஆளுக துப்பாக்கியோட நிக்காணுக. நான் போறேன். விட மாட்டேங்கிறாங்க. எட்டி அந்தப் பாட்டி இருக்குற இடத்தைப் பாக்கேன். அது எம்ப்டியா இருக்கு. ஒன்னும் புரியல. என்ன ஆச்சுன்னு தெரியலை. கேட்டா பதில் சொல்ல மாட்டேங்கிறாங்க.

பத்து நாளாச்சு. ஒண்ணுமே தெரியலை. துப்பாக்கிக்காரன் அப்படியே இருக்கான்க. ஊரெல்லாம் ஒரே பேச்சு – கடன் குடுத்த யாரோ வந்து பாட்டிய வெட்டிப் புளந்துட்டான் பேச்சு மூச்சு இல்லாமக் கிடக்குங்கிறான். இன்னொருத்தன் பாட்டியே இருட்டுல வெத்தலைக்குப் பதில ஏதோ பூச்சிய முழுங்கி அது தொண்டையில அடைச்சுக்கிச்சுங்கிறான். நல்லா இருக்கப்பவே நீங்களல்லாம் பங்களாப் பக்கம் வர மாட்டிங்களே உங்களுக்கு இதெல்லாம் யாருடா சொன்னான்னு கேட்கத் தோனுச்சு. உள்ளே போனப்பல்லாம் எத்தனை பேர கெத்தாப் பாத்தேன். இன்னைக்கு அவன் எல்லாம் சிரிக்கான். ஆனா இது இல்லைன்னு சொல்ல எனக்கு ஒன்னும் தெரியலையே. கைவசம் வேற ஆதாரம் இல்லை. எனக்கு வேற ஒரே அவமானமாப் போச்சு.

என் பிரண்டு ஒருத்தனைப் பாக்கப் போனேன் – என்னாடா, நீதான் பாட்டிக்கு ஏதோ குடுத்து அது படுத்த படுக்கையாக் கிடக்காம்னு குண்டைத் தூக்கிப் போட்டான். ஆகா ! இது நல்லதுக்கு இல்லை. என்ன ஆனாலும் இன்னைக்கு எப்படியாவது போயே ஆகணும்னு பங்களா பக்கம் வந்து நின்னேன்.

எப்படியாவது உள்ள போயே ஆகணும்னு விடாப் பிடியாய் கேட்டுலே கிடந்தேன். இருந்தாலும் விடலை. எப்போதும் வெளியே விருட் விருட்டுன்னு போற பாட்டி பையனை வேற காணோம். அழுது கெஞ்சிக் கூத்தாடி கேட்டுகிட்ட போனப்ப பாட்டி பயன் வந்தான். சாப்பிடக் கூப்பிட அந்த நேரம் பாத்து என் ஆத்தா வர, அதைப் பாத்தோன, பாட்டி பையன் டே உள்ள போடா – ன்னார். எங்க ஆத்தா என்னை வஞ்சுட்டுப் போச்சு.

வெளில வேடிக்கை பாத்தவன எல்லாம், கெத்தாப் பாத்துட்டு நான் உள்ளே போனேன். பாட்டி எச்சி துப்புற எடத்துல ரத்தம் காயாம இருக்க மாதிரியே தெரிஞ்சுச்சு. பங்களாவுக்குள்ள போனேன். உள்ள விட்டுட்டு வெளில கேட்டப் பூட்டிட்டான் அந்த மீசைக் காரன்.

உள்ள போய் அந்தப் பாட்டியைப் பாத்த எனக்கு ஒன்னும் புரியலை. மயக்கம் போட்டு விழுந்தேன். யாரும் உதவிக்கு வரலை.

நானும் கதவைத் தட்டிகிட்டே இருக்கேன். மீசைக் காரன் தொறக்குற வழியைக் காணோம். பாட்டியைப் பாத்துட்டு அது என்ன நிலைமையில இருக்குன்னு வெளியில சொல்லனும்னு தோணுது. என்னைய ஏன் அடிச்சு வச்சாங்க? நான் என்ன பண்ணினேன்? எதுவும் புரியலை. இன்னியோட மூணாவது நாள் நான் உள்ள வந்து. நிச்சயம் என் ஆத்தா வந்துட்டுப் போயிருக்கும். இல்லை அங்கேயே கிடக்கும். இப்பப் பாட்டியை நான்தான் நல்ல்லாப்ப் பாத்துகிறேன்னு பேசுவாங்க. என் ஆத்தாதான் பாவம். உள்ளே என்ன நடக்குதுன்னே தெரியாம கிடக்கும்.

கதவைத் தட்டித் தட்டி கை வீங்கி,. சாகப் போகிறேன் என்கிற நினைவோடு நான் அப்படியே மயங்கி விழுந்திருக்கிறேன்.. ஒன்று மட்டும் புரிந்தது அந்தப் பாட்டியின் பையன் அட்டகத்தியெல்லாம் இல்லை.