29.7.11

ராதிகா, ஜெயலலிதா, மம்தா

கடந்த மே மாதம் தமிழகத்திலும் இந்தியாவின் பல மாநிலங்களிலும் சட்ட மன்றத் தேர்தல் காய்ச்சல் தீவிரமாக இருந்த போது கனடாவில் பாராளுமன்றத் தேர்தல் நடை பெற்றது.  அதில் இந்தியா-இலங்கையைத் தவிர ஒரு பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிற முதல் பெண் – முதல் தமிழர் – அவர் ராதிகா சிற்சபையேசன். அவர் Sacarborough-Rouge River தொகுதியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
 
மே மாதம் வெளிவந்த தேர்தல் முடிவுகளில் இங்கேயும் பெண்கள் முக்கியத் துவம் வாய்ந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள் – செல்வி ஜெயலலிதா மற்றும் மம்தா பாநேர்ஜி வெற்றி பெற்றிருக்கிறார்கள். செல்வி ஜெயலலிதாவின் வெற்றியைக் காட்டிலும் மம்தாவின் வெற்றி மிகவும் ஒரு விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏறக்குறைய முற்பத்து  நான்கு ஆண்டுகள் பதவியில் இருந்த இடது சாரிகளை பதவியிறக்கம் செய்திருக்கிறார்.

இவர்களின் வெற்றி வெளியில் தெரிவதற்கு முன்பே ராதிகாவின் வெற்றி வெளிவந்து விட்டது. இருபத்தி மூன்று ஆண்டுகளாக லிபரல் கட்சியிடமிருந்த இடத்தை NDP பிரதிநிதியாக ராதிகா பெற்றிருக்கிறார். அவரின் கன்னிப் பேச்சு மூன்று மொழிகளை உள்ளடக்கியதாக இருந்தது. கனடாவின் பாராளுமன்றத்தில் தமிழில் உரையாற்றிய பெண்.

மக்களுடைய விருப்பத்தின் பேரில் முப்பது வயதுக்கு முன்பே பாராளுமன்ற உறுப்பினராகி இருக்கும் ராதிகாவைப் பின்பற்றி இன்னும் நிறைய பெண்கள் – அரசியலுக்கு வர வேண்டும். “மாற்றம்’ வேண்டும் என்கிற அதே முழக்கத்தை முன்வைத்தே NDP நிறைய இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது [எதிர்க் கட்சியாக].

 • நமது ஊரிலும், பள்ளிக் கல்லூரிகளில் மாணவர் பருவத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண்கள், அதற்குப் பிறகு எங்கேயோ காணாமல் போய் விடுகிறார்கள். அதைப் பொறுத்த வரை ஆண்களும் அப்படித்தான். 
 • ராதிகாவின் தொகுதியில் நீண்ட காலம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த, 'டெரெக் லி' இடமிருந்து பதவியைக் கைப் பற்றியிருக்கிறார். நீண்ட நாட்களாக தான் இருந்து விட்டதாகவும் மாற்றம் தேவை என்று தான் போட்டியிடாமலும் இருந்தார் டெரக். இங்கே கலைஞரை விட்டால் வேறு யாரும் இல்லை என்கிற நிலை இருக்கிறது. அவரும் அடிக்கடி அரசியலிலிருந்து விலகுவதாக அறிவிக்கிறார் - ஆனால் ஒரு போதும் நடப்பதாய்த் தெரியவில்லை. 
 •   எனவே ஆண்கள் பெண்கள், தங்கள் தொகுதியில் சமுதாய நோக்கில் வலம் வரும் இளைஞர்கள் மக்களால் கவனிக்கப் படுவார்கள் - நிச்சயமாய் -  
 • அரசியல் நாகரிகம் என்பது தமிழகத்தைத் தவிர பல இடங்களில் இருக்கிறது. ராதிகா, தனது முதல் உரையில் சபாநாயகரை வாழ்த்துகிறார். அந்தத் தொகுதிக்கு உழைத்த எதிர்க் கட்சி உறுப்பினரை நினைவு கூர்கிறார். மம்தாவின் பதவி ஏற்பு விழாவிற்கு ஜோதி பாசு நேரில் வருகிறார்.  இங்கே தான் நாகரிகம் என்பதே இல்லை -
 • அரசியல் என்பது சாக்கடைதான். ஆனால் உண்மையான நோக்கமும், தனது வாழ்வின் சிறு வயதிலிருந்தே உடைய சமூக நோக்கை தொடர்ந்து வெளிக் காட்டும் யாரையும், எந்த மக்களாக இருந்தாலும், யாரும் கை விட்டு விட மாட்டார்கள் என்பதே ராதிகாவின் வெற்றி காட்டுகிறது. மாற்றம் விரும்பும் பெண்கள் மாற்றம் கொண்டு வருவதற்குத் தங்களைத் தயார் படுத்துவதும் அவசியம். 

கடந்த வாரம் ஹில்லரி கிளிண்டன் சென்னை வந்தார் அரசு முறைப் பயணமாக வந்தார். ராதிகா அரசு முறைப் பயணம் மேற்கொள்ள இயலாது. தமிழக அரசு அவரை அழைத்து தமிழரை பெருமைப் படுத்த வேண்டும். ஈழத் தமிழர் சாகும் போதுதான் குரல் கொடுக்க வில்லை. நமக்கு புகழ் ஈட்டும் பொது கொண்டாடவாவது வேண்டாமா?

28.7.11

சமச்சீர் - ஒரே தீர்வு ஓராண்டு விடுமுறை

 சமச்சீர் கல்வி வேண்டாம் என்று சொல்கிறவர்கள் முன்வைக்கிற வாதம் இரண்டுதான்.
 1. ஒன்று - அது தரம் அதிகமானதாக இருக்கிறது.
  • தரம் அதிகமானா நல்லதுதானே என்று கேட்கிற நல்லவர்களே - அவர்கள் அப்படியிருந்தும் ஏன் வேண்டாம் என்கிறார்கள் என்கிற கேள்வியையும் கேட்க வேண்டும்?
  •  அரசு பள்ளிகளில், இப்போது உள்ள படத் திட்டத்தையே ஒழுங்கா நடத்துவதற்கான அருகதை ஆசிரியர்களுக்கு இல்லை- இதுல சமச்சீர் கல்வி வேற....
  • அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை; சில இடங்களில் போதுமான வசதிகள் இல்லை. பல அரசுப் பள்ளிகளில் கட்டிடங்களே இல்லை...
  • அரசு ஆசிரியர்கள் அதிகமா சம்பளம் வாங்கிட்டு வேலை செய்யுறது இல்லை.
  • அதனால் பஞ்சு மூட்டை தூக்குறவங்கிட்ட இரும்பு மூட்டையைக் குடுத்த வேலைக்கு ஆகுமா? 
  •  இதற்கெல்லாம் என்ன காரனம்னா ஆசிரியர்கள் தான். ஆசிரியர்கள் தேர்தலின் போது வேலை செய்வதால் அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது. ஒழுங்கா பாடம் எடுங்கன்னு சொல்லத் தயங்குது. மற்ற எல்லா அரசு அலுவலகங்களிலும் எல்லாரும் காலை முதல் மாலை வரை கடமை தவறாமல் வேலை செய்கிராகள். ஆனால் ஆசிரியர்கள் மட்டும் வேலை செய்வது இல்லை. அவர்கள் பலம் வாய்ந்தவர்கள் என்பதால் யாரு அவர்களிடம் எதுவும் சொல்ல முயலுவதில்லை. ஆனால் அவர்கள் மீது கை வைக்கத் துணிந்தவர் அம்மா மட்டும்தான்.
   2. இரண்டு - தரம் மிகவும் கேவலமாக இருக்கிறது
   • என்னா தரம் கேவலமா இருக்கு?
   • 'திடப்' பொருள்தான் உருகும் 'வாட்டர் melts ' ன்னு போட்டிருக்கு அது தப்பு -- அப்புறம் கலைஞர் ஒரு கவிஞர் னு போட்டிருக்கு. இது போல இன்னும் நிறைய..
   • நிறைய அறிவியல் உண்மைகள் போடாமல் இருக்கு - அம்மா ஒரு திரைப்படக் கலைஞர் ...
   • தனியார் பள்ளிகளில் சமச்சீர் கல்வியின் தரத்தை விட அதிகமான தரத்தில் இருக்கிறது. அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த தனியார் பள்ளிகளின் தரத்தை குறைப்பதா...
   • தனியார் பள்ளி ஆசிரியர்கள் பாதிச் சம்பளம் வாங்கிக் கொண்டு ஒழுங்காகப் பாடம் எடுக்கிறார்கள். இரும்பு தூக்குறவங்க கிட்ட பஞ்சு மூட்டை தூக்கச் சொல்றது நியாயமா? மேலும்அவர்களின் வேலையில் கைவைக்க யாரும் பயப்படுவது இல்லை என்பதனால் அவர்கள் ஒழுங்காக இருப்பார்கள். எனவே தனியார் பள்ளிகளில் நாம் தலையிடாமல் அவர்கள் விருப்பப் படி ....... நடத்த அரசு உதவ வேண்டும். எனவே சமச் சீர் கல்வி தேவையில்லை.

   அதனால் எப்படிப் பாத்தாலும் சமச் சீர் கல்வி ஒன்னும் சமமா இல்லைன்னு தெரியுது.
   என்ன செய்யனும்னா - சமச்சீர் கல்வியைத் தடை செய்யணும்.

   இதோட முடியலை - அன்பு மக்கா
   இதனால என்ன சொல்ல வர்றேன்னா

   - அரசு ஆசிரியர்கள் தரம் உயர்ந்த பாடத்தை நடத்தாமல் இருப்பதைவிட, தரம் குறைந்த பாடத்தை நடத்தாமல் இருப்பதே மேல்.

   - பணம் கொடுத்துத்தான் நாம் கல்வியைப் பெறமுடியும் - அப்போதுதான் ஒழுங்கான கல்வியைப் பெற முடியும்.

   - ஆக எது எப்படி இருந்தாலும், யார் ஆட்சிக்கு வந்தாலும், யாரும் ஒன்னும் ............ முடியாது...- இப்போது இருப்பதே இருக்கும் - எப்போதும் அப்படியே நடக்கும்.

   - மாற்றம் என்பதெல்லாம் விலங்குகள் தத்துவம்.

   இறுதியாக இதற்கு ஒரே தீர்வு ---

   அம்மா எதிர்கட்சித் தலைவியாக இருந்த போதே சமச்சீர் கல்வித் திட்டத்தை பற்றி பேசியிருக்கிறார்கள். எனவே வரலாற்றின் பதிவுகளில் அம்மாதான் சமச்சீர் கல்வியை அறிமுகப் படுத்தியதாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒரே குறிக்கோள். எனவே நிச்சயமாய், இது அடுத்த ஆண்டுதான்.... அம்மாவின் படத்தோடு சமச்சீர் பாடத்திட்டத்தில் அம்மா பெயர் இருக்க வேண்டும் அதுவரை நாம் காத்திருக்க வேண்டும்.

   அதற்கு...

   இரண்டு மாதங்கள் முடிந்துவிட்டது. மாதத் தேர்வுகள், மிட்-டெர்ம்  தேர்வுகள் எல்லாம் இந்நேரம் முடிந்திருக்க வேண்டும். இனிமேல் இதற்கான அவகாசமேல்லாம் கிடையாது என்பதனாலும், மாணவர்கள் சமச்சீர் கல்வியைப் பின்பற்றுவதைக் காட்டிலும், படிக்காமல் இருப்பதே மேல் என்று அரசு நினைப்பதாலும், இதைப் பற்றிய அக்கறையை, தமிழக வெகு சனம் வெளிப் படுத்தாமல் இருப்பதாலும், அரசுக்கு சரியான வழி காட்ட ஆட்கள் இல்லைஎன்று தமிழக அரசின்    வக்கீலே தனது தனிப் பட்ட கருத்தாக வெளிப் படுத்தியிருப்பதாலும், இதற்குப் பிறகும் நாம் மாணவர்களை நாம் வதைக்க முடியாது என்பதாலும், [சும்மா இருக்குறது எவ்வளவு கஷ்டம் - அதுவும் மாணவர்கள்... ] இதற்கு ஒரே தீர்வாக - ஒரு ஆண்டு விடுமுறை கொடுத்து இந்தச் செயலை அம்மா செய்ததாக வரலாற்றின் பக்கத்தில் இடம் பிடித்தால் நன்றாக இருக்கும்.


   பின்குறிப்பு:

   இக்கட்டுரையில் உண்மை பொய் இரண்டும் கலந்து இருக்கிறது. செய்தியும் கேலியும் சேர்ந்து இருக்கிறது.
   எழுதப்பட்ட கருத்தில் நீங்கள் ஏதாவது ஒன்றைக் கொண்டிருந்தால் வருந்த வேண்டாம்.
   நீங்கள் அரசு ஆசிரியராக இருந்தால் வருத்தப் பட வேண்டாம்.
   [இதெல்லாம் சும்மா ... உள்ள ஒன்னும் இல்லைங்கோ ... கோ .... கோ...]

   26.7.11

   விபத்துகள் - அணு உலை - தீவிரவாதம்

   • அணு உலை பற்றிய பல விவாதங்கள் இன்னும் ஒரு முடிவுக்கு வருவதாய் இல்லை.
    • வளர்ச்சியடைந்த நாடுகள் தங்கள் தொழிழ் நுட்பத்தால் எதையும் சாதித்து விட முடியும் என்ற மமதையோடு இருந்தவர்களுக்கு வரிசையாக ஒன்று மாற்றி ஒன்று வந்து கொண்டே இருக்கிறது. ஜப்பானில் ஆரம்பித்தது - நில நடுக்கத்தால் வந்தது வினை. சில ஐரோப்பிய நாடுகள் முழித்துக் கொண்டன. ஜெர்மனி அதில் முதல் நாடாய் தெரிவித்தது. இத்தாலியில் மே மாதம் நடந்த பொது வாக்கெடுப்பில் மக்கள் அணு உலைக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள். [பொது வாக்கெடுப்பு எல்லாம் நம் ஊரில் நடக்குமா என்ன?] ஆனால் நாம் இப்போதுதான் அணு ஆயுத ஆலை அமைப்பதில் தீவிரமாக இருக்கிறோம். மிகவும் தரமான பொருட்களைத் தேர்ந்தெடுத்து, மக்கள் வசிக்காத பகுதிகளை தேர்ந்தெடுத்து  என்று .... பல வழிகளில் திட்டமிடும் அந்த நாடுகளே ஒதுங்கிப் போக வழி தேடும் போது நாம் இன்று எப்படித் திட்டமுடியும் என்பதை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டியிருக்கிறது?
   • இரயில் விபத்துக்கள் 
    • உலகத்தில் மிக நீளமான பாலத்தை கடல் மீது கட்டியிருக்கும் சீனாவில் நேருக்கு நேராக ரயில் மோதியிருக்கிறது. இந்தியாவில் இது நிறைய நடக்கிறது. என்ன அங்கே புல்லட் ரயில் மீது விபத்து நடக்கிறது. இங்கே இன்னும் நூறு கிலோமீட்டர் வேகத்தில் போகிறதே ரெகார்டாக இருக்கிறது. அப்படி இருந்தும் இங்கே விபத்துகள் பல்கிப் பெருகுவது எதனால்?
   • தீவிரவாதம் 
    • ஆண்டேர்ஸ் ப்ரைவிக் - ஏறக்குறை என்பத்தி ஐந்து பேரை தனி ஆளாக தேடித் தேடி சுட்டுக் கொன்றிருக்கிறான், கடந்த வெள்ளிக் கிழமை. 'ஐரோப்பிய நாடு பல பண்பாடுகளை உள்ளடிக்கிய நாடுகளாக மாறிக் கொண்டிருப்பதாகவும், ஐரோப்பிய நாடுகள் தங்களது தேசிய, பண்பாட்டு அடையாளங்களை இழந்து வருவதாகவும்' கூறி தனது கொலைகளுக்கு காரணம் கற்பித்து இருக்கிறான். இதன் மூலம் ஈழ அமைதிப் பேச்சுவார்த்தை மட்டுமல்ல, மிகவும் அமைதியான நாடு அனைவருக்கும் ஆதரவு கொடுக்கும் நாடு என்று எண்ணப்பட்ட நாட்டில் இது நடந்திருக்கிறது. தொடர்ந்து மும்பையில் தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு எந்தத் தீவிர வாத அமைப்பு காரணம் என்று தெரியவில்லை ஆனால் ஒவ்வொரு குண்டு வெடிப்பிலும் இழப்பு இரண்டு பக்கத்திற்கும்தான். 
   இதனால் அறிவது என்னவென்றால்

   - நம்மிடம் அணு உலை எதிர்ப்பு எப்போது வருமென்றால் நாம் அணு உலை அமைத்து அதில் விபத்துகள் வந்து அதனால் மிகப் பெரிய இழப்புகள் வந்தால்தான் நாம் அணுஉலை எதிர்ப்பு என்பது நமக்கெல்லாம் கனவாகும்.
   - முன்னேறிய நாடுகளைப் போல தொழில் நுட்பத்தில் முன்னேறி முன்னூறு கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் போனால்தான் எப்போதாவது விபத்து ஏற்படும். இல்லையெனில் இப்போது போல அடிக்கடி ஏற்படும்.
   - நாமும் நார்வேயைப்போல ஏற்கனவே அமைதியான நாடு என்று பெயர் எடுத்திருப்பதானால், இங்கேயும் தீவிர வாதம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அதனை இங்கே அரசியல் வாதிகளும் வளர்க்கிறார்கள்.

   முடிவாக ...

   • முதலாவது நிகழ்வில் இயற்கையின் சதியினால் மக்கள் உயிரிழக்கிறார்கள் 
   • இரண்டாவது நிகழ்வில் , நமது கவனக்குறைவால் மக்கள் உயிர் இழக்கிறார்கள் 
   • மூன்றாவது நிகழ்வில் நமது அறிவீனம், திமிர், இவைகளினால் உயிர் இழக்கிறோம். 
    • ஈஸ்ட் அல்லது வெஸ்ட் எலாம் ஒரேமாதிரிதான் - சின்ன வித்தியாசம்... அது நமக்கே தெரியும்.

   24.7.11

   கலைஞர் - சொன்னதும் சொல்லாததும்

   கலைஞர் சொன்னதும் சொல்லாததும் எழுதலாம் என்று அவர் பேசியதைப் பார்த்தவுடனேயே தோன்றியது.
   • சொன்னது - "நமக்கு நாமே தேடிக் கொண்ட முடிவு இது. நான் உணர்ந்த காரணத்தால்தான் இதைச் சொல்லுகின்றேன்." [சொல்லாதது] - கனிமொழி மாட்டிக்கொள்ளவில்லைஎன்றால் நான் உணர்ந்திருக்க முடியாது.
   • சொன்னது - "கட்சி புண்பட்டிருக்கிறதென்றால், நான் புண்பட்டிருக்கிறேன்." [சொல்ல வந்ததது] - நான் புன்பட்டிருக்கிறேன் என்றால் கட்சி புண்பட வேண்டும்.
   • சொன்னது - "அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி நாம் பதவிகளுக்காக பவுசுகளுக்காக ஆடம்பரங்களுக்காக அரசியலுக்காக பதவிகளைப் பெற்று அந்த அரசியலை அதற்குப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல;" [சொல்லாதது] - நான் பதவிக்கு வர வேண்டும், நான் அனுபவிக்க  வேண்டும், நான்.... நான் .....
   • சொன்னது - "இப்போது வெற்றி பெற்றிருக்கின்ற அ.தி.மு.கவின் வெற்றியில் கொள்கை நிர்ணயிக் கப்பட்டுள்ளதா என்று கேட்டால் ஒரு முட்டாள்கூட, ஆமாம் அந்தக் கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்று சொல்ல மாட்டான்." [சொல்ல விரும்பாதது] - மறந்தும் கூட தி. மு. க. ஏன் தோற்றது என்று ஒரு முட்டாளிடம் கூட கேட்டுவிடக் கூடாது - 
   • சொன்னது - "நமக்குக் கிடைத்திருக்கின்ற தோல்வி, நம்முடைய கொள்கைக்கு, நம்முடைய இலட்சியத்திற்கு, நம்முடைய எதிர்காலத்திற்கு, நம்முடைய சந்த தியினருக்கு, நம்முடைய வருங்கால தலைமுறைக்கு கிடைத்திருக்கக்கூடிய தோல்வி என்பதை நாம் மறந்துவிடக் கூடாது." [சொல்ல விரும்பியது] - எனக்குக் கிடைத்திருக்கின்ற ..., என்னுடைய குடும்பத்திற்கு ....., எங்கள் ......, என் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு...., என் வருங்காலத் தலைமுறைக்கு கிடைத்திருக்கின்ற தோல்வி என்பதை நாம் மறந்து விடக் கூடாது...
   • வருந்திச் சொன்னது - "ஏடுகளை ஒவ்வொரு நாளும் புரட்டினால், படிக்க முடியாத அளவிற்கு அதை படித்து முடிக்கலாமா, வேண்டாமா என்கின்ற அளவிற்கு அய்யுற்று, அதை கீழே எறிந்துவிட்டு வருகின்ற அளவிற்கு திமுக தோழன், தொண்டன், தன்னுடைய ரத்தத்தைக் கொட்டி வளர்த்தானே இந்த இயக்கத்தை வளர்த்த அந்தத் தொண்டன் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கின்றான், இவ்வளவு பெரிய தோல்வி நமக்கு வந்துவிட்டதே என்று." [சொல்ல விரும்பாதது தொண்டன் சொல்வதை] - இவ்வளவு பெரிய தோல்வி கலைஞரால் நமக்கு வந்துவிட்டதே என்று.
   • ...
   •  இதுக்கு மேல எழுத எனக்கு பொறுமையில்லை. ஆனால் சொல்லாததும் சொல்ல விரும்பாததும் இதுதான் - தான் எப்போது தன் அரசியலிலிருந்து ஓய்வு பெற்று ... [பெறுவாரா ...] ஸ்டாலினுக்கு வழி விடுவார் என்பதை. 
   • அம்மாவை நம்பியே நான் இதை எழுதியிருக்கிறேன் ...!
   நன்றி - தினகரன் நாளிதழ் - ஜூலை 24 பக்கம் 5

    

   21.7.11

   சமச்சீரும் சாணக்கியத்தனமும்

   • கலைஞர் கருணாநிதி அரசியல் சாணக்கியர் என்றும், அரசியல் செய்வதில் அவரைப் போல யாரும் இல்லை என்றெல்லாம் நிறையப் பேர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அனால் நடப்பதைப் பார்த்தால் அதெல்லாம் ஒரு சுக்கும் இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அவர் இன்றைய முதல்வரிடமிருந்து நிறைய அரசியல் கற்றுக் கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது.
   • இன்றைய முதல்வர் எதைச் செய்தாலும் தமிழக மக்களின் நலுனுக்காகவே செய்வதாகவே அனைவரும் இன்றைக்குப் பேசுகிற அளவுக்குச் இந்த எழுபது நாட்களாக எல்லாரையும் பேச வைத்திருக்கிறார் என்றால் - இதைத் தவிர வேறன்ன வேண்டும் ஆதாரம்.
   • புதிய சட்ட சபைக்குச் செல்வதில்லை. ஆனால் அதில் உள்  நோக்கம் எதுவும் இல்லை என்று அவர் சொல்லுகின்றார். தமிழகத்தில் சிறப்பான ஆட்சியைக் கொடுப்பதற்கு இது தடையாக இருக்கும் என்று சொல்லுகிறார் - வரிந்து கட்டிக் கொண்டு எல்லாரும் சரி என்று எழுதுகிறார்கள்.
   • சமச்சீர் கல்வி என்பது தரமாற்று இருக்கிறது என்பதற்காகத் தான் இந்தத் திட்டத்தை ரத்து செய்வதாக சொல்லுகிறார்கள் அம்மா. அது சரிதான் - அதில் வேறெதுவும் உள்குத்து இல்லை என்று எல்லாரும் நம்புகிறார்கள் - எல்லாரும் எழுதுகிறார்கள். 
   • சமச்சீர் கல்வியின் திட்ட ஆய்வுக் குழு என்பதில், உலகின் மிகச் சிறந்த கல்வியாளர்கள் திரு. ஜெயதேவும், திருமதி. ஒய். ஜி. பார்த்தசாரதி போன்றவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதும், இவர்கள் மிகவும் காத்திரமாகப் படித்துப் பார்த்து சமச்சீர் கல்வி தரமற்றது என்று சொல்லுகிறார்கள். இப்படிப் பட்ட கல்வியாளர்கள் முன்பே கருணாநிதி அவர்களால் சேர்க்கப் பட்டிருக்க வேண்டும். அப்போதுதானே சாணக்கியர். இன்று அவரே உயர் நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றித் தரவேண்டுமென கூழைக் கும்பிடு மட்டும் போடவில்லை அப்படியாக தமிழக முதலமைச்சருக்கு அறிக்கை விட்டிருக்கிறார் - முன்னாள் முதல்வர். அவர்  நியமித்த பாடத்திட்டக் குழுவின் ஆட்களைப் பாருங்கள் - ஐ.ஐ.டி. யின் இயற்பியல் பேராசிரியர், திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் வேதியியல் பேராசிரியர் போன்றவர்களை  வைத்து என்ன செய்ய முடியும்?
   • யாரைப் பார்த்தாலும் சமச்சீர் கல்வித்திட்டம் தரம் வாய்ந்ததாக இல்லை என்ற ஒரு குற்றச் சாட்டை வைக்கிறார்கள். படித்துப் பார்த்தவர்கள் குறைவு.  அதைப் பற்றிய முழு விவரமும், திட்டக் குழுவின் ஓட்டைகளையும் இங்கே படித்து அறியலாம்.
   • ஏறக்குறைய இரண்டு மாதங்கள் முடியும் நிலையில், பள்ளி மாணவர்கள் எதற்குப் பள்ளிக்குப் போகிறோம் என்று தெரியாமலேயே போய்க கொண்டிருக்கும் நிலை இன்னும் எவ்வளவு நாட்களுக்குப் போகும் என்று தெரியவில்லை. இப்போது மீண்டும் உச்ச நீதி மன்றத்திற்குப் போகிறது. தமிழக மாணவர்களை பழைய பழைய பாடத்திட்டங்களை பின்பற்றச் சொல்லுவதன் மூலம் தமிழக மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் இன்றைய முதல்வரை நாமும் பாராட்டுவோம். பழைய சட்டமன்றத்திற்கு சென்றதன் மூலம் மிகவும் உன்னதமான ஆட்சியைத் தரும் புதிய முதல்வரை வாழ்த்துவோம்.
   • தமிழக மாணவர்களின் நலனில் மிகுந்த அக்கறையோடு இருப்பது போலவும் - இன்னும் சொல்லப் போனால் சமச்சீர் கல்வியைத் தடை செய்வேன் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்ததைப் போலவும் அதனால்தான் மிகுந்த சிரத்தையோடு இதில் ஈடுபட்டிருப்பதாகவும் எல்லாரையும் பேச வைக்கிற சாணக்கிய அம்மா, அய்யா விற்குப் பாடம் எடுக்க வேண்டும். எதைச் செய்தாலும் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்த முதல் நாளில் இருந்தே செய்ய வேண்டும் - இந்த வேகம்தான் விவேகம். அப்போதுதான் ஆட்சி முடியும் தருவாயில் எல்லாரும் இதை மறந்து போவார்கள். ஐயா இதையும் கற்றுக் கொள்ள வேண்டும். 
   • இந்த சானக்கியர்களுக்கு மத்தியில், எதைப் பற்றியும் கவலைப் படாமல் இருக்கும் பெற்றோர்கள் தான் மிகப் பெரிய சாணக்கியர்கள் போல இருக்கிறது. இரண்டு மாதங்கள் பிள்ளைகள் பள்ளிக்குப் போகின்றன. பொதுவாக மாணவர்கள் நலனில் எல்லாம் அக்கறை வேண்டாம் - தன் பிள்ளையின் மீதாவது ஒரு கரிசனை வேண்டாம். தன் வீட்டை விட்டு போனால் போதும் - பள்ளியில் படித்தாலும் சரி இல்லையென்றாலும் சரி என்கிற மாதிரி - என்று தள்ளி விடுகிற பெற்றோர்கள் கொஞ்சமாவது சிந்தனை செய்ய வேண்டாமா?
   • இந்தப் பெற்றோர் - ஆசிரியக் கழகங்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஓட்டு மொத்த தமிழகமே அமைதி காக்கும் போது - பெற்றோர் ஆசிரியக் கழகங்கள் என்ன செய்து விட முடியும் என்று அமைதி காக்கிறதே - இதுதான் சாணக்கியத் தானம். ஆட்சியாளர்களை விட அமைதி காக்கிற நாம்தான் சாணக்கியர்கள். 
   • எதைச் செய்தாலும் அமைதி காக்கிற சாணக்கியத்தனம் - ஒரு பக்கத்திலிருந்து அப்படியே முழுவதுமாக மறுபுறம் சாயும் சாணக்கியத் தனம் - அடுத்த தேர்தலில் அப்படியே எதிர்ப்புறம் சாயும் சாணக்கியத் தனம். நமது சாணக்கியத்திற்கு ஈடு  - முன்னாளும் கிடையாது இந்நாளும் கிடையாது.

   15.7.11

   பாதல் சர்க்கார் - பிறந்த நாள் / நினைவு நாள்

   • காலத்தால் என்றும் அழியாத சில மனிதர்களுள் பாதல் சர்க்கார் என்றும் இடம் பெறுவார் என்பதில் எள்ளளவும் அய்யம் இல்லை. ஆனால் மற்றவர்களைப் போல எல்லா மீடியாக்களின் பக்கங்களில் இவர் இடம் இடம் பிடிக்கவில்லைஎன்பதுதான் உண்மையிலேயே மிகவும் வருத்தமான செய்தி. மம்தா பற்றியும் ஆட்சி மாற்றம் பற்றிய செய்திகள் அதிகமாகக் கவனிக்கப் பட்டு அவைகள் பற்றிய செய்திகள் மட்டுமே தேசிய அளவில் வெளிவந்து கொண்டிருந்த அந்த தருணத்தில் கல்கத்தாவில் பாதல் சர்க்கார் மறைந்தார். இடது சாரிகள் வீழ்ந்த அந்த தருணத்தில் அவர் மறைந்தார். ஆனால் அவர் மறைவு பற்றிய செய்திக்கு எந்தப் பத்திரிக்கையும் இடம் கொடுக்கவில்லை என்பதுதான் வேதனை. கடந்த மே மாதம் பதின்மூன்றாம் தேதி மறைந்தஇந்த வீர மனிதனின் இறப்பு - தேர்தல் முடிவுகளின் ஆர்ப்பாட்டத்தில் அவர் இறந்த செய்தியும் மறைந்தே போனது. 
   • 1925 ஜூலை மாதம் 15 ஆம் தேதி பிறந்த அவர் இந்த ஆண்டு மே மாதம் பதின்மூன்றாம் தேதி மறைந்தார். மாற்றத்திற்கான முன்னெடுப்புகளை முழு மூச்சோடு தொடங்கி அதிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் செலவழித்தவர் இவர். வீதியே அரங்கம் என்று உள்ளரங்களிலிருந்து மக்களைத் தேடி வந்து மாற்றத்திற்கான விதைகளை விதைத்தவர். தமிழகத்தில் மட்டும் அவரிடம் நேரடியாக பயிற்சி பெற்றவர்கள் ஆயிரக் கணக்கில் உண்டு. அவரிடம் பயிற்சி பெற்றவர்களின் பட்டறைகளில் பயிற்சி பெற்றவர்களில் என்னைப் போன்று பல ஆயிரங்கள் உண்டு.  
   • விடுதலைக்கான போராட்டத்தில் பாதல் சர்க்காரின் பங்கு எப்போதும் ஒரு அங்கம் வகிக்கும்.
   • இந்த மனிதர் - தமிழக மக்களின் ஓட்டு மொத்த விருப்பத்தால் நிகழ்ந்த ஆட்சி மாற்றம் குறித்த செய்தி வெளியான நாளில் அவர் இறந்தது தமிழக மக்களுக்குப் பெருமை சேர்ப்பதாகவே இருக்கிறது. அவரது இறப்பைப் பற்றிய செய்திகள் இல்லாமல் போனாலும், வாக்களிப்பதில் மட்டுமாவது தங்களது அதிகாரம் பற்றிய புரிதலோடு இருந்ததுவர்களுக்கு இது பெருமையாக இருக்கும். ஆனால் அதே சமயம் வாக்களிப்பதில் மட்டுமல்ல விடுதலையைப் பற்றிய ஆழமான புரிதல் தமிழக மக்களுக்கு வேண்டும் என்கிற அழைப்பாகவே பதின்மூன்றாம் தேதியின் அவரது மறைவை நான் புரிந்து கொள்கிறேன்.
   • இன்று  அவரது பிறந்த நாள்.மறைவின் போது அவருக்கு நாம் செலுத்தாத மரியாதையை அவர் பிறந்த நாளில் அவருக்கு செலுத்த வேண்டியது அவசியமாகிறது. சென்னையில் நினைவுநாள் கூட்டம் நடத்தும் புவியரங்கத்திற்கு வாழ்த்துக்கள். பாதல் சர்க்காரின் தாக்கம் தமிழகத்திற்கு முன்னெப்போதையும் விட இப்போது இன்னும்  அதிகத் தேவையை இருக்கிறது.