27.11.12

வாழ்க தேசிய ஒற்றுமை

நேற்றுதான் துப்பாக்கி பார்த்தேன். உடனேயே துப்பார்க்குத் துப்பாய குறள்தான் நினைவுக்கு வந்தது. எழுதலாமென்று வலைப் பக்கம் வந்தால் அதிஷாவின் துப்பார்க்குத் துப்பாய டாஸ் போர்டில் நின்றது. எனவே துப்பாக்கியைத் தூரவைத்து விட்டு இன்னொரு தேசிய ஒற்றுமை பற்றி எழுதுவோம் என்று தோன்றியது.
***********

சில நாட்களுக்கு முன்பு கூடங்குளம் அணு உலைகளின் கழிவுகளை மூடிக் கிடக்கும் கோலார் தங்க வயலில் கொட்டுவதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று கர்நாடக அரசு அறிவித்திருக்கிறது. அது மட்டுமல்ல. அங்கு மட்டுமல்ல கர்னாடக எல்லையின் எந்த ஒரு இடத்திலும் அதைக் கொட்ட அனுமதிக்க மாட்டோம். 

இவர்கள் தான் கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து மின்சாரம் நாங்கள் பெறுவோம் என்று சொன்னவர்கள். இங்கே சுற்றி இருக்கும் எல்லாரும் வயித்தில புளியைக் கரைச்சுக்கிட்டு இருக்கணும். இங்க உற்பத்தியாகிற மின்சாரத்தை கேரளா வாங்குமாம் - கர்நாடகா வாங்குமாம். ஆனால் கழிவு கூட அவர்கள் மண்ணை மிதிக்கக் கூடாதாம். 

 இந்தப் பக்கம் ஒரு அரசு வருகிற கொஞ்ச நஞ்ச தண்ணிக்கும் உலை வைக்கப் பார்க்குது. அந்தப் பக்கம் தண்ணீர் தரவே மாட்டோம் - ன்னு அடம் பிடிக்குது ஒரு அரசு. ஆனால் இரண்டு பேருக்கும் இங்கேயிருந்து மின்சாரம் வேணுமாம். ஏன்னா நாமெல்லால் ஒரே தேசம். பக்கத்தில இருக்கவுங்க என்ன செய்தாலும் நாம மட்டும் எல்லாருக்கும் அனுசரணையா இருக்கனுமாம். அவர்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பைக் கூட மீறலாம். அதெல்லாம் ஒன்றுமில்லை. நாம் மட்டும் ஏதாவது சொன்னால் நாட்டைப் பிளக்க சதின்னு தமிழ் நாட்டுல இருக்கவந்தான் சொல்றான்.

இப்ப உச்ச நீதி மன்றம் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்து விட்டது. எதுக்கு நம்ம தீர்ப்பு குடுத்து - அத அவங்க மதிக்காம போனாலும் நம்ம ஒன்னும் செய்ய முடியாம இருக்கோம். அதுனால இனி தீர்ப்பே வேண்டாம் அப்படின்னு முடிவுக்கு வந்து விட்டது. இப்ப என்னடான்னா உச்ச நீதி மன்றம் - காவிரி நீர்ப் பிரச்னைக்கு இரு மாநில முதல்வர்களும் பேசித்தீர்க்க வேண்டும் என்று  யோசனை தெரிவித்து இருக்கிறதாம். அப்படியே கோர்ட்டுக்கு வர்ற எல்லா கேசுகளுக்கும் யோசனை மட்டும் சொன்னா நல்லா இருக்கும்.


மாண்பு மிகு நாராயண சாமி அவர்கள் "கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் ஒப்பந்தப் படி நான்கு மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும் என்று திருவாய் மலர்ந்த்திருக்கிறார். யாரோடோ போட்ட ஒப்பந்தம். எங்க சொல்லிப் போட்டாங்க? இதென்ன கொடுமை சரவணா? எல்லாத் துன்பங்களையும் நம்ம அனுபவிக்கனும், அவர்கள் எதையுமே விட்டுக் கொடுக்காமல் எல்லாத்தையும் பெறனும்னா நல்ல தேசியம் நல்ல ஒற்றுமை.

என்ன செய்றது!

**********
பேசாம விஜய் சாரை மிலிட்டரிலேர்ந்து ஒரு நாற்பது நாள் லீவுல தமிழ்நாட்டுக்கு வரச் சொல்லி ஏதாவது செய்ய முடியுமான்னு கேக்கலாம். அவர் லீவுல மும்பைக்குப் போனதுனால இந்த விவகாரத்துல நமக்கு என்ன நடக்குதுன்னே தெரியலை.