28.4.13

சொர்க்கமேன்னாலும் நம்மூரு போல வருமா?


  • சிறைவாசம் செல்வதற்கு ஏற்கனவே நான்கு வார அவகாசங்களை வழங்கியிருந்த நீதிமன்றம் இப்போது மேலும் நான்கு வாரங்களை உச்ச நீதிமன்றம் சஞ்சய் தத்துக்கு வழங்கியிருக்கிறது. ரூ. 278 கோடிகள் மதிப்பிலான மீதியிருக்கிற படங்களை முடித்துக் கொடுப்பதற்காக 'மனிதாபிமான' அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கிறதாம்.
    • மனிதாபிமானம் என்பதற்கான புதிய விளக்கம். இதுபோல பல வார்த்தைகளுக்கு புதிய விளக்கம் கொடுக்கத் தயாராய் இருக்கிறோம் என்று அறிவிப்புதான் இது.
  • டெல்லியில் ஐந்து வயதுப் பெண் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு ரூ. 2000 கொடுத்து வழக்கு தொடுக்க வேண்டாம் என்று கேட்டிருக்கிறார்கள்.
    • ?????????????
  • நரேந்திர மோடியை விமர்சித்த பிறகு நித்திஷ் குமார் அரசிற்கு, மத்திய அரசு 12,000 கோடி பின்தங்கிய பகுதிகளுக்கு உதவும் நிதி வழங்க முடிவு செய்திருக்கிறது. நாட்டின் நலன் மட்டுமே கருதி இந்த முடிவை உண்மைக்கும் நீதிக்கும் சொந்தக் காரரான காங்கிரஸ் கட்சி எடுத்திருக்கிறது.
    • ஸ்டாலின் வீட்டில் உண்மையாய் ரெய்டு நடத்திய மாதிரி.........
  • 29 வயதான கிருஷ்ணா என்கிற காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் [கர்நாடகா] தனது சொத்து மதிப்பு ரூ. 910 கோடிகள் என்று   தெரிவித்திருக்கிறார். 
    • ஏழைகளின் நண்பன் காங்கிரஸ் என்று உலகுக்கு உணர்த்துவதற்காகவும், ஏழை இளைஞர்களுக்கு மிகப் பெரிய க்ரியா ஊக்கியாக இருப்பதும் தான் அவரது வாழ்க்கை இலட்சியமாம்.
  • பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப் படுவதற்கு பெண்களின் பார்வையே காரணம் என்று சத்யதேவ் கட்டாரே என்கிற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவர் [மத்தியப் பிரதேசம்] சொல்லியிருக்கிறார்.  
    • எல்லாப் பெண்களின் கண்களையும் குருடாக்க வேண்டும் என்றுதான் சொல்ல நினைத்தாராம்...   என்று விட்டு விட்டாராம்.
  • பாலியல் பலாத்காரம் டெல்லியில் மட்டுமா நடக்கிறது .... எல்லா இடங்கலிலும் தான்... பாலியல் பலாத்காரத்தை கட்டுப் படுத்துவதுதான் உள்துறை அமைச்சகத்தின் வேலையா என்று அறிவுப் பூர்வமாகக் கேட்டிருக்கிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த [உத்திரப் பிரதேசம்] ஒரு அமைச்சர் கூறியிருக்கிறார். 
    • கடற்படைக்கு மீனவர்களைக் காப்பதுதான் வேலையா? உள்துறைக்கு மக்களைக் காப்பதுதான் வேலையா... நிதி அமைச்சகத்துக்கு விலைவாசியைக் கட்டுப்படுத்துவதான் வேலையா ... சீனர்கள் ஊடுருவாமல் தடுப்பதுதான் இராணுவத்தின் வேலையா .... என்றெல்லாம் கேட்க நினைத்தாராம்...
  • தெற்கே தினம் தினம் தமிழக மீனவர்களைக் கொள்ளும் இலங்கையிடம் அமைதி... பத்தொன்பது கிலோ மீட்டர் வரை ஊடுருவிய சீனர்களிடம் பேச்சு வார்த்தை ... பாலியல் தீவிரவாதச் செயல்களுக்கு எதிராக நீதி கேட்ட பெண்ணிடம் மட்டும் 'அறை' --- 
    • என்ன வீரம் சார்... என்ன கொடுமை சார்?


23.4.13

அன்னை தெரசாவும் அபியும்


[அபி இக்கட்டுரை எழுதிய அ. பிரபாகரனைக் குறிக்கிறது.]

************************************************************

ரொம்ப நாளாயிற்று - ஏதேனும் எழுதி. உண்மையா பொய்யாவில் அவ்வப்போது ஏதாவது எழுதச் சொல்லி அப்பு அன்பாய்க் கேட்பார். என் சோம்பேறித்தனம் அதற்கு ஆப்பாய் வந்து நிற்கும். நண்பரும் ஆரம்பத்தில் மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தார். ஒருமுறை பதிவேற்றம் செய்தால் சுமார் 15 காமேன்ட்டுகளாவது வரும். இப்போது அவரே எப்போதாவதுதான் எழுதுகிறார். எனவே அவரைத் தொடர்ந்தவர்களும் அவரைக் கை விட்டு விட்டார்கள். அவரே எழுதி, அவரே படித்துக் கொண்டு அவரே சிலாகிக்கும் நார்சிச மனோபாவத்திலிருந்து அவரை விடுவிக்கும் கடமை எனக்கு இருப்பதாலும், வெகுநாள் கழித்து அவரை இப்போதுதான் சந்தித்ததாலும் ஏதேனும் எழுத வேண்டுமென்று எனக்குத் தோன்றிற்று. பல மாதங்களுக்கு முன் நானும் அப்துல் கலாமும் என்று எழுதியதாக ஞாபகம். இனி கட்டுரை ....

************************************************************
சமீபத்தில் ஒரு நண்பர் ஒரு புத்தகம் பற்றிய மதிப்புரையை எனக்கு மெயிலில் அனுப்பியிருந்தார். அவர் ஒரு கிறித்தவர் - அன்னை தெரசாவின் அபிமானி. அந்தப் புத்தகம் அன்னைத் தெரசாவைப் பற்றி விமர்சித்து எழுதப் பட்டிருக்கிறது. நண்பருக்கோ அன்னை தெரசாவைப் பற்றி மனதில் மிகப் பெரிய பிம்பம் இருக்கிறது. தற்காலத்தில் வாழ்ந்த தெய்வப் பிறவியாக அவரை நண்பர் பாவித்துக் கொண்டிருக்கிறார். இந்த விமர்சனத்தைப் படித்ததும் அவருக்கு நிலை கொள்ளவில்லை. குழப்பமாகப் போய் விட்டது. பிம்பம் தகர்ந்து விடுமோ என்று பயப்படுகிறார்.

பல நேரங்களில் நாம் பிம்பங்களில்தான் சுகம் கண்டு கொண்டிருக்கிறோம். பிம்பங்கள் நொறுங்குவது நமக்குப் பிடிப்பதில்லை. ஆனால் நொறுங்குகிற பிம்பங்களிருந்துதான் உண்மையின் வாசல் உங்களுக்குக் கொஞ்சமேனும் புலப் படும். ஆனால் உண்மையின் வெளிச்சங்கள் அவர்களது அறிவுக் கண்களை கூசச் செய்யும் என்பதால் மனிதர்கள் அதை விரும்புவதில்லை. பிம்பங்களிலேயே வாழ்ந்து முடிந்து விடுகிறார்கள்.

சிறுவயதில் நம் எல்லோருக்கும் நம் தந்தைதான் ஹீரோ. சிறு வயதில் நாங்கள் கிராமத்தில் வசித்த போது எங்கள் வீடு ஊரின் ஓரத்தில் இருந்தது. என் தந்தை வேலையின் நிமித்தம் இரவு நேரங்களில் அடிக்கடி தாமதமாக வருவார். அவர் வரும் வரை என் தாயார் வீட்டினுள் விழித்துக் கொண்டு உட்கார்ந்து இருப்பார். ஒரு கால் ஊனமான எண்பது  வயதான என் தாத்தா பாதுகாவலுக்காக கையில் தடியுடன் திண்ணையில் உட்கார்ந்து இருப்பார். திருடன் யாரேனும் வந்தால் வெளியே ஆம்பிளை உட்கார்ந்திருக்கிறாரே என்று என் அம்மாவுக்குத் தைரியம். என் தந்தை வந்ததும் என் அம்மா இன்னும் தைரியமாகி விடுவார்.

ஆனால் என் தாத்தாவாக இருந்தாலும் தந்தையாக இருந்தாலும் சாதாரணத் திருடன் வந்தால் கூட ஒன்றும் செய்ய முடியாது.  இதுதான் உண்மை. சாதாரணத் திருடனை எதிர்ப்பதற்குக் கூட இருவருக்குமே உடல் வலிமை நிச்சயமாய் இல்லை. ஆனால் நாங்கள் எமது இரவுகளை சாந்தமாகக் கழிப்பதற்கு எங்களுக்கு வீரமான என் தாத்தாவின் பிம்பமோ, தந்தையின் பிம்பமோ தேவைப்பட்டது. [ப்ராய்டு கூட கடவுளைப் பற்றி பேசும் போது இது பற்றிக் குறிப்பிடுகின்றார்] இப்போது அந்தப் பிம்பம் உண்மையில்லை என்று தெரிய வந்ததால் என் தந்தை மீதோ அல்லது தாத்தா மீதோ என் அன்போ மரியாதையோ குறைந்து விட வில்லை.

என் நண்பரின் வருத்தத்தைக் கேட்ட போது என் சிறு வயதில் என் அம்மாவும் நாங்களும் உட்கார்ந்திருக்கும் காட்சிதான் ஞாபகம் வந்தது. ஏறத்தாழ எல்லா மனிதர்களின் வாழ்க்கையிலும் பிம்பங்கள் உண்டு. பிம்பங்கள் இன்றி வாழ்க்கையில்லை. பிம்பங்கள் வைத்திருப்பதில் தவறில்லை. பிம்பங்கள் எல்லாருக்கும் கண்டிப்பாகத் தேவை. ஆனால் மனிதப் பிம்பங்களை  அதீதப் புனைவுகளோடு மனித சக்திக்கு அப்பாற்பட்டதாகப் பார்க்கிற போதுதான் பிரச்சனை வருகிறது. 

அன்னை தெரசா ஒன்றும் கடவுள் இல்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால் நான் அவரை நேரடியாக ஒரு முறை பார்த்திருக்கிறேன். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் சென்னை லயோலாக் கல்லூரியில் வைத்து அவரைப் பார்த்திருக்கிறேன். அவர் வாகனம் வந்ததும் எல்லாரும் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடினார்கள். ஆனால் நான் ஓடவில்லை.  சிலர் கை குலுக்கவும், ஆசீர் வாங்கவும் எத்தனித்தார்கள். நான் அதையும் செய்ய வில்லை. ஆனால் கொஞ்சம் அருகிலேயே நின்று பார்த்தேன். இவற்றிலெல்லாம் எனக்கு அப்போது அவ்வளவாக ஆர்வமில்லை. நான் மாணவனாக இருந்தபோது அன்னை தெரேசா குறித்து யாரோ சொன்ன ஒரு சில விமர்சனங்களால் பாதிக்கப் பட்டிருக்கிறேனோ என்று இப்போது தோன்றுகிறது. 

ஆனால், பிறகு வந்த காலங்களில் அவரது சபையினர் நடத்தும் இல்லங்கள் சிலவற்றைப் பார்க்க நேர்ந்தது. அவருடைய ஆளுமையின் தாக்கம் அப்போது புரிந்தது. சித்தாந்த ரீதியாக அவரது சபையினரின் செயல்பாடுகள் ஒரு சிலருக்கு [அமைப்பு ரீதியான மாற்றம் பற்றி {வெறுமனே ! } பேசும் ஒரு சிலருக்கு] பிடிக்காதிருக்கலாம். ஆனால் அந்த சகோதரிகளின் அர்ப்பணமும் , ஏழைகள் மீதான கரிசனையும், சேவையும், துறவு மனப்பான்மையும் நிச்சயமாய்ப் போற்றப்படத் தக்கவை.

இப்போது நண்பர் சொன்ன நூலுக்கு வருவோம். ஒருவர் மிகப் பிரபலமாகி விட்டால் அவரது அடுத்த பக்கத்தைப் பற்றிப் பேசுவதும், விமர்சிப்பதும் பொதுவான நடைமுறைதான். இப்படி விமர்சிப்பதாலேயே விமர்சிப்பவர்களில் சிலர் பிரபலமாகி விடுவார்கள். அந்தவகையில் இந்த நூலும் அன்னை தெரசாவின் அடுத்த பக்கத்தைப் பற்றி பேசுகிறது. நூலினுடைய மொத்த நோக்கமே அதுதான். அதற்கு மேல் அதில் ஒன்றுமில்லை. 

இது அன்னை தெரசாவிற்கு மகிமையே சேர்க்கிறது. அவர் சாதாரண மனிதர்தான் - கடவுளல்ல என்ற உண்மையை அது தெரிந்தோ தெரியாலோ வலியுறுத்துகிறது. அதனாலேயே அவர் போற்றப்படத்தக்கவர் என்ற உண்மை இதன் மூலம் புலப்படுகிறது. அதாவது - குறைகளோடு வாழ்ந்த மனிதராய் இருந்தும் - தனது குறைகளைக் கடந்து அன்பை விதைத்து இவ்வளவு பெரிய தாக்கத்தைப் பலரிலே ஏற்படுத்தியிருக்கிறாரே  என்பது வியப்பாய் இருக்கிறது.

ஒருவரைப் பற்றிய மதிப்பீடுகள் அவர் மனிதராக எத்தனை குறைபாடுகளைக் கொண்டிருந்தார் என்பதை வைத்துச் செய்யப்பட முடியாது. மாறாக அவர் வரலாற்றில்  அவரைப் பின்பற்றுவர்களிடம் எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பதைப் பொறுத்தே செய்யப்பட வேண்டும். இது காந்தியிலிருந்து பிரபாகரன் வரை எல்லாருக்கும் பொருந்தும்.

எனவே அந்த நண்பரிடம் நான் இப்படிச் சொன்னேன் - "ஒரு மனிதர் மீது விமர்சனங்கள் வைப்பதால் அவரது  மனிதத்தன்மை மென்மேலும் வெளிச்சத்துக்கு வருகிறது. அந்த மனிதத்தன்மையோடு அவர் செய்த பெரிய காரியங்களாலேயே அவர் மகானாகிறார் - விட்டுத்தள்ளுங்கள்."
                                                                                                         
                                                                                                            - அ . பிரபாகரன் 
*********************************************************

அபிக்கு
நார்சிச மனோபாவத்திலிருந்து என்னை மீட்டெடுக்க வேண்டிய கடமை உணர்ந்து கொண்டதனால் இன்றிலிருந்து நீர்
நார்சிசம் மீட்ட சுந்தர பாண்டியன் என்று அழைக்கப் படுவாயாக!


[அபி என்பது திகப் பிரசங்கி என்பதையும் குறிக்கும்]
*********************************************************

21.4.13

பாஸ்டனின் நிகழ்வுக்குப் பின்

மிகவும் சிறப்பு வாய்ந்த பாஸ்டன் மாரத்தான் நிகழ்வு முடிவு பெரும் தருவாயில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்து மூன்று பேர் இறந்து விட ஏறக்குறைய 170 நபர்கள் படுகாயம் அடைந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த செய்தியையே நான் இரண்டு நாட்கள் கழித்துத் தான் அறிந்து கொண்டேன்.

அமெரிக்காவின் மீதான தாக்குதல்கள் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தவை. காரணங்கள் பல.  பராக் ஒபாமா இதைப் பற்றி என்ன சொல்கிறார் என்பதைப் பற்றி அறிவதற்கான ஆர்வம்தான் எனக்கு அதிகமானது.

ஒபாமாவின் பேச்சைக் கேட்ட பிறகு எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவர் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் இந்நேரம் அல் கொய்தா வை வம்ம்புக்கு இழுத்திருப்பார்கள். இதே இந்தியாவில் நடந்திருந்தால் இந்நேரம் பாகிஸ்தான் காரணம் என்று உடனேயே சவால் விட்டிருப்பார்கள்.

இதற்கான காரணம் - யார் செய்தது என்று தெரியவில்லை - மிக விரைவில் கண்டு பிடிப்பார்கள் என்று ஒபாமா சொன்னார்.
நமது அரசியல் வாதிகளும் அங்கேயே பிரச்சனைகளுக்கு உரமிடும் புஷ் போன்றவர்களும் இதைக் கற்றுக் கொள்வது நல்லது.

எதற்கெடுத்தாலும் கையில் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு பள்ளிக் கல்லூரிகளுக்குச் சென்று பார்க்கிறவர்களைஎல்லாம்  சுட்டுத் தள்ளும் அமெரிக்க கலாச்சாரத்தின் போக்கையும், அதற்குப் பின் அவர்கள் மனநலம் அற்றவர்கள் என்று தப்பித்துக் கொள்ளும் மன நிலையையும் மாற்றுவதற்கு முதலில் அமெரிக்கர்கள் முயல வேண்டும். அதைச் செய்தாலே பாதிப் பிரச்சனை முடிந்து விடும்.

ஏப்ரல் மாத தொடக்கத்தில் நாட்டோ படைகள் நடத்திய தாக்குதலில் பச்சிளம் குழந்தைகள் கொல்லப் பட்ட செய்தி இந்த அளவிற்கு உலகக் கவனத்தைப் பெற வில்லை என்பதும் இதனால்தான்  ஒபாமா அடக்கி வாசித்தாரோ என்றும் அல்லது இந்தச் செய்தியை மறைக்க அமெரிக்க நடத்தும் நாடகமா இந்த குண்டு வெடிப்பு என்று கேட்பது தவறில்லை என்றே தோன்றுகிறது.




பாஸ்டனுக்கும் பெங்களூருக்கும் என்ன தொடர்போ தெரியவில்லை இங்கேயும் குண்டுவெடிப்பு. ஆனால் உடனேயே இது தீவிரவாதம் என்றும், பி. ஜே. பி யின் அலுவலகத்தை டார்கெட் செய்திருக்கிறார்கள் என்று சொல்லுவது மே மாதம் ஐந்தாம் தேதிக்கு ஆதரவைத் தேடும் யுத்தி என்றே தெரிகிறது. இரண்டு கார்களுக்கு நடுவில், தமிழ் நாட்டு ரெஜிஸ்ட்ரேஷன் தகட்டோடு என்பது வேண்டுமென்றே திட்டமிட்டிருப்பது போலவே தெரிகிறது.

இவைகளையெல்லாம் பார்க்கிற பொது நம்மை நாமே அழித்துக் கொள்வதற்கான சுலபமான வழிகளை ஏற்படுத்தித் தருவதே விஞ்ஞானம்தான் என்பதில் நம்பிக்கை அதிகமாகிறது.
நவீனம் என்பது என்ன... மொத்தமாய் சாவதா? பயந்து பயந்தே வாழ்வதா?

தங்களது ஆதாயத்திற்காக தீவிரவாதம் என்ற லேபிலை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோமா?

14.4.13

சித்திரை பேசுதடி



  • தமிழர் யார் என்பதில் எப்படி பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றனவோ அதோ போலவே தமிழரின் புத்தாண்டு எது என்பதிலும் சிக்கல்கள் பல இருக்கின்றன போல. தை – யா அல்லது சித்திரையா? பொங்கல் திருநாள் தமிழர் திருநாள் என்பதில் எனக்கு எள்ளளவும் அய்யம் இல்லை. அதைத் தமிழர் புத்தாண்டு என்று கொண்டாடுவதிலும் எனக்குத் தயக்கம் இல்லை.
  • அதே சமயம் சில கேள்விகளை முன்னிறுத்த வேண்டியது அவசியம். இன்னமும் ஏப்ரல் மாத நடுவில் பல தெற்காசிய நாடுகளில் அந்தந்த நாடுகளின் புத்தாண்டு கொண்டாடப்படுகின்றன. வங்காளம், நேபாளம், பர்மா, தாய்லாந்து, சிறிலங்கா, லாவோ போன்ற நாடுகள். இந்தியாவில் சீக்கியர்கள், அஸ்ஸாமியர்கள், கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளர்கள் என பல இனங்கள் இந்த காலத்தில்தான் புத்தாண்டு கொண்டாடுகின்றன.
  • இதுமட்டுமல்ல. ஐரோப்பிய நாடுகளில் கூட வசந்த காலம் தொடங்கும் இந்த கால கட்டத்தில்தான் புத்தாண்டை கொண்டாடி வந்திருக்கின்றனர். அதாவது கிரகோரியன் காலண்டர் முறை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளப் படுவதற்கு முன்பு வரை என்று சிலர்  நினைக்கிறார்கள். அந்தக் காலண்டர் முறையை ஏற்றுக்கொள்ள மறுத்து ஏப்ரல் மாதங்களில் தொடர்ந்து புத்தாண்டைக் கொண்டாடிய மக்களை கேலி செய்வதற்காகவே உருவாக்கப் பட்டது முட்டாள்கள் தினம் என்று ஒரு தியரி உண்டு. அதுவே தொடர்ந்து ஏப்ரலில் புத்தாண்டு கொண்டாடும் அனைவரையும் முட்டாள்கள் என கேலி செய்யும் நாளாக ஆனது என்று வாதிடுபவர்களும் உண்டு. அப்படியானால் தமிழர்களின் புத்தாண்டுதினமும் சித்திரையில்தானா?
  •  எது எப்படியோ நாம் இன்னும் நிறைய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிருக்கிறது. ஏற்கனவே தமிழினம் பற்றி வெளிவந்திருக்கிற ஆய்வுகளை சாதாரண மக்கள் வரை கொண்டு சேர்க்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. ஒரு கல் ஒரு கண்ணாடி – துப்பாக்கி, ஒசத்தி-போடா போடி இவைகளைத் தவிர்த்து தமிழ் மொழி குறித்தோ, இனம் குறித்தோ, சித்திரை குறித்தோ தொலைக்காட்சிகள் ஏதாவது ஒளிபரப்பினால் நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் லட்டு தின்ன ஆசையா என்று கேட்டு, தமிழ் தெரியாத நடிகைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்து தமிழ் மொழியை வளர்க்கலாம்.
  • அம்பேத்கார் தின வாழ்த்துக்கள்.

7.4.13

தமிழ் இனி - குறும்படம்

எதேச்சையாக என் கண்ணில் பட்டது.