27.1.13

தடை: விஸ்வரூப வெற்றி


கமல்ஹாசன்
ஒவ்வொரு திரைப் படம் எடுக்கும் போதும் 
ஏதாவது ஒரு சிக்கல், தடை என்று ஏடாகூடமாக 
மனிதன் மாட்டிப் போகிறார். 
அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல 
எனக்கு ஒண்ணுமே ஆகுறதில்ல - ன்னு 
சொன்ன மனுஷனுக்குத் தான் இப்படி ஆகுது.

 • சண்டியர், ஹே ராம், விஸ்வரூபம் - வரிசையா வந்து மாட்டுது. ஒவ்வொன்றின் பின்புலத்திலும் உள்ள சிக்கல்கள் வெவ்வேறு என்றாலும், இந்த நேரத்தில் ஒரே ஒரு செய்திதான்.  திரைப்படங்களுக்குத் தடை என்பது நமது நாட்டிற்கு ஒன்றும் புதிதில்லை. 
 • திரைப்பங்களையே தடை செய்வதே நல்லதாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். என்னைப் போல பல பிரபல அரசியல் வாதிகளும் நினைப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆனாலும் அது சாத்தியப் படாது என்பதனால் சில திரைப் படங்களை தடை செய்வோம் அல்லது சில வாரங்கள் தடை செய்வோம் என்றெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு வருகிறார்கள். இது நல்ல எண்ணத்தினால் அல்ல - அரசியல் தந்திரம், மற்றும் வியாபார நஷ்டம், அரசியல் பழி வாங்கல் என்பதெல்லாம் இதன் பின் அடக்கம். 
 • இதில் கமல் 'நல்லவரா கெட்டவரா' என்பதெல்லாம் இந்த விவாதத்திற்கு உட்பட்டதல்ல. இந்தத் திரைப் படத்திற்கு தடை சரியா இல்லையா என்பதுதான். டாம் படத்திற்குத் தடை என்ற போதும் எனது கருத்து இதுவாகவே இருந்தது. கேரளா அரசின் கொள்கை, அது விரிக்கும் வலை தவறு என்பது தெரிந்தாலும் அதற்கானத் தீர்வு என்பது படத்தை தடை செய்வதில் இல்லை, அல்லது தீர்வு அது இல்லை என்றே சொல்லியிருந்தோம்.
 • ஒரு படத்தை தடை செய்வதினால் இஸ்லாமியர்களின் சுதந்திரம் இங்கே பாதுகாக்கப் பட்டு விடுமா? இந்தத் திரைப் படத்தை தடை செய்வதினால் இஸ்லாமியர்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் என்று நினைத்து விட முடியுமா? அதுதான் உண்மையெனில் அயோத்திக்கு எப்போதோ தீர்வு கிடைத்திருக்கும். அரசியல்வாதிகள் மக்களை ஒரு மாயையில் வைப்பதற்கு இது போன்ற உப்புச் சப்பில்லாத விஷயங்களை கையில் எடுத்துக் கொண்டு இஸ்லாமியர்களின் கருத்துக்குச் செவி கொடுக்கிறோம் என்ற ஒரு செய்தியை வெளியில் செய்து விட்டு மறைமுகமாய் தங்களது அரசு இயந்திரங்களை அவர்களுக்கு எதிராய் முடுக்கி விடுவார்கள். திரைப் படங்களைத் தடை செய்வதோடு நமது தார்மிகக் கடமை முடிந்து விட்டது என்று நாமும் ஒதுங்கிப் போவோம். இதைத் தானே அவர்கள் நினைக்கிறார்கள். இனி அடுத்த முறை தேர்தலில் இஸ்லாமிய நண்பர்களின் ஒட்டு ஒட்டு மொத்தமாய் மோடியின் சகோதரிக்கு கிடைக்கும்.
 • இன்னொசென்ஸ் ஒப் முஸ்லீம்ஸ் என்ற ஒரு கேவலமான ஒரு படத்தை அமெரிக்க நிறுவனம் தயாரித்த போது அதில் நபிகளை மிகவும் தவறாகச் சித்தரித்து இருக்கிறார்கள் என்பதில் ஒரு நியாயம் இருந்தது. அது எந்த விதமான தயாரிப்பும் இன்றி, அசிங்கமாக சித்தரிக்கப் பட்ட படம் என்பதில் அதன் தடையை நாம் நியாயப் படுத்த முடியும். எந்த விதமான காத்திர முகாந்திரமும் இன்றி கமலின் திரைப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்பது எந்த விதத்தில் சரி என்பது தெரியவில்லை. 
 • ஒரு படத்தில் ஒரு மதத்தவரை எப்போதும் திவிரவாதிகளாகக் காட்டுவது தவறு. ஆனால் ஒரு திரைப் படத்தில் ஒரு விஷயத்தை சொல்லி விட்டால் அது அப்படியே உண்மை என்ற அர்த்தம் இல்லை. அல்லது இந்திய இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் படங்கள் வந்தால் அதற்கான எதிர்ப்புக் குரல் நிச்சயமாய் எல்லாரிடமிருந்தும் வரும். 
 • சரி ஒரு கேள்வி - இந்தியத் தமிழக அரசியல் வாதிகள் எல்லாரையும், கேவலமான பொறுக்கிகளாக, லஞ்சத்தில் ஊறிப் பெருத்த பெருச்சாளிகலாக காட்டும் திரைப் படங்கள் அனைத்தும் உண்மைதானே.   காவலர்கள் பெரும் கேடிகளா...அப்புறம் ஏன் எல்லாத் தமிழ் படங்களையும் தடை செய்யச் சொல்லி எந்த அரசியல்வாதியும் வரிந்து கட்டுவதில்லை?
 • எல்லாருக்கும் எல்லாருடைய கருத்துக்களோடும் உடன்பாடு இருப்பதில்லை. கமலின் பல கருத்துக்கள் எனக்கு உடன்படாதவைகளே. பல திரைப் படங்களின் கருத்துக்கள், அதன் கருத்து இவைகளோடு கூட உடன் பாடு இல்லைதான். அதற்காக அந்த மனிதன் ஒரு கருத்தை சொல்லக் கூடாது என்கிற உரிமை நமக்கில்லை என்றே கருதுகிறேன். அதே சமயத்தில் அந்தக் கருத்தை எதிர்க்கும் உரிமையும் எல்லாருக்கும் உண்டு. ஆனால் எதிர்ப்பு என்பது தடையில் இல்லை... 
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இந்த நேரத்தில கமல் பாடின இந்தப் பாட்டை
பாக்கணும் போல இருக்கு,
"அடமேன்ட்டா நாங்க நடை போட்டா 
தடை போட நீங்க கவர்ன்மெண்டா 
தடா உனக்குத் தடா" 

இதே நேரத்தில் கமலைப் பார்த்து 
இந்தப் பாடலைப் பாட வேண்டும் போல இருக்கிறது.

"போனா போகுதுன்னு விட்டின்னா 
கேனன்னு ஆப்பு வப்பாண்டா"
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
குறிப்பு: 
பதிவு என்ன ஒரே குழப்பமாக இருக்கிறது என்பவர்கள் இதைக் கமல் பற்றிய பதிவு என்பதை மனதில் இருத்திக் கொள்வது நல்லது.
[அவசரத்துல ஒழுங்கா எழுதலை என்பதை மறைக்க என்னவெல்லாம் சொல்ல வேண்டியிருக்கிறது.]

தொடர்புடைய சில பதிவுகள் :

அன்பின் வன்முறை இன்னொசென்ஸ் ஒப் முஸ்லீம்ஸ் பற்றியது 

டாம் படத்தை தடை செய்தது தவறு


19.1.13

எனக்கு பொங்கல் இல்லை....


எனக்கு பொங்கல் இல்லை 


இரமன கிரி வாசன் 


என் இனம் அழிந்த வலி இன்னும் மிச்சமிருக்கிறது...

முள்வேலி முகாமில் உயிரை தவிர இழக்க ஏதுமின்றி
ஓடுங்கி கிடக்கும் என் சகோதரனையும் சகோதரியையும் 
நினைக்கையில் கரும்பு கசக்கிறது.

காவிரி தண்ணீருக்காய் காத்திருந்து காத்திருந்து கருகிப்
போன என் நெற்களஞ்சியம் மனசை அழுத்துகிறது ...

தலை சாய்ந்து கிடக்கும் வயற்வெளியெல்லாம் 
காங்கீரிட் கதிர்கள் முளைத்து ஸ்கொயர் பீட் இவ்வளவு
என்று வியாபாரத்திற்கு தயாராக நிற்கிறது.

உம்மன சாண்டிக்கு பென்னி குயிக்கே பரவாயில்லை 
என்கிற போது சுதந்திரம் வாங்கி தந்தவர்கள் மேல்
எனக்கு கோபம் வருகிறது.

கடற்கரையோரம் ஆண்டுகளை தாண்டி தொடரும் 
பட்டினிப்போராட்டத்தை நினைக்கையில் என் பொங்கல் பானை
பொங்க மறுக்குறது .

தரையில் தண்ணீர் இல்ல....
எம் கண்ணீரை வழித்து எடுக்க கூட மோட்டாருக்கு கரண்டு இல்லை...

உழவர்கள் எல்லாம் தினக்கூலியாக எம் உழவு மாடுகள் எல்லாம்
அடிமாடுகளாய் ஏலம் போல நீயும் நானும் எஸ் எம் எஸில் பொங்கல்
வாழ்த்து சொல்லிக் கொள்வதில் உடன்பாடு இல்லை எனக்கு...

இனமும் , மொழியும் , உழவும் அழிந்து கொண்டிருக்கையில்
ஏது உழவர் திருநாள் ? ஏது தமிழர் திருநாள் ? 

இரண்டு நாள் விடுமுறையும் , தமன்னாவின் நேர்காணலும்
எந்திரன் சினிமாவும் தான் பொங்கல் என நினைத்தால்
அதை நீயே கொண்டாடிவிட்டு போ......

எனக்கு பொங்கல் இல்லை....

                                                                             இரமன கிரி வாசன் 

********************************************************************
என்  வலையில் வெளியிட
இசைந்ததற்கு 
நன்றி 
அப்பு 
*********************************************************************


14.1.13

பொங்கல் வாழ்த்துகளா!


 • இந்த ஆண்டு வரிசையாய் புத்தாண்டு விழாக்கள். ஒன்று மாற்றி ஒன்று. முதல் புத்தாண்டு கடந்த டிசம்பர் 22 - ஆம் தேதி தொடங்கியது.  - மாயனில் மயங்கிப் போனவர்கள் கொண்டாடிய புத்தாண்டு அது. அதன் பிறகு உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடினார்கள்.  என்ன வித்தியாசம் என்றால், மாயன் காலண்டரின் ஆண்டுக் கணக்கு உலகம் முழுவதும் தெரிந்து விட்டது. அதனால் உலகம் முழுவதும் கொண்டாடினார்கள். ஆங்கிலப் புத்தாண்டும் உலகம்  முழுதும் கொண்டாடப் பட்டது. ஆனால் தமிழ் புத்தாண்டை தமிழர்கள் கூட கொண்டாட மாட்டார்கள். நமக்கு இன்னும் தை தானா - ஆண்டின் தொடக்கம் என்கிற கேள்வியே முதலில் வந்து நிற்கிறது.
 • எதுவாய் இருந்து விட்டுப் போகட்டும் பொங்கல் கொண்டாடுவதில் தமிழர்கள் ஒன்றிணைந்தால் நல்லதுதானே!
 • நண்பர் ஒருவர் முகநூலில் பின்வரும் கருத்தை சொல்லியிருந்தார். இந்தியா முழுவதும் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு பலியான பிறகு இந்தியா முழுவதும் பத்திரிக்கைகள் அதை டெல்லிக்கும் உலகத்திற்கும் கொன்று சென்றது. ஆனால் ஈழத்தில் இறந்த ஆயிரக்கணக்கான உயிர்கள் டெல்லியைக் கூட எட்ட வில்லை.  
 • அது எப்படி எட்டும்? தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்முறைகள், கூடங்குளம் எதிர் நோக்கும் அபாயம், வரிசையாச் சுட்டுக் கொள்ளப்படும் தமிழ் மீனவர்கள் இவர்களைப் பற்றிய செய்தியைக் கூட வெளியிட மறுக்கும் தமிழ் பத்திரிக்கைகள், அல்லது இந்தியப் பத்திரிக்கைகள் இருக்கும் வரை, அது எங்கும் சென்று சேராது. ஒரு மீனவன் இறந்தால் அவன் தமிழ் மீனவன். இறந்தால் அவன் தமிழன். தமிழ் நாட்டு தமிழனைப் பற்றியே கவலைப் படாத டெல்லி எப்படி ஈழம் பற்றிக் கவலைப் படும்?
 • உழும் நிலம் வறண்டு நிற்கிற போது , இந்திய நீதி மன்றம் வரையறுத்து இருக்கிற தண்ணீரைத் தருவதற்குக் கூட கர்நாடகம் மறுத்து நிற்கிற அவலம் இந்த டெல்லியை எட்டாது. எட்டா உயரத்தில் இருக்கும் டெல்லியை ஒன்றும் செய்ய முடியாது. வேண்டுமானால், வடிவேலு சொல்லுவது மாதிரி - இங்க இருக்குற தமிழ் நாட்டை எடுத்து அப்படியே டெல்லி பக்கத்துல வச்சுட்டா ரொம்ப சுலபமாக் கேட்கும்.
 • பொங்கல் கொண்டாடுவோம்.