விபத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விபத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21.9.13

இந்தியர்கள் கோமாளிகள் ஆக்கப் படுகிறார்களா? - (தினமணி தலையங்கம்)

அணு உலை விஷயத்தைப் பற்றியும் அதில் உள்ள சிக்கல்களை பற்றி எழுதும் போதெல்லாம் பொது மக்கள் கோபப்படுவதைத்தான் பார்க்கிறேன்.  அணு உலையே வேண்டாம் என்பதுதான் நமது நிலையாக இருந்தாலும், அரசு அதற்கு செவிமடுக்கும் சூழ்நிலையில் இல்லை. இந்த அரசு அவசரப் பட்டு எடுக்கும் எந்த முடிவும் நாட்டை அதல பாதாளத்திற்குத்தான் தள்ளும். நாட்டு மக்களின் பாதுகாப்பை பணயம் வைத்துத்தான் நமது வளர்ச்சி இருக்க வேண்டுமா என்பதைக் கேட்க வேண்டியிருக்கிறது. 

ஆனானப் பட்ட ஜப்பானே எல்லா அணு உலைகளையும் மூடியிருக்கிறது. நாம் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. 

விபத்தினால் ஏற்படும் எந்த நிலையையும் பணம் சரி செய்துவிடாதுதான். அதற்காக விபத்து ஏற்பட்டால் இழப்பீடு வழங்குவதில் இருந்து அணுஉலை வழங்கும் நிறுவனத்தைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? தொழில் நுட்பக் கோளாறோ அல்லது சேவைக் குறைபாட்டினாலே விபத்து ஏற்பட்டால் அதை வழங்கிய நிறுவனத்தின் மீதான பொறுப்பை இந்திய அரசு குறைக்கப் பார்க்கிறது. 

சாதரணமாக வாங்கும் பொருட்களுக்கே கியாரண்டி எல்லாம் இருக்கும் போது அணு உலைகள் என்பது எவ்வளவு பெரிய விஷயம்... இப்படியே போனால் ஐ.எஸ்.ஐ. க்கெல்லாம் வேலையே இருக்காது. கியரான்டிக்கும் வேலை இருக்காது - சைனாப் பொருட்களைப் போல. ஆனால் உடைத்தால் தூக்கிப் போட இது ஒன்றும் கொசு அடிக்கும் பேட் அல்ல.
விபத்தினால் உயிரிழக்கப் போகிறவர்கள் கையெழுத்து இடப் போகிறவர்களும் அல்ல.
நம்மை பணயம் வைத்து நிறுவனங்களை - அமெரிக்க நிறுவனங்களை வளர்க்க வேண்டிய அவசியம் என்ன? 

அமேரிக்கா சிரியா மீது கட்டப் பஞ்சாயத்து பண்ணுகிறது? தனது நாட்டு மக்கள் மீதே சிரியா அதிபர் காஸ் பயன்படுத்தினார் என்று. இப்ப இந்தியப் பிரதமரைப் பயன்படுத்தி இந்திய மக்களின் பாதுகாப்பை உசாதீனப் படுத்த வைக்கும் இந்த வேலைக்கு யார் கட்டப் பஞ்சாயத்து பண்ணுவது? இந்தியப் பிரதமர் மீதோ, இதைச் செய்யத் தூண்டும் அமேரிக்கா மீது யார் படையெடுப்பது?

இனி தினமணி தலையங்கம்...
 ===============================================================
போபால் விஷவாயு விபத்தில், யூனியன் கார்பைடு நிறுவனம் இந்திய மக்களை ஏமாற்றியதைப் போன்ற இழிநிலை இனியும் ஏற்படலாகாது என்பதற்காக, மிகப்பெரும் எதிர்ப்புகள் போராட்டங்களுக்குப் பிறகு, அணுஉலை விபத்திற்கு தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக இருந்தால், அணுஉலைகளை வழங்கியவர்கள் பொறுப்பேற்கவும், இழப்பீடு வழங்கவும் செய்யும் சட்ட விதிமுறைகள் ஒப்பந்தத்தில் ஏற்படுத்தப்பட்டன.
இப்போது, அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டால், அணுஉலையை வழங்கிய நிறுவனம் பொறுப்பேற்று, இழப்பீடு வழங்க வேண்டும் என்கிற நிபந்தனையை இந்திய அரசு தளர்த்தவிருக்கிறது என்கின்ற செய்தி "கதிர்வீச்சுக் கசிவாக' வந்துகொண்டிருக்கிறது.
அணுஉலை விபத்தில் குடிமை கடப்பாடு சட்டம், பிரிவு 17-ல், விபத்துக்குக் காரணம் அணுஉலை, அல்லது தொழில்நுட்பம், அல்லது சேவைக் குறைபாடு என உறுதிப்படும்போது, அதை வழங்கிய நிறுவனமே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தெளிவுபடுத்துகிறது.
தற்போது அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி ஆலோசனை கூறியிருப்பதைப் போல, "இந்த பிரிவு 17-யை ஒப்பந்தத்தில் வலியுறுத்துவதோ அல்லது வலியுறுத்தாமல் விட்டுவிடுவதோ அந்த அணுஉலையை நடத்தும் நிறுவனத்தின் விருப்பத்தை சார்ந்தது' என்று மாற்றுவதன் மூலம், அணுஉலை வழங்குபவரைப் பொறுப்பேற்பிலிருந்து விடுவித்துவிட வழியேற்படுகிறது.
இந்தியாவில் அத்தனை அணுஉலைகளையும் தற்போது இயக்குவது இந்திய அணுமின் கழகம் (என்பிசிஐஎல்). இது இந்திய அரசு நிறுவனம். ஆக, பிரிவு 17-யை ஒப்பந்தத்தில் வலியுறுத்தாமல் தவிர்த்தால், முழு பொறுப்பையும் ஏற்க வேண்டிய கடப்பாடு இயல்பாக இந்திய அணுமின் கழகத்தையே சேரும்.
அடுத்த கட்டமாக, அணுமின் நிலையங்களைத் தனியார்மயமாக்கும்போது, ஒப்பந்தத்தில் யாரைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்பது அந்த தனியாரின் விருப்பம். ஆகவேதான் இந்த விதித்தளர்வு என்று இந்திய அரசு எதிர்வாதம் வைக்கக்கூடும்.
அனல்மின் நிலையங்களைப் போல, அணுமின் நிலையங்களையும் தனியார் நடத்துவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம். ஆனால், அணுஉலை விபத்தில் குடிமைக் கடப்பாடு சட்டத்தில், இழப்பீடு தொகை அதிகபட்சம் எவ்வளவு? அரசு சார்ந்த நிறுவனம் என்றால் 300 மில்லியன் டாலர், அதாவது, இன்றைய கணக்கில் 1850 கோடி ரூபாய். அதுவே, தனியார் நிறுவனம் என்றால் ரூ.1500 கோடி மட்டுமே! எப்படி இருக்கிறது?
இந்திய அரசுக்கு அதிக தொகையும், தனியாருக்கு குறைந்த தொகையும் இழப்பீடு என்பதே ஒரு ஏமாற்று வேலை. இப்போதைக்கு அரசுதான் அணுஉலைகளை அமைக்கப் போகிறது என்று கூறி மக்களை ஏமாற்றும் வித்தை. இது தவறு என சுட்டிக்காட்டினால், "இந்தத் தொகை அந்தந்த நேரத்துக்கு மாறுதலுக்கு உட்பட்டது' என்பதையே இந்திய அரசு திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறது.
இழப்பீடு வழங்குவதில் அதிகபட்ச அளவு என்ற கட்டுப்பாடு கூடாது என்றும், இழப்பின் தன்மையை கணக்கிட்டு முழுமையாகப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கூறிய போதிலும் அதனை அரசு பொருட்படுத்தத் தயாராக இல்லை.
தனியார் நிறுவனங்கள் அணுமின்நிலையங்களை நடத்தும்போது, இழப்பீடு தொகைக்காக காப்பீடு செய்து கொள்வதே வழக்கம். இந்திய அரசு சொல்வதைப் போல, அவர்கள் காப்பீடு செய்து கொண்டால், ரூ.1500 கோடிக்கு மட்டுமே காப்பீடு செய்வார்கள். விபத்து மிகப்பெரியதாக இருப்பின், மீதி செலவினத்தை நமது வரிப்பணத்திலிருந்து இந்திய அரசுதான் ஏற்க வேண்டியிருக்கும்.
இந்தியாவுக்கு அணுஉலைகள் வழங்கப்போகும் அமெரிக்க நிறுவனங்கள் இரண்டு: வெஸ்டிங்ஹவுஸ், ஜிஈ. இதில், புகுஷிமா அணுமின் நிலையத்துக்கு அணுஉலைகள் வழங்கிய ஜிஈ நிறுவனம் அடைந்த லாபம் 5 பில்லியன் டாலர். 2011, மார்ச் 11 ல் அணுஉலைகள் சேதமடைந்தன. இதற்கு ஜிஈ நிறுவனம் பொறுப்பேற்க சட்ட விதிகள் இல்லை. அப்படியே இருந்தாலும், இயற்கை பேரிடருக்கு (இந்திய சட்டத்திலும்கூட) அணுஉலை வழங்கியவர் பொறுப்பாக மாட்டார். இப்போது இந்த அணுமின் நிலையத்தை நடத்திய "டெப்கோ' காப்பீட்டுத்தொகையைவிட இழப்பீடு அதிகமாக இருப்பதால் நட்டத்தில் தத்தளிக்கிறது.
பட்டுத் திருந்துபவன் ஏமாளி. பார்த்துத் திருந்துபவன் அறிவாளி. நாம் அறிவாளியாக இல்லாவிட்டாலும்கூடப் பரவாயில்லை, நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களாலேயே கோமாளி ஆக்கப்படுகிறோமே, அதைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை!
(ஆசிரியர் தினமணி)
==============================================================================================

28.9.11

விபத்தும் வறுமையும் - எல்லாரும் மன்னர்கள்


விபத்து

இரு நாட்களுக்கு முன்புதான் சாலை விபத்துக்கள் குறைந்திருக்கின்றனவா என்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று எழுதினோம். ஆனால் அதற்கெல்லாம் ஆய்வு தேவையே இல்லை என்கிற விதமாக நேற்று திருவள்ளூரில் மூன்று மாணவர்கள் லாரி மோதி உடல் நடுங்கி இறந்திருக்கிறார்கள். நேரடியாக கவிதை வீதி சுந்தர் - களத்தில் இருந்து ஒரு ரிப்போர்ட்டும் கொடுத்து இருந்தார்.

பூந்தமல்லி சாலையில், செம்பரம்பாக்கம் பகுதியில் இருந்து சென்னைக்குள் வரும் தண்ணீர் லாரிகள், மணல் லாரிகள், கல்லூரி பேருந்துகள், நிறுவன பேருந்துகள் என்று ஒன்றன் பின் ஒன்றாக போட்டி போட்டுக் கொண்டு போகிற காட்சியைப் பார்த்தாலே மனம் பதைக்கும். இன்று மூன்று உயிர்களைக் குடித்தது. ஏற்கனவே பல உயிர்களை மணல் லாரிகள் காவு வாங்கியிருக்கின்றன. ஷேர் ஆட்டோக்கள் பலரின் உயிர்களை எடுத்தது முதற்கொண்டு எல்லாருக்கும் தெரியும். ஒவ்வொரு முறையும் ஏதாவது செய்வார்கள் என்று பார்த்தால் ஒன்றும் நடப்பது போலத் தெரியவில்லை.

ஓட்டுனர்கள் முதலாளிகள் கையில் சிக்கித் தவித்து ஒரு நாளைக்கு எத்தனை லோடு அடித்தால் சம்பளம் கிடைக்கும் என்கிற ரீதியில் தன உயிரை பணயம் வைத்து சாகசம் செய்ய வேண்டிய அவலத்திற்கு அவர்கள் தள்ளப் படுகிறார்கள் - இல்லையெனில் வேலை கிடைக்காது என்பதனால். ஒவ்வொருவரும் தங்கள் தினசரி வாழ்க்கைக் காகப் போராட வேண்டிய சூழலில் தள்ளப் படுகிறார்கள். எல்லாருக்கும் குறைந்த பட்சம் வேலை வாய்ப்பை உருவாக்கித் தராமல் - விலை வாசியைக் கட்டுப் படுத்துவது எப்படி என்று புரியாமல் - சாலை விதிகளை மதித்து நடந்தால் அவனுக்கு கிடைக்க வேண்டிய சம்பளம் கிடைக்காது என்பதானால் மீறி நடப் பவர்களை ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிற அரசுகள் - [மதிய மாநில அரசுகள்] .அவர்களைத் தானே சொல்ல வேண்டும்.

தமிழக மக்கள் அனைவருக்குமான அரசு என்பதோ அல்லது இந்தியர்கள் எல்லாருக்குமான அரசு என்பதெல்லாம் சும்மா. இந்தியாவைப் பொறுத்த வரை நான்கு நகரங்கள் முக்கியமானவை. தமிழகத்தைப் பொறுத்த வரை அவர்களுக்கு ஒரே நகரம் மட்டும்தான் முக்கியம். எல்லா வளர்ச்சிப் பணிகள் இந்த நகரங்களை சுற்றி மட்டுமே இருக்கும். தமிழக விவசாயிகள், விளை நிலங்களில் என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பவர்கள் அனைவரும் நகரங்களை நோக்கி மட்டுமே வரவேண்டும். ஆனால் அவர்களாக வேலை தேடிக் கொள்ள வேண்டும். இவர்கள் கொண்டுவரும் தொழிலகங்கள் அல்லது வேலை வாய்ப்பைப் பேருக்கும் எதுவாக இருந்தாலும் சென்னையில் மட்டுமே குடி கொள்ளும்.

வளர்ச்சிப் பணிகள், வேலை வாய்ப்பிற்கான உத்திர வாதம் இவைகளெல்லாம் அவர்களது நகரங்கள், கிராமங்களுக்கு அருகிலேயே கிடைக்கும் எனில், எதற்காக எல்லாரும் சென்னை நோக்கு வரவேண்டும்? வறுமை அவர்களை விரட்டுகிறது. உயிரைக் கொடுத்தாவது அன்றைய சம்பளத்தைப் பெற வேண்டும் என்கிற நோக்கம் - தனது உயிரோ அல்லது அடுத்தவன் உயிரோ. போகிற விலை வாசி உயர்வில் முதலாளி சொல்லுகிற படி நடந்தால்தால் வேலை. அவர் 10 லோடு அடிக்கனும்னா அடித்துத் தானே ஆக வேண்டும்- ஓட்டுனர் உரிமம் இல்லாமலே வண்டி ஒட்டித்தான் ஆக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். வயிற்றைக் கழுவத்தானே இத்தனை கூத்தும்.  
---
ஆனால் இதைவிடப் பெரியக் கூத்து.

இந்தியாவில் விலை வாசி உயர்வே இல்லை என்பது போலவும், இந்தியாவில் யாரும் வறுமைக் கோட்டுக்குக் கீழே இல்லை என்பது போலவும் மத்தியத் திட்டக் குழு அறிக்கை ஒன்று சமர்ப்பித்து இருப்பதுதான்.
மத்தியத் திட்டக் குழு அறிக்கையில், கிராமங்களில் வசிப்பவர்கள் மாதம் 965 ரூபாய் செலவு செய்தால் அவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே இல்லைஎன்று சொல்லியிருக்கிறது. அது மட்டுமல்ல நகரங்களில் வசிப்பவர்கள் வீட்டு வாடகைக்காகவோ அல்லது பேருந்திற்காகவோ மாதம் 49 ரூபாய்க்கு மேல் செலவு செய்தால் அவர்களும் வறுமைக் கோட்டுக்குக் கீழே இல்லையாம். அதனால் இந்தியாவின் மக்கள் எல்லாரும் மிகவும் நல்ல நிலையில் இருப்பதாக ஒரு மாயை உலக மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.
http://www.vikatan.com/news.php?nid=4078

சாதாரணக் கூலி விவசாயி கூட பணக் காரன்தான் அரசுகளின் பார்வையில். எதார்த்தம் தெரியாத இந்த அரசுகளா மனித வாழ்வை மேம்படுத்தப் போகின்றன - வேலை வாய்ப்பைப் பெருக்கப் போகின்றன - விபத்துக்களைத் தவிர்க்க ஆவன செய்யப் போகின்றன?

இதனால்தான் அன்றே கவி சொன்னான் போல 
"நாம் எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்று-"


மத்தியத் திட்டக் குழு நம் எல்லாரையும் மன்னராக்கி விட்டது.

26.9.11

எங்கேயும் எப்போதும்

இந்தத் திரைப்படம் நேற்று பார்த்தவுடன் எனது இரண்டு பதிவுகளை மீண்டும் பதிய வேண்டும் என்று தோன்றியது.

முதலாவது - நால் வழி மயானம் - இது விதியா [மே இந்த ஆண்டு]

  • கடந்த வருடம் மே மாத இறுதியில் என் நண்பர் ஒருவர் சாலை விபத்தில் இறந்தார். அதற்கு முன்பு பெங்களூரிலிருந்து சென்னைக்கு வேகமாக வந்தால் மூன்று மணி நேரத்திலும், கொஞ்சம் மெதுவாக வந்தால் மூன்றரை மணி நேரத்திலும் வரும் மற்றொரு நண்பர் இறந்தார். ஒருமுறை ப்ரார்த்தனாவில் 'இம்சை அரசன்' பார்க்க அடையாறு சிக்னலில் இருந்து கிளம்பி போனபோது அவரது வேகத்தில் நமக்கு மட்டுமல்ல வெளியிலிருப்பவர்களுக்கும் இம்சைதான். ஆனால் ஒரு த்ரில்லிங் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அவர்கள் இறந்த போது செய்வதறியாது நிற்கும் மனைவி, குழந்தைகள் இவர்களைப் பார்க்கிற போதுதான் மனம் செய்வதறியாது இருக்கிறது. த்ரில்லிங் எல்லாம் சுக்கு நூறாய்ப் போய் விடுகிறது.
  • நால்வழிச் சாலைகளினால் பயனே இல்லையா என்றெல்லாம் இல்லை. நமக்குப் பயன்படுத்தத் தெரியவில்லை என்றுதான் பொருள்.
  • வழுக்குசாலைகள். முன்பு முதல் நாள் இரவு பேருந்து எடுத்தால் அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு மேல்தான் சென்னைக்கு வந்து சேருவோம். அது படிப் படியாய் நேரம் குறைந்து இப்போது எவ்வளவு நேரத்தில் போகும் என்ற நேரத்தையே பேருந்துகளில் விளம்பரமாய் எழுதி வைத்து விடுகிறார்கள். ஆனால் நால்வழிச் சாலைகளில் பயங்கரத் தடைகள். ஒவ்வொரு ஊருக்கு நடுவிலும் குறுக்குச் சாலைகள். ஒரு பக்கமே செல்ல வேண்டிய சாலைகளில், சொந்த ஊரின் நண்பர்கள் பெற்றோலை சேமிக்க அதிலேயே எதிர்ப் புறம் வர, மாடுகள் குறுக்கே வர, டிராக்டர்கள் திடீரென முளைக்க, டாங்கர்கள் படீரென வளைக்க - இவைகளையெல்லாம் தாண்டி நான்கு நான்கரை மணி நேரத்தில் சென்னைக்குச் செல்லும் ஓட்டுனர்களின் வீரம் தான் தினம் தினம் நாள் வழிச் சாலையை மயானமாக்கிக் கொண்டிருக்கிறது.
  • கம்பியூட்டரை எதுக்குப் பயன்படுத்துரான்களோ இல்லையோ போலி உரிமம் வழங்க நிறையப் பயன் படுத்துகிறார்கள். இருநூற்றி ஐம்பது ரூபாய்க்கு உரிமம் வழங்கும் DTP சென்டர்கள் சென்னையில் நிறைய இருக்கின்றன.
  • மஞ்சள் கோடு, இடைவெளியிட்ட வெள்ளைக் கோடுகள், இடைவெளியில்லா வெள்ளைக் கோடுகள் இதற்கெல்லாம் என்ன அர்த்தம்னு எத்தனை ஓட்டுனர்களுக்குத் தெரியும் என்பதே பெரிய கேள்விக் குறிதான். indicator இல்லாத வண்டிகள்தான் அதிகம் - அப்படியே இருந்தாலும் அதைப் பயன்படுத்துவது இல்லை. எப்படிப் பயன்படுத்தனும்னு தெரியாது. வலது பக்க இண்டிகேட்டரை வலது பக்கம் திரும்பவும் பயன்படுத்துகிறார்கள், பின்னால் வரும் வண்டியை முன்னே போக அனுமதிக்கவும் பயன்படுத்துகிறார்கள். இவன் எதுக்குப் போடுறான்னு பின்னாடி வர்ற வண்டிக்கு எப்படிப் புரியும்? அவன் என்ன கடவுளா? நம்மை போகச் சொல்றான்னு பின்னாடி வர்றவன் முன்னாடிப் போக, முன்னாடிப் போறவனும் வலது பக்கம் திரும்ப அப்புறம் என்ன 'சங்குதான்.'
  • லேன்கள் உள்ள சாலைகளில் மெதுவாகப் போகிறவன் இடது பக்கம்தான் போக வேண்டும் - அப்போதுதான் overtake பண்றவன் அடுத்த லேனில் போக வசதியாக இருக்கும் - ஏனெனில் ஓட்டுனர் இருக்கை வலது புறம் தான் உள்ளது. ஆனால் இங்கே மெதுவாப் போறவன் வலது பக்கம் போறான் - எப்படி ஓவர்டேக் பண்ண முடியும் - அதுக்குத் தான் வண்டிக்கு கிளீனர் வேற... அப்பா சாமி...
  • நால்வழிச் சாலை என்பதால் வழுக்கிக் கொண்டு செல்லாம்னு லேட்டகக் கிளம்புவது - அப்புறம் ஓட்டுனரைக் குறை சொல்லவும் கூடாது. நேரத்தோடு கிளம்பி முன்பே போய் சேருவோம் என்கிற எண்ணம் இல்லாமல், லேட்டாகக்க் கிளம்பி மொத்தமாய்ப் போய்ச் சேருவதுதான் வழக்கமாய் இருக்கிறது.
  • ஓட்டுனர்களின் உணர்வு கட்டுப் பாடு என்பதும் இல்லாமல் போய் விட்டது. யார் மேலயாவது கோபம்னா அதை வண்டி ஓட்டும்போதுதான் காண்பிக்கிறோம். சைக்கிள் gap பில் ஆட்டோ ஓட்டுற ஆட்கள் தான் அதிகம்.
  • ஒட்டுனராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் விபத்தை ஒழிக்க முடியாது.

இரண்டாவது பதிவு
சாலை மரணம் - நவீனக் கொடை [கடந்த ஆண்டு - ஜூன்]
  • முன்பெல்லாம் யாராவது இறந்தால் எப்போது இறந்தார் என்று கேட்பார்கள். அவர் காலையில் இறந்தார் அல்லது மாலையில் இறந்தார் என்று பதில் கிடைக்கும். இப்போது யாரவது இறந்தால் - எங்கே இறந்தார் என்கிற கேள்வியும் அதற்கு பதிலாக - சாலையில் இறந்தார், அல்லது ஓடு பாதையில் இறந்தார் அல்லது ரயில் பாதையில் இறந்தார் என்கிற பதிலே கிடைக்கிறது.
  • முன்பு இறந்தவர் - இயற்கை எய்தினார் என்று சொல்வோம். ஆனால் இப்போது நடப்பதையெல்லாம் பார்த்தால் இயற்கை எய்தினார் என்று சொல்வதற்கு மனம் ஒப்பவில்லை, ஏனெனில், பலரது வாழ்க்கை முடிதல் என்பது செயற்கையாகவே முடிகிறது அல்லது முடிக்கப்படுகிறது.
  • மானிட உயிர் விலை மதிப்பற்றது. ஆனால் ஏன்தான் நமது ஊர்களில் இப்படி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன என்பது தெரியவில்லை.
  • சாலை ஒழுங்குகள் இன்னும் சரிவர கடைபிடிக்கப் படுவதில்லை என்பதைக் காட்டிலும், அதை நடைமுறைப் படுத்துவதற்கு அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்கிற குற்றச் சாட்டை முதன்மைப் படுத்தலாம். உள்ள விதிகளை எல்லாரும் கடைப் பிடிப்பதற்கும் அல்லது அனைவரும் அறிந்து கொள்வதற்கும் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. எதெற்கெல்லாமோ இந்த அரசுகள் விளம்பரம் மேற்கொள்கின்றார்கள். அதைத் திறக்கிறார்கள், இதற்கு மாலையிடுகிறார்கள், அவருக்குப் பிறந்த நாள், இவருக்கு நினைவு நாள் - சாலை விதிகளை மதித்தது நடப்பது பற்றி விளம்பரம் குடுத்தால் குறைந்தா போவார்கள். சரி கஜானாவில் காசு இல்லையென்றால், உள்ள அனைத்து ஊடகங்களும் இதை வெளியிட வேண்டும் என்று ஒரு சட்டம் போட்டால் செய்ய முடியாதா என்ன?
  • சரி - ஒழுங்காக ஓட்டுனர்களுக்கான உரிமம் வழங்கப் படுகிறதா? அதுவும் இல்லை. ....

இரண்டையும் முழுமையாய் படிக்க கீழே சொடுக்கவும்.

நால்வழி மயானம்

சாலை மரணம் நவீனக் கொடை

இனி சில வார்த்தைகள்

நேரெதிரே மோதிக்கொள்ளும் பேருந்துகளின் பயணிகளின் ஊடகப் பயணிக்கும் ஒரு கதை. இதை வெறும் திரைப் படமாக மட்டும் அழகியல் நோக்கில் பார்த்தாலும், வாழ்வின் நிகழ்வுகளை மிகவும் கச்சிதமாய்ச் சொல்லியிருக்கும் படம் என்று பார்த்தாலும் அதைப் பற்றி பேசுவதற்கு இந்தப் படத்தில் நிறைய இருக்கின்றது. இந்தத் திரைப் படத்திற்குப் பிறகு எல்லா ஓட்டுனர்களின் மனதிலும் குறைந்தது மீண்டும் வீட்டுக்குப் போகும் வரையாவது மிகவும் கவனமாகப் போகிற அளவுக்கானத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மட்டும் நிச்சயம்.

"திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" - அது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு "ஓட்டுனராய்ப் பார்த்து திருந்தா விட்டால் விபத்தை ஒழிக்க முடியாது" என்பதை மட்டும் சொல்லலாம்.

இந்தப் படம் வெளி வந்த பிறகு விபத்துக்கள் குறைந்திருக்கிறதா என்று யாராவது ஆய்வு செய்யலாம். குறையவில்லையெனில் - வெறும் ஓட்டுனர்களின் கவனமின்மையைச் சொல்லித் தப்பித்துக் கொள்ள முடியுமா என்று தெரிவில்லை. ஏனெனில் திருடர்கள் திருடவதற்கான அல்லது அதில் நுழைவதற்கான பல சமூகக் காரணிகள் உண்டு. அது போலவே ஓட்டுனர்களும் யாரும் தான் வேண்டுமென்றே விபத்தை உருவாக்குவதும் இல்லை. அந்தக் காரணிகளும் அலசப் பட வேண்டியிருக்கிறது.

ஆனால் ஓட்டுனர்கள் இன்னும் சிறிதே முயன்றால் - பல விபத்துக்களை தினம் தினம் தவிர்ப்பது போல இன்னும் நிறையத் தவிர்க்கலாம்.

நாம் அதன் அங்கமாய் இல்லாத வரை இது எங்கேயோ எப்போதும் நடப்பதுதான். நாம் அதில் உள்ளபோதே நமக்குத் தெரியும் - இது இங்கேயும் இப்போதும் நடந்தது விட்டதே என்று - அதை உணர்வதற்கான அளவிற்கான நினைவிருந்தால்.  


எப்போதாவது நடந்தால்தான் விபத்து - எங்கேயும் எப்போதும் நடந்தால் அது என்ன?