அதிகாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அதிகாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6.10.14

எங்கெங்கு காணினும் சக்தியடா !


எங்கெங்கு காணினும் சக்தியடா தம்பி 

ஏழுகடல் அவள் வண்ணமடா - அங்குத் 
தங்கும் வெளியினிற் கோடியண்டம்  - அந்தத் 
தாயின் கைப்பந்தென ஓடுமடா!.. 
- பாரதி தாசன்

##########
நான் என்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். சில சமயங்களில் நடக்கும் நல்லதெல்லாம் உண்மைதானா - என்று உணர்ந்தது கொள்வதற்கு இப்படிச் செய்வதுண்டு. ஆனால் கடந்த இருபத்தி ஏழாம் தேதியிலிருந்து நடக்கும் பல நல்லவைகளை நினைத்துப் பார்க்கும் போது இவைகளெல்லாம் உண்மைதானா என்று என்னையே கிள்ளிப் பார்த்து பார்த்து நகக் கண்கள் உடைந்தே போய்விட்டன. கிள்ளிப் பார்ப்பதற்கு என்னுடம்பில் இடமும் இல்லாமல் போய்விட்டது. எங்கெங்கு காணினும் அம்மாவே! காலை செய்தித்தாட்களில், சாலையில் போஸ்டர்களில், நாள் முழுவதும் தொலைக்காட்சிகளில் என எல்லா இடங்களிலும். ஆளும் கட்சி இடைத்தேர்தல்களில் மட்டுமல்ல, நீதித்துறையை எதிர்ப்பதிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதற்காக எதையும் செய்வதற்குத் தயாராக இருக்கின்றது.

பதிவியில் இருக்கும் போது தண்டனை பேரும் முதல் நபராக மட்டும் அவர் அல்ல. அப்படிப் பதவியில் இருக்கும் போது அந்தத் தண்டனையைக் கூட தனக்கு சாதகமானதாக மாற்றக்கூடிய சக்தியையும் கொண்டவர் என்பதை என்பித்திருப்பதிலும் அவர்தான் முதல்வர்.
இது நீதித் துறைக்கு நல்லதல்ல.

###

ஆளும் கட்சி, தான் எப்போதும் தனது தலைவருக்கு விசுவாசம் உள்ளவர்கள் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது. அதைத்தான் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒன்றுமில்லாமல், ஒரு சில இடங்களில் இருந்த இந்த விசுவாசக் காட்சிகளை தமிழகம் முழுவதும் பரப்பி விட்ட பரப்புரையாளர்கள் நமது செய்தித் தாள்களும், செய்தித் தொலைக் காட்சிகளும். 
பெயருக்கு ஒன்றிரண்டு ஊடகங்களைத் தவிர ஒட்டு மொத்தமாக பத்திரிக்கைகள் இது நீதித் துறையின் வெற்றியாகவோ, அநீதிக்குக் கிடைத்த தண்டனையாகவோ கருதாமல் - சிலரின் சூழ்ச்சிகளால், மாயவலைக்குள் அவர் சிக்கிக் கொண்டது போல சித்தரித்தால், படிப்பவன் என்ன நினைப்பான்? நேற்று தொடங்கி இன்று தண்டனை விதித்தால் அதில் சூழ்ச்சி பற்றிப் பேசலாம். இதில் எப்படிப் பேசுவது? பத்திரிக்கைகள் தங்களது நம்பகத் தன்மையை முற்றிலுமாக அடகு வைத்து விட்டன. 
இதன் மூலம் பத்திரிகை சுதந்திரத்தை இவைகள் அடகு வைத்து விட்டன. இது பத்திரிகை தர்மத்திற்கு நல்லதல்ல.

###

ஒட்டு மொத்த சினிமாத் துறையும், ஒருங்கே அமர்ந்து - அல்லது அவ்வாறு இருந்தது போல ஒரு பிரம்மையை உருவாக்கி அதில் நீதி அரசர்கள் அமர்ந்து இருப்பதைப் பார்த்த போது- 
ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை எல்லாம் திருத்தவே முடியாது என்று நமக்கு சொன்ன விவேக் நீதியரசராகத் தெரிந்தார்.
ஊழலுக்கு எதிராக அன்னியனான விக்ரம் நீதியர்சராகத் தெரிந்தார்.
தெய்வத்தை மனிதன் தண்டிக்க முடியுமா 
என்ற வசனத்தைப் பார்த்த போது 
ஐயகோ 
எந்த வசனகவிக்கும் தோன்றாத இந்தச் சிந்தனை எந்த நீதியரசருக்குத் தெரிந்தது என்று உள்ளுக்குள்ளே 
குடைந்து எடுத்து விட்டது.

இவர்கள் ஏன் நீதியர்சர்களாகவோ, அடுத்த முதல்வர்களாகவோ வரக்கூடாது?
இந்தப் போக்கு சினிமாவிற்கும் நல்லதல்ல
தமிழகத்துக்கும் நல்லதல்ல.

###

அன்னைக்கு ஆதரவாக தனியார் பள்ளிகள் மூடப்படும் என்று அறிக்கை விட்டு மீண்டும் அதை வாபஸ் செய்தது / நீதித் துறைக்கான முடிவுகளில் பள்ளிகள் தலையிடுவது ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய பள்ளிகள் தடம் புரள்கின்றன என்பதையே காட்டுகிறது. இது நல்லதல்ல.
###

கட்சி ஆட்சியில் இருக்கும் போது அதன் தலைவர் சிறை பிடிக்கப்பட்டால் இது போன்ற நிகழ்வுகளை எல்லாம் இனிமேல் சர்வ சாதரனமாய்ப் பார்க்கலாம். இந்த நிகழ்வுகளெல்லாம் நமக்குள் பல கேள்விகளை கொடுக்கின்றன.

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விடயங்கள் இன்றைய இளைஞர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. வரலாறு தெரியாமல் இருந்தால் என்னென்ன பாதகங்கள் நிகழும் என்பதற்கு இதுவே சாட்சி. ஆனால் பத்திரிகைகளுக்குத் தெரியவில்லை என்பது மிக ஆச்சரியமானதே! வரலாறு தெரியாமல் இருக்க முடியுமா?

ஜனநாயக நாட்டில், மக்கள் போராட்டங்கள் என்பது அவர்களுக்கான உரிமை. ஒரு ஊழல் வாதியை தங்களது தலைவர்களாக ஏற்றுக்கொள்வது அவர்களது சுதந்திரம். அதில் தலையிட நாம் யார். அதற்காக சாதாரண மக்களை துன்பத்திற்கு ஆளாக்குவதை யாராவது அவர்களது உரிமை என்று சொல்லிவிட முடியுமா? 

இத்தைகைய போக்கு, இன்றைய தேதியில் ஆயிரக்கணக்கான கோடிகள் அளவிற்கு ஊழல் செய்தவர்களுக்குச் சாதகமாக இருக்குமே தவிர வேறு யாருக்கும் எந்த வித நன்மையையும் செய்து விட முடியாது. இனிமேல் ஊழல் வழக்குகள் என்று வந்தால் அதனால் தண்டிக்கப் படப போவது சாதாரண ட்ராபிக் கான்ஸ்டபிள்கள் மட்டுமே. பழம் தின்னிக் கொட்டைகள் எல்லாரும் மிகச் சாதரணமாய் ஒரு பேருந்தை எரிப்பதன் மூலம் தப்பித்து வரமுடியும். அறிவாளிகள், தாங்கள் ஆட்சியில் இருக்கும் போதே தங்கம் மீதான வழக்குகளை எதிர் கொண்டு இலகுவாக வெளியே வந்து விட முடியும்.
ஊழல் வழக்குகள் தவறு என்று சொல்லிவிட முடியுமா?

தவறு செய்தவர்கள் திருந்தலாம். இல்லையென்று மறுப்பதற்கில்லை. அதற்காக செய்த தவறுகளுக்கு தண்டனை இல்லை என்று சொல்ல முடியுமா? 
###

மூடர்கள் இருக்கும் வரை ஊழல் பேர்வழிகள் உருவாகிக் கொண்டே இருப்பார்கள்.
###


துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? -

அறமி தென்றும் யாம் மறமி தென்றுமே
அறிகி லாத போது - யாம்

அறிகி லாத போது - தமிழ்
இறைவ னாரின் திருக்குறளிலே ஒருசொல்



இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
இயம்பிக் காட்ட மாட்டாயா? 
பாரதிதாசன் 







20.3.13

தமிழின எழுச்சியும் மக்களாட்சியும்

இந்த மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி கொண்டுவரப் படும் தீர்மானம் - அதில் இந்தித் திருநாட்டின் அணுகுமுறை - இதையெல்லாம் தாண்டி தமிழகத்தில் உருவான இந்த பேரெழுச்சி தான் எனக்கு மிக முக்கியமானதாகப் படுகிறது.

இந்தித் துணைக் கண்டத்தின் மிகப் பெரிய சக்தியாக விளங்கும் இந்தி நாட்டின் வல்லமை குறித்து இங்கு யாரும் மிகப் பெரிய சர்ச்சை எல்லாம் உருவாக்க வில்லை. ஒரு ஜன நாயக நாட்டில் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளை உடைய இனங்கள் ஒன்றாக வாழும் போது நிச்சயமாக சிறு இனங்கள் மதிக்கப் படாமல் இருப்பது நடக்கத் தான் செய்யும். சில சமயங்களில் இந்த மாதிரி அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பது தெரியாமல் நடக்கிற விஷயம். சில சமயங்களில் ஓர் இனம் தான் அங்கீகரிக்கப் பட வில்லை என்பதை ஆள்பவர்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் மிகக் கொடிய விஷயம். சிற்றினக் குழுக்கள் தங்களது அங்கீகாரம் பற்றியெல்லாம் எண்ணக் கூடாது என்று நினைப்பதுதான் மிகவும் மோசமானது. நம் நாட்டில் அதுதான் நடக்கிறது என்று தோன்றுகிறது.
இஸ்லாமியர்கள் தனகளது அங்கீகாரம் பற்றி பேசக் கூடாது. தமிழர்கள் தங்களது அங்கீகாரம் பற்றி நினைக்கக் கூடாது என்றெல்லாம் நினைப்பது எல்லாம் மெஜாரிட்டெரியனிசத் தின் வெளிப்பாடுதான். 

இந்தி(ய) நாட்டில் எல்லா குடிமக்களும் மதிக்கப்படுகிறார்கள் என்ற நினைப்பை திரு மன்மோகன் சிங் கொண்டிருக்கலாம். ஆனால் உண்மை நிலவரம் அது இல்லை என்று தமிழக மக்கள் நினைக்கிறார்கள் அல்லது இஸ்லாமிய மக்கள் நினைக்கிறார்கள் என்றால் ஒரு அரசு என்ன செய்ய வேண்டும்? ஏன் தனது குடிமக்களில் சிலர் அவ்வாறு நினைக்கிறார்கள் - எங்கே தவறு நடந்திருக்கிறது என்று யோசிக்க வேண்டும். அப்படி நினைக்கிற போதுதான் அந்த நாட்டின் குடிமக்கள் தான் இந்த நாட்டின் உறுப்பினர் என்கிற உண்மை நிலையை அடைவார்கள்.

அதை ஒரு போதும் செய்யாமல் - என்ன நடக்கிறது என்பதை நாங்கள் பிரதம மந்திரிக்குத் தெரியப் படுத்துவோம் - இதை அவருக்குச் சொல்வோம் என்று மந்திரிகள் சொல்வதைக் கேட்கும் போது பிரதம மந்திரி பேப்பர் படிப்பதில்லை,  செய்திகள் பார்ப்பதில்லை என்றுதான் தோன்றுகிறது. இது மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. எதோ மன்னராட்சி நடப்பதைப் போல அரசனுக்குத் தெரியப் படுத்தும் தலையாட்டி மந்திரிகள் சொல்லுவதைப் பார்க்கும் போது சிரிப்புத்தான் வருகிறது.

சில பேர் கேட்கலாம் - இப்படி ஒவ்வொரு போராட்டத்திற்கும் பதில் சொல்லுவதும் அதற்குண்டான அங்கீகாரத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தால் பிரதம மந்திரிக்கு வேறு வேலையே இல்லையா.
தன் நாட்டு குடிமக்களின் நலனை விட வேறு என்ன அடிப்படைவேலை இருக்கிறது?

அதுமட்டுமல்ல - எப்போது நாம் மக்களாட்சி என்பதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டோமோ அப்போதே நாம் இது போன்ற போராட்டங்களுக்குச் செவிமடுக்க வேண்டியது மிக அவசியமாகிறது. இல்லையெனில் இலங்கை அரசு தமிழர்கள் மேல் தொடுத்த இனப் படுகொலைக்கும், இந்திய அரசு தமிழரின் குரலுக்குச் செவி மடுக்காததற்கும் எந்த விதமான வேறு பாடும் இல்லை.

[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]][]


ஏன் நான் ஒவ்வொரு முறையும் போராட்டங்களுக்கு ஆதரவாகவே எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று நான் என்னையே கேட்டுக் கொள்வது உண்டு.

இந்த நாட்டில் எதுவுமே சரியில்லை என்று எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு பெசிமிஸ்ட்டா நான்?
அல்லது பாலாவை ஒரு சாடிஸ்ட் என்று சிலர் கூவுவதைப் போன்று, பலர் போராடுவதில் சுகம் காணும் ஒரு சாடிஸ்டா நான்?
அல்லது போராடி போராடி அடி வாங்கி வீங்குவதில் சுகம் காணும் மசோக்கிஸ்டா?
பெசிமிஸ்டும் இல்லை சாடிஸ்டும் இல்லை - ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.

ஜனநாயக நாட்டில் தங்களது அங்கீகரத்தையும் உரிமைகளையும் போராடித்தான் பெற வேண்டும் என்று மக்களாட்சித் தத்துவத்தின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்துக் கொண்டிருக்கிற சாதாரண இந்திக் குடிமகன்.

எதெல்லாம் எம் இனத்திற்கான அவமானமாக இருக்கிறதோ - எப்போதெல்லாம் நாம் அழிக்கப்படும் சூழலில் இருக்கிறோமோ - ஆபத்தான சூழலில் இருக்கிறோமோ அப்போதெல்லாம் இந்த ஜன நாயகத்தின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்துப் போராடும் மக்கள் இந்த நாட்டின் மீது கொண்டிருக்கிற நம்பிக்கை நீர்த்துப் போய் விடக் கூடாது என்று நினைக்கும் குடி மக்களின் இனத்தில் நானும் ஒருவன்.

இந்தி நாடு என் தாய் நாடு இல்லை என்றாலும் அது என் நாடு என்று நினைக்கும் சில கோடிகளில் நானும் ஒரு கடைக் கோடி.

நம்மைக் காப்பாற்ற இன்னொரு காந்தியோ இன்னொரு காமராஜரோ வருவார் என்று காத்துக் கிடப்பதைக் காட்டிலும், ஒன் மேன் ஆர்மியில் நம்பிக்கை இழந்த ஆனால் மக்களின் மகத்தான சக்தி மீது நம்பிக்கை கொண்டவன்.

ஐந்து வருடத்திற்கு மட்டும் அரசியல் என்று மக்கள் நினைப்பதைத் தாண்டி, அரசியல் தளத்தில் மக்கள் தொடர்ந்து பங்கெடுக்கிற குடிமக்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பலர் போல் ஒருவன்.

[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]



இந்த தமிழின எழுச்சி மிக அவசியமானதும் மிகவும் தேவையானதும் கூட.
நான் இந்த எழுச்சி அவசியம் என்பதனால் தமிழகம் பிரிந்து விட வேண்டும் என்று எந்த விதத்திலும் நினைக்க வில்லை. இந்தி(யா) என்கிற எமது நாடு பிரிந்து போய் விடக் கூடாது என்பதிலும் நான் உறுதியாய் இருக்கிறேன்.

இது மற்ற மாநிலங்களில் எல்லாம் சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கும், அவர்களது சொத்துக்களை சுரண்டிக் கொழுக்கும் நம் பிற இனச் சகோதர்கள் கொக்கரிக்கும் நாட்டு ஒற்றுமை அல்ல. ஒரு நாடு என்பது எல்லா இனங்களையும் மதித்து நடக்க இந்த நாடு உலகத்திற்கு இன்னும் ஒரு மாதிரிகையாய் இருக்க வேண்டும் என்கிற நல்ல எண்ணமே.

இந்த எண்ணம் இந்தியக் கலாச்சாரத்தில் ஊறிக் கிடக்கிற எல்லா இனத்தவருக்கும் வர வேண்டியது அவசியம் -    கொழுப்பதற்கு மாத்திரம் அல்ல.  இதைக் குடிமக்கள் மட்டுமல்ல ஆள்பவர்களும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதனால் இது இன்னும் இந்தியா என்பதைத் தாண்டி யு.எஸ்.ஐ. -யுனைட்டட்  ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா என்கிற இது அழைக்கப் பட வேண்டும் என்றே ஆசைப் படுகிறேன். 

ஒரு நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பில்லா வண்ணம் அதே சமயத்தில் இன்னும் அதிகமாக இனங்கள் மதிக்கப் படுவதற்கும், தங்களது சுதந்திர உணர்வுகளோடு வாழ்வதற்கும் யு.எஸ்.ஐ. வழிவகுக்கும் என்றே நம்புகிறேன். எனவே ஒன்றிணைக்கப்பட்ட இந்தியா என்பதை வலியுறுத்துவதே நல்லது என்று கருதுகிறேன். அதற்கான முதல் படியாகவே இன எழுச்சி என்பதைக் கருத வேண்டியிருக்கிறது.

ஏனெனில் எந்த விதத்திலும் தனி இனம் ஒன்று ஆட்சி அமைப்பது என்பது மெஜாரிட்டேரியன் ஆட்சியாகத்தான் அமையும். அதைத் தவிர்க்க வில்லை என்றால் அது பாசிசத்திற்கே வழி வகுக்கும். ஹிட்லர் ஆட்சி செய்ததைப் போல அல்லது ஸ்டாலின் போல. பாசிசம் என்பது எந்த ஆட்சி தத்துவத்திலும் சாத்தியம் என்பதே நமக்கு வரலாறு சொல்லும் பாடம்.

தனி இனங்களின் அங்கிகாரம் மதிக்கப் படவில்லைஎன்றால் இந்தியா பாசிசப் பாதையில் மிக வேகமாய் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்றே அர்த்தம். அது கூடிய விரைவில் இன்னுமொரு ஹிட்லர், இன்னுமொரு ராஜ பக்சேவை நான் இந்தியாவில் சந்திக்க வைக்கும். அப்போது நாம் கருத்துக்கள் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. - வலைகள் கூட முடக்கப் படலாம். வாய்கள் ஒட்டப் படலாம், கால்கள் ஒடிக்கப் படலாம், கரங்கள் முறிக்கப் படலாம் - அப்போது வெறுமனே ஜெய் ஹிந்த் மட்டுமே சொல்ல வாய் திறக்கும் ஜன நாயக குடி மக்களாக இருப்பார்கள் இந்தியக் குடிமக்கள். இதைத்தானா நாம் நமது சந்ததியினருக்கு விட்டுச் செல்ல விரும்புகிறோம்?

[[[[[[[[[[]]]]]]]]]][[[[[[[[[[]]]]]]]]][[[[[[[[[[]]]]]]]]]][[[[[[[[[[]]]]]]]]]][[[[[[[[[[]]]]]]]]]


17.11.11

பிரித்தாளும் சூழ்ச்சி - ஆங்கிலேய அரசியலின் எச்சம்

பிரித்தாளும் சூழ்ச்சியால் தான் ஆங்கிலேயரின் ஆதிக்கம் இந்த மண்ணில் நீண்ட நாட்களாக இருந்தது என்பதை வரலாற்றுப் புத்தகங்கள் சொல்லுகின்றன. அந்த வரிசையில் பல்வேறு போராட்டங்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியின் சூத்திரத்தின் படியே அரசு இயந்திரங்கள் தொடர்ந்து மேற்கொள்வது நாம் இன்னமும் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் தான் இருக்கிறோமா என்று நினைக்கத் தோன்றுகிறது.


நம் அரசியல் வாதிகள் பல்வேறு வழிகளில் ஒரு போராட்டத்தை உடைக்கப் பார்ப்பார்கள். கூடங்குளம் அணுஉலை பிரச்சனையில் ஒவ்வொன்றாக முயற்சி செய்தார்கள். இதை அவர்களாகவும் செய்வார்கள் மற்றவர்களை வைத்தும் செய்வார்கள். சில சமயங்களில் பத்திரிக்கைகள் செய்கின்றன. உல் நோக்கத்தினால் தூண்டப் படுகிற சில தனி நபர்கள், இயக்கங்கள் என அதற்குப் பல முகங்கள் உண்டு. பிளவுகளை தமிழகம் முழுவதும் இன்னும் அதிகப் படுத்தி - கூடங்குளம் என்கிற ஒன்றை தமிழகத்தின் ஒரு சிறு பகுதியின் உள்ள பிரச்சனையாகவும் அதனால் மற்ற பகுதிகளில் உள்ள மக்களெல்லாம் அவர்களுக்கு எதிராக குரல் எழுப்ப முயற்சி செய்து வருகிறார்கள். இதன் மூலம் அந்தப் பகுதி மக்கள் எல்லாம் அறிவியல், தொழில் நுட்ப வளரச்சிகளுக்கு எதிரானவர்களாகவும், பழமை வாதிகளாகவும் சித்தரிக்க ஒரு முயற்சி. 
  • அறிவற்றவர்கள் vs அறிவுள்ளவர்கள் 
    • அறிவற்றவர்கள் vs அறிவுள்ளவர்கள் என்கிற பிளவினை உண்டு பண்ணப் பார்த்தார்கள். அதாவது போராடும் மக்களுக்கு பொருளாதார அறிவு இல்லை அதோடு அறிவியல் அறிவும் இல்லை என்று நினைத்து இந்த இரண்டில் அவர்களை போராட்டக் காரார்களை வெற்றி பெறச் செய்ய முடியுமா என்று பார்த்தார்கள்... இவ்வளவு கோடிக்கணக்கில் செலவு செய்ததற்குப் பிறகு அதை எதிர்த்தால் அவர்களுக்கு அறிவில்லதானே என்றார்கள். 
      • இதற்குப் பதில் ஒரு பாட்டி சொன்னதாக மாலதி மைத்ரி பகிர்ந்து கொண்டதை ஜெயமோகன் தனது அனுபவப் பகிர்வில் பகிர்ந்து கொண்டிருந்தார். அதை அப்படியே பதிவு செய்கிறேன். "இத்தனை செலவிட்டபின் இதை நிறுத்தமுடியுமா என்று இன்று இதழ்களில் எழுதியிருக்கிறார்கள். இங்கே ஒரு பாட்டியிடம் அதைப்பற்றி கேட்டேன். ’பத்துலட்சம் செலவு செய்து பந்தல் போட்டுவிட்டு பையனுக்கு எய்ட்ஸ் சீக்கு என்று தெரிந்தால் கல்யாணத்தை நிறுத்தமாட்டோமா? இல்லை பந்தலுக்காகத் திருமணத்தை நடத்துவோமா?’ என்று கேட்டார்’ என்றார்."   [நன்றி - திரு. ஜெயமோகன் ]
      • பல கோடிகள் செலவிட்டு அணு ஆயுதம் வெடிக்கலாம் - ராக்கெட் செயலிழந்து போகலாம் - அதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை... அதற்கெல்லாம்தான் கோடி கோடியாகச் செலவு செய்தார்கள். அதனால்தான் பல கோடிகள் செலவு செய்து ஆயுதங்கள் வாங்கிக் குவித்து விட்டு வேஸ்டா போகுதுன்னுதான் பாகிஸ்தானோட சண்டை போடுறீங்களா ... அப்ப வச்சிருக்கோம் வேஸ்ட்டா போகுதுன்னு சண்டைக்கு கூப்பிடுறீங்களா? அது சரி பாட்டி கேட்ட கேள்விக்கே பதிலைக் காணோம் அப்புறம் எதுக்கு இன்னமும் கேள்வி..
  •  தெற்கு Vs வடக்கு 
    •  அடுத்து பாதுகாப்பு அம்சம் பத்தி கதிர்வீச்சு இது பத்தியெல்லாம் பேசுறாங்க என்னடா பண்ணலாம் - உடனே என்ன சொன்னாங்க கல்பாக்கத்துல அணு உலை இல்லையா?அது பாதுகாப்பா இல்லையான்ன உடனே தெற்கு Vs வடக்கு அப்படின்னு போட்டுப் பாத்தாங்க. சில சென்னை நண்பர்களும் உடனே ஆமா அது சரிதானே. நாங்கல்லாம் அதுலதானே இருக்கோம் அப்புறம் உங்களுக்கு மட்டுமென்ன. 
      • உடனே அதுக்கு சிலர் ஒன்று சேர்ந்தது [பூவுலகின் நண்பர்கள் மற்றும் பலர் சேர்ந்தது] கல்பாக்கம் ஒன்னும் பாதுகாப்பா இல்லை அங்கேயும் ப்ராப்ளம் இருந்துச்சு ஆனா வெளில வர விடாம பண்ணிட்டாங்கன்னு வெளியில வந்த உடனே -[இதுவரைக்கும் கல்பாக்கத்துல ஒரு மாதிரி எவாகுவஷன் கூட செய்யவில்லை / பலருக்கு இப்பவே கதிர் வீச்சு அபாயங்கள் ' சுனாமி சமயத்தில் நடந்தது ] அதுனால இப்ப அணு உலை எங்கேயும் வேண்டாம். கல்பாக்கத்துலையும்  வேண்டாம்னு நண்பர்கள் சொல்றாங்க.
  • வசதி Vs வசதியின்மை
    •  இதென்னடா வம்பாப் போச்சுன்னு வசதி Vs வசதியின்மை அப்படின்னு ஒரு பிளவுக்கு முயற்சி செய்தார்கள். மின்வெட்டு என்பதை அதிகமாக்குவது. விலைவாசி உயர்வது, பொருளாதாரம் வீழ்கிறது. ரொம்பக் கஷ்டம் ... அடடா என்ன பண்றது... அணு  உலைதான் ஒரே தீர்வு. கலாமைக் கூப்பிட்டு சொன்னார்கள். அப்படியா?
      • இதுவரைக்கும் இந்தியாவின் மின் தேவைகளைப் பூர்த்தி செய்வது அணு உலை மின்சாரங்கள் இல்லை என்பதும்.. அப்படியே வைத்தாலும் அது அதிக பட்ச தேவையை எல்லாம் செய்யாது என்று சில நல்ல விஞ்ஞானிகள் சொல்லுகிறார்கள். தமிழகம்தான் காற்றாலை வழி மின்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே ஒரு அணு உலை இருக்கு. [ராஜஸ்தான்ல மட்டும்தான் இரண்டு இருக்குன்னு நினைக்கிறேன்.] 
      • என்னைப் போன்ற விவரம் தெரியாதவர்கள் என்ன கேக்குறாங்கன்னா - எதுக்கு தமிழ் நாட்டுலே இன்னொன்னு. கேரளாவிலை வை. கர்நாடகாவில வை. இதுவரைக்கும் அணு உலையே இல்லாத ஸ்டேட்ல வை....  கேட்டா உடனே திருப்பி ஒண்ணுக்குப் போவாங்க... [பாயிண்ட் நம்பர் ஒன்னுக்கு]... அதுதான் ஏற்கனவே பாட்டி சொல்லிட்டாங்களே. 
      • உற்பத்தி செய்கிற மின்சாரத்தை எல்லாம் வெளி மாநிலங்களுக்கு விற்பது, இன்னும் உலை வைத்து அதையும் விற்று நம்ம உயிருக்கும் உலை வைக்கவா... 
  •  ஆள்பவன் Vs அளப்படுபவர்கள்
    •  ஆகா இது இந்திய தேசியத்துக்கு உலை வச்சுருவாங்க போல இருக்கேன்னு அடுத்துப் போடுறா வருமான வரித்துறை...அதுதான் ஆள்பவன் Vs அளப்படுபவர்கள். [முந்தையப் பதிவைப் படியுங்கள்] உதயகுமார் ஒரே வார்த்தையில் பதில் சொல்லிட்டார். மடியில கனமில்லை வழியில பயமில்லை.
அடுத்த ஆயுதம் மதமும் சாதியையும் ----  கிறித்தவப் பாதிரியார்கள்தான் வேண்டுமென்றே குழப்பம் விளைவிக்கிறார்கள் என்று அதுக்கு மிகப் பெரிய கட்டுக்கதைகள் பல நண்பர்கள் வம்பாய் எழுதி - மக்களை தேவையில்லாமல் பிரிக்கிறது அப்படி - இது கிறித்தவத்துக்கு இழுக்கு - அப்படின்னு சென்னையில ஒரு ஆர்ப்பாட்டம் - இப்ப என்னடான்னா நல்ல விஷயத்துல எதுக்குடா வம்புன்னு - தூத்துக்குடி பெரிய பாதிரியார் எனக்கு இதுக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொன்னதாகச் செய்திகள் வந்தது. 

இதற்கு அடுத்த ஆயுதத்தைக் கையிலேடுத்தாலும் தமிழர்கள் ஒன்றாக நிற்க வேண்டயது காலத்தின் கட்டாயம்.

//////////////////////

கொசுறு - வாசிப்பாளர்களுக்கு -
 எதிர்பாராத வேலைப் பளு கூடியுள்ளதால் இனிமேல் வாரம் ஒரு முறை மட்டுமே பதிவினை வெளியிட வாய்ப்பு என்று கருதுகிறேன் [அப்படா என்று நிம்மதிப் பெருமூச்சு விடும் நண்பர்களுக்கு - சிலசமயங்களில் இரண்டு மொக்கைகள் சேர்ந்துகூட வரலாம்]...

கொசுறு -
சென்னை நண்பர்களுக்கு


15.11.11

அடுத்த "சாமி" - நம்ம ஊரிலிருந்து

தமிழர்களை இழிவு படுத்துவதற்கு வேறு யாரும் வெளியிலிருந்து வர வேண்டாம். அரசுப் பதவியில் இருக்கும் தமிழர்களே போதும்.
"இந்த ஆண்டின் தொடக்கத்தில், புதுச்சேரியில் ஒரு அமைச்சர் மக்களிடம் வாக்குச் சேகரிக்கும் போது - "இங்கே உங்களுக்கு குழந்தைகளைத் தவிர அனைத்தையும் கொடுத்திருக்கிறோம்" [நேற்று குழந்தைகள் தினம்] என்று சொல்லி வாங்கிக் கட்டிக்கொண்டார். 

நான் ரொம்ப நாகரிகமாகச் சொல்லியிருக்கிறேன் - தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் - "நாங்க ஒன்னே ஒன்னுதான் குடுக்கலை - குழந்தை பெத்துக் குடுக்கலை அவ்வளவுதான் மத்ததெல்லாம் குடுத்தாச்சு."




புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட இதே மாண்புமிகு வி. நாராயணசாமிதான்  - நேற்று திருவாய் மலர்ந்து  - கூடங்குளத்தில் "தொடர்ந்து இந்தப் போராட்டக் காரர்கள் போராடுகிறார்கள் என்றால் அவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பதைக் கண்டுபிடிக்க உள்ளோம்." என்று சொல்லியிருக்கிறார். மக்கள் குடுத்தால் கணக்கு காமிக்க வேண்டாமா -- என்பது போன்ற நிறைய விஷயங்கள் சொல்லி மக்களின் அறிவுக் கண்களைத் திறந்திருக்கிறார்.

மேலோட்டமாய்ப் பார்த்தால் ஒன்றும் தவறில்லைதான். ஒரு போராட்டத்தை உடைக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதைச் செய்யத்தானே அரசு செய்யும்.அதைச் செய்யாமல் இருந்ததால்தானே ஆச்சரியம்.

மஞ்சள் காமாலை வந்தவனுக்கு பார்க்கிறதெல்லாம் மஞ்சளாத்தான் தெரியுமாம். அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு, இவர்கள் கூப்பிடிகிற போதெல்லாம்  பணம் கொடுத்துதான் மக்களை அழைத்து வருகிறார்களா? இன்று வரை அயராது உழைத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ்கார நண்பர்களே ஒவ்வொரு முறை காங்கிரஸ் தலைவர்கள் அழைக்கும் போதெல்லாம் இப்படித்தான் போனீர்களா? அல்லது சுதந்திரப் போராட்டத் தியாகிகளே எல்லாம் ஒவ்வொரு போராட்டத்திற்கும் மக்கள் கொடுத்த பணத்திற்கு ஆங்கில அரசிடம் கணக்கு கான்பித்திர்களா...  நமது அரசு ஒன்றும் ஆங்கில அரசு இல்லைதான்... கணக்கு கேட்டா காட்டிட்டுப் போறாங்க... எப்போத் தாக்கல் செய்ய வேண்டுமோ அப்போது செய்வார்கள் என்றே நம்புகிறேன்  - யாரிடமிருந்து பணம் வந்தாலும் அவர்களுக்குக் கணக்குக் கொடுக்கவாவது அவர்கள் கணக்கு வைத்திருக்க மாட்டார்களா என்ன?

அல்லது எப்படிப் பணத்தை தண்ணியை செலவழித்தாலும் இப்படி தொடர் போராட்டத்துக்கு அழைத்தால் காங்கிரஸ் தொண்டர்கள் கூட வருவதில்லையே - அப்படின்னு கோவத்துல சொல்றாரா மாண்புமிகு அமைச்சர்?

மாண்புமிகு அமைச்சர் என்ன நினைக்கிறார் என்று நான் நினைக்கிறேன் என்றால் - மக்களுக்கு யாரும் அறிவில்லை. தன் சந்ததிக்காகவும், தன் வாழ்க்கை பாதுகாப்பிற்காகவும் போராடுவதற்கு மக்கள் வரமாட்டார்கள்.  மக்களுக்கு பொது நலம் என்பதே இல்லை - அதன் அடிப்படையில் ஒரு போராட்டத்திற்காக பணம் கொடுக்கிற நிலையில் மக்கள் இல்லை - அதற்காகத்தானே பெட்ரோல் முதற்கொண்டு மற்றும் எல்லா அத்தியாவசியப் பொருட்கள் விலை வரை ஏற்றி வைத்திருக்கிறோம். இதையெல்லாம் தாண்டி எப்படி மக்கள் போராட்டத்திற்கு வருவதோ அல்லது பணம் கொடுக்கவோ முடியும் என்று சொல்லுகிறார். இதை அவரால் புரிந்துகொள்ள முடியாது. 

அவருக்கு என்ன ஆச்சரியம் என்றால் அப்படி யோசிக்க விடாமல்தானே எல்லாரும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம் -  அப்படி இருக்கும்போது எப்படி இவர்களுக்கு போராட துணிச்சல் வந்தது? யார் பணம் குடுக்குறா? பணம் குடுத்தே ஆட்களை கூப்பிட்ட உங்களுக்கு அப்படித்தானே நினைக்கத் தோணும். இல்லைன்னா, உங்க பின்னாடி வர்ற தொண்டர்கள் யோசிக்க முடியாமத்தான் உங்க பின்னாடி வர்றாங்களா மகாராசா! 

ஒரு மக்கள் போராட்டத்தை எப்படி அணுக வேண்டும் என்கிற மிகச்சிறிய விஷயம் கூட  தேறாத நாம்தான் மாக்களுக்காக அரசு அரசுக்காக மக்கள் அல்ல என்று சொல்லுகிறோம். மிரட்டல் மற்றும் உருட்டல் வழியாக ஒரு போராட்டத்தை கலைக்க வேண்டும் என்று ஒரு அரசு நினைத்தால் - அது ஆங்கிலேய அரசு என்று சொல்வதில் தவறென்ன? 

வெளி நாட்டில் நாலு பேரு நாடு ரோட்டுல நின்னு ஒரு கொடி பிடிக்கிற செய்தியை ஒரு வெளிநாட்டு நிறுவனம் செய்தி எனத் தந்தால் காசு குடுத்து அந்தச் செய்தியை வாங்கி நம்ம ஊரு தொலைக் காட்சி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு வெளியிடும். இங்கே நூற்றுக் கணக்கான மக்கள் வாழ்வாதரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் போது அதை ஒரு ஓரத்திலும், சாமி சொல்வதை முதல் பக்கத்தில் போட்டு மக்களைக் கொச்சைப் படுத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. அரசு இயந்திரங்கள் அப்படித்தான் இருக்கும். ஆனால் மீடியா அப்படி இருக்க முடியுமா? அவர்களை புரிந்து கொள்ளா விட்டாலும் பரவாயில்லை இழிவு படுத்தாமலாவது இருக்கலாம் அல்லவா. 

கொசுறு

"19. Protection of certain rights regarding freedom of speech, etc.-
  1. All citizens shall have the right-
    1. to freedom of speech and expression;
    2. to assemble peaceably and without arms;
    3. to form associations or unions;
    4. to move freely throughout the territory of India; ...."
                                                        FUNDAMENTAL RIGHTS  - INDIAN CONSTITUTION

18.9.11

சாமியும் மோடியும் - சிறுதுளி 180911


சிண்டு முடிச்சு
2 ஜி ஸ்காம் வழக்கில் ப. சிதம்பரத்தை சேர்க்க வேண்டும் என சுப்ரமணிய சாமி வழக்குத் தொடுத்திருக்கிறாராம். அது சரி - சிதம்பரமும் வக்கீல்தானே சுப்ரமணிய சாமியை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விசாரிக்க வேண்டும் என்று ஜெயின் கமிஷன் சொன்னதே - அதைக் காட்டி சாமியை ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட வழக்கில் விசாரிக்க வேண்டும் என்று சிதம்பரம் ஒரு வழக்குத் தொடுத்தால் என்ன?

மோடி - சாமியைப் போல மோடியும் ஸ்டான்ட் அடிக்கிறார்:
பதினேழாம்தேதி தினமணியில் இரண்டாவது பக்கத்தில் சத்பாவனா மிஷன் பற்றி நரேந்திர மோடி கொடுத்த அருமையான விளம்பரம் [விளம்பரம் என்றால் குறைந்த பாதகம் ADVT என்றாவது இருக்கும் - இதில் அது கூட இல்லை] முழுப் பக்கத்தில் வந்தது - மூன்று நாள் உண்ணா விரதமாம். எதற்கு? ஏன்? என்பதெல்லாம் தெளிவில்லை. நாட்டு ஒற்றுமையாம் -அதுசரி ஏறக்குறைய நூற்றிஐம்பது மக்கள் கூடங்குளத்தில் உண்ணா விரதம் இருந்து மக்கள் போராட்டம் ஒன்று நடை பெற்றுக் கொண்டிருக்கிறதே அது மூன்றாம் பக்கத்தில் கூட இல்லையே அது ஏன்? மாறாக ஒன்பதாம் பக்கத்தில் [முதல்வரின் ராசி எண்] அது குறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என்று தமிழக முதல்வர் கூறியதாக ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது. அதாவது ஒரு முதல்வர் மோடி வித்தை காண்பிக்க விளம்பரம் கொடுக்க வேண்டும் அல்லது ஒரு போராட்டம் பற்றி முதல்வர் செய்தி வெளியிட வேண்டும். அப்படித்தான் ஒரு பத்திரிகை செயல்பட வேண்டுமென்றால் பேசாமல் விளம்பர நாளிதழ் நடத்தலாமே! அல்லது கூடன்குளப் போராட்ட நண்பர்களிடம் விளம்பரத்திற்காகவாது கேட்டிருக்கலாமே! தினகரன் விளம்பரம் பத்தாம் பக்கம் - செய்தி ஐந்தாம் பக்கம்.

ஜெ- வின் ஸ்டான்ட் 
நரேந்திர மோடிக்கு வாழ்த்துத் தெரிவிக்க தன் அமைச்சர்களை அறிவிக்கும் செல்வி, கூடன்குளத்துக்கும் அமைச்சர்களை அனுப்பி வாழ்த்து தெரிவிக்கலாமே - அதென்ன ஒன்றுமில்லாத உண்ணா விரதத்திற்கு வாழ்த்து - மக்கள் போராட்டத்துக்கு அறிக்கை?

ஸ்டான்டுகளுக்கு நடுவில் உண்மையான போராட்ட உண்ணா விரதம்:

கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டியது - பாமரனின் புத்தர் சிரித்தார் - பகுதியின் இரண்டாம் பகுதி - இதைவிட மிகவுல் சுருக்கமாகவும் தெளிவாகவும் கூடங்குளம் அணு உலை பற்றிச் சொல்லி விட முடியாதென்றே நினைக்கிறேன்.
பாமரன் பக்கத்திற்கு இங்கே சுட்டவும்.





29.8.11

தூக்குத் தூக்கி - மரண தண்டனைக்கு எதிராக

செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி குறிக்கப் பட்டிருக்கிற மூன்று பேருக்கான மரண தண்டனை குறித்த விடயம் இது.

உலகம் முழுதும் மரண தண்டனை ஒழிப்பிற்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் மூவரின் மரணதண்டனையை நிறைவேற்றுவது நாம் நாகரிக உலகத்தில் நமது நிலையைக் கேள்விக்கு உள்ளாக்கும்.

தண்டனை என்பது சமூகத்தைப் பயமுறுத்துவதற்காகவோ அல்லது எதிர் காலச் சந்ததியினர் எப்படி வாழ வேண்டும் என்கிற படிப்பினைக்காக மட்டும் என்றால், நாம் இன்னும் கற்காலத்தில் தான் இருக்கிறோம்.

தண்டனை பல படி நிலைகளைக் கொண்டது. ஒரு ரூபாய் திருடுனவனுக்கும், ஒரு கோடி திருடுனவனுக்கும் வித்தியாசம் இருக்கு – அடிப்படையில் திருட்டு என்பது ஒன்றுதான் என்றாலும். கொலை செய்தவனையும் கொலைக்கு உதவி செய்தவனையும், எதற்கு என்று தெரியாமலேயே உதவி செய்தவர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறதா இல்லையா. பல இஸ்லாமிய நண்பர்கள் இப்படித் தான் பிரச்சனைக்கு உள்ளாகிறார்கள் – சில உதவிகள் வேண்டும் என்று செய்யப் போய் / எதுக்குன்னு தெரியாம செய்யப் போய் கடைசியில மிகப் பெரியத் திட்டம் தீட்டி செயல் பட்டதா ...

கொலைக் குற்றம் புரிந்தவனுக்கு அதிக பட்ச தண்டனை மரணம் என்றால் – திரு. ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்கள் ஏற்கனவே இறந்து போய் விட்டார்கள். இறந்தவர்களைத் தூக்கில் இட முடியாது என்பதற்காக மற்றவர்களைத் தூக்கில் இடுவது – ஒரு கோடிக்கும் தூக்கு ஒரு ரூபாய்க்கும் தூக்கு என்கிற விதத்தில் வந்து விட்டால் நமக்கு நீதி மன்றங்களே தேவையில்லையே – வெறும் காவல் துறை மட்டும் போதும். இந்தத் தவற்றுக்கு இந்தத் தண்டனை என்கிற அளவில் சட்டம் இருந்தால் மட்டும் போதுமே. எதற்கு நீதி மன்றங்கள் எதற்கு ஒரே மாதிரி வழக்குகளுக்கு வேறு வேறு மாதிரியான தண்டனை. வெறும் காவல் துறை மட்டும் தண்டனையை நிறைவேற்றலாமே.

சரி - தண்டனையில் வித்தியாசம் இருக்கிறது என்றால் – இவ்வழக்கில் மரண தண்டனை விதிக்கிப்பட்டிருக்கிற மூவருக்கும், கொலையில் ஈடுபட்ட மற்றவர்களுக்கும் தண்டனையில் வித்தியாசம் வேண்டாமா? பல்லாயிரக் கணக்கான மக்களைக் கொன்ற ஒருவனுக்கும் மரண தண்டனை – ஒருவரைக் கொன்றதற்காக பலருக்கு மரண தண்டனை என்பது சரியா?

அல்லது இந்த வழக்கு என்பது தடாச் சட்டத்தில் வராது என்கிற போது [இதைத்தான் கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் எல்லாத் தலைவர்களும் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்], எப்படி அதில் பெற்ற வாக்கு மூலம் மட்டும் செல்லு படியாகும்? – எப்படி அந்த சட்டத்தைப் பயன் படுத்தி பெற்றுக் கொண்ட வாக்கு மூலத்தைக் கொண்ட தீர்ப்பு செல்லுபடியாகும்?

அல்லது அப்படியே அவர்கள் குற்றவாளிகள் என்றாலும் – ஏற்கனவே ஏறக்குறைய இருபது ஆண்டுகள் சிறைச்சாலைக்குள் முடங்கிக் கிடந்த ஒருவருக்கு இப்போது மரணம் என்கிற தண்டனை வேறு தேவையா?

நண்பர்களே – உணர்ச்சிப் பிழம்புகள் கொதிக்க இதற்குப் பின் உள்ள அநியாயங்கள் குறித்தெல்லாம் யோசித்து இந்த மரண தண்டனையை எதிர்க்க வேண்டியதில்லை. மனித நேயம் உள்ள யாரும் எதிர்க்கலாம். இருபது ஆண்டுகள் சிறைக்குள் ஏற்கனவே ஆயுள தண்டனை முடிந்து இரண்டாவது ஆயுள் தண்டனையில் பாதியை முடித்தவர்களுக்கு மீண்டும் மரண தண்டனை இரண்டாவது தண்டனை தானே என்கிற பார்வையில் யோசித்தால் போதும். மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுக்கலாம்.

பின் குறிப்பு

மனிதன் நாகரிகம் அடைந்து விட்டான் என்பதற்கான மிகப் பெரிய அடையாளம் போர், மனித இழப்பு, வன்முறை இவைகளெல்லாம் வெறுக்கத் தக்கவை என்ற நிலையை அடைந்ததுதான். அந்த நிலையை மானிட சமூகம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்தான் அடைந்தது – அதற்குப் பிறகுதான் மனித உரிமையும், மனிதன் ஒருபோதும் ஒரு பொருளாக நடத்தப் படக்கூடாது என்பது மட்டுமல்ல மனிதன் ஒவ்வொருவனும் மதிப்பு மிக்கவன் என்கிற சித்தாந்தம் வெகுவாக ஊன்ற ஆரம்பித்தது.

பல போர்களுக்குப் பிறகு –உயிரிழப்பிற்குப் பிறகு ஞானோதயம் வந்து – எல்லாரையும் மதிக்க உறுதியோடு இருக்கிறார்கள். இது நடைமுறையில் எந்த அளவுக்குக் கடைப் பிடிக்கப் படுகிறது என்பதும், எந்த அளவுக்கு அரசியல் ஆதாயத்தோடு மனித உரிமைகள் மதிக்கப் படுகின்றன, மனித உரிமை மீறல்களுக்காக குரல் கொடுக்கப் படுகின்றன என்பதும் விவாதத்துக் குள்ளாக்கப் படவேண்டியதுதான் – ஆனாலும் அதையும் தாண்டி இன்றைக்கு பல நாடுகள் சாதித்திருக்கிற மனித உரிமை பற்றிய கருதுகோள்களும் மனித மாண்பு மதிக்கப் பட மேற்கொண்டிருக்கிற முயற்சிகளையும் பார்க்கிற போது அவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உண்டு. அதில் ஒன்றுதான் மரண தண்டனை ஒழிப்பு என்பது.

நாம் நாகரீகவாதிகளா?

இன்னுமொரு பின் குறிப்பு
அம்மாவை நம்பி எல்லாரும் பல ஐடியாக்கள் கொடுத்தார்கள் - அம்மா ஒரே வரியில் எனக்கு அதிகாரம் இல்லை அது பொய்ப்பிரச் சாரம் என்கிறார் - அம்மாவிடம் எதிர் பார்த்ததுதான்.

29.7.11

ராதிகா, ஜெயலலிதா, மம்தா

கடந்த மே மாதம் தமிழகத்திலும் இந்தியாவின் பல மாநிலங்களிலும் சட்ட மன்றத் தேர்தல் காய்ச்சல் தீவிரமாக இருந்த போது கனடாவில் பாராளுமன்றத் தேர்தல் நடை பெற்றது.  அதில் இந்தியா-இலங்கையைத் தவிர ஒரு பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிற முதல் பெண் – முதல் தமிழர் – அவர் ராதிகா சிற்சபையேசன். அவர் Sacarborough-Rouge River தொகுதியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
 
மே மாதம் வெளிவந்த தேர்தல் முடிவுகளில் இங்கேயும் பெண்கள் முக்கியத் துவம் வாய்ந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள் – செல்வி ஜெயலலிதா மற்றும் மம்தா பாநேர்ஜி வெற்றி பெற்றிருக்கிறார்கள். செல்வி ஜெயலலிதாவின் வெற்றியைக் காட்டிலும் மம்தாவின் வெற்றி மிகவும் ஒரு விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏறக்குறைய முற்பத்து  நான்கு ஆண்டுகள் பதவியில் இருந்த இடது சாரிகளை பதவியிறக்கம் செய்திருக்கிறார்.

இவர்களின் வெற்றி வெளியில் தெரிவதற்கு முன்பே ராதிகாவின் வெற்றி வெளிவந்து விட்டது. இருபத்தி மூன்று ஆண்டுகளாக லிபரல் கட்சியிடமிருந்த இடத்தை NDP பிரதிநிதியாக ராதிகா பெற்றிருக்கிறார். அவரின் கன்னிப் பேச்சு மூன்று மொழிகளை உள்ளடக்கியதாக இருந்தது. கனடாவின் பாராளுமன்றத்தில் தமிழில் உரையாற்றிய பெண்.

மக்களுடைய விருப்பத்தின் பேரில் முப்பது வயதுக்கு முன்பே பாராளுமன்ற உறுப்பினராகி இருக்கும் ராதிகாவைப் பின்பற்றி இன்னும் நிறைய பெண்கள் – அரசியலுக்கு வர வேண்டும். “மாற்றம்’ வேண்டும் என்கிற அதே முழக்கத்தை முன்வைத்தே NDP நிறைய இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது [எதிர்க் கட்சியாக].

  • நமது ஊரிலும், பள்ளிக் கல்லூரிகளில் மாணவர் பருவத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண்கள், அதற்குப் பிறகு எங்கேயோ காணாமல் போய் விடுகிறார்கள். அதைப் பொறுத்த வரை ஆண்களும் அப்படித்தான். 
  • ராதிகாவின் தொகுதியில் நீண்ட காலம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த, 'டெரெக் லி' இடமிருந்து பதவியைக் கைப் பற்றியிருக்கிறார். நீண்ட நாட்களாக தான் இருந்து விட்டதாகவும் மாற்றம் தேவை என்று தான் போட்டியிடாமலும் இருந்தார் டெரக். இங்கே கலைஞரை விட்டால் வேறு யாரும் இல்லை என்கிற நிலை இருக்கிறது. அவரும் அடிக்கடி அரசியலிலிருந்து விலகுவதாக அறிவிக்கிறார் - ஆனால் ஒரு போதும் நடப்பதாய்த் தெரியவில்லை. 
  •   எனவே ஆண்கள் பெண்கள், தங்கள் தொகுதியில் சமுதாய நோக்கில் வலம் வரும் இளைஞர்கள் மக்களால் கவனிக்கப் படுவார்கள் - நிச்சயமாய் -  
  • அரசியல் நாகரிகம் என்பது தமிழகத்தைத் தவிர பல இடங்களில் இருக்கிறது. ராதிகா, தனது முதல் உரையில் சபாநாயகரை வாழ்த்துகிறார். அந்தத் தொகுதிக்கு உழைத்த எதிர்க் கட்சி உறுப்பினரை நினைவு கூர்கிறார். மம்தாவின் பதவி ஏற்பு விழாவிற்கு ஜோதி பாசு நேரில் வருகிறார்.  இங்கே தான் நாகரிகம் என்பதே இல்லை -
  • அரசியல் என்பது சாக்கடைதான். ஆனால் உண்மையான நோக்கமும், தனது வாழ்வின் சிறு வயதிலிருந்தே உடைய சமூக நோக்கை தொடர்ந்து வெளிக் காட்டும் யாரையும், எந்த மக்களாக இருந்தாலும், யாரும் கை விட்டு விட மாட்டார்கள் என்பதே ராதிகாவின் வெற்றி காட்டுகிறது. மாற்றம் விரும்பும் பெண்கள் மாற்றம் கொண்டு வருவதற்குத் தங்களைத் தயார் படுத்துவதும் அவசியம். 

கடந்த வாரம் ஹில்லரி கிளிண்டன் சென்னை வந்தார் அரசு முறைப் பயணமாக வந்தார். ராதிகா அரசு முறைப் பயணம் மேற்கொள்ள இயலாது. தமிழக அரசு அவரை அழைத்து தமிழரை பெருமைப் படுத்த வேண்டும். ஈழத் தமிழர் சாகும் போதுதான் குரல் கொடுக்க வில்லை. நமக்கு புகழ் ஈட்டும் பொது கொண்டாடவாவது வேண்டாமா?

28.7.11

சமச்சீர் - ஒரே தீர்வு ஓராண்டு விடுமுறை

 சமச்சீர் கல்வி வேண்டாம் என்று சொல்கிறவர்கள் முன்வைக்கிற வாதம் இரண்டுதான்.
  1. ஒன்று - அது தரம் அதிகமானதாக இருக்கிறது.
    • தரம் அதிகமானா நல்லதுதானே என்று கேட்கிற நல்லவர்களே - அவர்கள் அப்படியிருந்தும் ஏன் வேண்டாம் என்கிறார்கள் என்கிற கேள்வியையும் கேட்க வேண்டும்?
    •  அரசு பள்ளிகளில், இப்போது உள்ள படத் திட்டத்தையே ஒழுங்கா நடத்துவதற்கான அருகதை ஆசிரியர்களுக்கு இல்லை- இதுல சமச்சீர் கல்வி வேற....
    • அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை; சில இடங்களில் போதுமான வசதிகள் இல்லை. பல அரசுப் பள்ளிகளில் கட்டிடங்களே இல்லை...
    • அரசு ஆசிரியர்கள் அதிகமா சம்பளம் வாங்கிட்டு வேலை செய்யுறது இல்லை.
    • அதனால் பஞ்சு மூட்டை தூக்குறவங்கிட்ட இரும்பு மூட்டையைக் குடுத்த வேலைக்கு ஆகுமா? 
    •  இதற்கெல்லாம் என்ன காரனம்னா ஆசிரியர்கள் தான். ஆசிரியர்கள் தேர்தலின் போது வேலை செய்வதால் அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது. ஒழுங்கா பாடம் எடுங்கன்னு சொல்லத் தயங்குது. மற்ற எல்லா அரசு அலுவலகங்களிலும் எல்லாரும் காலை முதல் மாலை வரை கடமை தவறாமல் வேலை செய்கிராகள். ஆனால் ஆசிரியர்கள் மட்டும் வேலை செய்வது இல்லை. அவர்கள் பலம் வாய்ந்தவர்கள் என்பதால் யாரு அவர்களிடம் எதுவும் சொல்ல முயலுவதில்லை. ஆனால் அவர்கள் மீது கை வைக்கத் துணிந்தவர் அம்மா மட்டும்தான்.
     2. இரண்டு - தரம் மிகவும் கேவலமாக இருக்கிறது
      • என்னா தரம் கேவலமா இருக்கு?
      • 'திடப்' பொருள்தான் உருகும் 'வாட்டர் melts ' ன்னு போட்டிருக்கு அது தப்பு -- அப்புறம் கலைஞர் ஒரு கவிஞர் னு போட்டிருக்கு. இது போல இன்னும் நிறைய..
      • நிறைய அறிவியல் உண்மைகள் போடாமல் இருக்கு - அம்மா ஒரு திரைப்படக் கலைஞர் ...
      • தனியார் பள்ளிகளில் சமச்சீர் கல்வியின் தரத்தை விட அதிகமான தரத்தில் இருக்கிறது. அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த தனியார் பள்ளிகளின் தரத்தை குறைப்பதா...
      • தனியார் பள்ளி ஆசிரியர்கள் பாதிச் சம்பளம் வாங்கிக் கொண்டு ஒழுங்காகப் பாடம் எடுக்கிறார்கள். இரும்பு தூக்குறவங்க கிட்ட பஞ்சு மூட்டை தூக்கச் சொல்றது நியாயமா? மேலும்அவர்களின் வேலையில் கைவைக்க யாரும் பயப்படுவது இல்லை என்பதனால் அவர்கள் ஒழுங்காக இருப்பார்கள். எனவே தனியார் பள்ளிகளில் நாம் தலையிடாமல் அவர்கள் விருப்பப் படி ....... நடத்த அரசு உதவ வேண்டும். எனவே சமச் சீர் கல்வி தேவையில்லை.

      அதனால் எப்படிப் பாத்தாலும் சமச் சீர் கல்வி ஒன்னும் சமமா இல்லைன்னு தெரியுது.
      என்ன செய்யனும்னா - சமச்சீர் கல்வியைத் தடை செய்யணும்.

      இதோட முடியலை - அன்பு மக்கா
      இதனால என்ன சொல்ல வர்றேன்னா

      - அரசு ஆசிரியர்கள் தரம் உயர்ந்த பாடத்தை நடத்தாமல் இருப்பதைவிட, தரம் குறைந்த பாடத்தை நடத்தாமல் இருப்பதே மேல்.

      - பணம் கொடுத்துத்தான் நாம் கல்வியைப் பெறமுடியும் - அப்போதுதான் ஒழுங்கான கல்வியைப் பெற முடியும்.

      - ஆக எது எப்படி இருந்தாலும், யார் ஆட்சிக்கு வந்தாலும், யாரும் ஒன்னும் ............ முடியாது...- இப்போது இருப்பதே இருக்கும் - எப்போதும் அப்படியே நடக்கும்.

      - மாற்றம் என்பதெல்லாம் விலங்குகள் தத்துவம்.

      இறுதியாக இதற்கு ஒரே தீர்வு ---

      அம்மா எதிர்கட்சித் தலைவியாக இருந்த போதே சமச்சீர் கல்வித் திட்டத்தை பற்றி பேசியிருக்கிறார்கள். எனவே வரலாற்றின் பதிவுகளில் அம்மாதான் சமச்சீர் கல்வியை அறிமுகப் படுத்தியதாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒரே குறிக்கோள். எனவே நிச்சயமாய், இது அடுத்த ஆண்டுதான்.... அம்மாவின் படத்தோடு சமச்சீர் பாடத்திட்டத்தில் அம்மா பெயர் இருக்க வேண்டும் அதுவரை நாம் காத்திருக்க வேண்டும்.

      அதற்கு...

      இரண்டு மாதங்கள் முடிந்துவிட்டது. மாதத் தேர்வுகள், மிட்-டெர்ம்  தேர்வுகள் எல்லாம் இந்நேரம் முடிந்திருக்க வேண்டும். இனிமேல் இதற்கான அவகாசமேல்லாம் கிடையாது என்பதனாலும், மாணவர்கள் சமச்சீர் கல்வியைப் பின்பற்றுவதைக் காட்டிலும், படிக்காமல் இருப்பதே மேல் என்று அரசு நினைப்பதாலும், இதைப் பற்றிய அக்கறையை, தமிழக வெகு சனம் வெளிப் படுத்தாமல் இருப்பதாலும், அரசுக்கு சரியான வழி காட்ட ஆட்கள் இல்லைஎன்று தமிழக அரசின்    வக்கீலே தனது தனிப் பட்ட கருத்தாக வெளிப் படுத்தியிருப்பதாலும், இதற்குப் பிறகும் நாம் மாணவர்களை நாம் வதைக்க முடியாது என்பதாலும், [சும்மா இருக்குறது எவ்வளவு கஷ்டம் - அதுவும் மாணவர்கள்... ] இதற்கு ஒரே தீர்வாக - ஒரு ஆண்டு விடுமுறை கொடுத்து இந்தச் செயலை அம்மா செய்ததாக வரலாற்றின் பக்கத்தில் இடம் பிடித்தால் நன்றாக இருக்கும்.


      பின்குறிப்பு:

      இக்கட்டுரையில் உண்மை பொய் இரண்டும் கலந்து இருக்கிறது. செய்தியும் கேலியும் சேர்ந்து இருக்கிறது.
      எழுதப்பட்ட கருத்தில் நீங்கள் ஏதாவது ஒன்றைக் கொண்டிருந்தால் வருந்த வேண்டாம்.
      நீங்கள் அரசு ஆசிரியராக இருந்தால் வருத்தப் பட வேண்டாம்.
      [இதெல்லாம் சும்மா ... உள்ள ஒன்னும் இல்லைங்கோ ... கோ .... கோ...]

      27.5.11

      போதுமடா சாமி

      வலையுலக நண்பர்களே,

      தேர்தல் முடிந்து விட்டது. புதிய ஆட்சி வந்து விட்டது. அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகுங்கள். ஏறக்குறைய ஆறு ஏழு மாதங்களாக 2 G  - இதே நடந்து கொண்டிருக்கிறது. இப்போது கிளைமாக்ஸ்.

      கலைஞரின் கண்ணீர் கடிதம் - கனிமொழியின் பரிதவிப்பு - இன்னும் எல்லாப் பத்திரிக்கைகளும், எல்லா வலைகளும் இதையே எழுதிக் கொண்டிருக்கின்றன. எப்போது இது முடியும் என்று தெரியவில்லை? அவர்களின் குற்றங்களுக்கு அவர்கள் அனுபவிக்கிறார்கள். அவர்கள் அனுபவிக்கட்டும். அதை விட்டு விட்டு இன்னும் அதையே நாம் மீண்டும் புரட்டிப் போட்டு ஒன்றும் ஆவப் போவது இல்லை. இதில் என்னவென்றால், ஏறக்குறைய - 'நடுநிலையோடு' எழுதிக்கொண்டிருக்கிற வலைப் பதிவர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த நபர்கள் எல்லாம், இன்னும் அதே ரோதனையைப் பாடிக் கொண்டிருக்கும்போது, அவர்கள் மீது வாசிப்பாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகிறது என்பதை ஏன் நினைக்க மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை.

       இதில் எல்லாருமே பாதிக்கப் பட்டிருக்கிறோம் - இந்திய நாட்டின் குடிமகன்கள் என்கிற விதத்தில். எனவே தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தெல்லாம் இல்லை. உப்பத் தின்னவன் தண்ணி குடிச்சுத்தான் ஆகணும்.

      இந்த வழக்கு நீதி மன்றத்தில் இருக்கிறது. இந்த வழக்கு வாய்தா போட்டு வாய்தா போட்டு இழுத்தடிக்காம இருக்கிறதுக்கு என்ன பண்ணணுமோ அதைப் பண்ணலாம். ஆனால் அதை விட்டுட்டு, கலைஞர் கண்ணீர் வடித்தார் - அது நீலிக் கண்ணீர். அடுத்தா நாள், கட்டாந்தரையில் படுத்தார் கனி மொழி - இதே பொழப்பா.
      இங்கே யாரு பொது நலத்தோடு வேலை செய்யுறது. எல்லாரும் சுய நலம்தான். சிலருக்கு பண ஆசை - சிலருக்கு புகழ் ஆசை. எல்லாரும் அப்படித்தான்.
      எனவே அடுத்த கட்ட முயற்சியில் இறங்குவது உத்தமம் என்று படுகிறது.

      இப்படி தொடர்ந்து அதைப் பற்றியே எழுதிக் கொண்டிருப்பது, நமக்குள் ஒரு கிளர்ச்சியை, அக்களிப்பை, மனதுக்கு நிறைய சந்தோஷத்தைத் தருகிறது. மவனே அனுபவிடி... நீ ஆடுனப்ப ஒன்னும் பண்ண முடியலை - இப்ப என் வஞ்சத்தைத் தீர்க்க அதைப் பற்றியே எழுதுகிறேன்னு எழுதிக்கிட்டே இருக்கோம். இது நமக்குதான் நல்லதில்லை. அடுத்து என்ன செய்யலாம்னு யோசிக்காம வஞ்சம் தீர்ப்பது நல்லதில்லைன்னு மனதுக்குப் படுது. அதனால இதைப் பத்தி மறந்துறணும் அப்படின்னு சொல்லலை. அதைப் பற்றிய தொடர்ச்சி தேவை. ஆனால் அது மட்டுமே அப்படின்னு இருக்கிறது யாருக்கும் எதுவும் செய்யாது.

      பெட்ரோல் விலை ஏறுது. எதுவும் மாற்றம் அடைந்தது போல தெரியலை. இது எங்க போயி முடியும்னு தெரியலை.
      அரசியல் அதிகாரிகள், போலிசை ஏவிவிடும் காலம் இருக்கும் வரை, அரசியல் பலம் உள்ளவன் கையில் பதவி இழந்ததால், பலம் இழந்தவன் மாட்டுவான். அதுதான் அரசியல் உலகில் நியதி.


      அப்படி அந்தக் கண்ணீர்க் கதையையே பேசிக் கொண்டிருப்பது இன்றைய ஆட்சி செய்வதை எல்லாம் நியாயப் படுத்தும் விதமாகவே இருக்கும். 

      தலைமைச் செயலகத்தை பயன் படுத்தக் கூடாது ஏனெனில் கலைஞர் கட்டினார். சமச் சீர் கல்வி முறை தடை செய்யப் பட்டது. ஏனெனில் அதில் கலைஞர் வரலாறு மற்றும் செம்மொழி மாநாடு பற்றிய குறிப்பு உள்ளது. எனவே அதைத் தடை செய்வது நியாயம். யாரும் எதுவும் கேட்கமுடியாது. நாம் வளர்த்துவிடுவோம், அப்புறம் ....

      கலைஞர் டாஸ்மாக்கை வளர்த்துவிட்டார்னு அதைத் தடைசெய்தாவது நல்லா இருக்கும். மக்கள் கொஞ்சம் பணக் கஷ்டம் இல்லாம வளர்ந்து போற விலைவாசில வண்டிக்காவது பெட்ரோல் போடலாம்.

      போதும்டா சாமி!

      18.5.11

      ... திருவிளையாடல் ஆரம்பம் - முதலில் தமிழத்தில்

      பணநாயகம் தோற்று ஜனநாயகம் வென்றது என்று எல்லாருமே எழுதித் தள்ளிவிட்டோம். அமோக வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து இருக்கும் அம்மா விற்கு வாழ்த்துகள்.

      பழைய தவறுகளிலிருந்து நிறைய கற்றுக் கொண்டிருப்பார் என்று எல்லோரும் எதிர் பார்க்கிறார்கள். ஆனால் அப்படி கற்றுக் கொள்ளுதல் நிறைய இருக்குமா எனத் தெரியவில்லை.

      கடும் கோபத்தோடு எல்லாரும் சேர்ந்து கலைஞரின் குடும்பத்தைத் திட்டித் தீர்த்து ஆட்சி மாற்றம் கொண்டு வந்தாயிற்று. இது மக்கள்விரும்பிய மாற்றம். நாம் ஒன்றும் பெரிதாய் செய்துவிட வில்லை. எப்போதும், யார் வந்தாலும் இந்த இடித்துரைக்கும் கொள்கையில் நாம் குறியாய் இருக்க வேண்டும். அது ஐயாவாக இருந்தாலும் சரி அம்மாவாக இருந்தாலும் சரி.

      ஏற்கனவே மன்னார்குடிக் குடும்பத்தினால் வந்த ஆட்சி மாற்றம். இப்போது திருக்குவளைக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது. ஆக மொத்தம் எப்படிப் பார்த்தாலும், மாற்றம் கருதி வாக்களித்த மக்களின் குடும்பங்கள் வாழ வேண்டும். 

      ஏறக்குறைய ஆயிரம் கோடி செலவு செய்து கட்டப்பட்ட புதிய கட்டிடம் இப்போது  கேட்பாரற்றுக் கிடக்கப் போகிறது. இதற்கு யாரும் சரி என்று வக்காளத்தெல்லாம் வாங்கிக் கொண்டு இருக்க முடியாது. முந்தைய அரசு எல்லாக் கட்சியினரையும் ஒருங்கிணைத்துத்தான் இந்த முயற்சியில் இறங்கியிருக்க வேண்டும். அப்படியே இல்லை அது தவறு அல்லது குற்றம் என்றாலும், அதைப் பயன்படுத்தாமல் இருப்பது பெரிய குற்றம். 
      ஏதோ, இதை கலைஞர் தனது தொலைக்காட்சியின் இலாபத்திலிருந்து கட்டியிருந்தால், [சும்மா ஒரு கற்பனைக்காக] அம்மா செய்வதை சரி என்றாவது சொல்லலாம். அம்மாவும் இன்னும் சில நாட்களில் இந்தக் கோட்டை சரியில்லை என்று இட மாற்றம் செய்வார். அது இன்னோர் இடத்தில், இன்னும் பிரமாண்டமாய் இன்னும் சில ஆயிரம் கோடிகள் கூடுதலாகவே இருக்கும்.  அதுவும் யார் பணம் - அம்மாவின் வருமானத்திலிருந்தா - இருந்தால் சந்தோசம்.
      யாரும் கோபப்பட்டு - அவர்கள் போட்ட பாலங்களில் போக மாட்டீர்களா? என்றெல்லாம் கேட்டுவிடப் போகிறார்கள், அப்புறம் தனது வீட்டிலிருந்து கோட்டைக்கு ஹெலிகாப்டரில் மட்டும்தான் போவார்கள் - அப்படிப் போனாலும் சந்தோசம்தான் - சென்னை வாசிகள் முதல்வர் வருகைக்காக நிறுத்தி வைக்கப்படும் ட்ராபிக் கொடுமையிலிருந்து  தப்பிப்பார்கள்.

      அம்மாவின் வருகையே ஆர்ப்பாட்டமாய் இருக்கிறது. சரவேடியோடு, அதிரடியால் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள்.

      எனக்கு சின்னப் பிள்ளைகள் சொல்லும் - "உன் கூடக் கா!" ... சண்டைதான் நினைவுக்கு வருகிறது. 

      நண்பர்களே:
      இப்போதுதான் திருவிளையாடல் ஆரம்பம். 
      இனிமேல்.......


      14.5.11

      தேர்தல் முடிவுகள் - அடுத்த தேர்தல் வரை நாம் மௌனிகள்

      நேற்று விடியற்காலையில் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பு கொடுத்த தலைப்பு. எழுதிக்கொண்டிருக்கும் போதே அறுந்து போன தொடர்பு வருவதற்குள் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. சரி அதே தலைப்பு இருந்து விட்டுப் போகட்டுமே - எப்படி இருந்தாலும் அதுதானே உண்மை.

      இன்று முழுவதும் காலை தொடங்கி இறுதி முடிவு வெளிவரும் வரை எல்லாத் தொலைக்காட்சிகளும், மைக் பிடித்துக் கொண்டு அல்லது மேசையைச் சுற்றி அமர்ந்துகொண்டு இறுதி முடிவு வரை பேசிக்கொண்டே இருந்து விட்டார்கள். நாம்தான் ஒன்றும் செய்யமுடியாமல் போய்விட்டது. blogger - க்கு நமது நன்றிகள்.

      எல்லாருடைய எதிர்பார்ப்பிற்கும் மேலாகவே முடிவுகள் - அம்மாவே எதிர்பார்க்காத அசத்தலான முடிவுகள். ஏன் இப்படி ஒரு வெற்றி என்று அம்மாவுக்கே புரியாது. ஆனால் ஏன் இந்தத் தோல்வி என்று கலைஞருக்கு நன்றாகத் தெரியும்.

      சீமான் மிக்க மகிழ்ச்சியோடு இருக்கலாம்.

      வை.கோ அமைதி காத்ததன் மூலம், காமேடியனாக்கப் பட்டுவிட்டாரே என்று நான் எழுதினேன். ஆனால் தனது அமைதின் மூலம் இன்னும் அன்புச் சகோதரிக்கு அருகிலேயே இருக்கும் வாய்ப்பைப் பிரகாசப் படுத்திக் கொண்டார்.  சாணக்கியத்தனம் !

      ஆட்சியில் பங்கு கேட்கமாட்டோம் என்று முன்கூட்டியே அறிவித்து விட்டதால் நாம் ஒரு காமெடி பார்க்கும் வாய்ப்பை இழந்து விட்டோம். கேட்டாலும் கிடைக்காது என்பதால் - "இந்தப் பழம் புளிக்கும்."

      தனது வாயினாலேயே பேமஸ் ஆன வடிவேலு, அதாலேயே குட்டிச் சுவரைப் போய்விட்டார். ஒரு வேலை ரஜினியிடம் மண்டியிட்டால், மனோரமாவுக்கு வாய்ப்பு கிடைத்தது போல கிடைக்கலாம்! ஆனாலும் எழுந்து நடக்க முடியாது.

      நாம் பல பேருக்கு நன்றி சொல்லவேண்டும். அதில் முதலாவது ஆற்காட்டார் - மின்சாரக் கடவுள். ராசா - தொலைபேசிக் கடவுள். காங்கிரஸ் - எமதர்மர்கள். இன்னும் நிறைய .....

      தேர்தல் கமிஷன் - வெற்றி!

      எது எப்படி இருந்தாலும், இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நாம் ஒன்றும் பேச முடியாது. ஒருவரா? ஒரு குடும்பமா? எதிர் பாராத சோகம் நிகழ்ந்தால் ஒழிய 2016 வரை நாம் மௌனிகள்தான்.

      வாழ்க ஜனநாயகம்!

      11.5.11

      பட்டி மன்றமும் - நீதி மன்றமும்

      • சில நாட்களுக்கு முன்பு, கலைஞர் தொலைக் காட்சியில் ஒரு பட்டி மன்றம். உழைப்பாளர்களுக்கு களைப்பைப் போக்க பெரிதும் உதவுவது நாட்டுப் புறப் பாடல்களா அல்லது திரைப் படப் பாடல்களா? லியோனி எப்போது இந்தத் திரைப்படப் பாடல்களை விட்டு வெளியே வரப் போகிறார் என்று தெரியவில்லை. எப்போது பார்த்தாலும் திரைப் படம் தொடர்பான பட்டி மன்றம்தான். ஆனால் தமிழ் கூறும் நல்லுலகும் அப்படித்தானே இருக்கிறது. எல்லாமே நமக்குத் திரைப் படம் சம்பந்தப் பட்டவைகள்தானே. நாம் எப்போதுதான் அதைவிட்டு மீண்டு வரப் போகிறோம் என்றுதான் தெரியவில்லை. 
        • சரி அது இருந்து விட்டுப் போகட்டும். அன்றைய தீர்ப்பை முடிவு செய்ய உதவியது, கலைஞரின் பொன்னர் சங்கர் - அதாவது திரைப் படப் பாடல்கள். 
        • எந்தப் பட்டி மன்றங்களும், பேச்சாளர்களின் விவாதத்தை முன்வைத்து யார் மிகச் சிறப்பாக வாதடியிருக்கிரார்களோ அதை முன்னிறுத்தி ஒரு போதும் தீர்ப்பு வருவதில்லை. நீதிபதி - பட்டிமன்ற நடுவர் - என்ன நினைக்கிறாரோ அதுதான் எப்போதும் தீர்ப்பாக வருகிறது. பேச்சாளர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் ஒரு போதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுவதில்லை என்பதுதான் கவனிக்கப் படவேண்டியது. 
        • மேலும், அன்றைய தினம் கலைஞர் அவர்கள் பட்டிமன்றத்தில் கலந்து கொண்டதாலும், அவரும் திரைப்படத்தோடு தொடர்பு கொண்டவர் என்பதாலும், அண்மையில் அவரது பொன்னர் சங்கர் வெளிவந்தது என்பதாலும், இந்தத் தீர்ப்பு கலைஞருக்கு பிடிக்கும் என்பதாலும் அந்தத் தீர்ப்பு என்றே கருத வேண்டியிருக்கிறது. 
      • நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்பும் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்குப் பிடிக்கும் விதத்திலேயே வழங்கப் படுகிறதோ என்று ஒரு சந்தேகம் - நீதி மன்றத்தை அவமதிக்கும் எண்ணமெல்லாம் நமக்கு இல்லை. நடக்கிற நிகழ்வுகளைப் பார்த்தால் அப்படித் தோன்றுகிறது என்பதால் இந்த அய்யம். பதினான்காம் தேதிதான் ஒரு தீர்ப்பு வரும் என்று சொல்லியிருக்கிறார்கள்  - இதைப் படித்தவுடன் எனக்கு அந்தப் பட்டிமன்றம்தான் நினைவுக்கு வந்தது. - ஏன் பதினான்காம் தேதி? 
        • தேர்தல் முடிவுகள் இந்தத் தீர்ப்பை நிர்ணயம் செய்யலாம்.  
        • பட்டிமன்றங்கள் போலத்தான் நீதி மன்றங்களும் இருக்கின்றன
      கலைஞருக்கும் இது தெரியும் - அவரின் சக்திக்கு உட்பட்ட இடங்களில் அவரின் விருப்படியே தீர்ப்பு வருகிறது. அதுபோலவே இன்னும் அதிக சக்தி வாய்ந்தவர்கள் இருக்கும் இடங்களில் அப்படித்தான் இருக்கும் என்பதை அவர் அறிவார்.

      5.5.11

      பின் லேடன் அழிப்பு (!) - இனிமேல் உலகம் அமைதியாய் இருக்குமா?

      • ஒபாமா தேர்தலுக்குத் தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்த போது, அவர் தன்னை இஸ்லாமியர்களிடமிருந்து வேறு படுத்திக் கொள்ளாமல் இருந்த தருணங்களில், ஒபாமாவை - ஒசாமா போல மீடியா சித்தரித்தது. "Justice is done" என்று ஒசாமைவைப் போட்டுத் தள்ளுவதை நேரில் பார்த்த பிறகு - எனது கட்டளைப் படி எல்லாம் நடந்தது என்று என்று சொன்னதன் வழியாய் தான் தீவிரவாதத்தின் எதிரி என்று நிலை நாட்டியிருக்கிறார்.
        • ஆனால் புஷ் சதாம் உசேனைப் பிடித்ததைச் சொன்ன போது அவரிடம் இருந்த கர்வமான சிரிப்பு ஒசாமைவைக் கொன்றதாகச் சொன்ன ஒபாமாவிடம் இல்லை. "JUSTICE" -
        • இவ்வளவு நாட்கள் இல்லாமல் திடீரென்று ground zero வுக்குச் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார் ஒபமா. 
        • இழந்த பாப்புலரிடியைப் பெற மனிதர்களின் emotion ஐத் தொடுவதையே எல்லா அரசியல் வாதிகளும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
      •  ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள் தங்களது பாதுகாப்பில் வைத்திருந்த பின் லேடனைப் பற்றிய தகவல்கள் எப்படி அமெரிக்காவிற்குத் தெரிந்தது என்றுதான் பாகிஸ்தானுக்கு ஒரே கவலை. இது பாகிஸ்தானுக்குத் தெரியாது என்று அந்த அரசு சொல்லுவதெல்லாம் நம்பும் படியாக இல்லை. இன்னைக்கு பந்த் இல்லை ஆனால் மவுன்ட் ரோடு காலியா இருந்தது அப்படின்னு சொல்றதை நம்புறவங்க வேண்ணா இதை நம்பலாம். இத்தனைக்குப் பிறகும், அமெரிக்கா பாகிஸ்தானுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டுதான் இருக்கும்.  இது இந்தியாவுக்குச் செக். 

      • அமெரிக்கா அடுத்த நாட்டின் எல்லைக்குள் அவர்களின் அனுமதி இன்றி எப்படி நுழைய முடியும் என்பதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை. உலகத்தின் அபாயகரமான தீவிரவாதியாக இருந்தால் கூட - தீவிரவாதிகளின் வன்முறையை விட இந்த அரசு அத்துமீறல் வன்முறைகள் ஆபத்தானவை. எங்கே தவறு நடந்தாலும், குற்றவாளி இருந்தாலும், தாங்களே தண்டிக்கப் பிறந்தவர்கள் என்கிற கர்வத்தை இது வளர்த்தெடுக்கும். இஸ்ரேலுக்கு இது அதிகமாக உண்டு. அமெரிக்காவும் அதற்குச் சளைத்தவர்கள் இல்லை. இத்தனைக்குப் பிறகும் பாகிஸ்தான் அமெரிக்காவுடன் கொஞ்சிக் குலாவும்.  இது இந்தியாவுக்குச் செக். 

      • உலகின் மிக அபாயகரமான  தீவிரவாதி இறந்துவிட்டான். இனிமேல் உலகம் அமைதியாய் இருக்கும் என்று சில பத்திரிகைகள் எழுதியிருக்கின்றன. பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

      • உலக வல்லரசு தான்தான் என்று மீண்டும் அமேரிக்கா நிலை நிறுத்தும் முயற்சியே இது. அமெரிக்க பிரஜைகள் குற்றவாளிகளாக இருந்தாலும், வேறு எந்த நாட்டிற்கும் அனுப்ப மறுக்கும் இந்த மனித உரிமையை மதிக்கும் இந்த மனிதர்கள், தங்களுக்கு வேண்டாதவர்கள் என்றால் எங்கேயும் சென்று அடிப்பார்கள். தாங்களே வளர்த்து விட்ட சதாம், மற்றும் பின் லேடன் தங்களுக்கு எதிராகத் திரும்பிய போதுதான் அவர்கள் தீவிரவாதிகளாகவும், அபாயகரமான மனிதர்களாகவும் தெரிகிறார்கள். இந்த சித்து வேலைகளை  எல்லாம் அமெரிக்கா நிறுத்தினாலே தீவிரவாதிகள் உலகில் குறைந்து விடுவார்கள். 

      • சதாமிடமிருந்து அமேரிக்கா ஒன்றைக் கற்றுக் கொண்டது.  இம்முறை அந்தத் தவற்றை செய்து விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்கள். எதற்கு ஒருத்தனை உயிரோடு பிடிக்க வேண்டும், அப்புறம் கோர்ட்டு கேசுன்னு அலையணும். போவோம் சுடுவோம். முடிஞ்சது. தமிழ் சினிமாவில் இராணுவ வீரர்களாக நடிக்கும் நடிகர்கள் யாரேனும் idea கொடுத்திருப்பார்களோ ?

      • கடைசியா ... எனக்கென்னமோ இறந்து போன வீரப்பனை சுட்டு தமிழக அதிகாரிகள் பேர் தேடிக்கொண்டது போல, கிட்னி செயலிழந்து இறந்து போன பின் லேடனை அமெரிக்கர்கள் சுட்டு பேர் வாங்குகிறார்களோ என்றுதான் சந்தேகம்.

        6.4.10

        ஒரு வார நோயும் போலி மருந்துகளும்

        தமிழர்களுக்கு ஒரு வார நோய் பிடித்திருக்கிறது.

        எந்த நிகழ்வாக இருந்தாலும் அது ஒரு வாரம்தான்.
        எதைப் பற்றியும் ஆழ்ந்த அக்கறை நம்மிடத்தில் இல்லை.

        பள்ளிக்கூடம் தீப் பிடித்தது - பள்ளிக்கூடங்கள் எப்படி செயல்படவேண்டும் என் அதிரடி நடவடிக்கைகள். இப்போது தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் எப்படி செயல் படுகின்றன? அதிரடி நடவடிக்கைகள் என்னவாயிற்று?

        மன நலம் பாதிக்கப் பட்டவர்கள் சங்கிலியில் கட்டப்பட்டு உயிர் போனபோது மனித உரிமைகள் நினைவுக்கு வந்தது. இப்ப்போது என்ன ஆயிற்று...

        கள்ளச்சாராயம் குடித்து ஒரு கிராமத்தைச் சேர்ந்த பலருக்கு கண் போனது, உயிர் போனது - உடனே நடவடிக்கைகள்... அத்தோடு அதை மறந்தாயிற்று. இன்னும் ஒருமுறை பேரிழப்பு ஏற்படும் போது மட்டுமே அடுத்த போர்க்கால நடவடிக்கைகள்.

        ஷேர் ஆட்டோக்கள் - மக்களை ஆடு மாடு போல ஏற்றி விபத்து ஏற்பட்ட போது, குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏற்றக்கூடாது என்ற சட்டம்... இப்போது நம் நண்பர்களுக்கு பணம் தேவைப்படும் போது மட்டுமே அப்படி இருப்பதே தெரிகிறது.

        போலி மருத்துவர்கள் பற்றிய சர்ச்சை வரும் போது போலி மருத்துவர்கள் சிறைப் பிடிக்கப் படுவதும் அதன் பிறகு கண்டு கொள்ளப் படாமல் இருப்பதும், ஏதோ தமிழகத்தில் இப்போது எல்லோருமே படித்த மருத்துவர்கள் தான் இருப்பது போல.

        இப்போது போலி மருந்துகள். காலாவதியான மருந்துகளை வைத்து மனித உயிர்களோடு விளையாட்டு. பணம் சம்பாதிக்க எளிய வழிகள். ஒன்றும்
        செய்யாமல் பணம் சேர்க்க வழி.

        உழைக்காமல், உற்பத்தி செய்யாமல், முதலீடு கூட செய்யாமல் இப்படி நடப்பது புதிதல்ல... இது போன்று aநிறய நடந்திருக்கின்றன.
        உண்மையைச் சொல்லப் போனால்,ஒரு வைரைசை உருவாக்குவதும் அதற்கு மாற்று மருந்து உருவாக்குவதும்
        அதன் வழியாக பணம் பண்ணுவது என அதுவும் ஒரு தொழிற்சாலைதான்.

        கடந்த வருடத்திலிருந்து பன்றிக் காய்ச்சல் பற்றிய பெரிய பயத்தை மக்கள் மத்தியில் விதைத்து, எனவே அவர்கள் மருந்துகளுக்காக அலைந்ததும், பல அரசுகள் கூட இவைகளை வாங்கிக் குவித்ததற்குப் பின் புலத்தில் மருந்துக் கம்பெனிகளும் (ஐ. நா. வின் பின்புலத்தில் அவர்களும் இருந்தததாக பல அரசுகள் இப்போது குற்றம் சாட்டுகின்றன.) இருந்தன.
        அவர்களை எந்தக் கூண்டில் ஏற்றுவது?

        மருந்துக் கம்பெனிகளும், மருத்துவர்களும் தங்களுக்குள்ளே ஒரு முதலாளித்துவத்தை விதித்துக் கொண்டிருக்கின்றன. அவர்களிடமிருந்து நோய் உருவாக்கும் மருந்தும் வரும். அதைத் தீர்க்கும் மருந்தென வேறு மருந்தும் வரும்.

        income tax raid பற்றி செய்திகள் படிக்கிறோம். ஆனால் உணவுக் கட்டுப்பாற்றிக்கான raid குறித்து எங்கும் படிப் பதில்லை. கோகோ கோலா நிறுவனத்தின் மீது மிகப் பெரிய குற்றச் சாட்டு வந்த போது நமது அதிகாரிகள் என்ன செய்தார்கள் ?
        அரசுக்கு மக்கள் மீதோ அல்லது தரம் பற்றியோ அல்லது நேர்மை பற்றியோ கவலை இல்லை. எல்லாம் பணம் - பணம் கிடைக்குமென்றால் எல்லா இடத்திலும் raid பண்ணுவார்கள் - mortuary - யிலும் கூட.

        இப்போது கூட பணம் வரும் என்று எல்லா மருந்தகங்களையும் raid செய்வார்கள்? எல்லாமே நடந்து முடிந்த பிறகுதான் நாம் விழித்துக் கொள்வோமேன்றால், நாம் விழிப்பதில் அர்த்தமே இல்லை. அடுக்கடுக்காய் நடந்த பிறகும் நாம் விழிக்கவில்லை என்றால் வாழ்வதிலும் அர்த்தமில்லை.

        ஒரு வாரத்திற்குப் பின் இதை மறப்போம் - வேறு ஏதாவது வரும்- பின் அதை அசைபோடுவோம். அதன் பிறகு அடுத்த வாரம். 7 நாட்களுக்குப் பின் வேறு ஏதாவது வராதா என்ன?

        21.3.10

        சட்டத்திற்கு மேலானவன் யார்?

        நான் சட்டத்திற்கு மேலானவன் என்று இலங்கை அதிபர் சொன்னதாக செய்திகள் வெளியிடப்பட்டன.

        சில சமயங்களில் அவர்கள் தான் யார் என்பதை அவர்கள் வாயிலாகவே சொல்கிறார்கள்.

        சட்டங்கள் மனிதர்களால் உருவாக்கப்படுகின்றன. அப்படியானால், எல்லா மனிதருமே அதற்கு உட்பட்டவர்கள்தான்.

        சட்டத்திற்கு அப்பாற்ப் பட்டவர்கள் யாரும் இருக்க முடியும் என்றால் இருவர் அவ்வாறு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

        ஒன்று கடவுள் - மற்றொன்று மிருகம் (சாத்தான், பேய், காட்டுமிராண்டி).

        சத்தியமாய் இலங்கை அதிபர் கடவுள் இல்லை...

        6.3.10

        பத்திரிக்கை சுதந்திரம்

        பல நாட்களாகியும் இந்தப் பிரச்சனை முடிந்த பாடில்லை.

        சன் (தொ. கா.) மற்றும் நமது முதல்வர் - இன்னும் ஒரு விவாதத்தை தொடங்கி வைத்திருக்கின்றார்கள்.

        பத்திரிக்கை சுதந்திரம் காக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை.

        தமிழக முதல்வர் - இது போன்ற (நித்தியானந்தம் படுக்கைக்) காட்சிகள் முதலில் அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும் - அதன் பிறகே இதை ஒளிபரப்ப வேண்டும் என்று சொல்கிறார் -
        (அவர் கைது செய்யப்பட்ட போது இதைச் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்). - அப்படிச் செய்தால் என்ன ஆகும்?


        அப்படிச்செய்தால் இப்போது தொலைகாட்சி வியாபாரம் செய்வதை அரசே ஏற்று நடத்தும். செய்தி வெளிவராது - ஆனால் அதற்காக சம்பந்தப் பட்டவர்கள் கொடுக்கும் விலை மிக அதிகமாக இருக்கும்.
        எத்தனை மிரட்டல்களை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும் - எவ்வளவு பணம் கை மாற வேண்டும் - அவர்களின் காவலனாக அல்லது இறுதி வரை அவர்கள் எல்லாருக்குமே கைப்பாவையாக - ஆட்டுவிக்கிற விதத்தில் எல்லாம் ஆடுகிற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பார்கள். அதற்கு இப்படி செய்தி வெளிவந்தால் பரவாயில்லை.
        உண்மை வெளிவர வேண்டும் என்பதுதான் நமது முதல் அக்கறை. முதல்வர் சொல்வதுபோல செய்தால் பத்திரிக்கைகள் எல்லாம் மீண்டும் அரசின் காலடியில் கிடக்க வேண்டியதுதான்.

        நாளைக்கு அரசைப்பற்றிய ஒரு சி.டி வந்தால் - அதையும் அரசிற்கு சமர்ப்பிக்க வேண்டுமா?

        ஏற்கனவே தென் இந்தியாவின் (குறிப்பாக )தமிழகத்தின் பல்வேறு பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள், நாளிதழ்கள், வானொலிகள் என்று எல்லாத் தளங்களிலும் தனது அக்டோபஸ் கரங்களை விரித்து நிற்கும் ஒரு குடும்பத்தினரின் பார்வைகள் மட்டுமே உண்மையாக வெளி வருவதைத்தான் நாம் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும். இப்போது திரைப்படங்கள் வெளியிடவும் தொடங்கியாற்று.

        ஒருவேளை தமிழன் இப்படி வளர்ந்திருக்கிறானே என்று வேண்டுமானல் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். வளரும் தொழில் அதிபர்கள் இது போன்ற செயல்களை எல்லாம் செய்துதான் ஆக வேண்டும் என்றும் நல விரும்பிகள் நினைக்கலாம். நமக்கென்ன -


        யாரும் பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிரானவர்கள் அல்ல. அப்படி என்றால் நாம் கூட இப்படி எல்லாம் எழுதிக்கொண்டு இருக்க முடியாது. பத்திரிக்கையும் தொலைக்காட்சியும் ஒரு நாட்டின் முதுகெலும்பு என்று நாம் நம்புகிறோம்.
        அடக்குமுறைக்கும், அதிகாரத்திற்கும் எதிராக - பணத்தையோ, பலத்தையோ பயன் படுத்தி உண்மையை மறைக்க நினைக்கும் அனவைருக்கும் எதிராக- உண்மையை வெளிக்கொணரும் கருவி - ஆயுதம் - வாள் --- எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்.

        சன் தொ.கா. என்பது நமது எதிரியல்ல.
        நாம் யாரை எதிரியாக நினைக்க வேண்டும்?
        பத்திரிக்கை சுதந்திரம் காக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இதனை எழுதுகிறோம்.

        இந்த வீடியோ வேறு யாரிடமாவது முதலில் போயிருந்தால் அவர்களும் இதைதான் செய்திருப்பார்கள் என்பதும் உண்மைதான். அதைத்தான் தவறு என்று சொல்கிறோம்.

        ஒரு பொது நபருக்கு என்ற அறம் இருக்கிறது . அதிலிருந்து அவர் தவறும் போது அதை சுட்டிக் காட்டுகிறோம் என்பதில் உள்ள அக்கறை - அதே சமயத்தில்
        பத்திரிக்கைகளுக்கும் அறம் இருக்கிறது என்பதை உணர வேண்டும் என்பதும் உண்மைதானே. ஒரு பத்திரிக்க வெளிவருகிறது என்றால் அதுவும் ஒரு பொது நபர் போலத்தானே. அப்படியெனில், அது வழி மாறும் போது அதன் தவறை யார் சுட்டிக்காட்டுவது. அது அறம் தவுறும் போது யார் வெளிக்கொணர்வது?

        பத்திரிக்கை என்பது அறத்திற்கு அப்பாற்பட்டது என்று சொன்னால் - அது வெறும் வியாபாரம் என்று மட்டும் சொல்லுங்கள். வெறும் வியாபாரம் செய்கிறவர்களுக்கு மக்கள் மேல் என்ன அக்கறை. மக்கள் மேல் உள்ள அக்கறையினால் தான் இப்படிச் செய்கிறோம் என்றால் நமக்கென்று ஒரு அறம் இருக்கிறது. என்பதை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

        ஒரு சில பத்திரிக்கைகள் தவறு செய்வதால் அனைவரும் தவறுகிறார்கள் என்று சொல்லி விட முடியாது. இதைப் பார்த்து எல்லோரும் இப்படிச் செய்துவிடலாம் என்று வழி மாறக் கூடாதே என்ற உணர்வே இது.


        எப்படி அரசாங்கம் தனது அதிகாரத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற நிலை மாற வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ (பத்திரிக்கைகளின் உண்மையான பலத்தால் அரசின் தவற்றை சுட்ட வேண்டும், அது முடியும் )அதைப் போலவே பலம் வாய்ந்த பத்திரிக்கை நினைத்தால் எதையும் செய்துவிட முடியும் என்கிற நிலையும் மாற வேண்டும்.