18.3.10

தினம் தினம் - பணம் - கருப்பு -வெள்ளை

ஒவ்வொரு நாளும் புதிது புதியதாய் நிகழ்வுகள்: ஒன்றும் எழுத வேண்டாம் என்றுதான் நினைத்தேன்.
எழுதி என்ன ஆகப் போகிறது? ஒன்றும் ஆகாமல் போனாலும், மௌனமாய் இருக்கிறபோது எதோ நாமும் இந்த நிலைக்கு காரணமாய் இருக்கிறோம் என்பது மட்டுமல்ல, இன்னும் நன்றாக இந்த ஊழல் பெருக வழி செய்கிறோமே என்கிற கோபத்தில் எழுதுகிறேன்.
நீங்கள் படித்து என்ன ஆகப்போகிறது?
இதைப்பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தால் இந்த ஊழல் பெருக நீங்களும்தான் காரணிகள்: நானும்தான்.

சரி எதைப்பற்றி எழுவது? - பணம்.

பணம் - பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது.
பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே இருக்கின்றது.
இருந்தாலும் வாங்கும் சக்தி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்று மகிழ்ச்சி அடையலாம் என்று ஒரு சாரார் சொல்கிறார்கள்.

காய்கறியை விட கோழிக்கறி மலிவாக இருக்கிறது.
தாகம் எடுத்தால் பால் வாங்கிக் குடிக்கலாம், பாலின் விலை தண்ணீரை விட குறைவாக இருக்கிறது.
ஒருவேளை பூவின் [மலர்கள்] விலையும் அதிகரித்து பணம் மலிவாகக் கிடைக்கிறதோ என்பதுதான் எனக்குள்ள சந்தேகமே?

மாயாவதிக்கு பண மாலை கிடைத்ததே அதைத்தான் சொல்கிறேன். முதலில் ஒரு கோடி-க்கு 1000 ரூபாய் நோட்டில் மாலை என்றார்கள், பிறகு, 2 கோடி, இப்போது 20 கோடி என்பது வரை வந்து நிற்கிறது.

பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது இருக்கட்டும் - அதற்காக அதை ஏதோ தோட்டத்தில் காய்த்து தொங்குவது போலவும், அதைப் பறித்து அலங்கரிப்பது போலவும் செய்வது ரொம்பக் கொடுமைப்பா.
"என்ன இங்க பணம் காய்ச்சுத் தொங்குதுன்னு" நினைச்சியா என்று பெற்றோர்கள் கேட்பார்கள். ஒருவேளை அவர்களுக்கு அதைக் காய்க்கவைக்கிற வித்தை தெரியவில்லையோ என்னோவோ.

பணத்தை வைத்து மாலை இயற்றுவது இந்த நாட்டின் அவமானமா - பெருமையா என்பது தெரியவில்லை. ஒருவேளை மாயாவதி அம்மையார், இந்திய ஒருமைப்பாட்டின் மீது நம்பிக்கை இல்லாமல் அதனைக் கேலி செய்வதற்காக இது போல செய்திருக்கலாமோ என்னவோ. ஒரு நாட்டைக் கேவலப்படுத்த அந்த நாட்டில் குண்டெல்லாம் போடவேண்டியதில்லை. தேசியக் கோடியை கிழித்தாலே போதுமானது. அரசியல் வாதிலே அதையெல்லாம் செய்யக் கூடாது என்று சுற்றிக் கழுத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறார்.

"என்மீது கொண்ட அன்பால் அவர்கள் செய்தார்கள்" என்று மாயாவதி அம்மையார் சொல்கிறார்.
நாம எவ்வளவோ பேரைப் பார்த்துட்டோம் - நமக்குத் தெரியாதா. தமிழ் நாட்டில் இது போல அன்பால் செய்தார்களியும் பார்த்துட்டோம் - வெளிநாடுகளில் இருந்து காசோலை மூலமாக அன்பு செய்வதையும் பார்த்திருக்கிறோம்.

கருப்பை - வெள்ளையாக்கும் முயற்சி. வேறென்ன?

இல்லையென்றால், தன்னைத்தானே பெருமைப்படுத்திக்கொள்ளும் முயற்சி. தனக்கே மாநிலம் முழுவதும் சிலை வைத்துக் கொள்வது - பெரிய மண்டபம் கட்டிக்கொள்வது - தோட்டம் அமைத்துக் கொள்வது - இப்போது பணமாலை. தன்னைத் தானே நேசிக்கும், தன்னை மட்டுமே நேசிக்கும் ஒரு இழிநிலையின் வெளிப்பாடு.

இதை ஒரு எழுச்சியாகவும் பார்க்கலாம். மற்றவர்களுக்கு இணையான ஒரு தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் ஒரு முயற்சி என்பதற்காக இது போன்ற செயலலை செய்ய வேண்டியிருக்கிறது என்று சொல்லிக்கொள்ளலாம் - ஆனால் மாயாவதி விஷயத்தில் அதை நினைத்துப் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை.

ரூபாய் நோட்டில் எழுத வேண்டாம் என்றார்கள் - பூவெல்லாம் செய்யக்கூடாது என்றும் சட்டம் இயற்ற வேண்டும் போலிருக்கிறதே.

கோடி எரித்தால் கடும் சட்டம் - கோடி மிதித்தால் தண்டனை. தேசிய கீதம் அவமானப் படுத்தினால் சிறை. தேசிய பணம் --- என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இந்தப் பணத்தை வைத்தே இது தவறில்லை என்று சொல்ல வைக்கலாம் - யாரை வேண்டுமானாலும் விலைக்கு வாங்கலாம்...

அது சரி - நமக்கெல்லாம் இந்தப் பணம் மலர்களை விட மலிவாகக் கிடைப்பதில்லையே அது ஏன்?

இப்போது புதியதாய், ஒரு அரசியல் கட்சி - யோகா குரு பாபா ராம்தேவ் "ஸ்வபிமான் அபியான்" - ன்னு ஒரு கட்சி தொடங்கியிருக்காராம்.
அட சாமிங்களா எங்கே இருந்துதான் பணம் வருதோ.

அரசியல்வாதிகளுக்கு அச்சடித்த பணம் கசங்காமல் கிடைக்கிறது. இப்போது யோகா குருக்களுக்கு வேறு நிறையக் கிடைக்கிறது. பார்லிமெண்டில் சாக்குப்பையில் பணம் கத்தை கத்தையாய் வருகிறது.
கிரிக்கெட்டில் பணம் புரளுகின்றது.
I. P. L. கிரிக்கெட். இதனால் அரசுக்கு 200 கோடி வருமானமாம். - வருமான வரித்துறை மகிழ்ச்சி அடைந்திருக்கிறது. ஷாருக்கானுடன் அமர்ந்து கிரிக்கெட் பார்க்க 32,000 ரூபாயாம். என்னப்பா இது? எத்தனை கோடிகள்தான் புரளும்? உலகம் முழுக்க recession என்று சொல்கிறார்கள் - இந்தியா மட்டும் விதி விலக்கா.


அணு உலையினால் ஆபத்து ஏற்பட்டால் வெறும் 300 கோடி கொடுத்தால் போதும் என்று கூப்பாடு போட்டு, சட்டம் இயற்றப் போகிறார்களாம். அதுக்கு மேற்பட்டு வேணும்னா நீதி மன்றத்தில் வழக்கு போட்டு வாங்கிக் கொள்ளலாம் என்று விதண்ட வாதம் வேறு. நம்ம நாட்டில தான் நிலுவையில் இருக்கிற வழக்குகள் முடியவே 300 ஆண்டுகள் ஆகுமே?
[http://unmayapoyya.blogspot.com/2010/03/blog-post_07.html]

இதற்குத்தான் நமது பிரதமருக்கு "World statesman award" ஆ?

அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை - அதனருகில் ஓலைக் குடிசை -
மூத்த தலைவர்கள் வாழ்க.

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்