உறவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உறவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11.7.13

கொலைகார்கள் நாங்கள்

  • உத்திரகான்ட்டில் ஒரே நாளில் ஆயிரம் உயிர்கள் ஒன்றாய் விழுந்தபோது கூட நான் கலங்கிப் போகவில்லை.  ஆனால் ஆயிரம் ஆண்டுகளாய் உன் போன்றோர் ஒவ்வொருவராய் இறக்கும் போதுதான் நான் வெறுத்துப் போகிறேன். 
  • உன் இறப்பு கொலையோ தற்கொலையோ எனக்குத் தெரியாது ஆனால் கொலைகாரர்கள் யாரென்று தெரியும் ... வேறு யார் நாங்கள்தான்... 
இளவரசனின் தற்கொலைச் செய்தியை - சில தமிழ் பத்திரிக்கைகள்... தர்மபுரி கலவரத்திற்குக் காரணமான இளவரசன் தற்கொலை என்று செய்தி வெளியிட்டு இருந்தன... கலவரத்திற்குக் காரணமான பல அய்னாக் கைகள்  சுதந்திரமாய் இருந்தது மட்டுமல்ல அதை நியாப்படுத்தவும் செய்து களிப்பில் மிதந்து கொண்டு இருக்கும், இறந்து போன இளவரசனை காரணம் காட்டும் சாதி வெறியர்கள் நாங்கள் கொலைகாரர்கள்தானே... 


தனி மனித உரிமை பேசும் நாங்கள், திருமணத்திற்கு மட்டும் சாதிக்குள் உரிமை பேசி அதை எங்கள் உரிமையாகவும் பேசி உன்னைக் கலகக்காரனாக்கின நாங்கள் கொலைகாரர்கள் தானே!

தீண்டாமை பாவச்செயல் உரக்க சொல்வோம் நாங்கள் ஆனால் அது எழுத்தில் மட்டும் இருக்க வேண்டும் என்பதில் இறுதிவரை உறுதியாய் இருக்கும் நாங்கள் ...

இன்னும் பேசுவோம் மனித உரிமை.... இன்னும் பேசுவோம் தீண்டாமை பாவச் செயல் ... இன்னும் பேசுவோம் காதல் வாழ்க... 

ஆனால் இளவரசன்களை மட்டும் வாழ விடுவதாய் இல்லை...
வாழ்க காதல் ...  வாழ்க மனித உரிமை ... வாழ்க சுதந்திரம்...

19.1.13

எனக்கு பொங்கல் இல்லை....


எனக்கு பொங்கல் இல்லை 


இரமன கிரி வாசன் 


என் இனம் அழிந்த வலி இன்னும் மிச்சமிருக்கிறது...

முள்வேலி முகாமில் உயிரை தவிர இழக்க ஏதுமின்றி
ஓடுங்கி கிடக்கும் என் சகோதரனையும் சகோதரியையும் 
நினைக்கையில் கரும்பு கசக்கிறது.

காவிரி தண்ணீருக்காய் காத்திருந்து காத்திருந்து கருகிப்
போன என் நெற்களஞ்சியம் மனசை அழுத்துகிறது ...

தலை சாய்ந்து கிடக்கும் வயற்வெளியெல்லாம் 
காங்கீரிட் கதிர்கள் முளைத்து ஸ்கொயர் பீட் இவ்வளவு
என்று வியாபாரத்திற்கு தயாராக நிற்கிறது.

உம்மன சாண்டிக்கு பென்னி குயிக்கே பரவாயில்லை 
என்கிற போது சுதந்திரம் வாங்கி தந்தவர்கள் மேல்
எனக்கு கோபம் வருகிறது.

கடற்கரையோரம் ஆண்டுகளை தாண்டி தொடரும் 
பட்டினிப்போராட்டத்தை நினைக்கையில் என் பொங்கல் பானை
பொங்க மறுக்குறது .

தரையில் தண்ணீர் இல்ல....
எம் கண்ணீரை வழித்து எடுக்க கூட மோட்டாருக்கு கரண்டு இல்லை...

உழவர்கள் எல்லாம் தினக்கூலியாக எம் உழவு மாடுகள் எல்லாம்
அடிமாடுகளாய் ஏலம் போல நீயும் நானும் எஸ் எம் எஸில் பொங்கல்
வாழ்த்து சொல்லிக் கொள்வதில் உடன்பாடு இல்லை எனக்கு...

இனமும் , மொழியும் , உழவும் அழிந்து கொண்டிருக்கையில்
ஏது உழவர் திருநாள் ? ஏது தமிழர் திருநாள் ? 

இரண்டு நாள் விடுமுறையும் , தமன்னாவின் நேர்காணலும்
எந்திரன் சினிமாவும் தான் பொங்கல் என நினைத்தால்
அதை நீயே கொண்டாடிவிட்டு போ......

எனக்கு பொங்கல் இல்லை....

                                                                             இரமன கிரி வாசன் 

********************************************************************
என்  வலையில் வெளியிட
இசைந்ததற்கு 
நன்றி 
அப்பு 
*********************************************************************






26.8.12

... நட்பன்று ... முகநூல் நட்பே நட்பு


கணினி [கம்ப்யூட்டர்] ஒருவர் இருவர் என்று இன்று எல்லார் கையிலும் வந்துவிட்டது. அதன் சிறு வடிவமான தொலைபேசியிலும் அதன் தொழில் நுட்பம் பகிரப்பட அது இல்லாமல் வாழ்க்கை இல்லை என்று ஆகி விட்டது. இணையமும் அதனோடு சேர்ந்து விட  இந்த சோசியல் நெட்வொர்க்குகள் எல்லா இடங்களிலும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது.   

தொழில் நுட்பத்தின் வேகத்திற்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை. இந்த கால கட்டத்தில் வளர்ந்து வரும் தொழில் நுட்பம் அபரிமிதமானது மட்டுமல்ல மாறாக மிகவும் வேகமாகவும் முன்னேறிக் கொண்டிருக்கிறது.  

நண்பர்களோடு பேசலாம், பழகலாம் என்று சமூகத் தளங்களில் இணைய முடிவெடுப்பதற்குள் புதிய புதிய சமூகத்தளங்கள்.  
எப்படிப் பயன்படுத்துவது என்று பார்க்க யு டியூபுக்கு சென்று பார்த்து பயன்படுத்த முயல்வதற்குள் அடுத்த வசதி என்று போய்க் கொண்டே இருக்கிறோம். 
இந்தக் களோபாரத்தில் நண்பர்களிடம் பேசுவது கூட மறந்து போய் விடுகிறது. 

இப்ப நான் வெறும் முக நூல் மாட்டருக்கே வந்தர்றேன்.

இந்த முக நூல் புத்தகம் இருக்கிறதே இதனை நானும் இப்போது பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறேன். இடையில் கொஞ்சம் தளர்ந்து போனேன். இருந்தாலும் இந்தத் தளம் எவ்வளவு பயனுள்ளதாய் இருக்கிறது என்பதை எழுதாமல் இருக்க முடியவில்லை. என்னை யாருன்னே  தெரியாதவர்கள் கூட எனக்கு நண்பர்கள். 
எவ்வளவு விரைவாக அன்யோன்யமாகிப் போகிறோம். எவ்வளவு நெருக்கமாகிறார்கள். ஒரு நண்பரை உருவாக்கிக் கொள்வது அப்படி ஒன்றும் கடினம் இல்லை. 
எவ்வளவு புதிய புதிய நண்பர்கள் எனக்கும் அவர்களுக்கும். நண்பர்களின் நண்பர்கள், அவர்களின் நண்பர்கள். 
முல்லா நாசருதீன் கதையில் வரும் - சூப் ஆப் தி சூப் ஆப் த சூப் ஆப் த --- போல நண்பர்களின் நண்பர்களின் நண்பர்களுக்கு எல்லாம் அறிமுகமாகி இருக்கிறேன். ஹன்சிஹா போட்டோ போட்டதினாலே நான் நண்பராகிறேன் அவரும் உடனே என்னை நண்பராகச் சேர்த்துக் கொள்கிறார். 
அனுஷ்கா புடிக்குமா அதுனால அந்த போட்டோவைப் பாத்துட்டு அதை எழுதுறது ஆனா பொண்ணான்னு கூடத் தெரியாம நண்பராகி விட்ட சந்தோஷத்துல திளைக்கிறேன். அவர்களிடம் சாட் செய்கிறேன், லைக் பண்றேன். ஷேர் பண்றேன்... 
ஆனா கொடுமை சார் - அப்பா அம்மாகிட்ட பேச நேரம் இல்லை.

என் ஸ்டேட்டசை நாலு பேரு லைக் பண்ணா அதுவும் சந்தோஷமா இருக்கு. திரையைப் பார்த்து பார்த்து குடும்ப உறுப்பினர்களைக் கூட நேராப் பாக்கிறத விட இப்பல்லாம் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன்ல பார்க்குறதுதான் புடிக்குது. 

அதனால என்ன ஆச்சுன்னா தெரிஞ்ச ஆட்களை விட, எனக்குத் தெரியாத ஆட்களோட பழகுறதுல ஒரு சுகம் கண்டு போனேன். எந்தவித கமிட்மெண்டும் இல்ல பாருங்க. அவன் கஷ்டத்துல பங்கு பெற வேண்டிய அவசியம் இல்லை. என் கஷ்டத்துல 'ஐ ஆம் சாரி' அப்படிங்குற பதிலோட என் நண்பர்களின் கமிட்மென்ட் முடிஞ்சு போகுது. அதுவும் சந்தோஷமாத் தான் தெரியுது.

தன் அண்ணன் பொண்ணு இறந்து விட்டாள் என்று என் நண்பர்  போட்டோ போஸ்ட் பண்ணதை நாலு பேரு லைக் பண்றான் சார்.
எத லைக் பண்றதுன்னே விவஸ்தை இல்லாமல் போச்சு. அவ்வளுவு பிஸியாமா! ... அதனால ரெண்டு வார்த்தை கூட எழுத முடியாம போச்சு -
அதுக்காக அதை டிஸ்லைக் பண்ணலாமான்னு  ஒரு குரல் கேக்குது  - நான் என்ன சொல்றது?

முகமே தெரியாத யாரோ ஒருவருடைய சுவற்றிலேயோ [wall] ஆணியில் அடித்ததை அவர் பகிர்ந்து [share] கொள்ள, நான் அதை விரும்பி [like], என் சுவற்றில் ஒட்டிவிட [post] அதை எனது நண்பர்கள், சில சமயம் நண்பர்களின் நண்பர்கள் என்று எல்லாரும் மீண்டும் லைக், ஷேர், போஸ்ட், லிங்க், சஜ்ஜஸ்ட் என்று மீண்டும் அடுத்த ரவுண்டு நமது சுவற்றிற்கே வந்து விடுகிறது.
உலகம் எவ்வளவு சின்ன உருண்டை. முருகன் சுற்றி வருகிற நேரம் எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை. சில சமயம் ஆணை முகத்தான் சுற்றி வரும் நேரத்திற்குள் வந்து விடுகிறது.

இப்ப ஒரு நாளைக்கு இணைய இணைப்பு கிடைக்க வில்லை என்றால் தூங்க முடியலை, சாப்பிட முடியலை.
என் நாலு விட்ட நண்பர் சுவற்றில் என்ன லைக் பண்ணி, ஷேர் பண்ணினார்னு ஒரே யோசனையா இருக்கு!
அனுஷ்கா பொண்ணு தூங்கப் போனுச்சா - அதனோட ஸ்டேடஸ் என்னன்னு தவிக்க விடுது. அதனோட ஸ்டேடசை 650 ஆவதா ஆளா  நான் லைக் பண்ணலைன்னா அது தூங்கப் போகுமா போகதாங்கிற கவலை அதுக்கு மேல வாட்டுது.
என் அப்பா மருத்துவ மனையில் இருந்தப்ப கூட இப்படி எல்லாம் மனசு தவிக்கலைங்க. இப்ப இந்தத் தவிப்பு மனுஷனைக் கிறுக்குப் பிடிக்க வைக்குது.

மக்களே! இப்ப கொஞ்ச நாள்லயே தல சுத்துதே... அதுலேயே இருக்குற நண்பர்களுக்கு...  ஒரு நாள் முக நூல் புத்தகம் காலியானா எப்படி இருக்கும்னு நினைச்சாலே எனக்கு ஒரே திகிலா இருக்கு....

ஆனா கொடுமையைப் பாருங்க சார் இதைக் கூட நான் முக நூலில் ஷேர் பண்ண வேண்டிய சூழ்நிலைக் கதியாகிப் போனேன். 

கொசுறு:
நண்பர்களே,
நண்பர்களின் நண்பர்களே,
நண்பர்களின் நண்பர்களின் நண்பர்களே  -
இந்தப் பதிவென்னமோ சீரியஸா எழுதத் தொடங்கியதுதான்.
பாதியிலேயே  ஜாலியா மாறிப் போச்சு. 
சரி  எழுதுனதுதான் எழுதினோம்
காத்திரமும் பகடியும் சேர்ந்து செய்த ஒரு கலவைப் பின் நவீனக் கட்டுரையாக
இருந்து விட்டுப் போகட்டும் என்று அப்படியே விட்டுவிட்டேன்.

இனி நீங்க --- ஒழுங்காப் பயன்படுத்தணும்... சரியாப் பயன்படுத்தணும். குறிப்பறிந்து நடக்கணும். 
இது ஆல்கஹால் மாதிரி அளவாய்ப் பயன்படுத்தணும் 
என்பது போல நல்ல யோசனைகள் இருந்தால் 
தயவு செய்து காமென்ட் போடுங்க.
வேற யாருக்கும் இல்லாட்டியும் நிச்சயம் எனக்காவது பயன்படும். 

ஒருத்தனின் கிறுக்கை  சரிசெஞ்ச புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும்.

காமென்ட் போடவெல்லாம்  நேரம் இல்லைன்னா
ஒரு  லைக் பண்ணுங்க ...
இல்லாட்டி   ஷேர்  பண்ணுங்க ...
எனக்காக  இல்லாட்டாலும்
இந்த அனுஷ்கா,  ஹன்சிகாவுக்காகவாவது ...




முக நக நட்பது நட்பன்று
முகநூல் நட்பே நட்பு.
அப்பு 



26.10.11

தீப விழா


நண்பர்களே தீப விழா வந்துவிட்டால் எல்லாருக்கும் மகிழ்ச்சிதான்... குழந்தைகள் முதற்கொண்டு பெரியோர் வரை...
தீப விழா வாழ்த்துக்கள்...

நல்லாக் குளிப்போம் - எண்ணெய் தேய்த்துக் குளித்தல் உடம்புக்கு நல்லது...
கந்தலானாலும் கசக்கிக் கட்டுவோம் - ஆனால் அப்படிப் பட்டவர்கள் யாரும் வலைப் பக்கம் வருவதில்லை என்பதனால்
கசக்கிக் கட்டும் யாருக்காவது ஒரு புதிய உடை பரிசளிப்போம்.
நன்றாய் உணவருந்தி - அருகில் இருப்போரோடு பகிர்ந்துன்னுவோம்.

இருக்கிற விலை வாசியில்

யாரும் பட்டாசு கொழுத்தி காசை கரியாக்க வேண்டாம்.

அந்தக் கரியால் சூழலை மாசு படுத்த வேண்டாம்.

[சிவகாசி மக்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது]

அது மட்டுமல்ல வெடி வெடிக்கிற ஆசைதான் நம்மை அணு வெடி, அணு குண்டு வரை விட்டிருக்கிறது.  இப்போ அணு உலை வெடி பார்ப்பது வரை நம்மை வளர்த்து விட்டிருக்கிறது.

தீப விழாவில் மின்சார விளக்குகளை அனைத்து விட்டு [அப்படியே தொல்லைக் காட்சியையும் சேர்த்து] எண்ணெய் விளக்குகள் ஏற்றி, அந்தத் தீப ஒளி வெள்ளத்தில் குடும்பத்தோடு கும்மாளம் இடுங்கள்.

அனைவருக்கும் தீப விழா வாழ்த்துக்கள்.

12.10.11

பாசக்கார நண்பர்களே - நேரம் ஒதுக்குங்கள்


நேற்று ஒரு மின்னஞ்சல் வரப் போய் அதன் சாரம் எல்லாருக்கும் பயன்படட்டுமே என்று இந்தப் பதிவு. 

நமது உலகில் ஒருவர் மற்றவருக்காக நேரம் செலவிடுதல் என்பது குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் நமக்காகப் பலர் செலவழித்த நேரங்கள் தான் நம்மை நாம் இருக்கும் நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. 
அப்படி நமக்கு நேரம் செலவழித்தவர்களுக்கு மீண்டும் நாம் நேரம் செலவிடுவதுதானே தருமம்.
உடனிருந்த அம்மா, அப்பா, சகோதரர்கள், நண்பர்கள், பதிவுலக நண்பர்கள்... நேரம் செலவிட பிள்ளைகள் தயாராக இருந்தால் இன்றைக்கு முதியோர் இல்லங்களே தேவையில்லை.. 
ரொம்ப சீரியசான பதிவாக மாற்ற விரும்பவில்லை.
உறவுகளுக்கு - குறிப்பாக நமக்காக நேரம் செலவழிப்பவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்...

நாம் எதைக் கொண்டு வந்தோம் எடுத்துச் செல்வதற்கு - ஒன்றுமில்லாமல் வந்தோம் ஒன்றும் இல்லாமலலேயே போகப் போகிறோம். இதில் இடைப் பட்ட காலத்தில் நாம் இந்த உலகில் அனுபவிக்கும் ஒவ்வொன்றும் பல்வேறு நபர்களின் பங்களிப்பு. ஆனால் அதை எந்த அளவுக்கு நாம் உணர்ந்த்திருக்கிறோம் என்பதே கேள்வி. எத்தனை நபர்களுக்கு நன்றி என்று உள்ளத்தால் இல்லாவிடினும் உதட்டளவிலாவது சொல்லியிருப்போம்.
உயிரைக் கொடுத்த அம்மா, உலகைக் காட்டிய அப்பா, சேர்ந்து வளர்ந்த சகோதரங்கள், கல்வி கொடுத்த ஆசிரியர்கள், உணர்வு கொடுத்த நண்பர்கள், இன்னும் எத்தனை எத்தனையோ.

ஆனால் அவர்களுக்கு நன்றி என்று சொன்னோமோ என்றால் இல்லை என்றே தோன்றுகிறது. நன்றி சொல்லி அவர்களை அன்னியப் படுத்துவது அல்ல விஷயம். அவர்களுக்காக நாம் எப்படி நேரம் செலவிடுகிறோம் என்பதிலும் இருக்கிறது. 

காலம் மிக வேகமாகப் பயணிக்கும் காட்டாறு போன்றது. யாருக்கும் செவிசாய்க்காத அலை போன்றது. பல நேரங்களில் நாம் அதை உணர்வதற்கு முன்பே பல ஆண்டுகளைக் கடந்து விட்டிருப்போம். செங்கோவி இனிமேல் சனி ஞாயிறுகளில் பதிவுலகின் பக்கம் வருவதில்லை என்றும் தனது உறவுகளுக்கான நேரம் என்று வார இறுதி நாட்களுக்கு தனது வலைப்பூவிற்கு விடுமுறை கொடுத்த பாசம் - அந்த நியாயமான பாசமும் எல்லாரிடத்திலும் இருக்க வேண்டியது அவசியம். [அதுக்காக எல்லாரும் ஞாயிற்றுக் கிழமை லீவு விட்டுறாதிங்க].

இருக்கும் போது இல்லாமல் இருந்துவிட்டு - காலம் கடந்த போது இருக்க நினைத்தால்  அது நிகழாமலே போகலாம். எனவே உடனே, இன்றே, இப்போதே, இப்பவே....
 ....

சில மாதங்களுக்கு முன்பு பல ஆண்டுகளாக நான் தேடிக்கொண்டிருந்த என் ஆசிரியர் ஒருவரது மின்னஞ்சலின் முகவரியைக் கண்டு பிடித்து அவருக்கு நன்றி சொல்லி ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். உடனே அவரிடமிருந்து பதிலும் கூட. மனதுக்கு மிக நெருக்கமான தருணங்கள் அவை. 

வாழ்வில் இது போன்ற தருணங்கள் மிக அற்புதமானவை. அது எல்லாருக்கும் வாய்க்கும் என்றே கருதுகிறேன். 
....
"கலைஞர் - கனிமொழியை" மனதில் வைத்து இப்பதிவு எழுதப் படவில்லை.