அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1.9.13

என்ன ஆச்சு? – (நானும் பிரதமரும்) - நடுவுல கொஞ்சம் ...

என்ன ஆச்சு? டிரெயின விட்டு இறங்குனேன்... வேகமா நடந்து ஸ்டேஷனின் வாசலுக்கு வந்தேன்.. எதுத்தாப்ல இருந்த படகைப் பார்த்துட்டே படில இறங்குனேன்... ஓ மூணாவது படில செருப்பு வழக்கி விட்டு தலை கீழா விழுந்து படில உருண்டேனா... அப்ப இங்க அடிபட்டிருக்கும்... அங்கதான் ...-

- என்று நான் கீழே விழுந்த பிறகு புலம்ப ஆரம்பித்திருந்தால் நான் கீழே விழுந்ததை வேடிக்கை பார்த்த யாருக்கும் ஒன்றும் புரிந்திருக்காது... ஏன்னா அவங்க யாருக்கும் தமிழ் தெரியாது. மொழி தெரியாத நாட்டுல விழுந்தா இதுதான் சிக்கல்... புலம்பக் கூட முடியாது. யாரு செஞ்ச புண்ணியமோ தலைல அடிபடாம இருந்ததால புலம்பா தப்பிச்சேன்  (ஆனா பாவம் நீங்க மாட்டிக்கிட்டிங்க – என்ன செய்யுறது?).
நானும் வருஷத்துக்கு ஒருமுறை விழுகிறதை வழக்கமா வச்சிக்கிட்டு இருக்கேன். போன வருஷம் ஜூன் மாதம் இப்படித்தான் கி. க. சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் மதிய உணவு சாப்பிட்டு வெளியே வரும்போது படி முடிஞ்சிறோச்சுன்னு நினைச்சு காலை வைக்க நெஞ்சு தெறிக்க விழுந்தேன் (கி. க. சாலை அப்படின்ன உடனே உங்கள்ள சில பேர் மது உணவு சாப்பிட்டு வெளியே வரும்போது விழுந்தேன்னு படிக்க வாய்ப்பு உண்டு அதனால ரிப்பீட்டு மதிய உணவு) – ஆக மொத்தம் அன்னைக்கு குப்புற விழுந்தேன்... இப்ப மல்லாக்க...
கமல் சொன்ன மாதிரி அது என்ன மாயமோ தெரியல எனக்கு ஒண்ணுமே ஆகிறதில்லை... ... ....

ஏதோ நான் மட்டும்தான் இப்படி விழுந்து அடி வாங்கி ரொம்ப தெம்பா இருக்கிறதா எனக்கு ஒரு திமிரு வந்த நிமிஷமே நம்ம பிரதமரை நினைச்ச உடனே எல்லாம் மறந்து போச்சு... நானெல்லாம் ஒண்ணுமே இல்லைன்னு ஆகிப் போச்சு.

அவர் ஒவ்வொரு கூட்டத் தொடருக்கும் முன்னாடி ஒவ்வொரு முறையும் அவரை யார் கவிழ்த்து விழ வச்சாலும், அவரே வழுக்கி விழுந்தாலும்  ஒண்ணுமே ஆக மாட்டேங்குது - வெட்கமே இல்லாமல் நான் விழுவதுமாதிரி  அதை பெருமையா வேற சொல்றமாதிரி அவரும் தலையில இரண்டு கைய வச்சுகிட்டு ... 
“என்ன ஆச்சு? 2 G ஆ  ... ஏலம் விட்டாங்களா... ஆயிரக்கணக்கான கோடிகளை ஏப்பம் விட்டாங்களா... நான்தான் பிரதமாரா நான்தான் பேசணுமா ஓ கே ஓ கே.. அது ஊழல் இல்லை நாட்டுக்கு நட்டம் மட்டும்தான் சொன்னா  ... எதிர் கட்சிக் காரங்க இரண்டு நாள் சத்தம் போடுவாங்க... தூங்கி எந்திரிச்சா அதுக்கப்புறம் சரியாயிரும் ...”

அடுத்த கூட்டத் தொடர் - “என்ன ஆச்சு? நிலக்கரி ஊழலா? பதுக்கிட்டாங்களா. நான்தான் பிரதமாரா நான்தான் பேசணுமா... ஓகே ஓகே... எதிர் கட்சிக் காரங்க இரண்டு நாள் சத்தம் போடுவாங்க அதுக்கப்புறம் சரியாயிரும்.”

என்ன ஆச்சு? பண மதிப்பு சரிஞ்சு போச்சா? ரொம்பக் கேவலமா போச்சா? ஓகே ஓகே.. நான்தான் பிரதமாரா! நான்தான் பேசணுமா? எதிர்கட்சிகாரங்க கூப்பாடு போடுறதுனாலதான் பொருளாதார சீர்திருத்தம் கொண்டு வர முடியலைன்னு சொன்னா இரண்டு நாள்ல சரியாயிரும்... ... என்ன ஆச்சு பணவீக்கம் அதிகமா போச்சா??? ஓகே ஓகே  - அப்பத்தான் இறக்குமதி கொறஞ்சு ஏற்றுமதி அதிகமாகுமுன்னு சொன்னா எல்லாம் சரியாயிரும்... 

அடங்கொக்க மக்கா - அவரும் ஒவ்வொரு கூட்டத் தொடருக்கும் முன்னாடி விழுகிறாரு.. ஆனா என்ன மாயமோ தெரியலை நாலு வருஷத்துக்கும் மேல ஆகிப் போச்சு அவருக்கு மட்டும் ஒண்ணுமே ஆகிறதில்லை...

ஆனா ஒண்ணுங்க - விழுந்தவனுக்குதாங்க வலி தெரியும்... நாங்க கடைசியில இப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கு... நாங்களும் எவ்வளவு நாளைக்குத்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது...
எது எப்படி ஆனாலும் எத்தனை முறை விழுந்தாலும் அவருக்கு ஒன்னும் ஆகாது... ஏன்னா ரெண்டு நாள் ஆனா நாமதான் எல்லாத்தையும் மறந்து போயிருவோம்...

ஆனா நமக்கு அப்படியா நமக்கு ஏதாவது ஆயிப்போனா என்னையே மொத்தமா மறந்துருவாங்க. அதுனால நான் முடிவு பண்ணிட்டேன். இனி நான் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் ஒன்ற டன் வெயிட் இருக்கும்... அப்பதானே விழாம இருக்க முடியும். ஒருநாளைப் போல எல்லா நாளும் இருக்காதில்லை...

26.7.12

மக்கள் கார்...

 ஹிட்லர் பல விஷயங்களுக்காக அடிக்கடிப் பேசப் படுகிற நபர். சாதாரண மக்கள் பயன்படுத்தக் கூடிய அளவுக்கு மிகக் குறைந்த விலையில், "மக்களுக்கான வாகனம்" தயாரிப்பதில் மிக மும்முரமாக முப்பதுகளில் இறங்கினார். 


"போல்க்ஸ்  வாகன்" என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார். இது "நானோ" ப்ராஜெக்ட் மாதிரி - ஆனால் வேறு மாதிரி... அப்போது ஏறக்குறைய வெறும் இருநூற்றி ஐம்பது அமெரிக்க டாலர்களுக்குள் மக்கள் வாங்கக் கூடிய அளவில் இருக்க வேண்டும் என்பதுதான் அவரின் எண்ணமாம். "போல்க்" [volk] என்றால் சாதாரண குடிமகன் [folk] என்று பொருள்.   

விஷயம் என்னவென்றால், அதற்கு முன்பாகவே ஹிட்லர், தனது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தவும், மக்குளுக்கான வேலை வாய்ப்பைப் பெருக்கவும், நகரங்களை இணைக்கவும், நெடுந்தூர 'இருபுற' நால் வழிச் சாலைகள் அமைப்பதில் மிகப் பெரிய ஆர்வம் காட்டினார்.  

"வோல்ப்ஸ்புர்க்"  என்கிற இடத்தில் வோல்க்ஸ் வாகனின் தலைமை நிறுவனம் இருக்கிறது. மிகப் பெரிய நிறுவனம். வெளியில் இருந்து பார்த்தேன். அந்த நிறுவனத்தினுள் சென்று பார்க்க வேண்டும் என்கிற ஆசையை, "ஹனோவர் " வோல்க்ஸ் வாகனின் நிறுவனத்திற்குள் சென்று பார்க்கும் வாய்ப்பில் சரிக்கட்டிக் கொண்டேன். ஏறக்குறைய 'நான்கு' கிலோ மீட்டர்கள் நடந்து பார்த்தோம். உள்ளே புகைப் படங்கள் எதுவும் எடுக்க கூடாது என்பதனால் எதுவும் முடிய வில்லை.

எல்லாமே ரோபோ இயந்திரங்களால் ஒரு நிலையிலிருந்து மறு நிலைக்கு மாற்றப்படுகின்றன. கடைசி கட்ட வேலைகளை மட்டும் மனிதர்கள் செய்கிறார்கள். அதைப் பற்றிய விவரத்திற்காக - ஒரு வீடியோ.


"ஹானோவரில்" மட்டும் இப்போது ஏறக்குறைய பன்னிரெண்டாயிரம் ஆட்கள் வேலை செய்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு இது இருபத்திஎட்டாயிரம் என்று சொன்னார்கள். இயந்திரங்கள் வந்து மனிதர்களின் வேலையைப் பறித்துக் கொண்டது. இங்கே 'டிரான்ஸ் போர்ட்டர்' வகைக் கார்களை மட்டும் உற்பத்தி செய்கிறார்கள். ஒரு நாளைக்கு 'எழுநூறு' கார்கள் உற்பத்தி செய்யப் படுகின்றனவாம். ஒரு மாதத்திற்கு ஏறக்குறைய இருபத்தி ஒன்ராயிரம்......

'வோல்க்ஸ் வாகன்' மிக முக்கியமான நிறுவனம். நிறைய ஜெர்மானியர்கள் அதைத் தான் வைத்திருக்கிறார்கள். மற்றவைகளை விட விலை குறைவுதான்........ ஆனால் தரமானவை.........

இந்தியாவிலும் மக்கள் கார்கள் வந்துவிட்டன... 
ஆனால், தரம், சாலைகள், சாலை விதிகள் இவைகள்தான் இன்னும்  இல்லை.... 

10.11.11

நிலவும் ஜூபிடரும் அருகருகே பிரகாசமாய்

ஒரு மாறுதலுக்காக - அறிவியல்

நிலா, சந்திரன், பௌர்ணமி, பூரண நிலவு என்று முழு நிலவு பல பெயர்களிலும் அழைக்கப் படுகின்றன. ஒவ்வொரு மாதத்திற்கும் உள்ள முழு நிலவை வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள்.

இன்று இரவு ஒன்பதாம் தேதி [அநேகமாக அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு இன்னும் இரவு வரவில்லை] முழு நிலவும் ஜுபிடரும் [வியாழன்] அருகருகே இருக்கும் அற்புதமான காட்சியைக் கண்டு களிக்கலாம். நண்பர் ஒருவர் சொன்ன பிறகே நான் அதைக் கவனிக்க நேர்ந்தது. எனது அறையில் இருக்கும் மிகப் பெரிய சன்னல் வழியாக அந்தக் காட்சியைக் கண்டுகொண்டே எழுதுகிறேன்.

சூரியக் குடும்பத்தில் ஒன்பது கிரகங்கள் உண்டு என்பதை நாம் படித்திருந்தாலும், இப்போது எட்டு கிரகங்கள் மட்டுமே இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்லுகிறார்கள் [நமது பள்ளிக் கூடங்களில் இப்போது என்ன சொல்லிக் கொடுக்கிறார்கள்?]. புளூட்டோ ஒரு கிரகம் இல்லை என்று சொல்லுகிறார்கள். இருக்கிற எட்டு கிரகங்களில் மிகப் பெரிய கிரகமான ஜுபிடர் நிலவுக்கு அருகில் மிகவும் பிரகாசமாக இருக்கிறது.

நவம்பர் மாத முழு நிலவை Hunter 's மூன் என்று அழைக்கிறார்கள். பல பெயர்கள் அமெரிந்தியர்கள் இட்ட பெயர்களாகவே இருக்கின்றன. ஒவ்வொரு மாதத்திற்கான முழு நிலவுக்கும் பெயர் உண்டு. சமஸ்கிருதத்திலும், தமிழிலும் அதற்கான பெயர்கள் உண்டு என்றே நினைக்கிறேன்.

எனது சிறிய காமெராவில் எடுத்த புகைப் படங்கள்.
பார்க்கத் தவறியர்கள் பார்ப்பதற்காக.





இதைப் பற்றிய ஆராய்ச்சி நிறையச் செய்யலாம். ஆர்வம் உள்ளவர்கள் முயலலாம்.

1. http://earthsky.org/tonight
2. http://en.wikipedia.org/wiki/Full_moon


27.10.11

சிறுதுளி 271011 - கூவத்தில் சென்னை -

சென்னை
  • சென்னையில் கூவம் இருக்கிறது என்பது தெரிந்தவர்களுக்கு மழை பெய்தால் ஒட்டு மொத்த சென்னையே கூவமாகி விடும் என்பது தெரியாததல்ல.  
    • புதிய சென்னையின் புதிய மேயர் [விரிவாக்கப்பட்ட சென்னையின் முதல் மேயர் என்பதற்கும் புதிய சென்னையின் புதிய மேயர் என்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்...] பொறுப்பேற்றிருக்கிற நிலையில் பருவ மழை தீவிரமடைந்து அவரை உடனே வேலைக்கு அழைத்திருக்கிறது.
  • சென்னை: மழை இல்லை என்றாலும் தத்தளிக்கும், மழை வந்தாலும் தத்தளிக்கும். சரியான திட்டமிடல் இல்லை. இந்நிலையில் "போர்க்கால அடிப்படையில் சென்னையில் குப்பைகள் அகற்றப்படும்" புதிய மேயர் அறிவித்திருக்கிறார். எல்லா குப்பைகளும் தண்ணீரில் அடித்துக் கொண்டு ஊருக்குள்ளே வந்துவிட்டது.
  • கூவத்தை சுத்தம் செய்தால் மழைக் காலங்களில் சுத்தமான நீர் சென்னை முழுவதும் இப்போது போல சென்னை தத்தளித்தாலும் நீருக்குள் நகரமாக வெனிஸ் நகரம் போல இருக்கும்.
வெனிஸ் பற்றித் தெரியாதவர்கள் யாராவது உண்டா? இருந்தாலும் ஒரு சிறு காணொளி.




இல்லைன்னா மன்மதன் அம்பு பாருங்கோ!

  • சென்னையில் மழை வந்தால் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான். அல்லது நீர் வடியும் வரை காத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
  • மழை வந்தால் அனைத்தும் கூவத்தில் கலக்கிறது சென்னையே கூவமாகிவிடுகிறது. வெயில் வந்தால் சென்னை சஹாராவாகி விடுகிறது 
    • இதற்குச் சென்னையா காரணம்?
மேதாவித்தனம்
  • கடந்த பதிவில் சொன்ன ஒரு விஷயத்திற்கு ஒரு சிறு உதாரணம்.
  • கலைஞர் ஒரு அறிக்கையில் - தனித்து போட்டியிட்ட உள்ளாட்சித் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறோம் என்று அறிக்கை ஒன்றில் சொல்லியிருக்கிறார். சட்டப் பேரவைத் தேர்தலில் இருபத்தி இரண்டு சதவீதமும் தற்போது இருபத்தி ஆறு சதவிதமும் பெற்றிருக்கிறோம்.
    • முக்கியமான விஷயம் இனிமேதான் - 
    • ஆனால் இது காங்கிரசுக்கு எதிரான வாக்குகள் என்று சொல்ல முடியாது. அதே சமயம் அ.தி.மு.க. வுக்கு எதிரான வாக்குகள் என்றும் சொல்ல முடியாது என்று சொல்லியிருக்கிறார். 
    • என்னைக் கேட்டால் எதுவுமே சொல்ல முடியாது என்று பேசாமல் இருந்திருக்கலாம்.
காங்கிரசுக்கு எதிரான வாக்குகள்னா ஒரு வேளை ஜாமீன் கிடைக்காது. ஏன் இது அ.தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் - ன்னு சொல்ல முடியாதுன்னுதான் ஒரே கன்பியுஷன்!

12.10.11

பாசக்கார நண்பர்களே - நேரம் ஒதுக்குங்கள்


நேற்று ஒரு மின்னஞ்சல் வரப் போய் அதன் சாரம் எல்லாருக்கும் பயன்படட்டுமே என்று இந்தப் பதிவு. 

நமது உலகில் ஒருவர் மற்றவருக்காக நேரம் செலவிடுதல் என்பது குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் நமக்காகப் பலர் செலவழித்த நேரங்கள் தான் நம்மை நாம் இருக்கும் நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. 
அப்படி நமக்கு நேரம் செலவழித்தவர்களுக்கு மீண்டும் நாம் நேரம் செலவிடுவதுதானே தருமம்.
உடனிருந்த அம்மா, அப்பா, சகோதரர்கள், நண்பர்கள், பதிவுலக நண்பர்கள்... நேரம் செலவிட பிள்ளைகள் தயாராக இருந்தால் இன்றைக்கு முதியோர் இல்லங்களே தேவையில்லை.. 
ரொம்ப சீரியசான பதிவாக மாற்ற விரும்பவில்லை.
உறவுகளுக்கு - குறிப்பாக நமக்காக நேரம் செலவழிப்பவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்...

நாம் எதைக் கொண்டு வந்தோம் எடுத்துச் செல்வதற்கு - ஒன்றுமில்லாமல் வந்தோம் ஒன்றும் இல்லாமலலேயே போகப் போகிறோம். இதில் இடைப் பட்ட காலத்தில் நாம் இந்த உலகில் அனுபவிக்கும் ஒவ்வொன்றும் பல்வேறு நபர்களின் பங்களிப்பு. ஆனால் அதை எந்த அளவுக்கு நாம் உணர்ந்த்திருக்கிறோம் என்பதே கேள்வி. எத்தனை நபர்களுக்கு நன்றி என்று உள்ளத்தால் இல்லாவிடினும் உதட்டளவிலாவது சொல்லியிருப்போம்.
உயிரைக் கொடுத்த அம்மா, உலகைக் காட்டிய அப்பா, சேர்ந்து வளர்ந்த சகோதரங்கள், கல்வி கொடுத்த ஆசிரியர்கள், உணர்வு கொடுத்த நண்பர்கள், இன்னும் எத்தனை எத்தனையோ.

ஆனால் அவர்களுக்கு நன்றி என்று சொன்னோமோ என்றால் இல்லை என்றே தோன்றுகிறது. நன்றி சொல்லி அவர்களை அன்னியப் படுத்துவது அல்ல விஷயம். அவர்களுக்காக நாம் எப்படி நேரம் செலவிடுகிறோம் என்பதிலும் இருக்கிறது. 

காலம் மிக வேகமாகப் பயணிக்கும் காட்டாறு போன்றது. யாருக்கும் செவிசாய்க்காத அலை போன்றது. பல நேரங்களில் நாம் அதை உணர்வதற்கு முன்பே பல ஆண்டுகளைக் கடந்து விட்டிருப்போம். செங்கோவி இனிமேல் சனி ஞாயிறுகளில் பதிவுலகின் பக்கம் வருவதில்லை என்றும் தனது உறவுகளுக்கான நேரம் என்று வார இறுதி நாட்களுக்கு தனது வலைப்பூவிற்கு விடுமுறை கொடுத்த பாசம் - அந்த நியாயமான பாசமும் எல்லாரிடத்திலும் இருக்க வேண்டியது அவசியம். [அதுக்காக எல்லாரும் ஞாயிற்றுக் கிழமை லீவு விட்டுறாதிங்க].

இருக்கும் போது இல்லாமல் இருந்துவிட்டு - காலம் கடந்த போது இருக்க நினைத்தால்  அது நிகழாமலே போகலாம். எனவே உடனே, இன்றே, இப்போதே, இப்பவே....
 ....

சில மாதங்களுக்கு முன்பு பல ஆண்டுகளாக நான் தேடிக்கொண்டிருந்த என் ஆசிரியர் ஒருவரது மின்னஞ்சலின் முகவரியைக் கண்டு பிடித்து அவருக்கு நன்றி சொல்லி ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். உடனே அவரிடமிருந்து பதிலும் கூட. மனதுக்கு மிக நெருக்கமான தருணங்கள் அவை. 

வாழ்வில் இது போன்ற தருணங்கள் மிக அற்புதமானவை. அது எல்லாருக்கும் வாய்க்கும் என்றே கருதுகிறேன். 
....
"கலைஞர் - கனிமொழியை" மனதில் வைத்து இப்பதிவு எழுதப் படவில்லை.

2.5.11

இணையம் இல்லா உலகம் இணையற்ற உலகம்


எல்லா நாடுகளும் நகரங்களும், ஒன்றோடு ஒன்று பிண்ணி இணையத்தால் பிணைக்கப்பட்டு இருப்பது உண்மையென்றாலும் கூட, எல்லா நாடுகளிலும், ஏதாவது கிராமம் இணையத்திற்கு அப்பாற்பட்டுதான் இருக்கிறது.

அப்படி ஒரு கிராமத்தில் வருடத்திற்கு ஒருமுறை, நான்கைந்து நாட்கள் குடியிருக்க முடிவு செய்தால் மிக நன்றாக இருக்கும். அப்படி இணைக்கப்படாத கிராமத்தின் அழகும், மாசு படாத எழிலும், எந்த நாடாக இருந்ததாலும், மனத்தைக் கிறங்க வைக்கும்.

அப்படியே இல்லாவிட்டாலும், இணையத்தால் இணைக்கப்படாமல் இருக்க நீங்கள் முடிவு செய்தால், நீங்கள் பார்க்கும் எந்த நகரமும் திடீரென்று வேறு விதமாகத் தோன்றும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, எப்போதும், கணினியை இயக்கிக் கொண்டிருக்கும் கைகளும், மிக முக்கியமானதென்று நினைத்துக் கொண்டு எழுதும் இ-மெயில்களும், மொக்கைக் கட்டுரைகளும்...

இதெல்லாம் இல்லாமல், கைகளும் மனதும் சிறகடித்துப் பறக்கும் அனுபவத்தை எல்லாரும் அனுபவிக்க வேண்டும்.
உங்கள் blog- கிற்கு ஒரு நாள் விடுமுறை விடுங்கள் அப்படியே முடியுமெனில், இ-மெயிலிற்கு சில நாட்கள் விடுமுறை விடுங்கள். இன்னும் முடியுமென்றால், ஒட்டு மொத்தமாக கணினிக்கு ஒரு வாரம் ஓய்வு கொடுங்கள்.

கணினிக்கும் கணினிக்கும் உள்ள இணைப்பைத் தாண்டி, இயற்கையின் இணைப்பில் இணைந்தால் அதனால் வரும் சுகம் தனிதான். மனதோடு பேசும், இயற்கையின் குரல் நம்மை வெகுவாய் ஈர்க்கும்.

உலகம் பெரிதாய் ஒன்றும் மாறிவிடாது. நாம் எதையும் இழக்கப் போவதும் இல்லை. இணையத்தின் இணைப்பிலிருந்து விடுபட்ட இந்த மூன்று வாரங்கள் எனக்கு இனிதாய் இருந்தன. இந்த அனுபவம் எல்லாரும் பெற வேண்டும்.

2.2.11

கடவுச்சீட்டும் நானும் - நண்பருக்கு அர்ப்பணம்

கடவுச்சீட்டும் நானும் - ஓர் இனிய அனுபவம்.

எங்கோ படித்தது - "அனுபவம் தலை வழுக்கையானவுடன் கிடைக்கும் சீப்பைப் போன்றது."  உண்மையா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஒவ்வொரு அனுபவமும் அடுத்த போராட்டத்திற்கு நம்மைத் தயார் படுத்துகிறது.

இப்படிச் செய்திருந்தால் அப்படி நடந்திருக்காது -  இதைச் சொல்லியிருந்தால் அது நேர்ந்திருக்காது - என்று எல்லாம் நடந்த பின்னரே நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அப்படிச் சொல்லியிருந்தாலும் நடந்தவைகள் நடந்திருக்கலாம். நடக்காமலும் இருந்திருக்கலாம். யார் அறிவார்?

ஆனால் பழைய காலம் படிப்பினைகளை நமக்கும் பிறருக்கும் தருவிக்கிறது  என்பது மட்டுமல்ல பல சமயங்களில் புதிய பாதையைத் தோற்றுவிக்கிறது. புதிய படைப்புத் திறனுக்கு வழிவகுக்கிறது.

கடவுச்சீட்டும் "க்ஹானும்".
புதிய படைப்புத் திறனுக்கு வழி வகுக்கிறது என்பது மட்டுமல்ல அதே சமயத்தில் தனது தரப்பு வாதத்தை மிக நேர்த்தியாக முன்வைக்கவும் கலைகள் உதவுகின்றன என்பதற்கு "My Name is Khan" [ஏன் க்ஹான் என்பவர்கள் திரைப்படம் பார்க்க வேண்டும்] திரைப்படத்தையே முன்னுதாரணம் காட்டலாம். 2009 ஆகஸ்ட் மாதம் பதினாறாம் தேதி அமெரிக்காவிற்கு சென்ற போது சில மணி நேரங்கள் காக்க வைக்கப்பட்டது நமக்குத் தெரியும்.  க்ஹான்  என்கிற பெயரால் என்ன நடந்தது என்பதுதான் அன்று நடந்தது:

அதுவே பிற்பாடு படத்தின் தொடக்கமாகவும் வருகிறது. அமெரிக்காவின் ஹோம் லான்ட் செக்கியூரிட்டி - ரொம்பப் பிரபலம். அதாவது அவர்களின் அதிகாரம் ரொம்ப பிரபலம். எனவே அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு உதாரணம். நம்ம அப்படி மாட்டியதில்லை.ஆனால், சில சமயங்களில் அவர்களின் பார்வையும், பேச்சும், [குடியேறல் பகுதியில்] மிக மோசமானதாக இருக்கும். சிலர் மிக மரியாதையோடு நடத்துவதும் உண்டு.

இதோடு தொடர்புடைய படம் - "The Terminal ". மிக அற்புதமான படம். இது திரைப்பட விமர்சனம் இல்லை என்பதால் இத்தோடு விட்டு விடுகிறேன்.

அமெரிக்கா என்று இல்லை எல்லா நாடுகளும் இப்படித்தான். இதில் ஒரு விதிவிலக்கு நமது தமிழகம்தான். அவர்கள் உண்மையிலேயே officers தானா அல்லது அவர்களுக்கு பதிலாக வேறு யாரும் வேலை செய்கிறார்களா என்கிற அளவுக்கு இருக்கும்.அவர்களுக்கென்று சீருடை கூட கிடையாது. சரி விஷயத்திற்கு வருவோம்.

கணணியும் கடவுச்சீட்டும்.

மில்லேனியம் இரண்டாயிரம் வருவதற்கு முன்பு, ஒரு மிகப் பெரிய பிரச்சினை ஒன்று எல்லா நாடுகளிலும் பரபரப்பாகப் [உபயம் சன் டி.வி.] பேசப்பட்டது - Y2K.

ஒரு நாட்டிற்கு மட்டும் அது ஒரு பெரிய பிரச்சனையாகவே இல்லை - நமது தாய்த்திரு நாட்டிற்குத்தான். அதற்குப் பிறகும் பெரிய பிரச்சனையாகவே அது இருந்திருக்க வாய்ப்பு இல்லை.
ஏனெனில், நான் 2002 - ல் கடவுச் சீட்டு வாங்கிய போதும் கையில்தான் ["வேறு எதில்" என்று விதண்ட வாதமெல்லாம் பேசக்கூடாது ] எழுதிக் கொடுத்தார்கள்.
அப்புறம் எப்படி நமக்கு Y2K பிரச்சனை வரும். நம் நாட்டிற்கு அது வரவே வராது. அந்தக் கடவுச் சீட்டை வைத்திருக்கும் நமக்குத் தான் வரும். சில சமயம் அதைப் பார்த்து விட்டு சில குடியேறல் பகுதியில் நம்மைப் பார்த்து சிரிக்கிற போது - ....

ஏதோ வேண்டுமென்றே நாம் நாடு ஏழை நாடு என்று தோற்றம் கொடுப்பதற்காக இப்படிச் செய்கிறார்களோ என்னவோ என்று எண்ணம் தோன்றும்.
நானும் என்னுடன் இன்னொரு நண்பரும் முதல் ஐரோப்பியப் பயணம் - ஜெர்மனி வழியாகப் பயணப் பட வேண்டியிருந்தது. அவர் நல்ல மனிதர்  - பெரிய மனிதரும் கூட.  ஜெர்மனியில் [ப்ராங்க்போர்ட்] அவர் கடவுச் சீட்டு விரைவாகப் பயணப் பட - என்னுடைய கடவுச் சீட்டை "லென்ஸ்" கொண்டு பார்க்கிறார் அந்த அதிகரி. ரொம்ப நேரம்.
நண்பர்  'சொல்லிக்கொள்ளாமல்' மிக வேகமாக போய் விட்டார்.
முதல் பயணத்திலே என்னுடைய கடவுச் சீட்டு என்னைக் காத்திருக்க வைத்தது. புதிதாய் இருக்கும்போதே இப்படியெனில் இன்னும் பழதானால். ...  பிரச்சனைகள் தொடர்ந்து வருவதற்கான முன்னோட்டம் இது என்று எனக்கு அன்றைக்குத் தெரியவில்லை.

அமெரிக்க அணை - பாதுகாப்பு -கடவுச் சீட்டு 
அமெரிக்காவில் நியூயார்க், பென்சில்வேனியா மற்றும் நியூ ஜெர்சி மாநிலங்களின் பார்டர் என்று நினைக்கிறேன். ஒரு அணையைப் பார்ப்பதற்காக எனது நண்பரோடு சென்றிருந்தேன். மலை முகடுகளில் வழி தெரியாமல் அருகிலே இருந்த ஒரு வீட்டில் விசாரிக்கச் சென்றோம். நன்றாகத்தான் பேசினார்கள். வெளியில் வந்து வழி காண்பித்தார்கள். வெளியில் வந்து ஏன் பேசினார்கள் என்று இரண்டு நாட்கள் கழித்துதான் தெரிய வந்தது.
என்னைக் காரில் அழைத்துச் சென்ற நண்பர் இந்தியா சென்றுவிட, அவர் இல்லத்தைத் தேடி போலிஸ் வந்தது. எதற்காக அணைக்குச் சென்றீர்கள்? யார் யார் சென்றீர்கள்? கடவுச் சீட்டைக் கொடு என்று ஒரே விசாரணைதான்.
வழி சொல்ல வெளியே வந்த அமெரிக்கர் எங்களை தீவிர வாதிகள் லிஸ்டில் வைத்து உடனடியாக கார் நம்பரை 911 ஐத் தொடர்பு கொண்டு சொல்ல அவர்கள் எங்கள் வீடு வரை வந்து என் கடவுச்சீட்டை மேலும் கீழும் பார்த்துச் சென்றார்கள்.

உடனடியாய் சந்தேகப்படும் நபர்களை பற்றிய செய்தியை எங்கே சேர்க்கவேண்டுமோ அங்கே சேர்க்கிறார்கள் என்பது ஒரு செய்தியை இருந்தாலும், அமெரிக்கா பயத்தில் இருக்கிறது என்பது மற்றொரு செய்தியாகவும் இருக்கிறது. எதிலும் எப்போதும் பயம். அதிலும் வேறு ஒரு நாட்டைச் சார்ந்தவன் என்றால் சொல்லவே வேண்டாம்?

அமெரிக்காவில் விமான நிலைய குடியேறல் பகுதியில், நாம் ஒரு கொலைகாரர்கள் போல பார்க்கப் படுவோம். நமது கருவிழிகள் பதிவு செய்யப் படும். நமது கை ரேகைகள் பதிவு செய்யப்படும். அதன் பிறகும் விசாரணைகள் அவ்வப்போது தொடர்வது ஆச்சரியம் தான். என்ன செய்வது சென்று வருகிறோம்?
இதில் கடவுச் சீட்டினால் நான் தப்பித்தேன் என்பது ஒரு நல்ல செய்திதான்.

போலி பல்கலைக் கழகம் - கால் விலங்கு
இதாவது பரவாயில்லை - அமெரிக்க அலுவலர்கள் இந்திய மாணவர்களை என்ன பாடு படுத்துகிறார்கள் என்பதை இரண்டு நாட்களாக செய்தித் தாள்களில் படிக்கிற போது அவர்களின் அட்டகாசம் புரியும். சான் பிரான்சிஸ்கோவிற்கு அருகிலுள்ள "ட்ரை-வாலி" என்கிற பல்கலைக் கழகத்தை மூடியதற்குப் பிறகு இந்திய மாணவர்கள் பலருக்கு "கால் விலங்கு" [கனமான radio-tag] அவர்களை கண்காணிப்பதற்காக வைத்திருக்கிறார்கள் என்றால் இந்தக் கொடுமையை என்னவென்று சொல்வது.


பல்கலைக் கழகம் போலி என்றால் அது அமெரிக்க அரசின் குற்றம். சென்றவர்கள் அந்தப் பல்கலைக் கழகத்தில் படிக்கச் செல்வதற்கு visa வாங்கிச் சென்றார்கள் என்றால் வழங்கிய அமெரிக்கத்  தூதரகங்களின் குற்றமும், அவர்களது கடவுச் சீட்டில் முத்திரை குத்தி உள்ளே செல்ல அனுமதியளித்த குடியேறல் அதிகாரிகளின் குற்றமும். போலி விசா என்றால் கரு விழி / மற்றும் கை ரேகைகளை எதற்கு தூதரகங்களிலும் மற்றும் குடியேறல் பகுதியிலும் எடுக்கிறார்கள் - தூதரகங்கள் மற்றும் குடியேறல் பகுதியின் தரவுகள் இணையத்தின் வழியாக இணைக்கப்பட்டு உறுதி செய்வதற்குத் தானே!
அப்படி இருக்கின்ற போது எப்படி 'போலி விசா' என்று சொல்ல முடியும் என்று தெரிய வில்லை.
அந்தப் பல்கலைக் கழகம் யாருக்குச் சொந்தம். எப்படி அதற்கு அரசு அனுமதியளித்தது. எப்படி அங்கே உள்ள பல்கலைக் கழக மாணவாகளுக்கு விசா வழங்கலாம் என்று அமெரிக்க அரசின் பல்கலைக் கழகங்களின் பட்டியலில் இது சேர்ந்தது. அவர்களுக்கு என்ன தண்டனை? அவர்கள் அமெரிகர்களா - இந்தியர்களா. இந்தியன் அங்கே ஒரு பல்கலைக் கழகம் நடத்த முடியுமா? 

அப்படியே "போலி விசாவாகவே" இருந்தாலும், இப்படிக் கால் கட்டுப் போடுவது எதற்கு என்று புரியவில்லை. இந்தியா ஒன்றும் செய்ய முடியாது.
"எங்களை எல்லாரும் கேவலமாகப் பேசுவார்கள் - பார்த்து அதை எடுத்து விடுங்கள் என்று கெஞ்சலாம். கெஞ்சினால் மிஞ்சுவார்கள். "அவர்கள் சுதந்திரமாக இருப்பதற்காகத்தான் இதை அணிவித்திருக்கிறோம் அதில் தவறு ஒன்றுமில்லை என்று தெனாவெட்டாக இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் தெரிவித்திருக்கிறார்.
தங்கள் தவறுகளை மறைக்க இந்தியர்களுக்குத் தண்டனை - அதுதான் அமெரிக்கா.


கண் தெரியாத அலுவலரும் என் கடவுச்சீட்டும்
 இத்தாலியஅலுவலகம் ஒன்றில் குடியேறல்சீட்டு பெறுவதற்காக இந்தப் புதிய ஆண்டில் சென்ற போது அங்கிருந்த அலுவலர் உன் கடவுச்சீட்டில் இருப்பதை  என்னால் படிக்க இயலவில்லை- போய் புதிய கடவுச்சீட்டு ஒன்றோடு வா என்கிறார். நானும் எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறேன். என்னால் படிக்க முடிகிறதே!

அது உன் பெயர் அதனால் படிப்பாய் என்கிறார். என்னவோ சரியாய்த் தெரிந்தாலும் என் பெயரை அவர்களால் ஒழுங்காய் உச்சரித்து விடுவது போல...
மீண்டும் மீண்டும் நான் சொல்லச் சொல்ல கடுப்பான அந்த அதிகாரி என்னிடம் இருந்து அதைப் பிடுங்கிக் கொண்டு எனக்குப் பின் உள்ள இருவரிடம் காட்டி இதை உங்களால் படிக்க முடியுமா? என அவர்கள் பயத்தில் இல்லை என்று சொன்னார்கள். படிக்க முடியும் என்று சொன்னால், அவர்களது விண்ணப்பம் ஏதாவது காரணத்தினால் நிராகரிக்கப் படலாம். பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்?
உண்மைக்கு குரல் குடுக்க சொந்த நாட்டிலா இருக்கிறோம். சொந்த நாட்டிலேயே அவனவன் அவனது பிழைப்பைப் பார்த்துக் கொண்டு போகிறான்.
 கடவுச்சீட்டில் இப்ப்போதெல்லாம் அச்சிடப் படுவதால் அந்தப் பிரச்சினை இருக்காது என்று நினைக்கிறேன்.

எனவே நான் இந்தியத் தூதரின் அலுவலகம் செல்ல நேர்ந்தது.

இந்தியக் கடவுச் சீட்டும் - இந்தியத் தூதரகமும்

இந்தத் தமிழ் புத்தாண்டு முடிந்த சில நாட்களில் நான் அங்கே செல்ல நேர்ந்தது. என் கடவுச்சீட்டு இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் முறையாக பயன்படுத்த முடியும் என்கிற போது எதற்காக புதியது ஒன்றை பெற வேண்டும் என்ற கோபம் வேறு.

வெளிநாட்டில் வாழ்கிற மக்கள் போக விரும்பாத அல்லது கூடாத இடம் என்றால் அது இந்தியத்தூதரகங்களோ என்று நினைக்கிற அளவுக்கு அங்கே இருந்தது அந்தத் தூதரகம். வேறு சில நாடுகளிலயும் பார்த்திருக்கிறேன். ஏன் அப்படி என்று புரிந்து கொள்ளவே முடியவில்லை. பிற நாடுகளின் அதிகாரிகள்தான் நம்மை மதிப்பதில்லை என்றால் இங்கே விண்ணப்பம் கொடுக்கும் பியூன் கூட நம்மை மதிப்பதில்லை. பிரச்சனைகளை சொல்வதற்குக் கூட ஆட்களைத் தேட வேண்டியிருக்கிறது.
பல ஆயிரம் மைல்கள் தள்ளி இருந்தாலும், நமது நாட்டில் ஒரு அலுவலகத்திற்கு சென்று வந்த அனுபவம் எனக்கு.
ஒன்பது மணி அலுவலகம் ஒன்பது முப்பதிற்குத் திறப்பது - நாற்றமடிக்கும் அலுவலகம் - "Poor India Photo" என்று பிரபு ஒரு படத்தில் கேட்பது போல போட்டோ வேண்டுமென்றால் இந்தியாவுக்கெல்லாம் அவர்கள் வரவேண்டும் என்ற அவசியமில்லை - அவர்கள் நாட்டிலேயே இருக்கும் நம் தூதரகங்களுக்குச் சென்றாலே போதும். 
அங்கே சென்று எனது கடவுச் சீட்டின் நகல் ஒன்றில் சான்றொப்பம் பெற்று மீண்டும் இத்தாலிய அலுவலகம் வந்தேன்.

கண் தெரிந்த அலுவலரும் - கடுப்பான நண்பரும்
மறுநாள் இத்தாலிய அலுவலகம் நண்பர் அ.பிரபாகரனோடு வந்தேன். இத்தாலியன்  பேசுவதற்காக அழைத்து வந்தேன். இரண்டு மணிநேரத்திற்குப் பிறகு உள்ளே சென்றபோது வேறொரு அதிகாரி இருந்தார். அவரிடம் கடவுச் சீட்டையும் - இந்தியத் தூதரகத்தில் சான்றொப்பம் பெற்ற நகலையும் கொடுத்த போது - அவரும் எங்களை ஒரு மாதிரி பார்த்தார். இது என்ன? நண்பர்தான் விளக்கிச் சொன்னார் -
"இது நன்றாகத் தானே தெரிகிறது என்ன பிரச்சனை" என்று அவரே கேள்வி எழுப்பி அவரே சென்று மேலதிகாரியிடம் புகார் செய்து விட்டு வந்தார்.

அனைத்தும் சுபமாய் முடிந்தாலும் கடுப்பான என் நண்பர்விடுவதாய் இல்லை. ஒரே ஒரு கேள்வி - கண் தெரியாத அந்த அதிகாரியைப்  போல மோசமானவர் யாரும் இல்லைதானே ? என்று எங்களுக்கு உதவி செய்த அந்த அதிகாரியைக் கேட்டுத் துளைக்க அவராய்  "ஆம்" என்று ஒப்புக் கொள்ளும் வரை அவர் விடவே இல்லை.


இப்போது தேய்ந்து கொண்டிருக்கும் என் கடவுச் சீட்டோடு, குடியேறல் சீட்டுப் பெற காத்திருக்கிறேன்.
கடவுச் சீட்டு பெறுவது பெரிதில்லை - 
இவர்களையெல்லாம் கடந்து செல்தல்தான் பெரிது.


பின்குறிப்பு:
மாக்ஸ் வெபர் [Max Weber] தனது பதின்மூன்றாவது வயதில் தன் பெற்றோர்களுக்கு கிருஸ்துமஸ் பரிசாக இரண்டு கட்டுரைகளைக் கொடுத்தார். 
எனக்குத் துணை வந்த நண்பர் இன்று பல பேரின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம்.  "அவர் கேள்வி கேட்டது போல," இன்று அவரை இரண்டு  பேர் கேள்வி கேட்டுத் துளைத்தார்கள்?
எனக்குத் துணையாய் வந்த கேள்விஎழுப்பிய அஞ்சா நெஞ்சன் அ.பிரபாகரன் வெற்றிகரமாய்த் தன் தேர்வினை முடித்ததற்காய் என் பரிசு இக்கட்டுரை.

 இது ஆய்வுக் கட்டுரை அல்ல. மேலும், எனக்கு வயது பதின்மூன்றும் இல்லை. அவருக்கு என் பெற்றோர் வயதும் இல்லை.
இந்த கடவுச் சீட்டின் பயணத்தில் அவரும் பங்கு கொண்டதால்  இன்று அவர் வெற்றிகரமாய் கடந்து சென்றதற்கான நினைவுப் பரிசு.