21.2.12

மாயன் காலண்டர், மாய உலகம், மணல் வீடு


மாயன் காலண்டர்
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி உலகம் அழிந்து விடும் என்று சொல்லியிருக்கிறது.

மாயன் காலண்டறென்ன மாயன் காலண்டர்
நம் பெரம்பலூர் சாமியார் வேறு சொல்லியிருக்கிறார்
இந்த ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று...
முழுதும் அழியா விட்டாலும் முக்கால்வாசியாவது அழுந்து விடும் அப்படியே இல்லையென்றாலும் அரைவாசியாவது அழிந்து விடும் என்கிறார்கள்.

அறிவியல் வயப்பட்டு இன்றைய அறிவியல் அறிஞர்கள் சொல்லுவது மட்டுமே சரி என்று வாதிட்டுக் கொண்டிருக்கிற மேற்குலக நாடுகளின் அறிஞர்கள், பழங்கால மக்களின் ஞானம், நம்பிக்கைகள், அவர்களது விஞ்ஞான அறிவை மூட நம்பிக்கை என்று சொல்லும் இந்த மேற்குலக வாதிகள் இந்தக் காலண்டரின் குறிப்பில் ஆழ்ந்து இருப்பது - அது நிச்சயம் நடக்கும் என்று எதிர்பார்த்திருப்பதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது புரியவில்லை.

என்னதான் நம்பிக்கை இல்லை என்றாலும் சில விஷயங்கள் நம்மை மீறி நம் மனதுக்குள் சென்று விடுகின்றன.
பகுத்தறிவு பேசினாலும் மஞ்சள் துண்டு தேவைப்படுவது மாதிரி..
திராவிடக் கட்சியின் தலைவி என்றாலும் சோவின் தயவில் இருப்பது மாதிரி...
சில விஷயங்கள் நம்மை அறியாமலே உள்ளே சென்று விடுகின்றன..
மாயன் காலண்டர்  மீதான நம்பிக்கையும்தான்..
அளவுக்கு அதிகமான நம்பிக்கை இருப்பதனால்... உலகம் அழிவதைத் தடுப்பதற்கான முயற்சியில் இறங்கி விட்டார்களா என்ன? இல்லை.
ஒருவர் படமெடுத்தார்... நல்ல வரவு... அவருக்கென்ன...
...
மனிதர்கள் எப்போது உலகில் வாழத் தொடங்கினார்களோ 
அப்போதே உலகம் முடியத் தொடங்கி விட்டது.
ஒருவன் கண்ணை மூடும் போது உலகம் முடிந்து போகிறது. 
அவ்வளவுதான். அதில் மேற்கொண்டு விவாதிக்க ஏதுமில்லை.
என்று நான் முடிகிறேனோ அன்றே உலகம் முடியத் தான் போகிறது.
மாயன் என்ன மாயாண்டி என்ன...
என் உயிர் பிரியும் நேரம் நான் உலகைப் பிரியும் நேரம்
அல்லது
உலகம் என்னைப்பிரியும் நேரம்.

உலகம் முடிவதும் தொடர்வதும் அதன் கையில்...
அதைக் காப்பாற்ற நாம் தேவையில்லை.
அதற்காக நாம் அதை அழிக்கத் தேவையில்லை.
எனக்கான உலகம் என்னோடு முடிகிறதென்பதால்
இந்த உலகை என்னோடு முடிக்க வேண்டிய அவசியமில்லை.
அணு உலைகள் அதை அவசரமாய் அழிக்கும்.
அணுகுண்டுகள் அழிக்கும்,
எப்போதும் இந்த உலகம் இருக்காதேன்பதற்காய்
விரைவாய் அழிக்க வேண்டுமா.


எல்லா நாட்களும் நல்ல நாட்களே.
எல்லா வருடங்களும் நல்ல வருடங்களே.
நல்லவைகளும் தீயவைகளும்
மனிதர் நம் கையிலே.


மாய உலகம்
"என்ன ராஜேஷ் ஏன் இந்த முடிவு? வாருங்கள்...  மீண்டும் ... விரைவில் ..." என்று மாய உலகம் ராஜேஷின் பின்னூட்டத்தில் ஜனவரி மாதம் இரண்டாம் தேதி பின்னூட்டம் இட்டேன். ஆனால் நண்பர் மீண்டு இங்கு வரமுடியாத தூரம் சென்றதாக அறிந்த செய்தி மனதை காயப்படுத்தியது. அவரது இறுதிப் பதிவின் பாடல்கள் எல்லாம் மாய உலகத்தை நினைவுபடுத்துவதாகவே இருந்தது.
இந்த பதிவை அவருக்குச் சமர்பிக்கிறேன்.

மணல் வீடு -

கடற்கரையில் நாமே கட்டிய வீட்டை நாமே இடிப்பதில்லையா? பத்திரமாய் நெடுநாள் இருக்கும் என்று எண்ணுவோம். ஆனால் எதிர் பாராத நேரத்தில் அலை வந்து அடித்துப் போகும். கட்டிவிட்டு திரும்பிப் பார்த்தால் ஜாலியாக யாரோ அதை உதைத்து  விட்டுப் போவதையும் காண நேரும். மாய[ன்] உலகத்தைப் பற்றி நினைக்கும் போது கடற்கரை மணல் வீடு ஞாபகத்திற்கு வருவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை.