26.8.12

... நட்பன்று ... முகநூல் நட்பே நட்பு


கணினி [கம்ப்யூட்டர்] ஒருவர் இருவர் என்று இன்று எல்லார் கையிலும் வந்துவிட்டது. அதன் சிறு வடிவமான தொலைபேசியிலும் அதன் தொழில் நுட்பம் பகிரப்பட அது இல்லாமல் வாழ்க்கை இல்லை என்று ஆகி விட்டது. இணையமும் அதனோடு சேர்ந்து விட  இந்த சோசியல் நெட்வொர்க்குகள் எல்லா இடங்களிலும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது.   

தொழில் நுட்பத்தின் வேகத்திற்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை. இந்த கால கட்டத்தில் வளர்ந்து வரும் தொழில் நுட்பம் அபரிமிதமானது மட்டுமல்ல மாறாக மிகவும் வேகமாகவும் முன்னேறிக் கொண்டிருக்கிறது.  

நண்பர்களோடு பேசலாம், பழகலாம் என்று சமூகத் தளங்களில் இணைய முடிவெடுப்பதற்குள் புதிய புதிய சமூகத்தளங்கள்.  
எப்படிப் பயன்படுத்துவது என்று பார்க்க யு டியூபுக்கு சென்று பார்த்து பயன்படுத்த முயல்வதற்குள் அடுத்த வசதி என்று போய்க் கொண்டே இருக்கிறோம். 
இந்தக் களோபாரத்தில் நண்பர்களிடம் பேசுவது கூட மறந்து போய் விடுகிறது. 

இப்ப நான் வெறும் முக நூல் மாட்டருக்கே வந்தர்றேன்.

இந்த முக நூல் புத்தகம் இருக்கிறதே இதனை நானும் இப்போது பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறேன். இடையில் கொஞ்சம் தளர்ந்து போனேன். இருந்தாலும் இந்தத் தளம் எவ்வளவு பயனுள்ளதாய் இருக்கிறது என்பதை எழுதாமல் இருக்க முடியவில்லை. என்னை யாருன்னே  தெரியாதவர்கள் கூட எனக்கு நண்பர்கள். 
எவ்வளவு விரைவாக அன்யோன்யமாகிப் போகிறோம். எவ்வளவு நெருக்கமாகிறார்கள். ஒரு நண்பரை உருவாக்கிக் கொள்வது அப்படி ஒன்றும் கடினம் இல்லை. 
எவ்வளவு புதிய புதிய நண்பர்கள் எனக்கும் அவர்களுக்கும். நண்பர்களின் நண்பர்கள், அவர்களின் நண்பர்கள். 
முல்லா நாசருதீன் கதையில் வரும் - சூப் ஆப் தி சூப் ஆப் த சூப் ஆப் த --- போல நண்பர்களின் நண்பர்களின் நண்பர்களுக்கு எல்லாம் அறிமுகமாகி இருக்கிறேன். ஹன்சிஹா போட்டோ போட்டதினாலே நான் நண்பராகிறேன் அவரும் உடனே என்னை நண்பராகச் சேர்த்துக் கொள்கிறார். 
அனுஷ்கா புடிக்குமா அதுனால அந்த போட்டோவைப் பாத்துட்டு அதை எழுதுறது ஆனா பொண்ணான்னு கூடத் தெரியாம நண்பராகி விட்ட சந்தோஷத்துல திளைக்கிறேன். அவர்களிடம் சாட் செய்கிறேன், லைக் பண்றேன். ஷேர் பண்றேன்... 
ஆனா கொடுமை சார் - அப்பா அம்மாகிட்ட பேச நேரம் இல்லை.

என் ஸ்டேட்டசை நாலு பேரு லைக் பண்ணா அதுவும் சந்தோஷமா இருக்கு. திரையைப் பார்த்து பார்த்து குடும்ப உறுப்பினர்களைக் கூட நேராப் பாக்கிறத விட இப்பல்லாம் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன்ல பார்க்குறதுதான் புடிக்குது. 

அதனால என்ன ஆச்சுன்னா தெரிஞ்ச ஆட்களை விட, எனக்குத் தெரியாத ஆட்களோட பழகுறதுல ஒரு சுகம் கண்டு போனேன். எந்தவித கமிட்மெண்டும் இல்ல பாருங்க. அவன் கஷ்டத்துல பங்கு பெற வேண்டிய அவசியம் இல்லை. என் கஷ்டத்துல 'ஐ ஆம் சாரி' அப்படிங்குற பதிலோட என் நண்பர்களின் கமிட்மென்ட் முடிஞ்சு போகுது. அதுவும் சந்தோஷமாத் தான் தெரியுது.

தன் அண்ணன் பொண்ணு இறந்து விட்டாள் என்று என் நண்பர்  போட்டோ போஸ்ட் பண்ணதை நாலு பேரு லைக் பண்றான் சார்.
எத லைக் பண்றதுன்னே விவஸ்தை இல்லாமல் போச்சு. அவ்வளுவு பிஸியாமா! ... அதனால ரெண்டு வார்த்தை கூட எழுத முடியாம போச்சு -
அதுக்காக அதை டிஸ்லைக் பண்ணலாமான்னு  ஒரு குரல் கேக்குது  - நான் என்ன சொல்றது?

முகமே தெரியாத யாரோ ஒருவருடைய சுவற்றிலேயோ [wall] ஆணியில் அடித்ததை அவர் பகிர்ந்து [share] கொள்ள, நான் அதை விரும்பி [like], என் சுவற்றில் ஒட்டிவிட [post] அதை எனது நண்பர்கள், சில சமயம் நண்பர்களின் நண்பர்கள் என்று எல்லாரும் மீண்டும் லைக், ஷேர், போஸ்ட், லிங்க், சஜ்ஜஸ்ட் என்று மீண்டும் அடுத்த ரவுண்டு நமது சுவற்றிற்கே வந்து விடுகிறது.
உலகம் எவ்வளவு சின்ன உருண்டை. முருகன் சுற்றி வருகிற நேரம் எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை. சில சமயம் ஆணை முகத்தான் சுற்றி வரும் நேரத்திற்குள் வந்து விடுகிறது.

இப்ப ஒரு நாளைக்கு இணைய இணைப்பு கிடைக்க வில்லை என்றால் தூங்க முடியலை, சாப்பிட முடியலை.
என் நாலு விட்ட நண்பர் சுவற்றில் என்ன லைக் பண்ணி, ஷேர் பண்ணினார்னு ஒரே யோசனையா இருக்கு!
அனுஷ்கா பொண்ணு தூங்கப் போனுச்சா - அதனோட ஸ்டேடஸ் என்னன்னு தவிக்க விடுது. அதனோட ஸ்டேடசை 650 ஆவதா ஆளா  நான் லைக் பண்ணலைன்னா அது தூங்கப் போகுமா போகதாங்கிற கவலை அதுக்கு மேல வாட்டுது.
என் அப்பா மருத்துவ மனையில் இருந்தப்ப கூட இப்படி எல்லாம் மனசு தவிக்கலைங்க. இப்ப இந்தத் தவிப்பு மனுஷனைக் கிறுக்குப் பிடிக்க வைக்குது.

மக்களே! இப்ப கொஞ்ச நாள்லயே தல சுத்துதே... அதுலேயே இருக்குற நண்பர்களுக்கு...  ஒரு நாள் முக நூல் புத்தகம் காலியானா எப்படி இருக்கும்னு நினைச்சாலே எனக்கு ஒரே திகிலா இருக்கு....

ஆனா கொடுமையைப் பாருங்க சார் இதைக் கூட நான் முக நூலில் ஷேர் பண்ண வேண்டிய சூழ்நிலைக் கதியாகிப் போனேன். 

கொசுறு:
நண்பர்களே,
நண்பர்களின் நண்பர்களே,
நண்பர்களின் நண்பர்களின் நண்பர்களே  -
இந்தப் பதிவென்னமோ சீரியஸா எழுதத் தொடங்கியதுதான்.
பாதியிலேயே  ஜாலியா மாறிப் போச்சு. 
சரி  எழுதுனதுதான் எழுதினோம்
காத்திரமும் பகடியும் சேர்ந்து செய்த ஒரு கலவைப் பின் நவீனக் கட்டுரையாக
இருந்து விட்டுப் போகட்டும் என்று அப்படியே விட்டுவிட்டேன்.

இனி நீங்க --- ஒழுங்காப் பயன்படுத்தணும்... சரியாப் பயன்படுத்தணும். குறிப்பறிந்து நடக்கணும். 
இது ஆல்கஹால் மாதிரி அளவாய்ப் பயன்படுத்தணும் 
என்பது போல நல்ல யோசனைகள் இருந்தால் 
தயவு செய்து காமென்ட் போடுங்க.
வேற யாருக்கும் இல்லாட்டியும் நிச்சயம் எனக்காவது பயன்படும். 

ஒருத்தனின் கிறுக்கை  சரிசெஞ்ச புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும்.

காமென்ட் போடவெல்லாம்  நேரம் இல்லைன்னா
ஒரு  லைக் பண்ணுங்க ...
இல்லாட்டி   ஷேர்  பண்ணுங்க ...
எனக்காக  இல்லாட்டாலும்
இந்த அனுஷ்கா,  ஹன்சிகாவுக்காகவாவது ...
முக நக நட்பது நட்பன்று
முகநூல் நட்பே நட்பு.
அப்பு 23.8.12

தமிழ் படிக்க தெரியுமா? - இதனைப் படிங்க
உகங்ளால் ப்இ பகக்த்தை பக்டிக முந்டிதால், உகங்ளை பாட்ராடியே கஆ வேடுண்ம்.100குக் 55 மகக்ளால் மடுட்மே இபப்டி பக்டிக முயுடிம். எனான்ல் நபம்ப் முயடில்விலை, எபப்டி தஇ பக்டிறேகின் என்று? ஆசச்ரிமாயன சதிக்க் கொடண்து மதனினின் ளைமூ.

ஒரு ஆய்ராயிசில்,கேபிம்ட்ரிஜ் பகல்க்லைழககம் இந்த உமைண்யை கடுண்பிப்டித்ள்துளது. எத்ழுக்துகள் எந்த வசையிரில் உளள்து எபன்து முகிக்மியல்லை.

முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள எத்துழும், சயாரின இத்டதில் உளள்தா எபன்தை மடுட்ம் பாத்ர்தால் போதும். எனாதல் எறான்ல், மதனினின் மூளை முதல் எத்ழுயுதைம், கைடசி எத்ழுயுதைம் மடுட்மே பக்டிகும்.

பாக்கி உள்ள எத்தழுதுகக்ளை தாகனாவே உவாள்ங்கி கொளுள்ம். ஆச்ரிசயகமால்யிலை? ம்,   நான் எபொப்துழும் நிதனைதுண்டு எத்ழுதுகக்ள் மிவுகம் முகிக்யம் என்று. உகங்ாளல் பக்டிக முந்தாடில் மற்ற பவதிர்ளுகக்கும், பந்ரிதுயுரைகங்ள்! 


***********************************


குறிப்பு: 

இதற்கும் எனக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை. என் நண்பர் அவருக்கு வந்த மின்னஞ்சலை எனக்கு அனுப்பினார். அதை அப்படியே பதிவிட்டிருக்கிறேன். ஒரிஜினல் ஆசிரியர் யார் என்று தெரியாது. இதற்கு முன்பு இதே ஆங்கிலத்தில் வந்தது. ஆங்கிலத்திற்கும் நமக்கும் ரொம்ப தூரம் என்பதால் அதை அப்போது விட்டு விட்டேன்.


15.8.12

சுதந்திர இந்தியா - காணொளிஇந்திய சுதந்திர தினத்திற்கான வாழ்த்துக்களை சொல்லும் இவ்வேளையில், சில வருடங்களுக்கு முன்பு பார்க்க நேர்ந்த ஒரு வீடியோவை உங்களோடு மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

 இந்த வீடியோ மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் இத்தாலி நாட்டுக்கும் உள்ள வேறுபாட்டைச் சொல்லும் வீடியோ. ஆனால் சுதந்திர இந்தியாவின் அத்தனை செயல்பாடுகளையும் இதில் காண முடியும். ஒருவேளை இந்தியா இன்னும் அதிகமாக முதலாளித் துவத்தில் ஊறி வளர்ந்தாலும் இப்படித் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த காணொளியின் இணைப்பு மின்னஞ்சல் வழியாகப் பெறப் பட்ட  போது நண்பர்கள் சிலர் ஒரு தலைப்புக் கொடுத்தார்கள் -
ஏன் சோனியா காந்தி இந்தியாவை நேசிக்கிறார்?  மிகச் சரியான தலைப்பு. 

இந்தியா சுதந்திர இந்தியா

வீடியோவில் - இத்தாலி என்பதை இந்தியா என்று
வாசியுங்கள் -

கொடி ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கும்.

 சுதந்திர தின வாழ்த்துக்கள்.

கொசுறு :

இது ஏற்கனவே பகிரப்பட்ட காணொளி - ஏற்கனவே பார்த்தவர்கள் மீண்டும் பார்த்தாலும் மிகவும் மகீழ்வீர்கள்.  

14.8.12

ஒலிம்பிக்கில் இந்தியா முதலிடம்...கேட்பதற்கு பிதற்றல் போல இருந்தாலும் இது உண்மைதான். மொத்தம் எழுபத்தி ஒன்பது நாடுகள் பதக்கங்கள் வாங்கியிருக்கின்றன... அதில் எல்லா பட்டியல்களிலும், அமேரிக்கா தான் முதலிடம் பெற்றிருப்பதாகச் சொல்லுகின்றன அப்புறம் எப்படி இந்தியா என்று நீங்கள் யோசிப்பீர்கள். நான் சொல்லுவது உண்மைதான்.

எல்லாரும் சொல்லும் பட்டியலில் இந்தியா ஐம்பத்தி ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. தங்கம் பெறாதவர்கள் பட்டியல் என்று ஒன்று உண்டு... 
இந்தப் பட்டியலில் இந்தியாதான் முதலிடம். அதாவது இரண்டு வெள்ளி மற்றும் நன்கு வெண்கலம் பெற்று மொத்தம் ஆறு பதக்கங்கள் பெற்று தங்கப் பதக்கங்கள் பெறாதவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

என்னதான் இந்திய அரசு பற்றிய விமர்சனத்தை முன்வைத்தாலும், இந்தியா முதலிடம் என்று சொல்லும் போது அந்த நாட்டின் குடிமகன் என்ற முறையி பெருமையாகத்தானே இருக்கிறது. அதற்காகத்தான் இந்த மாத்தி யோசி..... உங்களுக்கும் பெருமையா இருக்கா???


11.8.12

டெசோ +ஈழம் + கருத்து சுதந்திரம்


டெசோ மாநாடு பற்றி எல்லாரும் எழுதி எழுதி கிழித்து எரிந்து விட்டார்கள். கலைஞர் மட்டும் வலைப்பூக்களைப் படிப்பவராக இருந்தால், எழுதியிருப்பதை படித்து இருந்தால் அவர்மேலே அவருக்கு வெறுப்பு ஏற்பட்டிருக்கும். நிறையப் படிப்பவர் அவர். அதனால் பத்திரிகைகளில் வந்திருப்பதைப் பார்த்தும் அவர் மேலேயே அவருக்கு வெறுப்பு வந்திருந்தால் கூட கொஞ்சமாவது மாற்றம் தெரிந்திருக்கும். அதற்கெல்லாம் அசருபவர் அல்ல. சரி இது கலைஞர் பற்றிய கட்டுரை அல்ல.  அதுமட்டுமல்லாமல் டெசோ மாநாடு நடத்தும் அருகதை, கலைஞருக்கோ அல்லது வேறு யாருக்கோ இங்கே இருக்கிறதா என்பதைப் பற்றியும் நான் எழுதப் போவதில்லை.

ஆனால் டெசோ மாநாடு நடத்துவதற்கான எதிர்ப்பு ஆள்பவர்களிடமிருந்து வருவதைக் கண்டுதான் எழுதவேண்டுமென்று ஆசைப் படுகிறேன்.

டெசோ மாநாட்டை புறக்கணிப்பதற்கான உரிமை எல்லாருக்கும் உண்டு. அது இதுவரை அவரை நம்பிக் கேட்டோம் என்பது தொடங்கி பல்வேறு காரணங்கள் இருக்கலாம். எனவே இதை மறுப்பதற்கான உரிமை எல்லாருக்கும் உண்டு. 

ஆனால் அனுமதி மறுப்பதற்கான உரிமை அரசிடம் இல்லை என்றே கருதுகிறேன். ஈழம் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று ஒரு அரசு சொல்லுமேயானால், அது எந்த அளவுக்கு இலங்கையின் மீது அனுசரணையோடு இருக்கிறது என்பதை மீண்டும் எடுத்துக் காட்டுகிறது. காங்கிரஸ் கலந்து கொள்ளாது என்று நாராயண சுவாமி சொல்லியிருக்கிறார். கலந்து கொண்டு இரட்டை வேடம் போடுவதற்கு இதுவே மேல்தான். ஆனால் பார்த்துக் கொண்டே இருங்கள் இந்த இலங்கைக்கு கைகட்டும் காங்கிரஸ் அங்கே சீனா வந்து ஆட்டம் போட்ட பிறகுதான் ஆஹா சூடு வைத்துக் கொண்டேமே என்று யோசிக்கும்.

எல்.டி. டி. யை ஆதரிப்பது குற்றம் என்றும் சொன்ன போதும் கூட எல்.டி.டி. ஐ ஆதரித்துப் பேசக்கூடாது என்றுதான் அப்போது சொன்னார்கள். அந்த வார்த்தையைப் பயன்படுத்துவது தவறு என்று சொன்னார்களா என்று தெரியவில்லை.

இப்போது ஈழம் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்வது அந்த வார்த்தை எந்த அளவுக்கு சக்தி வாய்ந்ததாக இருக்கிறது என்பது புரிகிறது.  கலைஞர் வேடதாரி என்பது எல்லாருக்கும் தெரியுமானால், எதற்கு இந்த அரசாங்கங்கள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு இதை எதிர்க்கின்றன என்றுதான் புரியவில்லை. இலங்கை அரசு அங்கே பங்கேற்கும் நபர்களை தான் தனியாக கவனிப்பேன் என்கிறது. சிலருக்கு அங்கிருக்கிற இந்தியத் தூதரகம் விசா வழங்க மறுக்கிறது. இந்திய அரசு 'ஈழம்' என்பதை பயன்படுத்தக் கூடாது என்கிறது. தமிழக அரசு சென்னையில் இதை நடத்தக் கூடாது என்கிறது. 

ஆகமொத்தம் காரணம் ஒன்றுதான்: ஈழம் பற்றிப் பேசினால் அதன் விடுதலைக்காக குரல் கொடுக்கும் தமிழர்களின் எண்ணிக்கை வளர்ந்து விடக் கூடாது என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. 

இதில் நாம் கலைஞரை விமர்சிக்கிறோம் என்று இந்த மாநாட்டின் எதிர்ப்பில் -  "ஈழம்" மீது நமக்கு இருக்கும் வேட்கையை குறைத்து விடவும்,இனி யாருமே அந்த வார்த்தையைப் பயன்படுத்த முடியாமல் போகும் நிலையயைத் தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். நாளைக்கு வேறு யாரும் கூட ஈழ மாநாடு என்கிற ஒன்றை நடத்த முடியாது. உண்மையான ஈழ ஆதரவாளர்கள் கூட. 

அரசியல்வாதிகளில் பச்சோந்திகள் தவிர வேறு யாரும் இல்லை. இதில் கலைஞர் மட்டும் விதிவிலக்கா? ஒவ்வொருவருக்கும் வயதுதான் வித்தியாசமே தவிர வேறு ஒன்றும் இல்லை. அம்மாகூட தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதனால் அவர்கள் ஈழ ஆதரவாளர் ஆகிவிட்டாரா? அம்மாவைப் பாராட்டி ஒருவர் மாற்றி ஒருவர் பேசி, பாராட்டி, .... கொஞ்ச நாளிலேயே அம்மா எல்லாருக்கும் ஆப்பு வைத்தார்கள். அதே அம்மா புரானிகள் கூட இப்போது அமைதியாக இருக்கிறார்கள். 

கலைஞர் மாநாடு நடத்த வேண்டும் என்றோ, கூடாது என்பதெற்கெல்லாம் அப்பாற்பட்டு நான் சொல்ல விரும்புவது இதுதான். 

சுதந்திர நாட்டில் ஒருவன் தான் விரும்பிகிற, நம்புகிற கொள்கையை வெளிப்படுத்துவதற்கான உரிமை எல்லாருக்கும் உண்டு. அதை மறுப்பவர்கள் அரக்கர்கள் - அஹிம்சாவாதிகள் என்று சொல்லிக்கொண்டால் கூட.

இந்தக் கருத்துச் சுதந்திரம் மிதிக்கப் படும் நேரத்தில் அது கலைஞருக்கு எதிரானது என்று நாம் மகிழும் வேளையில், மிதிக்கும் கால்கள் நமது தலையின் மேல் இருப்பதை கவனிக்க மறக்கிறோம்.

கருத்துச் சுதந்திரம் கூட இல்லாத இந்த இந்தியா நாடு விரைவில் 
சுதந்திர தினம் கொண்டாட இருக்கிறது. 

10.8.12

அன்னா ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும்அன்னா பற்றிய தொடர் செய்திகளைப் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இன்னும் செய்திகள் வந்த வண்ணம்தான் இருக்கின்றன. மேலெழுந்த வாரியாக படிக்கிற செய்திகள் நம்மையும் உள்ளே இழுக்கின்றன. ஆனால் நடந்துகொண்டிருக்கும் விவாதத்தின் கட்டமைவு பற்றிய சில கேள்விகளை இக்கட்டுரை முன்வைக்கிறது. 
ஏன் அன்னாவை எதிர்க்கும் அருந்ததிராயைக் குறி வைக்கிறார்கள் ஆனால் சோ - வை விட்டு விடுகிறார்கள்?

  • ஆதரவாளர்கள்    


அன்னா ஆதரவாளர்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம் [இன்னும் நுணுக்கமாகப் போனால் இன்னும் நிறைய என்றுதான் நான் கருதுகிறேன்]. 

முதல் வகையில் குரல் கொடுப்பவர்கள் அன்னாவோடு ஒட்டி நின்று ஊழல் ஒழிய வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தோடு ஒன்று சேர்ந்தவர்கள். அதனால் அன்னா என்ன சொன்னாலும் சரி என்று சொல்லுகிறவர்கள். அதனாலேயே அவர் முற்றிலுமாகக் காந்தியவாதி என்பதை என்பிப்பதற்காகவே முழுவதும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்கள், பின்பற்றுபவர்கள். இதில் சிலர் அறிவு ஜீவிகள். பெரும்பான்மையானவர்கள் சாதாரண மக்கள், மற்றும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்கிற இளைஞர்கள்.
 
ஆதரவாளர்களில் மற்றொரு வகை ஊழலுக்கு எதிர்ப்பு என்பது சரியானதுதான்; அன்னாவைப் பின்பற்றுவது அவசியம்தான் என்பதோடு, அதிலும் உள்ள சிக்கல்கள் களையப்படவேண்டும் என்று நினைப்பவர்கள். அது மட்டுமல்லாமல் ஊழல் என்பது மட்டுமே இந்தியாவின் முதன்மையான பிரச்சனை அல்ல; மாறாக அதுவும் ஒரு பிரச்சனை என்று நினைப்பவர்கள். இதில் பெரும்பான்மையானவர்கள் வலைப்பூக்களில் எழுதுபவர்கள் என்றே நான் கருதுகிறேன். பிரச்சனை என்னவென்றால் தள்ளி நின்று அண்ணாவை ஆதரிக்கும் இந்த வகை ஆதரவாளர்களையும் அன்னா எதிர்ப்பாளர்களாகவே முதல் வகை ஆதரவாளர்கள் கருதுவதுதான். 

  • எதிர்ப்பாளர்கள் 

ஏன் இந்தச் சிக்கல்? இதைப் புரிந்து கொள்ள அன்னா எதிர்ப்பாளர்களையும் இரண்டு விதமாகப் பிரிக்கலாம். கொள்கை பிடிக்காததால் அன்னாவை எதிர்ப்பவர்கள் முதல் வகை. அவர் காங்கிரசின் கைக்கூலியோ என்பதனால் பிடிக்காமல் போனவர்கள் இரண்டாம் வகை. 

முதல் வகையில், அருந்ததிராய், அருணா ராய் போன்றவர்களைக் குறிப்பிடலாம். இரண்டாவது வகை வெறுப்பாளர்கள் வரிசையில் ‘சோ’ போன்றவரைச் சொல்லலாம். குஜராத் முதல்வரைப் பற்றித் தவறாகச் சொன்ன ஒரே காரணத்திற்காக அவரை இவருக்குப் பிடிக்காமல் போய் விட்டது என்றே கருதுகிறேன். 

இதில் முதல் வகை எதிர்ப்பாளர்கள் அவர்களுடைய கருத்துக்களுக்காக கவனிக்கப்பட வேண்டியவர்கள் - மிகவும் கவனிக்கப்பட வேண்டியவர்கள். அதேபோல இரண்டாம் வகை வெறுப்பாளர்கள் இன்னும் அதிகமாகவே கவனிக்கப் பட வேண்டியவர்கள். அண்ணாவோடு ஒட்டி நிற்கும் ஆதரவாளர்கள் தள்ளி நிற்பவர்களையும் எதிர்த்து நிற்பவர்களை மட்டுமே கவனித்து இந்த இரண்டாம் வகை வெறுப்பாளர்களை /எதிர்ப்பாளர்களைப் பற்றி அதிக அக்கறையோ அல்லது அவர்களை பெரிய எதிரியாகப் பார்ப்பதை விடுத்து அருந்ததிராயை மட்டுமே பிரதானப்படுத்துகிறார்கள். இதில் எந்த வித சிக்கலுமின்றி ‘சோ’ வகையறாக்கள் தப்பித்துக் கொள்கிறார்கள் [அல்லது தப்பிக்க ஆதரவாளர் அறிவு ஜீவிகள் உதவுகிறார்களா?]. 

அருந்ததி ராய் கேட்கிற கேள்விகள் நியாயமானவை என்பதை எள்ளளவும் புரிந்து கொள்ள மனமின்றி அன்னாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை நியாயப்படுத்துகிறார்கள். இரண்டாவது சுதந்திரப் போர் என்பது இந்தியாவிற்குள் நடக்கும் முதல் சுதந்திரப் போர்தான் – அது அரசியல் வாதிகளுக்கு எதிராக நடத்தப்பட வேண்டுமா அல்லது சாதிய / இந்துத்துவத்துக்கு எதிராக நடத்தப்பட வேண்டுமா என்பதிலும், அல்லது பழங்குடியினரின் வாழ்க்கையைக் காப்பாற்றுவதற்காக நடத்தப்பட வேண்டுமா என்கிற கேள்விக்கும் பதில் இல்லாமல் இவர்களை அன்னாவின் மீதும் காந்தியத்தின் மீதும் அவதூறு செய்வதாக அவதூறு செய்கிறார்கள் முதல் வகை ஆதரவாளர்கள். இந்தச் சிக்கலில் அன்னா ஆதரவாளர்களில் இரண்டாவது வகையாளர்கள் அருந்ததிராயின் கேள்விகளோடு இன்னும் பல கேள்விகளையும் சிக்கல்களையும் முன்னிறுத்துவதனால், அன்னா ஆதரவாளர்களில் இரண்டாம் வகையும் அன்னாவின் எதிரிகளாகக் கட்டமைக்கப் படுகிறார்கள்.

இதில்தான் அன்னா ஆதரவாள அறிவுஜீவிகள், இரண்டாம்வகை ஆதரவாளர்கள் மீதும், முதல் வகை எதிர்ப்பாளர்கள் மீதும் வெறியோடு இருக்கும் சூழலில் ‘சோ’ போன்றவர்கள் எளிதாகத் தப்பித்துக் கொள்ளுகிறார்கள். 

  • வேண்டுகோள் 


எனவே அன்னாவை கொள்கையளவில் எதிர்க்கும் அருந்ததிராய் போன்றோரை கொடூரமானவராக சித்தரித்து, இந்துத்துவக் கொள்கை வெறியில் எதிர்க்கும் ‘சோ’ வை எந்த விதச் சிக்கலுமின்றி தப்பிக்க உதவும் முதல் வகை ஆதரவாளர்களே கொஞ்சம் விழித்தெழுங்கள் என்பதுதான் எனது வேண்டுகோள். 

இன்னும் ஒரு கோணத்தில் பார்த்தால் இந்த அறிவு ஜீவிகள் ஏற்கனவே விழித்து எழுந்து விட்டார்களோ என்று தோன்றுகிறது. முதல்வகை அன்னா ஆதரவாளர்களும், இந்தியா இந்து என்கிற போர்வையில் மீண்டும் சாதியக் கட்டுமான மேலாதிக்கத்தை விதைக்க இந்த ஊழல் போராட்டத்தை ஆதரித்து சோ எதிர்ப்பின் வழியாய்ச் சாதிக்க நினைப்பதை இவர்கள் ஆதரவின் வழியாய்ச் சாதிக்க நினைக்கிறார்களோ என்றும் கருதுவதற்கான முகாந்திரம் இருக்கிறது. இருந்தாலும், இதில் சாதாரண மக்கள், பெருமளவில் எழுச்சியோடு கலந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போது இந்த முகாந்திரம் களைந்து போகிறது. ஆனால் அறிவு ஜீவிகளின் அந்தக் கட்டமைவில்தான் இந்தச் சந்தேகம் வலுக்கிறது.


8.8.12

ஒலிம்பிக் - ஐந்து வளையங்கள்

௦ ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நாடாகவும் அதல பாதாளத்தில் இருக்கிற நாடு கிரீஸ்: ஏறக்குறைய கடைசியில் இருக்கிற அந்த நாடு ஒலிம்பிக் தொடக்க விழாவில் [எல்லா ஒலிம்பிக்குகளிலும்] முதலாவது வந்து தொடங்கி பொருளாதார பாதாளத்திற்கு பாலன்ஸ் செய்கிறார்கள்... ஏனெனில் முதலில் வருவது பெருமை.  

௦ ஒலிம்பிக் விழாவில் மிகவும் கவனிக்கப் பட வேண்டிய விடயம் - ஐ. நா. வின் பட்டியலில் இடம்பெறாத நாடுகளைக் கூட ஒலிம்பிக் ஏற்றுக்கொண்டிருப்பது  மிகவும் பாராட்டப் படவேண்டியது.  பாலஸ்தீனம் போன்ற நாடுகள் இடம் பெற்றிருப்பது மிகவும் பாராட்டப் பட வேண்டியதுதானே. ஈழம் சகோதர சகோதரிகள் - முன்னமேயேஒலிம்பிக் விழாவில் பங்கேற்று இருக்கலாம் என்றே தோன்றுகிறது. நாடு கடந்த தமிழீழ அரசிலிருந்து ஈழ  சகோதரர்கள் இப்போது கூட முயற்சி செய்யலாமே என்றும் தோன்றுகிறது. ஒருவேளை அதற்கான முதல் அங்கீகாரம் ஒலிம்பிக்கில் கூட கிடைக்கலாம்.

௦ இந்த ஒலிம்பிக் இன்னொரு விதத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது வரை நடந்து முடிந்த எந்த ஒலிம்பிக்கிற்கும் இல்லாத சிறப்பு இந்த ஒலிம்பிற்கு கிடைத்திருக்கிறது. பங்கேற்கும் அனைத்து நாடுகளிலிருந்தும் பெண் வீரர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வு... எல்லா நாடுகளிலும் பெண்கள் பங்கேற்பதற்கு இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அதில் இந்தியாவுக்கு மட்டும் கூடுதல் பெருமை - வீரர்கள் பட்டியலிலேயே இல்லாத பெண் கூட வீரர்கள் அணிவகுப்பில் வரும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது...

௦  லண்டன் தொடக்க விழாவில் எப்படி இயற்கையோடு இருந்த நிலையிலிருந்து, தொடர்ந்து கருவிகள், ஆலைகள், தொழில் நுட்ப வளர்ச்சி என்று மிக அட்டகாசமாக காண்பித்தார்கள். தங்கள் நாடு பிடிக்கிற ஆசையில் உலகம் முழுவதும் சென்று வெறித்தனமாக நிறைவேற்றிய அராஜகங்கள் மட்டும் மிஸ்ஸிங்... ஐ திங் தட் திஸ் அம்னீசியா டிசர்வ்ஸ் ய கோல்ட் மெடல்!


௦ தொடக்க விழாவில் வீரர்கள் அணிவகுப்பில் முதலில் கிரேக்கம் வருவது போல கடைசியில் ஒலிம்பிக்கை நடாத்தும் நாடு வருவது பெருமைக்குரிய விஷயமாம். எனக்குள்ள சந்தேகம் - முதலில் வருவது பெருமையா  கடைசியில் வருவது பெருமையா? இரண்டும் என்றால் - இந்தியா பதக்கப் பட்டியலில் கடைசியில் வரும் என்று நினைத்திருந்தேன். அந்த பெருமை கை நழுவிப் போனதில் எனக்கு மிக வருத்தமாகவே இருக்கிறது.