3.12.14

கனவு

என்னிடம் சிலர் சொன்னார்கள் 

கனவு காணும் உரிமை எல்லார்க்கும் உண்டு...
அதைத் தடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை...

அதை நம்பினேன் 

இது என்ன காவிரியா தடுத்து இரண்டு அணை கட்டுவதற்கு 
அல்லது முல்லைப் பெரியாறா 10 அடி குறைத்துச் சேமிக்க..
கனவு மக்களே கனவு...
இதற்கு யாரும் தடுப்பணை கட்ட முடியாது 
இதன் உயரத்தையும் யாரும் குறைக்க முடியாது

இதையும் நம்பினேன் 
மேலும் சொன்னார்கள் 
கனவு காற்றைப் போல எல்லாருக்கும் சொந்தம்...
காற்றைச் சுவாசிப்பவன் உயிர் வாழ்கிறான்
கனவைச் சுவாசிப்பவன் உயரே வாழ்கிறான்...

தொடர்ந்து காற்றையும் கனவையும் சுவாசியுங்கள்...
உயிரோடும் வாழுங்கள் 
உயரேவும் வாழுங்கள் 

கனவை நனவாக்குங்கள்!

அத்தனையையும் நம்பினேன்
பிறகே உறங்கினேன் 
கனவு கண்டேன் 

கறுப்புப் பணம் அனைத்தும் திரும்பி வரும் கனவு கண்டேன்
ஏழைகள் இன்புறக் கண்டேன் 
ஒன்றிக்கப்பட்ட ஆறுகள் பற்றிக் கனவு கண்டேன் 
மொழிப்போர் அற்ற இந்தியாவும் 
மதப்போர் அற்ற பாரதமும் கனவு கண்டேன்
எந்த பயமும் இல்லாமல் என் கருத்தை 
தெளிவாய்ப் பதிவதாயும் கனவு கண்டேன்
கருத்துச் சுதந்திரம் இருந்தால் வேறென்ன வேண்டும்


இந்த உயரம் போதுமென்றேன்
மெதுவாய் கண்விழித்தேன் 

பெட்ரோல் விலை குறைந்ததாய் செய்தி வந்தது 
ஆஹா கனவு பலித்து விட்டதா?

இன்னும் பார்த்தேன்

அத்தியாவசிய மருந்துகள் விலை ஏற்றமாம்
அதானிக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடனாம்

வங்கிக் கணக்கை நாம் ஆரம்பித்தோம்
அதானிக் கணக்கில் பணமாம்

கறுப்புப் பண கணக்கிருக்கிறது ஆனால் பணமில்லையாம்

நான் ராமரின் மகன் இல்லை என்பேனால் நாட்டிலேயே 
எனக்கு இடமில்லையாம் 

வை.கோ. வை மிரட்டிய எச். ராசா பற்றி 
எக்கச் சக்க செய்திகள் - கருத்து சுதந்திரமாம்

 போதுமடா சாமி 


இன்னும் கொஞ்சம் உயரே கனவு கண்டு 
நான் விழித்திருந்தால் 
நிச்சயம் 
புதிதாய் இரண்டு அணைகள்
இருந்திருக்கும்.


12.11.14

நான் ஒரு பிராமணன்

நான் ஒரு பிராமணன். நான் பிராமனாய் இருப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். என்றும் எப்போதும், பிராமணராக வாழ்வதில் அக்கறை கொள்கிறேன் என்று உறுதி மொழி எடுக்கும் விதமாய் பேசி இருக்கிறார், மேன்மை தங்கிய சுப்புரமணி சாமி அவர்கள்.

எந்த ஒரு காலத்திலும், பிராமணர்கள் சொல்லுவதையே ஆட்சியில் இருப்பவர்கள் கேட்டிருப்பதாகவும், அதுவே அவர்களது தொழில் என்பது போலவும் பேசியிருக்கிறார். தான் சொல்லுவதை  கேட்பதாகவும், இது மற்ற இலாகாக்களை விட மேலானது என்றும் சொல்லியிருக்கிறார். அதாவது எப்பொழுதும், இந்தியப் பிராமணர்களும், படித்தவர்களும் பதவி வகித்ததில்லை என்றும், தான் சொல்லுவதை மற்றவர்கள் கேட்பதே தனக்குப் போதும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

அது மட்டுமல்ல இன்னும் ஒரு படி மேலே சென்று, மோடி அவர்களுக்கு பிராமணிய குணங்கள் இருப்பதால் அவரை பிராமணராக நியமிக்கிறேன் என்றும் தனது ட்விட்டீரில் மொழிந்திருக்கிறார்.

நான் என்ன நினைக்கிறேன்னா?


 1. எப்பவும் தலித்திய கட்சிகளைக் குறை சொல்லும் மகராசன்கள், சாதியம் ஒன்று இல்லை என்றும், தலித்துகள் பிராமணர்கள் பற்றி சொல்லுகிற கூற்று அனைத்தும் தவறு அல்லது அருதப் பழசு என்று சொல்லுபவர்கள் இதைக் கொஞ்சம் படிக்கணும்னு தோணுது.
 2. சுப்ரமணிய சாமி மேல பிராமணர்கள் கேஸ் போட்டா நல்லா இருக்குமான்னு சொல்லுங்க - பிராமணர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் பிரமனர்களைப் பற்றி தவறாக, எல்லாரையும், ஆட்டுவிக்கும் கருவிகளாக மட்டுமே சித்தரித்தது தவறு என்று சொல்ல வேண்டிய கட்டாயம்.
 3. இல்லை அவர் சொல்லியது சரி என்றால், பிராமணர்கள் அல்லாதவர்கள் அறிவற்றவர்கள் என்று ஆகி விடுகிறது. பதவிக்காக ஆசைப் படுபவர்கள் எல்லாம் பிராமணர்கள் அல்லாதவர்கள் என்கிற ஒரு கருத்தையும் திணிப்பது, மற்ற எல்லாரையும் தவறாக சித்தரிப்பதற்கு சமம். அதனால் மற்றவர்கள் அவர் மீது வழக்குத் தொடுப்பது சாத்தியமா என்று யோசிக்கலாம்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சுட்டவும் - மோடி பிராமணர் 

நான் இலாகா இல்லை என்பதானால் வருத்தப் படவில்லை. 


°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

எம். எஸ். எஸ் பாண்டியனின் மரணத்திற்கான இரங்கல்.

இப்படி பிரமணித்தின் மேலாண்மை குறித்த விவாதம் மீண்டும் சூடு பிடித்துக் கொண்டிருக்கும் போது, உயர்திரு பாண்டியனின் மரணம் பேரிடியாய் வந்திருக்கிறது.

பிரமணியம், தலித்தியம், மற்றும், சாதியத்தின் பல்வேறு வகையான ஆதிக்கம் பற்றி ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்த ஒரு எழுத்தாளர். சுப்ரமணிய சுவாமி போன்றோர் உரத்துக் குரல் எழுப்பும் வேளையில், பாண்டியன் போன்றோர் இன்னும் அதிமாகவும், உரத்த குரலிலும் உண்மையை பதிவு செய்யவும், எதிர்ப்பைத் தெரிவிக்கவும் வேண்டியிருக்கிறது.

 அது வெறும் பிரமணிய எதிர்ப்பாக மட்டுமல்ல சாதியத்திற்கெதிரான எதிர்ப்பாகவும் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

எஸ். வி. ராஜதுரை அவர்களின் கட்டுரை

17.10.14

சுத்தம்

இந்த வார  இதழின் தலைப்பை என் நண்பர் ஒருவர் சு....த்தம் என்று படித்தார். சுத்தம் என்பதற்கும், சு...த்தம் என்பதற்கும் பல  வித்தியாசங்கள் உண்டு. அதை அவ்வளவு எளிதாகச் சொல்லிவிட முடியாது.

இந்தியாவை சுத்தப் படுத்துவது எளிது.
ஆம் ஆத்மி கட்சியின் துடைப்பத்தை கையில் எடுத்து அந்தக் கட்சியைப் பார்க்கும் போதெல்லாம், மாண்புமிகு மோடியின் நினைவு வரும் படி செய்து விட்டது அவரது பலம்.

இந்தியாவைச் சுத்தப் படுத்துதல் நல்லது என்பது உண்மைதான். அது தேவையும் தான். 
சுத்தமான இந்தியா இருந்தால் மருத்துவமனையற்ற இந்தியா என்று வரும் வாய்ப்பும் உண்டு.

ஆனால் முதலில் சுத்தப்படுத்த வேண்டியது ரோட்டையல்ல, நாட்டை. ஊழல் என்பது ஒழிக்கப் பட வேண்டும் என்பதில், முக்கியத்துவம் தர வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுத்திருக்கிறதா இந்த அரசு​?

சுவிஸ் வங்கியில் இருக்கும் பணத்தைக் கொண்டு வர வேண்டும் என்று போராடிய இதே கட்சி அத்தகைய சுத்தப் படுத்துதலை முன்னெடுக்குமா​?

அத விடுங்க....
இன்றைக்கும் ரோட்டை, மலத்தைச் சுத்தப்படுத்தும்  தொழிலார்களின் நிலையையோ,  அள்ளும் மக்களின் அவலம் பற்றியோ பேசிவிடாமல், அதெப்படி சுத்தம் பற்றி பேச முடியும் என்பது தெரியவில்லை.
இந்த வியாபார உலகத்தில், நாட்டைச் சுத்தப்படுத்தல் வெறும் விளம்பரமாக மாறி விடாமல் இருந்தால் சரி. 

ஆனால் நமக்கு இந்த விளம்பரம் தான் பிடிக்கிறது. நாட்டைச் சுத்தம் செய்ய பணித்துவிட்டு, நோயாளிகளின் அத்தியாவசிய மருந்துகளுக்கான அரசுக் கட்டுப்பாட்டை தளர்த்தி விட்ட பெருமகனாரைப் பற்றி யாரும் பேசாமல் இருப்பது நல்லாதா? 

புற்று நோய், மற்றும் ஹச் ஐ விக்கான மருந்துகள் இப்போது பதினான்கு மடங்குகள் உயர்ந்து விட்டதாக சொல்லுகிறார்கள். எட்டாயிரத்திற்கு விற்ற மருந்து இப்போது இந்த அரசுக கட்டுப்பாட்டைத் தளர்த்திய பிறகு) ஓர் லட்சத்தி ஆறாயிரம் என்று சொல்லுகிறார்கள். 

பன்னாட்டுக் கம்பெனிகளை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள்.

பாரத நாடு வளம் பெற்று விடும். சுத்தமாயிரும்.

இப்படியே போனால் சு...த்தம்.

6.10.14

எங்கெங்கு காணினும் சக்தியடா !


எங்கெங்கு காணினும் சக்தியடா தம்பி 

ஏழுகடல் அவள் வண்ணமடா - அங்குத் 
தங்கும் வெளியினிற் கோடியண்டம்  - அந்தத் 
தாயின் கைப்பந்தென ஓடுமடா!.. 
- பாரதி தாசன்

##########
நான் என்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். சில சமயங்களில் நடக்கும் நல்லதெல்லாம் உண்மைதானா - என்று உணர்ந்தது கொள்வதற்கு இப்படிச் செய்வதுண்டு. ஆனால் கடந்த இருபத்தி ஏழாம் தேதியிலிருந்து நடக்கும் பல நல்லவைகளை நினைத்துப் பார்க்கும் போது இவைகளெல்லாம் உண்மைதானா என்று என்னையே கிள்ளிப் பார்த்து பார்த்து நகக் கண்கள் உடைந்தே போய்விட்டன. கிள்ளிப் பார்ப்பதற்கு என்னுடம்பில் இடமும் இல்லாமல் போய்விட்டது. எங்கெங்கு காணினும் அம்மாவே! காலை செய்தித்தாட்களில், சாலையில் போஸ்டர்களில், நாள் முழுவதும் தொலைக்காட்சிகளில் என எல்லா இடங்களிலும். ஆளும் கட்சி இடைத்தேர்தல்களில் மட்டுமல்ல, நீதித்துறையை எதிர்ப்பதிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதற்காக எதையும் செய்வதற்குத் தயாராக இருக்கின்றது.

பதிவியில் இருக்கும் போது தண்டனை பேரும் முதல் நபராக மட்டும் அவர் அல்ல. அப்படிப் பதவியில் இருக்கும் போது அந்தத் தண்டனையைக் கூட தனக்கு சாதகமானதாக மாற்றக்கூடிய சக்தியையும் கொண்டவர் என்பதை என்பித்திருப்பதிலும் அவர்தான் முதல்வர்.
இது நீதித் துறைக்கு நல்லதல்ல.

###

ஆளும் கட்சி, தான் எப்போதும் தனது தலைவருக்கு விசுவாசம் உள்ளவர்கள் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது. அதைத்தான் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒன்றுமில்லாமல், ஒரு சில இடங்களில் இருந்த இந்த விசுவாசக் காட்சிகளை தமிழகம் முழுவதும் பரப்பி விட்ட பரப்புரையாளர்கள் நமது செய்தித் தாள்களும், செய்தித் தொலைக் காட்சிகளும். 
பெயருக்கு ஒன்றிரண்டு ஊடகங்களைத் தவிர ஒட்டு மொத்தமாக பத்திரிக்கைகள் இது நீதித் துறையின் வெற்றியாகவோ, அநீதிக்குக் கிடைத்த தண்டனையாகவோ கருதாமல் - சிலரின் சூழ்ச்சிகளால், மாயவலைக்குள் அவர் சிக்கிக் கொண்டது போல சித்தரித்தால், படிப்பவன் என்ன நினைப்பான்? நேற்று தொடங்கி இன்று தண்டனை விதித்தால் அதில் சூழ்ச்சி பற்றிப் பேசலாம். இதில் எப்படிப் பேசுவது? பத்திரிக்கைகள் தங்களது நம்பகத் தன்மையை முற்றிலுமாக அடகு வைத்து விட்டன. 
இதன் மூலம் பத்திரிகை சுதந்திரத்தை இவைகள் அடகு வைத்து விட்டன. இது பத்திரிகை தர்மத்திற்கு நல்லதல்ல.

###

ஒட்டு மொத்த சினிமாத் துறையும், ஒருங்கே அமர்ந்து - அல்லது அவ்வாறு இருந்தது போல ஒரு பிரம்மையை உருவாக்கி அதில் நீதி அரசர்கள் அமர்ந்து இருப்பதைப் பார்த்த போது- 
ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை எல்லாம் திருத்தவே முடியாது என்று நமக்கு சொன்ன விவேக் நீதியரசராகத் தெரிந்தார்.
ஊழலுக்கு எதிராக அன்னியனான விக்ரம் நீதியர்சராகத் தெரிந்தார்.
தெய்வத்தை மனிதன் தண்டிக்க முடியுமா 
என்ற வசனத்தைப் பார்த்த போது 
ஐயகோ 
எந்த வசனகவிக்கும் தோன்றாத இந்தச் சிந்தனை எந்த நீதியரசருக்குத் தெரிந்தது என்று உள்ளுக்குள்ளே 
குடைந்து எடுத்து விட்டது.

இவர்கள் ஏன் நீதியர்சர்களாகவோ, அடுத்த முதல்வர்களாகவோ வரக்கூடாது?
இந்தப் போக்கு சினிமாவிற்கும் நல்லதல்ல
தமிழகத்துக்கும் நல்லதல்ல.

###

அன்னைக்கு ஆதரவாக தனியார் பள்ளிகள் மூடப்படும் என்று அறிக்கை விட்டு மீண்டும் அதை வாபஸ் செய்தது / நீதித் துறைக்கான முடிவுகளில் பள்ளிகள் தலையிடுவது ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய பள்ளிகள் தடம் புரள்கின்றன என்பதையே காட்டுகிறது. இது நல்லதல்ல.
###

கட்சி ஆட்சியில் இருக்கும் போது அதன் தலைவர் சிறை பிடிக்கப்பட்டால் இது போன்ற நிகழ்வுகளை எல்லாம் இனிமேல் சர்வ சாதரனமாய்ப் பார்க்கலாம். இந்த நிகழ்வுகளெல்லாம் நமக்குள் பல கேள்விகளை கொடுக்கின்றன.

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விடயங்கள் இன்றைய இளைஞர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. வரலாறு தெரியாமல் இருந்தால் என்னென்ன பாதகங்கள் நிகழும் என்பதற்கு இதுவே சாட்சி. ஆனால் பத்திரிகைகளுக்குத் தெரியவில்லை என்பது மிக ஆச்சரியமானதே! வரலாறு தெரியாமல் இருக்க முடியுமா?

ஜனநாயக நாட்டில், மக்கள் போராட்டங்கள் என்பது அவர்களுக்கான உரிமை. ஒரு ஊழல் வாதியை தங்களது தலைவர்களாக ஏற்றுக்கொள்வது அவர்களது சுதந்திரம். அதில் தலையிட நாம் யார். அதற்காக சாதாரண மக்களை துன்பத்திற்கு ஆளாக்குவதை யாராவது அவர்களது உரிமை என்று சொல்லிவிட முடியுமா? 

இத்தைகைய போக்கு, இன்றைய தேதியில் ஆயிரக்கணக்கான கோடிகள் அளவிற்கு ஊழல் செய்தவர்களுக்குச் சாதகமாக இருக்குமே தவிர வேறு யாருக்கும் எந்த வித நன்மையையும் செய்து விட முடியாது. இனிமேல் ஊழல் வழக்குகள் என்று வந்தால் அதனால் தண்டிக்கப் படப போவது சாதாரண ட்ராபிக் கான்ஸ்டபிள்கள் மட்டுமே. பழம் தின்னிக் கொட்டைகள் எல்லாரும் மிகச் சாதரணமாய் ஒரு பேருந்தை எரிப்பதன் மூலம் தப்பித்து வரமுடியும். அறிவாளிகள், தாங்கள் ஆட்சியில் இருக்கும் போதே தங்கம் மீதான வழக்குகளை எதிர் கொண்டு இலகுவாக வெளியே வந்து விட முடியும்.
ஊழல் வழக்குகள் தவறு என்று சொல்லிவிட முடியுமா?

தவறு செய்தவர்கள் திருந்தலாம். இல்லையென்று மறுப்பதற்கில்லை. அதற்காக செய்த தவறுகளுக்கு தண்டனை இல்லை என்று சொல்ல முடியுமா? 
###

மூடர்கள் இருக்கும் வரை ஊழல் பேர்வழிகள் உருவாகிக் கொண்டே இருப்பார்கள்.
###


துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? -

அறமி தென்றும் யாம் மறமி தென்றுமே
அறிகி லாத போது - யாம்

அறிகி லாத போது - தமிழ்
இறைவ னாரின் திருக்குறளிலே ஒருசொல்இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
இயம்பிக் காட்ட மாட்டாயா? 
பாரதிதாசன் 6.7.14

இந்திய நர்சுகளும் தமிழக மீனவர்களும்

45 கேரள நர்சுகள் விடுவிக்கப்பட்டது குறித்து நமக்கு மிக்க மகிழ்ச்சியே. இந்திய மற்றும் தமிழகப் பத்திரிக்கைகள் எல்லாம் 46 இந்திய நர்சுகள் விடுவிப்பு என்று இந்திய ஒருமைப் பாட்டுக்கு வித்திடுகின்றனர்.

ஆனால் தினம் தினம் சாகும் மீனவர்கள் மட்டும் தமிழக மீனவர்கள்.
தமிழக மீனவர்கள் தயவு செய்து கச்சத் தீவுக்கு போகாமல் மடகாஸ்கர், ஓமான், போன்ற நாடுகளுக்கு அருகில் சென்று மீன பிடித்தால் நீங்கள் இந்திய மீனவர்கள் என்று அங்கீகரிக்கப் பட வாய்ப்பு உண்டு.

மேலும் இந்தியாவின் நீதிமன்றங்கள் கொடுக்கின்ற தீர்ப்புகளை மதிக்காமல் (முல்லைப் பெரியாறு ஆணை மற்றும் காவிரி நதி நீர்) நடந்தால் ஒருவேளை நீங்கள் இந்தியர்கள் என்று மதிக்க்கப் பாடவும் வாய்ப்பு உண்டு.
----

30.5.14

உள்ளே போ! ... காந்தி உள்ளே போ

எவ்வளவோ முறை மெதுவா... ..அன்பா..  நீங்க செய்யுறது தப்பு - இது சரியில்லைன்னு எத்தனயோ முறை சொல்லிப் பாத்தாச்சு - கதர் யாரும் கேக்கலை.... அதுதான் உள்ளே போ... உள்ளே போன்னு ரொம்ப சத்தமா கத்தி அனுப்பி வச்சுட்டாங்க. ரஜினி தன்  தம்பியைப் பார்த்து சொல்றமாதிரி...இந்த மக்கள் குடுத்த அடியைப் பாக்கிறப்ப இது சாதாரன அடி மாதிரி தெரியலை..."நாடி நரம்பு, ரத்தம் சதை எல்லாத்துலயும் 'வெறுப்பு' வெறி ஊறிப்போன ஒருத்தராலதான் இந்த மாதிரி அடிக்கமுடியும்" அப்படின்னு அரசியல் விமர்சகர்கள் எல்லாரும் சொல்லிக்கினு இருக்காங்க. ஆனா இப்படி அடிக்க முடியுமான்னு கதர்கள் எல்லாம்  உள்ள உக்காந்து யோசிச்சுக்குகிட்டு இருக்காங்க.... அதோடு சேர்ந்து கதறிக்கிட்டும் இருக்காங்க. சில பேரு ராகுல்தான் காரணமென்றும், சில பேர் சோனியான்னும், சில பேர் மன்மோகன் என்றும், இன்னும் சிலர் ஊழல் என்றும் மாற்றி மாற்றி குற்றம் சாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் நாம் இந்தப் பத்தாண்டு காலத்தில் ஒரு நல்ல ஆட்சியைத் தரவில்லையே என்று வருத்தம் கூட தெரிவிக்காத நிலையில்தான் இருக்கின்றனர். இதுதான் இன்னும் பத்தாண்டுகளுக்கு இவர்கள் ஆட்சிக்கு வரவே தகுதியில்லாதவர்கள் என்பதை காட்டுகிறது.
...

இந்தச் சூழலில்தான், தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய பிரதமர் மோடி அவர்களின் இந்த புர்ஜ் காலீபா வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் காங்கிரஸ் என்று நம்மைப் போன்ற சிலரால் கணிக்க முடிகிறது. யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதைக் காட்டிலும், யார் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதில் எல்லாரும் - மிகச் சரியாகவே  இருந்திருக்கிறார்கள்.   ஆக மூன்று முக்கியக் காரணங்கள் தேடினால் அதில் எல்லாம் காங்கிரஸ்காரர்களே காரணம் என்பது எல்லாரும் அறிந்திருப்பார்கள்.
....
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மகத்தான  வெற்றி பெற காரணம் காங்கிரஸ் என்றாலும் அவருக்குண்டான பங்கை அவ்வளவு குறைத்தும் மதிப்பிட முடியாது. இந்தியத் தேர்தல்களின் தேதி  முன்னரே என்ன செய்ய வேண்டும் என்பதை அவரும், மீடியாக்களும் முன்னெடுத்து விட்டனர்.குஜராத் முன்னோடி மாநிலம் என்று எல்லாரும் போட்டி போட்டு எழுத ஆரம்பித்த போதே இந்த முடிவுகள் முன்கூட்டியே தெரிந்து விட்டது. ஆனால் குஜராத்தைக் காட்டிலும் மேலோங்கிய மாநிலங்கள் இருந்தன என்றாலும், அவைகளை விட  மிகச்சிறந்த மாநிலமாக, ஒரு மாடலாக காண்பிக்கப்பட்டது.  உண்மையிலேயே அதுதான் மாடலா என்றால் அதற்கான பதில் எப்படி இருக்கும் என்பது தெரியாது. இந்தத் தருணத்தில் ஜான் ஸ்வின்டன் பத்திரிகை சுதந்திரம் பற்றி 1880 ; ல் சொன்ன சிறு விஷயத்தை பதிவு செய்வது அவசியம். -

"The business of the journalists is to destroy the truth, to lie outright, to pervert, to vilify, to fawn at the feet of mammon, and to sell his country and his race for his daily bread. You know it and I know it, and what folly is this toasting an independent press?
பணம் வாங்கிக் கொண்டு தேர்தல் கணிப்புகள் வெளியிட்ட அனைத்து பத்திரிகை நண்பர்களும் இதை நோக்குவார்களாக.... அப்படி வெளிவந்த செய்தியை நீர்த்துப் போகச் செய்த நண்பர்களும்  கவனிப்பார்களாக.

இந்தச் சூழலில் ஒட்டு மொத்தமாக ஓட்டு வங்கிகள் தங்களது ஓட்டுக்களை விரயம் செய்துவிட விருப்பம் இல்லாமல் வெற்றி பெரும் கூட்டணிக்கே வாக்குகளை வாரி வழங்கியிருக்கிறார்கள். அவர்களது வாக்குகளைப் பெரும் தகுதியும், திறமையும், தனக்கு இருக்கிறது என்று தனது அசராத பிரச்சாரத்தால்  மோடி மக்களது நம்பிக்கையைப் பெற்றார். இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, மோடி  இந்த வெற்றியை உறுதி செய்து கொண்டார். ஆனால் இந்த அளவுக்கு வெற்றி இருக்கும் என்று பலர் எதிர் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை.

என்னதான் சுற்றுப் பயணம் செய்தாலும், பேசுவதற்கான கருவை வழங்கியது காங்கிரஸ் தானே. டீ விற்பவர் என்கிற வார்த்தை இவ்வளவு பிரபலம் ஆகும் என்று காங்கிரஸ்காரர்கள் எதிர்பார்த்திருக்க வில்லை. ஒரு முறை மோடி சொன்னதைப் போல - ராகுல் காந்தி மிகச் சிறந்த காமெடியன். ஸ்ட்ரெஸ் குறைய ராகுலின் பேச்சைக் கேட்க வேண்டும் என்றார்... இந்தத் தேர்தலில் காமெடியன்கள் தோற்றுப் போயிருக்கிறார்கள். துரைமுருகன் சொன்னார் - முன்பெல்லாம் சிரிப்பதற்கு வடிவேலுவின் ஜோக்கைக் கேட்பேன், இப்போதெல்லாம் விஜயகாந்த் அவர்களின் பிரச்சாரத்தைக் கேட்கிறேன்.

....
மோடி சர்க்கார் எப்படி செயல் படுகிறது என்பதைப் பொருத்துதான் பார்க்க்க வேண்டும். நடக்கிற நிகழ்வுகளை இதுவரை கவனிக்கிற போது முந்தய அரசின் கொள்கைகள் எதையும் இவர்கள் மாற்றுவது போலத் தெரியவில்லை. அதே தாராள மயமாக்கல் கொள்கைகள் - ரயில் துறை உட்பட 49 சதவிகிதம் தனியார்களுக்கு எந்தவித தொல்லைகளும் இல்லாமல் சேர் பெற வசதி (யோசிக்கிறார்கள்) - மதாமாதம் பெட்ரோல் விலை உயர்வு...  இலங்கை அரசோடு உள்ள உறவு என்று மிகப் பெரிய வேறுபாடு இல்லை என்றே தோன்றுகிறது.தேர்தல் செலவுகளுக்கு வாரி வழங்கிய வள்ளல்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும்...

இருந்தாலும் இப்போது பொறுப்பேற்றிருக்கிற அரசு சுற்றியுள்ள அரசுகளோடு நல்ல உறவை மேம்படுத்த செய்த முயற்சி பாராட்டப்பட வேண்டியதுதான். பாகிஸ்தான் கிரிக்கெட் டீம் வந்தால் வெறி கொள்ளும் ஆர். எஸ். எஸ். பாகிஸ்தான் பிரதமர் வந்த போது அமைதி காத்தது ஏனோ? எதுவாக இருந்து விட்டுப் போகட்டும். பொறுப்பேற்றிருக்கும் அரசை விரைவில் குறை கூறுவது சரியல்ல என்றே படுகிறது. வாழ்த்துக்கள்.

தனிப் பெரும்பான்மை - அதிக அதிகாரம் தனியானது அல்ல. அதோடு மிக அதிகமான பொறுப்பும் சேர்ந்தே வரும். தனித்து பார்க்க இயலாது.

ஹானரபில் பிரதம மந்திரி அவர்களே!        --------------------------------------------------------------------------------------------


23.3.14

டோன்ட் வொர்ரி - நிமிர்ந்து நில்

நிமிர்ந்து நில் தேசிய கீதம் டோன்ட் வொர்ரி

எது நடந்தாலும் ....

இந்த திரைப் பட விடியோவைப் பார்க்கிறதுக்கு முன்னாடி எனது பழைய பதிவான கவலைப் படாதே சகோதரா வைப் படித்துவிட்டு வரவும்.

இசை பற்றியெல்லாம் ஒப்புமைப் படுத்துவது என் நோக்கமல்ல.

24.2.14

தமிழர்கள் எமோஷனல் பக்கிகளா ?

குற்றச்சாட்டு

"தமிழர்கள் இமோஷனல் பக்கிகள்  என்றும், மரணதண்டனை ரத்து செய்யப் பட்டதற்கு தமிழர்கள் ஆராயாமல் ஆர்ப்பரிக்கிறார்கள் - தீவிரவாதிகளை எல்லாம் விடுவிக்கச் சொல்லுகிறார்கள். இது அடுக்குமா? ரோட்டில் தீவிரவாதிகள் எல்லாம் நடமாட ஆரம்பித்து விட்டால் நாடு நல்ல இருக்குமா? காப்பித்தண்ணி குடிச்சுட்டு, இட்லி சாம்பார் சாப்டுட்டு, கைலியை கட்டிக்கிட்டு, பட்டா பட்டி போட்டுக்குட்டு, எந்த அறிவும் இல்லாமல் முக நூலில் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள்" என்கிற ரீதியில்,

தமிழர்களைப் பற்றிய ஒரு தவறான, பிற்போக்குத்தனமான, இமொஷனல் நண்பர்கள், வலைப்பதிவில், நாளிதழில், ஆங்கில-இந்தி தொலைக் காட்சிகளில் கத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஒத்தூதுவதற்கென சில காங்கிரஸ்காரர்கள், அவர்களுக்கு எதிரானவர்கள் என பல தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களும் அடக்கம். இதுல மட்டும் இவங்கெல்லாம் ஒன்னு சேர்ந்துவிடுகிறார்கள். 

காரணம் குழப்பம் ​​
எல்லாரும் பல விஷயங்களைப் போட்டு குழப்பிக் கொண்டு இருக்கிறார்கள். இதைப் பற்றி நாம் ஏறக்குறைய மூன்று வருடங்களுக்கு முன்னதாகவே எழுதியிருக்கிறோம். மரண தண்டனைக்கு எதிரான போராட்டம் என்கிற ரீதியில், இந்தத் தீர்ப்பிற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் உண்டு. அவர்கள் இமொஷனல் பக்கிகள் அல்ல. அதற்குப் பெயர் மனித உரிமைகளை வலியுறுத்துவது. ஒரு மனித உயிரைப் பறிக்கிற உரிமை அரசிற்கோ சட்டத்திற்கோ கிடையாது என்பதுதான். சரி ஒருவன் பலரைக் கொன்றிருந்தால், அவனை அரசு கொல்லக்கூடாதா என்கிற கேள்விக்கு அப்போது அரசும் பயங்கரவாதியாகி விடுகிறது என்று நினைப்பவர்கள் அவர்கள். எனவே தண்டனையே வேண்டாம் என்று சொல்லுபவர்கள் அல்ல அவர்கள்.

இன்னும் சிலர் இந்த மூவர் அல்லது அதில் ஒருவர் மரண தண்டனை கொடுக்கப் படும் அளவிற்கு குற்றம் செய்யவில்லை / அல்லது குற்றமே செய்யவில்லை என்கிற ரீதியில் - நிரபராதிகளுக்கு தண்டனை கொடுப்பதே தவறு - அதிலும் பொய் சாட்சியங்களை வைத்து தண்டனை தருவது தவறு / அந்த விதத்தில் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று சொல்லுபவர்களும் உண்டு. இந்த இரண்டு வகைக் காரர்களும் மரண தண்டனை நிறுத்தி வைக்கப் பட்டது சரி என்று சொல்லும் போது இரண்டையும் ஒன்றாக நினைப்பது, அவர்களின் குற்றமே தவிர நமதல்ல.

ஜெயின் கமிஷன் அறிக்கையும், அதைத்தொடர்ந்து அமைக்கப் பட்ட கமிஷங்களும் இன்னும் முடிவே தெரிவிக்காத நிலையில், ராஜீவ் காந்தியின் கொலையில் பலருக்குத் தொடர்பு உண்டு என்று சொல்லப்பட்டதை சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கும் போது - இது ஒரு சோடிக்கப்பட்ட வழக்கு என்று இத்தனை ஆண்டுகளாகக் கத்திக் கொண்டிருந்தவர்கள் - தாமதமானதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி அளித்த தீர்ப்பை வரவேற்கிறார்கள்.

இதில் இமொஷனால் பக்கிகள் என்று ஒட்டு மொத்தமாக தமிழர்களைக் குற்றம் சாட்டும், இந்திக்காரர்களையும் அவர்களுக்கு வக்காளத்து வாங்கும், தமிழ் நாட்டுக்காரர்களையும் என்னவென்று சொல்லுவது. ஆனால், தொலைக் காட்சி அவர்கள் கையில் இருக்கிறது.  அதற்கு ஒத்தூதுவதற்கென்று எல்லாரும் சேர்ந்து கொள்கிறார்கள். 

கண்டிக்கப் படவேண்டியது 
மீடியாக்கள் எல்லாம் சேர்ந்து சில தவறான கருத்துக்களை முன்னெடுப்பதிலேயே குறியாக இருக்கின்றன. இது மிகத்தவறான அவதூறுகளை தென்னக மக்களை நோக்கி வீசுகிற அவர்களின் அநாகரிக போக்கு கண்டிக்கப்பட வேண்டியது. தினம் தினம் தமிழர்கள் கடலில் செத்துக் கொண்டிருக்கும் போது, அதைக் கண்டுகொள்ளாத மீடியா, ஒரு மோசடி தேவயானிக்காக வரிந்து கட்டிய மீடியா, அணுஉலைகளின் ஆபத்திற்கெதிராக வருடக் கணக்கில் போராடுபவர்களை கண்டு கொள்ளாத மீடியா - இப்போது விவாதங்களையும், நேர்காணல்களையும் சர்வேக்களையும் எடுத்து கொண்டிருக்கிறது. இது வெறும் தி.ஆர்.பி ரேட்டிங்கோடு முடிந்து போகிற ஒரு விஷயமல்ல. அதைத்தாண்டி, தமிழர்களை, தீவிரவாதிகளாக, ஒழுக்கமற்றவர்களாக, சித்தரிக்கும் போக்கு.

யார் பண்பாட்டோடு உடையவர்கள், யார், கலாச்சாரமற்றவர்கள்  என்பதை அறிந்து கொள்ள, ஒரு முறை சென்னையிலிருந்து டில்லிக்கு ரயிலில் சென்று வந்தால் புரியும். ரயில்வேத்துறை லாபம் ஈட்டுவது தென்னகத்தில், ஆனால், விரிவாக்கப் பணிகள், எல்லாம் வடக்கே.
அதேபோல ஆபத்து தரும் அணு உலைகள் தென் தமிழகத்தில் - தினம் செத்து செத்து பிழைக்கும் மீனவர்கள் தமிழகத்தில் - இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், இந்தியாவைத் தூக்கி நிறுத்துவது வடவர்கள் போலவும், அவர்கள் தான் சாத்வீக வாதிகள் போலவும் சித்தரிப்பதும், தென்னகத்து மக்களை எமோஷனல் பாக்கிகள் என்பதும் வேதனை தரும் நிகழ்வு.

அடுத்த குழப்பம் 
இது மரணதண்டனை ரத்து என்கிற விதத்தோடு முடிந்திருந்தால் கூட ஒன்றும் இல்லாமல் இருந்திருக்கும். ஆனால், விடுதலை என்பதுதான் பிரச்சனை என்று சொல்லலாம்.

2008 - டில் கருணாநிதி அவர்களை விடுவிக்க இருக்கிறார் இது பயங்கரவாதம் என்று கடும் கண்டனம் தெரிவித்த அம்மையார் மூன்று நாட்களுக்குள், பதில் வராவிட்டால் விடுதலை செய்வோம் என்று சொல்லியது கேலிக் கூறியதுதான். அவருக்கு இந்த விளைவுகள் எல்லாம் தெரியாமல் இல்லை. சட்ட நுணுக்கங்கள் அறிந்திராமல் இருப்பதற்கும் வாய்ப்புகள் இல்லை. 

முன்னாள் முதல்வர் கருணாநிதி இவருக்குப் பயந்துதான் கருணை மனுக்களில் கூட இந்த மூவர் பெயரையும் சேர்க்காமல் இருந்தார். இன்று இதுவே கருணாநிதிக்கு  எமனாக வந்து நிற்கிறது. மிகச் சிறப்பாக தீர்மானம் நிறைவேற்றும் நமது சட்டசபை இந்தத் தீர்மானத்தின் வழியாக இந்த விவாதங்கள் முன்னெடுக்கப் பட்டிருக்கிறது.

விஷயம் என்னவெனில், இந்த மூன்று விஷயங்களையும் போட்டு குழப்புவதுதான். இதில் மறந்து போனதெல்லாம் - ஏன் இத்தனை வருடங்களாக என் ராஜீவ் கொலை வழக்கை முடிக்காமல் இருந்தார்கள், ஜெயின் கமிசன் அதைத்தொடர்ந்த கமிஷன்கள் எவற்றையும் ஏன்  சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. 

இன்னும் ஒன்றையும் புரிந்து கொள்ள வேண்டும் - நீதி மன்றங்களில் சாட்சியங்கள், வாதம் இவைகள் இரண்டும்தான் முக்கியம். உண்மையைப் பற்றியெல்லாம் யார் கவலைப் பட்டார்கள். நீதி மன்றங்களில் மட்டுமல்ல மீடியாக்களும்தான்...

நீதிமன்ற அவமதிப்பு அமைச்சர் செய்யலாமா?

நம் புதுச்சேரி ? அமைச்சர் வழக்கம் போல இந்தத் தீர்ப்பை நிதி மன்றம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், ஆதாரங்களின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார். யாராவது அவர் மீது வழக்கு தொடுத்தால் நலமாயிருக்கும்.

அமேரிக்கா செய்யுமா?

ஆங்கில சானல்களில் ஆ ஊன்னா அமேரிக்கா -- ஆப்ரிக்கா ன்னு பேசுறாங்க... ஜான் எப் கென்னெடியைக் கொன்றவருக்கு நாப்பது ஆண்டுகளுக்குப் பின்பும் பரோல் கிடையாது... இது தெரியுமா - ன்னு கேக்குறாங்க ---

எல்லாத்துக்கும் அமெரிக்காவைப் பாத்தா நல்ல இருக்கும். அங்கேயும் இதே பிரச்சனைதான். இது யார் பிளான் பண்ணினான்னு தெரியாம இருக்கவே பல கொலைகள் நடந்ததுங்கிறது வேற விஷயம். அங்கே ஊழல் அரசியல்வாதிகள் இங்க உள்ளது போல ஊர்க்கனக்குல இல்லையே.. அதைப் பத்தி பேசுவோமா? அங்க நீதித்துறை செயல்படும் விதம் சரின்னா -- தேவயாணி கேசுல என்னத்துக்கு பதறியடிச்சு இது தப்புன்னு கொட்டு போட்டுகிட்டு பேசுனீங்க.... ஒரு கேசுல அவங்க நல்லவங்க இன்னொரு கேசுல கேட்டவுங்களா...
அமெரிக்காவையும் ஆப்ப்ரிக்காவையும் விட்டுட்டு டெல்லிக்கு வாங்க. பாலியல் வழக்கில் தீர்ப்பு வந்த பிறகுதான் வரிசையா பாலியல் வன்முறைகள் --- தண்டனை மட்டுமே குடுக்குறதை விட்டுட்டு, என்ன செய்தால் குற்றங்கள் குறையும்னு மைக் தூக்கிப் பேசுங்க...

உண்மைக்குப் புறம்பாய் பேசலாமா?

காங்கிரசின் முக்கியத் தலைவரும், ராஜீவ் காந்தியின் மகனுமாகிய ராகுல் காந்தி, நாட்டின் பிரதம மந்திரியைக் கொன்றவர்களுக்கே  --- என்ற கேள்வியின் மூலம், மக்களை எமோஷனல் வழியில் தன்னைக் நோக்கித் திருப்பப் பார்க்கிறார். அப்போது ஆட்சியில் இல்லாத அவர் தேர்தலை முன்னிறுத்தியே பிரச்சாரம் செய்ய வந்தார் என்றும், உண்மையைச் சொல்லப் போனால், அவரது கொலைக்குப் பிறகே காங்கிரஸ் நிறைய இடங்களைப் பிடித்தது என்பதும் வரலாறு. தந்தையை இழந்த ஒருவருக்கு அந்த இழப்பு ஈடு செய்ய முடியாதுதான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஒரு கட்சியின் அடுத்த பிரதமர் என்று பேசப் படுகிறவர், கொஞ்சம் உண்மையாகவும் இருப்பது நல்லது. ஒருவர் பிரதமராக இருக்கும் போது கொள்ளப் பட்டால், அவர் சொன்னது உண்மையாக இருக்கும். இல்லையெனில், 'எமோஷனல்' என்று தான் சொல்லவேண்டும்.

அவர்கள் எமொஷனலாக இருக்கலாம் அவர்கள் அரசியல்வாதிகள்.
அவர்கள் எமோஷனலாக இறக்கலாம், ஏனெனில் அவர்கள் இந்தி மீடியா...
அவர்கள் இருக்கலாம், ஏனெனில் ...
ஆனால் தமிழர்கள் இருக்காதீர்கள்!19.2.14

எல்லாம் சிவமயம் - குடியரசு - 2

இது இந்தியக் குடியரசும் அரசியல் அமைப்பும் - 1 என்ற முந்தைய தொடர்ச்சியாக படிக்க விரும்புவோர் இந்தச் சுட்டியை அழுத்தவும்.

உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கடந்த ஏழு மாதங்களுள் மிக உன்னதமான தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார். ஏற்கனவே ஜனவரியில் அவர் வழங்கிய தீர்ப்பு நேற்று வழங்கிய தீர்ப்பை முன்னறிவித்ததாகவே கொள்ளலாம். ஒரு குடியரசின் மிக முக்கியமான அம்சம் என்பது நீதித் துறை. அது மிகவும் உண்மையாகவும், நேர்மையாகவும் நடக்கும் போதுதான் மக்களுக்கு குடியரசின் மீதும், அரசியல் அமைப்பின் மீதும் நம்பிக்கை ஏற்படும்.

ஏற்கனவே பேரறிவாளனை பொறுத்த வரை, அவரது சாட்சியம் மாற்றி எழுதப்பட்டு அவரையும் குற்றவாளியாக்கிய உண்மை, சாட்சியம் வாங்கிய அதிகாரியால் ஒப்புக்கொள்ளப் பட்டபோதே, நீதி மன்றமே தானாக அந்த வழக்கை எடுத்துக் கொண்டு, குறைந்த பட்சம் பேரறிவாளனையாவது விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால் இன்று வரை அது நடக்க வில்லை என்றாலும், இத்தனை ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்ட கருணை மனு காரணமாக மரண தண்டனை ரத்து செய்யப் பட்டிருக்கிறது என்கிற போது - அது கொஞ்சம் நீதி மன்றங்களின் மீதான நம்பிக்கையை அதிகப் படுத்தியிருக்கிறது. 

தலைமை நீதிபதி சதாசிவம் அவர்களைப் போல நீதிபதிகள் அனைவரும் நேர்மையோடும், துணிச்சலோடும் இருப்பது அவசியமாகிறது. நிரபராதிகள் ஒரு போதும் தண்டிக்கப்பட்டு விடக் கூடாது என்பதுதான் நீதி தேவதையின் அறைகூவலாக இருந்தாலும், நிரபராதிகள் தண்டிக்கப்படுவதும், குற்றவாளிகள் நிரபராதிகள் போல வெளிவிடப் படுவதும் தான் குடியரசின் மீதான நம்பிக்கையை நீர்த்துப் போகச் செய்து விடுகிறது.

எப்போது ஒரு நாட்டின் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து விசா மோசடி செய்த ஒரு தேவயானிக்காக தவம் இருந்து அவரை வரவழைத்து அதைக் கொண்டாடியதோ, அவருக்கு பதவி உயர்வு கொடுத்ததோ அப்போதே நாம் உண்மையையும் நீதியையும் தூக்கிப் பிடிக்கிறோமா இல்லையா என்பது உலகுக்கு தெரிந்து விட்டது. எப்போதும் பணம் படைத்தவர்களுக்கு சாதகமாகவே வழங்கப்பட்டு வருகிறதோ என்கிற சந்தேகத்தை இந்தத் தீர்ப்பு உடைத்தெறிந்திருக்கிறது. இது போல தொடர்ந்து நீதி பட்சத்தில் உண்மையான குடியரசாக இந்தியா மலர வாய்ப்புள்ளது.

இந்த மரண தண்டனை ரத்து ஒரு சிலரால் கேலி செய்யப் படலாம். திரு ராகுல் காந்தி போல - "ஒரு பிரதமரைக் கொன்றவர்களுக்கே மரண தண்டனை ரத்து, விடுதலை என்றால் சாதாரண மக்களைக் கொன்றவர்களுக்கு என்ன நடக்கும் என்று பயந்து போயிருக்கிறார். அதிகாரம் தனது கையில் இருந்து, சாட்சியங்களை மாற்றிய அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு நிரபராதியை 23 ஆண்டுகளாக சிறையில் வைத்திருந்த இவர்களை - என்னவென்று கேள்வி கேட்பது? இவ்வளவு பேசப்பட்ட வழக்கிலேயே நீங்கள் சாட்சியங்களை மாற்றியிருக்கிறீர்களே - யாருக்கும் தெரியாத வழக்குகளில் உங்களின் கை வரிசை எப்படி இருந்திருக்கும் என்று கேட்கலாம் அல்லவா?

எது எப்படியெனினும், இப்போது இவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் அம்மாவுக்கு இருப்பதால், எல்லாம் சிவமயத்திலிருந்து, அம்மாமயத்திற்கு மாறியிருக்கிறது. ஒரு சிலரை விடுவிப்பதாலேயே, குடியரசின் மீதும் அரசியல் அமைப்பின் மீதும், சட்டத்தின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை வந்துவிடாது.

முன்னால் நீதிபதி சுரேஷ் குஜராத் கலவரத்தில், தங்கள் வஞ்சம் தீர்க்க வருபவர்களை அனுமதியுங்கள் என்று சொன்னதற்கான 'ஒலிப்பதிவு' இருப்பதாக சொல்லியிருக்கிறார். இதைத் தெரிவித்த திரு பாண்ட்யா சுட்டுக் கொள்ளப் பட்டதும் அனைவருக்கும் தெரியும். சஞ்சீவ்பட் என்கிற போலிஸ் அதிகாரி திரு மோடி இவ்வாறு சொன்னார் என்று சொன்னதும், அவரை வேறு சில காரணங்களுக்காக சஸ்பெண்ட் செய்ததும் அனைவரும் அறிந்ததே. இது போல எத்தனை வந்தாலும், அரசியல் வாதிகள் விடுவிக்கப் படலாம்... ஆனால் சதாசிவம் போல சில உண்மையான நீதிபதிகள் நேர்மையோடு செயலாற்றும் வரை நீதி தாமதமானாலும், காப்பாற்றப் படலாம் என்கிற நம்பிக்கையையும் தான் குடியரசின் மீதும் வைக்க வேண்டியிருக்கிறது.1.2.14

இந்தியக் குடியரசும் அரசியம் அமைப்பும் - 1

65 ஆவது குடியரசு  தினத்தை இந்தியா சிறப்பாக கொண்டாடி முடித்து தேர்தலை எதிர்பார்த்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், குடியரசு பற்றியும் இந்தியாவின் அரசியல் பற்றியும் அலசுவது நல்லது  என படுகிறது.

பல சமயங்களில் ஜனநாயகத்திற்கும் குடியரசிற்கும் உள்ள வித்தியாசம் குழப்பம் விளைவிப்பதாகவே இருக்கிறது. இந்தியா ஜனநாயக நாடு மற்றும் குடியரசு நாடு. ஜன நாயகம் என்பது மக்கள் அல்லது ஜனங்கள்தான் நாட்டின் நாயகர்கள். தங்களைத் தாங்களே ஆள்வது என்பதுதான் ஜனநாயகத்தின் கரு.
ஆனால் எல்லா ஜனநாயகமும் உண்மையிலேயே எல்லா மக்களின் நலத்தையும் பூர்த்தி செய்யும் என்கிற எந்த உத்திரவாதமும் இல்லை. பிளேட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் கால கிரேக்க மக்களின் கலாச்சாரத்தில் கூட மக்களாட்சி தான் இருந்தது. ஆனால் எல்லா மக்களும் சமமாணவர்கள் என்கிற எண்ணம் அவர்களுக்கு இல்லை. அடிமைகள் ஒரு நாட்டின் ஆள்பவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமைகள் பெற்றவர்களாக இல்லை. ஆனால் இந்தியக் குடியரசு அப்படி இல்லை. நாட்டின் குடி மக்கள் எல்லாரும் சமமானவர்கள் என்கிற கருத்தாக்கத்தின் அடிப்படையில் இயங்குகிறது.

குடியரசு என்பது குடி மக்களின் அரசு என்கிற விதத்தில் ஜனநாயகத்தோடு தொடர்புடையதுதான். ஆனால், அதையும் தாண்டி குடி மக்கள் அனைவரும் எப்போதும், எக்காலத்திலும், யாராலும், எதனாலும், மறுக்கப் படாத இயற்கை உரிமைகளைக் கொண்டுள்ளார்கள் என்கிற தளத்தில் இருந்து, சட்டத்தையும், அரசியல் அமைப்பையும் அடிப்படையாகக் கொண்டு இயங்குவது குடியரசு.

ஹிட்லர் என்கிற மாபெரும் இன வெறித் தலைவன் ஜனநாயக முறைப்படித் தேர்ந்தெடுக்கப் பட்டவர்தான். ஆனால் அந்த ஆட்சியில் தனி மனித உரிமைகள் என்பது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு மட்டுமே சொந்தமானதாக அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு அந்த உரிமைகள் இல்லை என்பதாக கருதப் பட்டது. இந்தப் படிப்பினைக்குப் பிறகு, மனித உரிமைகள்   இனவெறிக் கொள்கைகளும் உலகில் எல்லா மக்களாலும் வெறுக்கப் பட்டது என்பதையும் நாம் அறிவோம்.

இந்திய சுதந்திரம் என்பது ஹிட்லருக்குப் பிறகு வந்தது. எனவே, இந்தியா வெறும் ஜனநாயக நாடாக மட்டுமில்லாமல் குடியரசாகவும் வேண்டும் என்கிற சிந்தனை நம் தலைவர்களுக்கு வரவே, அரசியல் அமைப்புச் சட்டம் எழுதப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியா அமைப்புச் சட்டத்தினால் ஆளப்படுகிற அரசு என்பதை நாம் அடிக்கடி நினைவு கூறக் கடமைப் பட்டிருக்கிறோம்.

வெறும் ஜனநாயக நாடு என்பது மெஜாரிட்டேரியன் அரசாகவும், பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை மட்டுமே நிறைவேற்றும் அரசாக மட்டுமே இருக்க முடியும். இதை ஒரு கற்பனை உதாரணத்தினால் புரிந்து கொள்ள முடியும். இந்தியாவில், ஓர் இந்து பாசிச அமைப்பு இது இந்துப் பெரும்பான்மை நாடு எனவே இங்கே இந்துக்கள் மட்டுமே இருக்க முடியும், பிறர் வெளியேற வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வர முடியும். அதனால், ஹிட்லர் போன்று சில முடிவுகளை எடுக்க முடியும். இன்றைய அரசியல் சூழ்நிலையில் மாற்றங்களை விரும்புகிற  ஒவ்வொருவரும், வேறு வழியின்றி இந்த முடிவுக்கு தள்ளப் படுவதற்கான  காரணங்கள் இருக்கின்றன. ஆனால் இத்தகைய காரணங்கள் இன்னும் பல சிக்கல்களுக்கு வழி வகுக்கும்.
இந்துத்துவ பெரும்பான்மை என்பது மட்டுமே ஆட்சி அமைக்க ஒரு கருவியாகப் பயன்படுத்தப் படும் போது, இன்னும் சிறிது காலத்திற்குப் பிறகு, இந்தி பேசும் மக்கள் பெரும்பான்மையாக இருப்பதனால், இந்தியாவின் எல்லா இந்துக்களும், இந்தி பேச வேண்டும் என்றோ அல்லது இந்தி பேசாத இந்துக்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று பெரும்பான்மை இந்துக்கள் முடிவுக்கு வரமுடியும்.  அதன் பிறகு, இந்துக்களுக்குள் சைவ வைணவ பிரிவு பெரும்பான்மை என்று வரிசையாக - பெரும்பான்மை என்பது எந்த விதமான வேறுபாடுகளையும் சகித்துக் கொள்ள முடியாத கொடூரமான பாசிசத்தில் முடியும் சாத்தியக் கூறுகளே இருக்கின்றன. இனவெறி என்பது எவ்வளவு கொடூரமான விடயம் என்பதைப் புரிந்து கொள்ள இது போதும்.

ஆனால், இது போன்ற பெரும்பான்மை எண்ணங்கள் உருவாக்கப்படுவது இமோஷன்ஸ் வழியாகத்தான். இன்று எல்லாரையும் மிகச் சுலபாமாக ட்ரிகர் பண்ணுவது மதம்தான். அதன் பிறகு மொழி. இது போன்ற அம்சங்கள் தவறு என்றெல்லாம் நான் வாதட வில்லை. இதில் எது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் எனக்கான கருத்து இருக்கிறது. ஆனால் இப்போதைக்கு, இந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு... மீண்டும் நமது விஷயத்துக்கு வருவோம்.

இதுபோன்ற இமோஷனல் சமாச்சாரங்களால் ஒரு தவறான அல்லது இனவெறி, பாசிசக் கொள்கையில் நாம் புதைந்து போகாமல் இருக்க, நம்மை நெறிப் படுத்த உதவுவன அரசியல் அமைப்பும் சட்டங்களும். அதனால்தான் நீதி மன்றங்கள் தனி மனித உரிமையை நிலை நாட்டும் ஒரு தன்னாட்சி [அரசியல் கட்சிகளின் கைப்பாவைகளாக இல்லாமல் (!)] நிறுவனங்களாக இருக்கின்றன.

ஆம் ஆத்மியின் சட்ட அமைச்சரின் இனவெறிக் கெதிராக எல்லாரும் வெகுண்டெழுவது நாம் இன்னமும் குடியரசு நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிற நம்பிக்கையைக் கொடுக்கிறது. அதே சமயம், இன்று இனவெறிக் கொள்கைக்கு எதிராக வெகுண்டெழும் பத்திரிக்கைகள் தமிழக மீனவர்களுக்கெதிரான சிங்கள இனவெறித் தாக்குதலுக்கு மவுனத்தை பதிலாகத் தருவது பத்திரிகைத் தூண் எப்படி தனது பங்கை ஆற்றுகிறது என்று கேட்க வைக்கிறது. 

பங்களாதேஷில் மற்றும் பாகிஸ்தானில் இந்துக்கள் பாதிக்கப் படுவதிற்கு எதிராக இந்தியாவில் பா.ஜ.க. அமைப்பு போராட்டங்கள் நடத்தியது ஒரு நாட்டில் பன்முகத்தன்மை என்பது எப்போதும் பாதுக்காகப்பட வேண்டும் என்கிற உண்மையை உணர்த்துகிறது. அது இந்தியாவிற்கும் பொருந்தும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவின் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் அரசியல்  அமைப்பையும்,சட்டங்களையும் ஒழுங்கு படுத்தும் அமைப்பாக அரசு இருக்க வேண்டும்.

தொடரும்.....


17.1.14

மோடி ஷண்டை (ஷிண்டே) - நியாயமான பேச்சு 1


 • ஷிண்டே அவர்கள் -  மாநில அரசுகள் சிறுபான்மை இளைஞர்கள் மீது போடப்பட்டிருக்கிற தவறான, பயங்கரவாத வழக்குகள் இடப்பட்டு, சிறையில் அனாவசியமாக வாடிக் கொண்டிருக்கும் நபர்களை மீட்பதற்கான ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று கடிதம் எழுதப் போவதாத் தெரிவிக்கிறார். 
  • காங்கிரஸ்காரர்கள் எல்லாம் என்ன குழப்பத்துல இருக்குறாங்கன்னே தெரியலை. ராகுல் திடீர்னு நாட்டில்  ஊழல் மலிந்து விட்டதுன்னு சொல்றாரு. மன்மோகன் சிங் பொருளாதாரம் வீக் ஆகிவிட்டதுன்னு சொல்றாரு. சிதம்பரம் விலைவாசி உயர்வுதான் நமக்கு கவலை தருதுன்னு பேசுறாரு. வேற நாட்டுக் காரன் இவர்கள் செய்திகளை எல்லாம் படித்தால் ஆட்சில இவர்கள் மிகச் சிறந்த எதிர்கட்சிக் காரர்கள் என்றுதான் நினைத்துக் கொள்வார்கள். 
  • ராஜீவ் காந்தி கொலயில் பொய்க் குற்றச் சாட்டு  மற்றும் தவறான வாக்கு மூலம் உருவாக்கி, இருபத்து மூன்று ஆண்டுகளாக உள்ளே இருக்கும் நிரபராதிகளை விடுவிக்க எந்த தூசியும் தட்டலை. இப்ப எழுதப் போறாராம் எழுத... 
  • பொய் வழக்கு போடுறது / அணு உலைக்கு எதிராப் போராட்டம் பண்ணினா அன்னியச் செலவாணிக் கணக்கை கையில எடுக்குறது, சி.பி.ஐ.யை ஏவிவிடுறது  இதெயெல்லாம் நீங்க நிறுத்துங்க.... நல்லாப் பேசுறீங்க. என்னமோ ஏதோ 
 • மோடி சார் அதுக்கு நல்லாப் பதில் சொல்லிருக்கிறார். நமது நீதி மன்றங்களைப் பற்றிய தவறான ஒரு கண்ணோட்டத்தைக் கொடுக்கும் என்றும், நமது நீதி மன்ற விவகாரங்களில் கால தாமதம் ஆவதை தடுக்க முடியாது என்றும் பேசியிருக்கிறார். 
  • நல்ல விஷயம்தான். குற்றவாளிகளின் மதத்தைப் பார்த்து தண்டனை தரப் படுவதில்லை மோடி சார். ஆனால் அதிகார துஷ் பிரயோகம் செய்து ஒரு குறிப்பிட்ட மதத்தவரை மட்டும் கைது செய்வதும், அவர்களை சிறைக்குள் பல வருடங்களாக அடைக்கப் படுவதையும் பற்றி பேசுவதற்கு உங்க பதில் இப்படி இருக்கக் கூடாது. மதத்தைப் பார்த்து தண்டனை கிடையாது... ஆனால் மதம் பார்த்து கைது செய்கிறீர்களே அது தவறில்லையா.
  • உங்க விஷயத்துல கைது இல்லாம, சிறை செல்லாம, வழக்கு நடந்தது. அதுனால உங்களுக்குப் பிரச்சனை இல்லை. ஆனால் ஒரு மதத்தைச் சார்ந்ததினால் குஜராத் சிறையில் அடைபட்டிருக்கும் அவர்களைப் பற்றி பேசுங்க. நல்லா இருக்கும். 
  • காங்கிரஸ் பேசுறது சரியில்லைதான். அதே மாதிரி நீங்க பேசுறதும்தான்.
 •  பின்னி -ன்னு ஒரு முன்னாள் காங்கிரஸ்காரரு, இந்நாள் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ, பதவி கிடைக்கலை என்பதனால் - கெஜ்ரிவால் ஒரு பொய்யர்ன்னும், அவருக்கு எதிரா போராட்டம் பன்னுவேன்னும்  சவால் விடுகிறார். ஆம் ஆத்மியை உடைக்க பல சாதிகள் நடக்கின்றன. நாம் பார்க்காத அரசியல் படங்களா?
 • சல்மான் குர்ஷித் - அடுத்த அறிவாளி - ஆம் ஆத்மி கட்சி அராஜகவாதிகளின் கூடாரம் அப்படின்னு அடிச்சு விடுறார். அராஜகவாதிகள்தான் அரசியலில் இருக்க முடியும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையில பேசுறமாதிரி தெரியுது. மஞ்சக் காமாளைக் காரனுக்கு பார்க்கிறது எல்லாம் மஞ்சள்தான்... காங்கிரசும் அராஜவாதிகலின் கூடம்தான்...
 • ஜே. பி . அகர்வால் ன்னு இன்னொரு காங்கிரஸ் காரர் - தேர்தல் சமயத்தில் பேசிய பிரச்சனைகளை தீர்க்க ஒன்றும் செய்ய வில்லை எனவே ஆம்-ஆத்மி பதவி விலக வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.  நீங்க தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் எதையும் பத்து வருஷமா இருந்து தீக்க வக்கில்லை. அல்லது பதவி விலக திராணி இல்லை. ஆனால் பேச்சு...
 • எது நியாமான பேச்சுன்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்க!

14.1.14

பொங்கல் வாழ்த்துகள்


 • கா. கவிதை


மூன்று மணி நேரம் வெந்நீர்
மூன்று மணி நேரம் குளிர் நீர்
மாறி மாறி குளித்தேன் நான்- [இரு முறை வாசிக்க]

நெருப்பாய் சிறிது நேரம்
எரிந்தது என் உடல்
பனியாய் சிறிது நேரம்
குளிர்ந்து என் உடல் - [இரு முறை வாசிக்க]

திடீரெனப் பார்த்த பெண்ணின்
மீதான காமமும் காதலும்
நெருப்பாய் பனியாய் வாட்டுதா?
---
பெரிதாய் ஒன்றும் சிந்திக்காதீர்கள்
பெயர் தெரியாத
ஒரு வைரசின்
காய்ச்சல்
என்னை
மாறி மாறி வாட்டுது.

இன்றுதான் சற்றே ஆறுதல்!

போகியில் காய்ச்சல் போய்
பொங்கலில் புது வாழ்வு
--
எல்லாருக்கும் வாழ்த்துகள்
........................

 • பொ. பொன்மொழி (கேட்டது)

தன் மொழியை உயர்வாய் சொன்னால் அதை நம்பாமல் கேலி செய்வதும்
தன் மொழியை இழிவாய்ச் சொன்னால் அதை ஏற்று ரசிப்பதும்
தமிழகத் தமிழர்கள்.

பிறன் மொழியை உயர்வைச் சொன்னால் அதை நம்பி ஏற்பதும்,
அம்மொழியின் பிழைகள் சொன்னால் தற்காத்து விவாதிப்பதும்
தமிழர்கள் தான்
ஏனெனில்
நாம்தான்
நடு நிலையானவர்கள்
அதனால்தான்
நாம்
பட்டி மன்றத்துக்கு பெயர் போனவர்கள்
-- -- -- -- -- --
வடிவேலுவின் பாணியில் சொல்வதென்றால்
நம்ம குடும்பத்தை
நாமலே கேவலமா பேசி
கிண்டலடிப்பதை
ஒரு வழக்காமாகவே
வச்சிருக்கோம்.
வாழ்க
நம் வீரப் பழக்கம்
​​​​ ______

 பொங்கல் வாழ்த்துகள்
மண்ணை நேசிக்கும் பழக்கம் இருந்தால்தான்
இனி வரும் காலங்களில்
பொங்கல் கூட கொண்டாட முடியும்...

இல்லையென்றால்
பொங்கல் செய்வது எப்படி
தொலைக் காட்சி
நிகழ்ச்சிகளில் தான்
பார்க்க முடியும்.

----