தற்கொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தற்கொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

4.9.17

ஆசிரியர் தினம் - அனிதாவின் செய்தி

அனிதா படித்த பள்ளியில்
ஆயிரம் பேருக்கு மேல் படித்திருப்பார்கள்.
ஆனால் எத்தனை பேர் ஆயிரத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றிருப்பார்கள்???

அனிதா
பத்தாம் வகுப்பில் 478
பனிரெண்டாம் வகுப்பில் 1176

ஆசிரியர் யாராயிருந்தாலும் 
அனிதாவால் படிக்க முடியுமெனில் 
ஆசிரியரால் என்ன பயன்?

ஆயிரம் பேரும் ஆயிரத்திற்கு மேல் எடுத்தால்தானே
ஆசிரியருக்குப் பெருமை!

-
அது சரி -
ஆயிரத்திற்க்கு மேல் எடுத்து 
இந்த நாட்டில் என்ன செய்வது?
தற்கொலையா????

-

இந்த நாட்டில்
ஆசிரியர்களுக்கு வேலை இல்லை...

நீட் - டி முழங்கி
கோச்சிங் செண்ட்டர்கள்
அந்த வேலையை எடுத்துக் கொண்டுவிட்டன..
படிக்காதவர்கள்
கல்வி அமைச்சர்களாய் இருக்கும் நாட்டில்
கோச்சிங் செண்டர்களுக்குத்தான் வேலை.

இருந்தாலும்

ஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள்

---




2.9.17

தமிழகத் தற்கொலைகள் - இப்போது அனிதா

கடந்த ஒரு வாராக் காய்ச்சலுக்குப் பிறகு 
கணினியைத் திறந்தால் 
நீட் தேர்வின் கொடூர அரக்கனை எதிர் கொண்டு போராடியும் வெற்றி காண இயலாமல், தன்னை மாய்த்துக் கொண்ட அனிதாவின் தற்கொலை 
இதயத்தை இன்னும் கனமாக்கியது.

1196 மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வினை எதிர்த்து உச்ச நீதி மன்றம் வரை போராடிய ஒரு சாதாரண மாணவியால் வேறென்ன செய்ய முடியும்?

தற்கொலைகள் தவறுதான்.
ஆனால் இவைகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசுகள் தானே. அவைகள் தவறு செய்யும் போது மக்களுக்கு உதவ வேண்டியவைகள் நீதி மன்றங்கள் தானே.
அரியலூர் மண்ணைச் சேர்ந்த அந்த மாணவி டெல்லி வரை சென்றாள் - தனது வாதத்தை எடுத்து வைத்திருக்கிறாள். ஒரு சாதாரண பிரஜையின் வாதத்தை உணர்ந்து கொள்ளாத அரசு எப்படி மக்கள் அரசாக இருக்க முடியும்?

தமிழகத்தில் ஒரு தலைவர் சொல்லுகிறார் - அவள் இன்னும் இரண்டு முறை நீட் எழுதியிருக்க வேண்டுமாம் - அப்படியும் தேர்ச்சி பெறவில்லை என்றால் வேறு ஏதாவது பாடத்திட்டத்தை தேர்வு செய்ய வேண்டுமாம். சமூக நீதி பேசி புகழ் பெற்ற தலைவர்கள் எல்லாம் இப்படிப் பேசத் தொடங்கிவிட்டார்கள். அதாவது 1196 மதிப்பெண் எடுத்தும் நான் விரும்பியதை படிக்க எனக்கு முடியவில்லை என்றால் இந்த பள்ளிகள் எதற்கு இந்தத் தேர்வுகள் எதற்கு? 
18 வயது நிறைவில் நீங்கள் நீட் தேர்வு எழுதினால் போதும் என்றால் பனிரெண்டாம் வகுப்பில் எடுக்கும் மார்க்குகள் வீண் தானே. 

என்ன உடுத்த வேண்டும்? என்ன மொழி பேச வேண்டும்?  என்ன உண்ண வேண்டும் என்பது வரைக்கும் முடிவு செய்தாயிற்று? இப்போது யார் எதைப் படிக்க வேண்டும் என்று சொல்லுகிற நவீன குருகுலக் கல்வியைத் திணிக்கிறது அரசு. இதையே முன்மொழியும் அரசுகள் இருக்கும் வரை, தலைவர்கள் இருக்கும் வரை அனிதாக்கள் தற்கொலைகளைத் தடுக்க முடியாது.
-
தமிழகத்தின் கவிஞர் 

"அனிதா விரும்பியது கிடைக்கவில்லை என்றால் 
கிடைப்பதை விரும்ப வேண்டும்" அதற்காக உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது என்று சொன்னதோடு விட்டிருந்தாலாவது பரவாயில்லை - அப்படி இந்தியாவில் விரும்பியது கிடைக்க வில்லை என்று தற்கொலைகள் செய்து கொண்டால் இந்திய ஜனத் தொகையில் பாதிப் பேர் தற்கொலை செய்து கொள்வார்களாம்.

இந்திய ஜனத் தொகையில் பாதிப் பேர் தங்கள் விரும்பியதைச் செய்ய முடியவில்லை என்றால் என்ன நாடு இது? என்ன அரசு இது? என்ன கவிஞர் இவர்?
-

இப்போது கூட தமிழகம் விழிக்க வில்லை என்றால்
பின்னர் 
எழுவது மிகக் கடினம்.




11.7.13

கொலைகார்கள் நாங்கள்

  • உத்திரகான்ட்டில் ஒரே நாளில் ஆயிரம் உயிர்கள் ஒன்றாய் விழுந்தபோது கூட நான் கலங்கிப் போகவில்லை.  ஆனால் ஆயிரம் ஆண்டுகளாய் உன் போன்றோர் ஒவ்வொருவராய் இறக்கும் போதுதான் நான் வெறுத்துப் போகிறேன். 
  • உன் இறப்பு கொலையோ தற்கொலையோ எனக்குத் தெரியாது ஆனால் கொலைகாரர்கள் யாரென்று தெரியும் ... வேறு யார் நாங்கள்தான்... 
இளவரசனின் தற்கொலைச் செய்தியை - சில தமிழ் பத்திரிக்கைகள்... தர்மபுரி கலவரத்திற்குக் காரணமான இளவரசன் தற்கொலை என்று செய்தி வெளியிட்டு இருந்தன... கலவரத்திற்குக் காரணமான பல அய்னாக் கைகள்  சுதந்திரமாய் இருந்தது மட்டுமல்ல அதை நியாப்படுத்தவும் செய்து களிப்பில் மிதந்து கொண்டு இருக்கும், இறந்து போன இளவரசனை காரணம் காட்டும் சாதி வெறியர்கள் நாங்கள் கொலைகாரர்கள்தானே... 


தனி மனித உரிமை பேசும் நாங்கள், திருமணத்திற்கு மட்டும் சாதிக்குள் உரிமை பேசி அதை எங்கள் உரிமையாகவும் பேசி உன்னைக் கலகக்காரனாக்கின நாங்கள் கொலைகாரர்கள் தானே!

தீண்டாமை பாவச்செயல் உரக்க சொல்வோம் நாங்கள் ஆனால் அது எழுத்தில் மட்டும் இருக்க வேண்டும் என்பதில் இறுதிவரை உறுதியாய் இருக்கும் நாங்கள் ...

இன்னும் பேசுவோம் மனித உரிமை.... இன்னும் பேசுவோம் தீண்டாமை பாவச் செயல் ... இன்னும் பேசுவோம் காதல் வாழ்க... 

ஆனால் இளவரசன்களை மட்டும் வாழ விடுவதாய் இல்லை...
வாழ்க காதல் ...  வாழ்க மனித உரிமை ... வாழ்க சுதந்திரம்...

30.8.11

காஞ்சிபுரத்துக் கண்ணகியா மதுரைச் செங்கொடியா?


நீதி
கேட்டு மதுரையை
எரித்தாளாம் கண்ணகி –
      
          நீதி
         கேட்டு உன்னையே
          எரித்தாயே செங்கொடி

ஆராயாமல்
வழங்கிய அநீதிக்கு
மதுரை எரிந்தது

          அடித்து/உதைத்து
          வழங்கிய அநீதிக்கு
          நீ எரிந்தாய்.

ஒருவன் இறந்ததற்காய் 
ஊரே எரிந்தது அன்று

          மூவர் உயிர் வாழ
          உன் உடல் எரிந்ததே இன்று

அன்றும் அநீதி
இன்றும் அநீதி [தமிழகத்தில்]
நீதி கேட்டவள்
அன்றும் பெண் இன்றும் பெண்.

நீ காஞ்சிபுரத்துக் கண்ணகிதான்.

ஆனால்
கண்கண்ட கணவனுக்காய்
ஊரை எரித்த கண்ணகியைக் காட்டிலும்
காணாத தமிழருக்காய்
உன்னையே எரித்த செங்கோடியே -
நீ ஆயிரம் மடங்கு மேல்.

நீதி கேட்டு
யாரேனும் வெகுண்டு எழுந்தால்
அடித்துச் சொல்லுவேன்
அவள் செங்கோடி என்று.

* * *

நீதிகேட்ட செங்கோடியே, உனக்கும் முத்துக்குமாருக்கும் ஏதாவது சொந்தமா? பந்தமா? இருவருமே உங்கள் உடலை போராட்டத்திற்கான ஆயுதமாக்க வேண்டும் என்றல்லவா எரித்திருக்கிறீர்கள். உயிர் கொடுத்துப் போராடும் திட மனம் படைத்தவர்கள் இப்படி ஒவ்வொருவராய் மாண்டு கொண்டிருந்தால் யார்தான் திடமாய் களத்தில் நிற்பார்? உறுதியாய் நின்று களத்தில் மடியாமல் உயிரை மாய்த்தல் தவறே.

தன்னைச் சாய்த்துக் கொள்ளுதல் சத்தியாக்கிரகம்தான் – அன்னா சாய்ந்தால் அது சத்தியாக் கிரகம் – நீ சாய்ந்தால் சத்தியாக்கிரகமா – பின்னால் மீடியாக்கள் வருமா? நீதி உரத்தக் கேட்குமா? யாரும் வரவில்லைஎனினும் இதுவும் சத்தியாக் கிரகம்தான். ஆனாலும் உறுதியாய் நின்று களத்தில் மடியாமல் உயிரை மாய்த்தல் தவறே.

நீ செய்தது சரியில்லைதான் – இருந்தால் இன்னும் நிறைய குரல் கொடுத்திருக்கலாம்தான் – எரிந்தே இங்கே பலருக்கு அது தெரியவில்லையே பேசியிருந்தால் கேட்டிருக்குமா?

* * *

எழுதி அடித்தது

[எரிந்து போகும் கண்ணகியை விட / எரிக்கும் கண்ணகிதான் தேவையோ?]

அடித்துதான் எழுத வேண்டும் போலிருக்கிறது.

* * *

காஞ்சிபுரத்துக் கண்ணகியே
கண்ணகி சிலையையே
மதிக்காதவர்
கண்ணகியின் உயிர் பிரிவை
மதிப்பாரா?

* * *