16.12.16

கோடிட்ட மதி – மதி என்னும் _____________ மதி


கோடிட்ட மதி – மதி என்னும் _____________ மதி 
இந்தக் கார்டூனிஸ்டை எனக்கு ரொம்பப் பிடிக்கும் - இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்பு வரை. அதற்காகவெல்லாம் அமைதியாக இருக்க முடியாது. 

கடந்த மூன்று வருடக் கார்ட்டூன்களை எல்லாம் பார்த்தீர்கள் என்றால், ஒரே பிரதி எடுத்துப் போட்டது போல, பெயர் மாறியிருக்கும் ஆனால் மேட்டர் ஒன்றுதான். 2 ஜி வேறென்ன? மன்மோகன்சிங், ராசா, கருணாநிதி, ஸ்டாலின், காங்கிரஸ், ராகுல், சோனியா, இவர்களைத் தவிர வேறு எதுவும் இல்லை. அவர்கள் ஆளும்போது அவர்களை இடித்துரைத்தாய். சரி. வாழ்த்துக்கள். 

கார்டூனிஸ்ட் என்கிறவன் இடித்துரைக்கும் பணியைச் செய்பவன். ஆள்பவர்களின் அல்லக்கை அல்ல. நன் அறிந்த வரையில் நமது நாட்டை மோடிஜிதான் ஆள்கிறார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஏதோ அவரது ஆட்சியில் இடித்துரைக்க எதுவுமே இல்லாதது போலவும் – ஆடம்பர ஆடைகள், வெளி நாட்டு உலாக்கள், போடோஷாப் செய்யும் திறன், விளம்பரத்திற்கு மட்டும் ஆயிரம் கோடிகளுக்கு மேல் செலவிட்டது, இன்ன பிற இவைகள் எதுவுமே அவர் கண்ணுக்குத் தெரியவில்லை. 

தினமணியின் முதல் பக்கத்தில் பணத்திற்குத் தட்டுப்பாடு என்று செய்தி வருகிறது – அதில் வரும் கார்டூனைப் பாருங்கள். அதில் ப. சிதம்பரத்தைப் பற்றிய கிண்டல். அவர் ஒன்றும் மிகச் சரியான நிதி அமைச்சர் என்பதற்காக எல்லாம்  நாம் அவருக்கு வால் பிடிக்கவில்லை. இப்போது என்ன பிரச்சினை? இப்போது ஏன் அவர் ப. சி. யை கிண்டலடிக்கிறார் என்பதில்தான்  ___ ___ __ மதியின் அரசியல் இருக்கிறது. ஆனால் இது மதியின் ஒருதலைப்பட்சத்தை அப்பட்டமாகக் காட்டுகிறது. இதுவே எந்த அளவுக்கு மதி, மதி _____ _____ இருக்கிறார் என்பது புரியும் [கோடிட்ட இடத்தை நிரப்பவும்]. 

ஆள்பவர்களை இடித்துரைக்கும் பணிக்கு மாறாக, எதிர்க்கட்சியை மட்டும் அவர்களோடு சேர்ந்து தூற்றுவது, ஆளும்கட்சிக்குத் துதி பாடுவது போலத்தான். அப்படி செய்கிற ஒரு கார்டூனிஸ்ட், வடிவேலு படத்தில் வரும் இரண்டு கவிஞர்கள் போல. அவர் _______________________ கார்டூனிஸ்ட் [கோடிட்ட இடத்தை நீங்களே நிரப்பிக்கொள்ளுங்கள்]. அப்படிச் செய்கிற செய்தித்தாளை பா.ஜ.க. மணி என்றே அழைத்துக் கொள்ள வேண்டியதுதானே. அப்புறம் என்ன நிமிர்ந்த நடை ....  ..... ஏன் இரட்டை வேடம்.? 

இந்தக் கார்டூனிஸ்ட்தான் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் என்கிற எந்த மரியாதையும் இன்றி, முன்யோசனையையும் இன்றி அவரைப் பற்றிய ஒரு கார்ட்டூனை வரைந்து கோடிட்டு நம்மையே நிரப்பச் சொன்னவர். எந்த அளவுக்கு ஒருவன் தரம் தாழ்ந்து போவான் என்பதற்கு இதை விட மிகப் பெரிய உதாரணம் எதுவும் தேவையே இல்லை. ஆர். எஸ். எஸ்- சின் ஊதுகுழல், பாஜகவின் ________ என்று ஒப்பனாகவே சொல்லிவிடலாம். 

இந்த மூன்று வருடத்தில் திடீரென அவருக்கு மதி வந்து, ஒரு தடவை காலில் விழும் கலாச்சாரம் பற்றிக் கிண்டலடித்திருக்கிறார். ஆஹா! என்னே வீரம் அவருக்கு.

ஜெயலிலதா இருந்த போது அமைச்சர்கள் யாருமே காலிலேயே விழாதது போலவும், இப்போதுதான் புதியாய் அமைச்சர்கள் ஒருவரின் காலில் விழுவது போலவும் வருத்தப்பட்டு, வேதனைப்பட்டு, துக்கப்பட்டு, துயரப்பட்டு, குற்றம் சாடியிருக்கிறார். 
ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரைக்கும் வராத வீரம் திடீரென முளைத்து வந்திருக்கிறது. 

சரி, இந்தக் கார்டூனுக்கு வருவோம். இத்துணை ஊழல்களை அவர்கள் செய்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் மேல் வழக்குத் தொடுக்க வேண்டியதுதானே? நீதிமன்றம் பார்த்துக் கொள்ளாதா? அல்லது அதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? 
சரி, ஒரு பிரதமர் பேசாமல் இருப்பதற்கு இவ்வளவு வாரி இறைக்க வேண்டுமென்றால், நாடாளுமன்றத்தைத் தவிர எல்லா இடங்களிலும் பேசும் தற்போதைய பிரதமரையும் விமர்சிக்க வேண்டும். இங்கே இல்லாமல் உலகம் சுற்றும் பிரதமரையும் விமர்சிக்க வேண்டும். 
ஒவ்வொரு முறையும் 1,72, 000 கோடி ஊழல் என்று சொல்கிறீர்களே, அதற்குப் பிறகுதான் 3 ஜி, 4 ஜி எல்லாம் ஏலம் போனது. அப்படியெனில் முறையே அவைகளும் 2, 72, 000 கோடியும், 3, 72, 000 கோடிகளும் அல்லவா ஏலம் போயிருக்க வேண்டும். இரண்டு ஜி அளவோடு ஒப்புமைப் படுத்தும் போது மிகக் குறைந்த அளவே போயிருக்கிறது. அப்படியெனில், 6, 44, 000 கோடி ஊழல் இந்த அரசாங்கத்தில் நடந்திருக்கிறது என்று கார்ட்டூன் போடுங்கள் சாரே. 

இப்படி ஒரே பொய்யை மீண்டும் மீண்டும் எத்தனை வருடங்களுக்குத் தான் சொல்லிக் கொண்டிருப்பீர்களோ? முன்னாள் பிரதமர் வாய் திறந்தது அவ்வளவு பெரிய குற்றமா? இத்தனை வருடமாய் காலில் விழும் கலாச்சாரம் பற்றி மௌனம் காத்துவிட்டு திடீரெனப் பேசியிருக்கும் உங்களை நாங்கள் எப்படியெல்லாம் சொல்ல வேண்டும்? 

இப்படி இருக்கிற இந்தக் கார்டூனிஸ்டை ______________________________ கார்டூனிஸ்ட் என்று சொல்வதில் தவறில்லை [கோடிட்ட இடத்தை வாசகர்களே நிரப்பிக் கொள்ளவும்].

2.12.16

அப்பா சமுத்திரமே

அப்பா! நீர் திடீரென, "மோடி செய்துவிட்டாரே என்பதனால் அதை எதிர்க்க வேண்டியதில்லை" என்று சொல்லியிருந்ததைப் படித்தேன். 

உங்கள் மேல் வருத்தம் ,எல்லாம் இல்லை. உங்களைப் போல பெரும்பான்மை  இருப்பதில்தான் வருத்தம்.

மோடி செய்து விட்டாரே என்பதனால் எல்லாம் பலரும் எதிர்க்கவில்லை. அவசர கோலமாய், என்ன, எப்படி இருக்கும் என்பதை எல்லாம் யோசிக்காமல் செய்து விட்டாரே என்றுதான் எதிர்க்கிறோம். 

பணக்காரர்களின் கைப்பாவையாக மாறிப்போய் விட்டாரே என்றுதான் எதிர்க்கிறோம்.

தகுந்த தயாரிப்பு இல்லாமல் எல்லாரையும் இழி நிலைக்கு மாற்றி விட்ட நிலையை எதிர்க்கிறோம். 

இருப்பவர் யாரென்று எல்லாருக்கும் தெரியும். கூட இருப்பவர்களை விட்டு விட்டு, தொடர்பே இல்லாத சாதாரண மக்களின் வயிற்றில் அடித்து, அலைய விடும் இந்த மன நிலையை எதிர்க்கிறோம்.

.வரும் பணத்தை எடுத்து மக்களுக்கு எதுவும் செய்யாமல் மார்க்கெட்டுகளுக்கு வழங்கத் துடிக்கும் அந்தக் கார்ப்பரேட் ஐடியாவை வெறுக்கிறோம். அதனால் எதிர்க்கிறோம்.

வரிக்கு மேல் வரி விதித்து, வருமான வரி, ஜி எஸ் டி வரி, சாலை வரி, சுங்க வரி, விற்பனை வரி, இவைகளெல்லாம் கொடுத்தாலும், இதற்கு மேல் வங்கிகளில் பணம் வந்தாலும், அதை மக்களுக்காய் பயன்படுத்தாமல், எல்லாம் தனியார் வசம் ஒப்படைக்கத் துடிக்கும் அந்த முதலாளித்துவப் போக்கை எதிர்க்கிறோம்.

இவ்வளவுக்கு மத்தியிலும், ஆயிரக்கணக்கான கோடிகளை கடனாகப் பெற்ற, வரி பாக்கி வைத்திருக்கிற முதலாளிகளை எல்லாம் விட்டு விட்டு எங்கள் கழுத்தை நெரிக்கிற இந்தப் போக்கை எதிர்க்கிறோம், கண்டிக்கிறோம்.

இதெல்லாம் எதுவுமே தெரியாதது போல புரியாதது போல - 

மோடி செய்துவிட்டதனால் மட்டுமே இது சரி என்று ஜால்ரா அடித்துக் கொண்டிருப்பவர்களைத் தான் எதிர்க்கிறோம்

நீங்கள் மோடி செய்து விட்டதனாலேயே அதில் குறைகள் இருக்கின்றன என்பதை ஒத்துக் கொள்ளத் தயங்கும் போது, மற்றவன் அதை ஏற்றுக் கொள்ள மறுப்பதற்கான இடம் தர வேண்டும். அதுதான் ஜனநாயகம். 

அப்பா சமுத்திரக்கனி,
உங்கள் பிள்ளையைக் கூட அடித்து விடக் கூடாது என்கிற காரணத்திலும், தன் பிள்ளைகள் மேல் உள்ள அக்கறையிலும் காவல் காக்கிற உங்கள் போல அவர் இருந்துவிட்டால், பிரச்சனை இல்லையே.

எழுபதுக்கும் மேற்பட்டோர் இறந்து போனார்களே. அது உங்கள் பிள்ளைகள் என்றால் .... 

சற்றுக் காத்திருக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறீர்கள்.

காத்திருப்போம்.


குறிப்பு:

என்னிடம் கறுப்புப் பணம் இல்லை.
நான் திமுக காரன் இல்லை.
நான் பாகிஸ்தான்காரன் இல்லை.
இந்தியாவின் எதிரியும் இல்லை 
துரோகியும் இல்லை.







1.12.16

இன்குலாப்


கவிஞரே 
உம்மை நினைக்கக் கூட நேரமில்லை.



என்ன செய்வது?
வங்கிக்கும், இயந்திரங்களுக்கும் இடையே  
அலையும் எங்களுக்கு 
உம்மை நினைக்க நேரமில்லை.
மக்கள் பாவலர் 
உமக்குத் தெரியும்.

ஆர்ப்பாட்டமில்லாத கவிஞன் நீர்.
அமைதியாகவே  சென்று விட்டீர்.

மனுஷங்க  மனுஷங்களாய் 
மதிக்கப்படாத வரை 
நீவிர் வாழ்வீர்.

அஞ்சலி