24.9.12

அன்பின் வன்முறை ....

இஸ்லாமியர்களின் ஒட்டு மொத்தக் குரல் உலகம் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய ஒரு வாரத்திற்கு மேலாகியும் அது குறைவதாய்த் தெரியவில்லை. அநேகமாக இன்னும் அதிகமாகலாம்.

அமெரிக்காவைச் சேர்ந்த முறையான அடையாளம் இல்லாத ஓர் அமெரிக்க யூதர் இஸ்லாமியர்களின் மீது மிகுந்த வெறியோடு, எந்தவிதமான அடிப்படைத் தரவுகளுமின்றி மிக மோசமான ஒரு குறும் படத்தை இயக்கப் போக உலகமெங்கும் இருக்கிற இஸ்லாமியர்கள் ஒட்டு மொத்தமாக அமெரிக்காவிற்கு எதிராகத் திரும்பியிருக்கிறார்கள். 

லிபியாவில் அமெரிக்க தூதர் கொல்லப் பட்டதாகவும் அவரோடு இணைந்து மேலும் இருவரும், பாகிஸ்தானில் இதுவரை பத்தொன்பது நபர்களும் கொல்லப்  பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் பாகிஸ்தானில் கொல்லப்பட்டவர்கள் அமெரிக்கர்கள் இல்லை - அவர்களும் பாகிஸ்தானியர்கள் என்றே நினைக்கிறேன்.

இதோடு இணைந்து இந்த சமயத்தில் பிரெஞ்சு பத்திரிகை ஒன்று நபிகளின் கார்ட்டூன் ஒன்று வெளியிட இந்தப் பிரச்சனை இன்னும் அதிகமாகிறது. மத சம்மந்தப் பட்ட கோட்பாடுகளில் கைய வைக்கிற யாரும் மிகக் கவனமாய் இருக்க வேண்டியது அவசியம். ஒரு தீப் பொறி ஒரு காட்டை அழிக்கும் வல்லமை படைத்தது என்பதை இந்த நிகழ்வு சுட்டிக் காட்டுகிறது. அமெரிக்கர்கள் கிறித்தவக் கடவுளைக் கிண்டலித்து பழகிப் போனவர்கள். இப்போது அவர்களின் கோபம் இஸ்லாமியர்கள் பக்கம் திரும்பியிருக்கின்றது. இதை அவர்கள் கருத்துச் சுதந்திரம் என்று நியாயப் படுத்தலாம். ஆனால் இது அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்ளப் படாது. ஏற்றுக் கொள்ளவும் முடியாது.

உலகின் எல்லா நாடுகளும் ஒருங்கே அமெரிக்காவின் கருத்துச் சுதந்திரம் என்கிற கோட்பாட்டை அவர்கள் பாணியில் யாரும் புரிந்து கொள்ள முடியாது. அப்படி எல்லாரும் அதே விதமாகத்தான் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஏற்றுக் கொண்டதாகத் தான் அது இருக்கும். 

ஒரு மனிதனின் தவறான கருத்தை கடுமையாக எதிர்க்க வேண்டியது அவசியம்தான். ஆனால் அதற்காக வன்முறை எதிப்பை ஒரு போதும் நியாயப் படுத்த முடியாது.  

அடிப்படையில் எல்லாம் சமயங்களும் 
அன்பைப் போதிப்பவைகளாகவே இருக்கின்றன. 
ஆனால், அதில் இருக்கும் உறுப்பினர்கள்
தாங்கள் போதிக்கும் அன்பே உயர்ந்தது என்று சண்டையிடப் போய் 
அவர்கள் அனைவரும் 
தாங்கள் போதிக்கும் அன்பிற்கு எதிரானவர்களாகவே ஆகி விடுகின்றனர். ஆனால் இதை அவர்கள் உணராமல் இருப்பதுதான் 
பிரச்சனையின்  ஆணிவேரே.

கொசுறு:

இன்னொசென்ஸ் ஆப் முஸ்லீம்ஸ் - முழு ஸ்கிரிப்ட் - சொடுக்கவும்.