28.11.11

அது என்ன 999 ?


டேம் பற்றிய படம் - பற்றிய தடை சரியில்லை என்று சொன்ன போது, கேரளா உள் குத்தோடும், நடக்கிறது என்று எழுதியதற்கு - புது அணை கட்டுவதில் தப்பென்ன என்று கேட்டார்கள்.

அதற்கு முன்பு - இந்தப் படம் முல்லைப் பெரியாறு அணை பற்றிய படம் இல்லை என்று சொன்னார்கள். ஆனால் இந்த 999 என்பது சில உள் குத்தோடு எடுக்கப்பட்டது என்று சொன்னோம். இந்த எண் முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்த வருடங்களைக் குறிக்கிற எண்.

சின்ன விளக்கம் - நீங்கள் யாரிடமோ அல்லது உங்களிடம் யாரோ சில ஆண்டுக்கான ஒப்பந்தத்தை போடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். குறிப்பிட்ட காலம் முடியும் முன்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதென்றால், சட்டச் சிக்கல்கள் வரும். அல்லது நீங்கள் போட்ட ஒப்பந்தத்தை நீங்களே முடித்துக் கொள்வதாக அறிவித்தால் அதற்காக நீங்கள் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.

தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது ஆண்டுகளுக்குப் போடப்பட்ட ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள ஏறக்குறைய இன்னும் எண்ணூறு ஆண்டுகளாவது கேரளா அரசு காத்திருக்க வேண்டும். அதற்கு நஷ்ட ஈடு கொடுக்கவும் கூடாது அதே சமயம் ஒப்பந்தத்தையும் முறிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்.... அணை வலு இழந்து விட்டது.... மக்கள் பீதி... என்கிற ஒன்றில்தான் அதைச் சாதிக்க முடியும். அதைத் தான் அவர்கள் செய்கிறார்கள்.

வரலாற்றில் சில பிழைகள், மிகப் பெரிய சிக்கல்களாக எதிர் காலச் சந்ததியினருக்கு மாறிப் போகும் வாய்ப்புகள் நிறைய உண்டு. அப்படி ஒன்றுதான் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை. அதாவது இப்போது அணை கட்டப் பட்டிருக்கிற இடம் திருவாங்குருக்குச் சொந்தமானது என்று நினைத்து தவறாக நூற்றி முப்பது ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தத்தில், வருடா வருடம் ஒப்பந்தப் பணம் வாங்கிக் கொண்டிருக்கிறது கேரளா. இதை மீறும் வகையில் இடுக்கியில் ஒரு அணை வேறு கட்டியது. அதற்கான நீர் வரத்து இல்லாத காரணத்தால் இந்த புளுகைக் கிளப்பி விடுகிறது.

வீணாய்க் கடலில் கலக்கும் ஆற்றை தமிழகம் பகுதியில் திருப்பிவிட ஒரு அணை கட்டப்படவும், அதற்கு சரியான இடம் தேடும் பணியில் இப்போது அணை கட்டப்பட்டிருக்கும் இடத்தையும் தேர்ந்தெடுத்து ஒப்பந்தப் பணம் கட்டி... அணையைப் பராமரித்து வரும் தமிழகம் ... இடையில் இவர்கள் சொன்ன புளுகிற்காக மேலும் பனிரெண்டு கோடிகளுக்கு மேல் செலவழித்தது. இறுதியாக முடியவேண்டிய ஒரு வேலையை செய்ய விடாமல் கேரள காட்டு அதிகாரிகள் - தப்பா எடுத்துக் கொள்ளாதீர்கள் பாரஸ்ட் ஆபிசர்ஸ் - வழக்கு போட்டு சிலரை மானபங்கப் படுத்தவும் செய்ததார்கள். இந்த ஒப்பந்தம் மற்றும் அணையை ஒன்றுமில்லாமல் செய்தால்தான் அவர்களுக்கு இடுக்கியிலோ அல்லது அவர்கள் புதிதாய்க் கட்டும் அனையிலிருந்தோ மின்சார உற்பத்தியைத் தொடங்க முடியும். இதைத் தான் நான் சகுனி வேலை என்று கடந்த பதிவில் குறிப்பிட்டேன்.

இப்படித் தவாறாக திருவாங்கூர் சமஸ்தானத்த்திற்கு சொந்தமான பகுதி என்று நினைத்ததுப் போடப் பட்ட ஒப்பந்த்தம் அதன் பிழையில்தான் அதிகமாக தமிழர்கள் வசித்த அந்தப் பகுதிகள் எல்லாம் சுதந்திரம் பெற்ற போது கேரளாவிற்குச் சென்றது. அந்த ஒப்பந்தம் தவறு என்று அவர்கள் சொல்வார்களேயானால், அந்தப் பகுதிகள் எல்லாம் பிறகு தமிழர்களின் பகுதி என்றாகிவிடும். எனவே ஒப்பந்தம் தவறு என்று அவர்கள் சொல்ல முடியாது. அதனால் ஒரே வழி இந்த ஆணை வலுவிழந்தது என்று சொல்வதுதான் அதைத் தான் அவர்கள் செய்கிறார்கள்.

உண்மை நிலவரம் அறிய - மற்றும் முழு வரலாற்றை அறிய பின்வரும் கானொளியில் பாருங்கள்.
இதை அறியத்தந்த நண்பர் பூபதி பெருமாள் [கடந்த பதிவில் பின்னூட்டத்தில்] மற்றும் வீரா இளவரசு அவர்களுக்கு நன்றி.The Mullai Periyar DAM Problem from Veera Elavarasu on Vimeo.

கொசுறு

கூடங்குளம் வெடித்தால் என்ன ஆகும் என்று யாராவது படம் எடுத்தால் நன்றாக இருக்கும். 
ஏனெனில் உண்மை பேசும் டாகுமெண்டரி மற்றும் போராட்டங்களை விட இப்படி சென்சேஷனல் படங்கள்தான் விளைவை ஏற்படுத்துகின்றது.... ஒருவேளை அப்படி கூடங்குளம் பற்றி எடுத்தால்
ஹாலிவுட் கனக்ஷன் இருந்தால் நல்லது. 
ஆனால் அதற்கு கேரளா உதவி செய்யுமா?

25.11.11

அணை பற்றிய படத்திற்கான தடை சரியா?

உடையும் அணை பற்றி ஊரே பற்றி எரிகிற மாதிரி விவாதம். கலைஞர் முதற்கொண்டு எல்லாரும் இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என்று மாற்றி மாற்றி அறிக்கை விடுகிறார்கள். தமிழக முதல்வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையைக் காட்டி தடை செய்திருக்கிறார். இதுபோன்ற படங்களுக்கான எதிர்வினை ஆற்ற வேண்டியது அல்லது எதிர்ப்பைக் காட்ட வேண்டியது அவசியம்தான் - ஆனால் தடை செய்து எதிர்ப்பைக் காட்டுவது சரியானது அல்ல என்பதனால் மட்டுமல்ல - இந்தத் தடையோடு நம் அரசியல்வாதிகள் முல்லைப் பெரியாரைப் பற்றி மறந்து போவார்களே என்பதனாலும்தான்.

*     *      *      *      *      *      *     *     *     *    *     *     *

முல்லைப் பெரியாறு அணை விவாகரம் என்பது பற்றி விரிவாக எழுத தனிப் பதிவோ அல்லது தொடர் பதிவோ அவசியம் என்பதனால் இதில் அதைப் பற்றி எதுவும் எழுதப் போவது இல்லைஅது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா சுய நல நோக்கத்தோடு இதுவரை இருந்திருக்கிறது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. இப்போது வரை அது தங்களது தனிப்பட்ட விருப்பத்தை, மற்றும் உள் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே பலப் பல வழிகளில் முயல்கிறது முயலும் என்பதையும் யாம் அறிவோம்.
அது ஒருக்காலும் நீதிமன்றத்தின் தீர்ப்புகளைக் கவனித்தது இல்லை என்பதோடு அருகில் உள்ள தமிழகத்தின் நலன் கருதி எல்லாம் அது சிந்தித்ததும் இல்லை என்பதையும் பதிவு செய்து கொள்கிறேன்.
  
   *     *     *     *     *     *     *      *     *     *    *     *     *

இந்தத் திரைப் படம் உள் நோக்கத்தோடு எடுக்கப் பட்டிருந்தாலும், அல்லது கேரள அரசு ஆசிரோடே இந்தப் படம் எடுக்கப் பட்டிருந்தாலும், இந்த ராய் தனது கடின உழைப்பினால் மட்டுமே ஹாலிவுட் வரை சென்று வார்னர் சகோதரர்களைப் பார்த்து தயாரித்தார்  என்பது பொய்யாகவே இருந்தாலும் - டேம் 999  தடை செய்வது தவறு மற்றும் நியாயமற்றது என்று தோன்றுகிறது. ஏன்? ஒரு திரைப் படம் மற்றும் கருத்துச் சுதந்திரம் என்கிற விதத்தில் மட்டும் இந்த விஷயத்தை அணுக வேண்டிய அவசியம் என்பதில் இந்தத் தடை நியாயமற்றது.
டா வின்சி கோட் என்கிற ஒரு படம் வந்தபோது கிறித்தவ நண்பர்கள் எல்லாம் சேர்ந்து அந்தப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோரினார்கள். சில சிறப்புக் காட்சிகள் வெளியிட்டு பார்த்தார்கள் - என்ன நடந்தது அந்தப் படமும் அந்தப் புத்தகமும் இன்னும் பிரபலமானது. இந்தப் படத்திற்கான இவ்வளவு பெரிய பிரச்சாரம் தேவையா?

டேம் தொள்ளாயிரத்து தொண்ணுற்றி ஒன்பது [என்ன நம்பர் அது - இதற்குப் பின்னால்தான் கேரள அரசின் மற்றும் இயக்குனரின் சகுனித்தனம் ஒளிந்திருக்கிறது] என்ற படம் ஏதோ ஒரு ராயால் எடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு வார்னர் சகோதரர்கள் பணம் பட்டுவாடா செய்திருக்கிறார்கள். எனவே ஹாலிவுட் தரம் என்று சொல்லப் படுகிறது.

கருத்துச் சுதந்திரம் மதிக்கப் படவேண்டும் என்று குரல் எழுப்பும் யாரும் இந்தப் படத்தை தடை செய்வதற்கான நியாயமான காரணத்தை முன்வைக்க முடியுமா என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. இது வெறும் பயத்தை, பீதியைக் கிளப்புகிற முயற்சி என்று சொன்னாலும் கூட - அதற்காக ஒரு படத்தைத் தடை செய்ய முடியுமா... தடை என்பதை விட்டுவிட்டு -- அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டுமல்லவா...

பின் எதற்காக இந்த அரசியல்வாதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்தது தடை கோருகிறார்கள்.? இந்தப் பிரச்சனையைப் பற்றி ஏதாவது செய்ய வேண்டும். எனவே தடை செய் என்கிறார்கள். இதையே கேரள முதல்வர் கிராபிக்ஸ் செய்து தனது வலைப் பக்கத்தில் போட்டபோது தமிழக அரசின் மற்றும் அரசியல் வாதிகளின் செயல்பாடு எப்படி இருந்தது? வை.கோ வைத் தவிர வேறு யாரும் எதுவும் பேசினார்களா - என்ன செய்ய முடிந்தது. தங்களது எண்ணத்தை, நிறைவேற்ற பரவலாக்க, இன்னும் பரவலாக்கவும், ஒட்டு மொத்த கேரளாவும் - கட்சி வேறுபாடு இன்றி - முடிவு செய்கிறார்கள்.

தடை செய்யச் சொல்லி போராட்டம் நடத்தி விட்டால் இந்த விடயத்தில் தமிழக அரசியல்வாதிகள் தன் பங்கிற்கான கடமை முடிந்து விட்டது என்று சொல்லி மீண்டும் இந்த விஷயத்தை நீதி மன்றத்தின் பார்வைக்கு விடலாம். நாம் அமைதியாய் இருப்போம். அப்புறம் அவர்கள் நீதி மன்றத்தின் கருத்துக்களை சட்டை செய்யாமல் வேறு ஏதாவது செய்வார்கள்... அப்போதெல்லாம் நாம் கட்சி சண்டை போட்டுக் கொண்டு பேசாமல் இருப்போம்.

எது எப்படி இருந்தாலும் வெறும் கோஷங்கள் போடுவதால், அல்லது தடை செய்வதுதான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்றி விட்டு அப்புறம் அந்தத் தீர்மானங்களை குப்பையில் போடுவதை விட்டு விட்டு கருத்துச் சுதந்திரத்தை மதிக்கிறோம் என்கிற [பேருக்காவது] அளவிலாவது நாம் இருக்க வேண்டியது அவசியம். அவரால் ஒன்றை மிக்ஸ் செய்ய முடிகிறது என்றால், நீங்கள் கேரளா பற்றி ஏதாவது மிக்ஸ் செய்ய ஹாலிவுட்டுக்கு ஆள் அனுப்புங்கள் - அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்... நமக்குள் அடித்துக் கொள்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது...

கேரளா சகோதரர்கள் எங்கே இருந்தாலும் கேரள அரசின் மற்றும் தங்களது நலனை மட்டுமே முன்னிறுத்தும் விதத்தைக் நாம் கற்றுக் கொண்டாலே போதும் - இங்கே தமிழர் நலனை அழிப்பதற்கென்றே தமிழக அரசும். மத்திய அரசும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது - இதில் இந்த DAMN dam 999  அதைவிடப் பெரியதாய் என்ன செய்து விடப் போகிறது?


கொசுறு? 1 
கேட்பாரா நாராயணசாமி?
யார் இந்த ராய் - ஹாலிவுட்டில் படம் எடுக்கும் அளவுக்கு எப்படி உயர்ந்தார்? கேரளா அரசின் உதவியில்லாமல் இப்படிப் படம் எடுக்க முடியுமா?  கணக்கு வழக்கு வைத்திருக்கிறாயா என்று அவரிடம் நாராயணசாமி கேட்பாரா? .... கேட்டாத் தெரியும் எல்லா நாயரும் சேர்ந்தே அடிப்பாங்க.

கொசுறு 2 
படிப்பினை - பிளவை ஏற்படுத்துமா?
எத்தனைக் கேரளா சகோதரர்கள் தமிழ் நாட்டிலேயே வளர்ந்து வாழ்ந்து தமிழர்களின் உணர்வுகளோடு இருக்கிறார்கள்? எத்தனை ஆண்டுகள் இங்கே வாழ்ந்தாலும், தங்களது பூர்விக சொத்தும், மனதும் எப்போதும் கேரளா விடம் மட்டும் தான் அவர்களுக்கு இருக்கும். இதை தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், என்றைக்காவது இங்கேயே வாழும் அந்தச் சகோதரர்கள் தமிழர் நலுனுக்காக குரல் கொடுத்தது உண்டா... இந்தியப் பிரஜை என்பதற்காக அல்ல, நாம் இங்கேதானே வசிக்கிறோம் அந்த நல்லெண்ணத்தின் அடிப்பைடயில் என்பதற்காக அல்ல, குறைந்த பட்சம் மனிதாபிமான அடிப்படையிலாவது.... ஏற்கனவே அவர்கள் பிளந்துதானே இருக்கிறார்கள் அப்புறம் என்ன பெரிதாய் இந்தப் படம் வந்து பிளவை ஏற்படுத்தப் போகிறது. அப்புறம் எதுக்குப் பயப்படனும்?

கொசுறு 3 
அதுமட்டுமல்ல இந்த நாட்டில் வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிற பாட புத்தகங்கள் இன்னும் தடை செய்யப் படாமல் இருக்கிறது. அடிமைத்தன எண்ணங்களை விதைக்கிற படங்கள், முயற்சிகள், நபர்கள், கொஞ்சம் கொஞ்சமாய் மக்களின் என்னத்திற்குள் தங்கள் ஜாதிய வெறியை நிலை நிறுத்தும் மற்றும் நியாயப் படுத்தும் படங்கள், புத்தகங்கள் - நாளிதழ்கள் --- இன்ன பிற இத்யாதி இத்தியாதிகளை எல்லாம் தடை செய்ய வேண்டியிருக்கிறது.   
தினமலரும்தான் பிரிவினை மற்றும் பிளவை உண்டு பண்ணும் விதத்தில் தினம் செய்தியை வெளியிடுகிறது - அண்மையில் கூட ஒரு மரண தண்டனை கொடுக்கப்பட்டதற்காக தமிழ் ஆர்வலர்கள் கேரளா அரசுக்கு எதிராக எழ வேண்டாமா என்று கேட்டது.....அதற்காக யாராவது அதைத் தடை செய்ய வேண்டுமெண்டு குரல் கொடுக்கிறார்களா என்ன...?


21.11.11

நேர்மை + எளிமை = கலாம் ! ?


நேர்மை + எளிமை = கலாம் ! ?        
                           -    அ. பிரபாகரன் 
அப்துல் கலாம் குறித்து எனக்கு எப்போதுமே பெரிய ஈடுபாடு இருந்தது இல்லை. உங்களில் சிலருக்கு அவர் ஆதர்சமாக இருக்கலாம். ஆனால் எனக்கு இல்லை. எனக்கு எப்போதுமே மனிதர்கள் அதீதமாக சிலாகிக்கப்படுவதில் உடன்பாடு இருந்ததில்லை. அதனால்தானோ என்னவோ எனக்கென்று பிடித்த தலைவர் என்றோ, நடிகர் என்றோ, கட்சி என்றோ யாரும் இல்லை. எல்லா மனிதர்களுமே குறைகளோடும் நிறைகளோடும் வாழ்ந்து செல்கிறார்கள். சிலர் தம் குறைகளை நேர்மையான விதத்தில் அணுகுவதாலேயே உயர்ந்து நிற்கின்றார்கள்

அப்துல் கலாம் சில மாதங்களுக்கு முன் எம் கல்லூரியில் விழா ஒன்றிற்கு வந்தார். அவர் வருகை குறித்து எங்கள் நிறுவனம் மிகவும் பரபரப்பாயிருந்தது. பல முன்னேற்பாடுகள் நடந்தன. அவர் வருவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பே அவரது பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் வந்து பார்த்து சென்றார்கள். அவர் வருவதற்கு சில மணி நேரங்கள் முன்பிருந்தே மெட்டல் டிடெக்டர்களோடும், பயமுறுத்தும் மோப்ப நாயோடும் வந்து நின்று எல்லோரையும் சோதித்துக் கொண்டிருந்தனர். அவர் உரை நிகழ்த்தப்பட்ட அரங்கின் வாயிலில் தற்காலிக சோதனை வாயில்கள் அமைத்து, உடல் முழுவதையும் தடவிப் பார்த்து அனுப்பினர். முழுவதும் நிரம்பியிருந்த அரங்கத்தில் அங்கு பயிற்றுவிக்கும் எங்கள் எல்லோருக்கும் முதல் வரிசை ஒதுக்கப்பட்டிருந்தது.
நான் ஏதோ ஒரு விதத்தில் கொஞ்சம் பரபரப்பும், நிறைய அலட்சியமுமாக அமர்ந்திருந்தேன். குறித்த நேரத்திற்கு கொஞ்சமும் தவறாமல் இந்திய நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் வந்தார். மேடையில் ஏறியவுடனேயே தனக்கென்று தனியாகப் போடப்பட்டிருந்த வி. . பி. நாற்காலியை கோபத்துடன் பார்த்து அதை அப்புறப்படுத்தச் சொன்னார். மேடையில் மற்றவர்களுக்குப் போடப்பட்டிருந்த சாதாரண நாற்காலி கொண்டுவரப்பட்டது. எல்லோரும் அதிசயித்தார்கள் 'எவ்வளவு எளிமையாய் இருக்கிறார்' என்று. எனக்கு இதில் ஆச்சர்யப் படுவதற்கு ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. நான் இப்படிப்பட்ட gimmick களை வியப்போடு பார்ப்பதில்லை
காரணம், சமூகத்தில் உங்களது அந்தஸ்து உயர உயர உங்களது எளிமை பாராட்டப்படும். காரணம் காலப்போக்கில் அதுவே உங்களது ஆளுமையின் மூலதனமாகிவிடும். சமூக அடுக்கின் கீழ்நிலையில் உள்ளவனின் எளிமை தரித்திரமாகப் பார்க்கப்படும்
 காந்தியின் வெற்றுடும்பு ஆராதிக்கப் படுவதும், ஒரு தலித்தின் வெற்றுடம்பு கேவலப்படுத்தப் படுவதும் இச் சமூகத்தின் அருவருப்பான நகை முரண்களில் ஒன்று.

கலாமின் ஆளுமை குறித்து ஏதோ ஒரு விதத்தில் விமர்சன மனநிலையோடு உட்கார்ந்திருந்த என்னை அவரது பேச்சு ஈர்த்தது. அன்று அவர் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு பற்றிப் பேசினார். ஏறத்தாழ ஒருமணிநேரம் நிகழ்த்தப்பட்ட உரையில் நான் முழுவதுமாக மூழ்கிப் போனேன். நான் என் வாழ்க்கையில் மிகவும் ஈடுபாட்டோடு கவனித்த உரைகளில் ஒன்றாக அது அமைந்தது. பிறகு யோசித்துப் பார்த்தபோதுதான் உண்மை புலப்பட்டது.

அவரது உரையின் ஈர்ப்புக்குக் காரணம் அதில் அடிப்படையான நேர்மை இருந்தது. வெறுமனே கோசங்களாக அமையாமல் அவரது நம்பிக்கைகளின் வெளிப்பாடாக அவரது பேச்சு இருந்தது. பலருக்கும் அவரது உரை பிடித்திருந்தாலும் எனக்கு அதில் ஈர்ப்பு ஏற்பட்டது இப்போதும் வியப்புதான். பிறகு விழா இறுதியில் அவரோடு குழுவாக புகைப்படம் எடுக்க அவரருகில் வந்தபோது புன்னகைத்தார். அதுவும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
இப்போது அந்த கலாம் கடந்த வாரம் கூடங்குளம் சென்று அதே போன்ற ஓர் உரையைப் பத்திரிகையாளர்கள் முன்பு செய்திருக்கிறார். அதற்கு கண்டனங்களும் ஆதரவுக் குரல்களும் மாறி மாறி வந்து கொண்டேயிருக்கின்றன.
கூடங்குளம் பற்றி நான் பேசப்போவதில்லை. அதுகுறித்த உள் விவகாரங்களில் நான் சென்று விவாதிக்கிற அளவுக்கு எனக்கு விபரமில்லை. அதை மக்கள் மேல் உண்மையிலேயே அக்கறையுள்ள நிபுணர்களுக்கு விட்டுவிடுவோம். இப்போது நான் சொல்ல வந்தது கலாமின் கருத்து பற்றி
 கலாம் சொன்ன கருத்துகளில் எனக்கு கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை. காரணம் ஏனென்று (16 . 11 11 ) தினமணியில் வந்திருந்த நெடுமாறனின் கடிதத்தையும், கடந்த வாரம் கல்கியில் வந்திருந்த ஞாநியின் கடிதத்தையும் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். இருப்பினும் கலாமின் இந்தப் பேட்டியிலும்கூட ஒரு நேர்மை இருப்பதாக உணர்கிறேன். கருணாநிதியும் ஜெயலலிதாவும் இந்தக் கருத்து உள்ளவர்கள்தான். ஆனால் சொல்ல மாட்டார்கள். கலாம் நேர்மையாகத் தன கருத்தைச் சொல்லியிருக்கிறார். ஆனால், அவரைச்சொல்லவைத்தவர்கள் நேர்மையில்லாதவர்கள். அடிப்படையில் நாணயமோ மக்கள் கரிசனையோ இல்லாதவர்கள். தாங்கள் சொல்லும் ஒரு கருத்தை இப்படி அடிப்படை நாணயமில்லாமல் மக்கள் மத்தியில் பிரபலமான பிம்பங்களைக்கொண்டு சொல்ல வைப்பது ஜனநாயகத்தில் அபத்தமானதும் ஆபத்தானதுமாகும். கலாம் போன்ற பிம்பங்கள் இதற்குதான் பயன் படுத்தப்படுகிறார்கள்.
மத்திய அமைச்சர் நாராயணசாமி (அவரது முகத்தை தொலைக்காட்சியில் பாரத்தால் ........................  என்னால் தவிர்க்க முடியவில்லை) காரசாரமாகப் பேட்டி கொடுக்கிறார். கொஞ்சம்கூட நேர்மையற்றதாகவும் அருவருப்பானதாகவும் இருக்கிறது அவரது பேட்டி. இந்திய ஜனநாயகம் எவ்வளவு பாரபட்சமானது என்பதைச் சொல்லுவதாக அவரது பேட்டி அமைகிறது. கூடங்குளம் போராட்டத்தின் பின்னணியில் உள்ளவர்களின் கணக்கு வழக்கை ஆராயவேண்டும் என்கிறார். இப்படிப் பேட்டி கொடுக்கின்ற அந்த நொடியில் அவரது கணக்கு வழக்கை ஆராய்ந்தால் ஒரு அரசியல்வாதியான அவரிடம் எவ்வளவு பொய்கள் இருக்கும்! ஆனால் அதிகாரம் தந்த கொழுப்பிலும் இந்திய ஜனநாயகத்தின் பாரபட்ச அமைப்பிலும் நம்பிக்கைகொண்டு எந்த லஜ்ஜையுமின்றி திராணியோடு பேசுகிறார்.
கூடங்குளத்தை எதிர்ப்பவர்களின் கணக்கைதோண்டுவதைபோலவே ஆதரிப்பவர்களின் கணக்கையும் தோண்டுவோமா? எல்லா காங்கிரஸ்காரர்களின் வருமானவரியையும் கொண்டு வாருங்கள். பாப்போம்.

என்னைப் பொறுத்தவரையில் கூடங்குளத்தின் நியாயம் எளிமையானது.
அது நம் நாட்டின் ஜனநாயகம் சம்பந்தப்பட்டது.
இந்தப் பிரச்சினையை நாம் ஒரு ஜனநாயகப் பிரச்சினையாக அணுகவேண்டும்.
அணுமின்நிலையம் வேண்டுமா, வேண்டாமா என்பது ஒரு புறம் இருக்க, இதைப் பத்து லட்சம் (சொல்லப் போனால் 17 லட்சம்) மக்களின் ஜனநாயகப் பிரச்சினையாகவும், வாழ்க்கைப் பிரச்சினையாகவும் பார்க்கவேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில் பத்து லட்சம் மக்கள் உரேனியம் பயத்தோடே அன்றாடம் தூங்கி எழுந்து, பல் துலக்கி, கடலுக்கும், வயலுக்கும் இன்ன பிற காரியங்களுக்கும் சென்று வந்து வாழ வேண்டுமென்பது எவ்வளவு கொடுமை. இந்தப் பயமெல்லாம் தேவையற்றது என்று அணுமின்நிலையத்தை ஆதரிப்பவர்கள் சொல்லக்கூடும்.ஆனால், பெரும்பான்மையினர் அங்கு அப்படிதானே நினைக்கிறார்கள்.
அவர்களெல்லாம் முட்டாள்கள் அறியாமையினால் சொல்கிறார்கள் என்று நீங்கள் வாதிட்டீர்களேன்றால் அது முடியாது. பெரும்பான்மையினர் குரலை நீங்கள் மதிக்கத்தான் வேண்டும். ஜனநாயகம் என்பதே நம் நாட்டில் பெரும்பான்மை வாதம்தான். இந்தப்பெரும்பான்மையினரின் அறியாமையினால்தானே நாரயணசாமி போன்ற .... களெல்லாம் ஜெயித்து அமைச்சராகி பேட்டி எல்லாம் கொடுக்க முடிகிறது. கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த், இலங்கை கொலைப் புகழ் சோனியா, பேடி எல்லாம் அதிகாரத்தை சுவைக்க முடிகிறது. அப்போது மட்டும் பெரும்பான்யினரின் அறியாமை இனிக்கிறது, இப்போது கசக்கிறதா?
பி. கு. இப்படியெல்லாம் நான் சொல்லுவதால் அணு எதிர்ப்புக்கு வலு சேர்க்க வேறு கருத்து இல்லையென்று தவறாகப் புரியாதீர்கள்.
                                         - அ. பிரபாகரன்
அப்துல்கலாமைப் பார்க்கச் சென்ற உங்களைத் தடவிப் பார்த்தார்கள். அமேரிக்கா சென்ற அப்துல்கலாமை அங்கே தடவிப் பார்த்தார்களாம்ல...