சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

4.7.15

காக்கா முட்டை


காக்கா முட்டை  சென்னை ஒரு சேரியில் வாழும் இரண்டு குட்டிப் பையன்களின் கதை. அதில் அம்மக்களின் அன்றாட வாழ்க்கையின் உண்மையான நிலையையும் , வாழ்க்கையின் தேடலையும் சேர்த்து மிக நுண்ணியமாய் படமாக்கி உள்ளார் இயக்குனர். 

இரண்டு மணி நேரம் படம் பார்த்து முடித்தவுடன் நமக்கு அவர்களோடு வாழ்ந்த அனுபவம் ஏற்படுகிறது. எத்தனை முறை நாம் அச்சேரிகளுக்கு அருகில் பயணித்து இருந்தாலும் ஏன் இப்படிப்பட்ட நகரத்தைப் பார்க்காமலே இருந்திருக்கிறோம் என்று நம் மேல் ஒரு கோபம் ஏற்படுகிறது. என்ன மனிதர்கள் நாம்? சுற்றி என்ன இருக்கிறது? என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய பிரக்ஜை இல்லாமல் எப்படி நம்மால் இருக்க முடிகிறது?

அப்படியே அந்த சேரியைப் பார்த்திருந்தாலோ அல்லது வழி தெரியாமல் சேரிக்குள் நுழைந்திருந்தாலும், நாம் ஏன் இவர்களைப் பார்த்து முகம் சுளித்திருக்கிறோம் என்று நினைவுகள் வேகமாய் வந்து நம்மை விசனப்படவும் வைக்கும். சின்ன காக்காமுட்டை, பெரிய காக்காமுட்டை, அம்மா, பாட்டி, பழரசம், காயலான்கடை மக்கள் என்று ஒவ்வொரு கதா பாத்திரத்தையும் எதார்த்தத்தோடு படம் பிடித்திருக்கிறார்.

காக்கை முட்டை என்கிற வார்த்தையை முதலில் கேட்டால் சிலருக்கு சிரிப்பு வரும். சிரிப்பு - அனுபவங்களின் நினைவில், நானும் அதை உண்டிருக்கிறேன் என்பதனால் சிரிப்பு வரும் அல்லது உண்டவர்களோடு கூட இருந்த அனுபவமாவது அந்தப் புன்னகைக்கு காரணமாக இருக்கும். ஆனால் பலருக்கு அந்த வார்த்தையைக் கேட்டவுடன் முகம் சுளிக்கத் தோன்றும். அதெல்லாம் தொடக்கூடாது அசிங்கம் என்பதனால் முகம் சுளிக்கலாம். முகம் சுளிக்கும் அதில் பலர், உண்பதற்கு பணம் உள்ளவர்களாக இருப்பார்கள் என்பதுதான் உண்மையாக இருக்கும். இருக்கப்பட்டவன் ஏன் சமுதாயத்தில் நல்லதென கொண்டாடப்படாததை எல்லாரும் பார்க்கும்படி உண்ணப் போகிறான்.

காக்கை முட்டை காசில்லாதவர்களின் புரதச்சொத்து. அதை மிகவும் எதார்த்தத்தோடு அனுகியிருப்பதில்தான் இயக்குனரின் வாழ்க்கை அனுபவமும், ஒரு விஷயத்தை எப்படி கலை நயத்தோடு அணுகவேண்டும் என்கிற கலை அனுபவமும் ஒரு சேர இருக்கின்றது.

இது விவேக்கின் காக்கா பிரியாணி காமெடி போல இல்லை. இதில் இருக்கும் காமெடிகள் மிக இயல்பானவைகள். இதில் மிகக் குறைந்தது மூன்று இடங்களிலாவது சிரிக்கவில்லைஎன்றால் அந்த உம்மானா மூஞ்சியை யார் வந்தாலும் சிரிக்க வைக்க முடியாது என்றே பொருள். இடைவேளைக்குப் பின் சிறிதே இழுத்தாலும் அந்தப் பையன்கள் அதை வேகமாய் நகர்த்துகிறார்கள்.

===

இது படம் பார்த்தவுடன் எழுதி வைத்தது. இன்னும் முடிக்கக் கூட முடியவில்லை. நீண்ட நாட்கள் அதை பதிவேற்றம் செய்யாமலே வைத்திருக்க மனமில்லை... எனவே பாதியானாலும் பரவாயில்லை  பதிவேற்றியாயிற்று .

===



12.2.15

‘தான்’உஷ்ஷ்ஷ் ‘அமி’‘தாப்’ - SHAMITHAB

‘தான்’உஷ்ஷ்ஷ் ‘அமி’‘தாப்’

மிகக் குறைந்த நேர இடைவெளியில் இரண்டு திரைப்படங்கள் ஒரு சேரப் பார்ப்பது, பல வருடங்களுக்குப் பிறகு, இப்போதுதான். இசைக்குப் பிறகு ஷமிதாப். ஒரு சேரப்பார்த்ததாலோ என்னவோ இரண்டுக்கும் இடையில் இடைவெளியே இல்லாதது போலவே இருந்தது. என்ன ஒன்று தமிழ் மற்றது இந்தி.

இசையில், சத்யராஜ் இளையராஜாவின் பிரதியோ என்ற சந்தேகத்தைப் பார்வையாளர்கள் மத்தியில் விதைத்தது. அது உண்மையோ பொய்யோ எனக்குத் தெரியாது. தன் போக்கில் தான் இன்னும் இளையராஜா ராஜாவாகவே இருக்கிறார் என்பதை ஷமிதாப் சொல்லுகிறது. ஷமிதாப்பில் துப்பும் இசையெல்லாம் இல்லை, துள்ளும் இசைதான். இசைஞானியின் இசை பிரமாண்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

சூர்யாவின் இசை என்கிற திரைப்படம் ஈகோ – வை மையப்படுத்திய படம் என்றால் பால்கியின் ஷமிதாப்பும் ஈகோவை மையப்படுத்திய படம்தான். ஆனால் இரண்டு படங்களின் ஈகோவிற்கும் நிறைய வேற்றுமை. இசையில் அதில் சினிமாத்தனம் நிறைய புகுத்தப்பட்டிருக்கிறது. ஷமிதாப்பில் அது ரியலிஸ்ட்டிக்காக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சினிமாத்தனத்திற்குள்ளும் ரியலிஸம். இன்னும் மிகச் சிறப்பாக இருந்திருக்கலாம் என்பது என் எண்ணமாக இருந்தாலும் இதுவும் நன்றாகவே இருந்தது. முந்தைய ஈகோ பழையவனில் இருந்து உருவாகிறது. பிந்தையதில் தோல்வியுற்றவன் வெற்றிபெருபவன் இருவரிடமிருந்தும் உதிக்கிறது.

இசையிலும் நடிகர்கள் எண்ணிக்கை குறைவு. இதிலும்தான். இரண்டு ஆண்கள் ஒரு பெண் என்று மூவரைச் சுற்றி நடக்கும் இசையைப் போலவே, ஷமிதாப்பிலும் இரண்டு ஆண்கள் ஒரு பெண் என்று நகர்கிறது படம். இசையின் கனவு இசை என்றால், ஷமிதாப்பின் கனவு நடிப்பு. கனவுகள் நனவாகும் விதம் எப்போதும் புதிரானதுதான்.
சரி. இசையைப் பற்றி ஏற்கனவே கடந்த பதிவில் இயம்பிவிட்டதால், ஷமிதாப்பின் கனவுக்குள் மட்டும் இயங்குவோம்.

ஷமிதாப்... இசையில் உள்ள நீளம் இதில் இல்லாததாலோ என்னவோ இது எனக்கு மிகவும் நெருக்கமான படமாகவும் இருக்கிறது. படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது அமிதாப்பின் கரகரப்புக் குரல் நமது குரலிலும் ஒட்டிக் கொள்கிறது. அமிதாப்பின் நடிப்பும் அலாதியானதுதான். ஒவ்வொரு பிரேமிலும் அவரின் முத்திரை பதிக்கப் பட்டிருக்கிறது. இந்த வயதிலும் அவரது டெடிகேசன்... மிக அருமை.

தனுஷின் நடிப்பு அதற்கு ஈடு கொடுக்கும் நடிப்பு. ஆனால் தனுஷின் நடிப்பை முற்றிலும் பயன்படுத்தாமல் இயக்குனர் பால்கி விட்டு விட்டார் என்று சொல்லலாம். நடித்த வரையில் தனுஷ் அபாரம், சில இடங்களைத் தவிர. பி. சி. ஸ்ரீராம் (அவர்தானே) ஒளிப்பதிவு மிக நேர்த்தியானது. அதுவும் இந்தப் படத்திற்கு வலுச்சேர்க்கிறது.

சரி படத்தின் கதையைச் சொன்னால் பார்க்கும் சுவாரஸ்யம் குறைந்து விடும். சொல்லாவிட்டால் பதிவு சுமாராகி விடும். முற்றிலுமாகச் சொல்ல முடியாது எனினும் பாத்திரங்களை உள்ளிழுக்காமல் கதை சொல்ல இயலுமா? ம்.. முயற்சிக்கலாம்.

மனித வாழ்வை உயர்த்திப் பிடிப்பதும் அதே சமயம் அடி சறுக்கச் செய்வதும் ‘தான்’ என்ற ஈகோதான். சாதாரண நிலையில் ஒருவன் முன்னேறி வர வேண்டுமென்றால் அதற்கு ‘தான்’ என்கிற மனநிலை மிக அவசியமாகிறது. அதுவே நாட்கள் செல்லச்செல்ல பிறரைப் பற்றி எந்த அக்கறையும் (பிரக்ஜையா?) இல்லாமல் இருக்கப் பழக்கி விடுகிறது. ஏற்றி விட்டவர்களுக்கென்று வரும் போது கூட ஈகோ தடுக்கிறது. எது ஒருவனின் முன்னேற்றத்திற்குத் தேவையாக இருக்கிறதோ அதுவே அவனுடைய அழிவுக்கும் காரணமாக இருக்கிறது.

மத்திய அரசில் ஆட்சி அமைக்க திரு. மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நிச்சயம் அவரது ‘தான்’மையும், அதோடு சேர்ந்து இந்திய ஊடகங்களை தன்வயப்படுத்திய யுக்தி, அவரை நம்பி பணம் செலவழிக்கத் தயாராக இருந்த அதானி போன்றவர்கள் -  இவைகளெல்லாம் சேர்ந்து தான் அவரை ஒரு மிகப் பெரிய ஆளுமையாக உருவாக்கியது. ஆனால் தனது வாக்குறுதிகளுக்கு உண்மையில்லாமல் இருக்கிற போது ‘தான்’ என்பது ஒன்றும் செய்ய முடியாது. வெறும் மோடியை முன்னிறுத்தும் கோஷங்கள் – விளம்பர யுக்திகள், ஒன்றும் செய்து விட முடியாது. உஷ்.... அமைதி என்று தில்லி மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள்.

மத்திய அரசின் மாற்றத்திற்கான வாக்கு எப்படி இருந்ததோ அதே போல ஒட்டு மொத்தமாக அறுபத்தி ஏழு இடங்களை ஆம் ஆத்மி கைப்பற்றி இருக்கிறது. இங்கே பாரத் பிரதமரின் ஈகோவும், அவரது பெயர் பொறித்த கோட், இந்தியாவில் அடிக்கடி இல்லாதது, உறுதி மொழிகளைக் காப்பாற்றாதது, வெறும் திட்டங்கள் துவங்கும் பிரதமராகவும் அதை விளம்பரப் படுத்தும் தலைவராகவும் மட்டுமே இருப்பது, அவரது அமைதி என்று பல காரணங்கள். தான் என்பது தான்தோன்றித்தனத்திற்கும் வழிகோலும்.

‘தான்’ என்பது அடக்கி வாசிக்கப்படவில்லை என்றால் கேஜ்ரிவாலிற்கும் நாளை இதே நிலைதான். மோடி ஆதரவாளர்கள் இதைப் பற்றி பேசமாட்டார்கள். டெல்லி தேர்தல் முடிவுகளை வைத்து மத்திய அரசை விமர்சிக்கக் கூடாது என்று தேர்தலுக்கு முன்பே வெங்கையாநாயுடு போன்றோர் ஜகா வாங்கி விட்டார்கள். கடந்த ஆண்டு தேர்தலில் உதவிய ஊடக யுக்திகள் இந்த முறை பலனளிக்காமல் போய் விட்டன. அதோடு கூட த ரைஸ் அண்ட் பால் ஆப் பி.ஜே.பி என்று ஆய்வு நடத்தலாம்.

ஷமிதாப் ஒரு விதத்தில் (மேற்குறிக்கப்பட்ட) இவைகளைப் பற்றியெல்லாம் பேசுகிறது. ஈகோ இல்லாவிட்டால் வாழ்வில் வெற்றி இல்லை. ஆனால் அதுவே எப்படி நமது கண்களை மறைக்கிறது. யார் பெரியவன் என்கிற சர்ச்சை. எல்லாவற்றிலும் தன்னை முன்னிறுத்தும் நிலை. எவ்வளவு தூரத்திற்கு இது அழைத்துச் செல்லும்? எதுவரை மனிதன் தனியாகப் பயணம் செய்ய முடியும்? நான் என்கிற அகந்தை நான் உயிரோடு இருந்தாலும் என்னைக் கொன்று விடாதா? இந்தக் கேள்விகளையெல்லாம் இந்தப் படம் எழுப்பலாம் [சிலருக்கு].

ஆனால் என்னதான் திறமை, ‘தன்’நம்பிக்கை இருந்தாலும் சில சமயங்களில் அதிர்ஷ்டம் என்கிற தேவதை தேவைப்படுகிறது. திரைப்படத்தில் [ஷமிதாப்பில்] அக்ஷரா உருவத்தில் அது வருகிறது. கமலின் மகள். அழகாய் நடித்திருக்கிறாள். இயல்பாய் வந்து போகிறாள். ஆனால் எல்லாருக்கும் தேவதைகள் வருவதில்லை.அது தில்லியில், பா. ஜ. கா.விற்கு கிரண் பேடி வடிவத்தில் வரத் தயாராய் இல்லை. தில்லி தேர்தல் முடிவுகள் அதைத் தெளிவு படுத்தி விட்டன. என்ன செய்வது? எல்லாருக்குமா அதிஷ்டம் வரும்?

அதிஷ்டம் போலவே விபத்தும். எதிர் பார்க்கும் போது அது வராது. எதிர்பார்க்காத போது இது வரும். விபத்து என்றாலே எதிர்பார்க்காத போது நடப்பதுதானே. ஆனால் எப்படியோ விபத்து நடக்கும் முன்பு அது உங்களுக்குத் தெரியப்படுத்தப் படுகிறது. ஆனால் அதை சரியாய் முன்கூட்டியே கணிக்க முடியாது. முடிந்த பிறகுதான் தெரிந்ததையே உணர்கிறோம். முன்பே தெரிவதற்கும் உணர்வதற்கும் முடிந்தால் நாம் சித்தர்கள் அல்லவா?

கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை நானும் என் நண்பர் ஒருவரும் வீட்டில் கார் நிறுத்தும் இடத்தில் இருந்து பேசிக் கொண்டிருந்தோம். அவரது குடியிருப்பைச் சுற்றியுள்ள சுற்றுச்சுவரையே உற்றுப் பார்த்து நான் கேட்டேன் இது யாருக்குச் சொந்தம்? அவர் சொன்னார், “இந்தக் குடியிருப்புக்கென்று சொந்த சுற்றுச் சுவர் இல்லை. மூன்று புறமும் அருகில் இருப்பவர்கள் எழுப்பிக் கொண்டார்கள்.” நான் விளையாட்டாய்க் கேட்டேன், சுவர் இடிந்தால் அவர்கள்தானே கட்டுவார்கள்?

அடுத்த நாள் ஷமிதாப் பார்த்து விட்டு அதே குடியிருப்பில் கார் நிறுத்துமிடம். அவரது கார் நிறுத்துமிடத்திற்கும் சுவருக்கும் இருபது அடி இருக்கும். கொஞ்சம் இறக்கம். வண்டி கியரில் இருந்தது. என்ன நினைத்தாரோ தெரியவில்லை. வண்டியை இயக்கி அது கண்ட்ரோலை இழந்து நேரடியாக நான் வெறித்துப் பார்த்த சுற்றுச் சுவரின் மீது இடித்து நின்றது. பின்பார்க்கும் கண்ணாடி தூணில் இடிபட்டு தனியே விழ, விளையாட்டாய் நடக்கிறதா முன்பே போய் நிற்போமா என்ற எண்ணம் எனக்கு வர, அதற்கு செவிமடுக்காமல் நான் நிற்க, டமால் என்ற சத்தத்தோடு வண்டியும் நிற்கிறது. 

வண்டிக்கு சேதாரம். ஆளுக்கும் சுவற்றிற்கும் இல்லை என்பது சற்றே ஆறுதலான விஷயம்தான். அப்போதுதான் என் மனதில் – முதல் நாள் பேசிக்கொண்டது வந்து போகிறது. அதே சுவரை உற்றுப் பார்த்ததும் மனதில் வந்து போகிறது. நாம் உற்றுப் பார்க்கிறபோதே இது நடக்கும் என்று தெரியாது... நடந்த பிறகு நமக்கு முன்பே சொல்லப்பட்டது போல உணர்கிறோம்.

ஷமிதாப்பிலும் நடந்த பிறகு வந்து போகும் காட்சிகள் நிறைய உண்டு. அது நமது மனதிலும் சில நிகழ்வுகளை திரும்ப அழைக்கும். நடந்த பிறகுதானே நமக்கு ஞானம் வருகிறது.

ஷமிதாப் நல்ல படம். இடையிடையே சில காட்சிகள் பழைய படங்களை நினைவு படுத்துகின்றன. ஆசையைக் காத்துல தூது விட்டு பாடல் கூட... ஆனாலும் எனக்குப் பிடித்திருக்கிறது.  . உங்களுக்கும் பிடிக்கலாம்... ஆனால் வசூலை அள்ளுமா என்பது கேள்விக்குறியே? 

ஆனால் வாழ்க்கைக்குத் தேவையான பல விஷயங்களை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது. அதில் நம்ம கேப்டனுக்குப் பிடிக்காத ஒன்றும் இருக்கிறது. எல்லாமே எல்லாருக்கும் பிடிக்குமா என்ன?



19.2.13

எல்லாம் மாத்தமாட்டிக்ஸ்


நீங்களும் வெல்லாம் ஒரு கோடி ப்ரோமோ பார்த்ததிலிருந்து எல்லாமே மாத்தமாட்டிக்ஸ் மனசுல ஓடிக்கிட்டே இருக்கு. அதில் சில:

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தேர்தல்
கரண்ட் கட் + தமிழகம் + தேர்தல்      = தி. மு. க. தோல்வி  
பெட்ரோல்  + இந்தியா + தேர்தல்       = காங்கிரஸ் தோல்வி  
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஊழல்
12 ஹெலிகாப்டர்                       = 3600 கோடி
10 சதவீதக் கமிஷன்           = 360 கோடி
1அணு உலை                           = 16,000 கோடி
10 சதவீதக் கமிஷன்                         = 1600?

கமிஷன் இல்லாமல் எதுவும் நகராது...

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
திரைப்படம்
கடல்           = அலைகள் ஓய்வதில்லை இரண்டாம் பாகம் + மின்சாரக்      கனவு இரண்டாம் பாகம்       
விளக்கம்

கார்த்திக் + ராதா             = அலைகள் ஓய்வதில்லை
கார்த்திக் மகன் + ராதா மகள் = கடல்

காதலை சேர்த்து வைத்து பின் சாமியாராகும் அரவிந்த்சாமி
= மின்சாரக் கனவு
சாமியாரான பின் காதலை சேர்த்து வைக்கும் அரவிந்த்சாமி 
= கடல்
ஆக

மனிரத்னம்   = பாரதிராஜா + ராஜீவ் மேனன்

கூட்டிக் கழிச்சுப் பாருங்க கணக்கு சரியா வரும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தொலைக்காட்சி
ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்ப ஆறு ரூபாய்
ஒருநாளைக்கு ஒரு லட்சம் எஸ். எம்.எஸ் அனுப்பினால் 
= ஆறு லட்சம் ரூபாய்.
பதினைந்து நாளைக்கு பதினைந்து லட்சம் எஸ். எம்.எஸ் 
= தொண்ணூறு லட்சம்
ஆக

ப்ரோக்ராம் பெயர் 
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி இல்லை
நீங்களும் அனுப்பலாம் ஒரு கோடி
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++







13.2.13

தடைகளுக்குப் பின்னால் ....



தமிழ்த் திரை உலகத்தில் உதித்திருக்கிற இந்த தடை விவகாரங்கள் தமிழக மக்களை பல்வேறு விதத்தில் கூறு போட்டிருக்கிறது. தன்னுடைய நிலைப்பாட்டைச் சார்ந்து தனது அடையாளத்தை நிலை நிறுத்தும் முயற்சியில் தான் அறிந்தோ அறியாமலோ பலர் இருந்திருக்கிறார்கள். ஆனால் இவைகளுக்குப் பின்னால் வேண்டுமென்றே இனத்தைக் கூறு போடும் சக்திகள் இருப்பதை இந்தப் பலர் அறியாமல் இருப்பது வேதனைதான்.
உண்மையிலேயே அது தனக்குப் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், தனது சமூகம் ஒரு குரல் எழுப்பியது என்பதற்காக அதனோடு சேர்ந்த இஸ்லாமிய சமூகம் ஒரு புறம் – கமலின் விஸ்வரூபத்தை தடை செய்வதா – எனில் அமீரின் ஆதி பகவானைத் தடை செய் என்று இந்து முன்னணி வீரர்கள் ஒரு புறம் – எல்லாரும் பாதிக்கப்பட்டால் கிறித்தவ சமூகம் என்னாவது என்று சப்பைக் கட்டுக் கட்டும் சில கிறித்தவர்கள் ஒரு புறம் – இந்த தடைகளின் தேவைகள் என்ன? எதற்காக இந்தப் போராட்டங்கள்? இவைகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது?
  • -    ஒவ்வொரு மனிதனின் அடையாளமும் மிக முக்கியம். ‘அடையாளப் படுத்துதல்’ என்பது எப்போதும் உள்ளதுதான். ஆனால் அவைகளின் தாக்கம் என்பது மிக அதிகமாக உள்ளது இரு நூற்றாண்டுகளாகத் தான். இப்போது தனது அடையாளம் என்பது தனது இனத்தைத் தாண்டி உலக அளவில் அல்லது இந்திய அளவில் தங்களது அடையாளத்தை நிலை நிறுத்தும் முயற்சி தான் இது.
  • -    தனக்கான எதிரி யார் என்பதை இஸ்லாமியர்கள் கட்டமைக்கிற முயற்சியில் இந்துக்களை எதிரிகளாகக் கருதி தங்களது தமிழ் இனத்தின் அடையாளத்தை மறந்து உலக இஸ்லாமியர்களோடு ஒன்று படுத்துகிற முயற்சி என்பது ஒரு புறம். 
  •   தங்களது எதிரிகளாக இஸ்லாமியர்களை உருவாக்கி அதன் வழியாக இந்திய இந்துக்களாக, இந்து, இந்தியா என்ற அடையாளத்திற்குள் வரையறுத்து தங்களது சொந்த இன அடையாளத்திற்கு எதிரான ஒரு நிலைப் பாட்டையும் எடுக்கிறார்கள். இவர்களுடைய அந்தக் கட்டமைப்பில்தான் இஸ்லாமியர்கள் அந்த நிலைப்பாட்டிற்குத் தள்ளப் படுகிறார்கள் என்பதும் உண்மைதான். 
  •   இதில் கிறித்தவத்தையும், கிறித்தவர்களையும் சில சமயங்களில் தங்களது எதிரிகளாக, வெளியிலிருந்து வந்த ஐரோப்பியர்களோடு அடையாளப் படுத்தப் படுவதில் தங்களது தமிழின அடையாளத்தை மறக்கவும் சமயத்தின் அடையாளத்தை முன்னிறுத்தவும் நிர்ப்பந்தப் படுத்தப்படுகிறார்கள். அதனாலேயே தேவையற்ற நேரங்களில் கூட, சிலர் கிறித்தவ அடையாளத்தை முன்னே வைக்கிறார்கள் – கடல் திரைப்படத் தடை வழியாக.
  •  அடிப்படையில் ஒரு மனிதன் தனது சமூகக் குழு உறுப்பினராகவே இந்த மண்ணில் கால் வைக்கிறான். மனித அடையாளத்தின் அடிப்படை என்றால் அது அவர் சார்ந்த இனம்தான். இதுதான் ஒரு மனிதனின் அடிப்படை அடையாளம். அதே வேளை சமயம் – மதம் என்பது ஒரு மனித வாழ்வின் தொடர்ச்சி அல்லது இலக்கு என்கிற வகையில் அதுவும் மிக முக்கியமான அடையாளத்தைத் தருகிறது. தனது அடிப்படை அடையாளம் தகர்க்கப் படுகிற போது, தன்னை வாழ்வின் இறுதி இலக்கை நோக்கிப் பயணிக்க வைக்கும் சமய அடையாளத்தை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகிறது. அதாவது தமிழ் இன அடையாளம் என்பது அழிக்கப் பட்டு, அவனை சாதிய வழியில் பிரித்த போது தன்னை இந்து சமயத்தின் புறந்தள்ளப் பட்ட ஒரு இனமாகவே அடையாளப் படுத்த தள்ளப்பட்டார்கள். எனவே தலித் அடையாளம் என்பது தேவையும், அவசியமும் ஆகிறது. ஆனால் இதில் தமிழ் இன அடையாளம் நமது அடிப்படை என்பதும் முன் வைக்கப் படுகிற போது – இந்திய இந்துக்கள் மீண்டும் அனைவரையும் சமய அடிப்படையில் ஒன்று சேர்க்கவும் தங்களது அடிப்படை அடையாளத்தை மறக்கவும் கையிலெடுத்ததுதான் இந்துத்துவம். அதற்காக கட்டமைக்கப் பட்ட எதிரிகள்தான் இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும்.
  •   ஒரு பயங்கரமான எதிரி கட்டமைக்கப் படுகிற போது, அந்த எதிரியை எதிர் கொள்ள வேண்டிய அவசியத்தைப் பற்றி மட்டும் யோசிப்பவர்கள், அடிப்படை அடையாளத்தை மறந்து ‘மத’ அடிப்படைவாதத்தை முன்னெடுக்க கட்டமைக்கப் பட்ட எதிரிகள் எதைச் செய்தாலும் அதனை தவறாகப் புரிந்து கொள்ளவும், இன்னும் பயங்கரமான எதிரிகளாகக் கட்டமைக்கும் பணியும் தொடர்ந்து நடக்கிறது.
  • -    இதைத்தான் இந்த திரைப்படத் தடை விவகாரங்களில் பார்க்கலாம். விஸ்வரூபம் தடைக்குப் பின்னால் இருக்கிற அரசியலை அலச தனிக்கட்டுரை அவசியம். ஆனால் இது நடந்த பிறகு ஒரு தொலைக் காட்சியின் விவாத மேடையில் ஆதி பகவானைத் தடை செய்ய கோரும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சில காரணங்கள்: அவர்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா? நாங்கள் புண்பட மாட்டோமா? அது மட்டுமல்ல – வள்ளுவர் மைலாப்பூரில் இருந்தார் என்பதற்கான ஆதாரமே இல்லை – என்று அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.   இறுதிக் காரணம்தான் மிக முக்கியமானது. ராமர் இருந்ததற்கான ஆதாரம் உள்ளது ஆனால் வள்ளுவர் என்பவர் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்பது மைலாப்பூரில் மட்டுமல்ல – தமிழகத்திலே இல்லை என்பதற்கான முதல் படிதான்.
  •   இதுதான் இங்கே காரணம். மீண்டும் மீண்டும் ஆதிக்க சக்தியின் கைகளையும் கால்களையும் விரித்து அடிமையாக்கும் நவீன அடிமைத்தனம். அதுதான் மதங்களின் அடையாளத்தை முன்னிறுத்தும் தந்திரம்.

- வலை விரிப்பவர்களின் தந்திரம் தெரியாமல் வலையில் மாட்டும் பறவைகள் போல தமிழ் இனம் மத வலையில் மாட்டுவது பரிதாபத்துக்குரியது. இதுதான் காவிரி நீர் மறுப்பில் கர்நாடகாவுக்கு எதிராக மௌனம் சாதிக்கவும், முல்லைப் பெரியார் விவகாரத்தில் விலகி இருக்கவும், அணுமின் உலைகளுக்கு எதிரான போராட்டத்தில் பேசாமல் இருப்பதற்கும் வழி வகுக்கிறது.

-    இத்தகைய நிலையில் நம்மை வைத்து நமது அடிப்படை அடையாளத்தை மறக்கடிக்கச் செய்வதே நவீன இந்துத்துவத்தின் சாமர்த்தியம். இதை எதிர்ப்பதற்கான வழி தமிழின அடையாளத்தை மீட்டுருவாக்கம் செய்வதே.


8.2.13

ட்ரூ மேன் ஷோ - வும் – சமரும்


ஏறக்குறைய பதினைந்து வருடங்களுக்கு முன்பு பாண்டிச்சேரிக்கு ஏதோ ஒரு வேலையாய் போனபோது ‘மாஸ்க்’ என்ற ஜிம் கேர்ரி யின் படம் ஒன்று நண்பர்களோடு சேர்ந்து பார்த்தேன். அதன் பிறகு ஜிம் கேர்ரியின் படம் என்றால் வாய்ப்பு கிடைக்கும் போது பார்ப்பதுண்டு. அப்படி ஒரு படம்தான் ட்ரூ மேன் ஷோஇதுவும் பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டன.
  • உலகம் என்பது ஒரு நாடக மேடை. அதில் நாமெல்லாம் நடிகர்கள் என்று எப்போதும் எல்லாரும் சொல்லக் கேட்டிருப்போம். நமக்கு அது சரியோ என்று தோன்றிய தருணங்களும் இருந்திருக்கும். யாரோ ஆட்டிவைக்கும் பொம்மையாக நாம் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என்கிற கேள்வி இல்லாமல் இல்லை. மிகப் பெரிய தத்துவக் கேள்விகளை உள்ளடக்கியும், இறைவன் கருணை மிக்கவன் என்கிற கருத்தை கேலி செய்யும் விதத்திலும், இந்தக் கதைப் பின்னல்கள் கேள்வி எழுப்பும் – பார்ப்பவர்கள் மனதில்.

“இந்த நிகழ்ச்சியில் அனைத்தும் உண்மை – எதுவும் பொய்யில்லை” என்கிற ஒரு தொனியில் தொடங்கும் ஒரு லைவ் ஷோ. தனியாக, முழுவதுமாக உருவாக்கப்பட்ட ஒரு தீவு. முடிவடையாத ஒரு கடல் என்கிற ஒரு பிரம்மை. உருவாக்கப் பட்ட அந்த உலகத்திற்கு ஒளி கொடுக்கும் சூரியனின் ஒரு சிறு துளி - ஒரு விளக்கு கூரையிலிருந்து கீழே விழுவதில் தொடங்குகிறது அந்தக் கதை. அந்த தவறை மறைக்க மேலே சென்ற ஒரு விமானத்தின் விளக்கு கழன்று விழுவதாக சொல்லப் படும் செய்தி அதை உண்மையென்று அவனை நம்பச் செய்கிறது. அந்தக் கடலில் இறங்குவது ஆபத்து – ஏனெனில் அதில்தான் அவரது தந்தை இறந்து போனதாக ஒரு நிகழ்வு என்று சின்னச் சின்ன விஷயங்கள். அப்படி உருவாக்கப் பட்ட ஒரு தீவில் பிறந்ததிலிருந்தே அங்கே வளர்க்கப் படுகின்ற மனிதன் தான் ஜிம் கேர்ரி. அவனது ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு நிமிடமும் லைவ் ஆக ஒளிபரப்பப் படுகின்றது. ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக தான் ‘உருவாக்காப்பட்ட ஒரு மாய உலகத்தில்’ இருக்கிறோம் என்பதை அறியாமலே இருக்கிறான் அவன். அவன் வழியெங்கும் பார்க்கிற ஆட்கள், இயக்குனர் அவர்களுக்கு கொடுக்கும் வேடம், சொல்லும் வசனங்கள் என்று எல்லாமே நாடகத்தின் ஒரு அங்கம். ஒரே ஆட்கள் பல வேடங்கள் போடுகிறார்கள். இறந்து போன அவனது அப்பாவை திடீரென அவன் பார்ப்பதும், அது அவர் இல்லை என்று நம்ப வைக்கும் முயற்சியும், என்று பல நிலைகளில், கேர்ரி யோசிக்க ஆரம்பிக்கிறான்.
  • கொஞ்சம் கொஞ்சமாக உண்மையைக் கண்டறியவும், பயந்து இருந்த கடல் எல்லையற்றதாகத் தெரியவில்லை. படகேறி செயற்கையாய் கட்டமைக்கப் பட்ட கடலைத் தாண்டும் முயற்சியில் இருக்கும் போது இயக்குனர் அவரிடம் உரையாடுகிறார் – வெளி உலகம் மிக மோசமானது. இங்கே உனக்கு எல்லாம் கிடைக்கும் போகாதே என்கிற தொனியில் பேசுவதை எல்லாம் காதில் வாங்காமல் “வெளியே” பயணிக்கிறான்.

சிந்திக்கத் தொடங்கும் போதுதான் மனிதன் வாழத் தொடங்குகிறான் என்பது கூட படத்தின் கருவாக இருக்கலாம். உலகம் முழுவதும் இந்த நிகழ்ச்சி நடக்க வேண்டும் என்பதற்காக ஒரு மனிதனை சிறையில் அடைப்பதைப் போன்று அவனது சுதந்திரத்திற்கு தடை போடுவது சரியல்ல என்று தனி மனித சுதந்திரத்தை வலியுறுத்துவது கூட கருத்தாக இருக்கலாம். வாழ்க்கையே ஒரு நாடக மேடை எனவே அதில் அதிகக் கேள்வி கேட்காமல் வாழ்வது சரி என்பதோ, மாய உலகில் கட்டமைக்கப்பட்ட விதிகளைத் தகர்த்தெறிந்து மனம் சொல்வதைக் கேட்பது என்பது கூட செய்தியாக இருக்கலாம். காதல் என்பது வேறொருவன் நிர்ணயிக்கிற ஒரு ஆளை வைத்தோ, அழகை வைத்தோ வருவது அல்ல அது உள்ளிருந்து வருவது என்பது கூட செய்தியாக இருக்கலாம். ஆனால் பார்க்கிறவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு செய்தியைத் தரும் என்பது மட்டும் நிச்சயம்.
  • இந்தப் படத்தை தமிழில் எடுத்தால் தமிழ் ரசிகர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்கிற கேள்வி எனக்குள் இருந்தது.

இந்த அளவுக்கு ஒரு நாடகத் தன்மையுடைய கதை நமக்கு ஒத்து வராது – நமக்குத் தேவை வேகம் – வேகமான திருப்பங்கள் – த்ரில் – சண்டைக் காட்சிகள் – பாடல்கள் – என்று எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து உருவாக்கப் பட்டிருக்கும் படம் சமர்.
தமிழ் ரசிகர்கள் இதை நிச்சயம் ரசிக்க வாய்ப்பு உண்டு. விறுவிறுப்பாக செல்லும் படம் என்று நினைக்கிறேன். ட்ரூமேன் ஷோ பார்க்காதவர்களுக்கு இந்த படம் நிறைய பிடிக்கலாம் – பார்த்தவர்களுக்கு மிகப் பெரிய ஈர்ப்பை உண்டாக்காது என்றே நம்பலாம் – சில சீன்களுக்குப் பிறகு கதையை ஓரளவிற்கு ஊகிக்க முடிந்து விட்டது.  அது தவிர சில சீன்களை வேறு ஏதோ படத்தில் அப்படியே பார்த்தது போலவும் இருக்கிறது. ஆனால் நினவுக்குத்தான் வர மறுக்கிறது. எனக்கு ஒருவேளை அம்நீஷியாவோ என்னவோ.
ஆனால் இறுதியில் ட்ரூ மேன் ஷோ எழுப்பும் எந்தக் கேள்வியையும் சமர் படம் பார்த்தவர்கள் மத்தியில் எழுப்பாது என்பது மட்டும் நிச்சயம் – அந்தக் கேள்விகள் நமக்குத் தேவையில்லை என்பதும் கூட காரணமாக இருக்கலாம். எந்த விதமான மற்ற திரைக்கதைக்கான நன்றியோ, தாக்கம் என்பது பற்றிய திரைப்படக் கதைகளோ டைட்டில் கார்டில் வரவில்லை. ஒரு வேளை நான் கவனிக்க வில்லையோ என்னவோ. அல்லது இயக்குனருக்கும் அம்னிஷியாவோ என்னவோ?

5.2.13

யார் யாரைக் காப்பாற்றுவது?



இப்போதுதான் ஒரு வழியாய் ஒரு தடை விவகாரம் முடிந்தது. அதற்குள் இன்னொரு விவகாரம் / அதாவது கமலுக்குப் பிறகு கடல். இஸ்லாமிய நண்பர்களின் கடமை முடிந்த பிறகு, இப்போது கிறித்தவ நண்பர்களின் கடமை தொடங்கியிருக்கிறது.
  • கடல் படத்தில் எத்தனையோ இடங்களில் அவர்களின் மனது புன்பட்டதாகவும் அதனால் அத்தனை இடங்களில் – கட் – செய்ய வேண்டுமாம். உங்கள் மனதுதான் புண்படுமா எங்கள் மனது புண்படாதா என்று கேட்பது போல இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து இருக்கிறார்கள். அவர்கள் ஒரு பத்துப் பேர்... உண்மையில் காயப்பட்டவர்கள் போலத் தெரியவில்லை. எதோ போராட்டம் செய்தால் நாலு பேரு நம்மைப் பத்தி தெரிந்து கொள்வார்கள் என்று போராரடினார்களோ என்னவோ? எனக்கு அவர்கள் போராட்டம் செய்ததைப் பற்றிக் கவலைப்பட வில்லை. அதையும் ஒரு செய்தியாக வெளியிட்டு வருகிற ஊடகங்களை நினைத்து வருத்தப் படுவதா அல்லது சிறு செய்திகளைக் கூட எல்லாருக்கும் தெரிவிப்பதை நினைத்து பெருமைப் படுவதா என்று தெரியவில்லை.

நம்மை கைல மாட்டிக்கிட்டு சாமி படுற கஷ்டம் இருக்கே. அதோடு சேர்த்து இப்போது ஆதி பகவானுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இருக்கிறது விஷ்வ ஹிந்து பரிஷத். முன்பே இவர்களுக்குப் போட்டுக் காண்பித்து விட்டுதான் திரையிட வேண்டுமாம். காசு குடுக்காம படம் பாக்கிறதற்கு இப்படி ஒரு வழிய நம்மாளுங்க கண்டு பிடிச்சத நினைச்சா பெருமையா இருக்கு. நாம எதுவுமே கண்டு பிடிக்கலைன்னு இந்த உலகம் சொல்லப்டாது கேட்டிளா.
  • சரி நம்ம விஷயத்துக்கு வருவோம். நானும் கடவுள் பக்தி உள்ளவன்தான். இருந்தாலும் இந்தக் கேள்வியைக் கேக்காமல் இருக்க முடியலை. யாரு யாரைக் காப்பாத்துறது. கடவுள்தான் நம்மைக் காப்பாத்தானும். இங்கே நடக்கிற கூத்தையெல்லாம் பார்த்தா எதோ நாமதான் கடவுளைக் காப்பத்துகிற வேலையில இறங்கியிருக்கிற மாதிரி தெரியுது. கடவுள் கடவுளைக் காப்பாத்திக்குவார். நம்ம நம்மளைக் காப்பத்துவோம். அது போதும். அதிகப் பிரசங்கித் தனமா மனுஷன் நான்தான் கடவுளைக் காப்பாத்துவேன்னு நின்னா அவன்தான் சாத்தான்.

எனவே எல்லா மத நண்பர்களே வீனாவுல சாமிய வம்புக்கு இழுக்காதிங்க. அப்புறம் சாமிக் குத்தமாயிரும். என்னை விட நீ பெரியவனான்னு சாமி நம்மைக் கண்ணைக் குத்திரும். புதுசு புதுசா ஏதாவது லெட்டர் பேட்ல அடிச்சு போலீசுக்குப் போறதுக்கு பதிலா எங்காவது வேலைக்குப் போனா வீட்ல இருக்கவுங்க சந்தோஷப் படுவாங்க. சாமியும் சந்தோஷப் படும். 

"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
இப்படியே போனா எந்தப் படத்துக்கும் விளம்பரம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
                         """""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
சேட்டைக்காரன் - சேட்டையை தடை செய்ய வேண்டும் என்பதை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும்.

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""''

27.1.13

தடை: விஸ்வரூப வெற்றி


கமல்ஹாசன்
ஒவ்வொரு திரைப் படம் எடுக்கும் போதும் 
ஏதாவது ஒரு சிக்கல், தடை என்று ஏடாகூடமாக 
மனிதன் மாட்டிப் போகிறார். 
அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல 
எனக்கு ஒண்ணுமே ஆகுறதில்ல - ன்னு 
சொன்ன மனுஷனுக்குத் தான் இப்படி ஆகுது.

  • சண்டியர், ஹே ராம், விஸ்வரூபம் - வரிசையா வந்து மாட்டுது. ஒவ்வொன்றின் பின்புலத்திலும் உள்ள சிக்கல்கள் வெவ்வேறு என்றாலும், இந்த நேரத்தில் ஒரே ஒரு செய்திதான்.  திரைப்படங்களுக்குத் தடை என்பது நமது நாட்டிற்கு ஒன்றும் புதிதில்லை. 
  • திரைப்பங்களையே தடை செய்வதே நல்லதாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். என்னைப் போல பல பிரபல அரசியல் வாதிகளும் நினைப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆனாலும் அது சாத்தியப் படாது என்பதனால் சில திரைப் படங்களை தடை செய்வோம் அல்லது சில வாரங்கள் தடை செய்வோம் என்றெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு வருகிறார்கள். இது நல்ல எண்ணத்தினால் அல்ல - அரசியல் தந்திரம், மற்றும் வியாபார நஷ்டம், அரசியல் பழி வாங்கல் என்பதெல்லாம் இதன் பின் அடக்கம். 
  • இதில் கமல் 'நல்லவரா கெட்டவரா' என்பதெல்லாம் இந்த விவாதத்திற்கு உட்பட்டதல்ல. இந்தத் திரைப் படத்திற்கு தடை சரியா இல்லையா என்பதுதான். டாம் படத்திற்குத் தடை என்ற போதும் எனது கருத்து இதுவாகவே இருந்தது. கேரளா அரசின் கொள்கை, அது விரிக்கும் வலை தவறு என்பது தெரிந்தாலும் அதற்கானத் தீர்வு என்பது படத்தை தடை செய்வதில் இல்லை, அல்லது தீர்வு அது இல்லை என்றே சொல்லியிருந்தோம்.
  • ஒரு படத்தை தடை செய்வதினால் இஸ்லாமியர்களின் சுதந்திரம் இங்கே பாதுகாக்கப் பட்டு விடுமா? இந்தத் திரைப் படத்தை தடை செய்வதினால் இஸ்லாமியர்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் என்று நினைத்து விட முடியுமா? அதுதான் உண்மையெனில் அயோத்திக்கு எப்போதோ தீர்வு கிடைத்திருக்கும். அரசியல்வாதிகள் மக்களை ஒரு மாயையில் வைப்பதற்கு இது போன்ற உப்புச் சப்பில்லாத விஷயங்களை கையில் எடுத்துக் கொண்டு இஸ்லாமியர்களின் கருத்துக்குச் செவி கொடுக்கிறோம் என்ற ஒரு செய்தியை வெளியில் செய்து விட்டு மறைமுகமாய் தங்களது அரசு இயந்திரங்களை அவர்களுக்கு எதிராய் முடுக்கி விடுவார்கள். திரைப் படங்களைத் தடை செய்வதோடு நமது தார்மிகக் கடமை முடிந்து விட்டது என்று நாமும் ஒதுங்கிப் போவோம். இதைத் தானே அவர்கள் நினைக்கிறார்கள். இனி அடுத்த முறை தேர்தலில் இஸ்லாமிய நண்பர்களின் ஒட்டு ஒட்டு மொத்தமாய் மோடியின் சகோதரிக்கு கிடைக்கும்.
  • இன்னொசென்ஸ் ஒப் முஸ்லீம்ஸ் என்ற ஒரு கேவலமான ஒரு படத்தை அமெரிக்க நிறுவனம் தயாரித்த போது அதில் நபிகளை மிகவும் தவறாகச் சித்தரித்து இருக்கிறார்கள் என்பதில் ஒரு நியாயம் இருந்தது. அது எந்த விதமான தயாரிப்பும் இன்றி, அசிங்கமாக சித்தரிக்கப் பட்ட படம் என்பதில் அதன் தடையை நாம் நியாயப் படுத்த முடியும். எந்த விதமான காத்திர முகாந்திரமும் இன்றி கமலின் திரைப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்பது எந்த விதத்தில் சரி என்பது தெரியவில்லை. 
  • ஒரு படத்தில் ஒரு மதத்தவரை எப்போதும் திவிரவாதிகளாகக் காட்டுவது தவறு. ஆனால் ஒரு திரைப் படத்தில் ஒரு விஷயத்தை சொல்லி விட்டால் அது அப்படியே உண்மை என்ற அர்த்தம் இல்லை. அல்லது இந்திய இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் படங்கள் வந்தால் அதற்கான எதிர்ப்புக் குரல் நிச்சயமாய் எல்லாரிடமிருந்தும் வரும். 
  • சரி ஒரு கேள்வி - இந்தியத் தமிழக அரசியல் வாதிகள் எல்லாரையும், கேவலமான பொறுக்கிகளாக, லஞ்சத்தில் ஊறிப் பெருத்த பெருச்சாளிகலாக காட்டும் திரைப் படங்கள் அனைத்தும் உண்மைதானே.   காவலர்கள் பெரும் கேடிகளா...அப்புறம் ஏன் எல்லாத் தமிழ் படங்களையும் தடை செய்யச் சொல்லி எந்த அரசியல்வாதியும் வரிந்து கட்டுவதில்லை?
  • எல்லாருக்கும் எல்லாருடைய கருத்துக்களோடும் உடன்பாடு இருப்பதில்லை. கமலின் பல கருத்துக்கள் எனக்கு உடன்படாதவைகளே. பல திரைப் படங்களின் கருத்துக்கள், அதன் கருத்து இவைகளோடு கூட உடன் பாடு இல்லைதான். அதற்காக அந்த மனிதன் ஒரு கருத்தை சொல்லக் கூடாது என்கிற உரிமை நமக்கில்லை என்றே கருதுகிறேன். அதே சமயத்தில் அந்தக் கருத்தை எதிர்க்கும் உரிமையும் எல்லாருக்கும் உண்டு. ஆனால் எதிர்ப்பு என்பது தடையில் இல்லை... 
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இந்த நேரத்தில கமல் பாடின இந்தப் பாட்டை
பாக்கணும் போல இருக்கு,
"அடமேன்ட்டா நாங்க நடை போட்டா 
தடை போட நீங்க கவர்ன்மெண்டா 
தடா உனக்குத் தடா" 

இதே நேரத்தில் கமலைப் பார்த்து 
இந்தப் பாடலைப் பாட வேண்டும் போல இருக்கிறது.

"போனா போகுதுன்னு விட்டின்னா 
கேனன்னு ஆப்பு வப்பாண்டா"
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
குறிப்பு: 
பதிவு என்ன ஒரே குழப்பமாக இருக்கிறது என்பவர்கள் இதைக் கமல் பற்றிய பதிவு என்பதை மனதில் இருத்திக் கொள்வது நல்லது.
[அவசரத்துல ஒழுங்கா எழுதலை என்பதை மறைக்க என்னவெல்லாம் சொல்ல வேண்டியிருக்கிறது.]

தொடர்புடைய சில பதிவுகள் :

அன்பின் வன்முறை இன்னொசென்ஸ் ஒப் முஸ்லீம்ஸ் பற்றியது 

டாம் படத்தை தடை செய்தது தவறு


14.12.11

ஒஸ்தி - ஒசத்தி


"லிட்டில் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஹொவ் ஐ வொண்டர் வாட் யு ஆர்...."

அரசியல் பாடம் - 
அம்மாவைத் தாண்டி தமிழகத்தில் எதுவுமே செய்யக் கூடாது செய்யவும் முடியாது என்கிற கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைக் கிறார் சிம்பு. ஒரு சண்டையில் எதிரி ஒருவனுக்கு தொலை பேசி வருகிறது - யாரென்று கேட்கிறார் சிம்பு - அவர் 'அம்மா' என்று சொல்ல உடனே சிம்பு - நேரடியாகவே அம்மாவைப் பார்ப்பது போன்று ஒரு பம்மு பம்மி
"அம்மாவைக் காக்க வைக்கக் கூடாது". அப்படியே "அம்மாவை நானும் கேட்டேன்னு" சொல்லுன்னு சொல்லுவாரு பாருங்க.
எதிரியா இருந்தாக் கூட அம்மா பேரைச் சொல்லிட்டா என்ன நடக்கணும் நடக்கும் என்பதை இதை விட வேறு யாரும் எடுத்துச் சொல்ல முடியாதுங்க. தமிழகத்தின் நடப்புச் சூழலை பம்முவது மாதிரி பம்மி அடித்திருக்கிற கிண்டல் ரொம்ப அருமைங்க...
[எதோ நம்மளால முடிஞ்சது - அவரு ஒரு அமைச்சரைப் பேசி மாத்தும் போது நம்ம கிளப்பி விடக் கூடாதா...]

குடியின் கொடூரம்
குடியின் கொடூரத்தை இந்தப் படத்தில் விவரிப்பது மாதிரி வேறு எந்தப் படத்திலயும் விவரிக்க முடியாது. 
படத்தின் கதாநாயகியின் அப்பா - எதுக்குக் குடிக்கிறாரு, ஏன் குடிக்கிறாரு, ஏன் அந்தப் பொண்ணு அவர் உயிரோட இருக்குற வரைக்கும் அவரை விட்டு வர மாட்டேங்குது - ஒருத்தரு குடிகாரனா இருந்தா எதைப் பத்தியும் கவலைப் பட மாட்டாங்க அது பெற்ற பொண்ணா இருந்தாக் கூட - 
அதுனால சிம்பு முதல்ல பொண்ணுகிட்ட போய் அவரை மாத்துன்னு சொல்றாரு அது முடியலன்ன உடனே அவருகிட்டே நேரா போய் நீயெல்லாம் ஒரு அப்பனா அப்படின்னு கேட்ட உடனேயே மகளுக்காக நான் குடிக்கிறதை விட்டேர்றேன்னு சொல்லி தண்ணீல விழுந்து செத்துப் போராறாரு. தண்ணீர்ல இருப்பவனுக்கு தண்ணீர்லதான் மரணம் என்பதை விழிப்புணர்வுச் செய்தியாகச் சொன்னதுக்கே - தண்ணியடிக்கலாம்.

காவல்துறையின் கொள்ளைகள் 
காக்கிச்சட்டை போட்டுக்கொண்டால் அவரை வெறும் போக்கிரியாகத்தான் காட்ட வேண்டுமா அல்லது கடமை உணர்வுள்ள போக்கிரியாகத்தான் காட்டவேண்டுமா என்கிற கேள்வியில், கடமை உணர்வுள்ள, அதேசமயம்  தேர்தல் ஆணையத்தின் எந்தவித வழிகாட்டுதலும் இல்லாமலேயே அவர்கள் சொல்லாமலேயே மக்களுக்குக் கொடுக்கப் போகும் பணத்தை பிடுங்கி போலிஸ் சீப்பு வாங்குவதும், வீட்டுக்கு ஜெனரேடர் வாங்குவதும் என செலவு செய்கிறார் ஹீரோ. [மங்காத்தா அர்ஜூன் மாதிரி அவர் அப்படித்தான்னு கடைசி வரைக்கும் தெரியாது இங்கே தெரிஞ்சுருது அவ்வளவுதான்] ஆனால் இந்த நிலையில்தான் நமது காவல் துறை இருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லி - கடந்த தேர்தலின் போது காவல் துறையினர் வழிப்பறி செய்த பணம் எல்லாம் ஸ்வாக செய்யப்பட்டிருப்பதை எடுத்துச் சொல்லி தேர்தல் ஆணையத்திற்கு எல்லார் சார்பாக மனுப் போட்டிருப்பதர்காகவே இயக்குனருக்கும் அந்தப் பாத்திரத்தை ஏற்று வந்து போன சிம்புவுக்கும் பாராட்டுப் பத்திரமே தரலாம்.

 நடிகர்கள் ஒற்றுமை

ரசிகர் மன்றங்கள் என்று தமிழகம் பிரிந்து போயிருக்கிற நிலையை 
மாற்ற வேண்டுமென்று மணிக்கணக்காக யோசித்து 
மங்காத்தா நூறாவது நாளில் படத்தை வெளியிட்டு 
அஜித் ரசிகர்களின் பலத்தையும் -  
படம் முழுவதும் 
விஜய் வசனம் பேசும் அதே ராக தாளத்தோடு பேசி 
சிம்பு அப்படியே விஜயாக வந்து போயும், 
பாட்டில் கூட "வில்லு வில்லு வில்லு ... ன்னு குஷ்பு ஒரு பாட்டுக்கு வந்து ஆடுவாங்களே அந்த பாட்டின் ராகமும் தெரியும்படி செய்து, 
தன்னை தலதளபதியாக மாற்றி ரசிகர் ஒற்றுமையை நிலை நாட்டிய அந்த நல்ல குணத்திற்காக 
சிம்பு ரசிகர் மன்றத்தை மட்டும் நாட்டில் வைத்து விட்டு 
மற்ற எல்லாத்தையும் கலைத்து விடலாம். 
அப்பா பாசம்
அம்மா பாசம் போல அப்பா பாசத்தையும்  தூக்கி நிறுத்தியதில் மட்டுமல்ல, அப்பா என்பவர் உரிமையோடு சண்டை போடுவதற்காக உள்ளவர் என்கிற உரிமையையும் நிலைநாட்டியதற்காகவும் 
அப்பாவிடம் எப்படி எல்லாம் பேசக்கூடாது [அப்பான்னு பேசக்கூடாது] என்கிற பாச உணர்வையும் கொடுத்ததனால் தன் அப்பா மேலுள்ள பாசத்தையும் வெளிக்கொண்டு வந்து தன் அப்பாவின் மனம் குளிரச் செய்ததனால்.. அவருக்காகவே இனி தமிழ் நாடை இனி தந்தை நாடு என்று அழைக்கலாம்.

இன்னும் நிறைய இருக்கு அதனால படம் பார்த்து நீங்களே தெரிஞ்சுக்கங்க:

கொசுறு - ஒன்று     பயோ டேட்டா

வைத்த பெயர் -                              ஒஸ்தி தி மாஸ் - மாஸ்டர் ஒப் ஆப்பு
வைக்க விரும்பிய பெயர் -     குஸ்தி - மாஸ்டர் ஒப் காப்பு [காவற்துறை]
ஹீரோ  -                    எஸ் டி ஆர். [STR] A மிஸ்ஸிங் ஏன்னா அவர் லிட்டில் [str]
ஜோக் அடிப்பவர் -                       சந்தானம்
எத்தனை பேர் நடித்தவர்கள்?  பாதிப்பேர் நடிக்கலை

பிடித்தது -                                          இசை
அதில் பிடிக்காதது -                     பல பாடல்களின் பின்னணி நினைவுகள்
கண்டுபிடிப்பு -                                இடுப்பில் கொலுசு

அடிக்கடி சொல்லும் வசனம் - கண்ணாடி
அடிக்கடி மாட்டுவது -                 கண்ணாடி
அதை மாட்டுவது -                       பின்னாடி


கொசுறு இரண்டு
சிலவிஷயங்களை அனுபவிக்கனும் ஆராயக் கூடாதுன்னு கமல் எதோ ஒரு படத்துல சொல்வாப்புல. இருந்தாலும் ஆராயணும் போல இருக்கே. இந்தப் படத்துல சிம்பு பேசுற நெல்லை பாஷை கொஞ்சம் கூட ஒட்டவே இல்லை. இவங்க பேசுறத பாத்து காட்டுப் பாக்கம் திருநெல்வேலி பக்கத்துல இருக்குன்னு நினைக்க வேண்டியிருக்கு. எனக்குத் தெரிஞ்சு சென்னை போரூர் பக்கம்தான் அது இருக்குன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.
அதுக்கும் நெல்லை பாஷைக்கும் என்ன சம்பந்தம் - மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் - ன்னு அழகன் படத்துல மம்மூட்டி பேசுரமாதிரி எல்லாம் நான் கேக்கலை. அவ்வளவு அழகா [!] நெல்லை பாஷை பேசுற சிம்பு - பாம் வெடிச்ச பொறவு ரொம்ப நல்லா தமிழ் பேசுறாக. அது என்ன மாயமோ தெரியலை... நெல்லை பாஷை மாறனும்னா பாம் வெடிச்சா போதும் போலெல.

படத்துல அவர் அடிக்கடி - யாரையாவது அடிக்க அடிக்க சொல்ற வசனம் "ஏலே நான் கண்ணாடி மாதிரி, நீ சிரிச்சா நான் சிரிப்பேன், நீ ஆடுனா நான் ஆடுவேன் ..." படம் பாத்து அழுதுகிட்டும், கடுப்புலயும் இருக்கேன் - ஆனா அவர் மட்டும் சிரிச்சிக்கிட்டே இருக்காரு. என்ன கண்ணாடியோ.. ஒருவேளை ரசம் போன கண்ணாடியோ?


கடைசியா சந்தேகக் கேள்வி
பணம் கொஞ்சம் எடுக்கிறாரு - அதுக்கு என்ன கணக்கு -  போலிசு பணம் எடுத்து வீட்டுக்கு ஜெனரேட்டர் வாங்குறது ஓகே. அதுல போலிசு ஜிப்புமா வாங்குவாங்க?

ஜாலியா எடுத்துக்குங்க 

நீங்க கேக்கக் கூடாத கேள்வி -
அப்புறம் இந்தப் படத்தை ஏண்டா பாத்த?

29.10.11

என் அறிவில் ஏழாம் அறிவு...

  • தென் தமிழகத்திலிருந்து இந்தியாவிலிருந்து, கஜினி மூலம் வட இந்தியாவிற்கு பயணம் செய்த முருகதாஸ், காஞ்சீபுரத்திலிருந்து சீனாவுக்குச் சென்ற போதிதர்மரை  கதைக் களனாக வைத்து இயக்கியிருக்கும் இந்தப் படத்தை வெறும் திரைப் படமாகக் கருதுவதா அல்லது வரலாற்று ஆவணப் படமாக எடுத்துக் கொள்வதா என்று குழப்பம்தான் நீடிக்கிறது.
  • இந்தியாவை அடிமைப் படுத்த "பயோ போரை" கையிலெடுக்கிறது சீனா. அதற்குத் தடையாக ஒருவரின் ப்ராஜெக்ட் இருக்குமோ என்பதற்காக அவரைக் கொலை செய்வதற்கு சீனாவிலிருந்து ஒருவர் சென்னை வர - இந்தியா அடிமைப் பட்டதா இல்லையா என்பதுதான் கதை. 
  • ஹீரோ ஒருவரின் முயற்சியில் மட்டுமே நாடு முன்னேற்றம் அடையும் என்கிற சங்கரின் ஒற்றை வரிக் கதை போல இதுவும் என்று சொல்லலாம். இந்தியன் தாத்தா ஊழலை ஒழித்த மாதிரி, அந்நியனில் மீண்டும் ... .. அப்புறம் சிவாஜி கறுப்புப் பணத்தை ஒழித்த மாதிரி, . .... இதில் முருகதாஸ் ஒரு நாட்டையே நோய் நொடி இல்லாமல் செய்துவிடும் கதை. சமூக நோய் என்பதற்கு பதில் இதில் உடல் நோய்...
திரைப் படம்
  • திரைப் படம் என்கிற நோக்கில் பல்வேறு குறைபாடுகள் என்பதை பலர் சுட்டிக் காண்பித்து விட்டார்கள் என்பதனால் மேற்கொண்டு என்ன சொல்லுவது? 
  • சென்னை என்கிற ஒரு நகரத்தில் எந்த விதமான கட்டுப்பாடுகளுமின்றி வலம் வர வேண்டுமானால் சீனக் காரனாகத்தான் இருக்க வேண்டும் போல் இருக்கிறது. எத்தனைக் குழப்பங்களுக்கு மத்தியிலும் எந்தவிதமான எதிர்ப்புமின்றி சுற்றித் திரியும் அந்த சீன பாத்திரம் ..... சரி திரைப் படம் தானே என்று விட்டு விடலாம்.
  • சென்னை  விமான நிலையத்தில் குடியேறல் பகுதி இவ்வளவு ஆடம்பரத்தோடு மேற்கத்திய நாடுகளில் உள்ளதைப் போன்று இருக்கிறதைப் பார்க்கும் போது சரி இதுவும் சினிமாதானே என்று விட்டு விடலாம்.
  • வசியம் என்பது இவ்வளவு எளிதில் சாத்தியப்படும் எனில், நண்பர் ஒருவர் கேட்டிருப்பது போன்று எதற்கு வைரஸ் கதைகளெல்லாம் - வசியம் ஒன்றின் மூலமே எல்லாரையும் அழித்து விடலாம் - ஆனால் அதனால் சீனாவிற்கு இந்தியா அடிபணியாது என்பதனால் இந்தக் கேள்வியிலிருந்து தப்பிக்கும் வசதி இருக்கிறது.
  • இவ்வளவு எளிதாக ஐ.ஐ.டிக்குள் நுழைய முடியுமென்றால் வெளி நாட்டுக் காரர்கள் கூட இங்கே வந்து ஆராய்ச்சி செய்யலாம் போலிருக்கிறதே. வெளியிலிருந்து யாரும் வர முடியாது ஆனால் உள்ளே உள்ள செகுரிடி கூடவா? அது மட்டுமல்ல ஜெனெடிக்  இஞ்சினியரிங்கில் ஒரு சோதனைக் கூடத்தில் அவர்கள் சொல்லுவது போலவே இன்னும் ஒரு நாள் மீதமிருக்கிற நிலையிலேயே, வெயில் படக் கூடாது என்பதையும் தாண்டி, {சுடிதார் நிழலையும் தாண்டி} - அரவிந்த் மீண்டு வருவது... இது திரைப் படம் என்பதை மீண்டும் நினைவு படுத்துகிறது.   மைனாரிட்டி ரிப்போர்ட் என்கிற டாம் க்ரூஸின் படம் ஒன்றில் இதே போல யாருக்கும் தெரியாமல் கண் மாற்று சிகிச்சை செய்கிற காட்சியை நம்புகிற மாதிரி காண்பித்திருப்பார்கள்.  இங்கே மிகப் பெரிய சோதனை முயற்சியை - ஜஸ்ட் லைக் தட் என்பது ... சரி படம்தானே...
  • இது போல லாஜிக் இல்லாத கதையமைப்பு... சுருக்கமாய் சொன்னால் இது "லாஜிக் இல்லா மாஜிக்" - ஆனால் அந்த மாஜிக்கையும் ஒழுங்காய் செய்ய வில்லை.
  • சூர்யாவின் நடிப்பு அருமை. கண்கள் நிறையப் பேசுகிறது. அதென்ன கஜினியில் நயன் தாராவின் ஆராய்ச்சிப் பொருள் சூர்யா... இங்கே ஸ்ருதியின் ஆராய்ச்சிப் பொருள் சூர்யா...   பெண்களின் ஆராய்ச்சிப் பொருளா சூர்யா!
வரலாற்று ஆவணப் படம்

  • இதை இந்தக் கோணத்தில் பார்த்தால் தசாவதார முதல் இருபது நிமிடங்களை விட இது பல மடங்கு பரவாயில்லை என்றே தோன்றுகிறது. வரலாற்றுப் பதிவுகளை நன்றாகப் பிரசன்ட் செய்திருக்கிறார்கள். ஆனால் அதற்கு பிறகு வருவது தான் மேலே சொன்னது. இன்னும் கடினமாய் உழைக்க வேண்டியிருக்கிறது. 
  • அங்கே உலகத்தையே அழிக்க ஒரு "பயோ போர்" இங்கே இந்தியாவை அழிக்க ஒரு பயோ போர். இரண்டிலுமே காட்டிக் கொடுக்கும் விஞ்ஞானிகள் தமிழர்கள்.  இந்தக் கொடுமைய எங்கே போய் சொல்லுவது?

கேள்விகள் .... கேள்விகள்  
அதற்காக இந்தப் படத்தில் எதுவுமே இல்லை என்று சொல்லி விடமுடியாது. சொல்லுகிற உண்மைகள், கருத்துக்களைப் பதிவு செய்ததில்தான் தகராறே தவிர சொல்லிய கருத்துக்கள் பல கவனிக்கப் பட வேண்டியவை - அவை நிறைய, நிறைய உண்டு.

  • வீரமாமுனிவர் என்று அழைக்கப் படுகிற ஒருவர் - சதுரகாதி, தேம்பாவணி மற்றும் கலைச்சொற்கள் அகராதி என்று பதினெட்டாம் நூற்றாண்டில் எழுதினர். ஆனால் அவர் இதாலியிலிருந்து வந்தவர். இத்தாலியில் யாருக்காவது  பெஸ்கி என்று யாராவது தெரியுமா என்றால் நிச்சயம் தெரியாது. இத்தாலியில் அந்த வரலாறு இருக்குமா என்று நமக்குத் தெரியாது. ஆனால் மொழி தெரியாத ஒருவர் வந்து மற்றொரு நாட்டிற்குச் சென்று பணிபுரிவதேல்லாம் எல்லாக் காலங்களிலும் பல்வேறு காரணங்களுக்காக நடப்பதுதான். ஆனால் நாம்தான் அவைகளைப் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.
  • எனவே போதி தர்மரைப் பற்றி நமக்குத் தெரியாமல் இருந்தது குறித்து வருத்தப் பட வேண்டிய அவசியமில்லை. இப்போது தெரிந்து கொண்டோம் அதைப் பதிவு செய்துகொள்வோம்.
  • இன்னும் கேட்க வேண்டிய கேள்விகளையும் இன்னும் பல ஆராய்ச்சிகளுக்கும் இது இட்டுச் செல்ல வேண்டும். அவர்களுடைய ஆராய்ச்சியில் வெறும் கூகுளிங் மட்டும் செய்தே உண்மையைச் சொல்லுகிறார்கள். ஆனால் அது மட்டும் உண்மையைச் சொல்லி விடாது. ஏனெனில் அது எல்லாவற்றையும் காட்டும். ஆழ்ந்த ஆராய்ச்சி தேவைப் படுகிறது [கூகுல் பற்றி எழுதி விட்டேன் அது என்னைத் தடை செய்து விடுமோ - தெரியவில்லை. உடான்சுக்கு எதிராக நான் ஒன்றுமே எழுதவில்லை ஆனால் ஏனோ  தெரியவில்லை என்னை ப்ளாக் செய்திருகிறார்கள். எதுவும் எழுத முடியவில்லைடா சாமி ... ]

  • போதி தர்மர் மட்டுமல்ல அவரோடு சேர்ந்து கற்றுக் கொண்ட, இங்கேயே இருந்த மக்களின் வரலாறு என்ன ஆனது? இங்கே அது வளராமல் போனதற்கான காரணம் என்ன? அறிவியல் நம்பிக்கைகளை மூட நம்பிக்கைகளாக மாற்றியது எது? அல்லது மாறிப் போனது எப்போது?, என்கிற நிறைய கேள்விகளை இது கொண்டுவருகிறது.  அவைகளை மீண்டும் எழுப்புவது, ஆய்வது நமது கையில்தான் இருக்கிறது.
  • இது தமிழரின் பெருமை பாராட்ட மட்டுமல்ல -  
  • காப்புரிமை என்கிற பெயரில் நமது வளங்களை பறித்துக் கொண்டிருக்கிற சூழலை எதிர் கொள்வது எப்படி? அல்லது ஏற்கனவே மஞ்சள், வேப்ப இலை என்று பல பறி போன நிலையில் இருப்பதைக் காப்பாற்றுவது எப்படி? என்று அடுக்கடுக்கான கேள்விகள், நம்மை நாமே மீண்டும் மதிப்பிட்டுக் கொள்வதற்காகவும், நமது வாழ்வின் சூழலை மேம்படுத்துவதற்காகவும். .
  • இது போன்ற கேள்விகள் ஏற்கனவே கேட்கப் படாமல் இல்லை என்பது அர்த்தமல்ல. நீங்கள் கூகுளிங் செய்தாலே இதைப் பற்றிய விபரம் தெரியவரும். 
  • நம் உலகம் திரை உலகம் என்பதனால் ஒரு செய்தியை திரை வழி சொன்னால்தான் பேசப் படுகிறது. எனக்குத் தெரிந்து அந்த வேலையை இந்தப் படம் செய்திருக்கிறது.
  • அதில் சொல்லப் பட்டிருக்கிற செய்திகள் நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகளைக் கொண்டிருக்கிறது. சீனா நல்லவர்களைக் கொண்டிருந்தாலும் அதன் அரசு மென்வன்முறையை கட்டவிழ்த்து விடுகிற நாடாக இருக்கிறது என்பதும், அது இது போன்ற செயல்களைச் செய்வதற்குத் தயங்காது என்பதும் மனதில் வைத்து கொள்ளலாம். 
  • சீனா என்று மட்டுமல்ல, இன்றைக்கு மருந்து உற்பத்தி செய்கிற நாடுகளோ அல்லது ஆயதங்கள் உற்பத்தி செய்கிற நாடுகளோ எதுவாக இருந்தாலும் தங்களது பொருட்களை விற்பனை செய்வதற்கு எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள்.  ஆன்டி-வைரஸ் கம்பெனிகள் வைரஸ்களைப் பரப்பி தங்களது வைரஸ் பாதுகாப்புகளின் விற்பனையைப் பெருக்கிக் கொள்வது போல... 

ஜீன்களை உசுப்பேத்திவிட வேண்டும் என்பதல்ல - நம் மனதில் மறைந்து மறந்து போயிருக்கிற, மறைந்து போயிருக்கிற பல வரலாற்று உண்மைகளையும் உசுப்பி விட வேண்டியிருக்கிறது. {பூம்புகாரை வைத்தே ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது}

இது வெறும் பெருமைக்காக மட்டுமல்ல - தமிழர்களின் பொற்காலம் என்று சொல்லப்படுகிற கால கட்டங்களில் ரோமும், கிரேக்கமும், சீனாவும் கூட நாகரிகத்தில் வளர்ந்து இருந்தததாக சொல்லப் படுகிறது. அந்த ஒட்டு மொத்த நாகரிகமும் சில காலங்களில் அழிந்து போனது. அப்படியெனில் எது அவைகளிலிருந்து மாற்றியது என்கிற பறந்து பட்ட கேள்வியையும் முன்வைக்க வேண்டியிருக்கிறது. 



கொசுறு: 

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர்

நெறிப்படுத்தினரே. 
                       -  "மரபியல்" தொல்காப்பியம்  


நமக்கு ஆறறிவு இருந்தாலே போதும் - தமிழர்குலம் நிச்சயம் மாபெரும் குலமாய்  இருக்கும்.


3.10.11

வாசிப்பாளர்களை கவர்வது எப்படி?

முதலில் வந்ததுற்கு நன்றி - 

வாசிப்பாளர்களை கவர்வது எப்படி? என்கிற கேள்விக்கு இப்பதிவு முழுமையைப் பதில் சொல்லுமா என்பது தெரியாது. நான் பதிவுலகில் மீண்டும் நுழைந்த இந்த இரண்டு ஆண்டுகளில் மிக அதிகம் பார்க்கப் பட்ட ஒரு பதிவினை கொண்டு பதில் சொல்லலாமென்று நினைக்கிறேன்.

இதுவரைக்கும் எந்தப் பதிவுகளும் நோட்டமிடாதப் பட அளவுக்கு "சூப்பர் சிங்கர் கலாட்டா" பார்வையிடப் பட்டிருக்கிறது. இதுவரை ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு முறைக்கு மேல் பார்வையிடப் பட்டிருக்கிறது. இது எனக்கு உண்மையிலேயே மிகப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறது. பார்வையிட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி -

ரூம் போட்டு யோசித்து எழுதிய பதிவுகள் கூட சில சமயங்களில் நூறைத் தாண்டாது. ஆனால் நடைமுறையில் மிகவும் பாப்புலரான சினிமா, தொலைக் காட்சி, கிரிக்கெட் இவைகள்தான் அதிகம் வாசிக்கப் பட்டிருக்கிறது. இன்றும் வசிக்கப் படுகின்றன -

அதிகம் பார்வையாளர்களைக் கவர வேண்டும் என்கிற பதிவுலக நண்பர்கள் சினிமா, தொலைக் காட்சிகள் பற்றி எழுதலாம். மிகச் சிரமப் பட்டு தலைப் பெல்லாம்  தேட வேண்டியதில்லை. 

இது ஒரு விதத்தில் புரிந்து கொள்ளப் படக் கூடிய விஷயம்தான். ஏனெனில் இந்தியாவை விட்டு வெளியிலிருக்கிற நண்பர்கள் தங்களது பொழுது போக்கிற்காகவும் உற்சாகம் தரக் கூடிய பதிவுகளையும் தேடி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் இருக்கிற பார்வையாளர்களும் அப்படி இருப்பதைத் தான் புரிந்து கொள்ளக் கடினமாக இருக்கிறது. அதற்காக வெளியூரில் வசிப்பவர்கள் காத்திரமான பதிவுகளை வாசிப்பதில்லை என்றோ தமிழக வாசிப்பாளர்கள் சீரியசான விஷயங்களை படிப்பதில்லை என்றோ பொருள் கொள்ளக் கூடாது. அப்படி இருந்தால் நானும் எழுத முடியாது இங்கே யாரும் வந்து படிக்கவும் முடியாது.
சூப்பர் சிங்கரை படித்தவர்கள் எல்லாம் இந்தப் பதிவையும் பார்ப்பார்களா என்பது தெரியாது. ஆனாலும் நன்றிகள்.
ஒரு முக்கியமான விஷயம் - அதிகம் பார்க்கப் பட்ட இந்தப் பதிவு ஒருவரைக் கூட என் நண்பராக இந்த வலைப் பூவில் இணைய இழுத்து வரவில்லை. இந்த உண்மையையும் பதிவு செய்ய வேண்டும்.

நான் இந்த ஆச்சரியத்தில் உறைந்து போக வில்லை - அதை விரும்பவும் இல்லை. மிக விரைவில் அல்லது நாளையே கூட அதிகமாக பார்வையாளர்களை கொண்டு வராத பதிவு ஒன்று வரும். அதிலேயே நான் நிறைவு கொள்ளுகிறேன்.

நன்றி

------------------------------------------------------
பின்னூட்டம்
இந்தப் பதிவை நான் எனது ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்ளவே எழுதினேன். கடந்த கட்டுரையும் ஒரு விஷயத்தை என் பார்வையில் இருந்தே அணுகினேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதைப் பகிர்ந்து கொண்டேன். அதோடு அதில் யாரும் நெருங்கி வர வில்லை என்கிற விஷயமும் ஆச்சரியத்தைத் தந்தது என்று சொன்னேன். அவ்வளவே.
அதனால் எல்லாரும் சீரியசாத் தான் பதில் எழுத வேண்டும் என்பது எனது வேண்டுகோள் அல்ல. ஒவ்வொருவரும் ஒரு தனித் தன்மையோடு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களது பதிவையும் மகிழ்வோடு படிக்கிறேன். சினிமா பற்றிய பதிவுகளையும் அல்லது கணணி பற்றிய தெளிவு கொடுக்கிற செய்திகளையும் படிக்கிறேன். அவர்கள் அப்படியே தொடர்ந்து எழுதவும் வேண்டும் என்பதும் என் ஆவல். நானும் இடையில் ஜாலியாகவும், மொக்கைப் பதிவுகளும் எழுதகிறேன். எல்லாமே நல்லா இருக்குன்னு என்னாலே சொல்ல முடியாது.
அதனால உங்கள் பாணியில், உங்களுக்கு நிறைவு தரும் விதத்தில் எழுதுங்கள். எல்லாம் கலந்து இருப்பதுதான் வாழ்க்கை - சோகம், மகிழ்ச்சி, சீரியசான தருணம் --
வாழ்க வளமுடன்.

26.9.11

எங்கேயும் எப்போதும்

இந்தத் திரைப்படம் நேற்று பார்த்தவுடன் எனது இரண்டு பதிவுகளை மீண்டும் பதிய வேண்டும் என்று தோன்றியது.

முதலாவது - நால் வழி மயானம் - இது விதியா [மே இந்த ஆண்டு]

  • கடந்த வருடம் மே மாத இறுதியில் என் நண்பர் ஒருவர் சாலை விபத்தில் இறந்தார். அதற்கு முன்பு பெங்களூரிலிருந்து சென்னைக்கு வேகமாக வந்தால் மூன்று மணி நேரத்திலும், கொஞ்சம் மெதுவாக வந்தால் மூன்றரை மணி நேரத்திலும் வரும் மற்றொரு நண்பர் இறந்தார். ஒருமுறை ப்ரார்த்தனாவில் 'இம்சை அரசன்' பார்க்க அடையாறு சிக்னலில் இருந்து கிளம்பி போனபோது அவரது வேகத்தில் நமக்கு மட்டுமல்ல வெளியிலிருப்பவர்களுக்கும் இம்சைதான். ஆனால் ஒரு த்ரில்லிங் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அவர்கள் இறந்த போது செய்வதறியாது நிற்கும் மனைவி, குழந்தைகள் இவர்களைப் பார்க்கிற போதுதான் மனம் செய்வதறியாது இருக்கிறது. த்ரில்லிங் எல்லாம் சுக்கு நூறாய்ப் போய் விடுகிறது.
  • நால்வழிச் சாலைகளினால் பயனே இல்லையா என்றெல்லாம் இல்லை. நமக்குப் பயன்படுத்தத் தெரியவில்லை என்றுதான் பொருள்.
  • வழுக்குசாலைகள். முன்பு முதல் நாள் இரவு பேருந்து எடுத்தால் அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு மேல்தான் சென்னைக்கு வந்து சேருவோம். அது படிப் படியாய் நேரம் குறைந்து இப்போது எவ்வளவு நேரத்தில் போகும் என்ற நேரத்தையே பேருந்துகளில் விளம்பரமாய் எழுதி வைத்து விடுகிறார்கள். ஆனால் நால்வழிச் சாலைகளில் பயங்கரத் தடைகள். ஒவ்வொரு ஊருக்கு நடுவிலும் குறுக்குச் சாலைகள். ஒரு பக்கமே செல்ல வேண்டிய சாலைகளில், சொந்த ஊரின் நண்பர்கள் பெற்றோலை சேமிக்க அதிலேயே எதிர்ப் புறம் வர, மாடுகள் குறுக்கே வர, டிராக்டர்கள் திடீரென முளைக்க, டாங்கர்கள் படீரென வளைக்க - இவைகளையெல்லாம் தாண்டி நான்கு நான்கரை மணி நேரத்தில் சென்னைக்குச் செல்லும் ஓட்டுனர்களின் வீரம் தான் தினம் தினம் நாள் வழிச் சாலையை மயானமாக்கிக் கொண்டிருக்கிறது.
  • கம்பியூட்டரை எதுக்குப் பயன்படுத்துரான்களோ இல்லையோ போலி உரிமம் வழங்க நிறையப் பயன் படுத்துகிறார்கள். இருநூற்றி ஐம்பது ரூபாய்க்கு உரிமம் வழங்கும் DTP சென்டர்கள் சென்னையில் நிறைய இருக்கின்றன.
  • மஞ்சள் கோடு, இடைவெளியிட்ட வெள்ளைக் கோடுகள், இடைவெளியில்லா வெள்ளைக் கோடுகள் இதற்கெல்லாம் என்ன அர்த்தம்னு எத்தனை ஓட்டுனர்களுக்குத் தெரியும் என்பதே பெரிய கேள்விக் குறிதான். indicator இல்லாத வண்டிகள்தான் அதிகம் - அப்படியே இருந்தாலும் அதைப் பயன்படுத்துவது இல்லை. எப்படிப் பயன்படுத்தனும்னு தெரியாது. வலது பக்க இண்டிகேட்டரை வலது பக்கம் திரும்பவும் பயன்படுத்துகிறார்கள், பின்னால் வரும் வண்டியை முன்னே போக அனுமதிக்கவும் பயன்படுத்துகிறார்கள். இவன் எதுக்குப் போடுறான்னு பின்னாடி வர்ற வண்டிக்கு எப்படிப் புரியும்? அவன் என்ன கடவுளா? நம்மை போகச் சொல்றான்னு பின்னாடி வர்றவன் முன்னாடிப் போக, முன்னாடிப் போறவனும் வலது பக்கம் திரும்ப அப்புறம் என்ன 'சங்குதான்.'
  • லேன்கள் உள்ள சாலைகளில் மெதுவாகப் போகிறவன் இடது பக்கம்தான் போக வேண்டும் - அப்போதுதான் overtake பண்றவன் அடுத்த லேனில் போக வசதியாக இருக்கும் - ஏனெனில் ஓட்டுனர் இருக்கை வலது புறம் தான் உள்ளது. ஆனால் இங்கே மெதுவாப் போறவன் வலது பக்கம் போறான் - எப்படி ஓவர்டேக் பண்ண முடியும் - அதுக்குத் தான் வண்டிக்கு கிளீனர் வேற... அப்பா சாமி...
  • நால்வழிச் சாலை என்பதால் வழுக்கிக் கொண்டு செல்லாம்னு லேட்டகக் கிளம்புவது - அப்புறம் ஓட்டுனரைக் குறை சொல்லவும் கூடாது. நேரத்தோடு கிளம்பி முன்பே போய் சேருவோம் என்கிற எண்ணம் இல்லாமல், லேட்டாகக்க் கிளம்பி மொத்தமாய்ப் போய்ச் சேருவதுதான் வழக்கமாய் இருக்கிறது.
  • ஓட்டுனர்களின் உணர்வு கட்டுப் பாடு என்பதும் இல்லாமல் போய் விட்டது. யார் மேலயாவது கோபம்னா அதை வண்டி ஓட்டும்போதுதான் காண்பிக்கிறோம். சைக்கிள் gap பில் ஆட்டோ ஓட்டுற ஆட்கள் தான் அதிகம்.
  • ஒட்டுனராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் விபத்தை ஒழிக்க முடியாது.

இரண்டாவது பதிவு
சாலை மரணம் - நவீனக் கொடை [கடந்த ஆண்டு - ஜூன்]
  • முன்பெல்லாம் யாராவது இறந்தால் எப்போது இறந்தார் என்று கேட்பார்கள். அவர் காலையில் இறந்தார் அல்லது மாலையில் இறந்தார் என்று பதில் கிடைக்கும். இப்போது யாரவது இறந்தால் - எங்கே இறந்தார் என்கிற கேள்வியும் அதற்கு பதிலாக - சாலையில் இறந்தார், அல்லது ஓடு பாதையில் இறந்தார் அல்லது ரயில் பாதையில் இறந்தார் என்கிற பதிலே கிடைக்கிறது.
  • முன்பு இறந்தவர் - இயற்கை எய்தினார் என்று சொல்வோம். ஆனால் இப்போது நடப்பதையெல்லாம் பார்த்தால் இயற்கை எய்தினார் என்று சொல்வதற்கு மனம் ஒப்பவில்லை, ஏனெனில், பலரது வாழ்க்கை முடிதல் என்பது செயற்கையாகவே முடிகிறது அல்லது முடிக்கப்படுகிறது.
  • மானிட உயிர் விலை மதிப்பற்றது. ஆனால் ஏன்தான் நமது ஊர்களில் இப்படி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன என்பது தெரியவில்லை.
  • சாலை ஒழுங்குகள் இன்னும் சரிவர கடைபிடிக்கப் படுவதில்லை என்பதைக் காட்டிலும், அதை நடைமுறைப் படுத்துவதற்கு அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்கிற குற்றச் சாட்டை முதன்மைப் படுத்தலாம். உள்ள விதிகளை எல்லாரும் கடைப் பிடிப்பதற்கும் அல்லது அனைவரும் அறிந்து கொள்வதற்கும் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. எதெற்கெல்லாமோ இந்த அரசுகள் விளம்பரம் மேற்கொள்கின்றார்கள். அதைத் திறக்கிறார்கள், இதற்கு மாலையிடுகிறார்கள், அவருக்குப் பிறந்த நாள், இவருக்கு நினைவு நாள் - சாலை விதிகளை மதித்தது நடப்பது பற்றி விளம்பரம் குடுத்தால் குறைந்தா போவார்கள். சரி கஜானாவில் காசு இல்லையென்றால், உள்ள அனைத்து ஊடகங்களும் இதை வெளியிட வேண்டும் என்று ஒரு சட்டம் போட்டால் செய்ய முடியாதா என்ன?
  • சரி - ஒழுங்காக ஓட்டுனர்களுக்கான உரிமம் வழங்கப் படுகிறதா? அதுவும் இல்லை. ....

இரண்டையும் முழுமையாய் படிக்க கீழே சொடுக்கவும்.

நால்வழி மயானம்

சாலை மரணம் நவீனக் கொடை

இனி சில வார்த்தைகள்

நேரெதிரே மோதிக்கொள்ளும் பேருந்துகளின் பயணிகளின் ஊடகப் பயணிக்கும் ஒரு கதை. இதை வெறும் திரைப் படமாக மட்டும் அழகியல் நோக்கில் பார்த்தாலும், வாழ்வின் நிகழ்வுகளை மிகவும் கச்சிதமாய்ச் சொல்லியிருக்கும் படம் என்று பார்த்தாலும் அதைப் பற்றி பேசுவதற்கு இந்தப் படத்தில் நிறைய இருக்கின்றது. இந்தத் திரைப் படத்திற்குப் பிறகு எல்லா ஓட்டுனர்களின் மனதிலும் குறைந்தது மீண்டும் வீட்டுக்குப் போகும் வரையாவது மிகவும் கவனமாகப் போகிற அளவுக்கானத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மட்டும் நிச்சயம்.

"திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" - அது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு "ஓட்டுனராய்ப் பார்த்து திருந்தா விட்டால் விபத்தை ஒழிக்க முடியாது" என்பதை மட்டும் சொல்லலாம்.

இந்தப் படம் வெளி வந்த பிறகு விபத்துக்கள் குறைந்திருக்கிறதா என்று யாராவது ஆய்வு செய்யலாம். குறையவில்லையெனில் - வெறும் ஓட்டுனர்களின் கவனமின்மையைச் சொல்லித் தப்பித்துக் கொள்ள முடியுமா என்று தெரிவில்லை. ஏனெனில் திருடர்கள் திருடவதற்கான அல்லது அதில் நுழைவதற்கான பல சமூகக் காரணிகள் உண்டு. அது போலவே ஓட்டுனர்களும் யாரும் தான் வேண்டுமென்றே விபத்தை உருவாக்குவதும் இல்லை. அந்தக் காரணிகளும் அலசப் பட வேண்டியிருக்கிறது.

ஆனால் ஓட்டுனர்கள் இன்னும் சிறிதே முயன்றால் - பல விபத்துக்களை தினம் தினம் தவிர்ப்பது போல இன்னும் நிறையத் தவிர்க்கலாம்.

நாம் அதன் அங்கமாய் இல்லாத வரை இது எங்கேயோ எப்போதும் நடப்பதுதான். நாம் அதில் உள்ளபோதே நமக்குத் தெரியும் - இது இங்கேயும் இப்போதும் நடந்தது விட்டதே என்று - அதை உணர்வதற்கான அளவிற்கான நினைவிருந்தால்.  


எப்போதாவது நடந்தால்தான் விபத்து - எங்கேயும் எப்போதும் நடந்தால் அது என்ன?