தீவிரவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீவிரவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12.5.13

உண்மையான தேச பக்தர்கள் - கைதிகளே

தேச பக்தி கைதிகள்

  • பாகிஸ்தானிய சிறையில் கடந்த வாரம் சக கைதிகளால் தாக்கப்பட்ட சரப்ஜித்சிங் மரணமடைந்தார். எதனால் பாகிஸ்தானிய கைதிகள் அவரை தாக்கினார்கள்? அரசின் தூண்டுதலாக இருக்கலாம் அல்லது தற்செயலாக  நடந்த ஒரு நிகழ்வாக கூட இருக்கலாம்.
  • இந்த செய்தி வந்த உடனேயே ஜம்மு சிறையில் இருந்த பாகிஸ்தானிய சனாவுல்லா இந்தியக் கைதிகளால் தாக்கப் பட்டிருக்கிறார். இது நிச்சயமாக அரசின் தூண்டுதலின்றி  நிகழ வாய்ப்பே இல்லை. ஆனால் இதை யாராலும் நிரூபிக்க முடியாது. ஆனால் எதனால் இந்தத் தாக்குதல்கள் இங்கே நடந்தது? இந்திய தேசத்தின் மீது மிகுந்த பற்று கொண்ட பல பாரத மகன்கள் தவறாக தீர்ப்பளிக்கப் பட்டு சிறையில் இருக்கிறார்கள் போல தெரிகிறது. பாகிஸ்தான் சிறையில் கொல்லப்பட்ட ஒரு கைதிக்காக ராணுவ வீரர்கள் கூட கொதித்தெழாத நிலையில் இந்த சிறைமகன்கள்  உடனே பழி வாங்கினால் இவர்களைக் காட்டிலும் தேச பக்தி மிகுந்தவர்கள் யாராவது உண்டு என்று சொல்ல முடியுமா? இவர்களுக்குத்தான் நாட்டின்  குடிமகன்களுக்கான விருதைக் கொடுக்க வேண்டுமென நமது குடியரசுத் தலைவரை வேண்டி விருபிக் கேட்டுக் கொள்கிறேன்.
  • பாகிஸ்தான் சிறையில் கொல்லப்பட்ட இந்தியப் பிரஜைக்கு ஆதரவாக பாகிஸ்தானை வம்புக்கு இழுத்த அனைத்து அரசியல்வாதிகளும், இந்தியப் பிரதமரும் பாகிஸ்தானிய கைதி இந்தியச் சிறையில் இறந்ததற்காக "இந்தியா ஒரு காட்டு மிராண்டி அரசு" என்று சொல்ல  முன்வருவார்களா வர முடியுமா? ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு என்று சொல்லுவார்கள். 
வடக்கே ஒருவிதமான பக்தி என்றால் தெற்கே வேறு விதமான பக்தி நடக்கிறது.  வடக்கே சிறைக்குள் கலவரம் என்றால் இங்கே சிறை வைத்ததால் வெளியே கலவரம்.  அப்பா தியாகிகள் உள்ளே இருக்கிறார்கள் கலவரக் காரர்கள் வெளியே இருக்கிறார்கள் என்று அர்த்தமா? தெரியவில்லை.

பா.ம.வை ஒழிக்க சதி என்று அதன் முக்கிய நிறுவனர் சொல்லுகிறார். ஆளுநரிடம் மனு கொடுக்கிறார்.
தமிழக மக்களை ஒழிக்க சதி செய்கிறார் அவர் என்று நாம் யாரிடம் மனு கொடுப்பது?

எனக்கு ஒரு பட்டுதான் நினைவுக்கு வருகிறது...
தாஸ் தாஸ் சின்னப்பா தாஸ் தாஸ் ... பள்ளிக் கூடம் போகமலே பாடங்களை .... அவர் கூட மனசு மாறினதா பாரதிராஜா சொல்றாரு... பள்ளிக்கூடம் போய்  பாடம் படிச்சு மருத்துவராகி.... ரத்தம் எல்லாம் ஒண்ணுன்னு பார்த்தவங்க இன்னும் சாதி சாதின்னு பேசுறாகளே இதென்ன படிச்சு வாங்கின பட்டமா...

இதுக்காக சிறைச்சாலை போற மாதிரி செயல்கள் செய்து, பேசி... அந்தப் பக்தியை நிலை நாட்டுறாக ... அப்படியாவது தினமும் அவர்களைப் பற்றி நாம் எல்லாரும் பேசுறோம்லையா ...

21.4.13

பாஸ்டனின் நிகழ்வுக்குப் பின்

மிகவும் சிறப்பு வாய்ந்த பாஸ்டன் மாரத்தான் நிகழ்வு முடிவு பெரும் தருவாயில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்து மூன்று பேர் இறந்து விட ஏறக்குறைய 170 நபர்கள் படுகாயம் அடைந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த செய்தியையே நான் இரண்டு நாட்கள் கழித்துத் தான் அறிந்து கொண்டேன்.

அமெரிக்காவின் மீதான தாக்குதல்கள் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தவை. காரணங்கள் பல.  பராக் ஒபாமா இதைப் பற்றி என்ன சொல்கிறார் என்பதைப் பற்றி அறிவதற்கான ஆர்வம்தான் எனக்கு அதிகமானது.

ஒபாமாவின் பேச்சைக் கேட்ட பிறகு எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவர் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் இந்நேரம் அல் கொய்தா வை வம்ம்புக்கு இழுத்திருப்பார்கள். இதே இந்தியாவில் நடந்திருந்தால் இந்நேரம் பாகிஸ்தான் காரணம் என்று உடனேயே சவால் விட்டிருப்பார்கள்.

இதற்கான காரணம் - யார் செய்தது என்று தெரியவில்லை - மிக விரைவில் கண்டு பிடிப்பார்கள் என்று ஒபாமா சொன்னார்.
நமது அரசியல் வாதிகளும் அங்கேயே பிரச்சனைகளுக்கு உரமிடும் புஷ் போன்றவர்களும் இதைக் கற்றுக் கொள்வது நல்லது.

எதற்கெடுத்தாலும் கையில் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு பள்ளிக் கல்லூரிகளுக்குச் சென்று பார்க்கிறவர்களைஎல்லாம்  சுட்டுத் தள்ளும் அமெரிக்க கலாச்சாரத்தின் போக்கையும், அதற்குப் பின் அவர்கள் மனநலம் அற்றவர்கள் என்று தப்பித்துக் கொள்ளும் மன நிலையையும் மாற்றுவதற்கு முதலில் அமெரிக்கர்கள் முயல வேண்டும். அதைச் செய்தாலே பாதிப் பிரச்சனை முடிந்து விடும்.

ஏப்ரல் மாத தொடக்கத்தில் நாட்டோ படைகள் நடத்திய தாக்குதலில் பச்சிளம் குழந்தைகள் கொல்லப் பட்ட செய்தி இந்த அளவிற்கு உலகக் கவனத்தைப் பெற வில்லை என்பதும் இதனால்தான்  ஒபாமா அடக்கி வாசித்தாரோ என்றும் அல்லது இந்தச் செய்தியை மறைக்க அமெரிக்க நடத்தும் நாடகமா இந்த குண்டு வெடிப்பு என்று கேட்பது தவறில்லை என்றே தோன்றுகிறது.




பாஸ்டனுக்கும் பெங்களூருக்கும் என்ன தொடர்போ தெரியவில்லை இங்கேயும் குண்டுவெடிப்பு. ஆனால் உடனேயே இது தீவிரவாதம் என்றும், பி. ஜே. பி யின் அலுவலகத்தை டார்கெட் செய்திருக்கிறார்கள் என்று சொல்லுவது மே மாதம் ஐந்தாம் தேதிக்கு ஆதரவைத் தேடும் யுத்தி என்றே தெரிகிறது. இரண்டு கார்களுக்கு நடுவில், தமிழ் நாட்டு ரெஜிஸ்ட்ரேஷன் தகட்டோடு என்பது வேண்டுமென்றே திட்டமிட்டிருப்பது போலவே தெரிகிறது.

இவைகளையெல்லாம் பார்க்கிற பொது நம்மை நாமே அழித்துக் கொள்வதற்கான சுலபமான வழிகளை ஏற்படுத்தித் தருவதே விஞ்ஞானம்தான் என்பதில் நம்பிக்கை அதிகமாகிறது.
நவீனம் என்பது என்ன... மொத்தமாய் சாவதா? பயந்து பயந்தே வாழ்வதா?

தங்களது ஆதாயத்திற்காக தீவிரவாதம் என்ற லேபிலை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோமா?

24.9.12

அன்பின் வன்முறை ....

இஸ்லாமியர்களின் ஒட்டு மொத்தக் குரல் உலகம் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய ஒரு வாரத்திற்கு மேலாகியும் அது குறைவதாய்த் தெரியவில்லை. அநேகமாக இன்னும் அதிகமாகலாம்.

அமெரிக்காவைச் சேர்ந்த முறையான அடையாளம் இல்லாத ஓர் அமெரிக்க யூதர் இஸ்லாமியர்களின் மீது மிகுந்த வெறியோடு, எந்தவிதமான அடிப்படைத் தரவுகளுமின்றி மிக மோசமான ஒரு குறும் படத்தை இயக்கப் போக உலகமெங்கும் இருக்கிற இஸ்லாமியர்கள் ஒட்டு மொத்தமாக அமெரிக்காவிற்கு எதிராகத் திரும்பியிருக்கிறார்கள். 

லிபியாவில் அமெரிக்க தூதர் கொல்லப் பட்டதாகவும் அவரோடு இணைந்து மேலும் இருவரும், பாகிஸ்தானில் இதுவரை பத்தொன்பது நபர்களும் கொல்லப்  பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் பாகிஸ்தானில் கொல்லப்பட்டவர்கள் அமெரிக்கர்கள் இல்லை - அவர்களும் பாகிஸ்தானியர்கள் என்றே நினைக்கிறேன்.

இதோடு இணைந்து இந்த சமயத்தில் பிரெஞ்சு பத்திரிகை ஒன்று நபிகளின் கார்ட்டூன் ஒன்று வெளியிட இந்தப் பிரச்சனை இன்னும் அதிகமாகிறது. மத சம்மந்தப் பட்ட கோட்பாடுகளில் கைய வைக்கிற யாரும் மிகக் கவனமாய் இருக்க வேண்டியது அவசியம். ஒரு தீப் பொறி ஒரு காட்டை அழிக்கும் வல்லமை படைத்தது என்பதை இந்த நிகழ்வு சுட்டிக் காட்டுகிறது. அமெரிக்கர்கள் கிறித்தவக் கடவுளைக் கிண்டலித்து பழகிப் போனவர்கள். இப்போது அவர்களின் கோபம் இஸ்லாமியர்கள் பக்கம் திரும்பியிருக்கின்றது. இதை அவர்கள் கருத்துச் சுதந்திரம் என்று நியாயப் படுத்தலாம். ஆனால் இது அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்ளப் படாது. ஏற்றுக் கொள்ளவும் முடியாது.

உலகின் எல்லா நாடுகளும் ஒருங்கே அமெரிக்காவின் கருத்துச் சுதந்திரம் என்கிற கோட்பாட்டை அவர்கள் பாணியில் யாரும் புரிந்து கொள்ள முடியாது. அப்படி எல்லாரும் அதே விதமாகத்தான் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஏற்றுக் கொண்டதாகத் தான் அது இருக்கும். 

ஒரு மனிதனின் தவறான கருத்தை கடுமையாக எதிர்க்க வேண்டியது அவசியம்தான். ஆனால் அதற்காக வன்முறை எதிப்பை ஒரு போதும் நியாயப் படுத்த முடியாது.  

அடிப்படையில் எல்லாம் சமயங்களும் 
அன்பைப் போதிப்பவைகளாகவே இருக்கின்றன. 
ஆனால், அதில் இருக்கும் உறுப்பினர்கள்
தாங்கள் போதிக்கும் அன்பே உயர்ந்தது என்று சண்டையிடப் போய் 
அவர்கள் அனைவரும் 
தாங்கள் போதிக்கும் அன்பிற்கு எதிரானவர்களாகவே ஆகி விடுகின்றனர். ஆனால் இதை அவர்கள் உணராமல் இருப்பதுதான் 
பிரச்சனையின்  ஆணிவேரே.

கொசுறு:

இன்னொசென்ஸ் ஆப் முஸ்லீம்ஸ் - முழு ஸ்கிரிப்ட் - சொடுக்கவும்.



7.10.11

சாமியின் மூன்று படிப்பினைகளும் ஐந்து இலக்குகளும்


சுப்பிரமணி சாமி எப்படியும் தன்னை எப்போதும் மீடியாவின் பார்வைக்குள் வைத்திருக்கும் ஒரு வசியக்காரர். சில சமயம் காமெடியன் போலப் பேசுவார் - சில சமயம் மந்திரக் காரர் போலப் பேசுவார் - சில சமயம் விசயக் காரார் போலப் பேசுவார். இந்தியா தீவிர வாதிகளிடமிருந்து காப்பாற்றப் பட வேண்டுமென்பதில் நாம் என்ன படிப்பினைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தனது ஐந்து strategic திட்டங்களையும் ஒரு கட்டுரையாக [சூலை பதினாறு] வடிக்கப் போய் வழக்கை எதிர் நோக்கியிருக்கும் ஒரு ... தீவிர வாதி?

அப்படி என்ன குழப்பத்தை விளைவிக்கும் அளவுக்கு அதில் இருந்தது என்பதை சுருக்கித் தந்திருக்கிறேன். ஆங்கிலத்தில் படிக்க கீழ்க்கண்ட இணையத்தில் படிக்கலாம். 
சில முன்முடிவுகளோடு தான் அவர் தொடங்குகிறார். தீவிரவாதிகள் இஸ்லாமியர்கள் மட்டுமே. அவர்கள்தான் எல்லாவற்றிற்கும் காரணம்.

இதில் எழுதப் பட்டிருப்பவை அனைத்தும் சுப்பிரமணி சாமியின் கருத்துக்களே - எனது கோணக் கேள்விகள் மட்டும் சிவப்பில்.
அவரின் கட்டுரைக்கு  ஆதாரம்:
http://www.dnaindia.com/analysis/comment_analysis-how-to-wipe-out-islamic-terror_1566203-all

அவரது படிப்பினை ஒன்று -
இஸ்லாமிய தீவிர வாதத்தில் ஒரு இந்து இறந்தால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்துவும் கொஞ்சம் கொஞ்சமாய் இறக்கிறான். எனவே இந்துக்கள் கூட்டு மன நிலையோடு இந்து என்பதில் ஒன்றிணைய வேண்டும். இதில் இஸ்லாமியர்களும் தங்களது முன்னோர்கள் இந்துக்கள் என்பதை உணர்ந்து இதில் ஒன்றிணைய வேண்டும். அப்படி எல்லாரும் சேர்ந்து இந்து ஆட்சியை நிறுவ வேண்டும்.
ஒவ்வொரு இஸ்லாமியனும் இறக்கும் போதும் எல்லா இஸ்லாமியர்களும்தானே இறக்கிறார்கள். நீங்கள் சரியென்றால் அவர்களும் சரிதானே?
 

இரண்டாவது படிப்பினை
எது நடந்தாலும் இஸ்லாமியத் தீவிர வாதத்தின் மிரட்டலுக்குப் பணியக் கூடாது.
சரி

மூன்றாவது படிப்பினை
எவ்வளவு குறைவான தீவிர வாதமாக இருந்தாலும் இந்திய இந்துக்கள் முழுவதும் ஒன்றிணைத்து தங்களது முழு எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். உதாரணத்திற்கு, அயோத்யா கோவில் தாக்கப் பட்டத்திற்கு உடனே அங்கே ராம் கோவில் கட்டியிருக்க வேண்டும்.
இஸ்லாமியர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து அதே இடத்திலேயே மசூதி கட்டனுமா?

பரிந்துரைக்கும் ஐந்து STRATEGIC இலக்குகள்

ஒன்று - ஜம்மு காஷ்மீர் விவகாரம் - இதில் அரசு அதற்குக் கொடுத்திருக்கிற சிறப்பு ஸ்டேடசை ரத்து செய்து விட்டு அங்கே முன்னாள் ராணுவ வீரர்களை குடியமர்த்தி அதை இந்துக்களின் இடமாகவும், தொடர்ந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலும் அமைக்க வேண்டும்.
பாகிஸ்தான் பார்டரில்  இந்துக்களைக் குடியமர்த்தலாம் - நீங்கள் முதல் ஆளா? ராஜ பக்ஷே அங்கே பண்றதுக்கும் இதுக்கும் பெர்ய வித்யாசம் இல்லையே. அவர்தான் உங்கள் குருவா?
இரண்டு - கோவில்களில் வெடிவைத்து இந்துக்களைக் கொள்ளும் அவர்களின் முயற்சிகளுக்கு பதிலடியா இந்துக்கள் கோவில்களுக்கு அருகில் உள்ள ஏறக்குறைய முன்னூறு மசூதிகளை உடனடியாக அகற்றுதல்.
அப்படியே இஸ்லாமியர்களும் தங்கள் மசூதிக்கு அருகில் உள்ள 300 கோவில்களை அகற்றலாமா?
மூன்று - இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற முயற்சிக்கும் அவர்களது முயற்சிக்கு -
எல்லாருக்கும் ஒரே மாதிரியான சட்ட நடைமுறையை முன்னிறுத்தி, தங்களது முன்னோர் இந்துக்கள் என்று ஏற்றுக்கொள்ளுகிரவர்களுக்கு மட்டும் வாக்குரிமை அளித்து இந்தியா என்பதை ஹிந்துஸ்தான் என்று மாற்ற வேண்டும்.
எங்கள் முன்னோர்கள் புத்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால் ஓட்டுரிமை இல்லையா? எங்கள் முன்னோர்கள் மதங்களற்ற வானரங்கள் என்று ஏற்றுக் கொண்டால் ஓட்டுரிமை இல்லையா?
நான்கு - குடும்பக் கட்டுப் பாட்டுக்கு ஒத்துழைக்காத அந்த முஸ்லிம்களுக்கு - பதிலடியாக மத மாற்றத்தைத் தடை செய்வது - ஆனால் இந்துக்களாக யாரும் மாறுவதற்கு தடை விதிக்கப் படக் கூடாது. சாதி என்பது பிறப்பால் அல்ல மாறாக அது ஒழுக்க நெறி என்று அறிவிப்பது. இந்துக்கள் அல்லாதவர்கள் மீண்டும் இந்துக்களாக வரும் போது அவர்கள் விரும்பும் சாதியைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைக் கொடுப்பது.
உங்கள் அறிவிப்பில் எல்லாம் சரியாகி விடுமா? அப்பா சாதி ஒழியக் கூடாது - அதுதானே உங்கள் நோக்கம்.
ஐந்தாவது - இந்து மன நிலையை வேகமாக வளரச் செய்வது.
அதாவது சாதி மன நிலை அப்படித்தானே?

முடிவில் -
"Even if half the Hindu voters are persuaded to collectively vote as Hindus, and for a party sincerely committed to a Hindu agenda, then we can forge an instrument for change. And that is the bottom line in the strategy to deter terrorism in a democratic Hindustan at this moment of truth." - சுப்ரமணிய சுவாமி


இது நூற்றி ஐம்பதாவது பதிவு

13.9.11

இரட்டைக் கோபுரம் - நினைவலைகள்


இரட்டைக் கோபுரம் தகர்க்கப் பட்ட பத்தாம் ஆண்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சில தினங்களுக்கு முன் நடை பெற்றது. ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு இழப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்வு மிகப்பெரிய மோசமான இழப்பாகப் பேசப்பட்டது. இதில் தவறேதும் இல்லை. எந்த ஒரு நாட்டின் குடிமகனும் இவ்வளவு பெரிய இழப்பை அப்படித்தான் பார்க்க வேண்டும். சர்வதேச அரங்கமும் இதனை மிகுந்த வேதனையோடும் அக்கறையோடும் கண்டித்தது. அதனால் பிறகு ஏற்பட்ட போரும் அதனால் இறந்தவர்களும் பற்றிய விபரங்கள் எல்லாருக்கும் தெரியும்.

அமெரிக்காவின் இந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நிச்சயமாக அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாததுதான். அவர்களுக்கு அனுதாபங்கள்.

ஆனால் அதற்குப் பிறகு அவர்கள் அதிகக் கவனம் செலுத்தியிருக்க வேண்டியது அரசியல் ரீதியான தீர்வு. அந்தத் தீர்வு போர் என்கிற முழக்கத்தோடு எழுந்ததும் அதை மக்கள் எல்லாரும் முழுமையாக ஆதரித்ததும்தான். தங்களுடைய பாதுகாப்பு என்கிற ஒரு முழக்கம் அமெரிக்க மக்களை எல்லாம் ஒன்றினைத்தது. உணர்ச்சி வேகத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுகிற ஒரு அரசியல்வாதியாக புஷ் மிக நன்றாகவே செயல் பட்டுக் கொண்டார். தனது செல்வாக்கு சரிந்திருந்த நேரத்தில் இந்த வாய்ப்பை அவர் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார்.

தனது செல்வாக்கை மீட்பதற்காக அவரது திட்டத்தின் கீழேயே இந்த வகைத் தாக்குதல் நடத்தப் பட்டாக சிலர் கேள்விக்கு உள்ளாக்கினார்கள்.

ஆனால் போர் என்பது மட்டுமே மிகச் சிறந்த தாரக மந்திரமாக இருந்தது. அதில் மிகச் சிறப்பாகத் தன் செல்வாக்கைக் காப்பாற்றிக் கொண்டார் புஷ். நமது அரசியல் வாதிகளுக்கு மேலாக செயல் பட்ட புஷ் அமெரிக்கப் பாதுகாப்பு என்கிற ஒற்றை மந்திரத்தில் எல்லாவற்றையும் நியாயப் படுத்தவும் செய்தார். ஒரு பிரச்சனை வருகிற போது அதிலிருந்து மீள்வதற்கு பாதுகாப்பு பிரச்னையை கையில் எடுப்பதே நமது அரசியல் வாதிகளுக்கு கை வந்த கலையாகிவிட்டது. இந்தியாவில் ஒவ்வொரு முறை அரசியல் குழப்பங்கள் வருகிற போதும் ஒரு வெடி வெடிக்கிறது!

டவர் பற்றிய ஆயிரமாயிரம் கேள்விகள் இன்னும் விடையளிக்கப் படாமலேயே இருக்கின்றன? அதெப்படி ஒருகட்டிடத்தை தரை மட்டமாக்க வெடிவைத்து தகர்பதைப் போல அந்த டவர் இடிந்து விழும் என்கிற கேள்விகளுக்கு இன்று வரை பதில் இல்லை. எப்படி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இன்றுவரை சில கேள்விகளுக்கு பதில் இல்லையோ அதே போல அதிலும். ஆனால் சிலர் டார்கெட் செய்யப்பட்டு கொலை செய்யப் பட்டார்கள் அல்லது தண்டிக்கப் பட்டார்கள். கவுண்டமணி சொல்வது போல அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!

இந்த விடயத்திற்காக அமெரிக்க தொடுத்தபோரை நியாப் படுத்திய மேற்குலக நாடுகள் [சில ஐரோப்பிய நாடுகளைத் தவிர] ஏன் அவ்வாறு செய்தன என்பதற்கு ஆயில் என்கிற ஒரே வார்த்தையிலேயே பதில் சொல்லிவிட முடியும். அது மட்டுமல்ல - இன்றைக்கு அமெரிக்க சந்திக்கும் இந்த பொருளாதார நெருக்கடிக்கு புஷ் மட்டுமே முக்கியமான காரணம் என்று கூட [வேறு சில காரணங்களும் இருந்தாலும்] சொல்ல முடியும்.

இன்றைக்கி லிபிய போராட்டங்களை ஆதரிக்கும் இதே உலக அரங்குகள் அல்லது தென் ஆப்பிரிக்காவில் இனவெறிக்கெதிரான போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த நாடுகள் ஏன் இலங்கையில் நடந்த விடுதலைப் போராட்டத்திற்கு மட்டும் ஆதரவு தர அவ்வளவு யோசித்தார்கள்?

அங்கே ஆயில் இருந்து அவர்களோடு புலிகள் சில ஒப்பந்தங்களைப் போட்டிருந்தால் - இந்தப் போராட்டம் எப்போதோ முடிவுக்குவந்திருக்கும் -

ஆயில்தான் ஒரு போராட்டத்திற்கான ஆதரவைத் தீர்மானிக்கும் என்றால் - இந்த அரசியலில், ஆசியாவில் நடக்கும், உண்மையான போராட்டங்களுக்கான அங்கீகாரம் கிடைக்க வெகு நாட்களாகும்.

அதுசரி ஆயிலுக்காக தன் மக்களையே காவு கொடுக்கத் துணிந்த அரசியல் வாதிகளிடம் இதை எதிர்பார்ப்பது நியாயமில்லைதான். இத்தனை ஆண்டுகள் செப்டம்பர் பதினொன்றே காலண்டரில் இல்லாதது மாதிரி இந்தப் பத்தாண்டுகளாகத் தான் அது இருப்பது போல பிரகடனப் படுத்தும் ஆற்றல் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே உண்டு.

எது எப்படியோ தனது குறைகளையெல்லாம் அமெரிக்க விசுவாசி என்கிற ஒரே போரவைக்குள் மறைத்து வைத்துக் கொண்டதைப் போலவே இங்கும் பலர் தான் இந்திய விசுவாசி என்கிற போர்வைக்குள் தங்களது தவறையும் அநீதிகளையும் மறைத்து வைக்கிறார்கள். காலம்தான் அவர்களைத் தோலுரிக்க வேண்டும். அதுவரை இன்னும் எத்தனை செப்டம்பர் பதினோரு வந்தாலும், புஷ்ஷே முன்னின்று அஞ்சலி செலுத்துவார்!!!

என்ன செய்வது - போராட்டங்கள் மழுங்கடிக்கப் படுகின்றன! பழிவாங்கல் ஜரூராக நடக்கின்றன.

8.9.11

பயங்கரவாதம் - ஓர் அதிர்ச்சியோடு

ஒவ்வொரு முறை குண்டு வெடிப்பு பற்றிப் படிக்கிற போதும் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது? தொலைதூரத்தில் இருக்கிற ஒருவனுக்கே இந்த அதிர்ச்சி என்றால், அருகில் இருப்பவனுக்கு, இதில் உயிர் இழந்த உறவினர், நண்பர்கள் இவர்களுக்கு இன்னும் எவ்வளவு, அதிர்ச்சி, சோகம், கோபம், இவைகளெல்லாம் இன்னும் உச்சத்தில் இருக்கும்.

இதோடு சம்பந்தப் படாத ஒரு நபராக இதைப் பற்றி எழுதுவது மிகவும் சுலபமானதுதான். ஆனால் அடிபட்டவனின் வலியும் வேதனையும் சொல்லி மாளாது.

நான் என்னையே கேட்டுக்கொள்வது இதுதான்? ஏன் இவர்கள் இத்தகைய அரக்கத்தனமான, கீழ்த்தரமான, கேவலமான, மனிதாபிமானமற்ற செயல்களைச் செய்யத் துணிகிறார்கள்?

ஒவ்வொருவனும் அவனது செயல்களை நியாயப் படுத்தவே செய்வான். தங்களது எதிர்ப்பைக் காட்ட, தங்களுக்கு இழைக்கப் பட்ட அநீதிகளுக்கான எதிர்ப்புக் குரலாக, ஒட்டு மொத்தக் கவனத்தையும் தங்கள் பக்கம் திருப்ப, பழி வாங்க, கொள்கைகளுக்கான குரலைப் பதிவு செய்ய என்று ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாத மனிதர்களை குண்டுகள் வைத்துக் கொல்லுவது ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப் பட முடியாது.

எந்தவிதத்திலும் யாராக இருந்தாலும் அரசாக இருந்தாலும், தனி அமைப்புகளாக இருந்தாலும் எல்லாம் பயங்கரவாதம்தான்.

எங்கும் யாரும் நிரபராதிகளோ, அல்லது குற்றவாளிகளோ கூட அரசால் கொலை செய்யப் படக் கூடாது என்கிற மனித நேயக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறவர்கள் கூட இத்தகைய குண்டு வெடிப்புகளினால் அமைதிக்குள்ளாக்கப் படுவார்கள்.

தெரியாத நபர் ஒருவரோடு, பேஸ் புக்கில் இது விடயமாகக் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டிருந்த போது அவர் சொன்னார் - "உனக்கு என்ன தெரியும் - மும்பையில் குண்டு வெடிப்பு நடந்த இடத்துக்கு அருகில் நான் இருந்தேன் - அதன் வலி தெரியுமா என்றார்" - ஸாரி என்கிற வார்த்தையோடு அந்தப் பரிமாற்றம் முடிந்து போனது - என்ன சொல்ல முடியும்?
இப்படி ஒவ்வொருவரும் அனுபவிக்கிற வலிக்கு அதேவழியில் திருப்பிக் கொடுத்தல் இன்னும் கீழ்த்தரமான நிகழ்வுகளைத் தானே கொண்டு சேர்க்கும்.

அரசுகள் நியாயமான போராட்டங்களுக்கு செவி சாய்த்தாலே பல விடயங்கள் சரியாகும். போராட்டங்களுக்கு அடக்கு முறை தீர்வாகும் என்று அரசு நினைத்தால் ... அல்லது அடக்கு முறைகளுக்கு குண்டிவெடிப்புதான் தீர்வு என்று நினைத்தால்... இன்னும் ...

அப்பாவிகளைக் கொன்று யாரும் எந்த நியாயத்தையும் நிலை நாட்ட முடியாது - எந்த அமைப்பாக இருந்தாலும் சரி. அடக்குமுறை கொண்டு அமைதியை நிலை நாட்ட முடியாது - எந்த அரசாக இருந்தாலும் சரி.

சுய லாபக் கணக்குகள், மந்தைகளாக மனிதர்களை நினைக்கும் அரசுகள், கருத்துக்களைத் தங்களுக்குள்ளே தெளிவாகப் பகிர்ந்து கொள்ளத் திராணி இல்லாத அரசியல் வாதிகள், எதிர்த் தரப்பு நியாயங்களை செவி கொடுத்தும் கேட்காத - கேட்க விரும்பாத "பண்டமென்டலிஸ்ட்டுகள்" நேர்மையான போராட்டங்கள் வழி நியாயம் கேட்க விரும்பாத கோழைகள் இவர்கள் இருக்கும் வரை எல்லாருக்கும் ஆபத்துதான்.

குண்டு வெடிப்பு கோழைகளின் ஆயுதம். அதற்கு - போராட்டத் தற்கொலைகள் ஆயிரம் மடங்கு மேலானதாவே தோன்றுகிறது.

நாளுக்கு நாள் குண்டு வெடிப்பு நடைபெறும் நிலையில் இதன் கோர முகத்தையும் கோழைத் தனத்தையும் வேரறுக்கும் வேலையையும் அதே சமயம், மனித நேயத்தை கைவிடாமல் இருக்க வேண்டிய அவசியமும் நமக்கு இருக்கிறது.

இதை அரசோ, குண்டு வெடிப்பாலிகளோ படிக்கப் போவதில்லை. நமக்குள் இந்த மனிதாபிமானம் பற்றிப் பேசியாவது அதை இன்னும் வாழ்விக்கச் செய்ய வேண்டியிருக்கிறது.

6.9.11

செல் வாங்கினால் மரண தண்டனை

மணி சங்கர அய்யர்  - ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை வேண்டாம்; ஆனால் இறக்கும் வரை சிறையில் வைத்திருக்க வேண்டும் - என்று மொழிந்திருக்கிறார்.

சுப்ரமணிசாமிக்கு இவர் எவ்வளவோ தேவலைதான். ஒரு விதத்தில் மரண தண்டனையே வேண்டாம் என்று கருதுவோர் இப்படி நினைப்பதில் தப்பில்லை. அப்படித்தான் மரண தண்டனை வேண்டாம் என்பவர்கள் சொல்லுகிறார்கள். அதில் தப்பில்லை. சில பயங்கரவாதக் குற்றங்களுக்கான தண்டனை இப்படி இருப்பதில் தப்பில்லைதான். 

ஆனால் மீண்டும் மீண்டும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை வழக்கப்பட்டுள்ள இம்மூவருக்கும் என்பதைத் தான் தலைவர்கள் சரியாகப் புரிந்து கொள்ள வில்லை - அல்லது புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். 

 இரண்டு விதங்களில் நாம் இந்த மூன்று விவகாரங்களையும் பார்க்கலாம். ஒன்று அவர்கள் மூவரும் பயங்கர வாதிகள். எனவே அவர்கள் குற்றவாளிகள். அவர்களுக்கான மரணதண்டனையை இறக்கும் வரையில் சிறையில் வைத்து தண்டனையை வழங்கலாம். பெரும்பாலனோர் அப்படித்தான் பார்க்கிறார்கள். இங்கேதான் இந்தப் போராட்டம் சரியாகப் புரிந்து கொள்ளப்பட வில்லை.

முக்கியமான விடயம் - அவர்கள் இரட்டை ஆயுள் தண்டனையோ அல்லது இறக்கும்வரை சிறையில் இருக்கும் தண்டனையோ அல்லது மரண தண்டனை வழங்கப்படும் அளவிற்கான தண்டனையை செய்திருக்கிறார்களா என்பதுதான்.

தனது மக்களையே கொன்று குவித்த சதாம் ஹுசைன் வழக்கு கூட மிகவும் வெளிப்படையாக நடந்தது - கேட்கப்பட்ட கேள்விகள் - அவரின் சாட்சியங்கள் என்று வெளியில் வந்தது. அனால் இவ்வழக்கு அப்படி நடத்தப் பட வில்லை.

 கேள்விக்குட்படுத்த வேண்டிய தலைவர்கள் பலர் வெளியில் இருக்கும் போது இந்தத் தண்டனை தவறு என்கிற விதத்தில்தான்.

விடுதலைப் புலிகள் இப்படிக் கருணைப் பிச்சை கேட்கலாமா என்று சாமி கேட்குறாரு. அவர்கள் விடுதலைப் புலிகள் இல்லை என்பதுதானே வாதமே! அது கூட அந்த ... அரசியல்வாதிக்குப் புரியவில்லை.

ஆனால் இந்த வழக்கில், நடந்த உள் கூத்துகளைப் பற்றி கேட்டுக் கேட்டு நமக்குப் போரடித்துப் போய் விட்டது.

ஒரு செல் [பாட்டரி] வாங்கிக் கொடுத்ததற்காக யாராவது மரண தண்டனை கொடுப்பார்களா?

எதற்கென்றே தெரியாமல் வாங்கிக் கொடுத்தாலும் தண்டனையா? அவர் தெரிந்தே வாங்கிக் கொடுத்தார் என்று வைத்துக் கொள்ளுங்கள் - அதற்காக தூக்குத்தண்டனையோ - இரட்டை ஆயுள் தண்டனையோ வழங்குவது எந்த விதத்தில் நியாயம்? அப்படியே அதற்கென்று மரன தண்டனை வழங்கினால் எல்லாருக்கும் தெரிந்த விதத்தில் வழக்கு நடத்தி இதே தீர்ப்பை வழங்கலாமே.

  • இது இப்படியே போனால் நாளை நீங்கள் யாருக்காவது டீயோ அல்லது பன்னோ வாங்கிக் கொடுத்தால், ஒருவேளை சிறைப் பிடிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை வழங்கப் படலாம். 
  • அல்லது வெளியிடங்களுக்குச் செல்லும்போது அவசர உதவி என்று ஒரு தமிழ் ஆள் என்று நின்றாலும், ஒருவரும் உதவி செய்ய மாட்டார்கள் - ஏனென்றால் நல்ல தமிழ் பேசினால் அவன் விடுதலைப்புலி அல்லது தீவிரவாதி. அதனால்தான் சாமி அப்படித் தமிழ் பேசுகிறார். அப்படி எல்லாரையும் நினைக்க வைக்க விரும்புகிறார்கள்.
  • இப்படியே போனால் தவிச்ச வாய்க்குத் தண்ணி கொடுக்கக் கூட நம்ம ஊர்ல ஆள் இருக்காது.
  •  தமிழகத்துல ஓரளவுக்கு தெரியாத ஆள் என்றாலும் முன்பெல்லாம் உதவி செய்தார்கள் - இனி அவசர உதவிக்குக் கூட நமக்கு பாஸ்போர்ட் - ஐடெண்டி கார்டு தேவைப்படும் - அப்படியே இருந்தாலும் உதவுவதற்கு ஆளிருக்காது.




4.9.11

சுப்பிரமணி சாமி - யின் பேட்டி


சுப்பிரமணி சாமி - யின்  பேட்டி ஒன்று புதியதலைமுறை டிவி யில் ஒளிபரப்ப பட்டதை பார்க்க நேர்ந்த்தது. ஜெயின் கமிஷன் அறிக்கையில் அவர்களை விசாரிக்க வேண்டும் என்று இருக்கிறதே இன்னும் இந்த வழக்கு முடியவில்லை எனவே இந்த மூன்று பேருக்கும் தண்டனை வழங்கக் கூடாது என்று சொல்லும் போது -
அதெல்லாம் முடிஞ்சிடுத்து - அவா யாரும் என் மேல வழக்குப் போடலை - நீங்கல்லாம் இந்தியாவின் எதிரிங்க - துரோகிகள் - அப்படின்னு பச்ச பச்சையாப் பேசுறாரு -
இருபத்தி ஒரு வருஷம் சிறையில இருந்தா அதுக்கு என்ன பண்ண முடியும் - அப்படிங்கிறாரு. இப்படிப் பட்ட தியாகிக்கு கறுப்புப் பூனைப் படை வேற? இந்தியாவைப் பிரிக்கிறது யாருங்க?

சுப்பிர மணியன் வெர்சஸ் சுபவீ பாருங்க 



 இவரு இன்னமும் தமிழ் நாட்டுக்கு எந்த விதத் தயக்கமும் இல்லாமல் வந்துட்டுப் போறது மட்டுமில்லாமல் - தனக்கு பதவி கொடுத்த மக்கள் மேல சேற்றையும் வீசுறாரு.

இத எங்க பொய் சொல்றது?

26.7.11

விபத்துகள் - அணு உலை - தீவிரவாதம்

  • அணு உலை பற்றிய பல விவாதங்கள் இன்னும் ஒரு முடிவுக்கு வருவதாய் இல்லை.
    • வளர்ச்சியடைந்த நாடுகள் தங்கள் தொழிழ் நுட்பத்தால் எதையும் சாதித்து விட முடியும் என்ற மமதையோடு இருந்தவர்களுக்கு வரிசையாக ஒன்று மாற்றி ஒன்று வந்து கொண்டே இருக்கிறது. ஜப்பானில் ஆரம்பித்தது - நில நடுக்கத்தால் வந்தது வினை. சில ஐரோப்பிய நாடுகள் முழித்துக் கொண்டன. ஜெர்மனி அதில் முதல் நாடாய் தெரிவித்தது. இத்தாலியில் மே மாதம் நடந்த பொது வாக்கெடுப்பில் மக்கள் அணு உலைக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள். [பொது வாக்கெடுப்பு எல்லாம் நம் ஊரில் நடக்குமா என்ன?] ஆனால் நாம் இப்போதுதான் அணு ஆயுத ஆலை அமைப்பதில் தீவிரமாக இருக்கிறோம். மிகவும் தரமான பொருட்களைத் தேர்ந்தெடுத்து, மக்கள் வசிக்காத பகுதிகளை தேர்ந்தெடுத்து  என்று .... பல வழிகளில் திட்டமிடும் அந்த நாடுகளே ஒதுங்கிப் போக வழி தேடும் போது நாம் இன்று எப்படித் திட்டமுடியும் என்பதை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டியிருக்கிறது?
  • இரயில் விபத்துக்கள் 
    • உலகத்தில் மிக நீளமான பாலத்தை கடல் மீது கட்டியிருக்கும் சீனாவில் நேருக்கு நேராக ரயில் மோதியிருக்கிறது. இந்தியாவில் இது நிறைய நடக்கிறது. என்ன அங்கே புல்லட் ரயில் மீது விபத்து நடக்கிறது. இங்கே இன்னும் நூறு கிலோமீட்டர் வேகத்தில் போகிறதே ரெகார்டாக இருக்கிறது. அப்படி இருந்தும் இங்கே விபத்துகள் பல்கிப் பெருகுவது எதனால்?
  • தீவிரவாதம் 
    • ஆண்டேர்ஸ் ப்ரைவிக் - ஏறக்குறை என்பத்தி ஐந்து பேரை தனி ஆளாக தேடித் தேடி சுட்டுக் கொன்றிருக்கிறான், கடந்த வெள்ளிக் கிழமை. 'ஐரோப்பிய நாடு பல பண்பாடுகளை உள்ளடிக்கிய நாடுகளாக மாறிக் கொண்டிருப்பதாகவும், ஐரோப்பிய நாடுகள் தங்களது தேசிய, பண்பாட்டு அடையாளங்களை இழந்து வருவதாகவும்' கூறி தனது கொலைகளுக்கு காரணம் கற்பித்து இருக்கிறான். இதன் மூலம் ஈழ அமைதிப் பேச்சுவார்த்தை மட்டுமல்ல, மிகவும் அமைதியான நாடு அனைவருக்கும் ஆதரவு கொடுக்கும் நாடு என்று எண்ணப்பட்ட நாட்டில் இது நடந்திருக்கிறது. தொடர்ந்து மும்பையில் தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு எந்தத் தீவிர வாத அமைப்பு காரணம் என்று தெரியவில்லை ஆனால் ஒவ்வொரு குண்டு வெடிப்பிலும் இழப்பு இரண்டு பக்கத்திற்கும்தான். 
இதனால் அறிவது என்னவென்றால்

- நம்மிடம் அணு உலை எதிர்ப்பு எப்போது வருமென்றால் நாம் அணு உலை அமைத்து அதில் விபத்துகள் வந்து அதனால் மிகப் பெரிய இழப்புகள் வந்தால்தான் நாம் அணுஉலை எதிர்ப்பு என்பது நமக்கெல்லாம் கனவாகும்.
- முன்னேறிய நாடுகளைப் போல தொழில் நுட்பத்தில் முன்னேறி முன்னூறு கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் போனால்தான் எப்போதாவது விபத்து ஏற்படும். இல்லையெனில் இப்போது போல அடிக்கடி ஏற்படும்.
- நாமும் நார்வேயைப்போல ஏற்கனவே அமைதியான நாடு என்று பெயர் எடுத்திருப்பதானால், இங்கேயும் தீவிர வாதம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அதனை இங்கே அரசியல் வாதிகளும் வளர்க்கிறார்கள்.

முடிவாக ...

  • முதலாவது நிகழ்வில் இயற்கையின் சதியினால் மக்கள் உயிரிழக்கிறார்கள் 
  • இரண்டாவது நிகழ்வில் , நமது கவனக்குறைவால் மக்கள் உயிர் இழக்கிறார்கள் 
  • மூன்றாவது நிகழ்வில் நமது அறிவீனம், திமிர், இவைகளினால் உயிர் இழக்கிறோம். 
    • ஈஸ்ட் அல்லது வெஸ்ட் எலாம் ஒரேமாதிரிதான் - சின்ன வித்தியாசம்... அது நமக்கே தெரியும்.

5.5.11

பின் லேடன் அழிப்பு (!) - இனிமேல் உலகம் அமைதியாய் இருக்குமா?

  • ஒபாமா தேர்தலுக்குத் தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்த போது, அவர் தன்னை இஸ்லாமியர்களிடமிருந்து வேறு படுத்திக் கொள்ளாமல் இருந்த தருணங்களில், ஒபாமாவை - ஒசாமா போல மீடியா சித்தரித்தது. "Justice is done" என்று ஒசாமைவைப் போட்டுத் தள்ளுவதை நேரில் பார்த்த பிறகு - எனது கட்டளைப் படி எல்லாம் நடந்தது என்று என்று சொன்னதன் வழியாய் தான் தீவிரவாதத்தின் எதிரி என்று நிலை நாட்டியிருக்கிறார்.
    • ஆனால் புஷ் சதாம் உசேனைப் பிடித்ததைச் சொன்ன போது அவரிடம் இருந்த கர்வமான சிரிப்பு ஒசாமைவைக் கொன்றதாகச் சொன்ன ஒபாமாவிடம் இல்லை. "JUSTICE" -
    • இவ்வளவு நாட்கள் இல்லாமல் திடீரென்று ground zero வுக்குச் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார் ஒபமா. 
    • இழந்த பாப்புலரிடியைப் பெற மனிதர்களின் emotion ஐத் தொடுவதையே எல்லா அரசியல் வாதிகளும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
  •  ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள் தங்களது பாதுகாப்பில் வைத்திருந்த பின் லேடனைப் பற்றிய தகவல்கள் எப்படி அமெரிக்காவிற்குத் தெரிந்தது என்றுதான் பாகிஸ்தானுக்கு ஒரே கவலை. இது பாகிஸ்தானுக்குத் தெரியாது என்று அந்த அரசு சொல்லுவதெல்லாம் நம்பும் படியாக இல்லை. இன்னைக்கு பந்த் இல்லை ஆனால் மவுன்ட் ரோடு காலியா இருந்தது அப்படின்னு சொல்றதை நம்புறவங்க வேண்ணா இதை நம்பலாம். இத்தனைக்குப் பிறகும், அமெரிக்கா பாகிஸ்தானுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டுதான் இருக்கும்.  இது இந்தியாவுக்குச் செக். 

  • அமெரிக்கா அடுத்த நாட்டின் எல்லைக்குள் அவர்களின் அனுமதி இன்றி எப்படி நுழைய முடியும் என்பதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை. உலகத்தின் அபாயகரமான தீவிரவாதியாக இருந்தால் கூட - தீவிரவாதிகளின் வன்முறையை விட இந்த அரசு அத்துமீறல் வன்முறைகள் ஆபத்தானவை. எங்கே தவறு நடந்தாலும், குற்றவாளி இருந்தாலும், தாங்களே தண்டிக்கப் பிறந்தவர்கள் என்கிற கர்வத்தை இது வளர்த்தெடுக்கும். இஸ்ரேலுக்கு இது அதிகமாக உண்டு. அமெரிக்காவும் அதற்குச் சளைத்தவர்கள் இல்லை. இத்தனைக்குப் பிறகும் பாகிஸ்தான் அமெரிக்காவுடன் கொஞ்சிக் குலாவும்.  இது இந்தியாவுக்குச் செக். 

  • உலகின் மிக அபாயகரமான  தீவிரவாதி இறந்துவிட்டான். இனிமேல் உலகம் அமைதியாய் இருக்கும் என்று சில பத்திரிகைகள் எழுதியிருக்கின்றன. பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

  • உலக வல்லரசு தான்தான் என்று மீண்டும் அமேரிக்கா நிலை நிறுத்தும் முயற்சியே இது. அமெரிக்க பிரஜைகள் குற்றவாளிகளாக இருந்தாலும், வேறு எந்த நாட்டிற்கும் அனுப்ப மறுக்கும் இந்த மனித உரிமையை மதிக்கும் இந்த மனிதர்கள், தங்களுக்கு வேண்டாதவர்கள் என்றால் எங்கேயும் சென்று அடிப்பார்கள். தாங்களே வளர்த்து விட்ட சதாம், மற்றும் பின் லேடன் தங்களுக்கு எதிராகத் திரும்பிய போதுதான் அவர்கள் தீவிரவாதிகளாகவும், அபாயகரமான மனிதர்களாகவும் தெரிகிறார்கள். இந்த சித்து வேலைகளை  எல்லாம் அமெரிக்கா நிறுத்தினாலே தீவிரவாதிகள் உலகில் குறைந்து விடுவார்கள். 

  • சதாமிடமிருந்து அமேரிக்கா ஒன்றைக் கற்றுக் கொண்டது.  இம்முறை அந்தத் தவற்றை செய்து விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்கள். எதற்கு ஒருத்தனை உயிரோடு பிடிக்க வேண்டும், அப்புறம் கோர்ட்டு கேசுன்னு அலையணும். போவோம் சுடுவோம். முடிஞ்சது. தமிழ் சினிமாவில் இராணுவ வீரர்களாக நடிக்கும் நடிகர்கள் யாரேனும் idea கொடுத்திருப்பார்களோ ?

  • கடைசியா ... எனக்கென்னமோ இறந்து போன வீரப்பனை சுட்டு தமிழக அதிகாரிகள் பேர் தேடிக்கொண்டது போல, கிட்னி செயலிழந்து இறந்து போன பின் லேடனை அமெரிக்கர்கள் சுட்டு பேர் வாங்குகிறார்களோ என்றுதான் சந்தேகம்.

    25.9.10

    டெர்ரி ஜோன்ஸ் - நவீன யூதாஸ் [கிறித்தவத் தீவிரவாதம்]

    கிறித்தவர்களின் புனித நூலான புதிய ஏற்பாட்டில் இயேசுவின் வாழ்க்கை வரலாறும் அதில் இயேசுவைக்  காட்டிக் கொடுத்த யூதாஸ் பற்றியும் குறிப்புகள் உள்ளன.
    யூதாஸ் இயேசுவை சரியாகப் புரிந்து கொள்ளாமல் காட்டிக் கொடுத்தவன்.  கிறித்துவைப் பின்பற்றுகிற பலர் இன்றும் வெறும் யூதாசாகவே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர் - டெர்ரி ஜோன்ஸ்.
    உலக குர்ரான் எரிப்புத் திட்டம் - 9 / 11 என்கிற ஒரு தீவிரவாதத் திட்டத்தை டெர்ரி ஜோன்ஸ் முன்மொழிய உலகத்தின் பல மூலைகளிலும் இதற்கு எதிர்ப்பு வலுத்தது.
    கிறித்துவ அடிப்படை வாதத்தின் முகம் பலருக்கு வெளியில் தெரியாமல் இருந்தது. இப்போது அது மிக நன்றாய் வெளியே தெரிய ஆரம்பித்து இருக்கிறது. அதற்குப் பிறகு அத்திட்டம் கைவிடப் பட்டதைச் சொன்னாலும் யாரோ ஒருவர் குரானை எரித்து விட பிடித்தது சூடு.

    • இது தீவிரவாதத்திற்கு எதிரானனது என்ற கதையை டெர்ரி ஜோன்ஸ் கட்டினாலும் இது இஸ்லாமியத்திற்கு எதிரான நவீன சிலுவைப் போர் என்பதையே இது காட்டுகிறது. 
    • இத்தகையே செயலே தீவிரவாதத்தின் அடித்தளம் தானே தவிர வேறொன்றுமில்லை. இதுமட்டுமில்லாமல் இததான் அடிப்படை வாதத்தின் ஆணி வேர்.
    • கிருத்துவத்தின் அடிப்படை நற்செய்தியைக் கூட புரிந்து கொள்ளாதவர் பாஸ்டர் என்றால் அவரை யூதாஸ் என்று சொல்லாமல் வேறென்ன வென்று சொல்வது.
    • இஸ்லாமியத் தீவிரவாதிகள்தான் "இரட்டைக் கோபுரங்களின்" தகர்ப்பிற்குகாரணம் என்று வைத்துக் கொண்டாலும் கூட - அதற்காக ஒரு மதத்தைத் தாக்குவது எந்த விதத்தில் நியாயம். ஒரு கிறித்தவன் தீவிர வாதச் செயலில் ஈடுபட்டால் ... பைபிளை எரித்தால் சரியாகிவிடுமா? 
    • ஒருவன் புகழ் பெற பல வழிகளைக் கடைப் பிடிக்கின்றனர் - சிலர் இதுபோல... ஆனால் எல்லாவற்றையும் பூதாகாரப் படுத்தி - காலை முதல் இரவு வரை காமெராவைத் தூக்கிச் சென்று அவனைப் பிரபலப் படுத்தும் அமெரிக்க ஊடகங்களும் இதற்குக் காரணம் - அவைகளுக்குத் தொழில் முக்கியம்.
    • இதனால் அறிவது என்னவென்றால்... மதம் எல்லாரையும் மதம் பிடிக்க வைக்கும் ஆற்றல் கொண்டது. அதை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பயன் படுத்தலாம்.