31.12.13

(நம்மாழ்வார்) இறுதியும் (ஆம் ஆத்மி) தொடக்கமும் 2013 - 4

வருடக்கடைசியில் முக்கியமான நிகழ்வுகள் குறித்து எழுதுவது 
மரபு என்பதனால் அதை மீற முடியவில்லை. 
(உருப்படியா ஒன்றும் எழுதவில்லை என்பதை எவ்வளவு நாகரிகமாக சொல்ல வேண்டியிருக்கிறது
அது போலவே இந்த வருடத்தில் ஏதாவது உருப்படியாகச் செய்தோமா 
என்றும் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.)
  • ஐ லவ் அமெரிக்கா நாட் தேவயானி 
    • இது போலவெல்லாம் நானே சொல்வேன் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் நடக்கும் நிகழ்வுகள் சொல்ல வைக்கின்றன. வெறும் தனது திறமையை மட்டும் ? வைத்து உயர் பதவியில் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் தேவயானி மற்றும் அவரது தந்தையையும் நமக்கு இதற்கு முன்பு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அவர் இந்த வயதில் பல முறை கேடுகளில் சிக்க ஒரு சிறு விஷயம் உதவி இருக்கிறது. விசா ஏமாற்று அதைத் தொடர்ந்து ஆதர்ஷ் குடியிருப்பில் வீடு வாங்கியது என்று நீண்டு கொண்டே போகிறது. இது அப்படியே இனிமேல் மறைக்கப் படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனாலும் சமாஜ்வாதி கட்சி MLA சீட் தர தயாராயிருக்கிறது - இயக்குனர்கள் யாரவது ஹீரோயின் அல்லது வில்லி வாய்ப்பு கூட கொடுக்கலாமப்பா...  
      • ஊழல் செய்தால் சீட்டு நிச்சயம். அப்துல்கலாமைத் தடவிப்பார்த்த போது இல்லாத தவிப்பு தேவயானிக்கு இருக்கும் பரபரப்பை பார்த்தால் - வடக்கில் பிறப்பது எவ்வளவு அவசியம் என்பதும், அப்படி முடியாத பட்சத்தில் ஓரளவு ஊழலாவது செய்வது அவசியம் என்றும் புரிந்து கொள்ள முடிகிறது.
  • மரணம் - அனுதாபங்கள்
    • Walker - ன் மரணம் மிகப் பாதிப்பை ஏற்படுத்தியது. அவரது திரைப்படத்தின் தலைப்பை போலவே வாழ்க்கை அவ்வளவு விரைவாய் முடிந்து போனது. இதுவே திரைப்படமாய் இருந்திருந்தால் நிச்சயம் அவர் தப்பியிருப்பார். மரணம் கொடுமையானது. திரைப்படத்தில் பல முறை உயிர் தப்பியவர் நிஜ வாழ்க்கையில் ஒரு முறை கூட தப்பவில்லை என்பது வேதனையே. 
    •  நெல்சன் மண்டேலா உடல் நிலை சரியில்லாத போதே இறந்து போனதாக முகநூலில் அஞ்சலி செய்தார்கள். இப்போதுதான் உண்மையான அஞ்சலிக்கு வேலை வந்தது. நிஜத்தில் பல முறை இறந்திருந்தாலும் எப்போதும் வாழ்பவர் அவர். 
      • இறப்பதோ ஒரு முறை. அதற்கு முன்பு கொஞ்சம் அகிம்சையை விதையுங்கள் மண்டேலா போல. 
      • இறப்பு எப்படியும் வரும். இங்கிலாந்துக்கு டயானா போல அமெரிக்காவிற்கு வாக்கர். டயானா போல கொஞ்சம் ஆசணத்தில் இருந்து இறங்கி வாருங்கள். 
      • இந்தியாவிற்கு காந்தி போல தென் ஆப்பிரிக்காவிற்கு மண்டேலா. சுடப்பட்டாலும் கொஞ்சம் அகிம்சையை விதையுங்கள் காந்தி போல. 
      • திடீரென இறந்தாலும், இயற்கையை நேசியுங்கள் நம்மாழ்வார் போல. இயற்கையோடு இயைந்து வாழுங்கள் அவர் போல!
    • நம்மாழ்வார் - திடீரென இறந்து இந்த ஆண்டின் சோகத்தை அதிகப் படுத்தி விட்டு சென்றார் என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் அவர் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும். இயற்கையை மட்டும் நம்பி, பாலை நிலத்தில் உறங்கிக் கிடந்த உயிரைத் தட்டி எழுப்பிய மகான்... போராட்ட நேரத்தில் மடிந்து பலருக்குள் உயிராய் கிளர்த்தெழுவார் என்று நான் நம்புகிறேன். விவசாய நாட்டுத் தலைவர்கள் நம்மாழ்வாரின் கருத்தை இப்போதாவது கேட்பார்களா? 
  • புதிய ஆண்டு 
  • ஜாதகம்
    • கணித மேதை ராமானுஜத்தை யாருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, கணக்கு பண்ணுவது மட்டும் எல்லாருக்கும் பிடிக்கிறது - உலகம் பூராவும். கணக்கு பிணக்கு என்றாலும் பொதுவாய் கணக்கிடுவது பிடிக்கிறது. கடந்த ஆண்டு பூராவும் மாயன் காலண்டர் பற்றி பேசினோம். வரப் போற ஆண்டைப் பற்றி அதற்குள் அடுத்த கணக்கு வந்துவிட்டது. 1947 ம் 2014 ம் ஒரே காலண்டராம்.. அதனால் அடுத்த விடுதலையைப் பற்றி எல்லாரும் அவதானிக்க ஆரம்பித்து விட்டார்கள். மோடிதான் அந்த விடுதலைப் போராட்ட தலைவர் எனவும், அடுத்த தேர்தல் முடிவுகள்தான் விடுதலை நாள் என்றும் பேச்சுகள் ஆரம்பித்து விட்டன. நானும் எனது பங்குக்கு ஏதாவது சொல்ல வேண்டாமா? 
      • விடுதலை சரிதான் 1947 நமது நாட்டில் பிளவு ஏற்படாமல் இருந்தால் சரி.
  • புதிய ஆண்டு
  • ஆம் ஆத்மி -
    • பெரியாரின் போராட்டக் கழகத்திலிருந்து தேர்தல் பாதையைத் தேர்ந்தெடுத்த அண்ணாவின் தி. மு. கழகம் போல - அன்னா ஹசாரேவின் போராட்டக் களத்திலிருந்து அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி புறப்பட்டிருக்கிறது. அண்ணாவின் தி. மு. க. மிகப் பெரும் வெற்றி பெற்றது போலவே மிகச் சிறந்ததொரு வெற்றியை டெல்ஹியில் பதிவு செய்திருக்கிறது ஆம் ஆத்மி. 
    • எந்த அளவுக்கு இன்றைய இளைஞர்கள், பெரியவர்கள் அனைவரும் மிகப் பெரும் விடுதலையை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று இதை வைத்தே கணிக்க முடியும். மக்கள் சார்பாக இப்போது போல எப்போதும் நிற்கும் என்று நிறைய எதிர் பார்க்கிறோம். ஒரு நாளைக்கு 700 லிட்டர் நீர், அரசு அதிகார்களின் மாணவர்கள் அரசுப் பள்ளியில் படிக்க வேண்டும் என்பது போன்ற நிறைய உத்திரவாதங்கள்... நல்ல தொடக்கம். இது போன்ற தொடக்கங்கள் தான் 2013 - ன் சோகங்களை பின்னுக்குத் தள்ளி நம்பிக்கையோடு வாழ வழி வகுக்கின்றன. 
    • தில்லியில் உள்ள ஆம் ஆத்மிக்கு கொடிகாத்த குமரனின் திருப்பூரில் ஒரு கிளை.... மக்கள் போராட்ட களத்தில் நிற்கும் உதய குமாருக்கு அழைப்பு என தமிழகத்திலும் ஏழை மக்களின் - (அரசு அதிகார எந்திரங்களுக்கு மத்தியில் சாதாரண மக்கள் எல்லாரும் ஏழைகள் தானே)- விடுதலைக்காய் உழைக்கும் தலைவர்கள் ஒன்று சேர வேண்டியது அவசியமாகவே படுகிறது. நிறைய மண்டேலாக்கள் - நிறைய நம்மாழ்வார்கள் - ஓரணி சேர வேண்டியது அவசியமாகிறது.
    • இப்போது 2014 இன்னும் ஒரு விடுதலை ஆண்டாய்தான் தெரிகிறது.
  • இன்னும் ஒரு உன்னதமான விடுதலையை அகிம்சை வழியாய் சாத்தியப் படுத்துவோம் என்ற நம்பிக்கையோடு புதிய ஆண்டில் காலடி எடுத்து வைப்போம். 
வாழ்த்துகள்!  

12.12.13

நானும் என் (கை) எழுத்தும்


நானும் என் (கை) எழுத்தும் 
- அ. பிரபாகரன் 
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
 வழக்கம் போல் இந்த முறையும் சங்கல்பம் செய்து கொண்டேன். இனிமேல் வாரம் ஒருமுறை எதையாவது எழுதுவது என்று. சரி. இந்த முறை நானும் என் எழுத்தும் என்று எழுதிப் பார்க்கலாமே என்று நினைத்தேன். இந்தத் தலைப்பில் எழுதுவதற்கு நான் என்ன சுஜாதாவா அல்லது நாஞ்சில் நாடனா என்று நீங்கள் நினைக்கக் கூடும். 
அவர்கள் மட்டும்தான் எழுத வேண்டுமா? தன்னை எழுத்தாளனாக நினைக்கும் ஒவ்வொருவனுக்கும் எழுத உரிமையிருக்கிறது.
எழுதுகிற ஒவ்வொருவனுமே தன்னை எழுத்தானாக நினைத்துக்கொண்டுதான் எழுதுகிறான். மற்றவர்களையும் அப்படி நினைக்க வைப்பதில்தான் அவன் வெற்றி இருக்கிறது. 

வாழ்நாள் முழுவதும் முயற்சித்தாலும் என்னால் பிறரை அப்படி நினைக்க வைக்க முடியுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் நானும் என் முயற்சியைக் கைவிடுவதாக இல்லை. சரி! அது போகட்டும். 

நானும் என் எழுத்தும் என்ற தலைப்பின் தொடக்கம் 1975 ம் வருடம் ஜூன் மாதம் மறவமங்கலத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடங்குகிறது. எல்லாக் கேள்விக்கும் டாண் டாண் என்று பதில் சொல்லி வகுப்பில் முதல் மாணவனாக வரும் எனக்கு கையெழுத்து கேவலமாக இருக்கிறது என்பதை சரஸ்வதி டீச்சர் கண்டுபிடித்துச் சொன்னார். பிறகு வந்த வகுப்புகளில் ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியர்களால் என் கையெழுத்து பிரதானமாக விவாதிக்கப்படும். மூன்றாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வில் நான் முதன் முறையாகப் பென்சில் வைத்துப் பேப்பரில் தேர்வு எழுதியபோது, ராஜசேகர வாத்தியார் என் வினாத்தாளை மட்டும் எல்லா மாணவர்களுக்கும் முன்பாகத் தூக்கிக் காட்டி, "இங்க பாருங்கடா, கொமட்டிக்கிட்டு வருது", என்று கேவலப் படுத்தியது நினைவுக்கு வருகிறது. 

என் தந்தைக்கு மாற்றம் கிடைத்து நான் வேறொரு கிறிஸ்தவப் பள்ளியில் சேர்ந்தபோது, ஐந்தாம் வகுப்பில் எனக்கு ஆசிரியையாயிருந்த மிக்கேலம்மா என்னும் கன்னியாஸ்திரி 'சுத்தமாக எழுது' என்று புறங்கை மொழியிலேயே அடிப்பார். ஆனால் எத்தகு தண்டனைகளையும் என் கையெழுத்து ஏற்றுக்கொண்டதில்லை.

என் கையெழுத்து என் பழக்க வழக்கங்களைப் போலவே எப்போதும் திருந்த மாட்டேன் என்றது. என் மாணவப் பருவத்திலிருந்து என் கையெழுத்து என் ஆளுமைக்கு விடப்பட்ட சவாலாகவும், என் குறைபாடுகளின் பிரதிநிதியாகவுமே தென்படுகிறது.
மானுடத்தின் மறுபுறம் குறைபாடுகள்தானே. அறிவியலல்லாத மானுடம் சார்ந்த படிப்பு படிக்கிற ஒருவனுக்கு தேர்வுகளில் கையெழுத்து எவ்வளவு முக்கியம் என்பதை நன்றாகப் படித்தும் தொலைதூரக் கல்வித்தேர்வுகளில் தோல்வியடைந்த ஒருவனால்தான் புரிந்துகொள்ள முடியும்.

பள்ளிப் படிப்பு முடிந்த காலத்தில் காந்தியின் சுயசரிதையை வாசிக்க நேர்ந்து, காந்தியின் எழுத்தும் அசிங்கமாகத்தான் இருக்கும் என்று படித்தபோது, 'பரவாயில்லை, நாம் காந்தியைப் பின்பற்றுவதற்கு இது ஒன்றாவது கிடைத்ததே' என்று பெருமைப் பட்டுக்கொண்டேன். இப்பொழுதும் இந்தக் கையெழுத்தொடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

கணினி வந்து என்னைப்போன்றவர்களை காந்தியின் சீடர்களாக வாழ்வதிலிருந்து காப்பாற்றியிருக்கிறது. ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. அவசரத்திற்கு யாரிடமும் எழுதிக் கொடுத்து தட்டச்சு செய்யுமாறு கோரமுடியாது. நானும் என் எழுத்தும் என்று ஆரம்பித்து கடைசியில் கையெழுத்தைப் பற்றியதாக இந்தக் கட்டுரை நீள்கிறது. 

உண்மையில் நான் சொல்ல வந்தது என் எழுத்தைப் பற்றி. படைப்பு அனுபவம் (?!!!) பற்றி. அது என்னவோ தெரியவில்லை கதைகளும் கற்பனைகளும் எப்போதும் என்னை ஈர்த்து வந்திருக்கின்றன. வாராந்திரப் பத்திரிகைகளுக்கு அடிமையாகிப் போன ஒரு சராசரி நடுத்தரக் குடும்பத்தில் பிறந்ததும், சிறிய அரசு நூலகமுள்ள கிராமத்தில் பிறந்ததும், கதைகளுக்கும் கற்பனைகளுக்கு அடிமையாகிப் போகும் வாய்ப்பைத் தந்தது. என்னைப் புத்தகங்கள் ஈர்த்திருக்கின்றன. சிறுவயதில் நானும் சிலவற்றை எழுதிப் பார்த்திருக்கின்றேன். 

எதையாவது எழுதிப் பார்த்து என்னை வருங்கால தமிழகத்தின் மிகப் பெரிய எழுத்தாளனாக வருவேன் என்று நினைக்கா விட்டாலும், நாமும் எழுதலாம் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தேன். ஒன்பதாம் வகுப்பிலிருந்து முயற்சித்து நீங்களெல்லாம் கேட்டறியாத சில பத்திரிகைகளில் என் சில படைப்புகள் வந்திருக்கின்றன. இவற்றில் சில அரசியல் கட்டுரைகள் கூட அடக்கம். அ. தாஸ், அ. பிரபாகரன் என்று சில பெயர்களில் எழுதியிருக்கிறேன். கணையாழியில் கூட ஓரிரு படைப்புகள் வந்திருக்கின்றன. 

பிறகு வந்த காலங்களில் வாழ்க்கை வெவ்வேறு விதமான சூழல்களை அமைத்துக் கொடுத்ததால் நான் என் எழுத்து வேலைக்கு ஓய்வு கொடுத்து என் நண்பர்களை இம்சிக்காமலும் தமிழ் கூறும் நல்லுலகுக்கு இலக்கியப் பணி செய்வதை விடுத்து 'தேமே' என்று என்பாட்டுக்கு இருந்தேன். 

விதி யாரை விட்டது? இணையம் என்று ஒன்று வந்து என்னைப் போன்றவர்களுக்கு ஒரு வாழ்வு கொடுத்திருக்கிறது. தாமே எழுதி தாமே பதிவிடும் நார்சிசத்தில் நானும் ஒருவனாகி விட்டேன்

 இப்படி நானும் என் பொழப்பும் என்றிருந்த என்னை இணையம் மட்டுமல்லாது சமீபத்தில் நான் பயணித்த ஒரு பேருந்தும் எழுதச் சொல்லி வம்பிழுக்கிறது. மறவமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் தொடங்கிய என் எழுத்து வாழ்வு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரையில் இருந்து சென்னைக்குச் செல்லும் பேருந்தில் ஒரு திருப்பு முனையைச் சந்தித்தது. 

மதுரையில் இருந்து சென்னைக்குச் செல்லும் அந்தப் பேருந்தில் பெரியார் பேருந்து நிலையத்தின் நசநசப்புக்கும் இரைச்சலுக்கும் தப்பி பரபரப்புடன் ஏறி அமர்ந்தேன். அப்படி சத்தத்திற்குத் தப்பி வருகிற என்னைப் போன்றவர்களைச் சோதிப்பதற்கேன்றேதான் தனியார் பேருந்துகளில் வீடியோ படத்தைப் போடுகிறார்கள். என்னதான் இதை எதிர்கொள்ளும் முன் தயாரிப்போடு ஏறினாலும் எரிச்சலும் இயலாமையும் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. 

அன்றும் அப்படித்தான். சிவா கார்த்திகேயன் நடித்த எதிர் நீச்சல் என்ற படத்தை என்னைப் போலக் களைத்து வந்து பஸ்ஸிலேறியவர்களின் தூக்கத்தைக் கெடுக்கவென்றே போட்டார்கள். எரிச்சலோடு படத்தைப் பார்க்க ஆரம்பித்த எனக்கு ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது. அங்கேதான் என் எழுத்திற்கான மறு அழைப்பு காத்திருந்தது. 

அந்தப் படத்தில் கதாநாயகனுக்குத் தன பெயர் குறித்த பிரச்னை. அவனுக்குப் பிடிக்காத அசிங்கமான அந்தப் பெயர் அவன் ஆளுமைக்கு விடப்பட்ட சவாலாக இருப்பதாக அவன் கருதுவதுதான் அந்தப் படத்தின் முதல் பாதியின் கரு. ஏறத்தாழ பதினாறு ஆண்டுகளுக்கு முன் 1997 ம் ஆண்டு கணையாழியில் 'பெயர்' என்ற தலைப்பில் வந்திருந்த என் கதைக் கருவோடு இது அப்படியே ஒத்துப் போனது

கதையை இத்துடன் இணைத்திருக்கிறேன் பார்த்துக்கொள்ளுங்கள். இப்போது நான் சொல்ல வந்தது என்னவென்றால் இதோ இனி நானும் தொடர்ந்து எழுதப் போகிறேன். இது எனக்கு எழுத ஏதோ ஓர் உத்வேகம். தந்திருக்கிறது. "தொடங்கிட்டான்யா... தொடங்கிட்டான்யா" என்றெல்லாம் திட்டப்படாது. எங்களுக்கும் எழுத வருமுல்ல.
அ. பிரபாகரன்




°°°°°

எதிர் நீச்சல் படம் எடுத்த துரை செந்தில்குமார் இந்தக் கதையைப் படிக்க வில்லை என்பதை நான் நம்பத் தயாராக இல்லை.                             -  அப்பு 



2.12.13

ச. சசிமா .....


°சச்சின்
அளவுக்கு அதிகமாக புகழப்பட்ட சச்சின் டெண்டுல்கார் இனிமேல் விளையாட மாட்டாரே என்கிற கவலை எனக்கு பல வருடங்களுக்கு முன்பே வந்து விட்டது. இது என் தொண்டைக் குழியை இழுக்க இதைத் தாங்க முடியாமல் கிரிக்கெட் பார்ப்பதை விட்டு பல வருடங்களாகி விட்டது. (அப்பவே அவர் ரிட்டயர்டு ஆகியிருக்கனுமான்னு கேள்வி கேக்கப்புடாது).

அவரின் இறுதி விளையாட்டைக் கூட செய்தியாய்த்தான் படித்தேன். ஏதாவது ஒரு ஹீரோ பின்னால் போவதை நம்மால் தடுக்க முடியவில்லை. விடயம் அதுவல்ல.
இந்தியப் பத்திரிக்கைகள் போலவே பாக்கிஸ்தானியப் பத்திரிக்கைகளும் சச்சினை மிகவும் புகழ்ந்து எழுதியதைப் பார்த்த தாலிபான் - இனிமேல் சச்சினைப் புகழ்ந்து எழுதவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது. எனக்கென்ன பயமா இருக்குன்னா நானும் தான் இந்தியப் பத்திரிக்கைகள் அளவுக்கு அதிகமாக சச்சினைப் புகழ்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். என்னையும் தலிபான் என்று நினைத்து விடுவார்களோ?

° சங்கரராமன்
சங்கரராமன் கொலைவழக்கில் சங்கராச்சாரியார் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். ஏறக்குறைய எண்பத்தி ஒரு நபர்கள் பிறழ் சாட்சிகளாக மாறி, ஆவணங்கள் மறைக்கப்பட்டு (அப்படி என்று சில பத்திரிக்கைகள் சொல்லுகின்றன) அனைவரும் விடுதலை செய்யப் பட்டிருக்கின்றனர். பிறழ் சாட்சிகளாவது குற்றம் என்றே இதுவரை நான் நினைத்திருந்தேன். ஆனால் தனியாகவோ ஒட்டு மொத்தமாகவோ அந்தர் பல்டி அடிப்பதெல்லாம் குற்றம் இல்லை என்று இப்போதுதான் தெரிந்திருக்கிறது.  அவர்கள் எல்லாம், உயிருக்குப் பயந்தோ, பணம் விரும்பியோ தங்கள் சாட்சியங்களை மாற்றிக் கொள்ள வில்லை. உண்மையை மட்டுமே சொன்னார்கள் என்றும், அவர்கள் அனைவருக்கும், மறதி இருப்பது உண்மை என்றும், தமிழக மக்கள் அனைவரையும் போல, நான் நம்புகிறேன்.

எண்பதுக்கும் மேற்பட்டோர் மாற்றி சொல்லி பலரை விடுதலை செய்தததும், ஒரு அதிகாரி வாக்கு மூலத்தை மாற்றி எழுதி பல பேர் மரண தண்டனைக் கைதிகளாக இருப்பதும் இந்திய நீதித் துறைக்கு அழகல்ல. பேரறிவாளன் உட்பட பலர் இன்னும் உள்ளே இருப்பது நமக்குத் தான் அவமானம். 

ஒன்று இப்போதும் புரிகிறது. அரசும், அதிகாரமும், சேர்ந்தால் எதையும் செய்ய முடியும் என்பதற்கு இவை இரண்டே போதுமானது.


° சிக்கியது - (பணமல்ல) 
ஒவ்வொரு ஆண்டும்  - அதாவது ஓர் ஆண்டு மட்டும், ஆர்.டி.ஓ சோதனைகளில் 22,000 கோடி லஞ்சம் பெறப் பட்டிருக்கிறது என்று ஒரு நிறுவனம் ஓட்டுனர்களிடமிருந்து பெறப்பட்ட ஓர்  ஆய்வு தெரிவிக்கிறதாம். நான் சொல்லலை டைம்ஸ் ஒப் இந்தியா சொல்லுகிறது. 

"சந்தர்ப்ப சாட்சியங்களை வைத்துப் பார்க்கும் போது, சாட்சிகளான ஓட்டுனர்கள் முன்னுக்குப் பின் முரணாக பிறழ்வதை கருத்தில் கொண்டு அனைத்து அதிகாரிகளையும் விடுதலை செய்கிறோம்." 

° மங்கள்யான் 
மங்கள்யான் - மங்களகரமான பெயர். [எனக்கென்னமோ மங்கள் அண்ட் மங்கல் மெட்டல் மார்ட் என்கிற வானொலி விளம்பரம்தான் நினைவுக்கு வருகிறது.] 
மங்கள்யான் - செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பியிருக்கும் விண்கலம். செப்டம்பர் மாதம் 2014 ஆம் ஆண்டு அங்கு சென்று சேரும் என்று சொல்லப் படுகிறது. தொழில் நுட்ப வளர்ச்சியில் தொடர்ந்து இந்தியா காலடி எடுத்து வைப்பது மகிழ்ச்சியே. அதுவெல்லாம் கூடாது என்று கோபித்துக் கொள்ள நாம் யார்? சொன்னால் நாம் பிற்போக்கு வாதி என்று சொல்வதற்கு விளக்கமாத்துக் கட்டையை  தூக்கிக் கொண்டு ஆயிரக் கணக்கில் ஓடிவருவார்கள்.  RTO காரர்களிடம் லஞ்சத்தில் சிக்கிய பணத்தை மீட்டாலே வருடத்திற்கு 42 விண்கலங்களை இந்தியா அனுப்ப முடியும். அதனால அதெல்லாம் கேட்கலை.
ஆளே இல்லாத செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்புறது போல அது போல ஒரே ஒரு போட் இந்திய இலங்கை கடற்பரப்புக்கு அனுப்புங்க. அதைத்தான் கேட்குறோம். இன்னைக்கு நினச்சு உடனே அனுப்பினா அது இன்னைக்கே போய் சேரும். செப்டம்பர் 2014 வரை காத்துக்குட்டு இருக்க வேண்டியது இல்லை பாருங்க. அதை விட்டுட்டு இலங்கை கடற்படையினருக்கு பயிற்சி அளிக்கத் தயார் என்று சொல்றீங்களே என்ன நியாயம்?

°°°°°°°°°°​​


அடுத்த பதிவு 
தமிழ் கூறும் நல்லுலகில் 
பின்நவீனத்துவக் கூறுகளை உள்ளடக்கி 
கதை கட்டுரை எழுதும் 
தமிழ் புத்திரன் அ. பிரபாகரனின் - 
(கை) எழுத்தும் நானும் 
என்கிற கட்டுரை... 
எதிர் நீச்சல் என்கிற படத்தின் கரு 
எங்கிருந்து கிடைத்தது என்பதை 
விவரிக்கும் கட்டுரை.

(விளம்பரம்)
இதை தினமணி, தினகரன் 
மற்றும் அனைத்து நாளிதழிலும் வரும் 
விளம்பரமாக நினைத்துக்கொள்ளவும்.
°°°°°°°°°°