30.1.11

மீனவ மக்கள் போராட்டம்


தங்களது தனிப்பட்ட வாழ்வைத் தாண்டி பிறன் மீது அக்கறை கொள்கிற ஒருவன்தான் மற்ற விலங்குகளிடமிருந்து தன்னை வேறு படுத்திப் பார்க்கும் உரிமையைப் பெறுகிறான் என்று சொல்ல முடியும்.

இன்றைக்கு இருக்கிற சூழலில் தனிப்பட்ட வாழ்வின் சுக துக்கங்களிலிருந்து மீள முடியாமல் இருக்கிற சூழலில் பொதுவாக மக்கள் கூடி வருவது என்பதே கடினமாகி விட்டது.


ஒருவிதத்தில் அடிபட்டவன் தான் அவனுக்கான மீட்பைப் போராடிப் பெறவேண்டியிருக்கிறது என்றாலும், அவனோடு கூட இருக்கிற, பலப்படுத்துகிற செயலிலாவது ஒன்று சேர்வதுதான் மனிதன் என்பதற்கான மதிப்பை வழங்குகிறது.

மீனவ மக்கள் போராட்டம, மீண்டும் ஒருமுறை நாம் கூடி வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கான விடயத்தில் பல இணைய எழுத்தாளர்கள் பேசுவது குறித்து பெருமைப் படுகிறேன்.
http://www.tamilpaper.net/?p=௨௩௯௯

 http://twitter.com/வஸந்த௧௭௧௭

http://www.savetnfisherman.org/

வெறும் பெருமை என்ன செய்துவிடும்? இயக்கங்கள் தேவைப் படுகின்றன. நிறைய... இன்னும் நிறைய...

கடலோர மக்கள் கூட்டமைப்பு   
தங்கள் எதிர்ப்பைக் காட்டுகிறது. நாமும் நமது எதிர்ப்பையும், போராட்டத்தையும் வலுப் படுத்துவோம்.

29.1.11

கருத்து மோதல்

கருத்து யுத்தம் என்பது எல்லாக் காலங்களிலயும் நடக்கும்.

ஒவ்வொருவரின் தத்துவம், வாழ்வின் நெறிகள் இவைகளைக் கொண்டு தங்களுக்குள் ஒரு போராட்டம் எப்போதுமே நிகழும். ஆனால் எல்லாமே அவைகளை அடிப்படையாகக் கொண்டே இருக்கும் என்று சொல்வதற்கில்லை -

இங்கே சில உதாரணங்கள்: உரையாடல்கள்: மோதல்கள்: என் பல..

ஏறக்குறைய எல்லாவற்றிலயும் ஜெயமோகன் - பிறருக்கிடையிலேயானதாக இருப்பது ஒரு தற்செயலாய் நிகழ்ந்த்ததே. ஒருவேளை ஜெயமோகனைத் தொடர்ந்து வாசிப்பதும் கூட இருக்கலாம்.

ஒன்று: [கடந்த வருடம்]
ஜெயமோகன் மனுஷ்ய புத்திரனின் கவிதைகளை விமர்சனம் செய்வதற்குப் பிறகு - வினையும் எதிர்வினையும்:

இரண்டு: [இந்த வருடம்]

ம.க. இ.க. வின் தோழர் மருதையனுக்கும், ஜெயமோகனுக்கும் இடையே நடந்த, நடக்கிற கருத்து யுத்தம் பற்றி இங்கே குறிப்பிடக் காரணம் - எழுத்து என்பது எதனால் - எதற்காக என்பதைப் பற்றிய விடயங்களும் இருக்கின்றன என்பதற்காக.







இது எங்கே போகும் என்பதை படிப்பவர்தான் முடிவு செய்ய வேண்டும்.
இதைப் பற்றிய எனது பின்னோட்டம் சற்றே ஒத்திப் போடப் பட்டுள்ளது.


26.1.11

குடியரசு தினம் - யார் குற்றம்?

 62 வது குடியரசு தினம் மிக விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.



  • குடியரசு தினக் கொண்டாட்டத்தை - நாசிக் அருகே பெட்ரோலில் கலப்படம் செய்த கும்பல் ஒன்று கூடுதல் மாவட்ட ஆட்சியரை [கலக்டர் சோனாவானேவை ] உயிருடன் எரித்து - தொடங்கி வைத்திருக்கிறது. மக்களாட்சியைக் கொண்டாட இதை விட சிறப்பான கொண்டாட்டம் இருக்கமுடியுமா?

ஒரு ஜனநாயக நாட்டில், ஒரு மாவட்ட ஆட்சியருக்கே, அவரது உயிருக்கே, பாதுகாப்பற்று இருக்கும் போது நாமது நாட்டைக் குடியரசு என்று சொல்லுவது தகுமா? அல்லது மக்களாட்சி என்பது இதுதானா? தான் செய்வதை சரி என்று சொல்வதற்கும் அதற்காக ஒருவனை உயிருடன் எரிப்பதற்கும் நாம் இன்றும் தயாராக இருக்கிறோம் என்றால் என்ன குடியரசு இது.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், நீதியும், நேர்மையும், உண்மையான உழைப்பும் நமது மதிப்பீடுகளாக மாறமுடியாமல் போனது யார் குற்றம்? மதிப்பீடுகள் தெரியாமல் பிறரை ஏமாற்றி வாழ வேண்டும் என்று வாழ்ந்து கொண்டிருக்கிற மக்கள் குற்றமா? அல்லது ஊழல் தான் நமது உயிர் மூச்சு என்று முன்மாதிரி காட்டிக் கொண்டிருக்கிற அரசியல் வாதிகள் குற்றமா? அல்லது மதிப்பீடுகளை கற்பித்துக் கொடுக்க மறந்த அதிகாரிகள் குற்றமா? அல்லது ஏமாற்றினால்தான் இன்றைய பொருளாதார சூழலில் வாழ முடியும் என்கிற நிலைக்குத தள்ளியிருக்கிற பொருளாதார முறையா? அல்லது சமூக அமைப்பு முறையா?
  • இறந்த அந்த மாவட்ட அதிகாரியின் நினைவு இல்லாமலே குடியரசு தினம் நிறைவு பெரும். நமது நாட்டைப் போல வேறு ஜனநாயக நாடு இல்லவே இல்லை என்கிற பெருமையோடு இந்த விழாவும் நிறைவு பெரும்.
இந்த ஆண்டு பிறந்து பன்னிரண்டு நாட்களுக்குள் இரண்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறார்கள். அதைப் பற்றிய எந்த வருத்தமோ தெரிவிக்க முடியாமல் இருக்கிற அரசு நமது அரசு.

அப்படி ஒன்றும் நடக்கவே இல்லை என்றும், அதற்கான ஆதாரத்தை தராமல் வேண்டுமென்றே எங்கள் மீது பழி சுமத்துகிற முயற்சி என்று இலங்கை சொல்லிவந்த நிலையில்; சென்னை புத்தக் கோவில் ஒன்றில் தாக்குதல் நடந்த பிறகு இலங்கைத் தூதர் "இனிமேல் தாக்குதல் நடை பெறாது" என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

வெறும் கோரிக்கைகள் ஒன்றிற்கும் உதவாது என்ற நிலையில் அரசு இருப்பது யார் குற்றம்?
தாக்குதல் நடத்தியவர்களை விஷமிகள் [உபயம் - தினகரன்] என்று பத்திரிக்கைகள் எழுதியதும், இலங்கைக் கடற்படையினரின் அநீத செயல்களைக் கண்டிக்காமல் எழுதும் வியாபாரப் பத்திரிக்கைகள் இங்கே இருப்பது யார் குற்றம்?

  • புத்தக் கோவிலில் கல்லெறிந்தால்தான் நீதி கிடைக்கும் என்கிற நிலை இருந்தால் இது யார் குற்றம்?
  • இந்த அரசு எங்களுக்கு பாதுகாப்பு தரவில்லைஎன்றால் இலங்கை அரசிடம் சென்று தஞ்சமடைவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று நாகப்பட்டினம் மீனவர்கள் சொல்கிறார்களே - இது யார் குற்றம்.?
  • கச்சத் தீவை சென்று கொடுத்தது யார் குற்றம்? இலங்கைக் கடற்படையினருக்கு இரண்டு கண்காணிப்புக் கப்பலை வழங்கியதே  இந்த இந்திய அரசு - இது யார் குற்றம். இறந்து போன மீனவர்கள் குற்றமா?
  • என்நாட்டு மக்களைக் கொள்கிற ஹிட்லரே மேல் என்று இந்த நாட்டு மக்களை நினைக்க வைப்பதுதான் குடியரசா?
நானே பாதிக்கப் பட்டேன். நேரடியாகப் பாதிக்கப்பட்டேன்...

பாதிக்கப் பட்டவன்தான் குரல் எழுப்ப வேண்டும் என்பதா குடியரசு?

பராசக்தி - பார்த்துக் கொண்டா இருக்கிறாய்!
                 - பார்த்து சிரித்துக் கொண்டா இருக்கிறாய்.


25.1.11

இந்தவாரப் பூச்செண்டும் இந்தவாரத் திட்டும்


விளையாட்டு வினையாகும் என்பார்கள்.
விளையாட்டாய் ஒரு மெயில் அனுப்பப் போய் அது எதிர் வினையாகிவிட்டது.

நண்பர் ஒருவருக்கு மெயில் அனுப்பியது அனைவருக்கும் தெரியட்டுமே என்று மீண்டும் இங்கே.
முன்பே பதிவு செய்யப் பட வேண்டியது தாமதமாய் வருகிறது.
வேலைப் பளு - வேறென்ன செய்வது? இனி ...

ஞானியின் இந்தவாரப் பூச்செண்டும் இந்தவாரத் திட்டும் பலரால் விரும்பிப் படிக்கிற பகுதி. விகடன் வாங்கியவுடன் அந்தப் பகுதியை வாசித்து விடும் பழக்கம் இருந்தது. ஒவ்வொரு முறையும் பல்வேறு சிக்கல்களை சந்தித்த பகுதி அது. ஞாநி பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் - அரசின் மிரட்டல்களுக்கு பத்திரிக்கைகள் பணிந்து அவர் பக்கம் பத்திரிகையில் மறுக்கப்பட 'பத்திரிகை விட்டு பத்திரிகை தாவி' -  ஒற்றைக் குரலாய் அரசு இயந்திரத்தைச் சாடும் அவருக்கு என்றும் நாம் பூச் செண்டு கொடுக்கலாம்.

ஆனால் அதே சமயம் - இ.வா.திட்டு. - சங்கமம் விழாவை தமிழ் மையத்துடன் இனைந்து நடத்தும் தமிழக அரசின் சுற்றுலாத் துறைக்கு சென்று சேரும் என்று ஞானி எழுதியதனால் அவரை நாமும் திட்டுவது சரி என்றும் படுகிறது என்றும் எழுதினேன்.
நமது "திட்டை"  ஆயிரமாயிரம் பேர் படித்து கோபம் கொள்ளப் போவதுமில்லை - சண்டைக்கு வரப் போவதுமில்லை. இருந்தாலும் சில கேள்விகளை எழுப்புவதுதான் எனது நோக்கம்.
  • இந்த ஆண்டு மட்டும் தமிழக அரசின் சுற்றுலாத் துறை தமிழ் மையத்தோடு இனைந்து சங்கமம் நடத்துமெனில் அவரின் திட்டு சரியாகும். எப்போதும் நிகழ்கிற நிகழ்வின் தொடர்ச்சி என்கிற போது இந்தத் திட்டு சரியா?
  • ரெய்டு நடந்ததால் அவர் குற்றவாளி என்ற 'முன் முடிவோடு' அவரோடு இணைந்து ஒரு விழா நடத்துவது தவறு என்று சொல்வது சரியா?
  • அரசு இயந்திரங்களின் அனுமதி இன்றி எதுவும் நடக்காது. பல சமயங்களில் அவைகளின் தூண்டுதலின் பேரில் ரெய்டு நடத்துவதும், அதற்குப் பிறகு அமைதி காப்பதும், என்கிற அவ நிலையில் இருக்கும் இந்த அமைப்புகளுக்கும் அரசிற்கும் இந்த வாரத் திட்டு பொருந்தும் என்று தோன்றுகிறது. மைய அரசின் அனுமதியின்றி ஊழல் ஒழிக்கப் படவேண்டும் என்கிற நீதியின் அடிப்படையில் மட்டும் நமது அரசு அதிகாரங்கள் பணி புரியும் சுதந்திரத்தோடும், அர்ப்பணத்தோடும் எப்போதைக்கு வருகிறதோ .... அது இப்போதைக்கு இல்லை என்பது ஞாநிக்கு மிக நன்றாகத் தெரியும். தனிப்பட்ட விதத்திலே அந்தக் கொடுமைகளுக்கு [ரெய்டு இல்லை / அனால் மிரட்டல்கள், இத்யாதிகள்] ஆளானவர் என்கிற விதத்தில் இதை அவர் அறிவார்.
  • குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் தான் 'தான் எப்போதும் செய்யும் செயலைச் செய்ய வேண்டுமென்றால், இந்திய, தமிழக அரசியலில், ஊழலற்ற அமைச்சகங்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், குற்றம் சாட்டப்படாதவர்கள், எத்தனை உண்டு? அவர்கள் என்னதான் செய்ய முடியும்? எதுவும் அசையாது -
  • அரசின் பணம் ஒரு தனி நிறுவனத்தோடு இனைந்து நடத்தப்படும் ஒரு நிகழ்விற்கு வழங்கப் பட வேண்டுமா என்பது கேட்கப் படலாம். ஆனால் இத்தகைய கேள்விகள் ஏற்கனவே கேட்கப் பட்டுவிட்டன. தமிழக பண்பாட்டுத் துறையில் - தமிழ் மையத்தோடு இனைந்து பொங்கல் விழாவை முன்னிட்டு நடத்தப் படும் சங்கமம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் உண்டு என்றாலும், அதில் சில மாறுபட்ட கருத்துக்கள் உண்டு என்றாலும் - வருடா வருடம் நடந்து கொண்டிருக்கிற ஒரு நிகழ்விற்கு - இந்தவாரத் திட்டு என்பது குறித்தே நான் எழுதினேன் [என்று நினைக்கிறேன்].
  • எப்படி இருப்பினும் அரசுக்கு எதிராய் தொடர் குரலாய் - ஒற்றைக் குரலாய் இருக்கும் ஞானிக்கே இந்தவாரப் பூச்செண்டும். ஆனாலும் நன்றாய் எழுதும் ஞானி தொடர்ந்து தேவையற்ற முன்முடிவுகளோடு எழுதுவதைத் தவிர்ப்பது நல்லது.

21.1.11

மகர ஜோதி

மகர ஜோதியைக் காணச் சென்ற லட்சக் கணக்கான பக்தர்களில் - எதிர்பாராத விபத்துக் காரணமாக நுற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் இறந்திருக்கிறார்கள். இதில் பெரும்பாலோனோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

எதிர்பாராத விபத்துக் காரணமாக மக்கள் நூற்றுக் கணக்கில் இறப்பதும் அதைச் செய்திகளில் படிப்பதும் நமக்குப் புதிதல்ல. விபத்துகள் நடந்த பிறகு நடக்கும் விவாதங்களும், விசாரணைகளும், கொண்டுவரும் சட்டங்களும் புதியதல்ல. இதைப் பற்றி பலமுறை நாமும் எழுதித் தள்ளியிருக்கிறோம்.
http://unmayapoyya.blogspot.com/2010/07/blog-post_22.ஹ்த்ம்ல்

http://unmayapoyya.blogspot.com/2010/06/blog-post.ஹ்த்ம்ல்

 எழுதுவதைத் தவிர வேறு என்ன நாம் செய்ய முடியும்?
எல்லாமே ஒருவாரத்திற்குத்தான்.

ஆனாலும் இன்னும் ஆழமாக வெகுசனப் பத்திரிக்கைகளும், அரசு இயந்திரங்களும் - செய்திகளாக மட்டும் வெளியிடுவதைத் தவிர்த்து விமர்சிக்கவும் - தொடர்ந்து என்ன செய்ய வேண்டுமோ அதையும் செய்ய வேண்டும்.

மகரஜோதி இயற்கையானதா செயற்கையானதா என்பது ஊரறிந்த செய்தி. இப்போது மீண்டும் நீதிமன்றம் இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கின்றது.
அதற்கு பதிலளிக்கும் போது "சபரிமலை தேவஸ்தானம் சார்பில் பேசவல்ல ராகுல் ஈஸ்வர் கருத்துத் தெரிவிக்கும்போது, பொன்னம்பல மேட்டில் உருவாகும் ஜோதி, மனிதர்களால் ஏற்றப்படுவது என்றும், அதே நேரத்தில், சூரியன், தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு மாறும்போது உருவாகும் ஒளிபடைத்த நட்சத்திரம்தான் மகரஜோதி என்றும் கூறியுள்ளார்." அதாவது ஜோதியை மனிதர்கள் தான் ஏற்றுகிறார்கள் - ஆனால் மகர ஜோதி என்பது ஒரு நட்சத்திரம். அதேசமயத்தில் மக்களிடம் அந்த நம்பிக்கை இருக்கிறது. இதைவ்டியா இன்னும் ஒரு படி மேலே போய்: "அதேசமயம், அது தெய்வ அருளால் ஏற்படுவது என்று தேவஸ்தானம் எந்த விளம்பரமும் செய்யவில்லை என்றும் அவர் வாதாடினார்."  
இதற்கு  மேல் நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. நம்பிக்கையோடு செல்கிற மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
நமது  கேள்வியெல்லாம் - எப்படி தமிழ் மக்களிடம் இந்த நம்பிக்கை அதிகமாக - கேரள மக்களைக் காட்டிலும் இருக்கிறது என்பதுதான். 
நாம்  வாழும் விளம்பர உலகில் கட் அவுட்டுகளும் - தொலைக் காட்சி விளம்பரங்களும்தான் விளம்பரம் என்று இல்லை. வெளிவராத மக்கள் தங்களுக்குள்ளே பரிமாறும் நம்பிக்கைச் செய்திகள்தான் மிகப் பெரிய விளம்பரங்களாக இருக்கின்றது. 
மதம் என்கிற நம்பிக்கைக்குள் நமது மக்களை வீழ்த்துவதற்கு பெரிதாக வியூகம் எதுவும் யாரும் அமைக்க வேண்டியதில்லை. அவர்களாகவே போய் விழுவார்கள். 

ஆனால் மகர ஜோதி பிரச்சனையில் - தேவஸ்தானமே ஆட்களை வைத்து தொலை தூரத்தில் ஏற்றுகிற தீயை - ஏமாற்று வேலை என்று சொல்லாமல் வேறு என்ன வென்று சொல்வது. 
இது கடவுளால் நிகழ்ந்தது என்று விளம்பரப் படுத்தினால்தான் நாங்கள் ஏமாற்றுக்காரர்கள் - என்று அவர்கள் வாதிடலாம். 
இதே ஜோதியை வேறு ஒரு மணியோ, ராசாவோ செய்தால் பரவாயில்லை. 
ஏன்  கோவிலில் வைத்துக் கொண்டு இந்தத் தில்லு முள்ளு வேலைகளைச் செய்ய வேண்டும்?
ஆனால் நீதி மன்ற விசாரணை என்பது வெறும் கண்துடைப்பு.

ஏமாற்றும் வேலைகள் தொடரும். 
"முல்லைப் பெரியாறு" விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மரியாதை கொடுக்காமலும், மனச்சாட்சிக்கு செவிகொடாமலும், அண்டைய நாட்டின் தேவை அறிந்தும் செயல்பட மறக்கிற கேரளாவில் உள்ள இந்த தேவஸ்தானத்தையும் எந்தத் தீர்ப்பும் கட்டுப் படுத்திவிட முடியாது என்றே தோன்றுகிறது.

ஏமாற்றும் வேலைகள் தொடர்வது போல விபத்துக்களும் தொடரலாம்.  
தொடரும்...

18.1.11

தமிழ் புத்தாண்டு

தமிழ் புத்தாண்டு.
நாம் அதைப் பற்றிக் கவலைப் படுவது இல்லை.
நமக்கென்று இருக்கவே இருக்கிறது ஆங்கிலப் புத்தாண்டு – அரையாண்டு விடுமுறையில் வருவதால் நன்றாகக் கொண்டாடவும் முடிகிறது.

அது மட்டுமல்லாமல் ஒரே ஆண்டில் எத்தனைப் புத்தாண்டுதான் கொண்டாடுவது என்ற கேள்வி வேறு எழுகிறது? ஆங்கிலப் புத்தாண்டு, பிறகு, தமிழ் புத்தாண்டு; பிறகு தெலுங்குப் புத்தாண்டு. சிறு பிள்ளைகள் போல நினைத்தால், அவைகளெல்லாம் வெறும் விடுமுறை நாட்களாகவே நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அதற்குப் பின்புலம் எதுவும் உண்டா என்பது புரியாமலே இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் காரணம் அடையாளம்தான் [identity]. நமது அடையாளம் எது என்பது புரியாத நிலையில் நாம் இருக்கிறோம். மொழி மட்டுமா அல்லது அதனோடு தொடர்புடைய விழாக்களா / பண்பாட்டுக் காரணிகளா , அல்லது சமயமா, அல்லது தேசமா, உலகமா? எதில் நம் அடையாளம் இருக்கிறது. எல்லாமே என்றால் தனித்துவ அடையாளம் என்று ஒன்று இருக்க வேண்டுமே? அது எது? எதனடிப்படையில் அதை வரையறுப்பது? புத்தாண்டுக் கேள்வியாய் இது இருக்கட்டும்.

வேறு விடயத்திற்கு வருவோம்.
நாம் தமிழ் புத்தாண்டை கொண்டாட விருப்பம் இல்லாதவர்கள் என்று நானே எண்ணிக் கொள்கிறேன். எனவே அதற்கான தர்க்கத்திற்கு வருவோம்.
சித்திரையைத் தான் இத்தனை ஆண்டுகளாய் நாம் தமிழர் புத்தாண்டு என்று எண்ணிக் கொண்டிருந்தோம். எனவே அதை கலைஞர் மாற்றி விட்டார் என்பதனால், அந்தக் கோபத்தினால் இந்தப் புத்தாண்டு வேண்டாமென்றால் நாம் தமிழர் வரலாற்றை [இதை எப்போது முடிவு செய்தார்கள், யார் யார் செய்தார்கள் – எதற்காக முடிவெடுத்தார்கள் என்பது பற்றியெல்லாம்] ஆழ்ந்து படிக்க வேண்டியிருக்கிறது. அ.தி.மு.க நண்பர்கள் இதைக் கொண்டாட மாட்டார்கள். அம்மையார் இதை அனுமதிக்க மாட்டார். இதுவரை ஏப்ரலில் வாழ்த்துச் சொன்ன கலைஞர் மூன்று ஆண்டுகளாய் “தை”யில் வாழ்த்துச் சொல்கிறார். மீண்டும் அம்மையார் வந்தால் மீண்டும் இந்தப் புத்தாண்டு ஏப்ரலில்தான் கொண்டாடப் படவேண்டும் என்று சட்டம் இயற்றினாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. அரசு அலுவலகங்களுக்கு தை மாதம் நக்கிற அலங்கார விளக்குகள் சித்திரைக்கு மாறும். அது “நந்தன” ஆண்டு சித்திரையில் [ஏப்ரல் 14 ல்] தொடங்கலாம்.

அல்லது "புத்தாண்டு வாழ்த்துக்கள்" சற்று இடைவெளி விட்டு - "மூன்று மாதங்களுக்கு முன்பாகவே" என்று சோ போல கிண்டல் அடிக்கலாம்.
வேதங்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப் பட்ட சமஸ்கிருத வருடங்கள் ஏப்ரலில் தொடங்குகிறது. கடந்த ஆண்டு விரோதி ஆண்டு. இப்போது விக்ருதி ஆண்டில் இருக்கிறோம். இது பங்குனி மாதம் முடிந்து “கர” ஆண்டு சித்திரையில் தான் தொடங்குகிறது. எனவே அப்போதுதான் தமிழ் ஆண்டு தொடங்குகிறது என்றால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. “இந்து இந்தி இந்தியா” பற்றி நிறைய அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

வெற்றுச் சடங்காககிப் போன இந்தப் பொங்கலைக் கொண்டாடித்தான் ஆக வேண்டுமா என்ற வேதனை இருப்பதால் இப்பொங்கல் விழாவை கொண்டாட மனதில்லை என்றால் சடங்காக இல்லாமல் உண்மையான பண்பாட்டு விழாவாய்க் கொண்டாட என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்.
அல்லது
இதைக் கொண்டாடுகிறவர்கள் என்றால் எதற்காக இந்த விழா அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து கொண்டாடுவதும் முக்கியமானது. மொழி என்பது வெறும் தொடர்பு இணைப்பான் – எனவே இந்த மொழி பேசுகிறவர்கள் கொண்டாடுவது என்கிற மேலோட்டமான புரிதல் மட்டுமே போதாது. ஏனென்றால் விழாக்களுக்கு மட்டுமே நாம் பேர் போனவர்கள் – எனவே இதன் சிறப்பும் நமக்குப் புரியாது.

ஆக என்ன செய்யலாம். இதை எழுதிய என்னை இரண்டு திட்டு திட்டிவிட்டு வேறு வேலை இருந்தால் செய்யலாம்: அல்லது இந்தப் பண்பாட்டு விழாவை பொருள் உணர்ந்து கொண்டாடலாம். பொங்கலாம்.
இது வெறும் புத்தாண்டு மட்டுமல்ல – அடையாள விழா! ஆனால் அடையாளம் பற்றிய நீண்ட விவாதமும் தேவைப்படுகிறது. விவாதிப்போம்.
வாழ்த்துக்கள்.

14.1.11

பொங்கல் வாழ்த்துகள்

தமிழர் திருநாள் – பொங்கல் – வாழ்த்துகள்
  • பொங்கல் தமிழர் திருநாளில் ஒரு மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. இது தமிழர்களின் அடையாளம் என்று அழுத்திச் சொல்லலாம். அதோடு கூட இது தமிழர் புத்தாண்டாகவும் கொண்டாடப் படுவது கூடுதல் சிறப்பு.

  • சித்திரைத் திருநாளை ஆண்டின் முதல் நாளாகக் கொண்டாடி வந்தவர்கள் – நீண்ட நெடிய ஆய்வு, போராட்டம், விரக்தி, வேண்டுதல்களுக்குப் பிறகு அரசின் கட்டிடங்கள் விழாக் கோலம் பூண்டு மக்கள் இதை நமது புத்தாண்டாகக் கொண்டாட வழி வகுத்திருப்பது போற்றக் கூடியதே. ஆனாலும் நம்மில் பலருக்கு இது கலைஞர் மேலுள்ள வெறுப்பு காரணமாகவும் அல்லது மரபின் காரணமாகவும், சித்திரையை மாற்றுவதில் உடன்பாடற்று இருக்கிறோம். தவறான மரபில் ஊறிப்போய் அதிலே உழலும் நமக்கு மாறுவதும், மாற்றுவதும் கடினமே. நமக்கென இருக்கும் அடையாளங்கள் மறைந்து கொண்டிருக்கும் வேளையில் நமக்கென ஒரு புத்தாண்டாவது இருந்து விட்டுப் போகட்டுமே. அடையாளம் அழியாமல் இருக்கட்டும்.
  • தமிழக முதல்வரின் வேண்டுதலுக்கு இணங்க கேரள முதல்வர் அய்ந்து மாவட்டங்களுக்கு பதினைந்தாம் தேதி விடுமுறை விட்டிருப்பது சிறப்புச் செய்தி. அதற்குப் பதில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மன சாட்சியோடு நடப்பதே சரியான செயல் பாடாக இருக்கும்.
  • இது சூரியனுக்குப் பொங்கலிட்டு நன்றி தெரிவிக்கும் விழா. அதோடு சேர்த்து மற்ற வான் கடவுளர்கள், உழவுக்குத் துணை புரியும் அனைத்திற்கும் நன்றி செலுத்தும் விழா. சூரியன் எல்லாப் பண்பாடுகளிலும் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருப்பதும் – சூரியனே முதல் கடவுளாக பழமையான சமயங்களில் இருப்பதும் நாம் அறிந்ததுதான். பழைய எகிப்தில் ... அல்லது ஹீலேயோஸ் என்கிற கிரேக்க சூரியக் கடவுள், சமாஸ் என்கிற பாபிலோனிய சூரியக் கடவுள் ... இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழர்களாகிய நாம் நமது ஆதியை விட்டுவிடாமல் இருப்பது ஆச்சரியமே. ஆனால் சூரியன் என்பது நமது அரசியலோடு தொடர்பு கொண்டுள்ளதால் சூரியன் பற்றி நாம் யோசிப்பதையே விட்டுவிட்டோம்.“சுட்டெரிக்கும் சூரியன்” என்று மட்டுமே சொல்லப் பழகிப் போய் விட்டோம் – ஆனால் நமது பிரிவினைகளை சுட்டெரிக்க அனுமதிக்காமல் நமது சாதிகள், மதங்கள் மேல் கூரை கட்டப்பழகி விட்டோம். அதனின் “இயங்காமல் இயக்கும் தன்மை”, “வாழ்வாக்கம்” ... இன்னபிறக்களில் நம் கவனம் செல்ல இப்புதிய ஆண்டு வழி வகுக்கட்டும்.
  • ஏறக்குறைய, 320 கோடி ரூபாய் செலவில் இந்தப் புதிய ஆண்டில் அனைவருக்கும் [உழைக்காமல்] இலவசப் பொருட்கள் வழங்கப் படுகின்றன. உழைப்பாளர் தின வாழ்த்துக்களை கட்டாயம் பகிர்ந்து கொள்ள வேண்டும். எல்லாருக்கும் தவிர்த்து உழவர்களுக்கென மட்டுமேன்றிருந்தாலும் உழைப்பாளர் தினத்தன்றாவது அவர்களை மதிக்கிறோம் என்றாகி இருக்கும். இப்போது அதற்கும் வழியில்லை.
  • விவசாயத்தை மதிக்காமல் – விளை நிலங்களைப் பராமரிக்காமல் – அதற்கு வழியே விடாமல் – வெறும் ரியல் எஸ்டேட் பிசினஸ் – குளம் குட்டைகள் ஆக்கிரமிப்பு – அறைக்குள் மட்டும் கணனிகளின் அணிவரிசை – உணவு உற்பத்திக்கான முயற்சிகளில் இறங்குபவரை ஊக்கப் படுத்தாமல், நீராதார வளங்களைப் பெருக்காமல் இப்போது விலை வாசி உயர்வு – ஒரு நாள் பொங்கல் பொட்டலம் ஒன்றும் செய்யாது.உழைப்பாளர் அழியாமல் இருக்கட்டும்.
வாழ்த்துகள்


1.1.11

புதிய ஆண்டு - 2011

ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட நாள் புதிய நாள். பல்வேறு காரணங்களுக்காக அது அவ்வாறு இருக்கும். எனவே ஒவ்வொரு நாளும் புதிய நாள்தான். 
ஆனால் ஒரு குறிப்பிட்ட நாளை மட்டும் எல்லாரும் விமரிசையாகக் கொண்டாடுகிற நிலை ஒரு குழும உணர்வை - தான் தனித்து இல்லாமல் அனைவரோடும் இருக்கிறோம் - ஒரே மன நிலையில் இருக்கிறோம் என்கிற மகிழ்ச்சியைத் தருகிறது.

மகிழ்ச்சி நீடிக்கட்டும்.

ஆங்கிலப் புதிய ஆண்டை ஏறக்குறைய எல்லாரும் கொண்டாடுகிற போது அனைவரும் தங்களது குறுகிய மனநிலையத் தாண்டி ஒரே எண்ணத்தோடு இருக்கிறோம் என்பது இதின் பலம்.

ஆனால் - இந்த விழாக்கள் நிறைய வியாபார நோக்கிலேயே இருக்கின்றன. குழும உணர்வு என்கிறதைத் தாண்டி, அதன் பொருள் மாறி - உணர்வற்ற, பொருளற்ற, சத்தங்கள் எழுப்புகின்ற, சத்தங்கள் மட்டுமே எழுப்புகின்ற நாட்களாக மாறி விட்டன.

எதுவும் செய்வதற்கில்லை - இக்கடலில் கலப்பதைத் தவிர.


புத்தாண்டு வாழ்த்துக்கள்.