விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25.5.17

சரவணன் எய்த சங்கிலி – திரைப்படம்

இது திரைப்பட விமர்சனமல்ல - விவகாரம் 
·    என்னடா புதுப்படம் எதுவும் நமக்குத் தெரியாம வந்துருச்சா அப்புடின்னு நினைக்க வேண்டாம். இந்த வாரம் மூணு திரைப்படங்கள் பாத்தேன் – சங்கிலி புங்கிலி கதவைத் திற, எய்தவன் மற்றும் சரவணன் இருக்க பயம் ஏன்? அந்த மூன்று படங்களுக்கும் பெரிதாய் ஒன்றும் வித்தியாசம் இல்லை. ஒன்னு பரவாயில்லை, இன்னொன்னு சுமார் இன்னொன்னு மோசம் அப்படித்தான் சொல்லணும். ஹீரோசுக்கு பான்ஸ் இருந்தா மன்னிக்கணும்.

·    இன்னைக்கு எப்படியாவது அந்தப் படம் பாக்கணும்னு போன படங்களும் உண்டு. இன்னைக்கு எப்படியாவது படம் பாக்கனும்னு போன நாட்களும் உண்டு. விடுமுறை நாட்களில் எப்படியாவது படம் பார்த்து விட வேண்டும் என்பதனால் இந்தப் படங்களை எல்லாம் பார்க்க வேண்டியிருந்தது. நானாப் போய் மாட்டிகிட்ட படங்கள் என்று சொல்லலாம். அவசரக் கல்யாணம் சாகாவச சங்கடம் என்பது போல அவசரப்பட்டுப் போய் மாட்டிக்கொண்ட படங்கள். கட்டாயப் படுத்தி என்னைச் சங்கிலியில் கட்டிப்போட்ட என் நண்பர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம். நான் கட்டாயப்படுத்தி நான் இருக்க பயமேன் என்று நான் பயமுறுத்திய பயந்த என் நண்பர்களுக்கும் சமர்ப்பணம்.

·  பல சமயங்களில், பார்க்கும் படங்களை விட, படம் பார்க்கப் போகும்போது கிடைக்கும் அனுபவங்கள் நினைவில் நிற்கும். அப்படி ஒரு சில நினைவில் நின்றன. இன்னைக்கு விட்டா படம் பாக்க முடியாது என்பதனால் ஒவ்வொரு தியேட்டரா பார்த்துப் பார்த்து கடைசியில், தேவி – யில் சங்கிலி புங்கிலிய பாக்கப் போனோம். விரும்பின தியேட்டரும் கிடைக்கல, விரும்பின படமும் கிடைக்கலை. வேகமாய் போற வழியில் குறுக்கே ஒரு ஆட்டோ – திட்டலாம்னு பார்த்தா அருமையான வசனம் அந்த ஆட்டோவின் பின்னால்:
                                     “பாத்துப் போ பங்காளி
                                     நானும் ஒரு தொழிலாளி”
             அதைப் படிச்சிட்டு எங்க திட்டுறது? அப்படின்னா
                                     குறுக்கே வாராதே பங்காளி ன்னுட்டு சைலன்ட்டா போய்ட்டோம்.
·          சென்னையைப் பொறுத்தவரை விடுமுறை நாட்கள் என்றாலும் சாலைகள் முழுவதும் வண்டிகள் மற்றும் வண்டிகள். நாம் எப்போதுதான் சாலையில் வண்டி ஓட்டப் போகிறோம் என்று தெரியவில்லை. இப்போதுள்ள நிலையில் ஒன்று ஊர்ந்து செல்கிறோம் அல்லது நின்று கொண்டிருக்கிறோம். இந்த இரண்டைத்தான் நாம் இப்போது சென்னை சாலைகளில் செய்ய முடிகிறது. ஓட்ட வேண்டுமென்றால், சென்னை முழுவதும் பாலம் வேண்டும். போரூரை நாங்கள் கடப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. 

·  இப்போதெல்லாம் திரைப்படத்திற்கு தாமதமாகப் போவதையே நான் விரும்புகிறேன். சீரியல் விளக்குகள் போட்ட ஸ்க்ரீன் ஓபன் செய்வதில் இருந்து படம் பார்ப்பதை விரும்பியவன் நான். ஆனால் இப்போதுள்ள சூழலில் தாமதமாகச் செல்வதையே விரும்புகிறேன். சீரியல் விளக்குகளோ அல்லது வெள்ளை ஸ்க்ரீனை மூடியிருக்கும் மற்றொரு ஸ்க்ரீன் இல்லை என்பதனால் எல்லாம் இல்லை. திரைப்படத்திற்கு முன் நடக்கும் இரண்டு விஷயங்கள்.

·  முதலாவது புகைப்பிடிப்பது பற்றிய அறிவிப்பும் அதைத் தொடர்ந்து வரும் பயமுறுத்தும் விளம்பரமும். ஊரெல்லாம் புகையிலைக் கடைகள். மதுக்கடைகளை தடை செய்யச் சொன்னால் போலிஸ் தடியடி. போலிஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடைகள். நேஷனல் ஹைவேயில் வைக்கக் கூடாது என்றால் முன்புற வாசலை அடைத்து பின்புற வாசலைத்திறந்து முகவரியை மாற்றிக் கொள்வது. இப்படியெல்லாம் செய்து விட்டு, குடிப்பழக்கம் உடல் நலத்திற்குக் கேடு என்று திரைப்படத்திற்கு முன்பு விளம்பரப் படுத்தினால் சரியாகி விடுமா என்ன? இந்த விளம்பரத்தைப் பார்ப்பதற்கு சும்மா இருந்து விடலாம். அல்லது, குடிக்கிறவனுக்கு குடிப்பதனால் என்ன நடக்கும் என்று தெரியாதா என்ன? கடைகளைத் திறந்து வைப்பது கட்டாயம் ஆனால் யாரும் குடிக்கக் கூடாது என்றால் எப்படி?

·          அடுத்தது நாம் பாடும் தேசிய கீதம். நீதி மன்றத்தை அவமதிப்புச் செய்ய வேண்டும் என்றெல்லாம் இல்லை. அல்லது எனக்குத் தேசப் பற்று இல்லை என்றும் அர்த்தம் இல்லை. திரைப்படத்திற்கு முன்னால் திரையரங்கில் தேசியகீதம் பாடுவதில் எனக்கு உடன்பாடில்லை. முன்னே சென்று பிடிக்காமல் இருப்பதை விட, வெளியே இருந்து விடுவதே நல்லதில்லையா? தேசிய கீதம் பாடிக்கொண்டிருக்கும் போது யாரையும் உள்ளே அனுமதிப்பது இல்லை. என்பதினால் இப்போது அதற்குப் பிறகே செல்கிறேன். நாட்டின் பன்முகத்தன்மையையும், நாட்டின் மீதான மதிப்பையும் அதிகப்படுத்துவதற்கு பதில் வெறும் தேசிய கீதம் மட்டும் போதாது. எப்படி புகையைக் கட்டுப்படுத்த புகையிலை விளம்பரம் மட்டும் போதாதோ அதேபோல திரைப்படத்திற்கு முன்னால் தேசிய கீதம் பாடுவது மட்டும் போதாது. பள்ளிக் கூடத்திற்கு அருகில் டாஸ்மாக் கடைகள், ஊழல் அரசியல்வாதிகள், கொர்போரெட் நிறுவனங்களுக்காக கைக்கூலியாய் செயல்படும் அரசுகள், பழிவாங்க மட்டுமே பயன்படுத்தப்படும் வருமான வரித்துறை, என்று தேசத்தை வீழ்ச்சியுரும் செயல்கள் பல செய்துவிட்டு, கற்பனைக் கதைகளை மட்டுமே பேசும் திரைப்படங்களுக்கு முன்பு நான் தேசிய கீதம் பாடுவது ஏன் தேசப்பற்றையும் கற்பனை என்று ஆக்கிவிடாதா? நல்லவேளை டிஸ்கொத்தேவில் முதலில் தேசிய கீதம் பாட வேண்டும் என்று இன்னும் சொல்லப் படவில்லை. தேசிய கீதத்தெற்கென்று மரியாதை இருக்கிறது. திரைப்படத்திற்கு முன்பு பாடவைத்து அதைக் குலைப்பதாகாவே நான் கருதுகிறேன். அதைப் பாடும்போது நான் அமர்ந்திருந்தால்தான் அவமதிப்பு. நான் உள்ளேயே இல்லையென்றால் அது அவமதிப்பாகுமா என்ன?

·          சரி விஷயத்திற்கு வருவோம். சங்கிலி புங்கிலி ஒரு பேய்ப்படம். நல்ல பேயோடு ஜீவா சண்டை போடும் படம். சரவணன் இருக்க பயமேன் இதெல்லாம் ஒரு பேய்ப்படம்னு சொல்லவே பேயே வெட்கப்படும் ஒரு பேய்ப்படம். இதுல ஒரு நல்ல பேயோடு கூட்டுச் சேர்ந்து உதயநிதி நடிக்கும் படம். எய்தவன் ஒரு விதத்தில் பேய்ப்படம்தான் – ஒரு சமூகப் பேயான கல்வி நிறுவனத்தைக் காசாக்கும் ஒரு பேயோடு மோதும் ஹீரோ கலையரசன். இந்த மூன்று படங்களிலும் நல்ல செய்தி உண்டு.

·          எய்தவன் கல்வி நிறுவனங்கள் - குறிப்பாக மெடிகல் கல்லூரிகள் எப்படி ஏஜன்ட்டுகளை வைத்து கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன என்றும், மாணவர்கள் எப்படி அதை எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. கல்வி நிறுவனங்கள் மட்டுமல்ல இன்றைக்கு நம் நாட்டில் எல்லாமே கார்பொரேட் கைகளில்தான் இருக்கின்றன. இந்தப் பேய்களோடு போட்டி போடுவதும், அதிலிருந்து உண்மையான அறிவை வளர்ப்பதும் மிகக் கடினம் என்றே தோன்றுகிறது.

·  சங்கிலி புங்கிலி கொர்போரெட் சுழலில் சிக்கி சின்னாபின்னமாகி சிதைந்து போன கூட்டுக் குடும்பத்தின் மேன்மையை உணர வைக்க முற்படுகிறது. சொத்துக்காக குடும்பங்களைப் பிரித்தவர்கள் நமக்கு அருகிலேயே உண்டு. கூடி வாழ்வது அவசியம் என்பதை சங்கிலி பேயின் உதவியோடு செய்தி சொல்ல முயற்சித்திருக்கிறார்கள். பேய் வந்து சொன்னால்தான் நமக்கு புத்தி உரைக்கும் என்று நினைத்தார்களோ என்னவோ.

·     சரவணன் ரொம்ப நார்மல் திரைப்படம். விஜய் டிவி புகழ் கலக்கப் போவது யாரு டீமை குத்தகைக்கு எடுத்து இருக்கிறார்கள். ஒருத்தர் கூட நம்மை இம்மியளவு கூட சிரிக்க வைக்கவில்லை என்பது மிகப்பெரிய நகைச்சுவை.  ஒரு பேயின் உதவியோடு தான் விரும்பும் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார் ஹீரோ. அதில் பேயும் சரியில்லை, படமும் சரியில்லை, கதையும் சரியில்லை. நாமாகக் கட்டாயம் குடுத்த காசுக்கு சிரிக்க வேண்டும் என்றால் சில இடங்களில் இவன் வந்தால் சிரித்து விடுவோம் என்று சிரிக்கலாம். போனாப் போகுதுன்னு பாட்டுக்குப் பாட்டில் சிரிக்கலாம். மற்றபடி அதில் நடிப்பும் இல்லை, கதையும் இல்லை, லாஜிக்கும் இல்லை.

·          அதற்கு சங்கிலி பரவாயில்லை. பேய் அடிக்கடி வருகிறது. கொஞ்சம் கதை இருக்கிறது. என்ன, ,இரட்டை அர்த்த வசனங்கள் ஓவரா இருக்கிறது. சரவனனையும் சங்கிலியையும் இணைப்பது பேய் மட்டுமல்ல, சூரியும்தான். காமெடி என்பது சில இடங்களில் அவரது நடிப்பில் மட்டும்தான் வெளிப்படுகிறது ஸ்க்ரிப்ட்டில் இல்லை. அதனால் கொஞ்ச நேரத்தில் அவரைப் பார்ப்பதும் போரடிக்கிறது. காமெடியன்களுக்கு நிறைய பஞ்சம் இருக்கிறது. சாரி, சிரிக்க வைக்கும் காமெடியன்களுக்கு ... சூரி இன்னும் நல்லா வரலாம்.
  • வேறு வழியே இல்லாமல் படம் பார்க்கச் செல்லாதீர்கள். என்ன படம் பார்க்க விரும்புகிறீர்களோ அந்தப் படத்தைப் பாருங்கள். இந்தப் படத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் அந்தப் படத்தைப் பார்க்காதீர்கள், பரவாயில்லைஅடிக்கிற வெயிலுக்கு இது பரவாயில்லை என்றால் போய் பாருங்கள். இறுதியாய் செய்தி சொல்ல வேண்டுமல்லவா?
·          இந்த மூன்றில் எய்தவன் பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மருந்துக்குக் கூட சிரிப்பு இல்லை. ‘வெய்ட் பண்ணச் சொன்னானா’ என்கிற ஒரு இடத்தில் மட்டும் நீங்கள் சிறிதே உதட்டை இழுத்து புன்னகைக்கலாம். இருந்தும் இந்தப் படம் பரவாயில்ல என்று சொல்வதற்கான காரணம் – நமக்கு முன்னால் நிஜப் பேய்கள் நிறையத் தாண்டவமாடுகின்றன. அவைகளோடு போராடுவதுதான் நமது இப்போதையத் தேவை. செத்துப் போன பேய்களை வைத்து காதலியோடு சேர்வதோ, செத்துப் போன பேயின் பயமுறுத்துதலின் வழியாய் நாம் சேர்ந்து இருப்பதெல்லாம் மீண்டும் ஓர் நாவல் போலத்தான். கற்பனை வாழ்க்கைக்கு ஒத்து வராது. ஊழல் சமூகம் திருந்த வேண்டுமென்றால் கல்வி கல்வியை இருக்க வேண்டும். அதைச் சரி செய்ய வேண்டிய கடமை எல்லாருக்கும் உண்டு. எந்தப் பேயும் இதைச் சரி செய்ய உதவிக்கு வராது... நாம் செய்தால்தான் உண்டு...




4.7.15

காக்கா முட்டை


காக்கா முட்டை  சென்னை ஒரு சேரியில் வாழும் இரண்டு குட்டிப் பையன்களின் கதை. அதில் அம்மக்களின் அன்றாட வாழ்க்கையின் உண்மையான நிலையையும் , வாழ்க்கையின் தேடலையும் சேர்த்து மிக நுண்ணியமாய் படமாக்கி உள்ளார் இயக்குனர். 

இரண்டு மணி நேரம் படம் பார்த்து முடித்தவுடன் நமக்கு அவர்களோடு வாழ்ந்த அனுபவம் ஏற்படுகிறது. எத்தனை முறை நாம் அச்சேரிகளுக்கு அருகில் பயணித்து இருந்தாலும் ஏன் இப்படிப்பட்ட நகரத்தைப் பார்க்காமலே இருந்திருக்கிறோம் என்று நம் மேல் ஒரு கோபம் ஏற்படுகிறது. என்ன மனிதர்கள் நாம்? சுற்றி என்ன இருக்கிறது? என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய பிரக்ஜை இல்லாமல் எப்படி நம்மால் இருக்க முடிகிறது?

அப்படியே அந்த சேரியைப் பார்த்திருந்தாலோ அல்லது வழி தெரியாமல் சேரிக்குள் நுழைந்திருந்தாலும், நாம் ஏன் இவர்களைப் பார்த்து முகம் சுளித்திருக்கிறோம் என்று நினைவுகள் வேகமாய் வந்து நம்மை விசனப்படவும் வைக்கும். சின்ன காக்காமுட்டை, பெரிய காக்காமுட்டை, அம்மா, பாட்டி, பழரசம், காயலான்கடை மக்கள் என்று ஒவ்வொரு கதா பாத்திரத்தையும் எதார்த்தத்தோடு படம் பிடித்திருக்கிறார்.

காக்கை முட்டை என்கிற வார்த்தையை முதலில் கேட்டால் சிலருக்கு சிரிப்பு வரும். சிரிப்பு - அனுபவங்களின் நினைவில், நானும் அதை உண்டிருக்கிறேன் என்பதனால் சிரிப்பு வரும் அல்லது உண்டவர்களோடு கூட இருந்த அனுபவமாவது அந்தப் புன்னகைக்கு காரணமாக இருக்கும். ஆனால் பலருக்கு அந்த வார்த்தையைக் கேட்டவுடன் முகம் சுளிக்கத் தோன்றும். அதெல்லாம் தொடக்கூடாது அசிங்கம் என்பதனால் முகம் சுளிக்கலாம். முகம் சுளிக்கும் அதில் பலர், உண்பதற்கு பணம் உள்ளவர்களாக இருப்பார்கள் என்பதுதான் உண்மையாக இருக்கும். இருக்கப்பட்டவன் ஏன் சமுதாயத்தில் நல்லதென கொண்டாடப்படாததை எல்லாரும் பார்க்கும்படி உண்ணப் போகிறான்.

காக்கை முட்டை காசில்லாதவர்களின் புரதச்சொத்து. அதை மிகவும் எதார்த்தத்தோடு அனுகியிருப்பதில்தான் இயக்குனரின் வாழ்க்கை அனுபவமும், ஒரு விஷயத்தை எப்படி கலை நயத்தோடு அணுகவேண்டும் என்கிற கலை அனுபவமும் ஒரு சேர இருக்கின்றது.

இது விவேக்கின் காக்கா பிரியாணி காமெடி போல இல்லை. இதில் இருக்கும் காமெடிகள் மிக இயல்பானவைகள். இதில் மிகக் குறைந்தது மூன்று இடங்களிலாவது சிரிக்கவில்லைஎன்றால் அந்த உம்மானா மூஞ்சியை யார் வந்தாலும் சிரிக்க வைக்க முடியாது என்றே பொருள். இடைவேளைக்குப் பின் சிறிதே இழுத்தாலும் அந்தப் பையன்கள் அதை வேகமாய் நகர்த்துகிறார்கள்.

===

இது படம் பார்த்தவுடன் எழுதி வைத்தது. இன்னும் முடிக்கக் கூட முடியவில்லை. நீண்ட நாட்கள் அதை பதிவேற்றம் செய்யாமலே வைத்திருக்க மனமில்லை... எனவே பாதியானாலும் பரவாயில்லை  பதிவேற்றியாயிற்று .

===



12.2.15

‘தான்’உஷ்ஷ்ஷ் ‘அமி’‘தாப்’ - SHAMITHAB

‘தான்’உஷ்ஷ்ஷ் ‘அமி’‘தாப்’

மிகக் குறைந்த நேர இடைவெளியில் இரண்டு திரைப்படங்கள் ஒரு சேரப் பார்ப்பது, பல வருடங்களுக்குப் பிறகு, இப்போதுதான். இசைக்குப் பிறகு ஷமிதாப். ஒரு சேரப்பார்த்ததாலோ என்னவோ இரண்டுக்கும் இடையில் இடைவெளியே இல்லாதது போலவே இருந்தது. என்ன ஒன்று தமிழ் மற்றது இந்தி.

இசையில், சத்யராஜ் இளையராஜாவின் பிரதியோ என்ற சந்தேகத்தைப் பார்வையாளர்கள் மத்தியில் விதைத்தது. அது உண்மையோ பொய்யோ எனக்குத் தெரியாது. தன் போக்கில் தான் இன்னும் இளையராஜா ராஜாவாகவே இருக்கிறார் என்பதை ஷமிதாப் சொல்லுகிறது. ஷமிதாப்பில் துப்பும் இசையெல்லாம் இல்லை, துள்ளும் இசைதான். இசைஞானியின் இசை பிரமாண்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

சூர்யாவின் இசை என்கிற திரைப்படம் ஈகோ – வை மையப்படுத்திய படம் என்றால் பால்கியின் ஷமிதாப்பும் ஈகோவை மையப்படுத்திய படம்தான். ஆனால் இரண்டு படங்களின் ஈகோவிற்கும் நிறைய வேற்றுமை. இசையில் அதில் சினிமாத்தனம் நிறைய புகுத்தப்பட்டிருக்கிறது. ஷமிதாப்பில் அது ரியலிஸ்ட்டிக்காக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சினிமாத்தனத்திற்குள்ளும் ரியலிஸம். இன்னும் மிகச் சிறப்பாக இருந்திருக்கலாம் என்பது என் எண்ணமாக இருந்தாலும் இதுவும் நன்றாகவே இருந்தது. முந்தைய ஈகோ பழையவனில் இருந்து உருவாகிறது. பிந்தையதில் தோல்வியுற்றவன் வெற்றிபெருபவன் இருவரிடமிருந்தும் உதிக்கிறது.

இசையிலும் நடிகர்கள் எண்ணிக்கை குறைவு. இதிலும்தான். இரண்டு ஆண்கள் ஒரு பெண் என்று மூவரைச் சுற்றி நடக்கும் இசையைப் போலவே, ஷமிதாப்பிலும் இரண்டு ஆண்கள் ஒரு பெண் என்று நகர்கிறது படம். இசையின் கனவு இசை என்றால், ஷமிதாப்பின் கனவு நடிப்பு. கனவுகள் நனவாகும் விதம் எப்போதும் புதிரானதுதான்.
சரி. இசையைப் பற்றி ஏற்கனவே கடந்த பதிவில் இயம்பிவிட்டதால், ஷமிதாப்பின் கனவுக்குள் மட்டும் இயங்குவோம்.

ஷமிதாப்... இசையில் உள்ள நீளம் இதில் இல்லாததாலோ என்னவோ இது எனக்கு மிகவும் நெருக்கமான படமாகவும் இருக்கிறது. படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது அமிதாப்பின் கரகரப்புக் குரல் நமது குரலிலும் ஒட்டிக் கொள்கிறது. அமிதாப்பின் நடிப்பும் அலாதியானதுதான். ஒவ்வொரு பிரேமிலும் அவரின் முத்திரை பதிக்கப் பட்டிருக்கிறது. இந்த வயதிலும் அவரது டெடிகேசன்... மிக அருமை.

தனுஷின் நடிப்பு அதற்கு ஈடு கொடுக்கும் நடிப்பு. ஆனால் தனுஷின் நடிப்பை முற்றிலும் பயன்படுத்தாமல் இயக்குனர் பால்கி விட்டு விட்டார் என்று சொல்லலாம். நடித்த வரையில் தனுஷ் அபாரம், சில இடங்களைத் தவிர. பி. சி. ஸ்ரீராம் (அவர்தானே) ஒளிப்பதிவு மிக நேர்த்தியானது. அதுவும் இந்தப் படத்திற்கு வலுச்சேர்க்கிறது.

சரி படத்தின் கதையைச் சொன்னால் பார்க்கும் சுவாரஸ்யம் குறைந்து விடும். சொல்லாவிட்டால் பதிவு சுமாராகி விடும். முற்றிலுமாகச் சொல்ல முடியாது எனினும் பாத்திரங்களை உள்ளிழுக்காமல் கதை சொல்ல இயலுமா? ம்.. முயற்சிக்கலாம்.

மனித வாழ்வை உயர்த்திப் பிடிப்பதும் அதே சமயம் அடி சறுக்கச் செய்வதும் ‘தான்’ என்ற ஈகோதான். சாதாரண நிலையில் ஒருவன் முன்னேறி வர வேண்டுமென்றால் அதற்கு ‘தான்’ என்கிற மனநிலை மிக அவசியமாகிறது. அதுவே நாட்கள் செல்லச்செல்ல பிறரைப் பற்றி எந்த அக்கறையும் (பிரக்ஜையா?) இல்லாமல் இருக்கப் பழக்கி விடுகிறது. ஏற்றி விட்டவர்களுக்கென்று வரும் போது கூட ஈகோ தடுக்கிறது. எது ஒருவனின் முன்னேற்றத்திற்குத் தேவையாக இருக்கிறதோ அதுவே அவனுடைய அழிவுக்கும் காரணமாக இருக்கிறது.

மத்திய அரசில் ஆட்சி அமைக்க திரு. மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நிச்சயம் அவரது ‘தான்’மையும், அதோடு சேர்ந்து இந்திய ஊடகங்களை தன்வயப்படுத்திய யுக்தி, அவரை நம்பி பணம் செலவழிக்கத் தயாராக இருந்த அதானி போன்றவர்கள் -  இவைகளெல்லாம் சேர்ந்து தான் அவரை ஒரு மிகப் பெரிய ஆளுமையாக உருவாக்கியது. ஆனால் தனது வாக்குறுதிகளுக்கு உண்மையில்லாமல் இருக்கிற போது ‘தான்’ என்பது ஒன்றும் செய்ய முடியாது. வெறும் மோடியை முன்னிறுத்தும் கோஷங்கள் – விளம்பர யுக்திகள், ஒன்றும் செய்து விட முடியாது. உஷ்.... அமைதி என்று தில்லி மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள்.

மத்திய அரசின் மாற்றத்திற்கான வாக்கு எப்படி இருந்ததோ அதே போல ஒட்டு மொத்தமாக அறுபத்தி ஏழு இடங்களை ஆம் ஆத்மி கைப்பற்றி இருக்கிறது. இங்கே பாரத் பிரதமரின் ஈகோவும், அவரது பெயர் பொறித்த கோட், இந்தியாவில் அடிக்கடி இல்லாதது, உறுதி மொழிகளைக் காப்பாற்றாதது, வெறும் திட்டங்கள் துவங்கும் பிரதமராகவும் அதை விளம்பரப் படுத்தும் தலைவராகவும் மட்டுமே இருப்பது, அவரது அமைதி என்று பல காரணங்கள். தான் என்பது தான்தோன்றித்தனத்திற்கும் வழிகோலும்.

‘தான்’ என்பது அடக்கி வாசிக்கப்படவில்லை என்றால் கேஜ்ரிவாலிற்கும் நாளை இதே நிலைதான். மோடி ஆதரவாளர்கள் இதைப் பற்றி பேசமாட்டார்கள். டெல்லி தேர்தல் முடிவுகளை வைத்து மத்திய அரசை விமர்சிக்கக் கூடாது என்று தேர்தலுக்கு முன்பே வெங்கையாநாயுடு போன்றோர் ஜகா வாங்கி விட்டார்கள். கடந்த ஆண்டு தேர்தலில் உதவிய ஊடக யுக்திகள் இந்த முறை பலனளிக்காமல் போய் விட்டன. அதோடு கூட த ரைஸ் அண்ட் பால் ஆப் பி.ஜே.பி என்று ஆய்வு நடத்தலாம்.

ஷமிதாப் ஒரு விதத்தில் (மேற்குறிக்கப்பட்ட) இவைகளைப் பற்றியெல்லாம் பேசுகிறது. ஈகோ இல்லாவிட்டால் வாழ்வில் வெற்றி இல்லை. ஆனால் அதுவே எப்படி நமது கண்களை மறைக்கிறது. யார் பெரியவன் என்கிற சர்ச்சை. எல்லாவற்றிலும் தன்னை முன்னிறுத்தும் நிலை. எவ்வளவு தூரத்திற்கு இது அழைத்துச் செல்லும்? எதுவரை மனிதன் தனியாகப் பயணம் செய்ய முடியும்? நான் என்கிற அகந்தை நான் உயிரோடு இருந்தாலும் என்னைக் கொன்று விடாதா? இந்தக் கேள்விகளையெல்லாம் இந்தப் படம் எழுப்பலாம் [சிலருக்கு].

ஆனால் என்னதான் திறமை, ‘தன்’நம்பிக்கை இருந்தாலும் சில சமயங்களில் அதிர்ஷ்டம் என்கிற தேவதை தேவைப்படுகிறது. திரைப்படத்தில் [ஷமிதாப்பில்] அக்ஷரா உருவத்தில் அது வருகிறது. கமலின் மகள். அழகாய் நடித்திருக்கிறாள். இயல்பாய் வந்து போகிறாள். ஆனால் எல்லாருக்கும் தேவதைகள் வருவதில்லை.அது தில்லியில், பா. ஜ. கா.விற்கு கிரண் பேடி வடிவத்தில் வரத் தயாராய் இல்லை. தில்லி தேர்தல் முடிவுகள் அதைத் தெளிவு படுத்தி விட்டன. என்ன செய்வது? எல்லாருக்குமா அதிஷ்டம் வரும்?

அதிஷ்டம் போலவே விபத்தும். எதிர் பார்க்கும் போது அது வராது. எதிர்பார்க்காத போது இது வரும். விபத்து என்றாலே எதிர்பார்க்காத போது நடப்பதுதானே. ஆனால் எப்படியோ விபத்து நடக்கும் முன்பு அது உங்களுக்குத் தெரியப்படுத்தப் படுகிறது. ஆனால் அதை சரியாய் முன்கூட்டியே கணிக்க முடியாது. முடிந்த பிறகுதான் தெரிந்ததையே உணர்கிறோம். முன்பே தெரிவதற்கும் உணர்வதற்கும் முடிந்தால் நாம் சித்தர்கள் அல்லவா?

கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை நானும் என் நண்பர் ஒருவரும் வீட்டில் கார் நிறுத்தும் இடத்தில் இருந்து பேசிக் கொண்டிருந்தோம். அவரது குடியிருப்பைச் சுற்றியுள்ள சுற்றுச்சுவரையே உற்றுப் பார்த்து நான் கேட்டேன் இது யாருக்குச் சொந்தம்? அவர் சொன்னார், “இந்தக் குடியிருப்புக்கென்று சொந்த சுற்றுச் சுவர் இல்லை. மூன்று புறமும் அருகில் இருப்பவர்கள் எழுப்பிக் கொண்டார்கள்.” நான் விளையாட்டாய்க் கேட்டேன், சுவர் இடிந்தால் அவர்கள்தானே கட்டுவார்கள்?

அடுத்த நாள் ஷமிதாப் பார்த்து விட்டு அதே குடியிருப்பில் கார் நிறுத்துமிடம். அவரது கார் நிறுத்துமிடத்திற்கும் சுவருக்கும் இருபது அடி இருக்கும். கொஞ்சம் இறக்கம். வண்டி கியரில் இருந்தது. என்ன நினைத்தாரோ தெரியவில்லை. வண்டியை இயக்கி அது கண்ட்ரோலை இழந்து நேரடியாக நான் வெறித்துப் பார்த்த சுற்றுச் சுவரின் மீது இடித்து நின்றது. பின்பார்க்கும் கண்ணாடி தூணில் இடிபட்டு தனியே விழ, விளையாட்டாய் நடக்கிறதா முன்பே போய் நிற்போமா என்ற எண்ணம் எனக்கு வர, அதற்கு செவிமடுக்காமல் நான் நிற்க, டமால் என்ற சத்தத்தோடு வண்டியும் நிற்கிறது. 

வண்டிக்கு சேதாரம். ஆளுக்கும் சுவற்றிற்கும் இல்லை என்பது சற்றே ஆறுதலான விஷயம்தான். அப்போதுதான் என் மனதில் – முதல் நாள் பேசிக்கொண்டது வந்து போகிறது. அதே சுவரை உற்றுப் பார்த்ததும் மனதில் வந்து போகிறது. நாம் உற்றுப் பார்க்கிறபோதே இது நடக்கும் என்று தெரியாது... நடந்த பிறகு நமக்கு முன்பே சொல்லப்பட்டது போல உணர்கிறோம்.

ஷமிதாப்பிலும் நடந்த பிறகு வந்து போகும் காட்சிகள் நிறைய உண்டு. அது நமது மனதிலும் சில நிகழ்வுகளை திரும்ப அழைக்கும். நடந்த பிறகுதானே நமக்கு ஞானம் வருகிறது.

ஷமிதாப் நல்ல படம். இடையிடையே சில காட்சிகள் பழைய படங்களை நினைவு படுத்துகின்றன. ஆசையைக் காத்துல தூது விட்டு பாடல் கூட... ஆனாலும் எனக்குப் பிடித்திருக்கிறது.  . உங்களுக்கும் பிடிக்கலாம்... ஆனால் வசூலை அள்ளுமா என்பது கேள்விக்குறியே? 

ஆனால் வாழ்க்கைக்குத் தேவையான பல விஷயங்களை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது. அதில் நம்ம கேப்டனுக்குப் பிடிக்காத ஒன்றும் இருக்கிறது. எல்லாமே எல்லாருக்கும் பிடிக்குமா என்ன?



5.2.15

இசை - இருக்கா இல்லையா?

  • அகில உலக சூர்யா (எஸ். ஜே) ரசிகர் மன்றத்தின் அறிவிக்கப்படாத தலைவரான என் நண்பருடன்தான் இசை என்ற படத்தைப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். அப்போதுதான் சில பல காமேண்டுகளுடன் படத்தைத் தொய்வில்லாமல் பார்க்க முடியும் என்று நினைத்திருந்தேன். ஆனால் மற்றொரு நண்பர் எங்கோ திரை விமர்சனம் படித்து கட்டாயம் இன்றே போயாக வேண்டும் என்று ம்சைப் படுத்தவே வேறு வழியில்லாமல் இரவு இரண்டாம் காட்சி என்றாலும் நன் அவரது வேண்டுகோளுக்கு – இசைந்தேன். ஆனால் ஒரு நண்பர் வராத குறையை படம் பார்க்க வந்த ரசிகர்கள் பலர் சேர்ந்து போக்கினார்கள். அவ்வப்போது பல காமேண்டுகள், கைதட்டல்கள் என்று படம் இசை கட்டியது.

  • இந்தத் தருணத்தில் தமிழின் பெருமையைப் பற்றியும் பேசித்தான் ஆகவேண்டும். இசை என்ற சொல் இயை என்ற வேர்ச்சொல்லில் இருந்து வந்ததாம். அவன் அவளோடு இசைந்து வாழ்ந்தான் என்றால் பொருந்தி  வாழ்ந்தான் என்பது பொருள். அதாவது பாவும், பண்ணும் இயைந்து வருவதால் அது இசை எனப் பட்டது. அது இசைக்கப் பட்டது என்று சொல்லும் போது ஒலிக்கப்பட்டது என்கிற பொருள் தருகிறது. இசைகேடாக ஒரு செயலைச் செய்வது என்பது உரிய முறையில் இல்லாமல் என்று பொருள் தருகிறது. ஏழிசையின் பெயர்களும் அவைகளோடு தொடர்பு படுத்தும் விலங்குகளும் பின்வருமாறு: குரல் (மயிலின் ஒலி), துத்தம் (மாட்டின் ஒலி), கைக்கிளை (ஆட்டின் ஒலி), உழை (கிரவுஞ்சப் பறவையின் ஒலி), இளி (பஞ்சமம்), விளரி (குதிரையின் ஒலி), மற்றும் தாரம் (யானையின் ஒலி).  ஆதாரம்  http://www.tamilvu.org/courses/diploma/d061/d0613/html/d0613111.htm

  •  இதைப் பற்றியெல்லாம் இந்தப் படம் பேசவில்லை. நேற்று பாவாணரின் வேர்ச்சொல் ஆராய்ச்சி பற்றி வேறொர் இடத்தில் கேட்டதனால் இங்கே இதைப் பற்றி எழுதினேன், வேறொன்றுமில்லை. பாவாணர் சொல்லு என்ற சொல்லுக்கு தமிழில் இணையான சொற்கள் ஏறக்குறைய இருபத்தி எட்டு உண்டு என்கிறார். அளை, உரை, எண், ஓது, கிள, கூறு, சாற்று, செப்பு, சொல், நவில், பகர், பேசு, மொழி, விளம்பு என்று வார்த்தைகள் உண்டு. எண்ணினாள், உரைத்தாள், சொன்னாள், மொழிந்தாள், சாற்றினாள், நன்றி நவிலல், பகர்ந்தாள் என்று சொல்லிப் பார்த்தால் நமக்கே அந்த உண்மை புரியும். இதோடு கூட இசை மற்றும் இயம்பு என்பதும் சொல்லு என்ற அந்தப் பொருள் தரும் என்று பாவாணர் கூறுகிறார்.

  • இந்தப் படத்தின் இசைக்கு வருவோம். இசை படத்தின் சில பாடல்கள் இசைக்கப்பட்டன இன்னும் சில பாடல்கள் சொல்லப்பட்டன என்றுதான் எனக்குத் தோன்றியது. இது இசைக்கடல் பற்றிய படமாக இல்லாதிருந்தால் சூர்யா இசைவாணராக தேர்ச்சி பெற்றார் என்று சொல்லலாம். ஆனால் இது இசை பற்றியது என்பதனால் இது இசைக்குளம் என்று கூட சொல்ல என் மனம் ஒப்பவில்லை. சில இடங்களில் இசையாய் இருந்தது சில இடங்களில் சொல்லாய் இருந்தது. அவரது பாடலைக் காட்டிலும், அவரது காட்சிகள் இசை மழை பொழிந்தன. இசையின் ஒலியை முதலில் அவன் ஒவ்வொன்றிலும் காண்பதாகக்  காட்டுகிற காட்சியும், மனதை வருடும் இசையே. காட்டினுள் வரும் அந்த வீடும் தொடக்க இசையும் ஒளிப்பதிவும் அருமை. இந்தப் படத்திற்கான இசையை வேறு ஒரு இசையமைப்பாளர் இசைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  • இந்தப் படத்தில் முதல் பாதியில் ஒரு முப்பது நிமிடக் கருமமும் மறு பாதியில் ஒரு பத்து நிமிடமும் வெட்டப்பட்டிருந்தால் இந்தப் படம் மிக நன்றாக ஓடும் என்று நினைத்துக் கொண்டே வந்தேன். ஆனால் சூர்யா வெரி இன்டெலிஜென்ட். ஏறக்குறைய பன்னிரண்டு நிமிடக் காட்சிகளைக் குறைத்து இன்றிலிருந்து படம் வெளியிடப்படும் என்று அறிவித்திருக்கிறார். வாட் அ கோ இன்சிடேன்ஸ். (ஏற்கனவே ஏழு நிமிடங்கள் குறைக்கப்பட்டதாம்). நான் பார்த்ததே மூன்று மணிநேரம் பத்து நிமிடங்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பி பார்த்தேன். அதுவும் மூன்று மணி நேரம். ஏன் இப்படி நமது இயக்குனர்கள் மூன்று மணி நேரப் படத்திற்கு அலைகிறார்கள் என்றே தெரியவில்லை. ஹையையோ என்றிருக்க வேண்டிய படம் ஐயோ என்றிருந்தது. விக்ரமும், பி. சி. யும் இல்லையென்றால் அந்தப் படம் ஒன்றுமில்லை. அந்த பட ஹீரோயினை நிர்வாணமாகக் காட்டவில்லை. அவ்வளவே. எப்படி இப்போது இதையெல்லாம் சென்சாரில் அனுமதிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இசையில், தமிழ் சினிமா சில காலமாய் மறந்து போயிருந்த தொப்புளை நினைவு படுத்தியிருக்கிறார் எஸ். ஜே. ஆனால் இதை எதிர் பார்த்தே சூர்யா படத்திற்கு வருவார்கள் என்று நினைத்து விட்டாரோ என்னவோ. இவரின் விரல்கள் கீ போர்டில் விளையாடும் நேரத்தைக் காட்டிலும் சாவித்ரியின் உடல் பியானாவாக மாற்றியது சூர்யாவின் படைப்புத் திறன்.

  • சரி கதைக்கு வருவோம். இளமைக்கு வழி விட வேண்டிய வயதில், வயதானவர்கள் புதியவர்கள் பெரும் புகழை வலியாக மாற்றிக் கொண்டால் எந்த அளவுக்குப் போவார்கள் என்பதே கதை. அதாவது ஒரு ஜீனியசை பொறாமை வாட்டினால் என்ன ஆகும் என்பதுதான் கதை என்பதை முதலிலேயே  சொல்லிவிடுகிறார் சூர்யா. இது இளையராஜாவையும் ரகுமானையும் குறிக்கிறதா என்கிற விஷயத்தை பார்வையாளர்களுக்கு விட்டுவிட வேண்டியதுதான். எனக்கு ராஜாவையும் பிடிக்கும், ரகுமானையும் பிடிக்கும். இருபது வருட கால ஆட்சியை இளையராஜாவைத் தவிர வேறு யாருக்கும் பொருத்திப் பார்க்க முடியாது. சொல்லப் பட்ட செய்தி உண்மையா என்று தெரியாது. அதை இங்கே பேசுவதை விட கதைக் களன் நன்றாக இருக்கிறது என்பதைப் பதிவு செய்யலாம். இன்னும் என்ன செய்திருந்தால் இந்தப் படம் சிறப்பாக ஓடும என்பதைப் பதிவு செய்யலாம்.

  • ஏற்கனவே சொன்னதுபோல பலவற்றை வெட்டிவிட்டு இதை ஒரு இரண்டரை மணி நேர படமாக மாற்றினால் அதை நிச்சயமாக நான் ரசிப்பேன்.

  •  ஈகோ அதிகமானால் என்ன ஆகும் என்பதைப் பற்றிய கதையை சூர்யா இசைத்து, நடித்து, இயக்கியிருக்கிறார். இயக்கி மட்டும் இருந்தால் ஒரு சூப்பரான படமாக இருந்திருக்கும். வாலி, குஷிக்குப் பிறகு மிக முக்கியமான இயக்குனராக வர வேண்டியவர் நடிக்கவும் வந்து தனது திறமையை வீணடித்து விட்டதாகவே தெரிகிறது. 
  • இணைய தள பகடிகளுக்கு பத்து ஆண்டுகளாக –இருக்கு ஆனா இல்லை என்பது நிறைந்து வழிந்தது. இதுவே அவருக்கு உணர்த்தியிருக்க வேண்டும். அந்த இடத்தை இப்போது பவர் ஸ்டார் நிரப்பி இருக்கிறார். எனவே சூர்யா அவர்களே தயவு செய்து நடிப்பதை விட்டு விட்டு இயக்கம் மட்டும் செய்தால் நன்றாக இருக்கும். பல இடங்களில் உங்கள் நடிப்பு மிக அருமைதான்... ஆனால் தேவையான சில இடங்களில் அது மிஸ்ஸிங். ஏனெனில் கதை இருக்கு. இசையும் இருக்கு. நிறைய காட்சிகள் இருக்கு. இரண்டாம் பாதியில் நடிப்பும் நிறைய இருக்கு. ஆனால் ஏதோ இன்று இல்லை. அது என்னவென்று தெரியவில்லை.

  • மீண்டும் ஒரு முறை வலம் வரும் திறமை இருக்கு... இயக்குனராய் வந்தால் அது வெறும் இசைக் கடலாய் இல்லை இன்னிசைக் கடலாய் இருக்கும்.



.



8.2.13

ட்ரூ மேன் ஷோ - வும் – சமரும்


ஏறக்குறைய பதினைந்து வருடங்களுக்கு முன்பு பாண்டிச்சேரிக்கு ஏதோ ஒரு வேலையாய் போனபோது ‘மாஸ்க்’ என்ற ஜிம் கேர்ரி யின் படம் ஒன்று நண்பர்களோடு சேர்ந்து பார்த்தேன். அதன் பிறகு ஜிம் கேர்ரியின் படம் என்றால் வாய்ப்பு கிடைக்கும் போது பார்ப்பதுண்டு. அப்படி ஒரு படம்தான் ட்ரூ மேன் ஷோஇதுவும் பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டன.
  • உலகம் என்பது ஒரு நாடக மேடை. அதில் நாமெல்லாம் நடிகர்கள் என்று எப்போதும் எல்லாரும் சொல்லக் கேட்டிருப்போம். நமக்கு அது சரியோ என்று தோன்றிய தருணங்களும் இருந்திருக்கும். யாரோ ஆட்டிவைக்கும் பொம்மையாக நாம் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என்கிற கேள்வி இல்லாமல் இல்லை. மிகப் பெரிய தத்துவக் கேள்விகளை உள்ளடக்கியும், இறைவன் கருணை மிக்கவன் என்கிற கருத்தை கேலி செய்யும் விதத்திலும், இந்தக் கதைப் பின்னல்கள் கேள்வி எழுப்பும் – பார்ப்பவர்கள் மனதில்.

“இந்த நிகழ்ச்சியில் அனைத்தும் உண்மை – எதுவும் பொய்யில்லை” என்கிற ஒரு தொனியில் தொடங்கும் ஒரு லைவ் ஷோ. தனியாக, முழுவதுமாக உருவாக்கப்பட்ட ஒரு தீவு. முடிவடையாத ஒரு கடல் என்கிற ஒரு பிரம்மை. உருவாக்கப் பட்ட அந்த உலகத்திற்கு ஒளி கொடுக்கும் சூரியனின் ஒரு சிறு துளி - ஒரு விளக்கு கூரையிலிருந்து கீழே விழுவதில் தொடங்குகிறது அந்தக் கதை. அந்த தவறை மறைக்க மேலே சென்ற ஒரு விமானத்தின் விளக்கு கழன்று விழுவதாக சொல்லப் படும் செய்தி அதை உண்மையென்று அவனை நம்பச் செய்கிறது. அந்தக் கடலில் இறங்குவது ஆபத்து – ஏனெனில் அதில்தான் அவரது தந்தை இறந்து போனதாக ஒரு நிகழ்வு என்று சின்னச் சின்ன விஷயங்கள். அப்படி உருவாக்கப் பட்ட ஒரு தீவில் பிறந்ததிலிருந்தே அங்கே வளர்க்கப் படுகின்ற மனிதன் தான் ஜிம் கேர்ரி. அவனது ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு நிமிடமும் லைவ் ஆக ஒளிபரப்பப் படுகின்றது. ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக தான் ‘உருவாக்காப்பட்ட ஒரு மாய உலகத்தில்’ இருக்கிறோம் என்பதை அறியாமலே இருக்கிறான் அவன். அவன் வழியெங்கும் பார்க்கிற ஆட்கள், இயக்குனர் அவர்களுக்கு கொடுக்கும் வேடம், சொல்லும் வசனங்கள் என்று எல்லாமே நாடகத்தின் ஒரு அங்கம். ஒரே ஆட்கள் பல வேடங்கள் போடுகிறார்கள். இறந்து போன அவனது அப்பாவை திடீரென அவன் பார்ப்பதும், அது அவர் இல்லை என்று நம்ப வைக்கும் முயற்சியும், என்று பல நிலைகளில், கேர்ரி யோசிக்க ஆரம்பிக்கிறான்.
  • கொஞ்சம் கொஞ்சமாக உண்மையைக் கண்டறியவும், பயந்து இருந்த கடல் எல்லையற்றதாகத் தெரியவில்லை. படகேறி செயற்கையாய் கட்டமைக்கப் பட்ட கடலைத் தாண்டும் முயற்சியில் இருக்கும் போது இயக்குனர் அவரிடம் உரையாடுகிறார் – வெளி உலகம் மிக மோசமானது. இங்கே உனக்கு எல்லாம் கிடைக்கும் போகாதே என்கிற தொனியில் பேசுவதை எல்லாம் காதில் வாங்காமல் “வெளியே” பயணிக்கிறான்.

சிந்திக்கத் தொடங்கும் போதுதான் மனிதன் வாழத் தொடங்குகிறான் என்பது கூட படத்தின் கருவாக இருக்கலாம். உலகம் முழுவதும் இந்த நிகழ்ச்சி நடக்க வேண்டும் என்பதற்காக ஒரு மனிதனை சிறையில் அடைப்பதைப் போன்று அவனது சுதந்திரத்திற்கு தடை போடுவது சரியல்ல என்று தனி மனித சுதந்திரத்தை வலியுறுத்துவது கூட கருத்தாக இருக்கலாம். வாழ்க்கையே ஒரு நாடக மேடை எனவே அதில் அதிகக் கேள்வி கேட்காமல் வாழ்வது சரி என்பதோ, மாய உலகில் கட்டமைக்கப்பட்ட விதிகளைத் தகர்த்தெறிந்து மனம் சொல்வதைக் கேட்பது என்பது கூட செய்தியாக இருக்கலாம். காதல் என்பது வேறொருவன் நிர்ணயிக்கிற ஒரு ஆளை வைத்தோ, அழகை வைத்தோ வருவது அல்ல அது உள்ளிருந்து வருவது என்பது கூட செய்தியாக இருக்கலாம். ஆனால் பார்க்கிறவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு செய்தியைத் தரும் என்பது மட்டும் நிச்சயம்.
  • இந்தப் படத்தை தமிழில் எடுத்தால் தமிழ் ரசிகர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்கிற கேள்வி எனக்குள் இருந்தது.

இந்த அளவுக்கு ஒரு நாடகத் தன்மையுடைய கதை நமக்கு ஒத்து வராது – நமக்குத் தேவை வேகம் – வேகமான திருப்பங்கள் – த்ரில் – சண்டைக் காட்சிகள் – பாடல்கள் – என்று எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து உருவாக்கப் பட்டிருக்கும் படம் சமர்.
தமிழ் ரசிகர்கள் இதை நிச்சயம் ரசிக்க வாய்ப்பு உண்டு. விறுவிறுப்பாக செல்லும் படம் என்று நினைக்கிறேன். ட்ரூமேன் ஷோ பார்க்காதவர்களுக்கு இந்த படம் நிறைய பிடிக்கலாம் – பார்த்தவர்களுக்கு மிகப் பெரிய ஈர்ப்பை உண்டாக்காது என்றே நம்பலாம் – சில சீன்களுக்குப் பிறகு கதையை ஓரளவிற்கு ஊகிக்க முடிந்து விட்டது.  அது தவிர சில சீன்களை வேறு ஏதோ படத்தில் அப்படியே பார்த்தது போலவும் இருக்கிறது. ஆனால் நினவுக்குத்தான் வர மறுக்கிறது. எனக்கு ஒருவேளை அம்நீஷியாவோ என்னவோ.
ஆனால் இறுதியில் ட்ரூ மேன் ஷோ எழுப்பும் எந்தக் கேள்வியையும் சமர் படம் பார்த்தவர்கள் மத்தியில் எழுப்பாது என்பது மட்டும் நிச்சயம் – அந்தக் கேள்விகள் நமக்குத் தேவையில்லை என்பதும் கூட காரணமாக இருக்கலாம். எந்த விதமான மற்ற திரைக்கதைக்கான நன்றியோ, தாக்கம் என்பது பற்றிய திரைப்படக் கதைகளோ டைட்டில் கார்டில் வரவில்லை. ஒரு வேளை நான் கவனிக்க வில்லையோ என்னவோ. அல்லது இயக்குனருக்கும் அம்னிஷியாவோ என்னவோ?

29.12.11

ஜெயா கேட்டவை -- "சோவா அ மோடியா "


முன்பு நான் விரும்பிக் கேட்பது “நீங்கள் கேட்டவை.”
விரும்பிய பாடல்களை எழுதிப் போடுவதற்கு [பதினைந்து காசுக்கு] அப்பாவை நம்பி இருக்க வேண்டுமே என்பதனால், நமக்கு விரும்பிய பாடல்களை வேறு யாராவது கேட்டிருக்க மாட்டார்களா என்ற எண்ணத்தோடுதான் ரேடியோ கேட்போம். அப்படித்தான் விரும்பிய பாடல்களைக் கேட்க முடிந்தது. இப்போதெல்லாம் நமக்கு விரும்பிய பாடலை பார்க்கவே முடிகிறபோது அதற்கான நேரம் இல்லாமல் இருப்பதும் சோகம்தான்.
சரி எதற்கு இந்த நீங்கள் கேட்டவை புராணம்?

தமிழக முதல்வர் கடந்த வாரம் சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ் நிலைக்குத் தள்ளப்பட்டார். நிச்சயம் அதற்கு முன்பு பல முறை யோசித்திருப்பார். பல விஷயங்களை யோசித்திருப்பார். அப்படி அந்த முடிவை எடுப்பதற்கு முன்பு அவர் என்ன பாடல் கேட்டார் என்பது இப்போது நம்பத் தகுந்த வட்டாரங்கள் வழியாக நமக்குத் தெரிய வந்திருக்கிறது.
அதை இங்கே வெளியிடுவதில் மகிழ்ச்சியே. 
அதற்கு முன்பு அவர் கேட்ட பாடல்.
மயக்கமா தயக்கமா....

முதலில் இதைப் பாருங்கள் பிறகு பேசுவோம்



யார் நம்பத் தகுந்த வட்டாரம் என்று கேட்பவர்களுக்கு...
வேறு யார் – நரேந்திர மோடி அவர்கள்தான் சொன்னார்கள்.
எனக்கும் அவருக்கும் ஒரு ஹாட் லிங்க் இருக்கு யு சீ....

என்ன கதை என்று கடுப்பாய் இருப்பவர்கள் தினமலரின் செய்தியைப் படியுங்கள். உங்களுக்கேத் தெரியும். 
அதாவது திருமதி சசிகலா முதலமைச்சரின் அளவுக்கு எல்லாரையும் ஆட்டுவித்துக் கொண்டிருப்பது அவருக்குத் தெரியாது என்றும் [நம்பினால் நம்புங்கள்...] அவரிடம் இந்தச் செய்தியை எப்படியும் சொல்ல முடியாததனால் மோடி வழியாக செய்தி அனுப்பப் பட்டே நமது முதலமைச்சர் அறிவுக் கண் திறக்கப்பட்டது என்று தினமலர் சொன்னது.

இப்ப வந்து மோடி கை அதிகமாகி அவர்தான் எல்லாமேஆகி விட்டதென்றால் யாருகிட்ட போவது... தினமலர்கிட்டயா?
சரி இப்படி தினமலர் எழுதுறது சோ வுக்குத் தெரியுமா... சோ கோவிச்சிக்க மாட்டாரா..?

சில நாட்களில் தினமலர் இதை எப்படி யோசித்ததுன்னே தெரியலை உடனே சோவைப் பேட்டி  கண்டு அவர்தான் இந்த முடிவுக்கு காரணம் என்பது போல சித்தரித்து ஒரு பேட்டி வேறு வெளியிட்டிருக்கிறது...
அட ...... எப்படியெலாம் யோசிக்கிராங்கையா...

ஆக மொத்தம் ஜெயாவுக்கு யோசிக்கவே தெரியாதுங்குற ஒரு முடிவுக்கு வந்துட்டிங்களா... அல்லது சோவும் மோடியும் சொன்னால்தான் சில முடிவுகள் எடுக்க முடியும் அதுதான் தமிழர்களை பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சியை வெளிப் படுத்தும் அளவுக்கு வளர்த்துவிட்டிருக்கிறது என்று நா கூசாமல் எழுத முடிகிறது...

யாரைக் கேவலப் படுத்துகிறீர்கள் - 
தமிழரையா தமிழக முதல்வரையா?

ஆக மொத்தம் நாங்கள் எல்லாரும் சோ சொல்வதையும் மோடி சொல்வதையும் கேட்டால்... அதோடு தினமலம் சொல்வதை எல்லாம் கேட்டால் நல்ல இருப்போம்னு முடிவே பண்ணிட்டிங்களா..
என்னமோ போங்க

சில கேள்விகள் அம்மாவிடம் ...

மயக்கம் இல்லாததால் இந்த முடிவா அல்லது கொடநாடு போகாமல் இருந்ததால்தான் இந்த முடிவா...
உண்மையிலேயே மயக்கம் தெளிந்ததா?
இன்னும் எத்தனை நாளைக்கு..


இப்படி நீங்கள் முன்பு சசி சொல்லுவதையும் இப்போது சோ சொல்லுவதையும் மோடி சொல்லுவதையும் கேட்டு நடந்தால் அவர்களின் பிடியிலிருந்து உங்களை மீட்பது எப்படின்னு நீங்களே சொல்லிட்டா நல்ல இருக்கும்...  

நாங்க மண்டையப் பிச்சுக்க வேண்டாம் பாருங்க... 

 

17.12.11

என் கழுகுப் பார்வை - 2011 ஒன்று



தரை வழி நின்று ஒரு இடத்தைப் பார்ப்பதற்கும் 
ஒரு மலை மீது நின்று அதே இடத்தைப் பார்ப்பதற்கும் 
நிறைய வித்தியாசம் இருக்கும். 
கீழிலிருந்து பார்க்கும் போது அழகாக இருக்காது என்பதல்ல விஷயம் - 
[அழகு என்பதை ஒரு வரையறைக்குள் கொண்டு வரமுடியாது] -
மேலிருந்து பார்க்கிற போது 
சிறிய நுணுக்கங்கள் தெரியாது என்பதும் அல்ல விஷயம்.

மேலிருக்கிற பார்வையில் - 
விசாலப் பார்வையோடு, 
வித்தியாசமான பரிமாணம் வெளிப்படும்.

சென்னையைத் தாண்டி - வேறு இடங்களில் இருபது கிலோ மீட்டரை இருபது நிமிடத்தில் பைக்கில் கடக்கிற நபர் முதல் முதலாய் சென்னை டிராபிக்கில் முழி பிதுங்கி இரண்டு கிலோ மீட்டரை கடக்க இருபது நிமிடங்கள் ஆகிற போது - அங்கே சுற்றியிருக்கிற கட்டிடங்களோடு சேர்ந்து - அந்த நபருக்கு ஆகா சென்னை எவ்வளவு பெருசுன்னு தோணும்.

வெளிநாட்டில் இருந்து சென்னை விமான நிலையத்தில் இறங்கும் போது பார்க்கிற சென்னை - அட இவ்வளவுதானா சென்னைன்னு தோணும்.
ஆனால் அது கொடுக்கிற விசாலப் பார்வையைத் தரை கொடுத்து விட முடியாது.

கடலோரத்தில் இருக்கும் அந்த கட்டங்களின் நடுவே நமக்குத் தெரிந்த இடங்கள் இவளவு அருகில் இருக்கிறதா என்று தோன்றும். ஒரு வழிப் பாதை அல்லது சுற்றிச் சுற்றிச் சென்று சில இடங்களின் தொடர்புகள் கூட இல்லாதது போல நம்முடைய எண்ணம் மாறும்.

நிகழ்வுகள் சில அவ்வப் போது நடக்கிற போது நடக்கிற நிகழ்வுகள் தொடர்பற்றவைகள் போலத் தோன்றும். ஒவ்வொரு நிகழ்வையும் தனியே மட்டுமே பார்க்கச் சொல்லும்.

சில மாதங்கள் கழித்து 
சில நிகழ்வுகளை 
கொஞ்சம் தொலை தூரத்தில் இருந்து பார்க்கிற போது 
அவைகளின் வேறு பரிணாமங்கள் நமக்குத் தோன்றும்.

இந்த ஆண்டு நடந்த சில நிகழ்வுகளையும் 
அப்படிப் பார்க்கலாமென்று தோன்றுகிறது. 
அவை சில விஷயங்களை நமக்குத் தெளிவு படுத்தலாம் 
அல்லது சிக்கலுக்கு உள்ளாக்கலாம். 
எனக்குத் தெரிய வில்லை. 

இது சில பகுதிகளாக வெளி வரும். 
இது எனது கழுகுப் பார்வை மட்டுமே! 
தங்களது பார்வைகளையும் சேர்க்கிற நண்பர்கள் 
தங்களது கருத்துக்களையும் வெளியிடலாம்.

உதாரணத்திற்கு ஒன்று

இந்த ஆண்டு 
கேரளா மகர ஜோதி ஏமாற்று வித்தையில் ஆரம்பித்து, 
கேரளா  முல்லைப் பெரியாறு ஏமாற்று வித்தையில் முடித்திருக்கிறது. 
வருடம் முடியப் போகிறது -
ஏமாற்றும் வித்தைகள் முடியுமா தெரியாது.

தொடரும்....

14.12.11

ஒஸ்தி - ஒசத்தி


"லிட்டில் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஹொவ் ஐ வொண்டர் வாட் யு ஆர்...."

அரசியல் பாடம் - 
அம்மாவைத் தாண்டி தமிழகத்தில் எதுவுமே செய்யக் கூடாது செய்யவும் முடியாது என்கிற கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைக் கிறார் சிம்பு. ஒரு சண்டையில் எதிரி ஒருவனுக்கு தொலை பேசி வருகிறது - யாரென்று கேட்கிறார் சிம்பு - அவர் 'அம்மா' என்று சொல்ல உடனே சிம்பு - நேரடியாகவே அம்மாவைப் பார்ப்பது போன்று ஒரு பம்மு பம்மி
"அம்மாவைக் காக்க வைக்கக் கூடாது". அப்படியே "அம்மாவை நானும் கேட்டேன்னு" சொல்லுன்னு சொல்லுவாரு பாருங்க.
எதிரியா இருந்தாக் கூட அம்மா பேரைச் சொல்லிட்டா என்ன நடக்கணும் நடக்கும் என்பதை இதை விட வேறு யாரும் எடுத்துச் சொல்ல முடியாதுங்க. தமிழகத்தின் நடப்புச் சூழலை பம்முவது மாதிரி பம்மி அடித்திருக்கிற கிண்டல் ரொம்ப அருமைங்க...
[எதோ நம்மளால முடிஞ்சது - அவரு ஒரு அமைச்சரைப் பேசி மாத்தும் போது நம்ம கிளப்பி விடக் கூடாதா...]

குடியின் கொடூரம்
குடியின் கொடூரத்தை இந்தப் படத்தில் விவரிப்பது மாதிரி வேறு எந்தப் படத்திலயும் விவரிக்க முடியாது. 
படத்தின் கதாநாயகியின் அப்பா - எதுக்குக் குடிக்கிறாரு, ஏன் குடிக்கிறாரு, ஏன் அந்தப் பொண்ணு அவர் உயிரோட இருக்குற வரைக்கும் அவரை விட்டு வர மாட்டேங்குது - ஒருத்தரு குடிகாரனா இருந்தா எதைப் பத்தியும் கவலைப் பட மாட்டாங்க அது பெற்ற பொண்ணா இருந்தாக் கூட - 
அதுனால சிம்பு முதல்ல பொண்ணுகிட்ட போய் அவரை மாத்துன்னு சொல்றாரு அது முடியலன்ன உடனே அவருகிட்டே நேரா போய் நீயெல்லாம் ஒரு அப்பனா அப்படின்னு கேட்ட உடனேயே மகளுக்காக நான் குடிக்கிறதை விட்டேர்றேன்னு சொல்லி தண்ணீல விழுந்து செத்துப் போராறாரு. தண்ணீர்ல இருப்பவனுக்கு தண்ணீர்லதான் மரணம் என்பதை விழிப்புணர்வுச் செய்தியாகச் சொன்னதுக்கே - தண்ணியடிக்கலாம்.

காவல்துறையின் கொள்ளைகள் 
காக்கிச்சட்டை போட்டுக்கொண்டால் அவரை வெறும் போக்கிரியாகத்தான் காட்ட வேண்டுமா அல்லது கடமை உணர்வுள்ள போக்கிரியாகத்தான் காட்டவேண்டுமா என்கிற கேள்வியில், கடமை உணர்வுள்ள, அதேசமயம்  தேர்தல் ஆணையத்தின் எந்தவித வழிகாட்டுதலும் இல்லாமலேயே அவர்கள் சொல்லாமலேயே மக்களுக்குக் கொடுக்கப் போகும் பணத்தை பிடுங்கி போலிஸ் சீப்பு வாங்குவதும், வீட்டுக்கு ஜெனரேடர் வாங்குவதும் என செலவு செய்கிறார் ஹீரோ. [மங்காத்தா அர்ஜூன் மாதிரி அவர் அப்படித்தான்னு கடைசி வரைக்கும் தெரியாது இங்கே தெரிஞ்சுருது அவ்வளவுதான்] ஆனால் இந்த நிலையில்தான் நமது காவல் துறை இருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லி - கடந்த தேர்தலின் போது காவல் துறையினர் வழிப்பறி செய்த பணம் எல்லாம் ஸ்வாக செய்யப்பட்டிருப்பதை எடுத்துச் சொல்லி தேர்தல் ஆணையத்திற்கு எல்லார் சார்பாக மனுப் போட்டிருப்பதர்காகவே இயக்குனருக்கும் அந்தப் பாத்திரத்தை ஏற்று வந்து போன சிம்புவுக்கும் பாராட்டுப் பத்திரமே தரலாம்.

 நடிகர்கள் ஒற்றுமை

ரசிகர் மன்றங்கள் என்று தமிழகம் பிரிந்து போயிருக்கிற நிலையை 
மாற்ற வேண்டுமென்று மணிக்கணக்காக யோசித்து 
மங்காத்தா நூறாவது நாளில் படத்தை வெளியிட்டு 
அஜித் ரசிகர்களின் பலத்தையும் -  
படம் முழுவதும் 
விஜய் வசனம் பேசும் அதே ராக தாளத்தோடு பேசி 
சிம்பு அப்படியே விஜயாக வந்து போயும், 
பாட்டில் கூட "வில்லு வில்லு வில்லு ... ன்னு குஷ்பு ஒரு பாட்டுக்கு வந்து ஆடுவாங்களே அந்த பாட்டின் ராகமும் தெரியும்படி செய்து, 
தன்னை தலதளபதியாக மாற்றி ரசிகர் ஒற்றுமையை நிலை நாட்டிய அந்த நல்ல குணத்திற்காக 
சிம்பு ரசிகர் மன்றத்தை மட்டும் நாட்டில் வைத்து விட்டு 
மற்ற எல்லாத்தையும் கலைத்து விடலாம். 
அப்பா பாசம்
அம்மா பாசம் போல அப்பா பாசத்தையும்  தூக்கி நிறுத்தியதில் மட்டுமல்ல, அப்பா என்பவர் உரிமையோடு சண்டை போடுவதற்காக உள்ளவர் என்கிற உரிமையையும் நிலைநாட்டியதற்காகவும் 
அப்பாவிடம் எப்படி எல்லாம் பேசக்கூடாது [அப்பான்னு பேசக்கூடாது] என்கிற பாச உணர்வையும் கொடுத்ததனால் தன் அப்பா மேலுள்ள பாசத்தையும் வெளிக்கொண்டு வந்து தன் அப்பாவின் மனம் குளிரச் செய்ததனால்.. அவருக்காகவே இனி தமிழ் நாடை இனி தந்தை நாடு என்று அழைக்கலாம்.

இன்னும் நிறைய இருக்கு அதனால படம் பார்த்து நீங்களே தெரிஞ்சுக்கங்க:

கொசுறு - ஒன்று     பயோ டேட்டா

வைத்த பெயர் -                              ஒஸ்தி தி மாஸ் - மாஸ்டர் ஒப் ஆப்பு
வைக்க விரும்பிய பெயர் -     குஸ்தி - மாஸ்டர் ஒப் காப்பு [காவற்துறை]
ஹீரோ  -                    எஸ் டி ஆர். [STR] A மிஸ்ஸிங் ஏன்னா அவர் லிட்டில் [str]
ஜோக் அடிப்பவர் -                       சந்தானம்
எத்தனை பேர் நடித்தவர்கள்?  பாதிப்பேர் நடிக்கலை

பிடித்தது -                                          இசை
அதில் பிடிக்காதது -                     பல பாடல்களின் பின்னணி நினைவுகள்
கண்டுபிடிப்பு -                                இடுப்பில் கொலுசு

அடிக்கடி சொல்லும் வசனம் - கண்ணாடி
அடிக்கடி மாட்டுவது -                 கண்ணாடி
அதை மாட்டுவது -                       பின்னாடி


கொசுறு இரண்டு
சிலவிஷயங்களை அனுபவிக்கனும் ஆராயக் கூடாதுன்னு கமல் எதோ ஒரு படத்துல சொல்வாப்புல. இருந்தாலும் ஆராயணும் போல இருக்கே. இந்தப் படத்துல சிம்பு பேசுற நெல்லை பாஷை கொஞ்சம் கூட ஒட்டவே இல்லை. இவங்க பேசுறத பாத்து காட்டுப் பாக்கம் திருநெல்வேலி பக்கத்துல இருக்குன்னு நினைக்க வேண்டியிருக்கு. எனக்குத் தெரிஞ்சு சென்னை போரூர் பக்கம்தான் அது இருக்குன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.
அதுக்கும் நெல்லை பாஷைக்கும் என்ன சம்பந்தம் - மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் - ன்னு அழகன் படத்துல மம்மூட்டி பேசுரமாதிரி எல்லாம் நான் கேக்கலை. அவ்வளவு அழகா [!] நெல்லை பாஷை பேசுற சிம்பு - பாம் வெடிச்ச பொறவு ரொம்ப நல்லா தமிழ் பேசுறாக. அது என்ன மாயமோ தெரியலை... நெல்லை பாஷை மாறனும்னா பாம் வெடிச்சா போதும் போலெல.

படத்துல அவர் அடிக்கடி - யாரையாவது அடிக்க அடிக்க சொல்ற வசனம் "ஏலே நான் கண்ணாடி மாதிரி, நீ சிரிச்சா நான் சிரிப்பேன், நீ ஆடுனா நான் ஆடுவேன் ..." படம் பாத்து அழுதுகிட்டும், கடுப்புலயும் இருக்கேன் - ஆனா அவர் மட்டும் சிரிச்சிக்கிட்டே இருக்காரு. என்ன கண்ணாடியோ.. ஒருவேளை ரசம் போன கண்ணாடியோ?


கடைசியா சந்தேகக் கேள்வி
பணம் கொஞ்சம் எடுக்கிறாரு - அதுக்கு என்ன கணக்கு -  போலிசு பணம் எடுத்து வீட்டுக்கு ஜெனரேட்டர் வாங்குறது ஓகே. அதுல போலிசு ஜிப்புமா வாங்குவாங்க?

ஜாலியா எடுத்துக்குங்க 

நீங்க கேக்கக் கூடாத கேள்வி -
அப்புறம் இந்தப் படத்தை ஏண்டா பாத்த?

8.12.11

முல்லைப் பெரியாரும் கூடங்குளமும்- முரண்பாடுகளா!



  • அச்சம் என்பதுதான் இரண்டு பிரச்சனைகளிலும் உள்ள முக்கியமான விஷயம் என்று நம்பப் படுகிறது. அதுவும் உண்மையாக இருக்கலாம் - கூடங்குளம் பாதுகாப்பற்றது என்பதும் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்பதும்.

கூடன்குளம் விஷயத்தில் மட்டும் 'கூடன்குளம்' பாதுகாப்பானது என்று சிறியவர் முதல் பெரியவர் வரை ஒருவர் மாற்றி மற்றொருவர் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் பல முறை சொன்னது போல அதன் உண்மை நிலவரம் ஊருக்குத் தெரியாமலேயே இருக்கிறது. இந்த அச்சம் என்பது - வாழ்கிற மனிதர்களுக்கும், பிற்கால சந்ததியினருக்கும், இயற்கைக்கும், காற்றின் வழி பரவும் கதிர் வீச்சுக்கும் பாதிக்கப் படப் போவது கேரளாவும்தான். 
இதில் மட்டும் மத்திய அரசு சொல்வதைக் கேளுங்கள், நிபுணர் சொல்வதைக் கேளுங்கள் என்று சொல்கிற நம்ம மக்கள் கூட, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசும் மக்களும் மத்திய அரசும், நீதி மன்றமும் சொல்வதைக் கேளுங்கள் என்று சொல்ல மறுக்கிறார்கள். அல்லது மிகவும் அமைதியாகி விடுகிறார்கள். ஆனால், தமிழ் மக்களைப் பார்த்து உங்களுக்கு இருக்கும் அச்சம் அவர்களுக்கு இருக்கக் கூடாதா - என்று இதற்கும் இங்குள்ளவர்கள் மேல் பழி போடுகிறார்கள்.

  • முல்லைப் பெரியாறு அணை என்பது - சிறியவர் முதல் பெரியவர் வரை அது உடைந்து விடும் உடைந்து விடும் என்று மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதில் உள்ள அரசியல் [தேர்தல் அரசியல் என்பதையும் தாண்டி] தொள்ளாயிரத்து தொண்ணூற்றி ஒன்பது ஆண்டுகளுக்கு போடப் பட்ட ஒப்பந்தத்தையும் உடைப்பதற்கும், எந்த வித இழப்பிட்டுத் தொகையும் தராமல் தப்பிப்பதற்கும், இடுக்குக்கிக்கு தண்ணீர் வரத்தை அதிகரிக்கச் செய்வதற்குமான பல்வேறு நோக்கத்தோடு, அணை உடைந்தது போகும் என்கிற பிதியைக் கிளப்புகிற முயற்சியில் ஈடு பட்டிருக்கிறார்கள். இதற்குப் பின்புல அரசியல் தெரிந்தால் நாம் முல்லைப் பெரியாறு அரசியல் அச்சம் நமக்குப் புரியும். 
  • முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தம் ஆங்கிலேயர் காலத்தில் போடப் பட்டது அல்லது செல்லாது என்று நாம் வாதிடவும் முடியாது. ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதில் அதே ஒப்பந்தம் சில மாறுதல்களோடு மீண்டும் தமிழக மற்றும் கேரள அரசுகளால் புதுப்பிக்கப் பட்டன. அங்கே மீன் பிடிப்பதற்கான உரிமை, கூடுதல் ஒப்பந்தத் தொகை.... எனவே இது இந்திய பேராயத்தின் சட்ட நுணுக்கங்களுக்குள் ஒத்து வரும் ஒரு ஒப்பந்தமே. இப்போது மீண்டும் மறு பரிசீலனை செய்வதற்கான காரணம் ஏற்கனவே மேலே கூறப் பட்ட காரணங்களே. அச்சத்தினால் அனைத்தையும் சாதிக்க முடியும் என்று அச்சுதானந்தர்கள் நினைக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி - கேரள ஒட்டுமொத்தமாக அரசியல், மத வேறு பாடு இன்றி - எந்த இடங்களில் வாழ்கிறார்கள் என்கிற நினைவின்றி எல்லாரும் முல்லை பெரியாறு - முல்லப்பெரியார் - அணை பாதுகாப்பற்றது என்று குரல் கொடுக்கிறார்கள்.

  • தமிழகத்துக்கு தண்ணீர் தர மாட்டோம் என்று சொல்லவில்லையே அப்புறம் என் இன்னும் எதிர்க்க வேண்டும் என்கிற நண்பர்களுக்கு ஒரு விஷயத்தை நினைவு படுத்த வேண்டியிருக்கிறது. ஏற்கனவே ஒரு முறை கேரள அரசு நீதிமன்றத்தில், ஒப்பந்தம் என்பது அணை கட்டுவதற்கும், அதை நிர்வாகிப்பதற்கும் மற்றும் நிலத்திற்குமான ஒப்பந்தம்தான் எனவே இது தண்ணீருக்கான ஒப்பந்தம் இல்லை எனவே தண்ணீரைத் திருப்பி வேறு வழியாக அனுப்புவதற்கு எந்தத் தடையும் இல்லை - என்று வாதிட்டது. இன்னமும் 'நாங்கள் தண்ணீர் தருவோம்' என்பதை எப்படி ஐயா நம்புவது ...

விஷயத்திற்கு வருவோம் - கூடங்குளத்தில் அச்சம் என்றவுடன் போட்டி போட்டுக் கொண்டு மத்திய அரசின் முடிவை மேற்கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்தும் அரசு என் முல்லைப் பெரியாறு விஷயத்தில் அமைதி காக்கிறது. 
எத்தனை ஆண்டுகளாக நீதி மன்ற முடிவைக் கூட ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். தமிழ் மக்களின் அச்சம் தவறு ஆனால் கேரள மக்களின் பொய்யான அச்சம் சரியா? 
இத்தனைக்கும் அணை உடைந்தாலும் அதிலிருந்து வரும் தண்ணீர் இடுக்கி அணை தாங்கக் கூடிய வலு இருக்கிறது என்று சொல்லப் படுகிறது. 
ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி ஆறில் கட்டிய இடுக்கி அணையும் வலுவிழந்து விட்டதா? ஏனெனில் கேரள அரசு மக்களின் பீதியைக் கிளப்புகிரமாதிரி வெளியிட்ட ஒரு கானொளியில் முல்லைப் பெரியாறு அணை முப்பது ஆண்டுகளுக்காக மட்டுமே கட்டப் பட்டது என்கிற ஒரு மிகப் பெரிய பொய்யை கட்டமைக்கிறார்கள். அப்புறம் எதுக்கு 999 ஒப்பந்தம்.? 
சரி சரி - இடுக்கி அணை எப்போது வலுவிழக்கும்? உங்க பொய்யை மெய்ண்டைன் பண்ண வேண்டாமா - சொல்லுங்க.

சரி விடுங்க - இதே கேரள அரசு அச்சத்தினால் தானே கூடங்குலப் ப்ராஜக்டை வேண்டாம் என்றது. உடனே அரசு கேட்டது. இப்போ இதுவும் வேண்டாம் என்கிறார்கள். மத்திய அரசு உடனே தீர்ப்பு வழங்கா விட்டாலும் நிச்சயம் அமைதி காக்கும். தமிழ் மக்கள் அச்சம் என்றால் அது சரியல்ல என்றால் என்ன சொல்லுவது?

இதே கேள்வியை தமிழ் நண்பர்களே, அல்லது தமிழக வாழ் கேரள நண்பர்களே - பலரிடம் "என்னமோ கூடங்குளம் அச்சம் அச்சம் என்கிறீர்கள்" இதே அச்சம் கேரள மக்களுக்கு இருக்கக் கூடாதா என்று கேட்கிறார்கள்?

இந்தக் கேள்வியை மத்திய அரசிடம் கேட்க வேண்டும்... அது ஏன் ஒரு அரசுக்கு வெண்ணையும் மற்றொரு அரசுக்கு சுண்ணாம்பும் தொடர்ந்து கொடுக்கிறது என்று...!


ஒரு ஊழியனின் குரல் - முரண்பாடுகள்

5.12.11

அந்நிய முதலீடு - சில கேள்விகளும் விளக்கங்களும்


கொசுறு ஒன்று 
கடந்த பதிவு சில கேள்விகளைத் தருவித்திருக்கிறது. அந்தப் பதிவு பொருளாதார விளக்கங்களை கொண்டிருக்கவில்லை, சிறு வணிகர்கள் வரி ஏய்ப்புச் செய்வது சரியா? சிறு வணிகத்தில் அந்நிய முதலிட்டினால்தான் ஐரோப்பிய அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி உருகிறதா என்ற கேள்விகள். அதற்கு பின்னூட்டத்தில் எழுதிய பதிலை இப்போது பதிவாக வெளியிடுகிறேன். பின்னூட்டத்தில் படித்தவர்கள் வேறு வலைப் பூவிற்குச் சென்று விடலாம்.
கருத்து
  • கடந்த பதிவின் நோக்கம் சிறு வணிகத்தில் அந்நிய முதலீடு என்பதில் மட்டும் இல்லை. தலைப்பு அதைப் பற்றியது மட்டும் என்று கூறுவது போல உள்ளது தவறே. மாறாக ஒட்டு மொத்த முதலளித்துவ அமைப்பின் தற்போதைய வடிவம்.
  • மேற்கத்திய நாடுகளில் முதலாளித்துவம் தனது கருத்தமைவைக் கட்டமைத்த காலத்தில் அவைகள் மிகப் பெரிய விடுதலை கூறுகளை உள்ளடக்கிய சக்தியாக இருந்தது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதனால்தான் முதலாளித்துவம் என்பது முற்றிலும் மோசமானது என்று நான் நினைப்பதில்லை. அரிச்டோக்ராட்ஸ் என்ற மேட்டிமைக் குடியினர் மட்டும் மதிக்கப் பட்ட காலத்தில், சமுதாயத்தில் அனைவரும் சமத்துவம் மிக்கவர்களாக மதிக்கப் பட இது மிகப் பெரிய உறுதுணையாக இருந்தது என்று மறுப்பதற்கில்லை. ஆனால் நாளாவட்டத்தில் இதுவே மக்களை ஒரு மாய வலைக்குள் சிக்க வைத்து விட்டது என்று நான் கருதுகிறேன். அதனால் கம்யூனிசம் சரி என்றோ அதுதான் மாற்று என்பதோ என் கருத்து அல்ல. பல மாற்றுகளைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம் என்பதே சொல்கிற செய்தி.
  • ஒரு காலத்தில், ஒரு கலாச்சாரத்தில் உருவான நவீனம் அல்லது வளர்ச்சி என்பது அப்படியே இன்னோர் இடத்தில் சொருக வேண்டும் - சொருக முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. முதலில் அது மிக நன்றாகத் தெரிந்தாலும் சில நாட்களிலேயே அல்லது சில மாதங்களிலேயே தனது சுய ரூபத்தைக் காட்டும்.
  • நவீனம் அல்லது சமூக வாழ்வு மேம்பாடு என்பது எப்போதும் மேலை நாட்டு ......... அனைத்தையும் வைத்தே நாம் பழகிப் போய் விட்டோம். எது நல்ல உயர்ந்த வாழ்க்கை என்பதற்கு நமது ஒப்பிடு எப்போதும் ஐரோப்பிய நாடுகளாகவே ஆகிப் போனதும் சரியல்ல.
  • இங்கு உள்ள மக்கள் தொகை, சூழல், நகரங்கள் என்று கணக்கில் எடுத்துக் கொண்டு அதற்கேற்ற விதத்தில் நமது பொருளாதார மேம்பாடு என்று சிந்திப்பதில்லை என்பது என் வருத்தமும் கூட.
  • முதலாளித்துவ பொருளாதாரத்தை பின் பற்றுகிற மேலை நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையில் பல காரணங்கள் இருந்தாலும் அளவுக்கு அதிகமான இலாபம் ஈட்டுதல் என்கிற ஒன்றும், காரணமாக இருக்கலாம். மற்றபடி அவர்கள் சிறு வணிகத்தை ஊக்கு வித்ததுதான் அந்தப் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்றெல்லாம் நான் சொல்ல வர வில்லை.
  • இதே பிழைப்பை நம் நாட்டைச் சார்ந்த அதி செல்வங்கள் படைத்தவர்கள் முதற்கொண்டு செய்கிறார்கள் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். அவர்களிடம் இருந்தும் நாம் காப்பாற்றப் பட வேண்டியது அவசியமே!
  • சிறு வியாபாரிகள் அனைவரும் நல்லவர்கள் என்றோ அல்லது அவர்கள் யாருமே ஏமாற்ற வில்லை என்றோ நான் ஒன்றும் சொல்ல வில்லை. அவர்கள் வரி செலுத்துவதில்லை என்றால் அதை எப்படி முறைப் படுத்த வேண்டும் என்பதும் அதற்கான செயல்களில் ஈடுபடுவதும்தானே அரசின் மற்றும் வல்லுனர்களின் கவனமாக இருக்க வேண்டும். அதற்காக அந்நிய முதலீடு வந்தால் வரி சரியாகி விடுமா.. அல்லது நம் வரி ஏய்ப்பாலார்களைச் சமாளிக்க இதுதான் வழியா?
  • இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இத்தனை ஆண்டுகளாக வரி ஏய்ப்புச் செய்து கொண்டிருக்கிறது. நெறிப் படுத்துகிறார்களா? கிங் பிஷேர் நட்டம் என்றால் உடனே அதற்கு என்ன செய்யலாம் என்று அரசு யோசிக்கிறது. ஆனால் சிறு வணிகர்கள் என்றால் மட்டும் எதுவும் தன்னிலேயே ஒருங்கிணைப்பதற்கு அரசு முயற்சி எடுக்கக் கூடாதா? இவைகள் எல்லாமே சிறுவர்களாக இருந்தாலும் சரி பெரியார்களாக இருந்தாலும் சரி ... தேவையான முறைப் படுத்தல் இல்லாமல் அதற்கான மாற்றுகளை யோசிக்காமல் எது சுலபமானது என்று நடக்கும் அரசியல் வாதிகளின் போக்கு பற்றிய கவலை தவறா?
  • அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் அதே ஆர்வத்தை நம் மக்கள், சிறு வணிகர்கள், விவசாயிகம் நேரடியாகப் பயன்பெறும் வண்ணமும் அதில் நேரடி ரேவேன்யுவை அரசுக்குக் கொண்டு வரும்படிஎல்லாம் செய்ய முடியாதா. என்ன - அரசியல் வாதிகளும், வல்லுனர்களும், நம் மக்களும் இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கும். 
  • டாஸ்மாக்கை ஒருங்கிணைத்து வரி வசூல் செய்யும் போது சிறு வணிகர்களை ஒன்று சேர்க்க முடியாது என்பது நம்பும் படி இல்லை. அல்லது சிறு வணிகர்களை ஒன்று சேர்த்து ஒழுங்கான அமைப்பாக உருவாக்க முடியாதா?
கருத்து விவாதங்கள், பரிமாற்றங்கள் தான் நமது நாட்டின் சூழலுக்கு ஏற்ற என்ற ஒன்றை, புதிய யுத்தியை கண்டு பிடிக்கவும் கையாளவும் செய்யும். இல்லையெனில், வேறு என்ன செய்வது என்று தெரியாமல் நாம் இருக்கிற அந்த ஒரே வழி என்று மேலை நாடுகளின் வாலை பிடித்துக் கொண்டு அதைத் தான் பின்பற்றிக் கொண்டிருப்போம்.

கொசுறு இரண்டு 
பல கேள்விகளை கடந்த பதிவில் விதைத்த வௌவால் அவர்களுக்கு நன்றி. அதனாலேயே இந்தப் பதிவு. வருத்தம் என்னவென்றால் அவர் கேட்டது போல பொருளாதார விளக்கங்களை நான் கூற வில்லை; அது இந்தப் பார்வைக்கு தேவையற்றது என்கிற எனது [தவறான !] எண்ணம் கூடக் காரணமாக இருக்கலாம்.
கொசுறு மூன்று
நேரம் கிடைக்குமெனில் அந்நிய முதலீட்டில் உள்ள நன்மைகளையும் பற்றி எழுதலாம். பரந்து பட்ட பார்வைக்கு வழிவகுக்கும். ஆனால் அதை நண்பர்கள் பலர் செய்கிறார்கள்.
வௌவாலின் பதிவு
வால்மார்ட்,சுதேசியம்,பொருளாதாரம்

ரேவேரியின் பதிவு
அழியப் போகும் சிறு வணிகர்கள் 

ஜீவானின் கேள்வி
இது சரியா 



 

19.11.11

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு ... பதம்!

பழமொழிகள் இப்போது சொல்லப்பட்டால் என்ன உதாரணம் சொல்லுவது என்று ஆசிரியர்கள் கவலைப் பட வேண்டாம். அவர்களுக்கு உதவும் விதமாக சில பழமொழிகள். 

ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுச்சாம்
  •  உதாரணம் ஒன்று -  தமிழக சட்ட சபையில் மூவர் மரணதண்டனைத் தீர்ப்பை நிறுத்தி வைக்க போட்ட தீர்மானம்.
  • உதாரணம் இரண்டு -  கூடங்குளம் அணுமின் நிலையம் அவகாசத் தீர்மானம்.
  • இதுக்கு நல்ல பழமொழி - வேற இருக்கு 
  • ஆடுற மாட்டை ஆடிக் கற பாடுற மாட்டை பாடிக் கற .... கறந்துட்டான்களே உள்ளாதித் தேர்தல்ல! [ஐடியா திரு ராமராஜனா?]
தொட்டிலை ஆட்டி விடுவது - பிள்ளையையும் கிள்ளி விடுவது
  • மூவர் தூக்குத்தண்டனை ரத்து செய்யக் கோரும் வழக்கைத் தள்ளு படி செய்ய தமிழக அரசு வழக்குத் தாக்கல்.... 
புலி பதுங்குவது பாய்வதற்கே
  • உதாரணம் - உள்ளாட்சித் தேர்தல் வரை அமைதி காத்து இப்போது எல்லா வற்றின் விலையையும் கடுமையாக உயர்த்தி இருக்கும் தமிழக அரசு.
இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பானாம் 
  • பெட்ரோல் விலை உயர்வினால் சூடாகி இருந்த மக்களுக்கு ஓங்கி அடி - பால் விலை உயர்வு ... பேருந்துக் கட்டணம் உயர்வு.... ரெயில் கட்டணம் உயர்வு ... 
  • சம்பளம் ??????????????????????????????'..
  • எல்லாத்தையும் தாங்கிக்கிரீங்களே - நீங்க ரொம்ப நல்லவங்க ..... 
முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்
  • பொது நூலகங்களுக்கு புத்தகம் வாங்க இருபத்தி ஐந்து கோடி மற்றும் கட்டிடங்களுக்கு இருபத்தி ஐந்து கோடி முதல்வர் அறிவிப்பு.. 
கோழி மிதித்து குஞ்சு சாகுமா! அம்மா மிதித்து ...
  • மாற்றான்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு ஒரு பைசா கூட கொடுக்காத நிலையில் தமிழக 'மக்களே' [குழந்தைகளே] உங்களிடம் இல்லமால் வேறு எங்கே போகமுடியும். சொந்தத் தாய்க்குரிய கருணையோடு நடந்து கொள்ள விலை உயர்வு தவிர்க்கப் பட முடியாததாகி விட்டது.  
கரையான் புற்று பாம்புக்கு உதவுமாம் - 
  • விலைவாசி யுர்வுக்கு கலைஞர் அரசே காரணம் - முதல்வர் குற்றச் சாட்டு.
  • கலைஞரின் புற்று அம்மாவுக்கு நன்றாக உதவுகிறது... 
இதனால்தெரிந்து கொள்ள வேண்டியது:
  • பசுத்தோல் போர்த்திய புலி
    • உதாரணம் - சொல்லனுமா என்ன? 
  • பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
    • விலை வாசி உயர்வுக்கு எதிராக சில கட்சிகள் போராட்டம்...
  •  "வெளுத்ததெல்லாம் பாலல்ல."  
    • 'கள்ளா' இருக்கணும்னு அவசியம் இல்லை -
    •  சுண்ணாம்பாக் கூட இருக்கலாம். 
இது நமக்கு - 'ச்சீ ச்சீ - இந்தப் பழம் புளிக்கும்.'
  • பால் உடலுக்கு நல்லதல்ல
  • பிரயாணம் உடலுக்குக் களைப்பைத் தரும்

17.11.11

பிரித்தாளும் சூழ்ச்சி - ஆங்கிலேய அரசியலின் எச்சம்

பிரித்தாளும் சூழ்ச்சியால் தான் ஆங்கிலேயரின் ஆதிக்கம் இந்த மண்ணில் நீண்ட நாட்களாக இருந்தது என்பதை வரலாற்றுப் புத்தகங்கள் சொல்லுகின்றன. அந்த வரிசையில் பல்வேறு போராட்டங்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியின் சூத்திரத்தின் படியே அரசு இயந்திரங்கள் தொடர்ந்து மேற்கொள்வது நாம் இன்னமும் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் தான் இருக்கிறோமா என்று நினைக்கத் தோன்றுகிறது.


நம் அரசியல் வாதிகள் பல்வேறு வழிகளில் ஒரு போராட்டத்தை உடைக்கப் பார்ப்பார்கள். கூடங்குளம் அணுஉலை பிரச்சனையில் ஒவ்வொன்றாக முயற்சி செய்தார்கள். இதை அவர்களாகவும் செய்வார்கள் மற்றவர்களை வைத்தும் செய்வார்கள். சில சமயங்களில் பத்திரிக்கைகள் செய்கின்றன. உல் நோக்கத்தினால் தூண்டப் படுகிற சில தனி நபர்கள், இயக்கங்கள் என அதற்குப் பல முகங்கள் உண்டு. பிளவுகளை தமிழகம் முழுவதும் இன்னும் அதிகப் படுத்தி - கூடங்குளம் என்கிற ஒன்றை தமிழகத்தின் ஒரு சிறு பகுதியின் உள்ள பிரச்சனையாகவும் அதனால் மற்ற பகுதிகளில் உள்ள மக்களெல்லாம் அவர்களுக்கு எதிராக குரல் எழுப்ப முயற்சி செய்து வருகிறார்கள். இதன் மூலம் அந்தப் பகுதி மக்கள் எல்லாம் அறிவியல், தொழில் நுட்ப வளரச்சிகளுக்கு எதிரானவர்களாகவும், பழமை வாதிகளாகவும் சித்தரிக்க ஒரு முயற்சி. 
  • அறிவற்றவர்கள் vs அறிவுள்ளவர்கள் 
    • அறிவற்றவர்கள் vs அறிவுள்ளவர்கள் என்கிற பிளவினை உண்டு பண்ணப் பார்த்தார்கள். அதாவது போராடும் மக்களுக்கு பொருளாதார அறிவு இல்லை அதோடு அறிவியல் அறிவும் இல்லை என்று நினைத்து இந்த இரண்டில் அவர்களை போராட்டக் காரார்களை வெற்றி பெறச் செய்ய முடியுமா என்று பார்த்தார்கள்... இவ்வளவு கோடிக்கணக்கில் செலவு செய்ததற்குப் பிறகு அதை எதிர்த்தால் அவர்களுக்கு அறிவில்லதானே என்றார்கள். 
      • இதற்குப் பதில் ஒரு பாட்டி சொன்னதாக மாலதி மைத்ரி பகிர்ந்து கொண்டதை ஜெயமோகன் தனது அனுபவப் பகிர்வில் பகிர்ந்து கொண்டிருந்தார். அதை அப்படியே பதிவு செய்கிறேன். "இத்தனை செலவிட்டபின் இதை நிறுத்தமுடியுமா என்று இன்று இதழ்களில் எழுதியிருக்கிறார்கள். இங்கே ஒரு பாட்டியிடம் அதைப்பற்றி கேட்டேன். ’பத்துலட்சம் செலவு செய்து பந்தல் போட்டுவிட்டு பையனுக்கு எய்ட்ஸ் சீக்கு என்று தெரிந்தால் கல்யாணத்தை நிறுத்தமாட்டோமா? இல்லை பந்தலுக்காகத் திருமணத்தை நடத்துவோமா?’ என்று கேட்டார்’ என்றார்."   [நன்றி - திரு. ஜெயமோகன் ]
      • பல கோடிகள் செலவிட்டு அணு ஆயுதம் வெடிக்கலாம் - ராக்கெட் செயலிழந்து போகலாம் - அதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை... அதற்கெல்லாம்தான் கோடி கோடியாகச் செலவு செய்தார்கள். அதனால்தான் பல கோடிகள் செலவு செய்து ஆயுதங்கள் வாங்கிக் குவித்து விட்டு வேஸ்டா போகுதுன்னுதான் பாகிஸ்தானோட சண்டை போடுறீங்களா ... அப்ப வச்சிருக்கோம் வேஸ்ட்டா போகுதுன்னு சண்டைக்கு கூப்பிடுறீங்களா? அது சரி பாட்டி கேட்ட கேள்விக்கே பதிலைக் காணோம் அப்புறம் எதுக்கு இன்னமும் கேள்வி..
  •  தெற்கு Vs வடக்கு 
    •  அடுத்து பாதுகாப்பு அம்சம் பத்தி கதிர்வீச்சு இது பத்தியெல்லாம் பேசுறாங்க என்னடா பண்ணலாம் - உடனே என்ன சொன்னாங்க கல்பாக்கத்துல அணு உலை இல்லையா?அது பாதுகாப்பா இல்லையான்ன உடனே தெற்கு Vs வடக்கு அப்படின்னு போட்டுப் பாத்தாங்க. சில சென்னை நண்பர்களும் உடனே ஆமா அது சரிதானே. நாங்கல்லாம் அதுலதானே இருக்கோம் அப்புறம் உங்களுக்கு மட்டுமென்ன. 
      • உடனே அதுக்கு சிலர் ஒன்று சேர்ந்தது [பூவுலகின் நண்பர்கள் மற்றும் பலர் சேர்ந்தது] கல்பாக்கம் ஒன்னும் பாதுகாப்பா இல்லை அங்கேயும் ப்ராப்ளம் இருந்துச்சு ஆனா வெளில வர விடாம பண்ணிட்டாங்கன்னு வெளியில வந்த உடனே -[இதுவரைக்கும் கல்பாக்கத்துல ஒரு மாதிரி எவாகுவஷன் கூட செய்யவில்லை / பலருக்கு இப்பவே கதிர் வீச்சு அபாயங்கள் ' சுனாமி சமயத்தில் நடந்தது ] அதுனால இப்ப அணு உலை எங்கேயும் வேண்டாம். கல்பாக்கத்துலையும்  வேண்டாம்னு நண்பர்கள் சொல்றாங்க.
  • வசதி Vs வசதியின்மை
    •  இதென்னடா வம்பாப் போச்சுன்னு வசதி Vs வசதியின்மை அப்படின்னு ஒரு பிளவுக்கு முயற்சி செய்தார்கள். மின்வெட்டு என்பதை அதிகமாக்குவது. விலைவாசி உயர்வது, பொருளாதாரம் வீழ்கிறது. ரொம்பக் கஷ்டம் ... அடடா என்ன பண்றது... அணு  உலைதான் ஒரே தீர்வு. கலாமைக் கூப்பிட்டு சொன்னார்கள். அப்படியா?
      • இதுவரைக்கும் இந்தியாவின் மின் தேவைகளைப் பூர்த்தி செய்வது அணு உலை மின்சாரங்கள் இல்லை என்பதும்.. அப்படியே வைத்தாலும் அது அதிக பட்ச தேவையை எல்லாம் செய்யாது என்று சில நல்ல விஞ்ஞானிகள் சொல்லுகிறார்கள். தமிழகம்தான் காற்றாலை வழி மின்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே ஒரு அணு உலை இருக்கு. [ராஜஸ்தான்ல மட்டும்தான் இரண்டு இருக்குன்னு நினைக்கிறேன்.] 
      • என்னைப் போன்ற விவரம் தெரியாதவர்கள் என்ன கேக்குறாங்கன்னா - எதுக்கு தமிழ் நாட்டுலே இன்னொன்னு. கேரளாவிலை வை. கர்நாடகாவில வை. இதுவரைக்கும் அணு உலையே இல்லாத ஸ்டேட்ல வை....  கேட்டா உடனே திருப்பி ஒண்ணுக்குப் போவாங்க... [பாயிண்ட் நம்பர் ஒன்னுக்கு]... அதுதான் ஏற்கனவே பாட்டி சொல்லிட்டாங்களே. 
      • உற்பத்தி செய்கிற மின்சாரத்தை எல்லாம் வெளி மாநிலங்களுக்கு விற்பது, இன்னும் உலை வைத்து அதையும் விற்று நம்ம உயிருக்கும் உலை வைக்கவா... 
  •  ஆள்பவன் Vs அளப்படுபவர்கள்
    •  ஆகா இது இந்திய தேசியத்துக்கு உலை வச்சுருவாங்க போல இருக்கேன்னு அடுத்துப் போடுறா வருமான வரித்துறை...அதுதான் ஆள்பவன் Vs அளப்படுபவர்கள். [முந்தையப் பதிவைப் படியுங்கள்] உதயகுமார் ஒரே வார்த்தையில் பதில் சொல்லிட்டார். மடியில கனமில்லை வழியில பயமில்லை.
அடுத்த ஆயுதம் மதமும் சாதியையும் ----  கிறித்தவப் பாதிரியார்கள்தான் வேண்டுமென்றே குழப்பம் விளைவிக்கிறார்கள் என்று அதுக்கு மிகப் பெரிய கட்டுக்கதைகள் பல நண்பர்கள் வம்பாய் எழுதி - மக்களை தேவையில்லாமல் பிரிக்கிறது அப்படி - இது கிறித்தவத்துக்கு இழுக்கு - அப்படின்னு சென்னையில ஒரு ஆர்ப்பாட்டம் - இப்ப என்னடான்னா நல்ல விஷயத்துல எதுக்குடா வம்புன்னு - தூத்துக்குடி பெரிய பாதிரியார் எனக்கு இதுக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொன்னதாகச் செய்திகள் வந்தது. 

இதற்கு அடுத்த ஆயுதத்தைக் கையிலேடுத்தாலும் தமிழர்கள் ஒன்றாக நிற்க வேண்டயது காலத்தின் கட்டாயம்.

//////////////////////

கொசுறு - வாசிப்பாளர்களுக்கு -
 எதிர்பாராத வேலைப் பளு கூடியுள்ளதால் இனிமேல் வாரம் ஒரு முறை மட்டுமே பதிவினை வெளியிட வாய்ப்பு என்று கருதுகிறேன் [அப்படா என்று நிம்மதிப் பெருமூச்சு விடும் நண்பர்களுக்கு - சிலசமயங்களில் இரண்டு மொக்கைகள் சேர்ந்துகூட வரலாம்]...

கொசுறு -
சென்னை நண்பர்களுக்கு