25.5.17

சரவணன் எய்த சங்கிலி – திரைப்படம்

இது திரைப்பட விமர்சனமல்ல - விவகாரம் 
·    என்னடா புதுப்படம் எதுவும் நமக்குத் தெரியாம வந்துருச்சா அப்புடின்னு நினைக்க வேண்டாம். இந்த வாரம் மூணு திரைப்படங்கள் பாத்தேன் – சங்கிலி புங்கிலி கதவைத் திற, எய்தவன் மற்றும் சரவணன் இருக்க பயம் ஏன்? அந்த மூன்று படங்களுக்கும் பெரிதாய் ஒன்றும் வித்தியாசம் இல்லை. ஒன்னு பரவாயில்லை, இன்னொன்னு சுமார் இன்னொன்னு மோசம் அப்படித்தான் சொல்லணும். ஹீரோசுக்கு பான்ஸ் இருந்தா மன்னிக்கணும்.

·    இன்னைக்கு எப்படியாவது அந்தப் படம் பாக்கணும்னு போன படங்களும் உண்டு. இன்னைக்கு எப்படியாவது படம் பாக்கனும்னு போன நாட்களும் உண்டு. விடுமுறை நாட்களில் எப்படியாவது படம் பார்த்து விட வேண்டும் என்பதனால் இந்தப் படங்களை எல்லாம் பார்க்க வேண்டியிருந்தது. நானாப் போய் மாட்டிகிட்ட படங்கள் என்று சொல்லலாம். அவசரக் கல்யாணம் சாகாவச சங்கடம் என்பது போல அவசரப்பட்டுப் போய் மாட்டிக்கொண்ட படங்கள். கட்டாயப் படுத்தி என்னைச் சங்கிலியில் கட்டிப்போட்ட என் நண்பர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம். நான் கட்டாயப்படுத்தி நான் இருக்க பயமேன் என்று நான் பயமுறுத்திய பயந்த என் நண்பர்களுக்கும் சமர்ப்பணம்.

·  பல சமயங்களில், பார்க்கும் படங்களை விட, படம் பார்க்கப் போகும்போது கிடைக்கும் அனுபவங்கள் நினைவில் நிற்கும். அப்படி ஒரு சில நினைவில் நின்றன. இன்னைக்கு விட்டா படம் பாக்க முடியாது என்பதனால் ஒவ்வொரு தியேட்டரா பார்த்துப் பார்த்து கடைசியில், தேவி – யில் சங்கிலி புங்கிலிய பாக்கப் போனோம். விரும்பின தியேட்டரும் கிடைக்கல, விரும்பின படமும் கிடைக்கலை. வேகமாய் போற வழியில் குறுக்கே ஒரு ஆட்டோ – திட்டலாம்னு பார்த்தா அருமையான வசனம் அந்த ஆட்டோவின் பின்னால்:
                                     “பாத்துப் போ பங்காளி
                                     நானும் ஒரு தொழிலாளி”
             அதைப் படிச்சிட்டு எங்க திட்டுறது? அப்படின்னா
                                     குறுக்கே வாராதே பங்காளி ன்னுட்டு சைலன்ட்டா போய்ட்டோம்.
·          சென்னையைப் பொறுத்தவரை விடுமுறை நாட்கள் என்றாலும் சாலைகள் முழுவதும் வண்டிகள் மற்றும் வண்டிகள். நாம் எப்போதுதான் சாலையில் வண்டி ஓட்டப் போகிறோம் என்று தெரியவில்லை. இப்போதுள்ள நிலையில் ஒன்று ஊர்ந்து செல்கிறோம் அல்லது நின்று கொண்டிருக்கிறோம். இந்த இரண்டைத்தான் நாம் இப்போது சென்னை சாலைகளில் செய்ய முடிகிறது. ஓட்ட வேண்டுமென்றால், சென்னை முழுவதும் பாலம் வேண்டும். போரூரை நாங்கள் கடப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. 

·  இப்போதெல்லாம் திரைப்படத்திற்கு தாமதமாகப் போவதையே நான் விரும்புகிறேன். சீரியல் விளக்குகள் போட்ட ஸ்க்ரீன் ஓபன் செய்வதில் இருந்து படம் பார்ப்பதை விரும்பியவன் நான். ஆனால் இப்போதுள்ள சூழலில் தாமதமாகச் செல்வதையே விரும்புகிறேன். சீரியல் விளக்குகளோ அல்லது வெள்ளை ஸ்க்ரீனை மூடியிருக்கும் மற்றொரு ஸ்க்ரீன் இல்லை என்பதனால் எல்லாம் இல்லை. திரைப்படத்திற்கு முன் நடக்கும் இரண்டு விஷயங்கள்.

·  முதலாவது புகைப்பிடிப்பது பற்றிய அறிவிப்பும் அதைத் தொடர்ந்து வரும் பயமுறுத்தும் விளம்பரமும். ஊரெல்லாம் புகையிலைக் கடைகள். மதுக்கடைகளை தடை செய்யச் சொன்னால் போலிஸ் தடியடி. போலிஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடைகள். நேஷனல் ஹைவேயில் வைக்கக் கூடாது என்றால் முன்புற வாசலை அடைத்து பின்புற வாசலைத்திறந்து முகவரியை மாற்றிக் கொள்வது. இப்படியெல்லாம் செய்து விட்டு, குடிப்பழக்கம் உடல் நலத்திற்குக் கேடு என்று திரைப்படத்திற்கு முன்பு விளம்பரப் படுத்தினால் சரியாகி விடுமா என்ன? இந்த விளம்பரத்தைப் பார்ப்பதற்கு சும்மா இருந்து விடலாம். அல்லது, குடிக்கிறவனுக்கு குடிப்பதனால் என்ன நடக்கும் என்று தெரியாதா என்ன? கடைகளைத் திறந்து வைப்பது கட்டாயம் ஆனால் யாரும் குடிக்கக் கூடாது என்றால் எப்படி?

·          அடுத்தது நாம் பாடும் தேசிய கீதம். நீதி மன்றத்தை அவமதிப்புச் செய்ய வேண்டும் என்றெல்லாம் இல்லை. அல்லது எனக்குத் தேசப் பற்று இல்லை என்றும் அர்த்தம் இல்லை. திரைப்படத்திற்கு முன்னால் திரையரங்கில் தேசியகீதம் பாடுவதில் எனக்கு உடன்பாடில்லை. முன்னே சென்று பிடிக்காமல் இருப்பதை விட, வெளியே இருந்து விடுவதே நல்லதில்லையா? தேசிய கீதம் பாடிக்கொண்டிருக்கும் போது யாரையும் உள்ளே அனுமதிப்பது இல்லை. என்பதினால் இப்போது அதற்குப் பிறகே செல்கிறேன். நாட்டின் பன்முகத்தன்மையையும், நாட்டின் மீதான மதிப்பையும் அதிகப்படுத்துவதற்கு பதில் வெறும் தேசிய கீதம் மட்டும் போதாது. எப்படி புகையைக் கட்டுப்படுத்த புகையிலை விளம்பரம் மட்டும் போதாதோ அதேபோல திரைப்படத்திற்கு முன்னால் தேசிய கீதம் பாடுவது மட்டும் போதாது. பள்ளிக் கூடத்திற்கு அருகில் டாஸ்மாக் கடைகள், ஊழல் அரசியல்வாதிகள், கொர்போரெட் நிறுவனங்களுக்காக கைக்கூலியாய் செயல்படும் அரசுகள், பழிவாங்க மட்டுமே பயன்படுத்தப்படும் வருமான வரித்துறை, என்று தேசத்தை வீழ்ச்சியுரும் செயல்கள் பல செய்துவிட்டு, கற்பனைக் கதைகளை மட்டுமே பேசும் திரைப்படங்களுக்கு முன்பு நான் தேசிய கீதம் பாடுவது ஏன் தேசப்பற்றையும் கற்பனை என்று ஆக்கிவிடாதா? நல்லவேளை டிஸ்கொத்தேவில் முதலில் தேசிய கீதம் பாட வேண்டும் என்று இன்னும் சொல்லப் படவில்லை. தேசிய கீதத்தெற்கென்று மரியாதை இருக்கிறது. திரைப்படத்திற்கு முன்பு பாடவைத்து அதைக் குலைப்பதாகாவே நான் கருதுகிறேன். அதைப் பாடும்போது நான் அமர்ந்திருந்தால்தான் அவமதிப்பு. நான் உள்ளேயே இல்லையென்றால் அது அவமதிப்பாகுமா என்ன?

·          சரி விஷயத்திற்கு வருவோம். சங்கிலி புங்கிலி ஒரு பேய்ப்படம். நல்ல பேயோடு ஜீவா சண்டை போடும் படம். சரவணன் இருக்க பயமேன் இதெல்லாம் ஒரு பேய்ப்படம்னு சொல்லவே பேயே வெட்கப்படும் ஒரு பேய்ப்படம். இதுல ஒரு நல்ல பேயோடு கூட்டுச் சேர்ந்து உதயநிதி நடிக்கும் படம். எய்தவன் ஒரு விதத்தில் பேய்ப்படம்தான் – ஒரு சமூகப் பேயான கல்வி நிறுவனத்தைக் காசாக்கும் ஒரு பேயோடு மோதும் ஹீரோ கலையரசன். இந்த மூன்று படங்களிலும் நல்ல செய்தி உண்டு.

·          எய்தவன் கல்வி நிறுவனங்கள் - குறிப்பாக மெடிகல் கல்லூரிகள் எப்படி ஏஜன்ட்டுகளை வைத்து கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன என்றும், மாணவர்கள் எப்படி அதை எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. கல்வி நிறுவனங்கள் மட்டுமல்ல இன்றைக்கு நம் நாட்டில் எல்லாமே கார்பொரேட் கைகளில்தான் இருக்கின்றன. இந்தப் பேய்களோடு போட்டி போடுவதும், அதிலிருந்து உண்மையான அறிவை வளர்ப்பதும் மிகக் கடினம் என்றே தோன்றுகிறது.

·  சங்கிலி புங்கிலி கொர்போரெட் சுழலில் சிக்கி சின்னாபின்னமாகி சிதைந்து போன கூட்டுக் குடும்பத்தின் மேன்மையை உணர வைக்க முற்படுகிறது. சொத்துக்காக குடும்பங்களைப் பிரித்தவர்கள் நமக்கு அருகிலேயே உண்டு. கூடி வாழ்வது அவசியம் என்பதை சங்கிலி பேயின் உதவியோடு செய்தி சொல்ல முயற்சித்திருக்கிறார்கள். பேய் வந்து சொன்னால்தான் நமக்கு புத்தி உரைக்கும் என்று நினைத்தார்களோ என்னவோ.

·     சரவணன் ரொம்ப நார்மல் திரைப்படம். விஜய் டிவி புகழ் கலக்கப் போவது யாரு டீமை குத்தகைக்கு எடுத்து இருக்கிறார்கள். ஒருத்தர் கூட நம்மை இம்மியளவு கூட சிரிக்க வைக்கவில்லை என்பது மிகப்பெரிய நகைச்சுவை.  ஒரு பேயின் உதவியோடு தான் விரும்பும் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார் ஹீரோ. அதில் பேயும் சரியில்லை, படமும் சரியில்லை, கதையும் சரியில்லை. நாமாகக் கட்டாயம் குடுத்த காசுக்கு சிரிக்க வேண்டும் என்றால் சில இடங்களில் இவன் வந்தால் சிரித்து விடுவோம் என்று சிரிக்கலாம். போனாப் போகுதுன்னு பாட்டுக்குப் பாட்டில் சிரிக்கலாம். மற்றபடி அதில் நடிப்பும் இல்லை, கதையும் இல்லை, லாஜிக்கும் இல்லை.

·          அதற்கு சங்கிலி பரவாயில்லை. பேய் அடிக்கடி வருகிறது. கொஞ்சம் கதை இருக்கிறது. என்ன, ,இரட்டை அர்த்த வசனங்கள் ஓவரா இருக்கிறது. சரவனனையும் சங்கிலியையும் இணைப்பது பேய் மட்டுமல்ல, சூரியும்தான். காமெடி என்பது சில இடங்களில் அவரது நடிப்பில் மட்டும்தான் வெளிப்படுகிறது ஸ்க்ரிப்ட்டில் இல்லை. அதனால் கொஞ்ச நேரத்தில் அவரைப் பார்ப்பதும் போரடிக்கிறது. காமெடியன்களுக்கு நிறைய பஞ்சம் இருக்கிறது. சாரி, சிரிக்க வைக்கும் காமெடியன்களுக்கு ... சூரி இன்னும் நல்லா வரலாம்.
  • வேறு வழியே இல்லாமல் படம் பார்க்கச் செல்லாதீர்கள். என்ன படம் பார்க்க விரும்புகிறீர்களோ அந்தப் படத்தைப் பாருங்கள். இந்தப் படத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் அந்தப் படத்தைப் பார்க்காதீர்கள், பரவாயில்லைஅடிக்கிற வெயிலுக்கு இது பரவாயில்லை என்றால் போய் பாருங்கள். இறுதியாய் செய்தி சொல்ல வேண்டுமல்லவா?
·          இந்த மூன்றில் எய்தவன் பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மருந்துக்குக் கூட சிரிப்பு இல்லை. ‘வெய்ட் பண்ணச் சொன்னானா’ என்கிற ஒரு இடத்தில் மட்டும் நீங்கள் சிறிதே உதட்டை இழுத்து புன்னகைக்கலாம். இருந்தும் இந்தப் படம் பரவாயில்ல என்று சொல்வதற்கான காரணம் – நமக்கு முன்னால் நிஜப் பேய்கள் நிறையத் தாண்டவமாடுகின்றன. அவைகளோடு போராடுவதுதான் நமது இப்போதையத் தேவை. செத்துப் போன பேய்களை வைத்து காதலியோடு சேர்வதோ, செத்துப் போன பேயின் பயமுறுத்துதலின் வழியாய் நாம் சேர்ந்து இருப்பதெல்லாம் மீண்டும் ஓர் நாவல் போலத்தான். கற்பனை வாழ்க்கைக்கு ஒத்து வராது. ஊழல் சமூகம் திருந்த வேண்டுமென்றால் கல்வி கல்வியை இருக்க வேண்டும். அதைச் சரி செய்ய வேண்டிய கடமை எல்லாருக்கும் உண்டு. எந்தப் பேயும் இதைச் சரி செய்ய உதவிக்கு வராது... நாம் செய்தால்தான் உண்டு...




18.5.17

தங்கப்பதக்கம் vs ஒண்டிக்கட்ட

மானஸ்தன் படத்தில் வடிவேலு மற்றும் சரத்குமார் காமெடி பார்த்திருப்பீர்கள்… தங்கப்பதக்கம் படத்தைசரத், தங்கப்ப–தக்கம்என்றுவாசிப்பார். 
வடிவேலு அதை மீண்டும் மீண்டும் அது தங்கப்ப~ தக்கம் என்று பிரித்து சொல்லக்கூடாது, மாறாக, தங்கப்பதக்கம் என்று சேர்த்து சொல்ல வேண்டும் என்று சொல்லுவார்.




OR

starts at 2: 28



+++++++++++++++++++++++++++++++++++++++++


சமீபத்தில் என் நண்பர் ஒருவர் புதிதாய் எங்கோ போஸ்டர் பார்த்து விட்டு, one ticket ட்ட, அதாவது, ஒன்– டிக்கட்ட பாக்கணும்னு சொன்னார். எந்த டிக்கட்ட இவன் சொல்றான்னே புரியலை. எந்த டிக்கட்டு அதுன்னு கேட்டேன்.
புதுப் படம் போல... போஸ்டர் பார்த்தேன்.
அந்தப் படத்தைப் பாக்கனும்னு சொன்னான்.
அது என்னா படம்னு நானும் தேடித் தேடித் பாத்ததுல
ஒன்னும் சிக்கவே இல்லை.
கடைசியில இந்த போட்டோதான் கிடைச்சது. 



= = = 

அட மவனே  
அது ஒன் – டிக்கட்ட இல்லை ஒண்டிக்கட்ட அப்படின்னு அவனுக்குப் எப்படி புரியவைக்கிறதுன்னு தெரியலை. ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க...

மக்களே,
அழகா எழுதுனாலே நமக்குத் தமிழ் படிக்க வராது.
இதுல கோணயா எழுதுனா நாங்க கேனத்தனமாத் தான் படிப்போம்.
நம்ம தமிழ் அப்படி ரொம்ப ஸ்ட்ராங்.
இந்தி கட்டாயம் படிக்கணும்னு எஸ், வி. எஸ். சொன்னார் தானே.
அதுனால தமிழ் படிக்கத் தெரியாதுங்கிறான்.
என்ன செய்யுறது?

16.5.17

குப்பை லாரியும் ஆட்டோவும்


ஏறக்குறைய மிகச்சரியாக மூன்று மாதங்களுக்குப் பிறகு வலைப்பக்கம் வந்ததற்கான காரணம் கடந்த இரண்டு மாதங்களாக வேலையின்றி சும்மா ஊர் சுற்றியே போரடித்துப் போய் விட்டது என்பதாக இருந்தாலும், இன்றைக்கு ஊர் திரும்பும் வேளையில் சந்தித்த குப்பைலாரியும் ஆட்டோவும் இந்தப் பதிவிற்கான காரணம் என்பதே மிகச்சரி. 
வேலையின்றி இருப்பது ஒரு கலை. வடிவேலு சொல்லுவதை போலவே அது ரொம்பக் கடினமான ஒன்றுதான்.
பேருந்து ஓட்டுனர்களின் வேலை நிமித்தம் காரணமாக ரயில் நிலையமும், ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களும் பிதுங்கி விழுந்து கொண்டிருந்தன. எனது வண்டியை எடுத்துக்கொண்டு வீடு திரும்பும் வேளையில் எனக்கு முன் அந்தக் குப்பை லாரி ...

குடிதண்ணீர் லாரிகள் தண்ணீரை வீணாக்காமல் சென்றதாகவோ, விபத்தில்லாமல் சென்றதாகவோ வரலாறு இல்லை. குப்பை லாரிகளும் அதை போலவே தன்பங்குக்கு சில தனித்த பெருமைகளை பதிவு செய்திருக்கின்றன. புகை மூட்டத்தால் அது செல்கிற இடங்களை மாசு படுத்தாமல்சென்றதாக இல்லை. தண்ணீரை வீணடித்து தண்ணீர் கொண்டுவருவதை போல, மாசுபடுத்தித்தான் குப்பைகளை அள்ள  வேண்டியிருக்கிறது.

அப்படிப்பட்ட லாரி ஒன்றுதான் புகையை வாரி இறைத்து எல்லாரும் இருமித் தும்மும் படி செய்தது. வேகமாகச் செல்லும் ஆம்புலன்சுக்கு வழிவிட்டு முன்னே உள்ள வாகனங்கள் ஒதுங்கி வண்டியை நிறுத்து விட வேண்டும். அதே போல அம்புலன்சுக்கு பின்னால் குறைந்தது நூறு மீட்டர் இடைவெளி கிடைத்த பிறகுதான் நிறுத்தப் பட்ட வாகனங்கள் செல்ல வேண்டும். நம்ம ஊரில் ஆம்புலன்சுக்கு வழி விடும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வந்திருக்கிறது. ஆனால் ஆம்புலன்ஸை ஒட்டிக் கொண்டு அவன் பின்னாலேயே செல்லும் பழக்கம் மட்டும் இன்னும் மாறவில்லை. ஆம்புலன்சுக்கு எங்கே வழி இருக்கிறதோ அங்கே செல்லும். எப்போது பிரேக் விழும் என்று தெரியாது. அப்படிப் போடும் போது பின்னால் வரும் வண்டிகள் மோதி மற்றொரு விபத்து ஏற்பட்டு, இன்னொரு ஆம்புலன்ஸை அழைக்கக் கூடாது என்பதற்காகவே பின்னால் இடைவெளி. ஆனால் அது நம்ம ஊர் ரோட்டில் சாத்தியமே இல்லை. ஆம்புலன்சுக்கு ஒதுங்கி நாம் நிற்கும் வேளையில் நாம் மீண்டும் வண்டியை எடுப்பதற்குள் சர் சர் - என்று நூறு வண்டியாவது போய் விடும். ஆம்புலன்சுக்கு வழி விட்ட நம்ம முட்டாப் பசங்க. அவங்க ரொம்ப அறிவாளிங்க. நிற்க ...

இந்த குப்பை லாரிக்கு பின்னால் நூறு மீட்டருக்கு நாங்கள் யாரும் போக வில்லை. அந்தப் புகை யாரையும் நெருங்கி வரவிடவில்லை. இனிமேல் ஆம்புலன்சுக்குப் பின்புறமும் இப்படி கறுப்புப் புகை வரும் மெக்கானிசம் இருந்தால் பல விபத்துக்களைத் தவிர்க்கலாம். ஆனால் இந்த மெக்கானிசம் வேண்டுமெனில் குப்பைலாரியைத் தான் ஆம்புலன்ஸாக்க வேண்டும் ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. என்ன சிக்கல்? அதற்கு நான் மீண்டும் காலை சந்தித்த குப்பை லாரிக்குத் தான் செல்ல வேண்டும்.

நூறு மீட்டர் இடைவெளியில் நாங்கள் சென்று கொண்டிருக்கும்போது ஒரு படத்தில் வடிவேலு காலை எழுந்து சாமி கும்பிட்டு வரும் ஆட்டோ ஓட்டுநர் போல ஒருவர் எனக்கு வலப்புறம் ஓவர்டேக் செய்ய முயல்கிறார். வளசரவாக்கம் ரோட்டில் இடது புறம் வாகனங்கள் நிற்கும் என்பதால் வழிவிட முடியாமல் நான் வண்டி ஓட்டிக் கொண்டிருக்க, வேறு வழியின்றி சற்றே ஒதுங்கி போய்யா போ என்று வழி விட, புகைவிடும் குப்பை லாரிக்குப் பின்னால் இருக்கும் அந்த நூறு மீட்டர் இடைவெளியைப் பயன்படுத்திக் கொள்ள வேகமாகச் சென்று அந்த லாரியை நெருங்கும் வேளையில் பிரேக் லைட் இல்லாத அந்தக் குப்பை லாரி பிரேக் போட, சுதாரித்து பிரேக் போட்டு  வலது புறம் திருப்ப, அப்படியே மிகப் பெரும் சத்தத்தோடு, கவிழ்ந்து விழுந்தது அந்த ஆட்டோ. நாங்கள் ஒவ்வொருவரும் பிரேக் போட வேறு எந்த விபத்தும் இல்லாமல் முடிந்தது அந்த விபத்து. 

எங்கிருந்தோ ஓடி வந்த அத்துனை பெரும் ஆட்டோவைத் தூக்கி அந்த ஓட்டுனரையும், அதில் பயணம் செய்த இருவரையும் உடனே வெளியில் தூக்கினார்கள். யாருக்கும் எந்த சிராய்ப்பும் இல்லாமல். 

நிமிர்த்து பார்க்கும் போது எல்லாவற்றிற்கும் காரணமான அந்த குப்பை லாரி புகையை மட்டும் விட்டுவிட்டு கண்ணுக்கெட்டாத தூரம் சென்று விட்டது. 

ஆட்டோ சரிந்து செல்வதை திரைப்படத்தில் மட்டுமே பார்த்த எனக்கு என் கண் முன் பார்த்தது தூக்கிவாரிப் போட்டது. அதன் பின்னால் வந்த நாங்கள் அனைவரும் பிரேக் போட்டது எங்களுக்குள்ளே விழிப்பாய் இருந்த அந்த ஓட்டுனர்தானே தவிர நாங்கள் இல்லை. எல்லா நேரமும் அந்த ஓட்டுநர் விழிப்பாய் இருப்பானா தெரியாது.

ஆம்புலன்சுக்குப் பின்னால் வருவதைத் தவிர்க்க வேண்டுமென்றால் குப்பை லாரியைத்தான் ஆம்புலன்ஸாக்க வேண்டும் என்று சொன்னேன்.  சிக்கல் என்னவென்றால் அதில் பிரேக் லைட்பிக்ஸ் பண்ண வசதி இருக்காது. மேலும் பின்னால் எத்தனை பேர் அடிபட்டுக் கிடந்தாலும் அந்த ஓட்டுனருக்கு எதுவும் தெரியாது.

இதுவே இப்படி இருக்க இதுபோல ஆட்டோ ஓட்டுனர்களை வைத்து அரசுப்பேருந்துகளை இயக்குகிறார்களாம். ஏன் குப்பை லாரி ஓட்டுபவர்களை வைத்துக் கொண்டால் இன்னும் சுகமாக இருக்கும்.....