31.1.12

நிபுணத்துவமும் பன்முகப் பார்வையும்

நிபுணத்துவமும் பன்முகப் பார்வையும் என்ற இந்தப் பதிவு சில விளக்கங்களைத் தருவதற்காக. எழுதி சில மாதங்கள் ஆனாலும் இப்போதுதான் பதிவிடுகிறேன்.

நிபுணத்துவம் என்பதும் ஒன்றில் ஆழ்ந்த பார்வையும் அவசியம் என்பது உண்மைதான். ஆனால் நிபுணர்களின் கருத்துக்கள் ஒட்டு மொத்த அல்லது பன்முக நிலைகளில் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டியது அவசியம். 
  • ஒரு சிறு துறையில் பாண்டித்தியம் பெற்ற ஒரு மருத்துவர் நிச்சயமாக அதிகமாக விரும்பப்படுவார் - உதாரணத்திற்கு இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் அவ்வாறே மதிக்கப் படுவர். சிறுநீரகக் கோளாறு மற்றும் பல் மருத்துவர் என்கிற பலரும் தேவைதான். இல்லை என்று மறுப்பதற்கில்லை. ஆனால் சிறுநீரக மாற்று அறுவை செய்தவனுக்கு பல்மருத்துவர் அவராக பல்லில் பிரச்சனை என்று பல்லைப் பிடுங்கி விட முடியாது. அப்படித்தான் எனக்குத் தெரிந்த ஒருவர், இதனால  பெரிசா ஒன்னும் பிரச்சனை வராது அப்படின்னு பல்லைப் புடுங்கினாறு - அதோட சேர்த்து அவரோட வாழ்க்கையையும் புடிங்கிட்டாறு. ச்பெசலிச்டுகள் ஒட்டுமொத்த நோயாளியின் வரலாற்றையும் எடுத்துக்கொண்டுதான் ட்ரீட்மென்ட் செய்ய முடியும்.

பொருளாதார வல்லுனர்கள் மனித வாழ்வின் மேம்பாடு என்பது பொருளாதார வாழ்வு மட்டுமே என்று சிந்திப்பதில் தவறில்லைதான். ஆனால் அதிலும் அது தனித்து விடப்பட்ட பார்வைதான் தவறு. அனைத்து சமூக உறுப்பினர்களின் தேவைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பொதுவாக கணக்கிடுவது ஒரு முகப் பார்வைதான். அதுமட்டுமல்ல, பொருளாதார வளர்ச்சி என்பது மேல்நாட்டு முன்னாதரணம் அல்லது அந்நிய முதலீடு  மட்டுமே என்பது அடுத்த கடிவாளக் குதிரைப் பார்வை. இதைச் சொல்லுவதற்கு புள்ளி விவரங்களோ அல்லது ஒருவர் பாண்டித்துவம் பெற வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன்.

பொருளாதார வளர்ச்சி என்கிற ஒன்றை மட்டும் இது அப்படி இருந்தால் இதில் வளர்ச்சி உண்டு என்று சொல்லுகிறவர்கள் - இதுவரை அது எப்படி இருந்தது என்று பார்ப்பதும் அவசியம். அந்நிய முதலீடு என்பது சரி என்றாலும் அது எப்படி சரியாகும் என்கிற கேள்வியை வைப்பது சரிதானே.
  • இன்றைக்கு முதலாளித்துவத்தின் உதவியால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் மக்களின் வாழ்க்கைத் தரம் என்பது மேலை நாடுகளின் பொருளாதார முன்னுதாரணத்தைக் கொண்டிருப்பது தவறே என்று கருத வேண்டியிருக்கிறது.
அமெரிக்காவின் வால்மார்ட்டிற்கு அங்கே தேவை இருக்கிறது. மிகப் பெரிய நாடு. மக்கள் சிதறி இருக்கிற நாடு. சில முக்கியமான நகரங்களை விட பிரிந்திருக்கிற பல கிராமங்களைக் கொண்ட நாடு. ஒரு இடத்திலிருந்து மறு இடத்திற்கு செல்வதற்கு - காரின்றி அங்கே அமையாது உலகு... எனவே பொருட்கள் ஓரிடத்திலும் மொத்தமாகவும் குவிக்கப் படவேண்டியது அவசியம். எனவே செயின் நிறுவனங்களுக்கான தேவையும் மொத்தமாக வாங்கும் அவசியமும், வருடத்தில் பல மாதங்கள் வெளியும் செல்லுவதற்கு கடுமையான தட்ப வெட்ப நிலை என்று பலவற்றைக் கொண்டு அவைகளின் தேவை அதிகமாக இருக்கிறது.  எனவே அவர்களுக்குத் தேவையான பொருட்கள் ஒரே இடத்தில் கிடைக்காது. சில மாதங்கள் எதுவும் பயிரிட முடியாது என்பதில், குளிரூட்டப் பட்ட இடத்தில் பதனிடப்பட்ட பொருட்களின் தேவைகள் அங்கே இருக்கின்றன.
  • நமது நாட்டிற்கு அப்படி தேவை என்ன என்பது புரியவில்லை. அப்படியே அது தேவை எனினும், இவர்கள் நம் நாட்டின் முதலாளித்துவ முதலைகளின் துணை கொண்டு செய்ய முடியும் என்பதை சிந்திக்க முடியாதா? இந்தியாவின் சிறு வணிகர்கள் ஒழுங்காக வரி கட்டுவதில்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு முதலாளிகள்தான் அதிக அளவு ஏய்க்கிறார்கள் என்பதும் உண்மைதானே. அப்படி எனில் உலகம் முழுவதும் பழம் தின்னி கோட்டை போட்ட முதலாளிகள் எந்த அளவுக்கு இருப்பார்கள்?
வால் மார்ட் இங்கே வந்தால் லட்சக் கணக்கில் வேலை கொடுப்பார்கள் என்று சொல்லுகிறார்கள். அப்படி அது மிகப் பெரிய செலவு செய்தால் எப்படி அதற்கு குறைந்த விலையில் பொருட்கள் கொடுக்கக் கட்டுபடியாகும். இரண்டு வழிகளில் செய்ய முடியும். முதலில் குறைந்த விலைப் பொருட்களை அதிக விலைக்குக் கொடுப்பது. அல்லது தரமற்ற பொருட்களைக் குறைந்த விலைக்குக் கொடுப்பது. தரம் வேண்டுமெனில் அதிக விலைக்கு வாங்க வேண்டும் என்கிற மறை முக நிர்ப்பந்தத்தை கொடுப்பது. அல்லது வேலை செய்யும் ஊழியர்களுக்கு, குறைந்த ஊதியம் கொடுத்து தனது லாபத்தைப் பேருக்கும் வழி ஒன்றில்தான் அது கட்டுபடியாகும்.
  • விண்டோஸ் நிறுவனர் செய்த முதலீடுக்கு மேல் பல மடங்கு - ஆயிரக்கணக்கான மடங்கு இலாபம் சம்பாதித்து விட்டார். ஆனால் மார்க்கெட்டிற்கு வரும் எந்த புதிய ஒ. எஸ். அல்லது வோர்ட் தயாரிப்புகளும் குறைந்த விலைக்கு வருவதில்லை. அதனால்தான் ஒவ்வொரு நாளும் அளவுக்கதிகமான சொத்துக்கள் அவருக்குச் சேர்ந்த வண்ணம் இருக்கின்றது.
எல்லாரையும் கொஞ்சம் வசதி படைத்தவர்களாக்குவதிற்குப் பதில் சிலரை மட்டும் அது வளர்த்து விடுகிறது.
பன்னாட்டுச் சந்தை மற்றும் பன்னாட்டுக் காப்புரிமை என்கிற பெயரில் அவர்கள் அடிக்கும் கூத்து - நம் நாட்டில் இருக்கும் வேப்ப மர நலன்கள் அல்லது மஞ்சளின் மகத்துவம் பற்றி எவனாவது காப்புரிமை பெற்றிருக்க இங்கே நாம் அவனுக்கு கப்பம் கட்ட வேண்டும்.
இப்போது நவீனக் கப்பம் பல்வேறு வழிகளில் கட்ட வேண்டும். ஒரு பன்னாட்டு நிறுவனம் வந்தால், அரசு அவர்களுக்கு நிலம் ஒதுக்கிடு செய்வது, மற்றும் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றுவது என்று வாரி கட்டிச் செய்கிறது. ஆனால் இங்கு உள்ள ஒரு குடிமகன் ஒரு கடை தொடங்க அலையாய் அலைய வேண்டியிருக்கிறது.

  • என்னைப் பொறுத்தவரை அந்நிய முதலீடுகள் சரியா தவறா என்பதைத் தாண்டி, இங்குள்ள அரசுகள் இங்குள்ள மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த சரியான வழிமுறைகளை யோசிப்பதில்லை என்பதுதான் மிகப் பெரிய குற்றச் சாட்டாக இருக்கிறது. 

கொசுறு

ஏறக்குறைய பதினைந்து நாட்களுக்குப் பிறகு இந்தப் பக்கம் வந்திருக்கிறேன். இன்னும் ஆறு மாதங்களில் கட்டாயம் முடிக்க வேண்டிய பணி ஒன்று என் கவனத்தை ஈர்த்திருப்பதால் பதிவுலகத்திற்கு வர இயலவில்லை. இன்னும் ஆறு மாதங்களுக்கு இதே நிலைதான் என்று எண்ணுகிறேன். மாதம் ஒன்று என்பதே மலைப்பாக இருக்கும். இணையத்தில் வரும் போது நண்பர்களின் வலைப் பக்கங்களுக்கு வருகிறேன்.  

15.1.12

பொங்கல்தான் தமிழ் புத்தாண்டு


முதலில் ஒரு சிறிய நினைவூட்டல் - கடந்த ஆண்டு பொங்கலன்று எழுதிய பதிவிலிருந்து சில வரிகள் - அதோடு தொடங்கலாம்.

"அ.தி.மு.க நண்பர்கள் இதைக் கொண்டாட மாட்டார்கள். அம்மையார் இதை அனுமதிக்க மாட்டார். இதுவரை ஏப்ரலில் வாழ்த்துச் சொன்ன கலைஞர் மூன்று ஆண்டுகளாய் “தை”யில் வாழ்த்துச் சொல்கிறார். மீண்டும் அம்மையார் வந்தால் மீண்டும் இந்தப் புத்தாண்டு ஏப்ரலில்தான் கொண்டாடப் படவேண்டும் என்று சட்டம் இயற்றினாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. அரசு அலுவலகங்களுக்கு தை மாதம் நடக்கிற அலங்கார விளக்குகள் சித்திரைக்கு மாறும். அது “நந்தன” ஆண்டு சித்திரையில் [ஏப்ரல் 14 ல்] தொடங்கலாம்."  
                                                                           
                                                                                             முழுப் பதிவும் படிக்க...


  • பல ஆண்டுகளாக எனக்குத் தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாள் அன்றுதான். அறிவியல் ரீதியாகவோ அல்லது, சங்க இலக்கியங்களைத் தேர்ந்தெடுத்து அதை என்பிப்பதற்கான தேவையோ அல்லது அறிவியல் பூர்வமாக பொங்கல் தான் புத்தாண்டு என்று சொல்வதற்கான நிலையில் நான் இல்லை. அதை நிறைய அறிஞர்கள், பதிவுலக நண்பர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு அரசு அறிவிப்பதனாலோ இன்னொரு அரசு அதை மாற்றி மற்றொரு நாள் அறிவிப்பதினாலோ பின் வரும் சந்ததியினருக்கு வரலாறு மாற்றிச் சொல்லப் படும் நிலை உருவாகும் என்பது அறிந்ததுதான். ஆனால் நாம் அதைத் தானே ஏற்றுக் கொள்ளுகிறோம். என்ன செய்வது? 

  • இந்த புதிய அறிவிப்பிற்குப் பிறகு அரசுக் கட்டிடங்களில் ஒளித்த மின்விளக்குகள் வேண்டுமானால் மறையலாம். நம் உள்ளங்களில் ஏற்றப்படும் விளைக்கை அணைக்க முடியுமா? இந்த அரசின் அறிவிப்பிக்குப் பிறகு தனி மனிதக் கொண்டாட்டத்தை தடை செய்யும் உரிமை அரசுக்கு இல்லை என்றே நினைக்கிறேன். ஒரு அரசினால் தமிழர்களின் தமிழ் புத்தாண்டு அங்கிகரிக்கப் பட்டது - அல்லது ஏற்கனவே உள்ள தவறை சரி செய்தது. மற்றொரு அரசு மீண்டும் தவறை உண்மை என்று உணர்த்தப் பார்க்கிறது. அது எந்த விதத்திலும் தமிழர்களின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை மாற்றி விட முடியுமா அல்லது தடுத்து விட முடியுமா?

அதனாலே
பொங்கலோ பொங்கல் என்பதோடு
தை முதலே ஆண்டின் முதல் என்பதயும் சேர்த்து
முழக்கம் இட வேண்டியிருக்கிறது.

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
புத்தாண்டு அன்று பொங்கலிட்டு
புதிய உணவை - புதிய பானையில்
பொங்கி மகிழ்வோம்.


கொசுறு : 

தமிழ் புத்தாண்டு - தைப் பொங்கல் / வௌவால் 

மதுமதியின் தூரிகையின் தூறல் 

வானம் எனக்கொரு போதி மரம்

 கனடா வாழ் தமிழர் ஒருவரின் கட்டுரை



  

13.1.12

சமாதியான சங்கமம்

ஏன் இந்தப் புறக்கணிப்பு? 

  • வரலாற்று தொன்மை மிக்க குழுமம் ஒவ்வொன்றும் தங்களுடைய தனிப்பட்ட தன்மையைத் தக்க வைப்பதற்கு எல்லா வழிகளிலும் முயற்சி செய்யும். அது மற்றவர்களை விட நாம் மேலானவர்கள் என்பதற்காக அல்ல. தங்களுடைய தனிப்பட்ட கலாச்சாரக் கூறுகளை பாது காப்பாதற்கும் தங்களது தனித்துவத்தை அடுத்த தலை முறைக்கு விட்டுச் செல்வதற்கும்.

வரலாறு இல்லாத பண்பாட்டுக் குழுமங்கள் கூட தங்களது பண்பாட்டுக் கூறுகளை காட்சிப் படுத்துவதிலும், அதை மியூசியங்களில் வைப்பதிலும் காட்டுகிற அக்கறை அதிகம் என்பதை அவர்கள் சேமித்து வைத்திருக்கிற ஐநூறு ஆண்டு பழமையான கல், மண் இவைகளைப் பார்த்தாலே தெரிந்து விடும். இங்கே என்னடாவென்றால், பழைமையான பண்பாட்டு நகரம் தண்ணிரில் இருக்கிறது.


  • மிச்சம் மீதி உள்ள பண்பாட்டுக் கூறுகளை காப்பதில் ஏதாவது அக்கறை இருக்கிறதா என்பதே மிகப் பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. தமிழகத்தில் நாட்டுப் புறக் கலைகள் அருகி வருகின்றன என்பதும், அதில் இருக்கும் கலைஞர்கள் நலிந்து அந்த ஆடல், பாடல் கலைகள் அழிந்து வருகின்றன என்பதும், இதனால் தங்கள் கலைகளை விட்டு வேறு தொழிலுக்கு சென்று விடும் சூழல் இருப்பதும் நாம் அறிந்ததே.

சங்கமம் - யார், எதற்கு, அதில் என்ன சிக்கல் என்பதையும் தாண்டி, சங்கமம் மீதான என் கருத்து வேறுபாடுகளையும் தாண்டி எனக்கு அதன் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது.

அதனால், சில பல கலைஞர்கள் பொங்கல் நாட்களில் பணம் பெற்றார்கள் என்பதையும் தாண்டி - இந்தப் பண்பாட்டின் சில கூறுகளை உயிர்ப்போடு இருக்க அது உதவியது என்பதில் ஐயம் இல்லை.

ஆட்சி மாற்றம் - வழக்கம் போல பண்பாட்டுக் கூறுகளை காப்பதில் தனது பங்கை காக்க மறந்து விட்டது என்றே கருதுகிறேன். இன்னமும் காழ்ப்புனர்ச்சியிலேயே அரசு நடந்தது கொண்டிருக்கிறது. கடந்த அரசு - இதை தமிழக சுற்றுலாத் துறை இணைந்து நடத்தியதாக நான் நினைக்கிறேன். எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த அரசு தமிழகப் புத்தாண்டை மாற்றியது வேறு விஷயம். அதற்காக 'கலை விழாக்களை' புறக்கணித்தது பற்றி மிகுந்த கோபம் உண்டாகிறது.
இன்றைக்கு சங்கமம் என்பது ஏதோ காணக் கூடாத வார்த்தை போல எங்கும் எதிலும் காணோம். என்ன ஆயிற்று?


  • ஜனவரி மாதம் எப்படி புத்தகக் கண்காட்சி நினைவுக்கு வருமோ அதுபோல 'கலை வாரம்' என்கிற சங்கமும் இருந்தது. ஆட்சி மாற்றத்தினால் புத்தகக் கண்காட்சி நடக்குமோ நடக்காதோ என்கிற சில விவாதங்கள் வந்த பொது இது நிச்சயம் நடக்கும் என்கிற நம்பிக்கை இருந்தது. அதே போலத்தான் சங்கமம் பற்றியும் நினைத்தேன். ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது.

கடந்த ஆண்டு வரைக்கும் போட்டி போட்டு எழுதிய பத்திரிக்கைகள், இலக்கிய வாதிகள், கிண்டல் அடித்தவர்கள், கவிதை வாசித்தவர்கள், பாடியவர்கள், ஆடியவர்கள் .... யாரும் எதுவும் பேச வில்லை என்பது மிகவும் வெட்கித் தலை குனிய வேண்டிய செயல்.

ஒருவேளை சங்கமம் புத்தாண்டைப் போல ஏப்ரலுக்கு மாற்றப் பட்டிருக்கிறதோ அல்லது நாம் முட்டாள்களாக்கப் பட்டிருக்கிறோமா என்பதை யாரிடம் கேட்பது.?

ஆமாம்!!!
 தமிழக அரசுக்கு ஏன் தமிழர்கள் மீது வெறுப்பு?

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°


ஏன் இந்த வெறுப்பு?


  • கடந்த முறை தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் மீன் பிடிக்க உரிமை இல்லை என்று சொன்ன மத்திய அரசு இந்த முறை, மத்திய தணிக்கைக் குழு சரி என்று சொல்லிவிட்ட பிறகு மாநில அரசுக்கு அதைத் தடை செய்ய உரிமை இல்லை என்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் திருவாய் மலர்ந்திருக்கிறது.

படத்தை தடை செய்வதில் எனக்கும் உடன்பாடு இருந்ததில்லை என்பது வேறு விஷயம். ஆனால் இதில் மட்டும் மாநில அரசுக்கு உரிமை இல்லை என்று வியாக்கினம் பேசுகிற மத்திய அரசு, உச்ச நீதி மன்றம் முல்லைப் பெரியாரில் நீர் மட்டத்தை உயற்றுவதற்கு உத்தரவிட்ட பின்பு கேரள அரசு தனியாக ஒரு சட்டம் இயற்றியதே.... அதைப் பற்றி என்றாவது திருவாய் திறந்திருக்கிறதா...

ஆமாம்!!!
மத்திய அரசுக்கு என் தமிழர்கள் மீது இந்த வெறுப்பு?

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°


கொசுறு:

"குட்டக் குட்ட நீ குனிந்தால் உலகத்தில்
குட்டிக் கொண்டேதானிருப்பான் - முரசு
கொட்டி எழடா உன் பகைவன் பிடரியில்
குதிகால் பட ஓடிப் பறப்பான்!"

- காசி அனந்தன்


தொடர்புடைய இணைப்புகள்:

சென்னை சங்கமம்

இந்த வாரப் பூச்செண்டும் திட்டும் 


12.1.12

வாக்கு வாதம் - இ.க.வும் - மு. பெ யும்


தலைப்பின் நீளம் கருதி இடிந்தகரையை இ.க. எனவும் - முல்லைப் பெரியாறை  மு. பெ எனவும் குறுக்க வேண்டியதாகிப் போய் விட்டது.

கடந்த வாரம் ஒரு நாள் என் நண்பரோடு பேசிக்கொண்டிருக்கும் போது... முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா அரசு செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டினார். அது முற்றிலும் தவறு என்று சொன்னார். கேரளா அரசியல்வாதிகளின் தவறான அணுகு முறை பற்றிப் பேசினார்.
அதே வேகத்தில் நான் கூடங்குளம் பற்றி பேச்செடுக்க அவர் சொன்னார் – “நான் கூடங்குள அணுமின் நிலையத்தை ஆதரிப்பவன் எனவே நம் வாதத்தை அப்படியே முடித்துக் கொள்ளலாம். மேற்கொண்டு எதுவும் பேச வேண்டாமே என்றார்.

அவர் மட்டுமல்ல பல பேர் இந்த அணுகுமுறை மட்டுமே சரி என்கிறார்கள் – அதாவது முல்லைப் பெரியாறு விஷயத்தில் கேரளாவை எதிர்ப்பவன் அதே சமயம் அணுமின் நிலையத்தை ஆதரிக்கிரவனாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள்.

ஏன் இப்படி நினைக்கிறார்கள் என்று நான் நினைக்க பல காரணங்கள் எனக்கு தெரிகிறது.

  1. மனித வாழ்க்கையில் அச்சப் படுவது தவறு. இதுதான் ஒருவரை முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா அச்சப் படுவது தவறு என்றும் அதேபோல கூடங்குள விவகாரத்தில் மக்கள் அச்சப் படுவது தவறு என்றும் சொல்ல வைக்கிறது.
  2. இதனால் என்ன செய்ய வேண்டுமென்றால் – மனிதர்களின் மேல் நம்பிக்கை வைப்பதை விட ... தொழில் நுட்பத்தில் அறிவியல் அணுகு முறையில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதனால்தான் .... புதிப்பிக்கப் பட்ட அணை மீது நம்பிக்கை கொள்ளாத அரசும் [கேரளா] அரசின் பாதுகாப்பாக தயாரிக்கப் பட்டுள்ள உலையின் மீது நம்பிக்கை கொள்ளாத மக்களும் தவறு என்பதினால் ஒருவர் கேரளாவையும் மறு பகுதியில் கூடங்குளம் மக்களையும் எதிர்க்க வேண்டியிருக்கிறது.
  3. தேவையற்ற பண விரயம்... இவ்வளவு செலவு செய்து கட்டப் பட்ட அணை / இவ்வளவு பணம் செலவு செய்ய பட்டு கட்டப் பட்ட உலை இரண்டையும் அப்படியே கை விட முடியாது என்பதனால் ஒருவன் கேரளாவையும் அதே சமயம் கூடங்குள மக்களையும் எதிர்க்க வேண்டியிருக்கிறது..
  4. கூடங்குள மின்சாரம் அதிக வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும். அணை தண்ணீர் வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்பதனால் // வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதை ஆதரிக்கவும் அதே சமயத்தில் வளர்ச்சியைத் தடுப்பதை எதிர்க்கவும் வேண்டும் என்கிற அவசியத்தில் ஒருவன் கேரளாவையும் அதே சமயம் கூடங்குளத்தையும் எதிர்க்க வேண்டியிருக்கிறது.
  5. இரண்டுமே பொய் பிரச்சாரம் செய்கிறது. கேரளா அணை உடைந்து விடும் என்றும் அதே சமயம் கூடங்குள உலை உடைந்து விடும் என்பதும் பொய் பிரச்சாரம்...

எனவே இது போன்ற காரணங்களுக்காக தொழில் நுட்பத்தை ஆதரிப்பவர் / அறிவியல் மீது நம்பிக்கை வைப்பவர் அனைவரும் – முல்லைப் பெரியாறு விஷயத்தில் கேரளாவையும், இந்தியாவின் அல்லது தமிழக வளர்ச்சியின் மீது அக்கறை கொண்டவர் அனைவரும்... கூடங்குளத்தில் அணுஉலை வருவதை ஆதரிக்க வேண்டும் என்பதே சரி என்று நினைக்கிறார்கள்....


ஆனால் அது சரியா என்பதை நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்...
எனது அணுகுமுறை -
அடுத்த பதிவில்...


கொசுறு:
இத்தகைய நம்பிக்கை கொண்டோர் அனைவரும் தமிழக மக்கள் மீதும், தமிழக வளர்ச்சியின் மீதும் அக்கறை கொண்டார்கள் என்பதையும் மறந்தது விடக் கூடாது. 

7.1.12

சிறுதுளி - புத்தாண்டு ஸ்பெஷல்


அம்மாவில் தொடங்கி அம்மாவில் முடிக்க...
  • புத்தாண்டு இலவசப் பொருட்கள் - பொங்கலன்று தொடங்கி புத்தாண்டுக்குள் முடியும் என்று தமிழக அரசுக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
    • ஏதாவது தெரிகிறதா? சித்திரைப் பெருநாள் விழா என்பது மீண்டும் புத்தாண்டுப் பெருவிழாவாக மாறி விட்டது. 
    • புத்தாண்டு என்றால் அடுத்த புத்தாண்டா? [இரண்டாயிரத்து பதின்மூன்றா] 
    • அம்மாகிட்ட சில கேள்விகள் கேக்கலாம்தான் ஆனா பயமா இருக்கு..

  • "கச்சத்தீவில் மீன்பிடி உரிமை தமிழகத்துக்கு கிடையாது" 
    • உடனே இலங்கை அரசு இப்படித்தான் என்று தாறு மாறாகவெல்லாம் குதிக்காதீர்கள். சொன்னது இலங்கை அரசு இல்லை - மத்திய அரசு.
    • புத்தாண்டு உண்மை...

  • மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தென் ஆப்ரிக்கா பயணம். உர இறக்குமதி தொடர்பாக ஒப்பந்தம் போடுவதற்கும் பேச்சு வார்த்தை நடத்துவதற்கும் பயணம். 
    • பார்லிமேன்ட்லேயே பேசமாட்டார். இவர் கடல் கடந்து என்ன பேசப் போகிறார். தமிழ்நாட்டில் இருந்த எடமே தெரியலை அஞ்சா நெஞ்சன் ஆப்ரிக்காவுப் போகிறார் - சாரி தென் ஆப்பிரிக்காவிற்குப் போகிறார்.
    • தமிழகத்தில் வாய் பேச முடியாததால் நாடு விட்டு நாடு செல்கிறாரா?
    • புத்தாண்டுப் பயணம் - யார் கண்டார் புதிய உத்வேகத்தோடு காந்தி திரும்பி வந்தது மாதிரி போராட்ட உணர்வோடு வரலாம். [காந்தி மன்னிப்பாராக]

  • தமிழ் நாட்டில் வாசம் செய்யும் நம் சேர நாட்டு செஞ்சோற்று விரும்பிகள் - அதான் கேரளா தண்ணீர் தருகிறேன் என்று சொல்லுதே அப்புறம் என்ன - அப்படி என்றார்கள். 
    • அப்புறம் புதிய அணை கட்டி தமிழகம் அதை பராமரித்துக் கொள்ளலாம் என்றார் உம்மாண்டி. இன்று புதிய அணையை பராமரிப்பது கேரளத்திடமே இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். புதிய அணை கட்டினால்கூட நூற்றி இருபது அடி உயரத்தை விட கூடுதலாக கட்ட மாட்டார்கள்
    • எனவே செஞ்சோற்று விரும்பிகள் அமைதியாக இருப்பதே நல்லது. பேசாமல் அவர்கள் அனைவரும் ஜனவரி மாதம் பதினைந்தாம் தேதி மூன்று முறை ஜோதி வடிவில் காட்சி கொடுக்கும் மகரஜோதியை - காட்டிலாகா அதிகாரிகள் ஏற்றும் ஜோதியை - ஐயப்பனின் தரிசனம் என்று கொண்டாடிவிட்டு வரலாம். இன்னமும் அதைச் செய்கிறார்களே... 
    • நீதிமன்றத்தில் இதுநாள் வரை இவர்கள் தான் ஜோதியை ஏற்றியது என்று சொன்ன பிறகும், இப்படித் தேடித் தேடித் போகிற இவர்கள்தான் அறிவாளிகள் - ஒருவேளை ஐயப்பன் சொன்னால்தான் அணை கட்டுவதை விடுவார்களோ என்னவோ.
    • எல்லாரையும் மகர ஜோதிக்கு அழைத்திருப்பது - தினகரன் - விளங்கிரும்.
    • புத்தாண்டு ஏமாற்று ஜோதி 

  •  அம்மாசொன்னதாக செய்தி வெளியிட்ட நக்கீரன் பத்திரிகை அலுவலகம் தாக்கப் பட்டது. பத்திரிக்கைகள் எரிக்கப் பட்டது. இது அம்மாவிற்குத் தெரியாது. [நம்பிட்டோம்] 
    • சரியா தப்பா... இரண்டு பேருமே தப்புதான். 
    • மக்கள் போராட்டம் எல்லாம் தப்பு தப்புன்னு சொன்ன மகராசங்கேல்லாம் இப்ப கம்னு இருக்காங்க. ஒன்னு புரிஞ்சு போச்சு அதாகப் பட்டது -  அமைதிப் போராட்டம் எல்லாம் ஒத்து வராது...
    • அதனால் அம்மா வழிப் போராட்டம்தான் ஒத்து வரும். ஆக இதுதான் புத்தாண்டுப் போராட்டம்.  புதிய போராட்டம்.

கொசுறு கேள்வி

அ. தி.மு.க தொண்டர்கள் எதுக்கு கோபப்பட்டார்கள்?
மாமி என்று சொன்னதுக்கா?
இல்லை மாட்டுக் கறி சாப்பிட்டாங்கன்னு சொன்னதுக்கா?
நாம எல்லாரும்தான் மாட்டுக் கறி சாப்பிடுறோம். நான் சாப்பிடுவேன். அதுக்கு கோபப் பட வேண்டிய அவசியம் இல்லை.
மாமி இல்லைன்னா - இல்லைன்னு சொல்ல வேண்டியதுதானே..
மாமிதான் அப்படின்னா கோபப் பட வேண்டிய அவசியம் இல்லைதானே?

    4.1.12

    முதல் நாள்

    முதல் நாள் மழை பெய்தால் 
    வருடம் முழுதும் மழை பொழியுமாம் 
    செழிப்பாய் இருக்குமாம் நாடு
    – பெரியவர்கள் சொல்லுகிறார்கள்.

    முதல் நாள் அழுதால் 
    வருடம் முழுதும் அழுவோமாம். 
    மனது சொல்லுகிறது.

    ஆனால்
    முதல் நாள் குடித்தால் 
    வருடம் முழுதும் குடிக்க நேரமோ என்றோ
    முதல் நாள் விடுமுறையில் உழைக்காமல் இருந்தால் 
    வருடம் முழுதும் உழைக்காமல் இருக்க நேரிடுமே என்று 
    மனதும் சொல்ல மறுக்கிறது 
    அரசும் சொல்ல மறுக்கிறது.


    நாம் குடிப்பதற்கான காரணம் தெரிகிறதா?
    நாம் சோம்பேறிகளாய் இருப்பதற்கான காரணம் புரிகிறதா?


    1.1.12

    கனவு மெய்ப்பட வேண்டும் - 2012


    கனவு மெய்ப்பட வேண்டும். 
    மார்டின் லூதர் கிங்கின் கனவோ, பாரதியின் கனவோ, அல்லது கலாமின் கனவோ மட்டும்தான் மெய்ப்பட வேண்டுமென்றில்லை.


    நம் ஒவ்வொருவருக்கும் சில கனவுகள் இருக்கும். இல்லைஎன்று மறுப்பதற்கில்லை. எல்லா சமயங்களிலும் அது வெறும் தொழில் சார்ந்த அல்லது என்ன வாங்குவது என்கிற கனவுகளையும் தாண்டி இருக்கும்.


    அந்தக் கனவுகள் மெய்ப்பட முயல்வோம். 
    வெறும் கனவுகள் என்ன செய்யும்.



    புத்தாண்டு வாழ்த்துக்கள்.


    "கனவு மெய்ப்பட வேண்டும்
    கை வசமாவது விரைவில் வேண்டும்
    ...

    கண் திறந்திட வேண்டும்
    காரியத்தில் உறுதி வேண்டும்"

    -பாரதியார்  


    கொசுறு:
    இந்தப் புத்தாண்டை நாம் கொண்டாடுவதில் அதிகமான ஈர்ப்பு இருந்ததில்லைதான்.  உலகம் முழுவதும் கொண்டாடுகிற இந்த நாளில் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்ளுவது தப்பில்லை என்றே கருதுகிறேன்.
    என்ன தைக்கு மீண்டும் சொல்லிவிட்டால் போகிறது.

    HAPPY NEW YEAR
     
    Glückliches neues Jahr 
     Bonne année