கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

4.9.17

ஆசிரியர் தினம் - அனிதாவின் செய்தி

அனிதா படித்த பள்ளியில்
ஆயிரம் பேருக்கு மேல் படித்திருப்பார்கள்.
ஆனால் எத்தனை பேர் ஆயிரத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றிருப்பார்கள்???

அனிதா
பத்தாம் வகுப்பில் 478
பனிரெண்டாம் வகுப்பில் 1176

ஆசிரியர் யாராயிருந்தாலும் 
அனிதாவால் படிக்க முடியுமெனில் 
ஆசிரியரால் என்ன பயன்?

ஆயிரம் பேரும் ஆயிரத்திற்கு மேல் எடுத்தால்தானே
ஆசிரியருக்குப் பெருமை!

-
அது சரி -
ஆயிரத்திற்க்கு மேல் எடுத்து 
இந்த நாட்டில் என்ன செய்வது?
தற்கொலையா????

-

இந்த நாட்டில்
ஆசிரியர்களுக்கு வேலை இல்லை...

நீட் - டி முழங்கி
கோச்சிங் செண்ட்டர்கள்
அந்த வேலையை எடுத்துக் கொண்டுவிட்டன..
படிக்காதவர்கள்
கல்வி அமைச்சர்களாய் இருக்கும் நாட்டில்
கோச்சிங் செண்டர்களுக்குத்தான் வேலை.

இருந்தாலும்

ஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள்

---




2.9.17

தமிழகத் தற்கொலைகள் - இப்போது அனிதா

கடந்த ஒரு வாராக் காய்ச்சலுக்குப் பிறகு 
கணினியைத் திறந்தால் 
நீட் தேர்வின் கொடூர அரக்கனை எதிர் கொண்டு போராடியும் வெற்றி காண இயலாமல், தன்னை மாய்த்துக் கொண்ட அனிதாவின் தற்கொலை 
இதயத்தை இன்னும் கனமாக்கியது.

1196 மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வினை எதிர்த்து உச்ச நீதி மன்றம் வரை போராடிய ஒரு சாதாரண மாணவியால் வேறென்ன செய்ய முடியும்?

தற்கொலைகள் தவறுதான்.
ஆனால் இவைகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசுகள் தானே. அவைகள் தவறு செய்யும் போது மக்களுக்கு உதவ வேண்டியவைகள் நீதி மன்றங்கள் தானே.
அரியலூர் மண்ணைச் சேர்ந்த அந்த மாணவி டெல்லி வரை சென்றாள் - தனது வாதத்தை எடுத்து வைத்திருக்கிறாள். ஒரு சாதாரண பிரஜையின் வாதத்தை உணர்ந்து கொள்ளாத அரசு எப்படி மக்கள் அரசாக இருக்க முடியும்?

தமிழகத்தில் ஒரு தலைவர் சொல்லுகிறார் - அவள் இன்னும் இரண்டு முறை நீட் எழுதியிருக்க வேண்டுமாம் - அப்படியும் தேர்ச்சி பெறவில்லை என்றால் வேறு ஏதாவது பாடத்திட்டத்தை தேர்வு செய்ய வேண்டுமாம். சமூக நீதி பேசி புகழ் பெற்ற தலைவர்கள் எல்லாம் இப்படிப் பேசத் தொடங்கிவிட்டார்கள். அதாவது 1196 மதிப்பெண் எடுத்தும் நான் விரும்பியதை படிக்க எனக்கு முடியவில்லை என்றால் இந்த பள்ளிகள் எதற்கு இந்தத் தேர்வுகள் எதற்கு? 
18 வயது நிறைவில் நீங்கள் நீட் தேர்வு எழுதினால் போதும் என்றால் பனிரெண்டாம் வகுப்பில் எடுக்கும் மார்க்குகள் வீண் தானே. 

என்ன உடுத்த வேண்டும்? என்ன மொழி பேச வேண்டும்?  என்ன உண்ண வேண்டும் என்பது வரைக்கும் முடிவு செய்தாயிற்று? இப்போது யார் எதைப் படிக்க வேண்டும் என்று சொல்லுகிற நவீன குருகுலக் கல்வியைத் திணிக்கிறது அரசு. இதையே முன்மொழியும் அரசுகள் இருக்கும் வரை, தலைவர்கள் இருக்கும் வரை அனிதாக்கள் தற்கொலைகளைத் தடுக்க முடியாது.
-
தமிழகத்தின் கவிஞர் 

"அனிதா விரும்பியது கிடைக்கவில்லை என்றால் 
கிடைப்பதை விரும்ப வேண்டும்" அதற்காக உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது என்று சொன்னதோடு விட்டிருந்தாலாவது பரவாயில்லை - அப்படி இந்தியாவில் விரும்பியது கிடைக்க வில்லை என்று தற்கொலைகள் செய்து கொண்டால் இந்திய ஜனத் தொகையில் பாதிப் பேர் தற்கொலை செய்து கொள்வார்களாம்.

இந்திய ஜனத் தொகையில் பாதிப் பேர் தங்கள் விரும்பியதைச் செய்ய முடியவில்லை என்றால் என்ன நாடு இது? என்ன அரசு இது? என்ன கவிஞர் இவர்?
-

இப்போது கூட தமிழகம் விழிக்க வில்லை என்றால்
பின்னர் 
எழுவது மிகக் கடினம்.




9.8.11

அதிரடித் தீர்ப்பு - சமச்சீர் கல்வி

உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

ஏறக்குறைய எழுபது நாட்கள் - ஆடிய ஆட்டங்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. யார் ஒரு புதிய இடத்திற்குச் சென்றாலும், வந்தோம் கவிழ்த்தோம் என்று செய்துவிட முடியாது - நின்று, கவனித்து, செல்ல வேண்டும். அம்மா இப்படிப் பலமுறை நிற்காமல் சென்று பிரச்னையை எல்லாருக்கும் உருவாக்குகிறார். அது ஏன் என்பதுதான் புரியாமல் இருக்கிறது? 
  1.  உச்ச நீதி மன்றம் இதற்கு இவ்வளவு நாட்கள் எடுத்துக் கொண்டிருக்க வேண்டுமா? வேறு வழியில்லையா?
  2. இந்தத் தீர்ப்பின் வழியாக சமச் சீர் கல்வியில் எல்லாம் சரி என்பதோ, அல்லது அதில் எதுவுமோ சரியில்லை என்பதோ அல்ல. அது விவாதத்துக்குரியது. ஆனால், எந்த ஒரு செயலையும் தனிப்பட்ட ஆளாக முடிவெடுக்கும் போக்குதான் இன்னும் மாறவில்லை. இதைத் தான் அனைவரும்  கவனிக்க வேண்டும். 
  3. இன்னும் சிலர் மாணவர் சமுதாயத்தை உயர்த்த வேண்டும் என்ற அம்மாவின் கனவு நிறைவேற வில்லை என்று நினைக்கிறார்கள் - இன்னும் நாட்கள் எடுத்து ஒழுங்காக விவாதத்துக்கு உட்படுத்தி, பள்ளிகள் வைத்திருக்கும் வியாபாரிகள் இல்லாமல், கல்வியாளர்களின் ஆலோசனை கேட்டு, பரந்த விவாதத்திற்கு உட்படுத்தி செய்யவேண்டியது.  அதை அம்மாவும் கற்றுக் கொள்ள வேண்டும்  - எதிர்ப்பாளர்களும் உணர வேண்டும். 
  4. எதைச் செய்தாலும் தான்தான், தனது முடிவுதான் என்று இல்லாமல், தனி ஆளாக இல்லாமல் - தனி ஆளாக முடிவு செய்யாமல் இருக்க வேண்டும் என்பதே நம் ஆசை. 
  5. மக்கள் வாக்களித்து விட்டார்கள் என்பதற்காக எதையும் செய்து விடலாம் என்பதோ, மாற்றிச் சிந்திப்பவர்களை அடக்கி விடலாம் என்பதோ, சமச்சீர் கல்வி பற்றி பேசும் ஆசிரியர்களை மிரட்டுவது என்பதெல்லாம் நல்லதல்ல.
  6. வெற்றி பெற்றவர் - மக்களின் நன்மையை முன்வைக்க வேண்டுமே தவிர தந்து விருப்பு, வெறுப்போ - அல்லது தன்னைச் சார்ந்தவர்களின் நன்மையையோ முன்வைப்பது அல்ல - கருணாநிதி அந்தத் தவறைச் செய்தார். அதனால்தான் அம்மா வந்தார். அம்மாவின் மேல் உள்ள அன்பினால் அல்ல. அம்மா அதேத் தவறைச் செய்தால் நட்டம் அவருக்குத் தான்....

28.7.11

சமச்சீர் - ஒரே தீர்வு ஓராண்டு விடுமுறை

 சமச்சீர் கல்வி வேண்டாம் என்று சொல்கிறவர்கள் முன்வைக்கிற வாதம் இரண்டுதான்.
  1. ஒன்று - அது தரம் அதிகமானதாக இருக்கிறது.
    • தரம் அதிகமானா நல்லதுதானே என்று கேட்கிற நல்லவர்களே - அவர்கள் அப்படியிருந்தும் ஏன் வேண்டாம் என்கிறார்கள் என்கிற கேள்வியையும் கேட்க வேண்டும்?
    •  அரசு பள்ளிகளில், இப்போது உள்ள படத் திட்டத்தையே ஒழுங்கா நடத்துவதற்கான அருகதை ஆசிரியர்களுக்கு இல்லை- இதுல சமச்சீர் கல்வி வேற....
    • அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை; சில இடங்களில் போதுமான வசதிகள் இல்லை. பல அரசுப் பள்ளிகளில் கட்டிடங்களே இல்லை...
    • அரசு ஆசிரியர்கள் அதிகமா சம்பளம் வாங்கிட்டு வேலை செய்யுறது இல்லை.
    • அதனால் பஞ்சு மூட்டை தூக்குறவங்கிட்ட இரும்பு மூட்டையைக் குடுத்த வேலைக்கு ஆகுமா? 
    •  இதற்கெல்லாம் என்ன காரனம்னா ஆசிரியர்கள் தான். ஆசிரியர்கள் தேர்தலின் போது வேலை செய்வதால் அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது. ஒழுங்கா பாடம் எடுங்கன்னு சொல்லத் தயங்குது. மற்ற எல்லா அரசு அலுவலகங்களிலும் எல்லாரும் காலை முதல் மாலை வரை கடமை தவறாமல் வேலை செய்கிராகள். ஆனால் ஆசிரியர்கள் மட்டும் வேலை செய்வது இல்லை. அவர்கள் பலம் வாய்ந்தவர்கள் என்பதால் யாரு அவர்களிடம் எதுவும் சொல்ல முயலுவதில்லை. ஆனால் அவர்கள் மீது கை வைக்கத் துணிந்தவர் அம்மா மட்டும்தான்.
     2. இரண்டு - தரம் மிகவும் கேவலமாக இருக்கிறது
      • என்னா தரம் கேவலமா இருக்கு?
      • 'திடப்' பொருள்தான் உருகும் 'வாட்டர் melts ' ன்னு போட்டிருக்கு அது தப்பு -- அப்புறம் கலைஞர் ஒரு கவிஞர் னு போட்டிருக்கு. இது போல இன்னும் நிறைய..
      • நிறைய அறிவியல் உண்மைகள் போடாமல் இருக்கு - அம்மா ஒரு திரைப்படக் கலைஞர் ...
      • தனியார் பள்ளிகளில் சமச்சீர் கல்வியின் தரத்தை விட அதிகமான தரத்தில் இருக்கிறது. அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த தனியார் பள்ளிகளின் தரத்தை குறைப்பதா...
      • தனியார் பள்ளி ஆசிரியர்கள் பாதிச் சம்பளம் வாங்கிக் கொண்டு ஒழுங்காகப் பாடம் எடுக்கிறார்கள். இரும்பு தூக்குறவங்க கிட்ட பஞ்சு மூட்டை தூக்கச் சொல்றது நியாயமா? மேலும்அவர்களின் வேலையில் கைவைக்க யாரும் பயப்படுவது இல்லை என்பதனால் அவர்கள் ஒழுங்காக இருப்பார்கள். எனவே தனியார் பள்ளிகளில் நாம் தலையிடாமல் அவர்கள் விருப்பப் படி ....... நடத்த அரசு உதவ வேண்டும். எனவே சமச் சீர் கல்வி தேவையில்லை.

      அதனால் எப்படிப் பாத்தாலும் சமச் சீர் கல்வி ஒன்னும் சமமா இல்லைன்னு தெரியுது.
      என்ன செய்யனும்னா - சமச்சீர் கல்வியைத் தடை செய்யணும்.

      இதோட முடியலை - அன்பு மக்கா
      இதனால என்ன சொல்ல வர்றேன்னா

      - அரசு ஆசிரியர்கள் தரம் உயர்ந்த பாடத்தை நடத்தாமல் இருப்பதைவிட, தரம் குறைந்த பாடத்தை நடத்தாமல் இருப்பதே மேல்.

      - பணம் கொடுத்துத்தான் நாம் கல்வியைப் பெறமுடியும் - அப்போதுதான் ஒழுங்கான கல்வியைப் பெற முடியும்.

      - ஆக எது எப்படி இருந்தாலும், யார் ஆட்சிக்கு வந்தாலும், யாரும் ஒன்னும் ............ முடியாது...- இப்போது இருப்பதே இருக்கும் - எப்போதும் அப்படியே நடக்கும்.

      - மாற்றம் என்பதெல்லாம் விலங்குகள் தத்துவம்.

      இறுதியாக இதற்கு ஒரே தீர்வு ---

      அம்மா எதிர்கட்சித் தலைவியாக இருந்த போதே சமச்சீர் கல்வித் திட்டத்தை பற்றி பேசியிருக்கிறார்கள். எனவே வரலாற்றின் பதிவுகளில் அம்மாதான் சமச்சீர் கல்வியை அறிமுகப் படுத்தியதாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒரே குறிக்கோள். எனவே நிச்சயமாய், இது அடுத்த ஆண்டுதான்.... அம்மாவின் படத்தோடு சமச்சீர் பாடத்திட்டத்தில் அம்மா பெயர் இருக்க வேண்டும் அதுவரை நாம் காத்திருக்க வேண்டும்.

      அதற்கு...

      இரண்டு மாதங்கள் முடிந்துவிட்டது. மாதத் தேர்வுகள், மிட்-டெர்ம்  தேர்வுகள் எல்லாம் இந்நேரம் முடிந்திருக்க வேண்டும். இனிமேல் இதற்கான அவகாசமேல்லாம் கிடையாது என்பதனாலும், மாணவர்கள் சமச்சீர் கல்வியைப் பின்பற்றுவதைக் காட்டிலும், படிக்காமல் இருப்பதே மேல் என்று அரசு நினைப்பதாலும், இதைப் பற்றிய அக்கறையை, தமிழக வெகு சனம் வெளிப் படுத்தாமல் இருப்பதாலும், அரசுக்கு சரியான வழி காட்ட ஆட்கள் இல்லைஎன்று தமிழக அரசின்    வக்கீலே தனது தனிப் பட்ட கருத்தாக வெளிப் படுத்தியிருப்பதாலும், இதற்குப் பிறகும் நாம் மாணவர்களை நாம் வதைக்க முடியாது என்பதாலும், [சும்மா இருக்குறது எவ்வளவு கஷ்டம் - அதுவும் மாணவர்கள்... ] இதற்கு ஒரே தீர்வாக - ஒரு ஆண்டு விடுமுறை கொடுத்து இந்தச் செயலை அம்மா செய்ததாக வரலாற்றின் பக்கத்தில் இடம் பிடித்தால் நன்றாக இருக்கும்.


      பின்குறிப்பு:

      இக்கட்டுரையில் உண்மை பொய் இரண்டும் கலந்து இருக்கிறது. செய்தியும் கேலியும் சேர்ந்து இருக்கிறது.
      எழுதப்பட்ட கருத்தில் நீங்கள் ஏதாவது ஒன்றைக் கொண்டிருந்தால் வருந்த வேண்டாம்.
      நீங்கள் அரசு ஆசிரியராக இருந்தால் வருத்தப் பட வேண்டாம்.
      [இதெல்லாம் சும்மா ... உள்ள ஒன்னும் இல்லைங்கோ ... கோ .... கோ...]

      21.7.11

      சமச்சீரும் சாணக்கியத்தனமும்

      • கலைஞர் கருணாநிதி அரசியல் சாணக்கியர் என்றும், அரசியல் செய்வதில் அவரைப் போல யாரும் இல்லை என்றெல்லாம் நிறையப் பேர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அனால் நடப்பதைப் பார்த்தால் அதெல்லாம் ஒரு சுக்கும் இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அவர் இன்றைய முதல்வரிடமிருந்து நிறைய அரசியல் கற்றுக் கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது.
      • இன்றைய முதல்வர் எதைச் செய்தாலும் தமிழக மக்களின் நலுனுக்காகவே செய்வதாகவே அனைவரும் இன்றைக்குப் பேசுகிற அளவுக்குச் இந்த எழுபது நாட்களாக எல்லாரையும் பேச வைத்திருக்கிறார் என்றால் - இதைத் தவிர வேறன்ன வேண்டும் ஆதாரம்.
      • புதிய சட்ட சபைக்குச் செல்வதில்லை. ஆனால் அதில் உள்  நோக்கம் எதுவும் இல்லை என்று அவர் சொல்லுகின்றார். தமிழகத்தில் சிறப்பான ஆட்சியைக் கொடுப்பதற்கு இது தடையாக இருக்கும் என்று சொல்லுகிறார் - வரிந்து கட்டிக் கொண்டு எல்லாரும் சரி என்று எழுதுகிறார்கள்.
      • சமச்சீர் கல்வி என்பது தரமாற்று இருக்கிறது என்பதற்காகத் தான் இந்தத் திட்டத்தை ரத்து செய்வதாக சொல்லுகிறார்கள் அம்மா. அது சரிதான் - அதில் வேறெதுவும் உள்குத்து இல்லை என்று எல்லாரும் நம்புகிறார்கள் - எல்லாரும் எழுதுகிறார்கள். 
      • சமச்சீர் கல்வியின் திட்ட ஆய்வுக் குழு என்பதில், உலகின் மிகச் சிறந்த கல்வியாளர்கள் திரு. ஜெயதேவும், திருமதி. ஒய். ஜி. பார்த்தசாரதி போன்றவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதும், இவர்கள் மிகவும் காத்திரமாகப் படித்துப் பார்த்து சமச்சீர் கல்வி தரமற்றது என்று சொல்லுகிறார்கள். இப்படிப் பட்ட கல்வியாளர்கள் முன்பே கருணாநிதி அவர்களால் சேர்க்கப் பட்டிருக்க வேண்டும். அப்போதுதானே சாணக்கியர். இன்று அவரே உயர் நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றித் தரவேண்டுமென கூழைக் கும்பிடு மட்டும் போடவில்லை அப்படியாக தமிழக முதலமைச்சருக்கு அறிக்கை விட்டிருக்கிறார் - முன்னாள் முதல்வர். அவர்  நியமித்த பாடத்திட்டக் குழுவின் ஆட்களைப் பாருங்கள் - ஐ.ஐ.டி. யின் இயற்பியல் பேராசிரியர், திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் வேதியியல் பேராசிரியர் போன்றவர்களை  வைத்து என்ன செய்ய முடியும்?
      • யாரைப் பார்த்தாலும் சமச்சீர் கல்வித்திட்டம் தரம் வாய்ந்ததாக இல்லை என்ற ஒரு குற்றச் சாட்டை வைக்கிறார்கள். படித்துப் பார்த்தவர்கள் குறைவு.  அதைப் பற்றிய முழு விவரமும், திட்டக் குழுவின் ஓட்டைகளையும் இங்கே படித்து அறியலாம்.
      • ஏறக்குறைய இரண்டு மாதங்கள் முடியும் நிலையில், பள்ளி மாணவர்கள் எதற்குப் பள்ளிக்குப் போகிறோம் என்று தெரியாமலேயே போய்க கொண்டிருக்கும் நிலை இன்னும் எவ்வளவு நாட்களுக்குப் போகும் என்று தெரியவில்லை. இப்போது மீண்டும் உச்ச நீதி மன்றத்திற்குப் போகிறது. தமிழக மாணவர்களை பழைய பழைய பாடத்திட்டங்களை பின்பற்றச் சொல்லுவதன் மூலம் தமிழக மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் இன்றைய முதல்வரை நாமும் பாராட்டுவோம். பழைய சட்டமன்றத்திற்கு சென்றதன் மூலம் மிகவும் உன்னதமான ஆட்சியைத் தரும் புதிய முதல்வரை வாழ்த்துவோம்.
      • தமிழக மாணவர்களின் நலனில் மிகுந்த அக்கறையோடு இருப்பது போலவும் - இன்னும் சொல்லப் போனால் சமச்சீர் கல்வியைத் தடை செய்வேன் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்ததைப் போலவும் அதனால்தான் மிகுந்த சிரத்தையோடு இதில் ஈடுபட்டிருப்பதாகவும் எல்லாரையும் பேச வைக்கிற சாணக்கிய அம்மா, அய்யா விற்குப் பாடம் எடுக்க வேண்டும். எதைச் செய்தாலும் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்த முதல் நாளில் இருந்தே செய்ய வேண்டும் - இந்த வேகம்தான் விவேகம். அப்போதுதான் ஆட்சி முடியும் தருவாயில் எல்லாரும் இதை மறந்து போவார்கள். ஐயா இதையும் கற்றுக் கொள்ள வேண்டும். 
      • இந்த சானக்கியர்களுக்கு மத்தியில், எதைப் பற்றியும் கவலைப் படாமல் இருக்கும் பெற்றோர்கள் தான் மிகப் பெரிய சாணக்கியர்கள் போல இருக்கிறது. இரண்டு மாதங்கள் பிள்ளைகள் பள்ளிக்குப் போகின்றன. பொதுவாக மாணவர்கள் நலனில் எல்லாம் அக்கறை வேண்டாம் - தன் பிள்ளையின் மீதாவது ஒரு கரிசனை வேண்டாம். தன் வீட்டை விட்டு போனால் போதும் - பள்ளியில் படித்தாலும் சரி இல்லையென்றாலும் சரி என்கிற மாதிரி - என்று தள்ளி விடுகிற பெற்றோர்கள் கொஞ்சமாவது சிந்தனை செய்ய வேண்டாமா?
      • இந்தப் பெற்றோர் - ஆசிரியக் கழகங்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஓட்டு மொத்த தமிழகமே அமைதி காக்கும் போது - பெற்றோர் ஆசிரியக் கழகங்கள் என்ன செய்து விட முடியும் என்று அமைதி காக்கிறதே - இதுதான் சாணக்கியத் தானம். ஆட்சியாளர்களை விட அமைதி காக்கிற நாம்தான் சாணக்கியர்கள். 
      • எதைச் செய்தாலும் அமைதி காக்கிற சாணக்கியத்தனம் - ஒரு பக்கத்திலிருந்து அப்படியே முழுவதுமாக மறுபுறம் சாயும் சாணக்கியத் தனம் - அடுத்த தேர்தலில் அப்படியே எதிர்ப்புறம் சாயும் சாணக்கியத் தனம். நமது சாணக்கியத்திற்கு ஈடு  - முன்னாளும் கிடையாது இந்நாளும் கிடையாது.

      2.3.11

      கல்வி -

      கல்வி கடைச்சரக்காகி விட்டது அல்லது வியாபாரப் பொருளாய் மாறிப் போய்விட்டது என்கிற குற்றச் சாட்டு எல்லார் மத்தியிலுமே உண்டு. 
      உண்மையிலேயே கல்வியின் நோக்கம்தான் என்ன?

      கல்லாதவன் கல்லுக்குச் சமமானவன் என்பது உண்மையா? 
      கற்றலும் கற்றுக் கொடுத்தலும் மனிதன் வேலைக்குச் செல்லும் வாய்ப்பினை அதிகப் படுத்தும் நோக்கம் ஒன்றுதான் பிரதானமாக இருக்கிறது.  
      அதாவது, படிப்பதற்குப் பணம் செலவு செய்ய வேண்டும் - பிறகு அந்தப் படிப்பைக் கொண்டு சம்பாரிக்க வேண்டும். கல்விக் கூடங்கள் பணம் பெரும் வணிகக் கூடங்கள். எனவே அவைகள் தங்கள் வணிகக் கூடங்களுக்கு வருபவனுக்கு அத்தகைய வாய்ப்பை அதிகப் படுத்துகின்றன. பொருளாதாரக் கட்டுமானம்தான் நமது கல்வியின் அடித்தளம். மார்க்சியக் கருத்துக்களையெல்லாம்   நான் இங்கே பேசவில்லை. அப்படிப் பார்த்துக் கொள்ளவும் செய்யலாம்.
      அறிவியல் என்ன சொல்லுகிறது? இந்த உலகப் பொருட்களின் தன்மை, அவைகளின் விதிகள், வெறும் வேதியலின் கூட்டுத் தன்மை - என்ன ஆகிறது? அந்த விதிகளை எப்படிப் பயன்படுத்த முடியும் - அதைக் கொண்டு மனித வாழ்வை மேம்படுத்த முடியும் என்கிற அளவில் அவைகளைப் பற்றிய அறிவு நமக்குத் தேவைப் படுகிறது. ஆனால் அப்படி நமது மாணவர்கள் செய்கிறார்களா? அதுகூட இப்போது தேவையற்றது. மிக முக்கியமானது -
      அறிவியல் என்பது அறவியல் அற்றதாக மாறிப் போயிருக்கிறது.  நம் தேவைக்கென, நமது விருப்பத்திற்கென்று, அழிப்பதும், ஒழிப்பதும்தான் நமக்கு மிஞ்சியிருக்கின்றது.
      புவியியல் அதன் தன்மை பெட்ரோலியப் பொருட்களை சுரண்டுவதற்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அதாவது உலகம், அதன் அணுக்கள், மரங்கள், நிலங்கள், மழை எதுவும் உணர்வற்ற, ஜடங்களாக நமக்குச் சொல்லப் படுகிறது. அதாவது - அவைகள் எல்லாம் நமக்காக - நமக்காக மட்டுமே என்ற உணர்வில் அவளிடம் இருந்து நம்மை அன்னியப் படுத்தும் போக்கைத்தான் அது நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.

      கணிதம் என்பது - நாம் பணம் எண்ணுவதற்கும் வரவு செலவு பார்ப்பதற்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறது. வரவு என்ன செலவு என்ன - இன்னும் சொல்லப் போனால் - கடன்களை வைத்து - வரவின்றி எப்படிக் கடனாளிகளாக இருப்பது என்பதைச் சிறப்பாகச் செய்கிறது.

      வரலாறு - என்ன தேதியில் என்ன நடந்ததது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளக் கற்றுக் கொடுத்திருக்கிறது.  அதனால் என்ன வந்தது.? வரலாற்றின் தவறுகள் சுட்டிக்காட்டப் படுவது மட்டும்தான் அதன் நோக்கம் தவிர அது கொடுக்கும் அறவியல் சிந்தனைகள் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை.  
      செய்த தவற்றை மீண்டும் செய்யாமல் இருப்பது பற்றியோ அல்லது வரலாற்று நிகழ்வின் மதிப்பீடுகள் பற்றியோ - அது உண்மையா இல்லையா என்பது பற்றிய திறனாய்வோ எதுவுமின்றி தேதிகளை மனப்பாடம் செய்யக் கற்றுக் கொடுக்கிறது.

      இயற்கை வெறும் கனிமங்களின் கூட்டுச் சேர்வையாகவும், நோக்கமற்றதாகவும் அறியப் படுதலால் அதனோடு நமக்குள்ள தொடர்பு ஒன்றும் அற்றதாகவே உணரப் படுகிறது. ஆனால் நம் உள் மனத்தில் அதற்கான ஆசை இருக்கிறது. "அவதார்" வந்தால் மிகுந்த ஆர்வத்தோடு பார்த்து நம் ஆசையைப் பூர்த்தி செய்து கொள்கிறோம்.  இயற்கை உறவு பற்றி அவதார் உணர்த்திய அளவிற்குக் கூட நமது கல்விக் கூடங்கள் உணர்த்தவில்லை.

      கணிதம் என்பது இயற்கையோடு தொடர்புடையதாக அல்லது அனைத்திற்கும் அடித்தளமாகவே பார்க்கப்பட்டது - ஆனால் இன்று அது தனித்து விடப்பட்டிருக்கிறது. 
      வாழ்வியல் கூறுகளைக் காட்டிலும் வசதியாய் வாழ்வதற்கான ஒரு கருவியாய் நம் கல்வி நிறுவனங்கள் மாறிப் போய் விட்டன. 

      ---
      இந்த நூற்றாண்டு மனிதர்களுக்கு கணணி பற்றித் தெரியும், கணக்குப் பண்ணத் தெரியும் - பல நாடுகளின் தலை நகரம் தெரியும், பல நாடுகளுக்குச் சென்றுவந்து உலகம் மிகப் பெரியது என்று தெரியும் - அல்லது அதைப் பற்றிய விவரங்கள் பாடங்களாய் தெரியும் - 
      தெரியவில்லை என்றால் - அவன் கற்கால மனிதன் / ஆனால் வாழ்வியல் பற்றித் தெரியாது. இன்றைக்கு பலபேர் கணணியோடு தொடர்பு கொண்டு இருக்கிறார்கள். அதனால் ஏதாவது மாற்றம் இருக்கிறதா? கணனியால் நல்லவைகள் இல்லை என்பதில்லை. ஆனால் கணணியின் பயன்பாடு வேகத்தை அதிகரித்திருக்கிறது. அவ்வளவே! 

      ஒரு குட்டிக் கதை - படித்த ஒருவன் படகில் பயணம் செய்யும் போது, படகோட்டிக்கு அது தெரியுமா இது தெரியுமா என்று கேட்டு அவன் வாழ நாளில் பாதியை இழந்துவிட்டான் என்று சொல்லும் போது, படகோட்டி கேட்டானாம் - உனக்கு நீந்தத் தெரியுமா? 'இல்லை' என்றவுடன் அவன் சொன்னானாம் - உன் வாழ்க்கை முழுவதியுமே இப்போது இழக்கப் போகிறாய். படகில் ஓட்டை விழுந்து விட்டது." 

      வடிவேலுவின் ஒரு ஜோக்.  "கிளின்ட்டன் தெரியுமா" "சச்சின் தெரியுமா" - ன்னு.

      அந்த மாதிரிதான். நமக்கு நம்மைச் சுற்றி வெளியில் இருப்பது பற்றிய விவரம் தெரிகிறது - அதில்  இருக்கும் நமது வாழ்வின் நோக்கம் என்னவென்று கற்றுக் கொடுக்கப் படாமலேயே இருக்கிறது. 

      இதற்கு முன்பு படிப்பது என்பது வாசிக்கக் கற்றுக் கொள்வதும் கையெழுத்திடுவதும்தான். இப்போது படிப்பு என்பது கணணி கையாளத் தெரிவது. அவ்வளவே.
      நமக்கு முன்னாள் இருந்தவர்கள் - நமது பார்வையில் படிக்காதவர்கள்தான் - ஆனால் அவர்களுக்கான வாழ்வின் நெறிமுறையில் இயற்கையோடானா தொடர்பு இருந்தது. அது நம்மிடத்தில் இல்லை. நம்மைக் காட்டிலும் அவர்கள் கற்றவர்கள் - நம்மைக் காட்டிலும் மேலானாவர்கள்.