16.3.11

அணு உலகம் - ஆழ்ந்த அனுதாபம்

 • ஜப்பான் சோதனைக்கு உள்ளாகி இருக்கிறது. ஒவ்வொரு முறையும் "அணு" குறித்த விவாதம் எழ ஜப்பானே காரணாமாக இருக்கிறதே என்பது வருத்தம்தான். முன்பு அமேரிக்கா - இப்போது அவர்களே காரணமோ என்றுதான் தோன்றுகிறது. செத்தவனைப் பத்தி தப்பா பேசுறது நாகரீகம் இல்லைதான். ஆனால் அவர்கள் ஒவ்வொரு முறையும் செத்து இது போல நடக்கூடாது என்று அவர்கள் கூவுவது மாதிரிதான் எனக்குத் தெரிகிறது.  
 • அணு உலகம் -  ஆபத்து என்று சொன்னால் அறிவாளிகள் அடிக்க வருவார்கள்.
 • உலகப் போரில் ஹிரோஷிமா - நாகசாகி என்கிற நகரங்களில் அணு குண்டு வீசப் பட்ட போது, இனிமேல் உலகத்தில் இப்படி ஒரு அநீதச் செயல் ஒரு போதும் நடக்கக் கூடாது என்றுதான் அனைவரும் விரும்பினர்.
 • ஆனாலும் அதன் பிறகு அழிப்பதற்கு அல்ல, ஆக்கத்திற்கு பயன் படுத்துவோம் என்கிற ரீதியில், ஏறக்குறைய 55 அணுஉலைகளை அமைத்து அந்த நகர்களை அழகு படுத்திய ஜப்பானியர்கள் மீது இயற்கை மீண்டும் அத்தகைய நிகழ்வை ஏற்படுத்தியிருக்கிறது.
 • இதுவரை இல்லாத அளவிற்கு, பூகம்பம், சுனாமி, அதைத் தொடர்ந்து, வரிசையாக அணு உலைகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன.  அவைகளிலிருந்து வெளிவரும் கதிர் வீச்சுகள் மிக மோசமானவை என்பது அனைவருக்கும் தெரியும்.  இது இயற்கையின் சதி என்றால் நாம் ஒன்றும் சொல்ல முடியாது. 
 • எல்லாம் எனக்குத் தெரியும்; எல்லாவற்றையும் என்னால் கட்டுப் படுத்த முடியும் என்கிற அறிவு ஜீவிகளுக்கு கிடைத்த பரிசாகத் தான் இதை ஏற்றுக் கொள்ள முடியும்.  என்னை மிஞ்சி எதுவும் நடக்காது என்ற மமதை.  தான்தான் இந்த உலகத்தின் மிகச் சிறந்த உயிரினம் - நான் செய்வதனைத்தும் சரி தான் என்று நியாயப் படுத்தும் குணம். இந்தத் தலைக் கனத்தை எப்படிக் குறைக்க முடியும்?
 • ஒவ்வொரு நாடும் அடுத்த நாட்டை எதிரியாகப் பார்ப்பதும், எல்லைகோட்டு சண்டையை வளர்ப்பதும், தன பலத்தை நிரூபிக்க அணுவைப் பிளப்பதும் - போட்டிக்கு வேறொருவன் அதற்கான முயற்சியில் இறங்குவதும் என்று ஒரு சுழலில் சிக்கித் தவிக்கிறோம். 

 • உலக அரங்கில் பொருளாதார வளர்ச்சி - அது மட்டுமே பிரதானம் - அந்நியச் செலவாணியை அதிகரிக்க வேண்டும். நவீன வளர்ச்சியில் இருந்து பின்செல்ல முடியாது என்பது தெரியும் ஆனால் அதே சமயத்தில் பொறுப்புணர்வு என்பது மங்கிக் கொண்டே இருக்கிறது.  
 • எதையும் செய்ய எனக்கு உரிமை இருக்கிறது என்கிற ரீதியில் உலக அரங்கில் பெயரெடுக்க, பொருளாதார வளர்ச்சி என்கிற போர்வையில் சில பெருச்சாளிகள்  வளர்ந்து கொள்ள மட்டுமே அரசு முயல்கிறது. 

 • அமெரிக்கா உள்ளே வந்து விடக் கூடாது, சீனா அருகில் போய்விடக் கூடாது என்பதற்காய் இலங்கைக்கு தமிழரைக் கொல்ல உதவுகிறது. அவர்கள் வேறு நாட்டுத் தமிழர்கள். தமிழ் மீனவர்களுக்குப் பாதுகாப்பில்லை என்றதற்கு என்ன செய்தது?  தெற்கிருந்து செய்தி போக நேரமாகிறது - ஆனால் இலங்கையிலிருந்து விரைவாய்ப் போகிறது.  நமது அரசும் கொள்கைகளும் வெறும் வெளி வேஷங்கள்  போடும் நாடக தாரிகள். 

 • மூன்றாம் உலகப் போர் தொடங்கினால் அச்சண்டை முடிவுறாது - ஏனெனில் தொடங்கும் போதே உலகம் முடிந்திருக்கும். இது அனைவருக்கும் தெரியும். ஆனால் நவீனப் போர் - பொருளாதாரப் போர். அனைத்து நாட்டையும் ஆட்டிப் படைக்கும் பேய். 
 • வளர்ந்த நாடுகள் என்ற நாடுகளுக்குள்ளும் - ஏழ்மை, வறுமை, விலைவாசி உயர்வு - வேலையில்லாத் திண்டாட்டம். அப்புறம் என்ன வளர்ந்த நாடு, வளராத நாடு? நாமும் அதைப் பார்த்து வளர வேண்டும் என்று ஆசிக்கிறோம்.
 • நில உறவு போயிற்று - மனித உறவு மங்கிற்று - கோடைகளில் நமக்குக் குளிர் வேண்டும் - குளிரில் வெப்பம் வேண்டும் - அணு சக்தி இருந்தால் தான் சாதிக்க முடியும். பன்னாட்டு நிறுவனங்களுக்கு செம்பரம்பாக்கம் தண்ணீர் போகும் - அவர்களுக்கு மின்சக்தி போக மீதி மக்களுக்கு கிடைக்கும். அப்புறம் என்ன நமக்கு வசதி?
 • தொலைக்காட்சிப் பெட்டி வீடு தோறும் போகும் - மின்சாரத்திற்கு என்ன செய்யலாம்? அணு சக்தி வேண்டும். 
 • யாரும் இல்லாத கடைகளில் ஷோ கேசில் எரியும் மின் விளக்குகளை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அணைக்க முன்வந்தாலே இன்னொரு தலை முறைக்கு எரிசக்தி மிஞ்சும். இந்தியாவும் அதனை பின் பற்றுகிறது. அப்புறம் எப்படி மின்சாரம் பற்றும்?
 • சேமிக்கும் பழக்கம் போய் விட்டது -   பணம்- மின்சாரம் - நீர் - எல்லாம்... தேவைக்கு மேலே இல்லையென்றால் கடன் வாங்கலாம்- மின்சாரம் - அணு சக்திதான். சரி நீர் எங்கே வாங்குவது?
 • அமைதி விரும்பிகள் உலகப் போருக்குப் பின் சண்டையிடுவதை குறைக்க வேண்டும் என்றும், சண்டைகளின் அழிவை உணர்த்தியும், பல இடங்களில்  இயற்கையிடமிருந்து பிரிந்து போனதை உணர்ந்து திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். நாம் இன்னும் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறோம். 
 • ஜப்பானியர்கள் இந்தக் குட்டி நகரத்திற்குள் ஐம்பத்து ஐந்து அணு உலைகள் வைத்திருக்கும் போது இந்தியாவில் வெறும் பதினேளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று கேட்டார்கள் - எதற்கு?

 • செர்நோபில் அணு உலை விபத்து மிக மோசமானது என்ற போது அதில் குறிக்கப் பட்ட பாதுகாப்பு வளையங்கள் ஒழுங்காக அமைக்கப் பட வில்லை எனவேதான் விபத்து என்றார்கள். 

 • ஜப்பான் - நில அதிர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரிந்தும், அதையெல்லாம் கருத்தில் கொண்டும் மிகவும் பாதுகாப்பாக வடிவமைக்கப் பட்டது என்றும் சொன்னார்கள். இப்போது என்ன நடக்கிறது என்பதை உலகம் பார்க்கிறது. 
 • இப்படியே போனால், யாருக்காக அணு உலை? மக்களுக்கா?
 • இந்தியாவில் மிகவும் பாதுகாப்பகவே அணு உலைகள் இருக்கின்றன. எந்த நில அதிர்வையும் தாங்கும் என்று, ஏதோ ஒரு விஞ்ஞானி சொல்லியிருக்கிறார். 
 • எதை வைத்து இவர்களை நம்புவது? நால் வழிச் சாலையில் ஊழல் - பாலங்கள் கட்டுதலில் மோசடி - விளையாட்டு நடக்கும் முன்னே கட்டிடங்கள் சரிவு- கல்மாடியின் ஊழல் - ஊழல் வழக்கில் உள்ள ஒருவரே ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமனம். போலி மருந்துகள் - போலி மருத்துவர்கள் - போலி விமானிகள் [இண்டிகோ விமானத்தில் பனி புரிந்த ஒரு விமானி வெற்றி பெறாத தேர்வில் வெற்றி பெற்றதாக மாற்றியது மட்டுமல்ல அதுபோல இன்னும் பலர்] - இதில் அணு மின் நிலையங்களை மட்டும் மிகவும் உண்மையோடும், நேர்மையோடும், எந்தவித கலப்படமும் இன்றி, ஜப்பான் முன்வரைந்த பாதுகாப்பு வளையங்களுக்கும் மேலாக, எல்லாவித நில அதிர்வுகளையும் தாங்கிப் பிடிக்கும் வல்லமையுள்ள அணு மின் நிலையங்களை நம்மவர்கள் அமைத்துள்ளார்கள் - இனிமேலும் அமைப்பார்கள். அணு உலைகள் விபத்து ஏற்படும் பட்சத்தில் இழப்பீட்டுத் தொகை என்பதை வெறும் 500 கோடியிலிருந்து பல போராட்டத்திற்குப் பின்னர் 1500 கோடிகளாக மாற்றிய இந்திய அரசு மக்கள் நலம் பற்றியும், அணு உலை அமைக்கும் அந்நிய நாட்டு கம்பெனிகளின் பணியில் தலையிட்டு அனைத்தும் ஒழுங்காக நடை பெறுகிறதா என்று நோண்டி நொங்கெடுக்கும் என நம்புவோம். 

 • நான் இந்தியாவின் மீது அவ நம்பிக்கை கொண்டிருக்கிறேன் என்று தவறாய்ப் புரிந்து கொள்ளப்பட்டாலும் பரவாயில்லை.  நாம் இன்னும் வளர வேண்டியிருக்கிறது.  நம் பண்பாட்டுக் கண்கொண்டு நம் மக்களைப் பார்க்கிற பார்வை வேண்டும். நியூ யார்க்கில் விளக்கு உள்ளது போல நமக்கு வேண்டும் என்றால் - அதுவா நமது முதல் தேவை. மக்கள் பொருளாதாரத்தில் உலக அரங்கோடு போட்டி போட்டுக் கொண்டு ஐந்து நட்சத்திர உணவகங்களில் உணவு அருந்தவோ, காலையில் சிங்கப்பூரிலும், மாலையில் மலேசியாவிலும் இருந்து விட்டு இரவோடு இரவாக இந்தியா திரும்பும் வசதியோ, அடுக்கு மாளிகைகளோ, இரவு பகல் வித்தியாசம் தெரியாமல் இருக்க வண்ண வண்ண விளக்குகளோ - ஆளுக்கு ஒரு வாகனமோ - ... இல்லாவிட்டாலும் பரவாயில்லை - அடுப்பெரித்து கஞ்சி குடிக்க உயிராவது மிச்சமிருக்க வேண்டாமா? 

 • இப்போதாவது அணுஉலைகளுக்கு அருகில் இருக்கும் மக்கள் பாதுகாப்பு பற்றியோ, அல்லது ஊழல் ஒழிப்பில் உண்மையாகவே இறங்கினாலோ - அறுபத்தி மூன்று சீட்டுக்களைப் பெறுவதற்கும்,  ஆட்சியில் பங்கு கேட்பதற்கும் சி. பி. ஐயைப் பயன் படுத்துவதை விட்டு விட்டு - மாற்று வழி பற்றிய விவாதங்களை முன்வைக்கத் தொடங்கினாலோ,  இயற்கை ஆர்வலர்களின் குரலுக்கு செவி கொடுத்தாலோ - கூடன்குளம் அல்லது நர்மதாப் போராட்டங்களில் உள்ள நியாயங்களை பரிசீலிப்போம் என்கிற அறிக்கையோ விட்டாலோ, இயற்கை அரண்களை அழிக்கும் முயற்சியை கைவிட நாம் முன்வந்தால்தான் நாம் நமது தலைக் கனத்தை  குறைக்க முயற்சிக்கிறோம் என்றாவது படும்.2 comments:

பெயரில்லா சொன்னது…[பதிலளி]

very reflective analysis of the tragedy unfolding in Japan. While thoughts on human hubris can lead one to deeper introspection, genuine contribution to humanity continues to happen because of human exploration into our creative potential. It may have its consequences but I guess it's all part of the game! Why not a piece on the election scene in Tamil Nadu please!

அப்பு சொன்னது…[பதிலளி]

Thank you. No one would question the "genuine contribution" to humanity. we all welcome it. But the contribution should be based on the genuine love for humanity - if at all. My point was to say that we are interdependent beings - with the others, nature and beyond - and not to refute the genuine contribution.

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்