12.3.11

நவீனம் - தொழில் நுட்பம்

தொழில் நுட்பத்தின் வளர்ச்சி நமது வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முன்பெல்லாம் வெளியூருக்குச் செல்வது என்பதே நினைத்துப் பார்க்க முடியாது - அப்படியே இருந்தாலும் வருடத்திற்கு ஒருமுறை - அதுவும் இருபது அல்லது முப்பது கிலோமீட்டர்கள் மட்டுமே. 
அப்போதெல்லாம் தஞ்சாவூர் செல்வதே மிக எதிர்பார்ப்புக்குள்ளானதாய்  இருக்கும். புதுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூர் செல்வதற்குள், இரண்டு மணி நேரம் என்பது சர்வ நிச்சயம்.

இப்போது ஏறக்குறைய எல்லா இடங்களிலும் வழுக்கி செல்லும் சாலைகள், அதன்மேல் வோல்வோ பேருந்துகள், இரயில்கள், விமானங்கள் என்பதெல்லாம் மிகச் சாதரணமாகி விட்டன. எல்லாரும் விமானத்தை பயன்படுத்தா விட்டாலும் அது மிகவும் அத்தியாவசியமான பிரயாணமாகி விட்டது. ஒருமுறை அதில் செல்ல வேண்டும் என்பதற்காக திருச்சியிலிருந்து சென்னை வரைக்குமாவது செல்கிற அளவிற்கு வளர்ந்திருக்கிறோம்.  


இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊரில் 'மலேயாக் கார' வீடு ஒன்றில் மட்டும் தொலைக் காட்சிப் பெட்டி இருந்தது. பிறகு டாக்டர் ஒருவர் வீட்டில் வந்ததது. அப்போது அவர்களின் அனுமதிக்காகக் காத்துக் கிடந்து தொலைக் காட்சி பார்க்க வேண்டும். சில பேருக்கு அனுமதி கிடைக்கும்: பல சமயம் வருத்தமாய்த் திரும்பி வருவோம். இப்போதெல்லாம் அப்படியா. தொலைக் காட்சி, குளிர் சாதனப்பெட்டி, இவைகளெல்லாம் சாதாரன பொருட்களாகி விட்டன. முன்பு சிறிய டிரான்சிஸ்டர்கள் வந்தது போல இன்று தொலைக்காட்சிப் பெட்டிகள். தொலைக்காட்சி பெட்டி உள்ள வீட்டிற்கு மட்டும் வெள்ளிக்கிழமைகளில் படையெடுக்க வேண்டிய  அசியமில்லை. எவ்வளவு தூரத்திற்கு அவைகள் அத்தியாவசியப் பொருட்களாகி விட்டன என்றால் அவைகள் பற்றி வரும் விளம்பரங்கள் கூட குறைந்த விட்டன.

அப்போது மிதி வண்டிக்கு லைசென்ஸ் வாங்க வேண்டும் - அதுவோ அல்லது டைனமொவோ இல்லையென்றால் காவல் துறையினர் பிடித்து விடுவார்கள். ஒருமுறை டைனமோ இல்லாமல் வண்டி ஓட்டி காவலர் ஒருவரிடம் மாட்டியது உண்டு. பல சமயங்களில் அவர்களைப் பார்த்தால் இறங்கி வண்டியைத் தள்ளிக் கொண்டுதான் செல்ல வேண்டும். இப்போது அப்படியா - எவ்வளவு வண்டிகள். 

வேலைகள் சுலபமாகி விட்டன [?], பெண்களின் வேலைபளு வெகுவாய் குறைந்திருக்கிறது.  அடுப்பூதும் பெண்களுக்கு என்றெல்லாம் எல்லா இடங்களிலும் பேசிவிட முடியாது. மிக்சி, கிரைண்டர் - குளிர்சாதனப் பேட்டிகள்.... துணி துவைக்க மெஷின் என்று எல்லா இடங்களிலும் சாதனங்கள். [இன்னமும் பெண்களுக்கு அடுக்களை வேலைகள் தானா?]

கண்டக்டர்கள் பேனா எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. இதுபோல எவ்வளவு நன்மைகள் நாம் அடைந்திருக்கிறோம் என்பது பற்றி ஒவ்வொருவரும் ஒரு கதை வைத்திருக்கலாம்.

ஆனால்,  எல்லாவற்றிற்கும் மேலாக, சமூகத்தில் அது மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்கிருக்கிறது. தொழில் நுட்பம் என்பது மட்டுமல்ல. அதோடு முதலாளித்துவமும் இணைந்து சமூகத்தில் மனித 'மான்பிற்கு' ஒரு பங்கை ஆற்றியிருக்கிறது என்பது மறுக்க முடியாது.

ஆனால் மனிதன் மலம் அல்லும் தொழிலும், சாக்கடை சுத்தம் செய்வதிலும் இன்னும் அந்தப் பயன்பாடு அதிகம் வந்தது போலத் தெரியவில்லை..

வளர்ச்சி பற்றி நிறைய எழுதலாம் -
அதைப் பற்றி இல்லாமல் - தொழில் நுட்ப வளர்ச்சியினால் நாம் என்ன இழந்திருக்கிறோம் எனபதைப் பற்றி எழுதுவோம். அதற்கான முன்னோட்டம் இது. அதாவது தொழில் நுட்பத்தால் நாம் ஒன்றுமே பெறவில்லை என்பதை எல்லாம் ஒத்துக் கொள்ள முடியாது  என்பதற்காகத்தான் இப்பதிவு.

அதற்காக - இப்போது என்ன நடந்திருக்கிறது என்று பார்க்காமல் இருக்க முடியுமா?

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்