27.3.11

தேர்தல் - இம்சை அரசனும் - இழப்பும்


கடந்த பதிவில் தேர்தலைப் பற்றிய விமர்சனம் எழுதக் காரணம் - அதற்கும் திரைப்படத்திற்கும் மிகப் பெரிய வித்தியாசங்கள் ஒன்றுமில்லை என்பதனால்தான்.

இப்போது தேர்தலைக் கலக்கும் காமெடியன் இம்சை அரசன் வடிவேலு. 

தமிழக அரசியலில் கலக்கிய நடிகர்களும் உண்டு, கலங்கிய நடிகர்களும் உண்டு. 
 • சிவாஜி என்கிற அருமையான நடிகன் செய்த தவறு காங்கிரசின் பக்கமிரங்கியது. ஆனால் நல்ல நடிகன் என்பதனால் மீண்டு வர முடிந்தது. எல்லாராலும் அப்படி முடியாது.
 • ஆச்சி மனோரமா அரசியலில் இறங்கிய போதும் அதுதான் நடந்தது. ஆச்சி மசாலா பற்றி பேசினால் கேட்கலாம்.அரசியல் பேசினால்..........
 • ராமராஜன், etc .
 • சிம்ரன் கடந்த முறை காசு வாங்கிக் கொண்டு தேர்தல் பிரச்சாரம் போனார். சில இடங்களில் சிம்ரனைப் பார்க்கக் கூட்டம் வந்தது-  சில இடங்களில் அதுவும் இல்லை. 
 • காமெடி நடிகர்கள் - கடந்த முறை செந்திலைக் கூடவிட்டு வைக்க வில்லை. அவரும் எவ்வளவு நாளைக்குத் தான் கவுண்டமணி கையாலே அடி வாங்குவது- என்ன ஆச்சு?
 • இந்த முறை வடிவேலு?
  • என்ன ஆச்சு காமெடியன் வடிவேலுக்கு? 
  • நடிகர்களுக்கு என்று எல்லாத் தரப்பிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். வெளியில் வேண்டுமானால் ரசிகர்கள் நடிகர்களுக்காக உயிரும் கொடுப்பதாக ஒரு இமேஜ் உண்டு. அவர்களே அரசியலுக்கு வருகிறபோது அதனை வேறு படுத்திப் பார்க்கின்ற மனநிலை இப்போது மக்களுக்கு வந்து விட்டது. சில நடிகர்கள் வேண்டுமானால் அதைச் சாத்தியப் படுத்திக் கொள்கிற சாமர்த்தியத்தை வைத்திருக்கலாம். எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அது மிகச் சுலபாய் அமைந்தது.  சிவாஜிக்கு அது அமையவில்லை. இத்தனைக்கும் சிவாஜி அவரை விட சிறந்த நடிகர்தான்.
   • ரஜினியை விட ஆச்சி சிறந்த நடிகைதான் என்ன ஆயிற்று?
  • செல்வி ஜெயலலிதாவே மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகுதான் ஒரு கட்சியின் தலைமையையே வந்து அடைய முடிந்தது. இத்தனைக்கும் ஏற்கனவே இருந்த கட்சி, அவரும் அதில் இருந்த காட்சி எலாருக்கும் தெரிந்த போதும்... அப்புறம் என் நம் நடிகர்கள் இன்னும் முயற்சிக்கிறார்கள். 
  • வடிவேலு - சிறு குழந்தை முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பும் நிஜாம் பாக்கு மாதிரி இருந்த வடிவேலு, இந்த தேவையற்ற நுழைவு மூலம், தனது பெயரை, தனது மதிப்பை, தனக்கென்று இருந்த ரசிகர்களை, கட்சி தாண்டி இருந்த ரசிகப் பெருமக்களை நிறைய இழந்து விடுவார். விஜய காந்த் கட்சியிலிருந்து கூட அவருக்கு ரசிகர்கள் உண்டு - இனிமேல் அது இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவே. 
  • மற்றவர்களை கேலி செய்வதை விட்டு தானே கேலிப் பொருளாய் இருந்ததன் மூலம் பிறரைப் புண்படுத்தாமல் எல்லார் மனதிலும் அவரால் இடம் பிடிக்க முடிந்தது. இப்போது அது அப்படியே மாறிப் போனது.
   • ஒரு படத்தில் கதா நாயகனாய் நடித்ததோடு முடித்துக் கொண்டிருக்க வேண்டிய வடிவேலு அடுத்த படத்திற்கு ஆசைப் படலாமா?  இம்சை அரசன் என்கிற இந்தப் படமும் அவரே காமெடியன் என்பதால்தான் ஓடியது. 
   • திடீரென்று வடிவேலுவுக்கு இம்சையின் இரண்டாம் நாயகன் நினைவுக்கு வந்து விட - இந்த அரசியல் பிரவேசம்.
   • மீண்டும் அவருக்கு இந்திரலோகத்தில் அழகப்பனை நினைவுக்கு கொண்டு வர வேண்டியிருக்கிறது. 
   • வடிவேலு இனிமேல் எல்லாப் படங்களுக்கும் வர மாட்டார். விஜயின் கூட்டணி இருக்காது.  
   • ஒரே வழி, கருணாஸ் போல சன் குழுமம் படங்களில் மட்டும் நடித்துக் கொண்டிருக்கலாம்.
   • நடிகர்கள் என்றுமே பயன்படுத்தப் படுவார்கள் என்பதை வடிவேலு மிக விரைவில் அறிந்து கொள்வார். அதிலும் தி.மு.க.வில். வைகோவையே கழற்றி எறிந்தவர்களுக்கு, வடிவேலு ஒன்றுமே இல்லை - சின்ன காமெடிப் பீஸ். ஆனால் இதை வடிவேலு உணரும் போது, அவர் ஆயிரக்கணக்கான ரசிகர்களை இழந்திருப்பார், நூற்றுக்கணக்கான படங்களை இழந்திருப்பார், பல எதிரிகள் உருவாகியிருப்பார்கள் - ஆட்சி மாறும் போது தேவையில்லாத நிகழ்வுகளும் அரங்கேறும். 

  • ஏன் நடிகர்கள் அரசியலில் நுழைகிறார்கள்? சின்னத் திரைக்கும் பெரிய திரைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. சின்னத் திரையில் இருந்து பெரிய திரைக்கு போக ஆசைப்படும் ஆட்கள் தான் அதிகம். பெரிய திரையில் இருந்து அதைவிடப் பெரிய திரைக்கு போக விரும்புவார்கள். பெரிய திரைப்படம் - அரசியல் களம். எனவே அங்கே படையெடுக்கிறார்கள். மும்பை போக முடிந்தவர்கள் அங்கே போக விரும்புவார்கள் - முடியாதவர்கள் இங்கேயே முயற்சிக்கிறார்கள். அப்படித்தான், நடிகர்கள் -ராமராஜன், கார்த்திக், சரத்குமார், செந்தில், ஆச்சி, சிம்ரன், குஷ்பு, என்று பட்டியல் நீளும். இப்போது வடிவேலு அவ்வளவே. இங்கிருந்து கவிழ்ந்தவர்கள் பட்டியல் அவருக்கு தெரிய வேண்டியது அவசியம். அவரால் இந்த திரை அரங்கில் வெற்றி பெற முடியாது என்பதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று அவருடைய பாஷையிலேயே சொல்லப் போனால் - அவர் ஒரு டம்மி பீஸ். அல்லது "அவரை வைச்சுக் காமெடி பண்றதை' புரிஞ்சுக்காத காமெடியன்.

  • ஏன் நடிகர்கள் அரசியலில் நுழைகின்றனர்? தங்களது ஈகோ வைத் தொடுவதில் இருந்து ஆரம்பமாகிறது. யார்? நீயா நானா? இந்த நிகழ்ச்சியின் வெற்றியும் இதில் தான் அடங்கியிருக்கிறது. யார் சரி - யார் பெரியவன். ஒரு கல்யாண மண்டபப் பிரச்சணையில் ஒரு கட்சியே உருவானது. வீட்டில் கல் எரிந்ததில் திரு வடிவேலு நீதி கேட்டுப் புறப்பட்டிருக்கிறார். தனது திரைப்பட வெளியீட்டிற்கு இருந்த பிரச்சனையில் உடனே தமிழக மீனவர்கள் மீது அக்கறை. அதாவது நான் பாட்டுக்கு இருந்தா பேசாம இருப்பேன். என்னையத் தோட்டா தமிழ் நாட்டைக் காப்ப்பாத்தக் கிளம்புவேன்னு கிளம்புரதுதான். வேறென்ன?
  • அரசியலில் நுழைய விரும்பும் நடிகர்கள் அல்லது காமெடி நடிகர்கள் பார்க்க வேண்டியது முதலில்  சார்லி சாப்ளினின் படங்களைத்தான். அவை சொல்லும் அரசியலை வேறு யாரும் அவ்வளவு எளிதாய், சிறப்பாய், அழுத்தாமாய் சொல்லிவிட முடியாது. 

  • நமது நடிகர்களைப் பொறுத்தவரை - மக்களாவது ' கொள்கையாவது' - எல்லாம் காமெடிதான். இதில் அசத்தப் போவது யாரு - அசிங்கப் படுவது யாருன்னு போகப் போகத் தெரியும்.

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்