8.2.13

ட்ரூ மேன் ஷோ - வும் – சமரும்


ஏறக்குறைய பதினைந்து வருடங்களுக்கு முன்பு பாண்டிச்சேரிக்கு ஏதோ ஒரு வேலையாய் போனபோது ‘மாஸ்க்’ என்ற ஜிம் கேர்ரி யின் படம் ஒன்று நண்பர்களோடு சேர்ந்து பார்த்தேன். அதன் பிறகு ஜிம் கேர்ரியின் படம் என்றால் வாய்ப்பு கிடைக்கும் போது பார்ப்பதுண்டு. அப்படி ஒரு படம்தான் ட்ரூ மேன் ஷோஇதுவும் பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டன.
  • உலகம் என்பது ஒரு நாடக மேடை. அதில் நாமெல்லாம் நடிகர்கள் என்று எப்போதும் எல்லாரும் சொல்லக் கேட்டிருப்போம். நமக்கு அது சரியோ என்று தோன்றிய தருணங்களும் இருந்திருக்கும். யாரோ ஆட்டிவைக்கும் பொம்மையாக நாம் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என்கிற கேள்வி இல்லாமல் இல்லை. மிகப் பெரிய தத்துவக் கேள்விகளை உள்ளடக்கியும், இறைவன் கருணை மிக்கவன் என்கிற கருத்தை கேலி செய்யும் விதத்திலும், இந்தக் கதைப் பின்னல்கள் கேள்வி எழுப்பும் – பார்ப்பவர்கள் மனதில்.

“இந்த நிகழ்ச்சியில் அனைத்தும் உண்மை – எதுவும் பொய்யில்லை” என்கிற ஒரு தொனியில் தொடங்கும் ஒரு லைவ் ஷோ. தனியாக, முழுவதுமாக உருவாக்கப்பட்ட ஒரு தீவு. முடிவடையாத ஒரு கடல் என்கிற ஒரு பிரம்மை. உருவாக்கப் பட்ட அந்த உலகத்திற்கு ஒளி கொடுக்கும் சூரியனின் ஒரு சிறு துளி - ஒரு விளக்கு கூரையிலிருந்து கீழே விழுவதில் தொடங்குகிறது அந்தக் கதை. அந்த தவறை மறைக்க மேலே சென்ற ஒரு விமானத்தின் விளக்கு கழன்று விழுவதாக சொல்லப் படும் செய்தி அதை உண்மையென்று அவனை நம்பச் செய்கிறது. அந்தக் கடலில் இறங்குவது ஆபத்து – ஏனெனில் அதில்தான் அவரது தந்தை இறந்து போனதாக ஒரு நிகழ்வு என்று சின்னச் சின்ன விஷயங்கள். அப்படி உருவாக்கப் பட்ட ஒரு தீவில் பிறந்ததிலிருந்தே அங்கே வளர்க்கப் படுகின்ற மனிதன் தான் ஜிம் கேர்ரி. அவனது ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு நிமிடமும் லைவ் ஆக ஒளிபரப்பப் படுகின்றது. ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக தான் ‘உருவாக்காப்பட்ட ஒரு மாய உலகத்தில்’ இருக்கிறோம் என்பதை அறியாமலே இருக்கிறான் அவன். அவன் வழியெங்கும் பார்க்கிற ஆட்கள், இயக்குனர் அவர்களுக்கு கொடுக்கும் வேடம், சொல்லும் வசனங்கள் என்று எல்லாமே நாடகத்தின் ஒரு அங்கம். ஒரே ஆட்கள் பல வேடங்கள் போடுகிறார்கள். இறந்து போன அவனது அப்பாவை திடீரென அவன் பார்ப்பதும், அது அவர் இல்லை என்று நம்ப வைக்கும் முயற்சியும், என்று பல நிலைகளில், கேர்ரி யோசிக்க ஆரம்பிக்கிறான்.
  • கொஞ்சம் கொஞ்சமாக உண்மையைக் கண்டறியவும், பயந்து இருந்த கடல் எல்லையற்றதாகத் தெரியவில்லை. படகேறி செயற்கையாய் கட்டமைக்கப் பட்ட கடலைத் தாண்டும் முயற்சியில் இருக்கும் போது இயக்குனர் அவரிடம் உரையாடுகிறார் – வெளி உலகம் மிக மோசமானது. இங்கே உனக்கு எல்லாம் கிடைக்கும் போகாதே என்கிற தொனியில் பேசுவதை எல்லாம் காதில் வாங்காமல் “வெளியே” பயணிக்கிறான்.

சிந்திக்கத் தொடங்கும் போதுதான் மனிதன் வாழத் தொடங்குகிறான் என்பது கூட படத்தின் கருவாக இருக்கலாம். உலகம் முழுவதும் இந்த நிகழ்ச்சி நடக்க வேண்டும் என்பதற்காக ஒரு மனிதனை சிறையில் அடைப்பதைப் போன்று அவனது சுதந்திரத்திற்கு தடை போடுவது சரியல்ல என்று தனி மனித சுதந்திரத்தை வலியுறுத்துவது கூட கருத்தாக இருக்கலாம். வாழ்க்கையே ஒரு நாடக மேடை எனவே அதில் அதிகக் கேள்வி கேட்காமல் வாழ்வது சரி என்பதோ, மாய உலகில் கட்டமைக்கப்பட்ட விதிகளைத் தகர்த்தெறிந்து மனம் சொல்வதைக் கேட்பது என்பது கூட செய்தியாக இருக்கலாம். காதல் என்பது வேறொருவன் நிர்ணயிக்கிற ஒரு ஆளை வைத்தோ, அழகை வைத்தோ வருவது அல்ல அது உள்ளிருந்து வருவது என்பது கூட செய்தியாக இருக்கலாம். ஆனால் பார்க்கிறவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு செய்தியைத் தரும் என்பது மட்டும் நிச்சயம்.
  • இந்தப் படத்தை தமிழில் எடுத்தால் தமிழ் ரசிகர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்கிற கேள்வி எனக்குள் இருந்தது.

இந்த அளவுக்கு ஒரு நாடகத் தன்மையுடைய கதை நமக்கு ஒத்து வராது – நமக்குத் தேவை வேகம் – வேகமான திருப்பங்கள் – த்ரில் – சண்டைக் காட்சிகள் – பாடல்கள் – என்று எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து உருவாக்கப் பட்டிருக்கும் படம் சமர்.
தமிழ் ரசிகர்கள் இதை நிச்சயம் ரசிக்க வாய்ப்பு உண்டு. விறுவிறுப்பாக செல்லும் படம் என்று நினைக்கிறேன். ட்ரூமேன் ஷோ பார்க்காதவர்களுக்கு இந்த படம் நிறைய பிடிக்கலாம் – பார்த்தவர்களுக்கு மிகப் பெரிய ஈர்ப்பை உண்டாக்காது என்றே நம்பலாம் – சில சீன்களுக்குப் பிறகு கதையை ஓரளவிற்கு ஊகிக்க முடிந்து விட்டது.  அது தவிர சில சீன்களை வேறு ஏதோ படத்தில் அப்படியே பார்த்தது போலவும் இருக்கிறது. ஆனால் நினவுக்குத்தான் வர மறுக்கிறது. எனக்கு ஒருவேளை அம்நீஷியாவோ என்னவோ.
ஆனால் இறுதியில் ட்ரூ மேன் ஷோ எழுப்பும் எந்தக் கேள்வியையும் சமர் படம் பார்த்தவர்கள் மத்தியில் எழுப்பாது என்பது மட்டும் நிச்சயம் – அந்தக் கேள்விகள் நமக்குத் தேவையில்லை என்பதும் கூட காரணமாக இருக்கலாம். எந்த விதமான மற்ற திரைக்கதைக்கான நன்றியோ, தாக்கம் என்பது பற்றிய திரைப்படக் கதைகளோ டைட்டில் கார்டில் வரவில்லை. ஒரு வேளை நான் கவனிக்க வில்லையோ என்னவோ. அல்லது இயக்குனருக்கும் அம்னிஷியாவோ என்னவோ?

4 comments:

Good citizen சொன்னது…[பதிலளி]

இந்த கதை ஜிம் கேரி நடித்த பழைய படத்தின் தழுவல் என்று சொல்லிக் கொண்டிருந்தேன்,,படத்தின் பேர் ஞாபகம் வராமல் இருந்தது ஞாபகம் மூட்டியமைக்கு நன்றி

அப்பு சொன்னது…[பதிலளி]

வருகைக்கு நன்றி... எனக்கும் மறதி நிறைய உண்டு...

yuvan சொன்னது…[பதிலளி]

ட்ரூ மேன் ஷோ-விற்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ட்ரூமேன் குழந்தையிலிருந்தே தான் நடித்துக்கொண்டிருப்பது தெரியாமல் வளர்க்கப்படுகிறான். சமரில் அப்படியில்லை. சமரில் விஷாலுக்கு ஏற்படும் குழப்பங்கள், படம் பார்ப்பவருக்கு ஏற்படுத்தும் பாதிப்பக அமைக்கப் பட்டிருக்கும். உண்மையில் அது கதையின் நாயகனைக் குழப்புவதல்ல. படம் பார்ப்பவரை குழப்பி, இறுதியில் தெளிய வைக்கும் ஒரு உத்தி.

அப்பு சொன்னது…[பதிலளி]

@yuvan

நன்றி யுவன்.
நான் சமர் அப்படியே ட்ரூ மேன் ஷோவின் காப்பி என்றோ அதே கதை தமிழில் எடுக்கப் பட்டது என்றோ சொல்ல வில்லை. நீங்கள் வேறுபாடுகளை எழுதியிருப்பது போல ஒற்றுமைகளையும் எழுத முடியும் அதே சமயத்தில் லாஜிக் ஓட்டைகளையும் குறிப்பிட முடியும். எனது பதிவிற்கு அவைகள் தேவைப் பட வில்லை.

உள்ளார்ந்த கேள்விகளை எழுப்ப வில்லை என்பது மட்டுமே எனது கருத்து.

மற்றபடி குழப்பம், தீர்வு என்பது பற்றியோ அது த்ரில் இல்லை என்பதோ இல்லை என் கருத்து.

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்