26.9.11

எங்கேயும் எப்போதும்

இந்தத் திரைப்படம் நேற்று பார்த்தவுடன் எனது இரண்டு பதிவுகளை மீண்டும் பதிய வேண்டும் என்று தோன்றியது.

முதலாவது - நால் வழி மயானம் - இது விதியா [மே இந்த ஆண்டு]

 • கடந்த வருடம் மே மாத இறுதியில் என் நண்பர் ஒருவர் சாலை விபத்தில் இறந்தார். அதற்கு முன்பு பெங்களூரிலிருந்து சென்னைக்கு வேகமாக வந்தால் மூன்று மணி நேரத்திலும், கொஞ்சம் மெதுவாக வந்தால் மூன்றரை மணி நேரத்திலும் வரும் மற்றொரு நண்பர் இறந்தார். ஒருமுறை ப்ரார்த்தனாவில் 'இம்சை அரசன்' பார்க்க அடையாறு சிக்னலில் இருந்து கிளம்பி போனபோது அவரது வேகத்தில் நமக்கு மட்டுமல்ல வெளியிலிருப்பவர்களுக்கும் இம்சைதான். ஆனால் ஒரு த்ரில்லிங் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அவர்கள் இறந்த போது செய்வதறியாது நிற்கும் மனைவி, குழந்தைகள் இவர்களைப் பார்க்கிற போதுதான் மனம் செய்வதறியாது இருக்கிறது. த்ரில்லிங் எல்லாம் சுக்கு நூறாய்ப் போய் விடுகிறது.
 • நால்வழிச் சாலைகளினால் பயனே இல்லையா என்றெல்லாம் இல்லை. நமக்குப் பயன்படுத்தத் தெரியவில்லை என்றுதான் பொருள்.
 • வழுக்குசாலைகள். முன்பு முதல் நாள் இரவு பேருந்து எடுத்தால் அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு மேல்தான் சென்னைக்கு வந்து சேருவோம். அது படிப் படியாய் நேரம் குறைந்து இப்போது எவ்வளவு நேரத்தில் போகும் என்ற நேரத்தையே பேருந்துகளில் விளம்பரமாய் எழுதி வைத்து விடுகிறார்கள். ஆனால் நால்வழிச் சாலைகளில் பயங்கரத் தடைகள். ஒவ்வொரு ஊருக்கு நடுவிலும் குறுக்குச் சாலைகள். ஒரு பக்கமே செல்ல வேண்டிய சாலைகளில், சொந்த ஊரின் நண்பர்கள் பெற்றோலை சேமிக்க அதிலேயே எதிர்ப் புறம் வர, மாடுகள் குறுக்கே வர, டிராக்டர்கள் திடீரென முளைக்க, டாங்கர்கள் படீரென வளைக்க - இவைகளையெல்லாம் தாண்டி நான்கு நான்கரை மணி நேரத்தில் சென்னைக்குச் செல்லும் ஓட்டுனர்களின் வீரம் தான் தினம் தினம் நாள் வழிச் சாலையை மயானமாக்கிக் கொண்டிருக்கிறது.
 • கம்பியூட்டரை எதுக்குப் பயன்படுத்துரான்களோ இல்லையோ போலி உரிமம் வழங்க நிறையப் பயன் படுத்துகிறார்கள். இருநூற்றி ஐம்பது ரூபாய்க்கு உரிமம் வழங்கும் DTP சென்டர்கள் சென்னையில் நிறைய இருக்கின்றன.
 • மஞ்சள் கோடு, இடைவெளியிட்ட வெள்ளைக் கோடுகள், இடைவெளியில்லா வெள்ளைக் கோடுகள் இதற்கெல்லாம் என்ன அர்த்தம்னு எத்தனை ஓட்டுனர்களுக்குத் தெரியும் என்பதே பெரிய கேள்விக் குறிதான். indicator இல்லாத வண்டிகள்தான் அதிகம் - அப்படியே இருந்தாலும் அதைப் பயன்படுத்துவது இல்லை. எப்படிப் பயன்படுத்தனும்னு தெரியாது. வலது பக்க இண்டிகேட்டரை வலது பக்கம் திரும்பவும் பயன்படுத்துகிறார்கள், பின்னால் வரும் வண்டியை முன்னே போக அனுமதிக்கவும் பயன்படுத்துகிறார்கள். இவன் எதுக்குப் போடுறான்னு பின்னாடி வர்ற வண்டிக்கு எப்படிப் புரியும்? அவன் என்ன கடவுளா? நம்மை போகச் சொல்றான்னு பின்னாடி வர்றவன் முன்னாடிப் போக, முன்னாடிப் போறவனும் வலது பக்கம் திரும்ப அப்புறம் என்ன 'சங்குதான்.'
 • லேன்கள் உள்ள சாலைகளில் மெதுவாகப் போகிறவன் இடது பக்கம்தான் போக வேண்டும் - அப்போதுதான் overtake பண்றவன் அடுத்த லேனில் போக வசதியாக இருக்கும் - ஏனெனில் ஓட்டுனர் இருக்கை வலது புறம் தான் உள்ளது. ஆனால் இங்கே மெதுவாப் போறவன் வலது பக்கம் போறான் - எப்படி ஓவர்டேக் பண்ண முடியும் - அதுக்குத் தான் வண்டிக்கு கிளீனர் வேற... அப்பா சாமி...
 • நால்வழிச் சாலை என்பதால் வழுக்கிக் கொண்டு செல்லாம்னு லேட்டகக் கிளம்புவது - அப்புறம் ஓட்டுனரைக் குறை சொல்லவும் கூடாது. நேரத்தோடு கிளம்பி முன்பே போய் சேருவோம் என்கிற எண்ணம் இல்லாமல், லேட்டாகக்க் கிளம்பி மொத்தமாய்ப் போய்ச் சேருவதுதான் வழக்கமாய் இருக்கிறது.
 • ஓட்டுனர்களின் உணர்வு கட்டுப் பாடு என்பதும் இல்லாமல் போய் விட்டது. யார் மேலயாவது கோபம்னா அதை வண்டி ஓட்டும்போதுதான் காண்பிக்கிறோம். சைக்கிள் gap பில் ஆட்டோ ஓட்டுற ஆட்கள் தான் அதிகம்.
 • ஒட்டுனராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் விபத்தை ஒழிக்க முடியாது.

இரண்டாவது பதிவு
சாலை மரணம் - நவீனக் கொடை [கடந்த ஆண்டு - ஜூன்]
 • முன்பெல்லாம் யாராவது இறந்தால் எப்போது இறந்தார் என்று கேட்பார்கள். அவர் காலையில் இறந்தார் அல்லது மாலையில் இறந்தார் என்று பதில் கிடைக்கும். இப்போது யாரவது இறந்தால் - எங்கே இறந்தார் என்கிற கேள்வியும் அதற்கு பதிலாக - சாலையில் இறந்தார், அல்லது ஓடு பாதையில் இறந்தார் அல்லது ரயில் பாதையில் இறந்தார் என்கிற பதிலே கிடைக்கிறது.
 • முன்பு இறந்தவர் - இயற்கை எய்தினார் என்று சொல்வோம். ஆனால் இப்போது நடப்பதையெல்லாம் பார்த்தால் இயற்கை எய்தினார் என்று சொல்வதற்கு மனம் ஒப்பவில்லை, ஏனெனில், பலரது வாழ்க்கை முடிதல் என்பது செயற்கையாகவே முடிகிறது அல்லது முடிக்கப்படுகிறது.
 • மானிட உயிர் விலை மதிப்பற்றது. ஆனால் ஏன்தான் நமது ஊர்களில் இப்படி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன என்பது தெரியவில்லை.
 • சாலை ஒழுங்குகள் இன்னும் சரிவர கடைபிடிக்கப் படுவதில்லை என்பதைக் காட்டிலும், அதை நடைமுறைப் படுத்துவதற்கு அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்கிற குற்றச் சாட்டை முதன்மைப் படுத்தலாம். உள்ள விதிகளை எல்லாரும் கடைப் பிடிப்பதற்கும் அல்லது அனைவரும் அறிந்து கொள்வதற்கும் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. எதெற்கெல்லாமோ இந்த அரசுகள் விளம்பரம் மேற்கொள்கின்றார்கள். அதைத் திறக்கிறார்கள், இதற்கு மாலையிடுகிறார்கள், அவருக்குப் பிறந்த நாள், இவருக்கு நினைவு நாள் - சாலை விதிகளை மதித்தது நடப்பது பற்றி விளம்பரம் குடுத்தால் குறைந்தா போவார்கள். சரி கஜானாவில் காசு இல்லையென்றால், உள்ள அனைத்து ஊடகங்களும் இதை வெளியிட வேண்டும் என்று ஒரு சட்டம் போட்டால் செய்ய முடியாதா என்ன?
 • சரி - ஒழுங்காக ஓட்டுனர்களுக்கான உரிமம் வழங்கப் படுகிறதா? அதுவும் இல்லை. ....

இரண்டையும் முழுமையாய் படிக்க கீழே சொடுக்கவும்.

நால்வழி மயானம்

சாலை மரணம் நவீனக் கொடை

இனி சில வார்த்தைகள்

நேரெதிரே மோதிக்கொள்ளும் பேருந்துகளின் பயணிகளின் ஊடகப் பயணிக்கும் ஒரு கதை. இதை வெறும் திரைப் படமாக மட்டும் அழகியல் நோக்கில் பார்த்தாலும், வாழ்வின் நிகழ்வுகளை மிகவும் கச்சிதமாய்ச் சொல்லியிருக்கும் படம் என்று பார்த்தாலும் அதைப் பற்றி பேசுவதற்கு இந்தப் படத்தில் நிறைய இருக்கின்றது. இந்தத் திரைப் படத்திற்குப் பிறகு எல்லா ஓட்டுனர்களின் மனதிலும் குறைந்தது மீண்டும் வீட்டுக்குப் போகும் வரையாவது மிகவும் கவனமாகப் போகிற அளவுக்கானத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மட்டும் நிச்சயம்.

"திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" - அது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு "ஓட்டுனராய்ப் பார்த்து திருந்தா விட்டால் விபத்தை ஒழிக்க முடியாது" என்பதை மட்டும் சொல்லலாம்.

இந்தப் படம் வெளி வந்த பிறகு விபத்துக்கள் குறைந்திருக்கிறதா என்று யாராவது ஆய்வு செய்யலாம். குறையவில்லையெனில் - வெறும் ஓட்டுனர்களின் கவனமின்மையைச் சொல்லித் தப்பித்துக் கொள்ள முடியுமா என்று தெரிவில்லை. ஏனெனில் திருடர்கள் திருடவதற்கான அல்லது அதில் நுழைவதற்கான பல சமூகக் காரணிகள் உண்டு. அது போலவே ஓட்டுனர்களும் யாரும் தான் வேண்டுமென்றே விபத்தை உருவாக்குவதும் இல்லை. அந்தக் காரணிகளும் அலசப் பட வேண்டியிருக்கிறது.

ஆனால் ஓட்டுனர்கள் இன்னும் சிறிதே முயன்றால் - பல விபத்துக்களை தினம் தினம் தவிர்ப்பது போல இன்னும் நிறையத் தவிர்க்கலாம்.

நாம் அதன் அங்கமாய் இல்லாத வரை இது எங்கேயோ எப்போதும் நடப்பதுதான். நாம் அதில் உள்ளபோதே நமக்குத் தெரியும் - இது இங்கேயும் இப்போதும் நடந்தது விட்டதே என்று - அதை உணர்வதற்கான அளவிற்கான நினைவிருந்தால்.  


எப்போதாவது நடந்தால்தான் விபத்து - எங்கேயும் எப்போதும் நடந்தால் அது என்ன?

5 comments:

suryajeeva சொன்னது…[பதிலளி]

சுயநலத்தின் உச்சம் விபத்து.. யாரையும் பற்றி கவலைப் படாமல் பயணிக்கும் பொழுது எங்கிருந்தோ எங்கேயும் நடக்கிறது விபத்து... நூறு முறைக்கும் மேல் என் இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த அனுபவம், இப்பொழுதெல்லாம் நேராக பார்த்து வண்டி ஓட்டுவதில்லை, மாறாக பக்க வாட்டில் யார் யார் வருகிறார்கள் என்பதிலேயே கவனம் இருக்கிறது... பலருக்கு நான் என்னவோ சினிமா போஸ்டர் பார்த்து வண்டி ஓட்டுவது போல் தெரியும்..

அப்பு சொன்னது…[பதிலளி]

ஆமாம், சூர்ய ஜீவா, அதுவும் சென்னை - சொல்லி மாள முடியாது. எங்கே எப்போது யார் எப்படி என்றெல்லாம் யோசிக்கவே முடியாது. நமக்குப் பக்க வாட்டிலும் கண்கள் இருந்தால் நன்றாய்த் தான் இருக்கும்.

ரெவெரி சொன்னது…[பதிலளி]

முதுகிலும் கண் வேண்டும் போல...நல்ல முயற்சி..பாராட்டுக்கள்..

வைரை சதிஷ் சொன்னது…[பதிலளி]

நல்ல பகிர்வு நன்றி நண்பா

கோகுல் சொன்னது…[பதிலளி]

இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி மகிழ்கிறேன்.
http://blogintamil.blogspot.com/2012/01/blog-post_29.html

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்