4.7.15

காக்கா முட்டை


காக்கா முட்டை  சென்னை ஒரு சேரியில் வாழும் இரண்டு குட்டிப் பையன்களின் கதை. அதில் அம்மக்களின் அன்றாட வாழ்க்கையின் உண்மையான நிலையையும் , வாழ்க்கையின் தேடலையும் சேர்த்து மிக நுண்ணியமாய் படமாக்கி உள்ளார் இயக்குனர். 

இரண்டு மணி நேரம் படம் பார்த்து முடித்தவுடன் நமக்கு அவர்களோடு வாழ்ந்த அனுபவம் ஏற்படுகிறது. எத்தனை முறை நாம் அச்சேரிகளுக்கு அருகில் பயணித்து இருந்தாலும் ஏன் இப்படிப்பட்ட நகரத்தைப் பார்க்காமலே இருந்திருக்கிறோம் என்று நம் மேல் ஒரு கோபம் ஏற்படுகிறது. என்ன மனிதர்கள் நாம்? சுற்றி என்ன இருக்கிறது? என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய பிரக்ஜை இல்லாமல் எப்படி நம்மால் இருக்க முடிகிறது?

அப்படியே அந்த சேரியைப் பார்த்திருந்தாலோ அல்லது வழி தெரியாமல் சேரிக்குள் நுழைந்திருந்தாலும், நாம் ஏன் இவர்களைப் பார்த்து முகம் சுளித்திருக்கிறோம் என்று நினைவுகள் வேகமாய் வந்து நம்மை விசனப்படவும் வைக்கும். சின்ன காக்காமுட்டை, பெரிய காக்காமுட்டை, அம்மா, பாட்டி, பழரசம், காயலான்கடை மக்கள் என்று ஒவ்வொரு கதா பாத்திரத்தையும் எதார்த்தத்தோடு படம் பிடித்திருக்கிறார்.

காக்கை முட்டை என்கிற வார்த்தையை முதலில் கேட்டால் சிலருக்கு சிரிப்பு வரும். சிரிப்பு - அனுபவங்களின் நினைவில், நானும் அதை உண்டிருக்கிறேன் என்பதனால் சிரிப்பு வரும் அல்லது உண்டவர்களோடு கூட இருந்த அனுபவமாவது அந்தப் புன்னகைக்கு காரணமாக இருக்கும். ஆனால் பலருக்கு அந்த வார்த்தையைக் கேட்டவுடன் முகம் சுளிக்கத் தோன்றும். அதெல்லாம் தொடக்கூடாது அசிங்கம் என்பதனால் முகம் சுளிக்கலாம். முகம் சுளிக்கும் அதில் பலர், உண்பதற்கு பணம் உள்ளவர்களாக இருப்பார்கள் என்பதுதான் உண்மையாக இருக்கும். இருக்கப்பட்டவன் ஏன் சமுதாயத்தில் நல்லதென கொண்டாடப்படாததை எல்லாரும் பார்க்கும்படி உண்ணப் போகிறான்.

காக்கை முட்டை காசில்லாதவர்களின் புரதச்சொத்து. அதை மிகவும் எதார்த்தத்தோடு அனுகியிருப்பதில்தான் இயக்குனரின் வாழ்க்கை அனுபவமும், ஒரு விஷயத்தை எப்படி கலை நயத்தோடு அணுகவேண்டும் என்கிற கலை அனுபவமும் ஒரு சேர இருக்கின்றது.

இது விவேக்கின் காக்கா பிரியாணி காமெடி போல இல்லை. இதில் இருக்கும் காமெடிகள் மிக இயல்பானவைகள். இதில் மிகக் குறைந்தது மூன்று இடங்களிலாவது சிரிக்கவில்லைஎன்றால் அந்த உம்மானா மூஞ்சியை யார் வந்தாலும் சிரிக்க வைக்க முடியாது என்றே பொருள். இடைவேளைக்குப் பின் சிறிதே இழுத்தாலும் அந்தப் பையன்கள் அதை வேகமாய் நகர்த்துகிறார்கள்.

===

இது படம் பார்த்தவுடன் எழுதி வைத்தது. இன்னும் முடிக்கக் கூட முடியவில்லை. நீண்ட நாட்கள் அதை பதிவேற்றம் செய்யாமலே வைத்திருக்க மனமில்லை... எனவே பாதியானாலும் பரவாயில்லை  பதிவேற்றியாயிற்று .

===0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்